Monday, March 13, 2006

திணறும் +2 தேர்வு;கொக்கரிக்கும் தேர்தல்

ஆண்டு முழுவதும் , ஏன் பள்ளிப் பருவம் முழுவதுமே உயிரைவிட்டு படிக்கும் மாணவர்களின் ஒரே குறிக்கோள் +2 தேர்வு. அதற்கான முகாந்திரங்கள், பேற்றோர்களின் மிகைப்படுத்தப் பட்ட ஆர்வத்தைப் பொறுத்து, சில குழந்தைகளுக்கு மேல்நிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்ததுமே ஆரம்பித்து விடுகிறது. அதனால் ஏற்படும் மன உளைச்சல்களும், பொருளாதாரப் பிரச்னைகளும் தேர்வுக்கு வெகு முன்னதாகவே தோன்றிவிடுகிறது. தனது குழந்தையின் எதிர்காலமே அந்த 8 வினாத் தாள்களில்தான் முடிவாகப் போகிறது என்ற தேவையற்ற பயமும் கவலையும், ஏறத்தாழ எல்லா பெற்றோர்களையுமே ஆட்டி வைக்கிறது. அது தேவையானதா இல்லையா என்ற வாதமெல்லாம் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்ததே.
ஆனால் அத்தைகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்வும், அதற்குரிய பாடத் திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் ஏகப்பட்ட குழப்பத்திலிருப்பதால் கதி கலங்கி நிற்பவர்கள் அந்த வருடத் தேர்வை எதிர் நோக்கும் மாணவர்களும் அவர்கள் பெற்றோர்களும்தான். இது இந்த வருடப் பிரச்னை மட்டுமல்ல. சில காலமாகவே ஆண்டுதோறும் பிள்ளைகளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விடுவது அரசு எந்திரத்துக்கு ஒரு பொழுது போக்கு!
ஒரு சாதாரண கல்வித் திட்டத்தில் தொலைநோக்கு பார்வையோ ஆழ்ந்த அறிவுடன் கூடிய பரிந்துரைகளோ கொண்டுவரமுடியாத கல்வித் துறை எப்படி தரம் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கத் துணை செய்யும்? நன்கு படிக்கின்ற புத்திசாலியான மாணவர்கள் கூட கதி கலங்கி, தேர்வை எதிர்கொள்ளும் தைரியமற்று மனக்குழப்பத்துடன் தேர்வைச் சந்திக்கும் வகை செய்வதுதானா இந்த படிப்பு?
நாளுக்கொரு பாடத்திட்டம், எதிர்த்து குரலெழுப்பப் பட்டால் சிறிது குறைத்துக்கொள்வது; நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்ற நிலைமைகூட தேர்வுக்கு முந்தைய நாள்வரை தெரியாமலிருக்கும் அவலம்; கிராமப்புற மாணவர்களை முன்னேற்றப் போவதாகப் பீற்றிக் கொண்டு அனைத்து மாணவர்களையுமே விளையாட்டுப் பொம்மைகள்போல் பந்தாடுவது; நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் அரசியல் ஆதாயங்களுக்காக மேல்முறையீடு என்ற போர்வையில் நாட்களைக் கடத்துவது- இன்னும் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் இந்த வருடம் தேர்வெழுதும் மாணவர்களுக்கு.
நுழைவுத் தேர்வு கண்டிப்பாக இருக்காது என்பதால் எந்தப் பள்ளியிலுமே பயிற்சிகள் சரிவரக் கொடுக்கப் படவில்லை. ஆனால் இப்போது திடீரென அறிவிக்கப்படும் சாத்தியம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுக்கு ஆயத்தம் செய்ய வேண்டிய அவசரம்- நுழைவுத் தேர்வு இல்லாத பட்சத்தில் தேர்ந்தெடுப்பது சிரமம் என்ற நோக்கில் மிகக் கடினமாக்கப் பட்டுள்ள சமீபத்திய வினாத்தாள்கள்-அதனால் செண்டம் வாங்கும் வாய்ப்புகளையே தவற விட்டுவிடுவோமோ என்ற கவலை- மார்க் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு விட்ட வேளையில் மறுபடி நுழைவுத் தேர்வு எழுத நேரும்போது, அதே மதிப்பெண் விகிதத்தில் தேறியிருக்கும் CBSE மாணவர்களுடன் போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தம்- எத்தனை சோதனைகளைத்தான் இந்தக் குழந்தைகள் தாங்குவது?

ஒழுங்காகப் படித்தால் ஏனிந்த தடுமாற்றம் என்று கேட்கவே முடியாது. நமது காலத்தைய படிப்புகளைவிட எத்தனையோ மடங்கு சுமை ஏற்றப் பட்டுவிட்ட பாடத்திட்டத்தில் சரிவர சொல்லித் தரும் ஆசிரியர்கள்கூட நிறைய பள்ளிகளில் இல்லை. சுயமாக சிந்தித்து இணையான பதிலை எழுதினால்கூட சுழித்துவிட்டு மதிப்பெண்களைக் குறைக்கும் திருத்துதல் அமைப்பு யாரையும் சுயமாகப் படிக்க விடுவதில்லை. அவர்கள் சொல்லும் வடிவத்திலும் வார்த்தைகளிலும்தான் பதில் அமைய வேண்டும். அறிவுடன் கூடிய பிள்ளைகள் இங்கு தேவைப்படுவதில்லை. சொன்னதைத் திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் போதுமாம்! பாவம் அந்தப் பச்சைக் கிளிகள்! ஸ்டேட் ராங்க் வாங்கி தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் கூட ரெகுலராக பாஸ் பண்ணுவதற்கே தத்தித் தத்தி நடைபயிலுகிறார்கள். திடீரென PATTERN மாற்றப்பட்டால்கூட அதை பின்பற்றக் கஷ்டப்படுபவர்கள்தான் MAJORITY.

இந்தத் தொல்லைகளிலிருந்தெல்லாம் மீண்டு எப்படியோ பரீட்சை எழுதி முடித்தாலும் திருத்துபவர்களின் மூட் மற்றும் சுமுகமான நிலைமையைப் பொறுத்துதான் மார்க் பெறும் பாக்கியம். மிகுந்த இம்சைகளுக்கிடையில் திருத்தும் ஆசிரியரை எரிச்சல் படுத்தவென்றே அடிப்படை வசதிகளற்ற இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி. போன பொதுத் தேர்வு ஒன்றில் வரிசையாக வந்த நம்பர்கள் நூறு சதவிகித தேர்ச்சி, அதில் மிக சாதாரண மாணவனும் அடக்கம். இன்னுமொரு லிஸ்ட்டில் வரிசையாக ஆவரேஜ் மதிப்பெண்கள், இதில் பள்ளியின் முதல் மாணவனும் அடக்கம். இதையெல்லாம் பார்க்கும்போது- ராசி, வாஸ்து, விதி, அதிர்ஷ்டம் என்ற எல்லா கெட்ட வார்த்தைகளும் மனதைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.

திருவள்ளுவர் சொன்னதெல்லாம் பொய்யாகிப் போயிடும் போல இருக்கு.`கற்றணைத்தூறும் அறிவு’ என்பது நடைமுறை சாத்தியமாக உள்ளதா? குரங்கு கைப் பூமாலையென பிஞ்சுகள் வெம்பிப் போயிருக்கின்றன, தேற்றுவாரின்றி! தேற்ற வேண்டிய பெற்றோர்களோ சிறகிழந்த பறவைகள் போலுள்ளார்கள்.
மாற்றங்களையும், மாறுதல்களையும் திட்டமிட்டு முன்னதாக செய்ய முடியாதா? தண்ணீர்ப் பிரச்னை வரும்வரை `நதிநீர்ப் பிரச்னை’யை மூலையில் போடுவதுபோல் இளைய தலைமுறையின் வாழ்க்கையோடு விளையாடலாமா? விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள், வேதனையோடு நாமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.
நாளிதழ்களும் மற்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் செய்திகளிலேயே புரண்டு கொண்டிருக்கின்றன. தேர்வின் பொருட்டு மாணவர்களும் பெற்றோரும் கதிகலங்கி நிற்பதைக் கண்டுகொள்ளவோ காதில் வாங்கிக் கொள்ளவோ நாதியில்லை. +2 வினாத்தாள்கள் மிகவும் கடினம் என்று ஏதோ ஒரு மூலையில் சிறப்புச் செய்தியாக வந்ததோடு சரி.

அப்படியென்ன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இந்த தேர்தல்? ரொம்ப யோசித்து,மண்டையைக் குடைந்து , கால்கடுக்க வரிசையில் நின்று, ஓட்டுப் போட்டாலும் ஏதாவது மாறுகின்றதா? ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ எதுவுமே நிலையில்லாத கட்சிகள் ஆகிவிட்ட நிலையில்! கட்சித் தலைவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே இந்தக் கட்சியா எதிர்க் கட்சியா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவு தாவல்களும், வரவேற்புகளும்.! சீட்டுகளின் எண்ணிக்கைக்காக தாவும்போது கொள்கைகளைத் தூர எறிந்துவிட்டு புதுக்கொள்கைகளைத் தத்தெடுப்பவர்களும்,சொந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு வலியோரைச் சார்ந்து நிற்க நினைப்பவர்களும், இன்னும் அரசியல் என்பதே குடும்பத்துக்காக மட்டும் என்று இருப்பவர்களும், மற்றவர்கள்(மக்கள்) எக்கேடு கெட்டால் என்ன என் மனம்போனபடி காய்கள் நகர்த்தப் பட வேண்டும் என்று அலைபவர்களும்- இதில் யார்தான் எந்தப் பிரச்னையையும் மனிதாபிமானத்துடன் கவனிக்கப் போகிறார்கள்? இதே கல்வித் திட்டப் பிரச்னை வாழையடி வாழையாக புதுப் புது தோற்றங்களுடன் சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு சொல்வாங்களே அதுதான் உண்மை.
படித்தவர்கள் வாக்குப் போட முன்வராததால்தான், நாட்டு நடப்பு தெரியாத பாமரர்களின் வாக்குகள் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்று ஆளாளுக்கு வாய் கிழியப் பேசுவார்கள். நிலைமையை சீர்தூக்கி பார்க்கும்போது எவருக்குமே ஓட்டு போடுதல் நியாயமில்லை என்று தோன்றும்போது கால்கடுக்க வரிசையில் நிற்பானேன் என்றுதான் பலரது எண்ணமும். எந்தக் கொள்ளிக்குப் போட்டாலும் அது நம் தலையைச் சுடப் போவது உறுதி, அதைப் போய்த் தேர்ந்தெடுக்கணுமா?
இங்கு எவருக்கும் நாட்டு நலன் என்பது 10% கூட மனசில் இல்லை. அப்படி இருந்தால், நாம் தோற்றாலும் பரவாயில்லை , பலமுள்ள எதிர்க்கட்சியாக இருந்து நல்லது செய்வோம் என்ற எண்ணம் இருக்குமே! எதிர்க்கட்சி என்பதே கேலிக்குரியது என்று நினைப்பவர்களுக்கு அடிப்படை அரசியல் அறிவாவது இருக்கிறதா? தேர்தலில் வரம்புமீறல்களும் கள்ளத்தனங்களும் இருக்கக்கூடாது என்று முனைந்து செயலற்றி வரும் தேர்தல் கமிஷன் போன்ற அமைப்பு போல், இப்படித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற வரைமுறைகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு கமிஷன் வந்தால்தான் அரசியல் என்பது சாக்கடை நிலையிலிருந்து நீரோடை நிலைக்கு வரும்.

வெளிநடப்பு செய்யும் MLA பதவி பறிப்பு; சட்டசபைக்கு குறிப்பிட்ட காலங்கள்வரை வராதவர் ஓட்டுப் போடவே தகுதியற்றவர்; முதலில் கடைப்பிடித்த கொள்கையைக் கடாசிவிட்டு எதிர் கட்சி தாவுபவர்களுக்கு தேர்தலில் நிற்கத் தடை- இதுபோல் வித்தியாசமான கமிஷன் ஒன்று வந்தால் நல்லாயிருக்காதா?

12 Comments:

At 2:28 AM, Blogger தருமி said...

எந்தப் பூனைக்கு எந்த மணியை, எப்படி, எங்கே,யார் கட்டுவது..?
கல்வித்துறையும், நீதித்துறையும் மட்டுமாவது கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும்.

கனவுகள் .. பகல் கனவுகள்...

 
At 3:09 AM, Blogger யாத்ரீகன் said...

எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கப்போகும் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அவர்களின் கல்வி பற்றிய முடிவுகளை அரசியல்வாதிகள் எடுப்பதே தவறு, இதற்கென ஏற்படுத்தப்படும் துறை ஒன்று, தேர்தல் கமிஷன் அளவு தனி அதிகாரமும், குறுக்கீடும் இன்றி இருக்கவேண்டும்..

ஐ.ஐ.டி போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் மக்களின் வரிப்பணத்தில் படித்து, வெளிநாடு செல்லும் மாணவர்கள் அந்த கமிஷனில் பணியாற்றி, ஒரு திட்டத்தை தயாரித்து , வெற்றிகரமாக செயல்படுத்தியபின்னேயே போகவேண்டும் என்றெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமான விதிமுறைகளை கட்டாயப்படுத்தவேண்டும்...

யார் இவற்றை செயல்படுத்தபோவபர்கள்.. ?

 
At 8:50 AM, Blogger தாணு said...

தருமி
ஒரு ஆசிரியராக உங்களுக்கு மாணவர்களின் நிலைமை அதிகம் புரியும். படிப்பதே ஒரு சுமைபோல் ஆகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது குலத் தொழிலுக்காக 10 வயதிலேயே தந்தையுடன் தொழில் கற்றுக் கொள்ளச் செல்லும் சிறார்கள் அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் என்று கூக்குரலிட்டுக் கொண்டு, உருப்படியான கல்வி தர முடியாத அவலட்சண அரசு இது

 
At 8:51 AM, Blogger தாணு said...

கல்விகூட வியாபாரமாகிப்போன சூழலில் வெளிநாடு செல்வதே சில சமயங்களில் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது

 
At 11:28 AM, Blogger இராதாகிருஷ்ணன் said...

ஓயாத இப்போட்டிகளால் பொறியியல், மருத்துவக் கல்வியின் தரம் மலினப்பட்டதுதான் மிச்சம்! எல்லோரும் பொறியிலாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டுமென்று கங்கனம் கட்டித்திரிவது பிரச்சனையின் முதற்காரணங்களுள் ஒன்று. தற்காலத்தில் நடந்து கொண்டிருப்பவை கல்வித் தொழிற்சாலைகள் அல்லவோ!

 
At 11:22 PM, Blogger தாணு said...

ராதாகிருஷ்ணன்
தொழிற்கல்வியை மையமாக வைத்தே எல்லா தரப்பினரும் தயாராவதாலும் இந்த சங்கடங்கள் அதிகப் படுத்தப் படுகின்றன.

 
At 9:40 PM, Anonymous Anonymous said...

Good indepth analysis of the problem. yesterday I visited a relative boy[admitted in a private hospital who failed to perform exceptionally well in the Physics exam and was lamenting his misfortune. He thought his dreams of getting an Engineering seat in any good college was shattered and was very much in depression . He fainted in the examination hall while writing the Chemistry exam and was rushed to the hospital. HE HAD CONSUMED OLEANDER POISON.

I strongly recommend this posting about the +2 students to be forwarded to every one in Tamilnadu who has an email ID and to the President of India[Who is the only non politician in Power]

NB:
Now that boy is recovering.

 
At 8:15 AM, Blogger தாணு said...

//தேர்வுகளின் போது பெரும்பான்மையான வீடுகள் சிறைச் சாலைகளாக மாறி வருகின்றன//.

//சமுதாயத்தின் எல்லா அங்கங்களுமே மலினப்பட்டு இருக்கும் சூழலில் கல்வித் துறை மட்டும் தனித்துவத்துடன் இருக்கும் வாய்ப்பில்லை//.
பாரதி,
வீடுகள் சிறைச்சாலைகளாவதால் அதன் தொடர்ச்சியாக அந்தக் குடும்பமே தனிமைப் பட்டுக் கிடக்க வேண்டியுள்ளது. உறவுகள் விருந்துக்கு வந்தால் தவிப்புடன் நெளிவதிலிருந்து, நெருங்கிய நண்பர்களுடன் சாதாரண பேச்சுக்களை தொடர முடியாத அவலம் வரை மனிதர்களே அந்நியப் பட்டுக் கிடக்கிறார்கள். சந்ததியினரின்
வாழ்க்கையைச் சந்தோஷமாகக் கழிப்பதற்காக ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்பதற்காக இப்போதைய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளும் அவலமும்தான். இதிலிருந்து யாருமே தப்ப முடிவதில்லை!

 
At 8:21 AM, Blogger தாணு said...

வேதாந்தி!
மன உளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர் எப்படியாவது மீண்டுவிடுகிறோம். இதுபோல் எத்தனையோ கஷ்டங்களைக் க்டந்து வந்திருப்பதால். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு இதுதான் ஏறப்போகும் ஏணியின் முதல் படிக்கட்டு. அதிலேயே தடுக்கும்போது அதை வெற்றியின் முதல் படியாக பாவிக்கும் அளவு மன முதிர்ச்சி இருக்காதல்லவா?
பெளதிகத் தேர்வு ஏறக்குறைய எல்லா மாணவர்களுமே ஒரே தரத்தில் எழுதியிருப்பதாகத்தான் விசாரித்து அறிந்தேன். கண்டிப்பாக அதிக மதிப்பெண்கள் வரும். இதுபோன்ற சின்ன சங்கடம் நாளை அவன் நுழையப் போகும் தொழிற்கல்வியில் சிறந்த மாணவனாக வெற்றிபெற வைக்கும். மனம் ய்ஹளர விடாமல் நம்பிக்கையை ஊட்ட வேண்டியது மட்டுமே நம் கடமை.

 
At 8:22 AM, Blogger தாணு said...

தளர என்பது எழுத்துப் பிழையாக வந்துவிட்டது

 
At 1:22 AM, Blogger தாணு said...

கண்ணம்மா
என் மகளைவிட, அவள் வயதொத்த எங்கள் ஓட்டுநரின் மகள் சந்தோஷமாக டென்ஷன் இல்லாமல் இருக்கிறாள். அடிப்படையில் சந்தோஷமாக இருப்பதுதான் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தால் வேலைக்காகக் கற்கும் கல்வி ஒரு சுமையே!

 
At 1:25 AM, Blogger தாணு said...

உண்மையாகவே மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடத்துக்கு முன்னரே பணம் கட்டி சீட் ரிசர்வ் செய்தவர்கள் எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்கள், அவர்களின் பிள்ளைகள் உதறலின்றி பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி வியாபாரம் ஆகிப் போன பிறகு, நிறைய முதல் போட்ட முதலாளிகள் போல் இருக்கிறார்கள் அவர்கள்!

 

Post a Comment

<< Home