Thursday, July 13, 2023

அலை-88

 அலை-88

“காதல் சடுகுடு”

காதலிக்கணும்னு தலையில் எழுதியிருந்தால் கபடி ஆடித்தானே ஆக வேண்டும். அது எப்படி வீர விளையாட்டோ காதலும் அதே மாதிரிதான். நினைச்சா காதலில் விழுந்துவிடலாம். ஆனால் அதில் வெற்றி பெறணும் என்றால் பலீஞ்சடுகுடு ஆடணும். ஏகப்பட்ட அடிகள், காயங்கள் , அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும். காதலில் ஜெயிச்சவங்க எல்லாருக்குமே ஒரு சடுகுடு கதை இருக்கும். 


ஆட்டத்தின் முதல் கட்டமே கஷ்டமானதுதான். காதலிக்கிற ரெண்டுபேரும் காதலைச் சொல்லி , ஒருதலைக் காதலாகிவிடாமல் மனமொத்த காதலாவதற்கே ஒரு மாமாங்கம் ஆயிடும். ஆரம்பகால கிளுகிளுப்புகள் முடிந்து யதார்த்தத்திற்குள் வரும்போதுதான் உண்மையான ஆட்டம் தொடங்கும். அம்மா அப்பாவில் ஆரம்பித்து ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, படிப்பு என எத்தனை எத்தனைப் படிக்கட்டுகள் தடைக் கற்களாகி நிற்கும். ஆனால் எல்லா காதலுக்கும் தூது போகவும் , துணை நிற்கவும், உதவி செய்யவும் ஏதாவது ஒரு நல்ல ஆத்மாவும் இருக்கும்.இதெல்லாமே காதல் அகராதியின் எழுதப்படாத விதிகள். 


எங்களோட கால கட்டத்தில் கெமிஸ்ட்ரி பாடத்தில் வரும் உப்புக்களின் பெயரை ஜாதிக்கு அடையாளமாக வைத்திருப்பார்கள். ரொம்ப பாடாய்ப் படுவது சோடியம் உப்புதான். எழில்கூட கொஞ்சம் நெருங்கிப் பழக ஆரம்பித்த சமயத்தில் ஒருநாள் சில சீனியர் அக்காக்கள் என்னைக் கூட்டமாக வழிமறித்து ’எங்க உப்பு ஜாதியில்  சேராத நீ எப்படி எழில்கூடப் பேசலாம். எங்க பொண்ணே ஒருத்தி எழிலுக்கு ரெடியாக இருக்கிறாள். நீயாக விலகாவிட்டால் விளைவுகளைச்  சந்திக்க வேண்டும்’ என சினிமா பாணியில் எச்சரித்து அனுப்பினார்கள். ஜாலியாக ஆரம்பித்த காதல் ஜாதிப் பிரச்னையில் வாங்கிய முதல் குட்டு அது. நான் சும்மாவே ரொம்ப ரோஷக்காரி. இப்படி பேச்சு வந்ததும் நானே அந்த பொண்ணு சார்பா பேசி எழிலுடன் சேர்த்து வைக்கிறதா சபதமெல்லாம் போட்டுட்டு வந்தேன். அது பொருந்தாக் காதலாகி பொசுக்கென்று போனது தனிக்கதை. 


எழில், எபி,  ஜியோ என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்தேதான் சுற்றுவார்கள். பெண்கள் விடுதிக்கு வரும்போது தம்பித்துரை,சுரேஷ் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு கும்பலாக வருவார்கள். நாங்களும் தாணு, பானு, ஷுபா, உஷா என கூட்டமாகத்தான் அவர்களுடன் கடலை போடுவோம். அதனால் நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் என்ற தோற்றம்தான் இருந்தது. எழில் என்ற பிம்பத்துக்கு ‘ரொம்ப நல்ல பையன், தீவிர பக்திமான், பைபிள் தவிர ஒண்ணுமே தெரியாத அப்பாவி’ என்று ஏகப்பட்ட அடை மொழிகள். அதனால் நிறைய பேருக்கு நாங்கள் காதலிக்கிறோம் என்பதே ரொம்ப நாள் தெரியாது.

கல்யாணங்களுக்குப் போனாலும், கருமாதிக்குப் போனாலும் கூட்டமாகவே தான் போவோம். அவ்ளோ பெரிய கூட்டத்தில் எழில் கூட நான் தனியாகப் பேசிய பொழுதுகள் ரொம்பக் குறைவாகவேதான் இருந்திருக்கும். எங்க கூட்டத்தில் இருந்தவர்களும் சினிமாத்தனமாக எங்களுக்குத் தனிமை ஏற்படுத்திக் கொடுக்கும் பாங்கு இல்லாமல் இயல்பான நட்புடன் இருந்ததால் அது சாத்தியமானது. 


ஆனாலும் எங்க ரெண்டுபேருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி நெருங்கியவர்களுக்கு எளிதில் புரிந்துவிடும் போலிருக்கு. 

ஒருநாள் நயினார் அண்ணன் சாதாரணமாகப் பேசுவதுபோல் கேட்டுவிட்டான். வேறு ஜாதி வேற்று மதம் எல்லா விஷயங்களிலும் முரண்பட்ட வாழ்க்கை முறை இருக்கும். சுத்த சைவமாயிருக்கும் நான் முழுநேரம் அசைவம் சாப்பிடுபவருடன் ஒத்துப் போக முடியுமா? வீட்டில் சாமியே கும்பிடாவிட்டாலும் இந்து சமயத்தைச் சார்ந்த நான் கிறித்தவ சமயத்தை வழிபடுபவர்களுடன் வாழ்க்கை நடத்த முடியுமா என்றெல்லாம் ஆய்வுபூர்வமாகவும் அனுசரணையாகவும் கேட்டான். நான் ஒரே ஒரு உத்திரவாதம்தான் கொடுத்தேன். எந்த சந்தர்ப்பத்திலும் எழில் விட்டுக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க மாட்டேன். என்னால் முடிந்தவற்றை அனுசரித்துச் சென்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டேன். அதுதான் என் வீட்டில் என் காதலைச் சொல்லிய தருணமாக இருந்திருக்கும்.


எழில் வீட்டிற்கும் ரொம்ப நாள் எங்க கதை தெரியாமல்தான் இருந்த்து. அவங்க தம்பி தங்கை எல்லாம் கல்லூரிக்கு வந்தால் என்னை வந்து பார்ப்பார்கள். சேர்ந்து ஹோட்டலுக்கு போவோம். ஆனாலும் விஷயம் வெளிப்படையாகத்  திறக்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் எழிலுக்கு இறுதியாண்டு பரீட்சை நெருங்கிவிட்டது. படிக்க ஆரம்பித்துவிட்டால் யாரோடும் பேச மாட்டாங்க. சீரியஸாக மூஞ்சை வைச்சுகிட்டு தாடி வளர்த்துகிட்டு அலைவாங்க. எதிரே பார்த்தாலும் சண்டை போட்டவங்களைப் பார்க்கிற மாதிரியே முறைச்சுகிட்டு போவாங்க. ஒரு ஸ்டேஜில் எங்களோட காதல் இருக்கா முடிஞ்சுபோச்சான்னு கூட சந்தேகம் வந்துடுச்சு. பரீட்சை முடிஞ்சதும் சரியாகிவிடுவான் என்று ஜியோவும் எபியும்தான் சமாதானப் படுத்துவாங்க. சொன்ன மாதிரியே ஹவுஸ் சர்ஜன் ஆகும்போது முன்னே மாதிரி ஆயிட்டாங்க. 


ஆனால் அவங்க வீட்டிலிருந்து நெருக்கடி ஆரம்பித்தது. நிறைய பெண்வீட்டுக்காரர்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவங்க ‘உப்பு’ கூட்டத்தில் டாக்டர் மாப்பிள்ளைக்கு ஏக மவுசு. கிலோ கணக்கில் தங்கம், கார், லட்சங்களில் வரதட்சணை என ஏக மதிப்பு. எழில் பிடி கொடுக்காமல் இருக்க ஆரம்பித்ததும் விஷயம் அம்பலமாகியது, போராட்டமும் தொடங்கிவிட்டது. 


வேறே ஜாதி இந்துப் பொண்ணு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டேன் என மாமனார் பிடிவாதத்துடன் நின்றுவிட்டார்கள். அப்பாவை உடனடியாக சம்மதிக்க வைப்பது கஷ்டம் என்பதைப் புரிந்துகொண்டு எழில், ஈரோடு மிஷன் ஹாஸ்பிடலில் ஜுனியர் டாக்டராக சேர்ந்து விட்டார்கள். கொஞ்சம் விட்டுப் பிடித்தால்தான் காரியம் கைகூடும் என்பது தெரிந்துவிட்டது. அதன்பிறகு ஏகப்பட்ட போராட்டங்கள் , சண்டைகள்  நடந்துகொண்டேதான் இருந்தது. எழில் நாசரேத் போகும் நாட்களே குறைந்து போய்விட்டன. அதற்குள் எனது படிப்பும் முடிந்துவிட்டதால் எங்கள் வீட்டிலும் திருமணப் பேச்சை எடுத்தார்கள். ஆனால் எனது முடிவில் உறுதியாக இருந்தால் என்னை மீறி எதுவும் செய்யவில்லை.தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.


அவங்க அப்பாவை  சமாதானப்படுத்த பலவிதங்களிலும் முயற்சி பண்ணிக் கொண்டேதான் இருந்தார்கள். சொந்தக்காரர்கள் மூலம் பேசுவது ஒருபக்கம் நடந்தது. மாமியாரின் தீவிர உபவாச பிரார்த்தனைகள் மறுபக்கம்.நான் மதம் மாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தால் ஒருவேளை மனது மாறலாம் என்று நான்சி தாணு ஆனேன். என்ன மதம் மாறினாலும் ஜாதி வேறுதானே என்று சொல்லிட்டாங்க.அதுக்கு மேலே என்ன பண்ணமுடியும்னு நாங்களும் அமைதியாயிட்டோம்.எத்தனை வருஷம் ஆனாலும் ரெண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்பதில் ரெண்டுபேரும் தெளிவாக இருந்தோம். ஆனால் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தோம். 


எப்படியே எட்டு வருடங்கள் காத்திருந்து கபடியில் கப் ஜெயிச்ச மாதிரி கல்யாணமும் மிக விமரிசையாக நடந்தது. கபடியோ காதலோ ஜெயிக்கும் வரை போராட்டம்தான். ஜெயிச்சதும் கொண்டாட்டம்தான்.

0 Comments:

Post a Comment

<< Home