Sunday, September 11, 2005

`வாஸ்து'வுக்கு வைத்தியம் செய்யலாமா?

`வாஸ்து’; `நட்சத்திரம்’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.

ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யவெண்டுமென்று மருத்துவர் கூறிய மறு நிமிடமே நல்ல நேரம் குறித்த துண்டு சீட்டுடன் தாத்தாவோ அப்பாவோ வந்து விடுவார்கள். குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் கீழ்வரும் காரணங்களுக்காக குறைமாதக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூட தயக்கம் காட்டுவதில்லை-
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை ஆட்டி வைத்துவிடுமாம்; சித்திரை அப்பன் தெருவிலாம்; இன்னும் என்னென்னவோ பழமொழிகளும் புது மொழிகளும், இயற்கையான பிரசவ நேரத்தையே மாற்றிக்கொண்டு வருகின்றன- ஆனி, பங்குனி மாத இறுதி நாட்களின் சிசேரியன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!

இதற்கெல்லாம் மருத்துவர்கள் ஏன் துணை போகவேண்டுமென்ற விவாதம் எழலாம். ஆரம்பகாலங்களில் elective caesarean செய்ய நாள் குறிக்கும்போது பெற்றோர்களின் விருப்பத்தை மதிக்கும்விதமாக அதற்கு துணை போன மருத்துவ உலகம் இன்று அதிலிருந்து மீளமுடியாமல் தர்மசங்கடத்தில் தவிப்பதுதான் உண்மை. குறிப்பிட்ட நல்ல நாளின் நல்ல நேரத்தில் எல்லாக் குழந்தைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம்;அதனால் எற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என விழி பிதுங்கி நிற்கிறது.

அதையும் தாண்டிய கொடுமை சமீப காலங்களில்! சுகப் பிரசவத்திற்குரிய வாய்ப்புகளையே தராமல் நல்ல நேரத்தில் பிரசவமாக வேண்டுமென்று, விரும்பி அறுவை சிகிச்சை செய்துகொள்ளுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி செய்துகொள்பவர்களில் மருத்துவர்களும் அடக்கம் என்பதுதான் கவலை தரக் கூடியது.`படிப்பது ராமாயணம்னாலும் இடிப்பது ராமர் கோயில்தான்’ கதையாகிவிட்டது. அறிவியல் படித்தவர்களே அஷ்டமி நவமியைப் பிடித்துத் தொங்கும்போது
சாமான்யர்களைக் குறை சொல்லமுடியுமா? 37 வாரங்கள் முடிந்த குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தும்கூட, 35 வாரங்களில் சிசேரியன் செய்துகொண்ட சக மருத்துவரை எனக்குத் தெரியும்.

இத்தனை manipulations உடன் கணிக்கப்படுகிற நேரங்கள் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக இருக்கமுடியும்?? பிறக்கப் போகும் ஜீவனின் ஆரோக்கியத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகிவிட்டது அர்த்தமற்ற சாஸ்திரம்.

வாஸ்து பற்றியோ கேட்கவே வேண்டாம் . அது குறித்து எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். என் நண்பரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டபோது முதலில் அணுகியது ஜோதிடரைத்தான். புதுவீடு கட்டியதில் வாஸ்து சரிவர கடைப் பிடிக்கப்படாததால்தான் அத்தனை கஷ்டங்களும் என்று அவர் சொல்லிவிடவே, அதற்குப் பரிகாரமாக வீட்டை இடித்து உடைத்து மாறுதல் செய்தார்கள். அப்படி செய்த மூன்றே மாதத்தில் , நன்கு தேக ஆரோக்கியத்துடனிருந்த அவர் மனைவி அகால மரணமடைந்தார். அதற்கு அந்த ஜோதிடர் என்ன விளக்கம் கொடுத்தார் என் நான் கேட்கவில்லை.

வாஸ்து இன்னும் கப்பலேறி/விமானமேறி அமெரிக்கா போன்ற தூர தேசங்களுக்குச் சென்றிருக்காது என்று நம்புகிறேன்.

9 Comments:

At 10:40 AM, Blogger rv said...

நல்ல பதிவு தாணு

obstetrician -ஆ நீங்க? பிரசவத்திற்கு வரும் பெண்மணிகளின் மாமியார்களிடம் ரொம்ப அனுபவப்பட்டுருப்பீங்க போல. :))
----
மருத்துவர்கள் பத்தி ரொம்ப நாட்களுக்கு ரெண்டு பதிவு எழுதினேன். அவற்றை மறுபதிவு செய்கிறேன். படித்துப்பார்த்து சொல்லுங்களேன்.

1. அரசு மருத்துவர்கள் என்ன் பாவம் செய்தார்கள்
2. டாக்டர்..... நீங்க நல்லவரா? கெட்டவரா?

நன்றி

 
At 1:47 PM, Anonymous Anonymous said...

தாணு
அமெரிக்காவில் வாஸ்து சன்சல்டன்்டுகள் உண்டு. வந்து வெகு நாளாகிவிட்டது. குழந்தை பிறப்பதை மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பது கூட நட்சத்திரம் பார்த்து. குமுதம் ஜோதிடம் படிப்பதில்லயா நீங்கள். நான் அதில் வரும் கேள்விகளை படித்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்

 
At 3:36 AM, Blogger தாணு said...

ராமனாதன்,
உங்கள் பதிவிலிருந்து நீங்கள் எ.மு.மருத்துவர் என்று புரிந்து கொண்டேன். நான் கோடு போட்ட விஷயத்துக்கு நீங்க ரோடே போட்டிருக்கீங்க. நான் பொதுவான கருத்தாகத்தான் பதிவு பண்ணினேன். ரொம்ப விலாவாரியாக எழுதும்போது வக்காலாத்து வாங்கும் உணர்வு தோன்றச்செய்வதைத் தவிர்க்க முடியாது என்பதால். அதுவும் தவிர நேரமின்மை;சொல்ல வந்ததை மறக்கும் முன்பு பதிவு பண்ணும் அவசரம்.அதனால்தான் நுனிப்புல் மேய்ந்ததுபோல் என் பதிவு இருந்திருக்கும். உங்கள் இரு பதிவுகளுமே அருமை. அரசு ம.மனையில் குப்பை கொட்ட முடியாமல் ஓடி வந்தவர்களில் நானும் ஒருத்தி. நீங்கள் குறிப்பிட்டது தவிர்த்து பிறிதொரு காரணம் என்னுடையது.

காலையில் டூட்டியில் கையெழுத்து போட்டவுடனேயே போஸ்ட்மார்ட்டம் ரெடியாக இருக்கும். அதுக்கு முன்பே எப்படியும் அறுவை சிகிச்சைக்கு தயார் நிலையில் ஒன்றிரண்டு
தாய்மார்கள் காத்திருப்பார்கள். போஸ்ட்மார்ட்டம் முடித்த கையுடன் சிசேரியன் செய்ய தியேட்டர் செல்லவேண்டும், முந்தையதின் அத்தனை நுண்கிருமிகளையும் என்னுடன் எடுத்துக்கொண்டு!அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டூட்டி வரும்போது! மகப்பேறு மருத்துவர்களை போ.மார்ட்டத்திலிருந்து விலக்குமாறு எத்தனையோமுறை வேண்டிக்கொண்டும், நடைமுறையில் சாத்தியப்படாததால்
`கூறாமல் சன்னியாசம் கொள்’ பாணியில் absconded from my service.
பி.கு:
தற்போது சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறையே போ.மா. வருகிறதாம். மறுபடியும் பணியில் சேருமாறு நண்பர்கள் அழைக்கிறார்கள். தற்காலிகமாக க்ளினிக்கில் பத்துப் பதினைந்து நோயாளிகளை ஆற அமர பார்த்துப் பழகிவிட்டு, blog-ல் நேரம் கழிக்கவும் பழகிவிட்டு , இனிமேல் 150-200 வெளி நோயாளிகளைப் பார்க்கும் தன்மை இனி வருமா?? சந்தேகமே!

 
At 3:40 AM, Blogger தாணு said...

பத்மா
நான் ராசிபலன், ஜோதிடர் பக்கமெல்லாம் பார்க்காததினால் இவர்களின் நம்பிக்கையின் எல்லை வியப்படைய வைக்கிறது.
அமெரிக்காவின் வாஸ்து நிபுணர்கள் நிலைப்பாடு பற்றி ஒரு பதிவு போடுங்களேன். அக்கரைப் பச்சை எப்படி என்று தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.
ராமனாதனின் பதிவுகள் குறித்து உங்கள் கருத்து என்ன பத்மா?

 
At 9:29 AM, Blogger தெருத்தொண்டன் said...

நாமும் நாம் பழகும் மனிதர்கள் மட்டும் இல்லை உலகம்..பரந்து விரிந்தது..சரியோ தவறோ பல்வகை நம்பிக்கைகளைக் கொண்டது என்பதை உங்க பதிவு மூலம் என் மாதிரி தொண்டர்களுக்கு உணர்த்தியிருக்கீங்க..நன்றி தாணு!

 
At 2:47 AM, Blogger NambikkaiRAMA said...

அண்ணாச்சி நீங்க ஆறூமுகநேரியா! ராகவன் பின்னோட்டம் மூலம் அறிந்தேன். நமக்கு உடன்குடிங்கோ!
உங்க பதிவில் பல நல்ல விசயங்களிப் பர்த்தேன். நம்ம ஊரு காரர் ஆச்சே. பொறகு சொல்லவா செய்யனும்.வாழ்த்துக்கள்!

 
At 1:46 AM, Blogger தாணு said...

பாசிடிவ் ராமா!
என வலை பதிவில் வந்ததற்கு நன்றி. அதற்காக எனக்கு வேஷ்டி கட்டிவிட்டுட்டீங்களே! `அக்கா'ன்னு வேணா மாத்திக்கலாம்!

உங்க மனசு பத்தின ஆராய்ச்சி என்ன ஆச்சு?

 
At 1:57 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

// Fashion cum passion ஆகி விட்டது//
உங்க வீட்டுக்கு முன்னாடி வாஸ்து கணிக்கிறவங்க கும்பலா நிக்கறதா கேள்வி பட்டேன். உங்களுக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். :-)

//வாஸ்து இன்னும் கப்பலேறி/விமானமேறி அமெரிக்கா போன்ற தூர தேசங்களுக்குச் சென்றிருக்காது என்று நம்புகிறேன்.//
எனக்கு வாஸ்து மேல் ஒரு ஆச்சரியம். அதனால் B.Arch படிக்கும் நண்பன் ஒருவனிடம் இதனைப் பற்றின தகவல்கள் கேட்கலானேன்.

நான் கேட்கப்போன நோக்கமே வேறு. இதனால் அவர்களுக்கு (architects) ஏற்படும் இடையூறுகளைப் பற்றி நான் கேட்க அவன் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதாவது architectகளும் இன்றைய தேதியில் வாஸ்து சாஸ்திரத்தை மிகவும் நம்புகிறார்களும். இதில் சாதி மதம் என்ற பாகுபாடு இல்லையாம்.

எனக்கு இன்னும் அதை நம்பலாமா வேண்டாமா என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.

 
At 8:16 AM, Blogger தாணு said...

கணேஷ்!

ஆர்க்கிடெக்ட்டும் எஞ்சினீயர்களும் வாஸ்துவை நம்புறாங்களோ இல்லையோ, வாஸ்துப் படிதான் கட்ட வேண்டும். இல்லாட்டி கூப்பிட ஆளிருக்காது. எங்க வீடு கட்டித்தந்தது என் தம்பி, என் மாதிரியே இதிலெல்லாம் அர்த்தமற்ற நம்பிக்கையில்லாதவன். ஆனால் கிரகபிரவேசத்துக்கு வந்தவங்க எல்லாம், ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க. எப்படிப்பான்னு கேட்டப்போ சொன்னான்,எந்த வீடுன்னாலும் குறைந்தபட்ச வாஸ்து சாஸ்திரமாவது பார்த்துதான் கட்டுவோம்னு! `கோவணம் கட்டிய ஆண்டி' ஆகிவிடக்கூடாதென்ற நிலைமை எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்.

 

Post a Comment

<< Home