அலை-87
அலை-87
“சக உதிரங்கள்’
“முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக”- இதுதான் எங்க குடும்ப தீம் பாடல்.. தம்பி நானா இந்த மாதிரி தத்துவப் பாடல்களை உணர்வுபூர்வமாகப் பாடுவான். குடும்ப கூடுகைகளின் போது இந்தப்பாடல் கண்டிப்பாக மேடையேறும். சகோதர சகோதரிகளின் பங்களிப்பு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த தலைமுறை எங்களுடையது.
மூத்த குழந்தைக்குத் திருமணமாகும் சமயம் வரை குடும்பக் கட்டுப்பாடு என்ற பேச்சுக்கு வழியே இல்லாமல் வாரிசுகள் பிறந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் எண்ணிக்கையைப் பொறுத்து விசேஷித்த அடைமொழி கூட சொல்லுவாங்க.முதல் இரண்டுக்கும் ஏதாவது சிறப்பு உண்டான்னு தெரியலை. மூணாவது பெண் பிறந்தால் “முற்றமெல்லாம் பொன்”; நாலாவது பையன் பிறந்தால் ‘நடைக் கல்லைப் பெயர்த்துவிடுவான்’ ; ஐந்தாவது பெண் பிறந்தால் ‘அடுக்குப் பானையெல்லாம் பொன்”; ஏழாவது பெண் ‘இரந்தாலும் கிடைக்காது’. எட்டாவது பிள்ளை ’மேதை’ என்றெல்லாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம்.
வரிசையாக குழந்தை பெற்றுக் கொள்வதை நியாயப்படுத்த இந்த மாதிரி சொல்லிக் கொள்வார்கள் போலும். எங்க வீட்டில் ஏழாவது பெண்ணாக நானும், எட்டாவது மேதையாக தம்பி நானாவும் அந்தப் பெயர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தினோம், மற்ற எண்ணிக்கை எதுவும் சரியாகப் பொருந்தி வரவில்லை. எல்லாருக்கும் பெயர் வைப்பது கூட ஆச்சி, தாத்தா, ஒன்றுவிட்ட தாத்தா, பெரியம்மா என யாரோ ஒருத்தரோட பெயர்தான் இருக்கும். அந்தந்த கிழடுகளும் பெயர் வைத்த பேரப் பிள்ளைகளைத் தனியாக் கவனித்துக் கொள்வார்கள். பலகாரம் வாங்கிக் கொடுப்பது காசு கொடுப்பது எல்லாம் நடக்கும். சரசக்கா மட்டும் ஸ்பெஷல், சரஸ்வதி பூஜையன்று பிறந்ததால் சாமி பெயர் கிடைத்தாலும் நாங்கள் கூப்பிடுவது என்னவோ சச்சு அக்காதான்.
மாமனார், மாமியார் பெயர் சொல்லிக் கூப்பிடுவது மரியாதைக் குறைவு என்பதால் எல்லோருக்கும் ஒரு பட்டப் பெயரும் இருக்கும். உண்மையான பெயரே மறந்து போகுமளவுக்கு அந்தப் பெயர் பிரபலமாக இருக்கும். அதனால்தான் ராம்குமார் துரையாகவும், சிவகாமிநாதன் செக்கன் என்றும் ஆறுமுக நயினார் பூந்தி எனவும் செல்லமாக அழைக்கப்படுவார்கள். தம்பி கூட நாராயணன் பெயர்கூட நானாவாக சுருங்கியது. என் பேரை மட்டும் எதுவுமே பண்ண முடியாமல் தாணுவாகவே இருந்தேன். அதனால்தானோ என்னவோ திருமணத்திற்குப் பிறகு நான்சி தாணு ஆகிவிட்டேன்.
இப்போது உள்ள நியூக்ளியர் குடும்ப வாசிகளுக்கு இவ்ளோ பெரிய குடும்பமும் அதன் ஜனத்தொகையும் மலைப்பைத் தரலாம், நாங்களெல்லாம் மியூஸியத்து ஆட்கள் மாதிரிகூடத் தெரியலாம். ஆனால் அதனால் அடைந்த நன்மைகளும் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷங்களும் அவர்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும்னு சொல்லுவாங்க. அண்ணன்களும் அக்காக்களும் சொல்லிக் கொடுத்த எண்ணற்ற விஷயங்கள்தான் பின்னாடி வந்த தலைமுறையை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.
பள்ளிக்கூடம் கற்பிக்காத எத்தனையோ விஷயங்களை வீட்டில் தெரிந்து கொண்டிருக்கிறோம். நண்பர்களுடன் சுமுகமாகப் பழகுவது, விட்டுக் கொடுப்பது, தலைமை ஏற்று வழி நடத்துவது போன்ற பல விஷயங்கள் சிரமமின்றி வசப்பட்டது சக உதிரங்களின் கவனிப்பால்தான்.
சாப்பாடு ஊட்ட அம்மாவோ, படிப்பு சொல்லித்தர அப்பாவோ கஷ்டப்படதில்லை. மூத்த குழந்தைகளே இளையவர்களைக் கவனித்துக் கொள்வார்கள். மூத்தவர்கள் போட்ட ஆடைகள் வழி வழியாக அடுத்த குழந்தைக்கு தரப்படுவது எழுதப்படாத விதிகள்.
துரை அண்ணன் உள்ளூரிலேயே இருந்த ஆலையில்தான் வேலை பார்த்தான். என்ன மழைபெய்தாலும், மார்கழிமாதக் குளிர் என்றாலும் கரெக்டாக ஆறேமுக்காலுக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அதே நடைமுறைதான். விடுப்பு எடுத்தோ காலதாமதமாகச் சென்றோ பார்த்ததில்லை. இப்போ அவன் மகன் அதே மாதிரி வேலைக்கு செல்வதைப் பார்க்க முடிகிறது.
மரகதக்கா சரியான சட்டாம்பிள்ளை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லோரையும் ஆட்டுவித்து வேலை வாங்கிவிடுவாள். வாத்தியாரம்மா என்ற கெத்தும் உண்டு. சுடலி அக்கா எது நடந்தாலும் கவனம் சிதறாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். எங்கள் வீட்டில் படிக்காத மேதை அவள்தான். சச்சக்கா கொஞ்சம் சாது. அவளுக்கும் எனக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும் அவளுடன் தான் எனக்கு ஒட்டுதல் ஜாஸ்தி. செக்கண்ணன் கோபக்காரன். அதனால் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். நயினார் அண்ணணும் நாராயணனும்தான் ரொம்ப நெருக்கம்.
குடும்ப விழா ஏதேனும் வந்துவிட்டால் வீட்டுமட்டுக்கும் செய்துக்குவோம் என்று முடிவெடுத்தாலே வீடு நிறைந்துவிடும். நாங்களே சமைத்து, பரிமாறி, அலங்கரித்து,கொண்டாடி ஓயும்போது கோடானுகோடி சந்தோஷம் கிடைக்கும். பிரச்னைகள் ஏதும் வந்தால் பெருசுங்க பார்த்துக்கும். உடல் உழைப்பைக் கொடுக்க இளவட்டங்கள் இருக்கும். வீட்டையே ரெண்டுபடுத்தும் மழலைப் பட்டாளம் இருக்கும்.
இப்போ உள்ள தலைமுறைகள் Destination Wedding என்று மொத்தமே அம்பது அறுபதுபேரை மட்டும் அழைக்கிறார்கள். அதைத் தாண்டி நிறைய பேரை அழைக்கும் அளவுக்கு உறவுகளும் இல்லை, இழுத்துப் போட்டு செய்ய அவர்களுக்கு நேரமும் இல்லை. குடும்பம் சிறுத்துவிட்டது. இரண்டு குழந்தை பெற்றால் வளர்ப்பது கஷ்டம், ஒன்றோடு நிப்பாட்டிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த பிறகு உறவுகள் நலிந்த சமூகம் ஆகிவிட்டோம். ஜனத்தொகை கட்டுப்பாடு சமுதாயத்திற்கு நல்லதுதான். ஆனால் குடும்ப உறவுகளுக்கு சாபக்கேடு. அத்தை மாமா, சித்தி சித்தப்பா என்ற உறவுகளே இல்லாமல் போய்விடுகிறது.
பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் தனிமைப் பட்டு நிற்கும் முதியவர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத சொத்துக்கள் இருந்தாலும் அன்புடன் கவனிக்கும் உறவுகள் இல்லாமல் தனிமைப் பட்டவர்கள் அதிகம். தவமிருந்து பெற்ற மகனோ மகளோ வெளிநாடு சென்றுவிட்டால் இன்னும் மோசமான நிலையில் தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள் போல் ஆகிவிடுகிறார்கள். கணவன் மனைவி குழந்தைகள் என எல்லா உறவுகளுமே இடையில் வந்தவை. குழந்தைகளின் பாதைகள் பிரியும் போது மறுபடியும் தனிமைதான். ஆயுசு பரியந்தம் உடன் வரக்கூடிய கணவருக்கு அடுத்தபடியாக உள்ள உறவு உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடையதுதான். என் சக உதிரங்கள் அனைவரும் அறுபதுகளைத் தாண்டி நிற்கிறோம். என்றைக்காவது மன சோர்வோ தனிமையோ தோன்றினால் சட்டென்று முடிவெடுத்து சென்னையோ ஆறுமுகநேரியோ போய்விட்டால் போதும். அக்கா அண்ணன்களுடன் உறவாடிவிட்டு கதைபேசி களித்துவிட்டு வரலாம். என்னால் போக முடியாவிட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவர்களை இங்கே வர வைத்துவிடலாம்.
இப்போது உள்ள அண்ணன் தங்கைகள் எங்களைப்போல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஊடகமும், சமூக வலைத் தளங்களும் தனி நபர் தொடர்புகளை அதிக அளவில் சேதப்படுத்திவிட்டது. நாற்பது வயதுவரை உறவுகள் துச்சமாகத் தெரியும். ஐம்பதுகளில் அதன் அருமை தெரியும். அறுபது தாண்டும்போது அதன் இன்றியமையாத் தேவை புரியும்.
“உறவுகள் தொடர்கதை”
0 Comments:
Post a Comment
<< Home