Tuesday, December 13, 2022

அலை-73

 அலை-73

லப்டப் எகிறும் லடாக் -2
லே-பள்ளத்தாக்கில் மூச்சு விடுவதே சிரமம் என்று நினைத்திருக்கையில் அதைவிட பல மடங்கு உயரமான கார்டுங்க் லா கணவாய் நோக்கி பயணம் செய்தபோது உற்சாகம் கலந்த பயமாக இருந்தது.
சீதோஷ்ணம் மாறி மாறி வரும் என்பதால் தேவையான நேரங்களில் கழட்டி மாட்டிக் கொள்ளும்படி பல அடுக்குகளாக கம்பளி உடைகள் அணிந்திருந்தோம். கணவாயை நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அதீத குளிர் ஆரம்பித்துவிட்டது. கையுறை குல்லா எல்லாம் அணிந்து கொள்ளும்படி ஓட்டுனர் அறிவுறுத்தினார். அதுவரை கழட்டி வைத்திருந்த ஸ்வெட்டர்கள் ஜெர்க்கின்ஸ் எல்லாம் எடுத்து போர்த்திக்கொண்டோம்.
கணவாயில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் கொஞ்ச தூரத்துக்கு முன்னாடியே பனி படர்ந்த இடத்தில் புகைப்படம் எடுக்க இறக்கிவிட்டார். சில்லென்ற குளிரில் சிலீரென்ற பனிக்கட்டிகளை தூக்கி எறிந்து விளையாடிய கணங்கள் எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டது. சுமார் 18000 அடி உயர கணவாயை முழுவதுமாக மறைத்து நின்றன பனிச்சிகரங்கள், எத்தனை அடுக்கு கம்பளி போட்டிருந்தாலும் ஊடுருவிச் செல்லும் குளிர் என சிலிர்ப்பான அநுபவம். போட்டோ எடுக்க கைப்பேசியின் பட்டனைத் தட்டக்கூட முடியாமல் விரல்கள் மரத்துப் போய்விட்டன. 10 நிமிஷத்துக்கு மேல் அங்கு நிற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதால் வெவ்வேறு கோணங்களில் அவசர அவசரமாக போட்டோ எடுத்துக் கொண்டோம். உலகின் மிக உயரமான சாலையில் இருந்த கெத்தே தனிதான்.
அந்த இடைவெளியில் எங்க வீட்டு வாண்டு டேனி பனிமலையில் ரொம்பதூரம் மேலே ஏறிவிட்டான். இறங்கி வரும்போது ஒருகால் மட்டும் பனிக்குழியில் சிக்கிக் கொண்டது. மிகுந்த சிரமத்துடன் ஜெர்ரி உதவி செய்து தூக்கிவிட்டான். சில சமயங்களில் காலை எடுக்கும் முயற்சியில் எலும்பு முறிவுகூட ஏற்பட்டுவிடுமாம். நல்லவேளை தப்பித்தான். அவனளவு மேலே ஏற முடியாவிட்டாலும் கொஞ்ச தூரம் ஏறி நாங்களும் பனிச்சறுக்கு விளையாடினோம். நிஜமாகவே சாகச அநுபவம்தான். முந்தைய காஷ்மீர் மற்றும் ரஷ்யா பயணங்களைவிட இது பயங்கர த்ரில்லாகத்தான் இருந்தது. ஒரு ஆர்வத்தில் பனியில் சறுக்கினாலும் அதன்பிறகு வண்டியில் ஏறியபின் குளிர் ஆட்டி வைச்சிடுச்சு. இவ்வளவு ஆபத்தான பகுதியில் இத்தனை மோசமான குளிரில் நாட்டைக் காக்க போராடும் வீரர்களின் சேவை மிகவும் உன்னதமானது.
அடுத்த இடத்திற்கான பிரயாணம் கீழ்நோக்கி நூப்ரா பள்ளத்தாக்கை நோக்கி சென்றதால் கொஞ்ச கொஞ்சமாக குளிர் விலகி சாதாரண சீதோஷ்ணம் வந்துவிட்டது. இந்த ஏரியாவில்தான் YAK (சடை எருமை) அதிகமாகக் காணப்படும்னு சொன்னாங்க. வழி நெடுக ஆங்காங்கே தனியாகவும் கூட்டமாகவும் மேய்ந்து கொண்டிருந்தன. திடீர்னு பார்த்தால் எங்க வண்டிக்கு முன்னாலேயே பத்துக்கும் மேற்பட்ட சடை எருமைகள் ஊர்வலமாகச் சென்றன. ஷையோக் எனப்படும் நதி ஓரமாகவே பயணம் நீண்டது. பாகிஸ்தானுக்குச் செல்லும் நதியென்று ஓட்டுநர் விளக்கம் அளித்தார். அடுத்த இடமான திஸ்கிட் மடாலயத்தின் வாயிலில் மைத்திரேய புத்தர் சிலை பிரம்மாண்டமாக ஷையோக் நதியைப் பார்த்தவண்ணம் நிறுவப்பட்டிருந்தது.
மதிய உணவிற்கு காத்திருந்த நேரத்தில் நளினிக்கு ஏதோ ஒவ்வாமை (allergy) ஏற்பட்டு ஊசி போடும் நிலைமைக்கு வந்துவிட்டது. நம்ம கையிலேயே நடமாடும் க்ளினிக் இருந்ததால் உடனே ஒரு குத்து குத்தி படுக்க வைச்சிட்டோம்.
உணவருந்திவிட்டு நேராக நாங்கள் தங்க வேண்டிய ஹுண்டர் கிராமத்தில் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்தோம். பெரும்பாலான தங்கும் விடுதிகள் எல்லாமே கூடாரங்கள்தான். வெளியில் இருந்து பார்த்தபோது பழைய கூடாரங்கள் போலத் தோன்றினாலும் உள்புற வசதிகள் எல்லாம் பக்காவாக இருந்தது. டபுள் காட் , மிக மிக கெட்டியான கம்பளிப் போர்வைகள், உள்புறமாக கழிவறை எல்லாம் இருந்தது. ஆனால் மின்சார வசதி மட்டும் ரேஷன் விநியோகம்தான். குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நகராட்சி மின்சாரம் கிடைக்குமாம்.
அறைகளில் பொருட்களை வைத்துவிட்டு மணல்மேடுகளில் சஃபாரி செல்லக் கிளம்பினோம். ஊரின் எல்லையிலேயே மணல் மேடுகள் அமைந்திருந்தன. அவ்வளவு உயரமான இமயமலையில் பாலைவன மணல்மேடுகள் அதிசயமாகத்தான் தெரிந்தன. அதில் சஃபாரி செல்ல மங்கோலியன் ஒட்டகங்கள் (Bactrian Camels) பெருமளவில் காணப்பட்டன. இரட்டைத் திமில்களுடன் உடம்பெல்லாம் ரோமம் சூழ அதிசய மிருகமாகவே இருந்தது. மிகுந்த குளிரையும் சுட்டெரிக்கும் வெயிலையும் தாங்கக்கூடியவையாம். சில்க் ரோட்டில் வர்த்தகப் பயணத்திற்கு மிகவும் உகந்தவையாம். ஒட்டகம் பற்றியே நிறைய அதிசய விஷயங்களை எழுதலாம்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒட்டகங்களுக்காக ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதனால் சிலர் கால்நடையாகவே மணல் மேடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ரோகித் ஒட்டகத்தில் ஏறி அதைக் கஷ்டப்படுத்த மாட்டேன் என்று நடந்தே சென்றுவிட்டான். ஒட்டகத்தின் மேல் ஏற கால் தூக்கிப்போடுவது சிரமம் என்பதால் ரோஹினி புனிதா எல்லோரும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் நளினியும் எப்படியும் ஒட்டக சவாரி செய்துவிடுவது என்ற சங்கல்பத்துடன் காத்திருந்தோம். பேசுவதற்கு சுலபமாக இருந்தாலும் ஏறுவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. எப்படியோ எம்பி ஏறிவிட்டேன். அதற்குள் நான் போட்ட சத்தத்தில் என்னோட ஒட்டகம் மிரண்டிடுச்சு போலிருக்கு. எங்களோட க்ரூப்பில் அது மட்டும் தயங்கித் தயங்கி கடைசியாகவே வந்துச்சு.
பெரிய சஃபாரி இல்லைதான். ஆனாலும் கெத்தாகப் போயிட்டு போட்டோ எடுத்துகிட்டோம். திரும்புகிற வழியில் லடாக்கி ஆடைகள் அணிந்து போட்டோ செஷன் வேறு இருந்தது. அதிலும் புனிதாவோட அழிச்சாட்டியம் தாங்க முடியலை. ஓடையின் குறுக்கே சிதிலமடைந்தது போல் தொங்கிக் கொண்டிருந்த பாலத்தின் மேல் உட்கார்ந்துதான் போஸ் கொடுப்பேன்னு பிடிவாதமாக உட்கார்ந்துகிட்டாள். பசங்க சிலர் அதுமேலே குதிச்சு குதிச்சு வேறே போறாங்க. நாங்களெல்லாம் பயத்தோட பார்த்துகிட்டிருக்க அவள் விதம் விதமாக போஸ் கொடுக்கிறாள். பட் அண்ணாவும் ரோஹினி அண்ணியும் தம்பதி சமேதராக லடாக்கி ராஜா ராணி ஆயிட்டாங்க.
தேநீர் அருந்தும் இடத்துக்கு அருகில் லடாக்கி பாரம்பரிய நடன நிகழ்ச்சி இருந்தது. சில பாடல்களுக்கு பார்வையாளர்களும் சேர்ந்து ஆடலாம்னு சொன்னாங்க. எங்க க்ரூப் நடன சிகாமணிகளெல்லாம் ஜோராக ஆடினாங்க. என்னை மாதிரி சில சோம்பேறிகள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். அவர்களின் நடன அசைவுகள் அனைத்தும் குளிர் காலத்தைத் தாங்க உடம்பை பண்படுத்தும் விதமாகவே இருந்தது. மிகக் குறைந்த கால அவகாசத்தில் விதவிதமான அலங்காரங்களை மாற்றி வந்து அழகாக ஆடிக் கொண்டிருந்தார்கள். மின்சார வசதி இல்லாத காரணத்தால் குறைந்த வெளிச்சத்தில் ஆடியதுகூட ரம்யமாகவே இருந்தது.
இருள் சூழ்ந்ததும் சட்டென்று வானிலை மாறி மிகக் குளிராக மாறிவிட்டது. கம்பளிகளுக்குள் முடங்கி சுகமான நித்திரையில் ஆழ்ந்தோம்.
மறுநாள் நீண்ட பயணம் பாங்காங்க் ஏரியை நோக்கி நீண்டது. மறுபடியும் மலை ஏற்றத்துடன் கரடு முரடான பதைகளும் மலை விளிம்புகளுமாக சாகச பயணம். கார்கில் யுத்தத்தின் ஆரம்பப் புள்ளியான கால்வான் பள்ளத்தாக்கை அணைத்தபடி சென்ற சாலை வழியாகவே பயணம் தொடர்ந்தது. தொலைவில் எதிரிகள் உட்புகுந்த இடங்களை ஓட்டுனர் சுட்டிக்காட்டிய பொழுதெல்லாம் மயிர்க் கூச்செறிவதாகவே இருந்தது. பெரிய ராணுவ முகாம்களுக்கு ஊடாகவே சென்றோம். மதிய உணவிற்காக நிறுத்திய சமயத்தில் பனிப்பொழிவும்(snow-fall) ஆரம்பித்துவிட்டதால் நடுங்கிக்கொண்டே பயணித்தோம்.ஒரு வழியாக ஏரி கண்ணில் தெரிய ஆரம்பித்தது, சூரியனும் எங்கள்மேல் கருணை கொண்டு தலையைக் கொஞ்சம் நீட்டினான். கண்ணில் விரிந்தது ஒரு அழகான காட்சி.
பாங்காங்க் ஏரி சுமார் 14000 அடி உயரத்தில் உள்ளது. சுமார் 135 கி.மீ. நீளமுள்ள ஏரியில் 50 கி.மீ. மட்டுமே இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் சைனா மேலும் கொஞ்சம் ஏரியாவைப் பிடித்துள்ளதாக செய்திகளில் வாசித்தது. ஏரியின் வண்ணங்கள் சூரிய ஒளியின் கதிர்விச்சுக்கு ஏற்ப வெவ்வேறு கலர்களை அள்ளிக் கொட்டுகிறது. வானவில்லின் ஏழு கலர்களுமே ஒரே நேரத்தில் வெவ்வேறு அடுக்குகளாகத் தெரிவது மேலும் சிறப்பு. அதோ நீல நிறம், இங்கே ஆரஞ்சு, மேல்பக்கம் பச்சை என ஆளாளுக்கு பார்வையில் பட்ட நிறங்களை வர்ணித்து சந்தோஷக் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டோம். அத்தனை நேரம் பிரயாணத்தில் வந்த அலுப்பு ஒரு நிமிடத்தில் மாறிப்போய்விட்டது.
இங்கு கூடாரங்கள் மட்டுமே காணப்பட்டது. ஏரியின் கரையோரத்தில் ஆங்காங்கே கும்பல் கும்பலாகக் கூடாரங்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். சீசனில் மட்டும் ஐந்தாறு மாதங்கள் கலகலப்பாக இருக்குமாம். பனி சூழ்ந்ததும், எல்லோரும் கூடாரங்களை மூடிவிட்டு சொந்த ஊர்களுக்குப் போய்விடுவார்களாம். ராணுவ வீரர்கள் மட்டுமே வருடம் முழுவதும் அங்கிருப்பவர்கள். ஏரியின் எதிர் கரையில் ராணுவ முகாம் இருந்தது.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூடாரங்கள் கொஞ்சம் விலகி விலகி இருந்ததை எப்படியோ சரி செய்து அடுத்தடுத்து வருவதுபோல் வாங்கிட்டாங்க. இங்கே சுத்தமாக மின்சாரம் கிடையாது. இரவு ஏழு மணிமுதல் பத்து மணிவரை சாப்பாட்டிற்காக ஜெனெரேட்டர் வைத்து விளக்குகள் எரியுமாம்.
நாங்கள் அடைந்த வேளையில் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஜெர்ரி எப்பவும் போல ஏரியில் குளிக்கப் போவதாகச் சொன்னான். நாலைஞ்சு பேர் அவனுடன் சேர்ந்தாச்சு. நான் முதலில் சரியென்று ஒத்து பாடிவிட்டு அங்கு போய்ச் சேர்ந்ததும் ஜஹா வாங்கிட்டேன். பாதிபேர் பயங்கர எதிர்ப்பு. ஆனால் ரத்தினராஜ் குடும்பத்து ஆட்களுக்கே கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்திதான். வேறே யாரு? எழில், புனிதா, ஜெர்ரி, டேனி, அலீஸ்தான். ரோஹித் வராததால் அலீஸும் பின் வாங்கிட்டாள்.
ஏரியைச் சுற்றிப்பார்க்க கிளம்பினோம். குளிக்க முடிவெடுத்த ஆட்கள் கம்பளிகள் போர்த்தாமலும் உரிய பாதுகாப்பு ஆடைகள் எடுக்காமலும் நீச்சல் குளத்துக்கு செல்வதுபோல் வந்தாச்சு. வண்டி நிறுத்தியதிலிருந்து ஏரிக்கரை வரை நடப்பதற்குள்ளேயே குளிர் நடுங்க வைத்துவிட்டது. “த்ரீ இடியட்ஸ்” படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ஸ்கூட்டர் மாதிரி ஆங்காங்கே வைத்திருந்தார்கள். பிட்டத்தில் கலர் அடிக்கப்பட்ட சேர்களும் இருந்தன. சுற்றுலா வந்தவர்களெல்லாம் கரீனா கபூர் மாதிரி ஸ்கூட்டரில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களெல்லாம் சேர்களில் அமர்ந்து பிட்டங்களைச் சொறிந்து கொண்டு இருந்தார்கள்.
நாங்களும் விதவிதமாக போட்டோ பிடித்துக் கொண்டிருந்தோம். ஏரியின் வர்ணங்களை அருகில் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருந்துச்சு. சட்டென்று அடர்ந்த பனிமேகம் ஒன்று எங்களைக் கடந்து போக ஆரம்பித்தது. பயங்கரக் குளிராகிவிட்டது. மூணு லேயரில் ஆடை அணிந்திருந்த எனக்கே குளிர் தாங்க முடியவில்லை. வெறும் காட்டன் சட்டையுடன் வந்திருந்த எழிலுக்கு ரொம்ப குளிரத் தொடங்கிவிட்டது. வண்டிக்குத் திரும்பலாம்னு சொன்னால் ஏரியில் காலையாவது நனைச்சுட்டுதான் வருவேன்னு அடம் வேறு. நடுங்கிக் கொண்டிருந்த டேனிக்கு என் கையுறைகளைக் கழட்டிக் கொடுத்தேன். திட்டிக் கொண்டே அலீஸ் அவளின் ஜெர்க்கின்ஸ் கொடுத்தாள். ஆனாலும் வண்டிக்கு வராமல் மறுபடியும் ஏரியில் சுற்றிப் பார்க்க ஓடிட்டான். இளம் கன்று குளிர் பயமறியாது.
எழிலை வலுக்கட்டாயமாக வண்டிக்கு கூட்டிட்டு வந்தேன். வீம்புக்கு காலை நனைத்துக்கொண்டதால் திரும்பும் வழியில் பாதியிலேயே நடுங்க ஆரம்பிச்சுட்டாங்க. மேலும் ஒட்டகத்தில் ஏறியபோது காலில் சுளுக்கு மாதிரி ஏற்பட்டிருந்ததால் நொண்டிக்கொண்டே நடந்தார்கள். ஒருவழியாக கட்டிப்பிடி வைத்தியமெல்லாம் பண்ணி குளிரில் நடுங்காதபடி பாதுகாப்பாக கூட்டிட்டு வந்திட்டேன். மீதி ரத்தினராஜன்ஸ் எல்லாம் ரொம்ப நேரம் கழிச்சுதான் வந்தாங்க. மேகம் தாண்டிப்போனதும் மறுபடி வெயில் வந்து ஜாலியாக இருந்தாங்களாம். ரொம்ப பீத்திகிட்டாங்க. நாங்க வண்டிக்குள்ளே இருந்தே வர்ணங்களையும் கடந்து செல்லும் மேகங்களையும் ரசித்துக் கொண்டோம்.
கூடாரங்களுக்கு வந்தபிறகு எல்லோரும் ஒரே இடத்தில் கூடியிருப்பதற்கு உணவு உண்ணும் அறைதான் பொருத்தமாக இருந்தது. அதில் அமர்ந்து கும்பலாக சீட்டுக் கட்டு விளையாடினோம். நளினியின் சம்பந்திதான் கடைசியில் வெற்றி பெற்றார்.இடையிடையே பக்கோடா,உருளைக்கிழங்கு வருவல் என ஆர்டர் செய்து கொறித்துக்கொண்டே விளையாடினோம். விடுதி ஆட்களுக்கும் நிறைய வசூல் ஆனதால் நன்கு கவனித்துக் கொண்டார்கள். இரவு உணவு நேரத்துக்குதான் ஜெனெரேட்டர் மின்சாரம் வந்தது. பத்து மணிக்குள் அதையும் அணைத்து விடுவார்கள் என்பதால் சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டோம். ஒரு சொட்டுக் குளிர்கூட தெரியாதபடி அவ்வளவு அருமையான கம்பளிப் போர்வைகள் தந்திருந்தார்கள்.
காலை நாலரை மணிக்கெல்லாம் விடிந்துவிட்டது. கூடாரத்தின் ஜன்னல்வழியே ஏரியைப் பார்ப்பதுபோல் அமைத்திருந்தார்கள். ஏரியைப் பார்க்க வெள்ளையாகத் தெரிந்தது. ஒருவேளை உறைந்திருக்குமோ என பார்க்க வெளியில் வந்தால் ஏற்கனவே ஜெர்ரி அங்கே உட்கார்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அதிகாலையின் அந்த அமைதி ,சில்லென்ற சீதோஷ்ணம், மெதுவாக எழும்பிக் கொண்டிருந்த பகலவன், ஆங்காங்கே தொலைவில் தெரிந்த பறவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூலோக சொர்க்கத்தையே சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. சுற்றுலாவின் இறுதிக் கட்டம் இனிமையாகத் தெரிந்ததில் ஒரு இன்பக் கிளர்ச்சி. கிளம்பும் முன்னர் ஏரிக்கரையில் மறுபடியும் சேர்ந்து நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். பிரிய மனமில்லாமல் ஏரிக்கரையிலிருந்து கிளம்பினோம்.
லே திரும்புவதற்கு வேறு மார்க்கமாகச் செல்ல வேண்டியிருந்தது. சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஆங்காங்கே ரோடுகள் செப்பனிடுவதும் பாலங்கள் சீரமைப்பதுமாக பயணம் மெதுவாக சென்றது. சின்னச் சின்ன ஏரிகளெல்லாம் உறைந்து கிடந்தன. சடை எருமை சீஸ் கட்டிகள் கிடைக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினார். அதன் அருகிலேயே உறைந்த ஏரி இருந்தது. பிள்ளைகளெல்லாம் அதில் இறங்கி போட்டோ எடுத்தார்கள். நாங்களெல்லாம் சடை எருமைப் பால் அருந்தினோம். சுவையாகவே இருந்தது.
இதிலும் ஒரு கணவாய்
இருந்தது. சங்க் லா கணவாயும் 17000 அடி உயரத்தில் இருந்தது. நிற்கவே இடமில்லாமல் வாகனங்கள் குவிந்திருந்தன. போனதடவை அநுபவம் காரணமாக டேனியை மேலே ஏறவிடவில்லை.
லே வந்து பழைய விடுதியிலேயே தங்கினோம். நிறைய நேரம் இருந்ததால் ஷாப்பிங் கிளம்பிவிட்டோம்.
காலையிலேயே லே விமானதளம் மிகவும் நெரிசலாக இருந்தது. உட்காரக்கூட இடம் இல்லை. நல்ல வேளையாக புனிதாவின் சக தோழர் விமானநிலைய மேலாளராக இருந்ததால் எங்களை VIP Loungeஇல் அமர வைத்து தேநீரெல்லாம் கொடுத்து சுகமான பயணத்தை வாய்க்கப் பண்ணினார். லே-தில்லி எல்லோரும் ஒன்றாக வந்திறங்கினோம். டில்லிவாலாக்கள் விடை பெற்று சென்றபின் உணவு விடுதியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சாயங்கால விமானங்கள் மூலம் கோவை, சென்னை, பெங்களூருக்கு வந்து சேர்ந்தோம்.
கும்பலாகப் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நீண்ட சாகசப் பயணம் முடித்து வந்த மயக்கம் இன்னும் தீரவில்லை.

0 Comments:

Post a Comment

<< Home