Friday, February 26, 2021

அலை-37

 அலை-37

“போனோமே படிக்கத்தான்

பயின்றோமே கண்ணு முழிச்சுத்தான்” 

(MIXOPATHY)கலப்பட மருத்துவத்தை எதிர்த்து தோழி பானுவின் பாடலைக் கேட்ட பிறகு மருத்துவக்கல்லூரியில் பயின்ற நாட்களின் அலை மனதுக்குள் துள்ளி எழுந்து வருகிறது. எதை எழுதுவது எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே முடிவு செய்ய முடியாமல் அலைகள் புரண்டு வந்து ஆர்ப்பரிக்கின்றன. 


மருத்துவக்கல்லூரியில் படிப்பது இன்றைய தலைமுறைக்கு மர்ம முடிச்சு. இடம் கிடைக்குமா இல்லையா, எங்கு கிடைக்கும் எவ்வளவு செலவாகும் என்பது போன்ற ஆயிரத்தெட்டு அல்லற்பாடுகளுடன் மருத்துவம் எட்டாக் கனியாக இருக்கிறது. எழுபதுகளில் எங்களைப்போன்ற நடுத்தர வர்க்கமும் முயன்றால் படிக்கக்கூடிய எட்டும் கனியாகவே இருந்தது. 


எனக்கு நினைவு தெரிந்த காலகட்டத்தில் இருந்தே டாக்டர் ஆக வேண்டுமென்பது ஒரு கனவாகவே இருந்தது. அதற்காகவென்று தனிப்பட்ட பயிற்சிகளோ வகுப்புகளோ எதுவும் கிடையாது. நல்லா படிச்சா டாக்டர் ஆகலாம், அவ்வளவுதான். கால் மார்க் அரை மார்க் வித்தியாசத்தில் வாய்ப்பு நழுவிப் போவதெல்லாம் கிடையாது. அப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத காலம். அதனால் பணம் கட்டுவது முடியுமா முடியாதா என்ற குழப்பமும் கிடையாது.


முதல் முதலாக எம்.பி.பி.எஸ். கோர்ஸ் படிக்கத்தான் விண்ணப்பப் படிவமே பூர்த்தி செய்தேன். பி.யூ.சி.கூட அப்பாவின் நண்பர் மூலம் கிடைத்ததால் அப்போதும் விண்ணப்பப் படிவம் (application form) நிரப்பவில்லை. ரொம்ப எளிமையான படிவம்தான். அதை நிரப்புவதற்கு அப்பா அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தது பசுமையாக நினைவிருக்கிறது. முதலில் வேறு தாளில் நம்பர் போட்டு நகல் படிவத்தில் எழுத வைத்தார்கள் . அதன்பிறகுதான் ஒரிஜினல் படிவத்தில் எழுதினேன். 


மருத்துவ சான்றிதழ் வைப்பதற்கு திருச்செந்தூரில் டாக்டர். சேர்மராஜ் என்பவரிடம் கூட்டிப் போனார்கள். அவரது முகமே நினைவில்லை. ஆனால் அவர் ரொம்ப அன்பாகவும் கரிசனையாகவும் பேசியது நினைவிருக்கிறது. அவரைப் பார்க்க வரவேற்பறை முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தபோதும் மருத்துவக்கல்லூரிக்கு அப்ளை பண்ணப்போகும் சின்னப் பெண்ணிடம் அவ்வளவு அன்போடு பேசியது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. சேர்மராஜ் டாக்டர் மாதிரிஆகணும்னு மனசுக்குள் வைராக்கியமும் வந்தது. அதன்பிறகு விண்ணப்பம் எப்படி தபாலில் போனது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, அப்பா பார்த்துக் கொண்டார்கள்.


கண்டிப்பாக மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வேறு எந்தக் கல்லூரியிலும் சேராமல் காத்திருந்தேன். நயினார் அண்ணன் ரொம்ப நல்லா படிக்கக்கூடியவன். ஆனாலும் அவனுக்கு பொறியியல் கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் ஆதித்தனார் கல்லூரியில் BBA சேர்ந்திருந்தான். அந்த அனுபவத்தினால் மனதின் மூலையில் சின்ன பயம் இருந்தாலும், கண்டிப்பாக மருத்துவம் கிடைத்துவிடும் என்பதில் உறுதியாக இருந்தேன். 


ஒருவழியாக நேர்காணலுக்கான தபால் வந்து சேர்ந்தது. மதுரையில்தான் தேர்வு மையம்.

எனது சித்தி மகள் நர்ஸிங் பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்தாள். அவளுக்கும் அன்றுதான் தேர்வு. காலையில் தேர்வு என்பதால் முந்தின நாளே மதுரை சென்றுவிட்டோம். அப்பாவின் நண்பர் P.S.Raja அவர்கள் தெஷணமாற நாடார் சங்கத் தலைவராக இருந்ததால்,மதுரையில் உள்ள அவர்களின் விடுதியிலேயே தங்கிக்கொண்டோம். தேர்வு மையம் மதுரை கார்ப்பரேஷன் கட்டிடத்தில் இருந்தது. விடுதியிலிருந்து நடந்தேதான் சென்றோம். பிரம்மாண்டமான கார்ப்பரேஷன் கட்டிடத்தை சுற்றுலாப் பயணிகள் வாய் திறந்து பார்த்ததைப்போல் பார்த்துக் கொண்டேன்.


தேர்வு நடக்கும் இடத்தில் என்னைப்போல் ஏகப்பட்டபேர் கூடியிருந்தார்கள். முதலில் அனைவருக்கும் சின்ன எழுத்துத் தேர்வு வைத்தார்கள். ரொம்ப இலகுவான கேள்விகளாகவே இருந்தது. நுழைவுத் தேர்வு கண்துடைப்பாக இருக்குமோ என்று கொஞ்சம் பயம் கலந்த குழப்பம் வந்தது. மதியம் நேர்காணல் இருந்தது. எனக்குக் கேட்கப்பட்ட கேள்விகள் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது. உனக்குத் தெரிந்த பத்து திருக்குறள் சொல் என்றார்கள். தமிழ் ஐயா குழைக்காதரின் வாரிசாயிற்றே, மூச்சு விடாமல் பத்து குறளும் சொன்னேன். அதன் பிறகும் மிக எளிமையான கேள்விகளே கேட்கப்பட்டன. ஏன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாய், மருத்துவராகி எப்படி சேவை செய்வாய் என்றெல்லாம் கேள்விகள். படிப்பு சம்பந்தமான கேள்விகளே இல்லை. மனசு ரொம்ப ஒடிஞ்சு போயிடுச்சு. சீட் தராமல் தட்டிக் கழிக்கத்தான் இப்படி எளிமையான கேள்விகளாகக் கேட்கிறார்கள் என்று நினைத்து நொந்தேன். 


நேர்காணல் சென்றுவந்து, முடிவு வெளிவரும் நாள் வரை எதிலும் ஈடுபாடில்லாமல் பதுமையைப் போல் நடமாடிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று வேறு எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பிக்கவில்லை. ரொம்பக் கொடுமையான நாட்கள் அவை. அப்பாவுக்கு எனது மனநிலை புரிந்திருந்த போதும் என்னைத் தேற்றவும் இல்லை அதைரியப்படுத்தவும் இல்லை. அம்மாவுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியலை. கல்லூரிக்குப் போகாட்டி வீட்டில் வேலைக்கு இன்னொரு ஆள் கிடைக்கும் என்பதற்குமேல் அவங்களோட எண்ணம் போகவில்லை.


ஒருவழியாக முடிவு வந்தது, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சிடுச்சு. எப்படிப்பட்ட சந்தோஷம்!! அப்போதுதான் என்னோட கனவுகளும் எதிர்பார்ப்பும் ஒரு புள்ளியில் வந்து ஐக்கியமானது. அப்போ கிடைத்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. 


எங்களுக்கு முந்தின வருஷம் ”மிசா” சட்டம் அமுலில் இருந்ததால் நேர்மையான தேர்ச்சி நடந்திருந்தது. எங்கள் நேர்காணலின் போது தெய்வத்திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தார். மிக நேர்மையான தேர்ச்சிமுறை அமலில் இருந்தது. அதனால்தான் எங்களைப்போன்ற சாமான்யர்களும் மருத்துவர்கள் ஆக முடிந்திருக்கிறது. எங்கள் வகுப்புத் தோழர்கள் இன்றளவும் மிக அந்நியோன்யமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த தேர்வு முறையால் கிடைத்ததுதான். பெரும்பான்மையானவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தோம்.


எங்க குடும்பத்திலேயே நான்தான் முதல் மருத்துவர், அதுவும் பெண் மருத்துவர். குடும்பமே கொண்டாடியது போல்தான் இருந்தது. எல்லாரும் அப்பவே டாக்டரம்மா என்று கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலேயே கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். மதுரை, மெட்ராஸ் மாதிரி இடங்களில் கிடைச்சிருந்தால் விட்டுறுப்பாங்களான்னு சந்தேகம்தான்.  தூரம் பெரிய விஷயமில்லை. ஆனால் திருநெல்வேலி என்றால் பெரியக்கா வீடு இருந்தது. விடுதி தேவைப்படாமல் போகும், செலவும் குறைவாக ஆகும். தூர ஊர்களில் விடுதியில் தங்கினால் அதற்குரிய செலவினங்களுக்கு என்ன செய்வது என்ற பிரச்னை வரும். இது எதுவுமே நடக்காமல் திருநெல்வேலி கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம்தான். இன்னும் போகப்போக நிறைய அதிர்ஷ்டங்களைத் தந்தது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரிதான்.


அன்றிலிருந்து எனது அடையாளம் ஆறுமுகநேரியிலிருந்து

திருநெல்வேலிக்காரி ஆகிவிட்டது.

1 Comments:

At 10:14 AM, Blogger Dr. A. Rajasekaran said...

நான் மிசா பேட்ச். மற்றபடி விண்ணப்ப படிவம் நிரப்பு வதிலிருந்து மற்ற எல்லாம் என் கதை போலவே இருந்தது. என் அப்பாவும் ஆசிரியரே. அது ஒரு நிலாக் காலம்.. அருமை தங்கள் அலைகள் மனதை புரட்டும் அலைகள்

 

Post a Comment

<< Home