Thursday, March 31, 2022

அலை-65

 அலை-65

“பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்”- இனிய மகளிர் தின
வாழ்த்துகள்
.
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பெண்களைத் திமிர் பிடித்தவள் என முத்திரை குத்திவிடும் சமுதாயத்தில் அவ்வப்போது மகளிர் தினங்களும் வந்துதான் செல்கின்றன. நிலைமை என்னவோ மாறினமாதிரி தெரியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரியேதான் இப்பவும் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பொருளாதார சுதந்திரமும் கல்வி அறிவும் கொஞ்சூண்டு கூடியிருக்கிறது. கல்வி கற்பதிலும் தேர்ச்சி விகிதத்திலும் பெண்கள் முனைப்புடன் முன்னேறி வருகிறார்கள். சம்பாதிப்பதிலும் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுகிறார்கள். ஆனாலும் சமத்துவம் பெற்றுவிட்டார்களா என்பது பெரிய கேள்விக் குறிதான்.
சமநிலையைத் தாங்க முடியாத ஆண் பேரினவாதம் ( male chavunism) ஆழ வேரூன்றி இருப்பதால் விவாகரத்துகள்தான் அதிகரிக்கின்றன. அதற்கும் பெண்களே காரணகர்த்தாக்களாக உருவகிக்கப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள். எங்கள் தலைமுறை வாய்மூடி சகித்துக் கொண்டது. இன்றைய தலைமுறை எதிர்த்து நின்று காயப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலங்களும் கோலங்களும் மாறினாலும் பெண்களின் நிலைமை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
இந்தமாதிரி உலகளாவிய விஷயங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிட்டுக் குருவிகளாகச் சுற்றித் திரிந்த வாலிபப் பருவத்தில் எங்களுக்கு ஆண்கள் தேவ தூதர்களாகத்தான் தெரிந்தார்கள். அன்பும் நட்பும் காதலும் பின்னிப் பிணைந்திருந்ததால் ஆண்களைப் பற்றிக் குறை பட்டுக் கொண்டதே இல்லை. பெண் உரிமை பெண் சுதந்திரம் எல்லாம் ஏட்டளவில் மட்டுமே இருந்தது.
இரண்டாம் வருடம் வரை கட்டுப்பாடுடன் இருந்தவர்களெல்லாம்கூட மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபின் காதல் வயப்படத் தொடங்கியது கண்கூடாகத் தெரிந்தது. எங்களைப்போல் பொறுப்பற்றுத் திரிந்தவர்களைக்கூட அந்த மாய வலை விட்டு வைக்கவில்லை.
காதலிக்கத் தொடங்கியவர்களைக் குமைப்பதும் அவர்களை நோண்டி நோண்டிக் கதை கேட்பதும்தான் எங்களது நிரந்தரப் பொழுது போக்கு. காதல் மீட்டிங் முடிந்துவரும் தோழியரை ஒதுக்குப்புறமாகத் தள்ளிக் கொண்டு போக ஒரு அடாவடிக் கூட்டம் ரெடியாக இருக்கும். அவன் என்ன சொன்னான், நீ என்ன சொன்னாய் என்பதில் ஆரம்பித்து அன்றைய கடலை முழுவதையும் கேட்டு முடித்தால்தான் அன்றைய பொழுது நல்லதாக முடியும். இடையிடையே ஊடல்படலம் வந்துவிட்டால் அந்த வாரம் முழுவதும் முகாரி ராகம்தான். நாங்களும் சோகப்பட்டுக் கொள்வோம்.
காலையில் புற நோயாளிகள் பிரிவு முடிந்ததும் தேநீர் இடைவேளை(tea-break) வருமே அதுதான் கடலைகளைக் காதல்களாக்கும் இனிய பொன்காலைப் பொழுது. 7மணி OP க்காகக் காலை உணவை
அரைகுறையாக சாப்பிட்டு வருபவர்களும் சாப்பிடாமல் வந்தவர்களும் தஞ்சமடையும் இடம்தான் சீத்தாலக்ஷ்மி ஹோட்டல். ரெண்டு மூணு சின்ன அறைகளும் சின்ன ஹாலும் உள்ள சாதாரண ஹோட்டல். ஆனால் எங்க எல்லோருக்குமே தாஜ்மஹாலையும் மிஞ்சிய கனவுக் கோட்டை. அந்த சமயத்தில் பிரபலமான சினிமாப் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருகும்.
அவங்கவங்க வார்டு தோழர்கள்,வகுப்பெடுக்கும் வாத்தியார்கள், செவிலியர் தோழிகள் என சின்னச் சின்ன குழுக்களாக சாப்பிட வருவாங்க. குழுக்களும் நண்பர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒரே குழுவினர் தொடர்ந்து இணைந்துவர ஆரம்பித்தால் அங்கு ஒரு காதல் பூ மொட்டுவிட ஆரம்பித்து விட்டது எனப் புரிந்து
கொள்ளலாம். யூனிட் சார்பாக வருபவர்கள் ஹாலில் அமர்ந்து
அட்டகாசமாக அரட்டை அடிக்கும்போது இந்த
க்ரூப் சின்ன அறைகளில் அமர்ந்து சத்தம் எழும்பாமல் கதை
அடிப்பார்கள். கொஞ்ச நாட்கள் கடந்ததும் கோரஸ் பாடியவர்கள்
எண்ணிக்கை குறைந்து டூயட்பாட ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய 'காபி டே'யில் நடப்பதுதான் அன்றைய
சீத்தாலக்ஷ்மி நாட்கள். ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணிவிட வேண்டிய வாத்தியாரும் அடுத்த மேஜையில் அமர்ந்திருப்பார்.
பசிச்சு சாப்பிடுவதைவிட பந்தயம் கட்டுவது,
சிறப்பாக வேலை செய்து treat கொடுப்பது, அறுவைசிகிச்சையில் கற்றுக் கொடுத்த சீனியர் அல்லது ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது போன்ற
ஏகப்பட்ட காரணங்களுக்காக எல்லோருமே நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆகியிருப்போம். நிறைய பேருக்கு நிரந்தர அக்கவுண்ட்டும் இருக்கும். Treat கொடுக்க பணம் இல்லேன்னு தப்பிக்கவும் முடியாது. அக்கவுண்ட்டில் எழுத வைச்சிடுவாங்க. பெரிய விருந்தெல்லாம் கிடையாது. டீ/காபி, வடை போன்ற சாதாரண ஐட்டங்கள்தான். நல்ல வேளையாக KFC மாதிரி கடைகள் அப்போது இல்லை.
நாங்க மூன்றாம் ஆண்டில் இருந்தபோது ஐந்தாம் ஆண்டு மாணவர்கள்தான் அடிக்கடி ட்ரீட் கொடுப்பார்கள். நாங்க ஓசியில்
ஒரு வெட்டு வெட்டிக்குவோம். ஆனாலும் எங்களைக் குமைச்சி அடாவடி பண்ணி ட்ரீட் வாங்க ஒரு கோஷ்டியும் உண்டு.அப்படி வந்த குழுவில் அறிமுகமான ஆசாமிதான் எழில் , ரெண்டு வருடங்கள் சீனியர். அன்றைய நண்பர் இன்றைய கணவர். அலைகள் அடுத்த பாகத்திற்கு
நகரப் போகிறது.

0 Comments:

Post a Comment

<< Home