Tuesday, December 15, 2020

அலை-29

 அலை-29

“பிறந்தநாள் இன்று பிறந்தநாள்” என்று சிலோன் ரேடியோவில் தினமும் ஒலிக்கும் பாடலைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடியதில்லை. ஆனால் வீட்டின் முதல் குழந்தைகளின்  பிறந்தநாளை மட்டும் மிக விமர்சனையாகக் கொண்டாடுவோம். மினி திருமணவிழா போல் ஆர்ப்பாட்டமாக நடக்கும். கண்டிப்பாக தலைச்சன் குழந்தைக்கு பெரிய அளவில் கொண்டாடினாலும் வசதிப்பட்டோர் அடுத்தடுத்த வாரிசுகளுக்கும் கொண்டாடுவாங்க.


இரண்டுநாட்கள் திருவிழா போல் வீடு களைகட்டும். முதல்நாள் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்த நாளை வீட்டில் வைத்து சிறப்பாகக் கொண்டாடுவாங்க. நெருங்கிய சொந்த பந்தங்களெல்லாம் முதல் நாளே வந்திடுவாங்க. பிறந்தநாள் கொண்டாடப்படும் வாண்டுக்குப் புதுத்துணி மாலையெல்லாம் போட்டு உள்ளூர் சிவன் கோவிலில் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்து விருந்து சாப்பிடுவாங்க. வடை பாயாசத்தோடு அறுசுவை விருந்து நடக்கும். எவ்வளவு கூட்டம் வந்தாலும் தலைமாடு கால்மாடுன்னு அட்ஜஸ்ட் பண்ணி படுத்து உருண்டுக்குவோம். 


இரண்டாம்நாள் தான் ரொம்ப விசேஷம். மொட்டை அடிச்சு காது குத்துவது. எங்க வீட்டில் எல்லோருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில்தான் மொட்டை அடிப்பாங்க. 8 கிமீதான் ரெண்டு ஊருக்குமுள்ள இடைவெளி. முதல்நாள் வர முடியாத சொந்தங்கள்கூட காது குத்தும் விழாவிற்கு நேரடியாகத் திருச்செந்தூருக்கே வந்திடுவாங்க. 


மறுநாள் கிளம்புவதற்கு முதல்நாள் இரவிலிருந்தே சாப்பாடு ரெடி பண்ணுவாங்க. அது என்னவோ மொட்டை போடப் போகும் போதெல்லாம் புளியோதரைதான் செய்வாங்க. எத்தனை கூட்டம் வந்தாலும் தாங்கும் அமுத சுரபி புளியோதரைதான்.

நல்லெண்ணெய் விட்டு கிளறி நிலக்கடலையோ கொண்டக்கடலையோ போட்டு கலந்து செய்திருப்பாங்க. வாசம் மூக்கைத் துளைக்கும். பெரிய பெரிய தூக்குப்பாத்திரம், போணிச்சட்டியிலெல்லாம் அடைச்சி வைச்சிடுவாங்க. தொட்டுக்கொள்ள வசதியாக வறுத்துஅரைத்த தேங்காய்த் துவையல்தான் பொதுவாக இருக்கும். எப்போதாவது வற்றல் வடகம் துணை சேரும்.


எங்க ஊரிலிருந்து ரயிலில் போவது பிக்னிக் மாதிரி இருக்கும். வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கும் , திருச்செந்தூர் ஸ்டேஷனிலிருந்து கோவிலுக்கும் போக வேண்டிய தூரம் மைல்கணக்கில் இருக்கும். ஆனாலும் கூட்டமும் ஆட்டமும் பேச்சுத்துணையும் களைப்பே இல்லாமல் செய்துவிடும். ஸ்டேஷனிலிருந்து குதிரைவண்டிகள் கோயிலுக்கு வாடகைக்கு ட்ரிப் அடிப்பாங்க. சில சமயங்களில் நாங்களும் அதில் போயிருக்கிறோம். வண்டியின் பின்பக்கத்தில் குறுக்குக் கம்பி போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரயாணம் தொடரும். குதிரைவண்டியின் பின்சீட்டில் உட்கார்ந்து காலைத் தொங்கப் போட்டுகிட்டு நடந்து போறவங்களுக்கு டாட்டா காட்டி வெறுப்பேத்துறப்போ பெருமையா இருக்கும்.


சில பிறந்த நாட்களுக்கு பஸ் பயணமும் போவதுண்டு. திருவிழா இல்லாத காலங்களில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.வீட்டுக்கு எட்டின தூரத்தில் இருக்கும் ரொட்டிக்கடை ஸ்டாப்பில் இருந்தே ஏறிக்கலாம். சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தூக்கிட்டுப் போறதும் ஈஸியாக இருக்கும். எங்க குடும்பம் ஏறிட்டால் பஸ் பத்தாது, ஸ்டாண்டிங்தான். கூட்டத்தைப் பார்த்துட்டு நிறைய பஸ் நிக்காமல் போவதும் உண்டு. “குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கி வைச்சார் எங்கப்பா” பாடல் எங்க குடும்பத்துக்கு ரொம்பவே பொருந்தும்.


 வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டு பிறந்த நாள் விழா கண்டிப்பாக  வந்திருக்கும். அப்போ வருஷத்துக்கு ஒருதரம் மொட்டை போடப் போயிருப்போம். அந்த ஜெனெரேஷன் இப்போ வளர்ந்து வருஷத்துக்கு ஒரு டிக்கெட் +2 பரீட்சை எழுதுது.


திருச்செந்தூர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில்தான் மொட்டை போடும் இடம் உண்டு. அதுக்கு அடுத்தாற் போல் கோவில் யானையைக் கட்டி வைக்கும் இடம் உண்டு. அதன் முன்புறமாக கடைகள் வரிசையாக இருக்கும்.  பிறந்தநாள் மொட்டை, நேர்த்திக்கடன் மொட்டை என்று வருஷம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் இடம் அது. மொட்டை போடும் வரிசையில் பிறந்த நாள் பேபி காத்திருக்கும்போது,பெரியவங்க எல்லாம் வேப்ப மர நிழலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னவங்க எல்லாம் யானையை வேடிக்கை பார்ப்போம் அல்லது கடைத்தெருவில் சுற்றிக்கொண்டிருப்போம். 

கோவிலில் மொட்டை அடிப்பவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக இருப்பார்கள். சின்னக்குழந்தைகள் அழுது திமிறினாலும் சின்னக் கீறல்கூட இல்லாமல் அழகாக மொட்டை போடுவாங்க. மொட்டை அடிச்சதும் சந்தனத்தை மொட்டை மண்டையில் குளிரக்குளிர பூசிவிடுவாங்க.


 அதுக்குப்பிறகுதான் காது குத்துறது. உண்மையாகவே பாவமாகத்தான் இருக்கும்.தாய்மாமன்கள் எல்லாம் பந்தாவாக ரெடடியா இருப்பாங்க. ஆண்டிசெப்டிக் லோஷன், டிஸ்போஸபிள் ஊசியெல்லாம் அப்போது கிடையாது. எல்லாருக்கும் ஒரே ஊசிதான். கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே ரெண்டு காதிலேயும் கம்மல் ஜம்முன்னு உக்கார்ந்திருக்கும்.


 அழுற குழந்தையைத் தூக்கிகிட்டு எல்லாரும் கடலுக்குக் குளிக்கபோவோம். 

அன்னைக்கு எல்லோரும் குளிக்க முடியாது, அடுத்தடுத்து பூஜை  இருக்கும். கடற்கரையை அணைத்திருக்கும் வெளிப்பிரகாரத்தின் கூரை ரொம்ப உயரமமாக இருக்கும், எல்லாம் கருங்கல்லில் ஆனது. இடையிடையே உள்ள கருங்கல் தூண்களைத் தொட்டுக் கொண்டும் சுற்றிக்கொண்டும் நாங்களெல்லாம் கூச்சலிட்டபடி கடலை நோக்கி ஓடுவோம். பட்டுப்பாவாடை பறக்க கால் தரையில் படாமல் சிட்டாகப் பறப்போம். கடலை நோக்கிச் செல்லும் தரை கீழ்நோக்கி சாய்வாக இறங்கும், மழைக்காலம் என்றால் வழுக்கிக்கூட விட்டுவிடும்.


 கிழக்குப் பக்க பிரகாரச்சுவரில் ஒரு பொந்து உண்டு. அதிலிருந்து பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் தெரிவார். கடற்காற்று அதில் புகுந்து செல்லும் ஒலி “ஓம்” என்று ஒலிப்பதாகச் சொல்லுவாங்க. 

இடது புறம் கடல் அலைகள் பிரகாரத்தின் பக்கச் சுவரில் மோதி மோதி போவது அழகாகவும் இருக்கும், ஆபாத்தானதாகவும் தோன்றும்.அமாவாசை பெளர்ணமி நாட்களில் அலைகள் உயரமாக எழும்பி நடந்து செல்பவர்கள்மேல் பூச்சிதறல்களாய் வீசி நனைக்கும்.பெரிய பெரிய பாறாங்கற்கள் காவல்காரர்களாய் அரண் அமைத்திருக்கும்.அலைகள் கொஞ்சம் சாதுவாக இருக்கும்போது கற்களின் மேல் தாவிக்குதித்து விளையாடலாம்.


குழந்தையைக் கடலில் குளிப்பாட்டி தலையில் சந்தனம் தேய்த்து பூஜை செய்ய கோவிலுக்குள் எடுத்துட்டு போவாங்க. உட்பிரகாரத்தில் ஸ்தல புராணம், முருகர் பற்றிய கதைகள் எல்லாம் பல வண்ணச் சித்திரங்களாய் சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும். அந்தச் சித்திரங்களின் பொருள் விளக்கங்களை யாராவது அண்ணனோ அக்காவோ சொல்லிக் கொண்டு வருவாங்க. நாங்களெல்லாம் வாய்பிளந்து கேட்டுக் கொண்டு வருவோம். ஒவ்வொரு வருஷமும் கதை சொல்லும் நபர்கள் மாறும்போது கற்பனை நயங்களும் மாறுவதால், எப்போதும் புதுசாகவே கதை கேட்பதுபோல் இருக்கும். 


பூஜையெல்லம் முடிஞ்சு வெளியே வந்ததும் சாப்பாட்டுப் பந்தி ஆரம்பிக்கும். கோவிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்கள் இருக்கும். செந்தில் ஆண்டவன் விடுதி, சஷ்டி மண்டபம், கதாகாலட்சேப மண்டபம் என ஏகப்பட்ட இடங்கள் உண்டு. அதில் ஏதாவது ஒரு மண்டபத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்படும். எல்லாரையும் வரிசையாக உட்கார வைத்து புளியோதரை பரிமாறப்படும் பாங்கைப் பார்த்து அன்னதானம் நடப்பதாக நினைத்து அழையா விருந்தாளிகள் சாப்பாட்டில் பங்கெடுப்பதும் நடக்கும். அடுத்த பிறந்தநாள் யாருக்கு , எப்போது என்பதெல்லாம் அப்போதே முடிவாகிக் கொண்டிருக்கும். 


மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது.. ”மொட்டை” அடிக்கப் போனதால்தானே நாலு கிலோமீட்டருக்குமேல் நடந்து ”முழங்கால்” வலி வந்தது. சம்பந்தம் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்குது.

0 Comments:

Post a Comment

<< Home