Thursday, June 01, 2023

அலை-86

 அலை-86

“மகளிர் மட்டும்”

இந்த வார்த்தைப் பிரயோகம் எப்போதிருந்து ஆரம்பித்தது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் மருத்துவக்கல்லூரி நாட்களில் பெண்கள் கழிவறையை நாடிச் செல்லும் போது அடிக்கடி உபயோகப் படுத்தியிருக்கிறோம். சில சமயங்களில் அதையும் சுருக்கி M2(m square) என்றும் சொல்லிக் கொள்ளுவோம். ஆனாலும் மகளிர் மட்டும் கதை அத்துடன் முடிந்துவிடுவதில்லை. என்னதான் ஆண்களுடன் சேர்ந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே இணைந்து ரசிக்கும் விஷயங்கள் நிறைய உண்டு.


பெண்கள் கூட்டமாக அமர்ந்து கிசுகிசுக்கும் நேரங்களில் முக்கியமான கதைகள் ஆண்களைப் பற்றியேதான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது தான். ஆனாலும் அதையும் கடந்து பலதரப்பட்ட விவாதங்களும் பரிமாற்றங்களும் எங்களுக்குள் நடக்கும். சுவாரஸ்யங்கள் எல்லை மீறிப்போய் விடிய விடிய கதை பேசிய நாட்களும் உண்டு. முதல் வருடத்திலேயே திருமணம் ஆகிவிட்ட ராமலக்ஷ்மியின் தாம்பத்தியம் பற்றியே ஒரு இரவு முழுக்கப் பேசினோம். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் கிளுகிளுப்பாக பேசிக் கொண்டதும், அவளைக் கேள்வி கணைகளால் துருவியெடுத்து முகம் சிவக்க வைத்ததும் நினைவிருக்கிறது.


திரையிசைப் பாடல்களைப் பற்றிய சர்ச்சைகளே அடிக்கடி நடக்கும் கூத்து. அதில் வரும் பாடல் வரிகளில் உள்ள யதார்த்தங்களும் , இடைச் சொறுகல்களாகத் தெரியும் மறைமுக அர்த்தங்களும் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்படும். பாட்டு எழுதியவரே அதைக் கேட்டு மூர்ச்சை அடையும் அளவுக்கு பலவிதமான அனுமானங்களை நாங்களே தோண்டி எடுத்து விடுவோம். சினிமாப் பாட்டு புத்தகங்கள் எல்லாம் கூட வாங்கி வைத்திருப்போம். சிவப்பு மஞ்சள் பச்சை என பல கலர்களில் நோட்டீஸ் பேப்பர்களில் அந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.ஹாஸ்டலில் மின்சாரம் கட் ஆகிவிட்டால் எங்கள் மகளிர் சபை ஏதாவது ஒரு ரூமில் கூடிவிடும். விவகாரமான விஷயங்கள் பேசும்போது எல்லோரும் நெருக்கி அடித்து உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் ரகசியமாக கதைப்பது சூப்பர் த்ரில். பக்கத்து ரூம் அக்காக்கள் கேட்டுவிட்டால் மறுநாள் டின் கட்டிவிடுவார்கள். முதலாம் ஆண்டு படித்த போது, மாடு கன்று போடுவது பற்றி நாங்கள் பேசி அடித்த லூட்டி நன்றாக நினைவிருக்கிறது. அன்று அப்பாவித்தனமாக ஏகப்பட்ட கேள்வி கேட்டவர்களெல்லாம் இப்போது மகப்பேறு மருத்துவர்களாகி அந்தநாளை  நினைவு கூர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். 


பெண்கள் விடுதியின் ஹாஸ்டல் டே ரொம்ப களேபரமாக இருக்கும். என்ன வேணா பாடலாம், எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். திறமை தேவையில்லை, பங்களிப்புதான் முக்கியம். எங்க வகுப்புத் தோழியர் நாடகம் போடுவதில் கில்லாடிங்க. ஒருதரம் ஷுபா, நிம்மி எல்லாரும் சேர்ந்து போட்ட காமெடி நாடகம் சூப்பர் டூப்பர் ஹிட். பானுவும் சஹாயமேரியும் இசைக் குயில்கள். நல்லா பாடுவாங்க.


ஒருவருஷம் மைக்கைப்பிடிச்சு  நானும். “நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்” என்ற பாடலை பாட ஆரம்பித்தேன். அப்போ எனக்கு தொண்டையில்  singers nodule இல்லாததால் ஓரளவு சுமாராகப் பாடினேன். தோழிகள் எல்லாரும் சேர்ந்து எழில் எழில் என்று கத்தி குமைச்சிட்டாங்க. அப்போதான் இலைமறை காயாக எங்க ட்ராக் ஓடிக் கொண்டிருந்த சமயம். எழில் மேல் soft corner உடன் இருந்த சில சீனியர்கள் நெற்றிக் கண்ணுடன் எரித்ததைத் தெரிந்து கொள்ளாமல் இவங்க எல்லாம் ஒரே அட்டகாசம். அதன் விளைவுகளை அடுத்த சில நாட்களுக்கு நான் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.


மகளிர் மட்டும் கதை விடுதியுடனோ கல்லூரியுடனோ முடிந்து விடாது. அது பரந்து விரிந்து திருநெல்வேலி முதல் குற்றாலம் வரைகூட செல்லும். புது சினிமா ரிலீஸ் என்றால் வகுப்புத் தோழியர் நிறையபேர் சேர்ந்து செல்வது வழக்கம். திரை அரங்குகளில் பெருவாரியான இருக்கைகளை ஆக்ரமித்துக் கொண்டு கேலியும் கூச்சலுமாக படம் பார்ப்பது தனி சுகம். அப்படி செல்லும் போது மகா மட்டமான படம்கூட காவியம்போல் தோன்றிவிடும். முன்னாடியே டிக்கெட் எடுத்து இருக்கைகளில் கயிறு கட்டி ரிஸர்வ் செய்ய ஒரு கூட்டம் முன்னாடியே போக வேண்டும். அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது.


அந்த மாதிரி ஒரு நாளில் பதினைந்துபேர் போலே ஹைகிரவுண்டு பஸ்ஸ்டாப்பிலிருந்து இறங்கி நடந்து வரும்போது அஷோக் மெஸ் முன்புறமாக யாரோ தரையில் விழுந்து கிடந்தது போல் இருந்தது. குடிபோதையில் யாராவது விழுந்திருக்கலாம் அல்லது அடிகிடி பட்டும் விழுந்திருக்கலாம். பக்கத்தில் போய் பார்க்கலாமா வேண்டாமா அல்லது அஷோக் மெஸ்ஸில் இருந்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாமா என்று விவாதித்துக் கொண்டு இருந்தோம். 


எங்கள் வகுப்பு மேகலாவுக்கு ANTICLIMAX  என்று பட்டப் பெயர் உண்டு. பூகம்பமே வந்தாலும் அலட்டிக்காமல் இருப்பாள். திடீர்னு அவள் அந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். நாங்களெல்லாம் ஆட்சேபிக்கும் முன்பே அவள் அந்த உருவத்தின் அருகில் சென்று குனிந்து பார்த்தாள். அமானுஷ்யமான குரலுடன் அந்த உருவம் திடீரென எந்திரிக்கவும் நாங்கள் எல்லோரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அஷோக் மெஸ்ஸுக்குள் ஓஓஓடிவிட்டோம்.திரும்பிப் பார்த்தால் மேகலா மட்டும் அந்த இடத்திலேயே அலட்டிக்காமல் நின்றிருந்தாள். அருகில் எங்கள் வகுப்புத் தோழர் யாரோ நின்றிருந்தார்கள். நாங்கள் கூட்டமாக வெளியில் செல்லும் நாட்களில் எங்களைப் பயமுறுத்தும் நோக்கத்துடன் வகுப்புத் தோழர்கள் சேட்டைகளில் ஈடுபடுவதும் உண்டு. அப்படித்தான் அன்றும் நடந்திருக்கிறது. அந்தக் காட்சியை நினைக்கும்போது இப்போதுகூட பொங்கிப் பொங்கி சிரிப்பு வருகிறது. மேகலாவுக்கு வைத்த பெயர் சரிதான் என்று மறுபடியும் நிரூபித்து விட்டாள். 


வகுப்புப் பசங்களோட சங்காத்தமே வேண்டாம் , நாம மட்டும் ஜாலியாக டூர் போகலாம் என்று அடிக்கடி தனியாகப் பிச்சுகிட்டு போயிடுவோம். நாங்க போறதுன்னா எப்பவுமே குற்றாலம் தான் . ரொம்ப பக்கமான சுற்றுலாத் தலம். பெண்கள் மட்டும் போனால்தான் தயக்கமின்றி குளியலை அனுபவிக்க முடியும். காலையில் போயிட்டு இரவு திரும்பிவிடும் சுற்றுலாக்கள் என்பதால் ஆண்கள் துணை தேவைப்படுவதில்லை. ஆனால் ஒண்ணு ரெண்டு தரம் நாங்க போன சமயத்தில் அவர்களையும் பார்த்த மாதிரிதான் நினைவிருக்கிறது. ‘குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே’ந்னு எங்களைப் பார்த்துதான் கண்ணதாசன் எழுதியிருப்பார். அப்படி ஒரு ஆட்டம் போடுவோம்.


அனைவரும் பயிற்சி மருத்துவர்களாக இணைந்த பிறகு மகளிர் மட்டும் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்தோம். இந்த முறை பாபநாசம் சென்றோம். பானுவின் அம்மா வேலை நிமித்தம் திருநெல்வேலி வந்துவிட்டதால் அவங்களும் எங்களோடு சேர்ந்துகிட்டாங்க. கல்லூரிப் பருவம் முடிந்து அனைவரும் பிரியப்போகும் நேரம் நெருங்கிவிட்டதாலும், வயதுக்கேற்ற மனப்பக்குவம் வந்து விட்டதாலும் அந்தச் சுற்றுலா வாழ்க்கையில் மறக்க முடியாத பயணமாகிவிட்டது. எனது டிஃபன் பாக்ஸ் ஆற்றில் உருண்டோடிய காட்சி எங்கள் அனைவரின் மனதிலும் இன்றும் நிலைத்திருக்கிறது.


எங்கள் “மகளிர் மட்டும்” க்ரூப் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது சிறு சிறு கூடுகைகளும் நடந்துகொண்டே இருக்கும்,விரைவில் ஈரோட்டில் . அன்று sweet sixteen  இன்று Sweetest Sixty. வயது ஏறினாலும் வருஷம் ஓடினாலும் மகளிர் மட்டும் ஓய்வதில்லை.

0 Comments:

Post a Comment

<< Home