Wednesday, June 05, 2024

அலை அலை-4

 அலை அலை- 4

“அறுவை மன்னர்கள்’
பொதுவாக இப்படிச் சொன்னால் பேசியே போரடித்து உயிரை வாங்கும் நபர்கள்தான் நம் கண் முன் வருவார்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் அறுவை மன்னர்கள் என்றால் அறுவை சிகிச்சை செய்வதில் கிங் என்று அர்த்தம். அதிலும் இளங்கலை மருத்துவம் படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் அமையும் யூனிட் பொறுத்து அவங்கவங்க துறைத் தலைவர்கள்மேல் தேவதா விசுவாசம் இருக்கும். எங்க கல்லூரியில் மொத்தமே நாலு யூனிட் தான் உண்டு MSS, DKP, RH,SR என்று அவர்களின் பெயர்ச் சுருக்கமே யூனிட் பெயராக இருக்கும்.. எனக்கு எல்லா வருஷமும் மூணாவது யூனிட் RH (Dr.R.Hariharan) சார் unit தான். மாணவப் பருவத்தில் மூணுவருஷம், House surgeon பண்ணும்போது ஒருவருஷம் என நான்கு வருஷமும் அங்கேதான் போஸ்ட்டிங்.
MBBS மூன்றாம் வருஷம்தான் க்ளினிகல் சைடில் முதல் வருஷம். என்ன செய்யணும் என்ன படிக்கணும்னு தெரியாமலே கோட் மாட்டிகிட்டு பெரிய டாக்டர் மாதிரி அங்கும் இங்கும் சுத்திகிட்டு இருப்போம். நோயாளிகள் வாயால் டாக்டரம்மா என அன்போடு அழைக்கப்படும் முதல் அநுபவம் அப்போதுதான் கிடைக்கும். ஊசி போட சிரிஞ்ச் எடுத்தால் கை நடுங்குவதும், புண்ணுக்குக் கட்டுப் போடப் போனால் பேண்டேஜ் ரோல் கைநழுவி நழுவி சுற்றிக் கொள்வதும் எங்களுக்கு மட்டுமே தெரியும் தர்ம சங்கடங்கள். ஆனால் நோயாளிகள் முன்னால் மெத்தப் படித்த மேதாவிகள் மாதிரி எக்ஸ்ரேயைத் தூக்கி ஸ்டைலாகப் பார்ப்பது, ஸ்டெத் வைச்சு பரிசோதனை செய்வது எல்லாம் பந்தாவாகச் செய்வோம்.
அப்படிப்பட்ட எங்களுக்கு அறுவை சிகிச்சைப் பிரிவில் போஸ்ட்டிங் போடும்போது எப்படி இருக்கும் என்பது தனித்தனி அநுபவங்கள். புறநோயாளிகள் பிரிவிலேயே பிரச்னை ஆரம்பித்துவிடும். ஆண் பெண் இருபாலரும் உள்ள அறையில் இடுப்புக்குக் கீழ் துணி நீக்கப்பட்ட ஆண் மகனின் வியாதி குறித்து பேராசிரியர் சீரியசாக வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார். சீனியர்கள் அக்கறையுடன் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். மூன்றாம் வருட மாணவர்களை யாரும் கண்டுக்க மாட்டார்கள். அவங்களில் வியப்பாக சிலரும், வெட்கத்துடன் சிலரும், குறும்புப் பார்வையுடன் சிலரும் நெளிந்து கொண்டிருப்பார்கள். நோயாளிகளில் பேதம் பார்க்காமல் நோயை ஆராய்ந்து வைத்தியம் செய்ய வேண்டிய அடிப்படைக் கல்வி அங்கிருந்துதான் ஆரம்பிக்கும். கண்ணால் பார்ப்பது (inspection), கையால் தொட்டு உணர்ந்து பரிசோதிப்பது ( palpation) என விலாவாரியாக பரிசோதிக்கும் போது சில குறும்புக்கார சீனியர்கள் திடீரென்று ஜூனியர்களை பரிசோதனை செய்யச் சொல்லி சிக்கலில் மாட்டிவிட்டு கலாய்ப்பதும் உண்டு.
புறநோயாளிகள் பகுதி முடித்துவிட்டு வார்டுக்குப் போகும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கும். பேண்டேஜ் சுற்றப்பட்டவர்களும், மூக்கு கைகளில் பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டவர்களும், சிறுநீர் வடிகுழாய் பொருத்தப் பட்டவர்களும் படுத்திருப்பதைப் பார்க்கும்போது அந்நிய தேசத்துக்குள் பிரவேசித்தது போல் இருக்கும். பலவிதமான வாசனைகள் மூக்கைப் பதம் பார்த்து நிறைய பேரை வாந்தி எடுக்கவும் வைத்துவிடும். அதனாலெல்லாம் வார்டை விட்டு ஓடிவிட முடியாது. அங்கும் வகுப்புகள் நடக்கும். ஒரே நோயாளியை அக்குவேறு ஆணிவேறாக பரிசோதித்து கலந்துரையாடி நோய் கண்டறிவது அங்குதான். Case presentation பண்ணும் மூத்த மாணவர் நேர்ந்துவிட்ட ஆடு பாணியில் பரிதாபமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். திடீரென வார்டு மிக அமைதியாகிவிட்டால் தலைமை மருத்துவர் வார்டு ரவுண்ட்ஸ் வருகிறார் என்று அர்த்தம்.
எங்கள் சீஃப் டாக்டர். மரு. ஹரிஹரன் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் முறையான நெறிமுறைகள் யூனிட்டில் கனகச்சிதமாகப் பின்பற்றப்படும். உதவி பேராசிரியர்கள், சீனியர்கள் எல்லாம் கர்ம சிரத்தையுடன் அவர் பின்னே செல்லும் போது ஊர்வலம் மாதிரி இருக்கும். மூன்றாம் ஆண்டு அரை டிக்கெட்டுகள் நாங்களும் பின்னாடியே போவோம். ஒண்ணும் புரியாது, அவர் பேசுறது எதுவும் காதில் கேட்காது. ஆனாலும் அப்படி கிராண்ட் ரவுண்ட்ஸ் போவது மிகப் பெருமையாக இருக்கும் .ஒவ்வொரு நோயாளியின் முன்னேற்றம், பிரச்னைகள் எல்லாம் கேட்டு அதற்குரிய தீர்வுகளை மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே செல்வார். பயிற்சி மருத்துவர் பின்னாடியே குறிப்பெடுத்துக் கொண்டு ஓடுவார்.
ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, ஆப்பரேஷன் வார்டு, தீக்காயங்கள் மற்றும் தொற்று வார்டு என எல்லா வார்டுக்கும் இந்தப் படை அப்படியே ஊர்வலம் போகும். கோமதிநாயகம் சார், சுப்பாராவ் சார், மாரிமுத்து சார், வைகுண்டராமன் சார் நால்வரும் ஒவ்வொரு வார்டுக்குப் பொறுப்பாக இருப்பார்கள். அதுபோக பெரிய மீசை வைத்த சீனியர் ரெஸிடண்ட் ஒருவரும் உண்டு, செல்லதுரைன்னு நினைக்கிறேன், பெயர் மறந்துவிட்டது. வாட்ட சாட்டமாக ஆறடி உயரத்தில் அய்யனார் மாதிரி இருப்பார். ஆசிரியர்களைவிட அவரிடம்தான் எங்களுக்கு அதிக பயம்.
வார்டு முடித்துவிட்டுதான் ஆப்பரேஷன் தியேட்டருக்குப் போகணும். முதல் முதலாக தியேட்டருக்கு போன அநுபவம் வித்தியாசமாக இருந்தது. என்னமோ நாமளே ஆப்பரேஷன் பண்ணப்போறமாதிரி பந்தாவாக உள்ளே போக நினைச்சால் ஒண்ணும் நடக்காது, குட்டுப்பட வேண்டியதுதான். தியேட்டர் நர்ஸ் மனசு வைச்சால்தான் உள்ளேயே போக முடியும். தியேட்டர் உடை பத்தாது என்று சொல்லி பாதி நாள் துரத்தி விட்டுடுவாங்க. மீறி உள்ளே போனாலும் அறுவை அரங்கில் ஒரு ஓரமா பூனைக்குட்டி மாதிரி நிக்கணும். ஏதாவது தெரியுதான்னு ஸ்டெஃபி கிராஃப் மாதிரி எம்பி எம்பி குதிச்சு பார்க்கணும். ஒண்ணும் தெரியாததால் போரடிச்சுப்போய் மெதுவா ஆப்பரேஷன் நாள் அன்று கட் அடிச்சுட்டு வேறு எங்கேயாவது சுத்தப் போயிடுவோம். கடைசி வருஷம் வரும்போது படிச்சுக்கலாம் என்ற தெனாவெட்டுதான்.
வைகுண்டராமன் சார் உருவத்தில் அதுக்கும் ஆப்பு வந்திடும். சார் குழந்தை நல அறுவை சிகிச்சை முடித்திருந்தாலும் அவர் துறையில் வேகன்ஸி இல்லாத்தால் RH Unit இல் கொஞ்ச நாள் இருந்தார். சும்மா சுத்திகிட்டு இருக்கிற எங்களை மாதிரி ஆட்களைக் காதைப்பிடிச்சு இழுக்காத குறையாக தொற்று நோய் வார்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுவார். எங்க க்ரூப்பில் இருந்தவங்க எல்லோரும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவாங்களான்னு தெரியாது. ஆனால் தீக்காயமும், சீழ் பிடித்த புண்களும் எல்லோரும் கண்டிப்பாக குணப்படுத்த வேண்டிய கட்டாயம் வரும் என்று சொல்லி அதற்குரிய விளக்கங்களை அருமையாக சொல்லித் தருவார். சர்க்கரை நோயால் சீழ் பிடித்த பாதங்கள் குறித்து அவர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் பின் வந்த நாட்களில் எவ்வளவோ நோயாளிகளைக் குணப்படுத்த உதவியிருக்கிறது.
மாரிமுத்து சார் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவ்வப்போது கோபப்படுவதும், எரிந்து விழுவதுமாக இருப்பார். வேறு எந்த யூனிட்டிலும் அவரை விரும்பி சேர்த்துக் கொள்ளாதபோதும் RH unit அவரைத் தாயுள்ளத்தோடு அரவணைத்து வைத்திருந்தது. சுப்பாராவ் சார் ஆங்கில நாவல்களை மாணாக்கர்களுடன் விமர்சனம் செய்து நல்ல சூழ்நிலையை உருவாக்கிவைத்திருப்பார். கோமதி நாயகம் சார் பற்றி நினைத்தாலே சிவப்பு நிற ஏப்ரன் கட்டிக் கொண்டு அறுவை அரங்கில் சுற்றிக் கொண்டிருப்பதுதான் நினைவுக்கு வருகிறது.
உதவி பேராசிரியர்களில் அவ்வப்போது மாறுதல் வந்தாலும் சீஃப் டாக்டர் ஹரிஹரன் சார்தான்.
அவர் சத்தமாகப் பேசி கேட்டதே இல்லை. மிக மென்மையாக பேசுவார். ஆனாலும் அவரது சொல்லுக்கு மூணாவது யூனிட்டே ஆடும். சக பேராசிரியர்களிடம் கண்ணியமாகவும் மரியாதையுடனும் பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். அவர்களின் சிகிச்சை முறையில் அத்து மீறி தலையிடுவதே இல்லை. சீனிராஜ் சாரும் தன்னைப் போலவே சென்னையிலிருந்து மாறுதலில் வந்திருந்த married bachelor என்பதால் அவரையும் மூணாவது யூனிட் டாக்டர் போலவே சேர்த்துக் கொள்ளும் அளவு எல்லாரிடமும் அன்புடன் பழகக் கூடியவர்.சமீபத்தில் அவரது 92 வது வயதில் மரணமடைந்தார் எனக் கேள்விப்பட்டு முன்னாள் மாணவர்கள் நிறையபேர் அவரது சிறப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் எழுதியிருந்தார்கள். எனக்கும் எழுத நிறைய விஷயங்கள் இருந்தது. ஆனால் நேரமின்மையால் அதையே இந்த அலைக்குள் கொண்டுவந்துவிட்டேன்.
என் தம்பிக்கு திடீரென ஒட்டுக்குடல் வீக்கம் ஏற்பட்டு ஹைகிரவுண்டில் அட்மிட் செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தார்கள், மாலை 4 மணிக்குமேல் அறுவை சிகிச்சை என்று சொல்லியிருந்தார்கள். யாருமே எதிர்பாராத விதமாக ஹரிஹரன் சாரே வந்து அறுவை சிகிச்சை செய்தார், அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியம். எமர்ஜென்சி அறுவை சிகிச்சைக்கு சீஃப் டாக்டர்கள் வர மாட்டார்கள். நமது யூனிட் மாணவியின் தம்பி என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். என்னை யாரென்றுகூட அவருக்கு சரியாகத் தெரிந்திருக்காது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முக்கியமற்றவர்கள் என்ற தொனியில்தான் மொத்த மருத்துவமனையும் இருக்கும். ஆனாலும் தார்மீக பொறுப்புடன் வந்து தம்பிக்கு அறுவை சிகிச்சை செய்த பெருமைக்குரிய மனிதர். எங்கள் குடும்பத்தில் RH என்ற பெயருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
உயர்ந்த பதவியில் இருப்பவர்களைப் பற்றி பலவிதமான கருத்துக்களும் கிசுகிசுக்களும் உலவுவதுபோல் சார் பற்றியும் பலவிதமாக பேச்சுக்கள் உலவும். ஆனால் RH unit doctors க்கு மட்டும் அவர்மேல் உள்ள பற்றுதலும் மரியாதையும் என்றுமே குறைந்ததில்லை. மாணவியாக இருந்ததைக் காட்டிலும் house-surgeon ஆக அவர் யூனிட்டில் இருந்தபோது இன்னும் அதிக மரியாதை ஏற்பட்டுவிட்டது. யூனிட் பார்ட்டிக்காக முண்டந்துறை செல்ல ஏற்பாடானபோது நான் மட்டுமே பெண் என்பதால் தயங்கி நின்றபோது பத்திரமாக அழைத்து சென்று வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து ராணி மாதிரி பார்த்துக் கொண்டார்கள். எனது நெருங்கிய நண்பர்கள் தில்லை, தங்கராஜ் பாதுகாப்பு கவசங்களாக இருந்தார்கள்.
Physicians are always Conservative;
Surgeons are always aggressive.

0 Comments:

Post a Comment

<< Home