Saturday, October 22, 2005

``காக்க காக்க"

`யாகாவாராயினும் நாகாக்க' என்பது நிறைய பேருக்கு மறந்துவிட்டது போலும். கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் போன்றவற்றில் இதுவரை தலையிடாத காசி, திடீரென இந்த முடிவெடுக்க வேண்டியிருந்தால், அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கலாம். அதைத் தெளிவுபடுத்தவும் சற்று அவகாசம் தரவேண்டும். அதற்குள் விமர்சனம், எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனை வசைபாடல்கள். அவரது முடிவில் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் அதிருப்தி உள்ளது -அது செயல் படுத்தப் பட்ட அவசரம் குறித்தோ, பதிவுகள் தணிக்கை செய்யும் தன்மை குறித்தோ- எதுவானாலும் ஒரு சின்ன அதிருப்தியைக் காட்டிவிட்டு காத்திருக்க எவருக்குமே பொறுமை இல்லை என்பது, மன முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

`(உரிமைகள்)கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்பது எவ்வளவு பொருத்தம். பதில் சொல்லவில்லை என்பதாலேயே பழிவாங்கிவிட்டதாக கூக்குரலிடுவது என்ன நியாயம். வலைப் பதிவில் ரொம்ப ஜூனியரான என் போன்றோருக்கு இருக்கும் தோழமை உணர்வுகூட `பழம் தின்று கொட்டை போட்ட' மூத்தோர்களுக்குக் காசியிடம் இல்லாதது வியப்பாக உள்ளது. எடுத்த முடிவு சரியா தவறா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் தவறுதான் என்று தீர்ப்பெழுதித் தண்டனையாகக் கண்டனங்களை தவறான சொற்கள் மூலம் வெளிப்படுத்துவது அத்துமீறல் இல்லையா?

பதிவுகளைத் தனிமனித சொத்தாக நினைத்து யாரும் பதிவதில்லை. எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றுதானே எழுதுகிறோம். அதை `எல்லோரும்’ (குழந்தைகள் முதல் கிழடுகள் வரை) வாசிக்கும்படியான எழுத்து நாகரீகத்துடன் எழுத வேண்டுமென்பதற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே. ஓரளவு தணிக்கை இல்லாவிட்டால் `தமிழ்மணம்’ மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு இன்னும் சில நாட்களில் தள்ளப் பட்டுவிடுமோ என்பதாகத்தான் சமீபத்திய விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன.
நம்மூரில் வெளியாகும் சாதாரண குப்பைப் பத்திரிகையில்கூட ரெண்டு வரி எழுதி அச்சேற்ற நம்மால் முடியாது. மனதைப் பாதிக்கும் விஷயங்களை மறுநிமிடம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்த அற்புதமான வாய்ப்பு. மாலை தொடுத்தவருக்கு அதிலிருக்கும் நெருஞ்சிப்பூக்களை அகற்ற உரிமையில்லையா? மாலையிலிருந்து உதிராமலிருக்க நினைப்பவர்கள் முட்களைத் துறந்துவிட்டு வர முயற்சிப்பதை விடுத்து காயப்படுத்துவது கண்ணியமாகுமா?

எனது எழுத்துக்கள் எல்லை மீறும்போது எனக்கும் பச்சை விளக்கு அணைக்கப்படும் என்ற உணர்வு எழுத்துக்களின் தரத்தை உயர்த்தத்தானே செய்யும். விவாதத்திற்கும் விரசமான அலசல்களுக்கும் எல்லைக்கோடின்றி ஒரே நோக்கில் பார்ப்பதால்தான் இத்தனை கோபங்கள். முகமற்று எழுதும்போது சுதந்திரமும் கிடைக்கிறது, தரம்கெட்டு எழுதும் தந்திரமும் வருகிறது. விவாதங்களின் போக்கு தனக்கு பாதகமாக வரும் கட்டத்தில் எதிராளியின் மென்மையான பக்கத்தை, அது- மதமோ, ஜாதியோ, பாலினமோ- ஏதோ ஒன்றைக் கொச்சையாகத் தாக்கிவிட்டுத் தானே வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் தன்மையால் அடைந்தது என்ன? சக பதிவர்களின் வெறுப்பும் அசூயையுமே! அதை விடுத்து நட்புடன், நகைச்சுவையுடன், எழுதிப் பாருங்களேன். துளசியின் பதிவு போல் எண்ணற்ற விருந்தினர்கள் தினமும் எட்டிப் பார்ப்பார்கள்.
``காதலிக்க நேரமில்லை” படம் காலம் கடந்தும் நம்மை சிரிக்கவைப்பது போல்.

``We are not that rich to throw away any friendship

(என்னை ஜால்ரான்னு சொல்லப் போற நண்பர்களுக்கு- இப்போவே நன்றி சொல்லிக்கிறேன்).

7 Comments:

At 12:27 PM, Blogger ஜோ/Joe said...

உங்களின் இந்த கருத்துக்களுக்கு ஜால்ரா அடிக்கும் கோஷ்டியில் முதல் ஆளாக நான் சேருகிறேன்

 
At 12:34 PM, Blogger நண்பன் said...

நல்லதே சொன்னீர்கள் நண்பரே....

கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பதே ஒரு நச்சு தான்.

எல்லாவற்றிற்கும் ஒரு ஒழுங்கமைவு வைத்துக் கொண்டு இயங்குவதென்பது தவிர்க்க இயலாதது.

இந்தப் பிரபஞ்சமே ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு இயங்கும் பொழுது - நாம் மட்டும் எப்படி விதி விலக்காக இயங்க முடியும்?

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

 
At 10:04 PM, Blogger ஜென்ராம் said...

பார்த்தேன் படித்தேன். உங்கள் மன ஓட்டத்தை புரிந்து கொண்டேன்.வேறு கருத்து எதுவும் பின்னூட்டத்தில் கூறுவதாக இல்லை.

 
At 6:31 PM, Blogger erode soms said...

"ஓட்டப்பந்தயத்தில்
கால்கள் இடம் மாறி
உதைத்துக்கொள்ள
நாம் நண்பர்கள்"
ஏதோ ஒரு தத்துவஞானியின்
கூற்றுப்படி
அனைவரும்
நண்பர்களாமோவாக!!!

 
At 8:51 AM, Blogger தாணு said...

நன்றி ஜோ, நண்பன்.

ராம்கியின் கருத்து என்னவென்று உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன்.

சித்தன்,
இப்போல்லாம் நிறைய தத்துவமா வருது? மரப்பாலம் நண்பருடன் அதிக நேரம் செலவழிக்கிறீங்கன்னு அர்த்தம்

 
At 12:24 PM, Blogger தருமி said...

ஜோவுக்கு வழிமொழிஞ்சிட்டு, 'இது'க்கு அர்த்தம் கேட்கலமாவென் நினைச்சேன்: ராம்கியின் கருத்து என்னவென்று உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன்.

சித்தன்,
இப்போல்லாம் நிறைய தத்துவமா வருது? மரப்பாலம் நண்பருடன் அதிக நேரம் செலவழிக்கிறீங்கன்னு அர்த்தம்

 
At 3:49 PM, Blogger Thangamani said...

//கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' //
Nice.

 

Post a Comment

<< Home