Tuesday, January 05, 2021

அலை-34

 அலை-34

”ஆண்டொன்று போனால் 

  வயதொன்று போகும்”.


ஆனால்  கடந்த ஆண்டோ எல்லோருக்கும் எல்லாமே தொலைந்து போனது போன்ற மாயத்தைத் தந்த பிழையான ஆண்டு.  பிறந்திருக்கும் புது வருடம் பழையன கழிந்து புதியதாக மாறட்டும். 


”வருஷம் போனால் என்ன 

வயதும் ஆனால் என்ன 

மனம் இருபதைத் தாண்டியதில்லை” 

என்பதுதான் எனது நிரந்தர சிந்தனை என்பதால் வருஷம் பிறப்பதும் முடிவதும் பெரிதாகத் தோன்றவில்லை.   இருந்தும்கூட மனசு இருபதுக்கு கூட வராமல் பள்ளிப் பருவத்துக்குள்ளேயே துள்ளிக்குதித்து முரண்டு பிடிக்கிறது.  கல்லூரி காலத்துக்குள் அலை அடிக்க வைக்கலாம் என்றாலும் முடிய மாட்டேங்குது.  காலையில் வீட்டுத் தோட்டத்தில் பூப்பறித்த நேரத்திலிருந்தே   

மனது மறுபடி ஆறுமுகநேரியின் பூப்பூக்கும் வாசத்திற்கு தாவி விட்டது.


"கொண்டையில் தாழ்ம்பூ" ன்னு ரஜினி பாடினாலும் எங்களுக்கெல்லாம் மல்லிகைதான் மனதைக் கிறங்க அடிக்கும் மலர். ரெட்டைஜடை பின்னிக்கிறதே தொங்கத் தொங்க தினமும் தலையில் பூ வைச்சிக்கத்தான். பூ கிடைக்காது என்று ஆகும் நாட்களில் பரட்டைத் தலையுடன் பத்ரகாளியாகத்தான் வலம் வருவோம். 


தினசரி  தலையில் வைக்க மல்லிக்கைப்பூவே  கிடைக்கும் என்பதில்லை. பனிக் காலங்களில் சீசன் இருக்காது. அப்போதெல்லாம் பிச்சிப்பூ எனச் சொல்லப்படும் ஜாதி மல்லிகைதான் கிடைக்கும். முல்லைப்பூ வருஷம் முழுவதும் கிடைக்கும். 


சந்தையின் எதிர்புறத்தில் பூக்கடை இருக்கும். ஒவ்வொரு விதமான பூவும் கட்டப்பட்டு உருண்டைபோல் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். தலைக்கு வைக்கும் பூ நெருக்கமாகவும் சாமி விளக்குக்குப் போடும் பூக்கள் நல்ல இடைவெளியுடன் சரம் போலும் வைச்சிருப்பாங்க. தலைக்கு வைக்கும் பூ எண்ணிக்கையில்தான் கிடைக்கும், 50 பூ நூறு பூ என்று எண்ணி கொடுப்பார்கள். விளக்கு சரம் மட்டும் முழம் கணக்கில் தருவாங்க. ரெகுலராக கொடுக்கும் வீடுகளுக்கு அவங்களே கொண்டு வந்து கொடுத்திட்டு போவாங்க. அதை எடுத்துட்டு போகிற பூக்கூடை மேல் எனக்கு எப்பவுமே ஒரு கண்ணு. தென்னங் கீத்துலே பண்ணி சின்னதா கைப்பிடியோட எடுத்துட்டு போறவங்க முழங்கையில் ஊஞ்சல் மாதிரி ஆடிகிட்டே போகும்.


எங்க வீடு எட்டுற தூரத்தில் இருப்பதால் வேணும்கிற சமயங்களில் நாங்களே போய் பூ வாங்கிக் கொள்ளுவோம். கடையில் உள்ளவர்கள் அப்பாவின் நண்பர்கள் என்பதால் அடிக்கடி அப்பா அங்கேதான் உட்கார்ந்திருப்பாங்க. அவங்க வீட்டுப் பையன் நடராசன் ஆரம்பப் பள்ளியில் எனக்கு வகுப்புத் தோழன். மா.முருகன் (பின் காலத்தில் ‘இதயம்’ பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆனவர்) நயினார் அண்ணனின் நெருங்கிய நண்பர். அதனால் அடிக்கடி பூக்கடையில் நாங்களும் உட்கார்ந்து கொள்ளுவோம். நடராசன் நன்றாக பூ வியாபாரம் செய்வான் . தெருவில் கூவிக்கூவி பூ விற்கும் பாங்கு அலாதியாக இருக்கும். அதையே உபயோகித்து ஒரு சுதந்திர தின விழாவில் மாறுவேடப் போட்டியில் பூவிற்பவனாக வந்து பரிசைத் தட்டிச் சென்றான். 


பண்டிகை காலங்களில் நிறைய பூ விற்பனை ஆகும் என்பதால் நாங்களெல்லாம் உதிரிப் பூக்களைக் கட்டிக் கொடுத்து உதவி செய்வோம். முதலில் விளக்குச் சரம் மட்டும் கட்டிக் கொடுப்போம். அதன் பிறகு பயிற்சியும் திறமையும் கூடியதால் தலைக்கு வைக்கும் பூவும் கட்டிக் கொடுப்போம். அந்த சமயங்களில் வீடெல்லாம் பூவாசம் தான்.


பொங்கல் சமயத்தில் சாமந்திப்பூ விளைச்சல்தான் அதிகமாக இருக்கும் அதைக் கட்டுவதும் சுலபமாக இருக்கும். கூடை கூடையாக உதிரிப் பூக்கள் வந்த மாதிரி இருக்கும், ஆனால் சீக்கிரமே கட்டி முடித்துவிடலாம், வாசம் மட்டும் இருக்காது. அந்தக் காலத்தில் பூ கட்டப் படித்தது பின் வந்த நாட்களில் கல்லூரி விழாக்களுக்குக் காகிதப்பூ மாலைகள் கட்ட உதவியாக இருந்தது. 


பள்ளி செல்லும்போது ஜடையில் பூசூடிச் செல்வது மிகவும் பிடித்த ஒன்று. காசு கொடுத்து தினமும் பூ வாங்க முடியாட்டியும் பூ வைச்சுக்க ஏகப்பட்ட தில்லுமுல்லு கதைகள் வைச்சிருப்போம். தண்ணீர் பிடிக்கப்போகும் வீட்டிலிருந்து முல்லை மொக்குகளை முதல் நாளே பறிச்சுட்டு வந்துடுவோம். எல்லார் வீட்டு புறக்கடையிலும் எப்படியும் ரெண்டு மூணு கனகாம்பரச் செடி இருக்கும். சின்னச் சின்ன லில்லிப்பூ செடி கூட அப்பப்போ பூக்கும். 


பள்ளித் தோட்டத்தில் கூட சீசனுக்கு ஏத்த மாதிரி பூக்கள் மலரும். டிசம்பர் பூக்கள் என அழைக்கப்படும் ஊதாக்கலர் பூக்கள்  காடு மாதிரி முளைச்சுக் கிடக்கும். மஞ்சள் கலரில் ஒரு கொடிமலர் வருஷம் முழுவதும் பூத்துகிட்டே இருக்கும். மதிய சாப்பாடு எடுத்துப் போகும் பாத்திரம்தான் மொக்குகளைக் கடத்தும் கண்டெய்னர். எங்க பள்ளி கார்டனர் (தோட்டக்காரர்) ரொம்ப நல்லவர். நாங்க திருட்டுத் தனமாக மொக்குகளைப் பறிப்பதைப் பார்த்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். 


அடுக்கு நந்தியாவட்டை மலர்கள் கொத்துக் கொத்தாக பூக்கும். ஆனால் ஆண்கள் பகுதியில் அந்த செடி இருக்கும். அதனால் சிறப்பு வகுப்பு இருக்கும் நாட்களில் எல்லோரும் போன பிறகு நைசாக சென்று பறித்து வருவோம். மறுநாள் குதிரைவால்சடை தாங்காத அளவு அவ்வளவு நந்தியாவட்டையும் கொண்டையில் ஏறியிருக்கும். நல்ல வேலையாக அரளியும் எருக்கம்பூவும் எங்கள் அடாவடியிலிருந்து தப்பித்தன.


எப்போதாவது அபூர்வமாக தாழம்பூ கிடைக்கும். முழு தாழைமடல் மகரந்தக் கொத்துகளுடன் புதுப்பெண் மாதிரி அழகாக இருக்கும். அதைச் சின்னச் சின்ன மடல்களாக வெட்டி ஜடையில்  வைத்து  தைத்து விடுவாங்க. ரெண்டு நாள் ஆனாலும் அதன் வாசம் கூந்தலிலேயே இருக்கும். நல்ல வேளையாக தருமி மாதிரி யாரும் எங்கள் கூந்தலுக்கு இயற்கையான மணம் உண்டா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்கவில்லை. 


கல்யாணம் மாதிரி விசேஷங்கள் வீட்டில் வந்தால் மொத்தமாக உதிரிப்பூக்கள் சாக்குமூடையில் வாங்கி வருவார்கள்.  கும்பலாக உட்கார்ந்து பூக்கட்டுவது கல்யாண நிகழ்ச்சியின் சுவாரசியமான பாகம். வீட்டில் உள்ளவங்களுக்கு மிக நெருக்கமாகவும், அழைப்புக்கு வருபவர்களுக்கு  கொஞ்சம் இடைவெளி விட்டும், சம்பிரதாய நிகழ்வுகளுக்கு சரம் மாதிரியும் வித விதமாகக் கட்டணும். அதை ஈரத்துணியில் சுற்றி சுளவு(முறம்)மேல் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் மலர்ந்து மணம் வீசும் மல்லிகை எல்லோரையும் மயங்க வைத்துவிடும். 


ரோசாப்பூ மட்டும் ராணி மாதிரி, எப்போவாச்சும்தான் கண்ணுலே தென்படும். பெங்களூர் ரோஜாவெல்லாம் பஸ் ஏறி எங்க ஊர் பக்கம் வந்ததில்லை. அதனாலே பன்னீர் ரோஜா மட்டும்தான் கிடைக்கும். சுகந்த மணம் வீசும். ஆனால் பூமாலையில் வைச்சு கட்டினாலும் ரெண்டுமூணுதரம் குனிஞ்சு நிமிரும்போது கூட கொட்டிவிடும். உதிர்ந்த இதழ்களைப் பொறுக்கி சாப்பிடவும் ஒரு கூட்டம் அலையும் . 


இப்படி “பூவே உனக்காக” ன்னு நாங்க திரிஞ்சுகிட்டு இருந்தோம். ஆனால் இந்தக்கால இளசுங்க பாப் கட்டிங் வைச்சுகிட்டு ’அய்யே பூவே பிடிக்காது’ ன்னு  சொல்லிட்டு அலையிறாங்க. 


காதலுக்குத் தூது போனதே 

 பூக்கள்தான் அன்று;

”காதலர் தினம்” அன்று மட்டுமே ரோஜாக்கள் கெளரவிக்கப்படுவது இன்று.

0 Comments:

Post a Comment

<< Home