Tuesday, December 13, 2022

அலை-77ஆ

 அலை-77

 “மருத்துவம் பேசுவோம்”

நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பேசப்படும் பொருள் உடல் நலமாகத்தான் இருக்கும். இயல்புக்கு மாறாக சின்னத் தலைவலியோ காய்ச்சலோ வந்தாலும்கூட அதுகுறித்தே அன்று முழுவதும் மனது சுற்றித் திரியும். “If health is lost everything is lost” என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உடல்நலம் பேணாத மனிதர்களே இல்லை எனலாம். 


ஆனால் அதற்குத் தேவையான முயற்சிகளை எல்லோராலும் கடைப்பிடிக்க முடிகிறதா என்பதும் கேள்விக்குறிதான். பொருளாதார சிக்கல்கள், பருவநிலை மாற்றங்கள், அறியாமை, கிருமிகள், கட்டிகள், வயதுமூப்பு என எண்ணற்ற காரணிகள் நம் நலத்தைச் சீண்டிப் பார்ப்பவையாகவே உள்ளன. இயற்கையாக வரும் தொந்தரவுகளைவிட நாமே வரவழைத்துக் கொள்ளும் வியாதிகளும் அதிகம் உண்டு.


அறுபது வயதைக் கடந்துவிட்டேன், ஆனால் இதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லை, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதே இல்லை எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மனிதர்கள்கூட சிறு சிறு உடல்நலக் கோளாறுகளை எதிர் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைத் தாங்கும் வலிமை அவர்களுக்கு அதிகம் இருந்திருக்கும். சளி பிடித்தால் வைத்தியம் பார்த்தால் ஏழு நாட்களில் சரியாகிவிடும், எந்த வைத்தியமும் பார்க்காமல் விட்டால் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்று கேலியாகப் பேசுவது கூட உண்டு.


இத்தைகைய சூழலில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு எப்போதும் ஏக கிராக்கிதான். அதிலும் எழுபதுகளில் டாக்டர் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டது உண்மைதான். எங்க குடும்பத்தில் நான் தான் முதல் டாக்டர். அறிவிலும் மேதாவித்தனத்திலும் என்னை விட சிறந்து விளங்கிய அண்ணனோ தம்பியோ மருத்துவம் படிப்பதில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. 


ஏற்கனவே வீட்டுக்குக் கடைக்குட்டி என்பதால் கிடைத்த சலுகைகளுடன் படிப்பும் சேர்ந்து கொண்டதால் ரொம்ப செல்லமாகிப் போனேன். 

முதல்வருடம் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பெரிய டாக்டராக நினைத்துக்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரி வாசலுக்குப் போகவே இன்னும் ரெண்டு வருடம் ஆகும் என்பதைச் சொல்லி மனசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவ்வப்போது தெரிந்த ஆலோசனைகளைச் சொல்லி சமாளித்துக் கொள்ளுவேன். 


ஊரிலிருந்து அவ்வப்போது வைத்தியத்துக்கு வரும் உறவினர்களைப் பொறுப்பாக அழைத்துச் சென்று உரிய மருத்துவர்களிடம் காண்பித்து செய்யும் உதவிகளே குடும்பத்தில் பெருமையாகப் பேசப்பட்டது.

வீட்டுக்கு வருபவர்களிடம் என்னை அறிமுகப்படுத்துவதே ‘ஹைகிரவுண்ட்டில் டாக்டருக்குப் படிக்கிறாள்’ என்பதுதான். தாணு என்று உரிமையாகக் கூப்பிட்ட வகுப்புத் தோழர்கள்கூட ”என்ன டாக்டர் செளக்கியமா” என்று கூப்பிடத்தொடங்கிய காலம் தொட்டு டாக்டர் என்பதே  முதல் அடையாளமாகிப்போனது. முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் போகப்போகப் பழகிப் போனது. 


மூன்றாவது வருடம் வந்த பிறகு நோய்களும் மருந்துகளும் பரிச்சியம் ஆகத் தொடங்கிவிட்டது. விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது சின்னச் சின நோவுகளுக்கு வைத்தியம் செய்துகொள்ள ரெண்டுபேராவது வந்துவிடுவார்கள். உள்ளுக்குள் உதறலாக இருந்தாலும் பந்தாவாக கேள்விகள் கேட்டு அதற்கு ஒரு தீர்வும் சொல்லிக் கொள்ளுவேன். கொஞ்சம் வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால் ஹைகிரவுண்டுக்கு வரச் சொல்லி முதுநிலை சிறப்பு மருத்துவர்களிடம் காட்டி சரி செய்ய வைப்பேன். 


எங்க வீட்டில் எல்லோருக்கும் என்மேல் ரொம்ப நம்பிக்கை. நான் என்ன சொன்னாலும் அப்படியே கடைப்பிடித்து விடுவார்கள். விதண்டா வாதமோ நொரண்டு பேச்சுகளோ இருக்காது. நான் மூன்றாம் வருடம் படித்தபோது தம்பி நாராயணன் ஷங்கர் நகரில் படித்துக் கொண்டிருந்தான். திடீரென வயிற்று வலி என்றவுடன் என்னிடம் வந்துவிட்டான். 


நான் மூன்றாவது யூனிட்டில் ஹரிகரன் சார் யூனிட்டில் படித்துக் கொண்டிருந்தேன். 

தம்பிக்கு அப்பெண்டிசைட்டிஸ் என்று கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. வீட்டில் அதுவரை யாருக்கும் அறுவை சிகிச்சை என்ற பேச்சே இருந்ததில்லை. கட்டியோ குட்டியோ எதற்காகவும் யார் மீதும் கத்தி வைத்ததில்லை. அக்கா மதினி எல்லோருக்கும் சுகப்பிரசவம்தான் தம்பிக்குத்தான் முதல் அறுவை சிகிச்சை. எல்லோரும் ரொம்ப பயந்து போயிருந்தார்கள். 


எங்கள் பயம் புரிந்தமாதிரி ஹரிஹரன் சாரே அறுவை சிகிச்சை செய்ய வருவதாகச் சொல்லிவிட்டார்.

மூன்றாமாண்டு மாணவியின் சகோதரனுக்கு அறுவை சிகிச்சை செய்ய துறைத்தலைவராக இருந்த ஹரிஹரன் சாரே அந்த அகால நேரத்தில் வந்தது குடும்பத்தினர் அனைவரையும் நிம்மதிப் படுத்தியது. ஆப்பரேஷன் சுமுகமாக நடந்து தம்பியை வார்டுக்குக் கூட்டி வந்த பிறகுதான் எல்லோர் முகத்திலும் சிரிப்பே வந்தது. பெரிய டாக்டரே வந்து ஆப்பரேஷன் செய்தார் என்று வருவோர் போவோரிடமெல்லாம் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். 


அறுவை சிகிச்சைக்குப் பின் வைத்தியம் பார்க்கும் வார்டில் துணைக்கு ஆண்களே இருக்க வேண்டும். ஆனாலும் நான் உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன பின்பும் கூட அப்பா அந்த வார்டின் வெளிப்புற வெராண்டாவில் தரையில் படுத்திருந்த காட்சி நிழற்படமாக இன்றும்  நினைவில் ஓடுகிறது. 


நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்கு பெரிய தையல் போடும் வழக்கம் இருந்ததால் ஒரு வாரத்துக்குத் தம்பி மருத்துவ மனையிலேயே இருந்தான். 

எங்க யூனிட் நோயாளி என்பதால் நானும் அவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளும் வசதி கிடைத்தது. விசாரிக்க வரும் சொந்தக்காரங்க கூட்டம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் டாக்டர் தம்பி என்பதால் யாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. 


ஆப்பரேஷன் பண்ணிய டாக்டரைவிட துணைக்கு நின்ற தாணு ஹீரோயின் ஆகிவிட்டாள். இனிமேல் என்ன நோய் வந்தாலும் நேரே பஸ் பிடிச்சு ஹைகிரவுண்டு வந்துவிட வேண்டியதுதான் என நிறைய பேர் அன்னைக்கே முடிவு பண்ணிட்டாங்க. படித்து முடிக்கும் வரை அது தொடர்கதையாகத்தான் இருந்தது.


மருத்துவத்தை உன்னதமான தொழில் (Noble Profession) என்று அழைப்பதின் மகத்துவத்தை அப்போதிருந்தே உணர முடிந்தது.

0 Comments:

Post a Comment

<< Home