Tuesday, October 11, 2005

மெடிக்கல் ராமாயணம்(தேர்வு காதை)

மருத்துவக் கல்லூரியில் படித்து பாஸ் பண்ணுவதைவிட சொதப்பி பாஸ் பண்ணுவது ரொம்ப ரகளையான விஷயம். அதிலும் ரொம்ப காலம் (>8-10 வருடங்கள்) நிதானமாகப் படிக்கும் நண்பர்கள் செய்யும் ரவுசு தாங்க முடியாது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாஸ் பண்ணிப் போயாவது நம் பிராணனை வாங்காமலிருக்கட்டும்னு சபிச்சுகிட்டே தள்ளிவிடப்பட்ட கேஸ்கள் அப்போதெல்லாம் ரொம்ப சகஜம். அவங்களுக்கு Chronic additionals என்ற பெருமைக்குரிய பட்டமும் உண்டு. ஆனால் அந்த மாதிரி அண்ணன்கள் வெளிப்படையாக முரட்டுத்தனமாகத் தோன்றினாலும் ரொம்ப நல்ல பசங்களாக இருப்பாங்க.

இவங்களோட பாஸ் புராணம், ராகிங் கதைகள், வாத்தியார்களுடன் மோதல்கள் ஒவ்வொண்ணுமே ஒரு எபிசோட் எழுதலாம். எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான், உண்மையில் நடந்தவைகள் பற்றி சொன்னால் ஒரு இராமாயணமே எழுதலாம் என்று சொல்ல்வார்கள்.அதான் இந்த தலைப்பு.முதல்லே கொஞ்சம் லொல்லு பண்ணின ஆசாமி பத்தி சொல்றேன்.

தியரி பரீட்சை முடிந்ததும் viva voce என்ற ஓரல் டெஸ்ட் நடக்கும். அதில் ஸ்பாட்டர்ஸ் என்பது முன்னால் வைத்திருக்கும் பொருட்களில் ஒன்றை கண்டுபிடித்து சொல்வது. அதிலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்து மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்வார்கள். ஏழெட்டு தரம் படையெடுத்தவர் ஒருவரின் முறை வந்தது. ஏற்கனவே கடுப்பு + கொஞ்சம் குறும்புடன் வந்து அமர்ந்தவரிடம்,அவரை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்டுவிடவேண்டுமென்று நினைத்திருந்த வாத்தியார் உனக்கு மிகவும் தெரிந்த பொருள் ஏதேனும் ஒன்றை எடு என்று சொன்னார். இவரும் ரொம்ப கர்ம சிரத்தையாக எழுந்துநின்று அப்படியும் இப்படியுமா அலசி சில நிமிடங்களைக் கரைத்து ஒரு பொருளைப் பெருமையுடன் தூக்கிக் காட்டினார். ஆசிரியருக்கே சிரிப்பு தாங்க முடியலை, அது மேஜை மேல் வைக்கப்படும் காலிங்பெல்! ஆனாலும் லொல்லு பண்ணிய மாணவனைக் கொஞ்சமேனும் கடுப்பேத்தாமல் பாஸ் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு, அதை ரெண்டு தரம் தட்டிவிட்டு இதிலிருந்து என்ன வந்துச்சுன்னு ஆசிரியர் கேட்டார். பதில் சொல்லித்தானே ஆகணும், `சத்தம்’னு மொட்டையாக பதில் வந்தது. அழைப்புமணியோசைன்னு சொன்னா அதிலிருந்து கேள்வி வந்திடுமாம் , அதனால் ரொம்ப எச்சரிக்கையான பதில்! குட்டி எட்டடின்னா தாய் எத்தனை அடி பாயும்? `சத்தம் எப்படி காதுகளில் புகுந்து மூளைக்குப் போகுதுன்’னு ஆரம்பிச்சு காதுலே தொடங்கி கால்கள் வரை கேள்விமேல் கேள்வி கேட்டு புரட்டி எடுத்திட்டார். இதுதான் மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுன்னு சொல்வாங்க.நம்ம `தலை’க்கு தலை சுற்றலே வந்துட்டதா கேள்வி( ஆனாலும் அந்த அன்பான ஆசிரியர் பாஸ் கொடுத்திட்டதா கேள்வி)
(தேர்வு காண்டம் என்றுதான் தலைப்புக் கொடுப்பதாக இருந்தேன். ஆணுறையின் ஆங்கிலப் பெயராக அர்த்தம் செய்துவிடக் கூடாதேயென்று காதை ஆகிவிட்டது)

கொசுறாக ஒரு ஜோக்:

சளித் தொந்தரவு உள்ள ஒருவருக்கு சீரியசாக பரிசோதனை செய்துகொண்டிருந்தார் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர். உள்ளிருக்கும் தொந்தரவை நன்கு விளங்கிக்கொள்ள ந்ன்கு இழுத்து மூச்சு விடுமாறு நோயாளியிடம் கூறினார். அவரும் அவ்வாறே செய்தார். மாணவர் இன்னும் கொஞ்சம் இழுத்து விடச் செய்யும் பொருட்டு `நல்லா இழுத்து மூச்சு விடுங்க’ன்னு சொன்னார். இவர் இம்சை தாங்காமலோ இல்லை நிஜமாகவே சொன்னது புரியாமலோ அந்த நோயாளி மாணவர் காதில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டெதாஸ்கோப்பை வலிமையாக இழுத்துப் பிடித்துக்கொண்டு `இழுத்து’ மூச்சு விட்டார். பாவம் அந்த மாணவர் சக மாணவ, மாணவியர் முன் அசடு வழிந்தார்!!

5 Comments:

At 11:51 AM, Blogger rv said...

தாணு,
தமிழ்மண மெகாத்தொடர் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

 
At 4:18 PM, Blogger துளசி கோபால் said...

//தாணு,
தமிழ்மண மெகாத்தொடர் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.. //


நானும் அவ்வண்ணமே வழிமொழிகிறேன்.

 
At 11:13 PM, Blogger தாணு said...

ராமநாதன்!
உங்க அளவு தொடர்ச்சியா எனக்கு சொல்லத் தெரியாதுங்க. நான் ரொம்ப instinctive. ஆனாலும் எழுதிப் பார்த்துடறதுன்னு தான் ஒரு உத்வேகத்தோட ஆரம்பிச்சுட்டேன். உங்க கல்லுரியிலும் இதுக்கு தோதா அமையுற நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லுங்களேன்.

 
At 11:14 PM, Blogger தாணு said...

துளசி,
எனது `ஆட்டோகிராப்' உங்க கையிலே கொடுத்தா இன்னும் காமெடி நெடி கூடும்தான். இருந்தாலும் முயற்சி பண்றேன்

 
At 10:34 AM, Blogger erode soms said...

இங்கேயும் மெகா தொடரா அம்மாடீ!

 

Post a Comment

<< Home