Tuesday, December 15, 2020

அலை-27

 அலை-27

”ரயில் சிநேகிதம்” என்ற வார்த்தை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தை. எப்போதோ தற்செயலாக அறிமுகமாகும் நண்பரைப் பற்றிப்  இப்படி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ”ரயில்” என்ற வார்த்தையே மிக ரம்யமானது. அதிலும் ரயில்வே ஸ்டேஷன் உள்ள ஊர்களில் வாழ்ந்தவர்களுக்கு ரயில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கும்.

புகைவண்டி எனத் தமிழில் எழுத ஆவல் இருந்தாலும் இளமைக்கால வழக்கு சொல்லாக இருந்த ரயிலும், ரயில்வே ஸ்டேஷனும் எண்ண அலைகளின் கட்டுமரங்கள்.


எங்க ஊர்லே ரெண்டு ஸ்டேஷன்கள்  உண்டு. ஆறுமுகநேரி ஸ்டேஷன் ஊருக்கு வெளியே தரங்கதாரா தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதுபோல் அமைந்துவிட்டது. அதனால் அதை உபயோகிப்பதும் குறைவாகவே இருந்தது.  காயல்பட்டினம் ஸ்டேஷன்தான் எங்களுக்கு சொந்தமானது போன்ற உரிமையுடன் உபயோகித்துக் கொள்வோம். எங்க வீட்டிலிருந்து ரெண்டு ஸ்டேஷனும் சமதூரம்தான். காயல்பட்டினம் ஊருக்கும் ஸ்டேஷனுக்கும் இடையே மூணுகிலோமீட்டர் இடைவெளி இருந்ததால் அது எங்க ஊர் ஸ்டேஷனாகவே ஆகிவிட்டது.


பள்ளிக்கூடம் போக தினமும் காயல்பட்டினம் ஸ்டேஷனைத் தாண்டித்தான் போக வேண்டும். அதே நேரத்தில் திருச்செந்தூர் – திருநெல்வேலி புகைவண்டி (கிழக்கே போகும் ரயில்) கடந்து செல்லும் நேரமாக இருந்தால் ரயில்வே கேட் மூடப்பட்டுவிடும். காலையோ மாலையோ ஏதோ ஒருதரம் கேட்டில் மாட்டிக் கொள்வோம். இரண்டுபுறமும் நிற்கும் வாகனங்களைக் கடந்து போவது சிரமமாகத்தான்  இருக்கும். ஆனாலும் பாதசாரிகள் வாகனத்தில் உள்ளோரை அற்பமாகப் பார்த்து பெருமையுடன் கடந்து செல்லும் நேரம் அது. எங்களைத் தாண்டி பந்தாவாக சைக்கிளில் வந்த ”பாய்ஸ்’ கூட்டமெல்லாம் கேட்டில் மாட்டிக்குவாங்க, நடந்து சென்றவர்கள் வின்னர்ஸ் ஆகிவிடுவோம். பெரிய கேட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சுழல் கதவில் சுற்றிக் கொண்டு செல்வதும் ஜாலியாக இருக்கும். 


ட்ரெயின் வர்றதுக்கு ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே கேட் போட்டுறுவாங்க. முந்தின ஸ்டேஷனில் ரயில் கிளம்பும்போதே இங்கே கேட் மூடிடும். ரயில் வரும் திசையை எட்டிப்பார்த்துட்டே தண்டவாளத்தைக் கடந்துவிடலாம், வேகம் இல்லாமல் மெதுவாக திருநெல்வேலி தேர் போல அசைந்துதான் வரும். குறுக்குப்பாதையில் வந்தாலும் கைகாட்டி கீழிறக்கப்பட்டிருப்பதை வைத்து ரயில் வரும் நேரங்கள் தெரிந்துவிடும். பதட்டப்படாமல் தண்டவாளத்தைக் கடந்துவிடலாம். கைகாட்டியை இறக்கி ஏற்ற பெரிய இரும்புப் பெட்டிமீது பெரிய லீவர் ஒன்று  இருக்கும். அதை முன்னும் பின்னும் நகர்த்தினால் கைகாட்டி ஏறும் அல்லது இறங்கும். 


சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களுக்கு ஏற்றவாறு நாலைந்துதரம் மட்டுமே ரயில் போக்குவரத்து இருக்கும். மாணவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் வைத்திருப்பார்கள். மத்திய தரக்குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது அந்த ரயிலும் சீசன் டிக்கெட்டும். குடும்பத்துக்கு ஒரு பட்டதாரியாவது எங்கள் ஊரில் உண்டு. 

 திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி மிகப் பிரபலமாக இருந்ததால் நாசரேத் பாளையங்கோட்டை போன்ற தூரமான ஊர்களில் இருந்துகூட ரயிலில் சீசன் டிக்கட் எடுத்து படிக்க வருவாங்க. 


எங்க ஊர் கூட்டம்தான் அதில் ரொம்ப அதிகமாக இருக்கும். காலையில் அவங்களெல்லாம் கல்லூரிக்குப் போற அலம்பலைப் பார்த்தா  ராஜேந்தர் சினிமா பார்த்த  மாதிரிதான் இருக்கும். எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தாலும் படிக்கட்டில் தொங்கிகிட்டே தான் போவாங்க.  இளமை ஊஞ்சலாடும் வயது என்பதால் பெருசுகளும் அதை ரசிப்பாங்களே தவிர திட்டமாட்டாங்க. அதனால் படிக்கட்டில் ஆடிகிட்டே போவாங்க. அதுக்கும் ஒருநாள் பிரச்சினை வந்தது.


ஒருநாள் சாயங்காலம் பள்ளி முடிஞ்சு நாங்ளெல்லாம் கூட்டமா நடந்து வந்துகிட்டு இருந்தோம்.  ட்ரெயின் ரிவர்ஸில் அடைக்கலாபுரம் (முந்தின ஸ்டேஷன்) நோக்கி போய்கிட்டு இருந்தது. அதுவரை ரயில் ரிவர்ஸில் போனதா வரலாறே கிடையாது.  அதைப்பார்த்து கேலிபேசி சிரித்துக் கொண்டே கடந்து போய்விட்டோம். திருச்செந்தூரில் ஏதோ திருவிழா சமயம் என்பதால் கோவில் சம்பந்தமான ஏதோ ஒரு நிகழ்வு என நினைத்துக் கொண்டோம். ரெண்டுமூணு நாளா ரயிலில்  ஏகக்கூட்டமாகவும் இருந்துச்சு.


  வீட்டுக்குப் போனால் அங்கே ஒரே களேபரமாக இருந்தது. எல்லோரும் அழுகையோட பரபரப்பாக  எங்கேயோ போகக் கிளம்பகிட்டு இருக்காங்க. இடிபோல் ஒரு செய்தி, நயினார் அண்ணன் ஓடுற ட்ரெயினில் இருந்து கீழே விழுந்துட்டானாம். ஒரே ஷாக். கீழே விழுந்த அண்ணனைக் காப்பாற்றத்தான் ரயில் பின்னாடி போயிருந்தது தெரியாமல் கேலி பேசிக் கடந்து வந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு,அண்ணனுக்கு என்ன ஆச்சுதோ என்ற பயம்,சுற்றி நின்னு அழுதவங்களைப் பார்த்து அழுகை என்று பலதரப்பட்ட உணர்வுகளால் வாழ்க்கையே ஸ்தம்பித்து நின்றதுபோல் இருந்த அந்த நிமிடங்கள் கொடுமையானவை.


நடந்த நிகழ்ச்சியைப் பின்னாடி கேள்விப்பட்டபோது இன்னும் பயங்கரமாக இருந்தது. திருவிழாக் கூட்டம் மிதமிஞ்சி இருந்ததால் படிக்கட்டில் தொங்கி வருவதுகூட நெருக்கடியாக இருந்திருக்கிறது. பக்த கோடிகளும் படிக்கட்டைப் பங்கு போட்டுக் கொண்டதால் மாணவர்கள் எல்லாரும் ஜன்னல் கம்பிகளையும் பிடித்து தொங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஹீரோயிசமாகத் தோன்றும்  படிக்கட்டுப் பயணம் திருவிழா சமயங்களில் ஆபத்துகளுக்கு அடிகோலிவிடுவதும் உண்டு. 


சம்பவத்தன்றுஅண்ணனும் ஜன்னலில் தொங்கிக்கொண்டு தான் வந்திருக்கிறான். அசந்தர்ப்பமாக கைவழுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறான். இரண்டு ஸ்டேஷன்களுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இருந்ததால் ரயிலின் வேகமும் அதிகமாகவே இருந்திருக்கிறது. உடனே அபாயச்சங்கிலியை இழுத்து ஏகப்பட்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு அண்ணனைக் காப்பாற்ற ரயில் ரிவர்ஸில் போய் இருக்கிறது . காலேஜ் பசங்களின் போராட்டத்துக்குப் பயந்து  திருச்செந்தூர் வரை சென்று அரசு மருத்துவமனையில் அண்ணனை அனுமதித்த பிறகுதான் ரயில் ரிலீஸ் ஆனது. நல்ல வேளையாக அண்ணணின் உயிருக்கு ஆபத்தில்லை . சின்னச் சின்ன எலும்பு முறிவுகளுடன் கொஞ்சநாள் ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வந்தான். 


எங்க ஊர்லே ரயிலில் ஏறுறதும் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. டவுண் ஸ்டேஷன்களின் பிளாட்பாரத்துக்கு ஏற்றவாறு படிக்கட்டின் உயரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எங்க ஊர்லேயெல்லாம் மண்தரைதான். அதனாலே குட்டிப் பிள்ளைகளுக்கு ஏறணும்னா ரொம்ப கஷ்டம்,படிக்கட்டு உயரத்தில் இருக்கும் யாராவது தூக்கிதான் விடணும். ரெண்டுமூணு வாண்டுகள் இருந்துட்டா லக்கேஜ் தூக்கி எரியுறமாதிரி வீட்டு ஆம்பிளைங்க தூக்கிப்போடுவாங்க. விட்டலாச்சர்யா படம் மாதிரி உருண்டு எழுந்து ஓடிப்போய் சீட் பிடிச்சுக்குவோம்.  பெரியவங்களெல்லாம் சீட்லே உக்காந்துக்குவாங்க, வாண்டுகளுக்கெல்லாம் லக்கேஜ் வைக்கிற இடத்திலேதான் இருக்கை. எங்க ஊருக்கு பாசஞ்சர் ரயில்மட்டும்தான் வரும். அதனால் படுக்கை வசதிகளெல்லாம் கிடையாது.


ரயில் போக்குவரத்தில்லாத  மற்ற நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன்தான் எங்க ஊர் இளவல்களின் பொழுதுபோக்கு அரங்கம்.சிமெண்ட்டால் ஆன சொரசொரப்பான பெஞ்ச்தான் அரங்கேற்ற மேடை.  படிப்பு, அரசியல் தொடங்கி சினிமா, பாடல்கள், விளையாட்டு,புத்தகங்கள், கடவுள், கம்யூனிசம் என்று அனைத்து விவாதங்களும் அரங்கேறிய அழகான மேடை அது. பெண்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் இருந்ததில்லை என்றாலும் அதன் தாக்கங்கள் எங்களை வழி நடத்தியது. 

அதிலிருந்து முளைத்து வந்த அரசியல் ஆர்வலர்கள் நயினார், ஜென்ராம் என தனித்துவத்துடன் சோசியல் மீடியாவில் வலம் வருகிறார்கள். மா.முருகன்(நினைவில் வாழும்), இளையரவி அஸ்வதரன், வெங்கட் போன்றவர்கள் பத்திரிக்கை உலகில் பரபரப்பாக பேசப்படுபவர்களாக இருக்கிறார்கள். நானா, பாரதி போன்றோர் திரைக்குப் பின்னால் எண்ணற்ற விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


மற்றவர்களின் பார்வையில் அரட்டை அரங்கமாகத் தோன்றும் ஸ்டேஷன் பெஞ்ச் எண்ணற்ற மேதைகளை எங்கள் ஊரிலிருந்து ஏற்றுமதி செய்திருக்கிறது. இணையத்தில் "தமிழ்மணம்" பகுதியில் நண்பன் ராம்கியின் வலைப்பூ (blog) பெயரே "ஸ்டேஷன் பெஞ்ச்" தான். 


படுக்கை வசதி வந்தாலும்

பாஸஜ்சர் ரயில்போல் சுகமில்லை

குளிரூட்டப்பட்ட போதும்

கடற்காற்றின் குழுமையில்லை

இணையத்தில் கதைத்தாலும்

ஸ்டேஷன் பெஞ்ச்சுக்கு இணையில்லை.

0 Comments:

Post a Comment

<< Home