Tuesday, October 03, 2023

அலை-99

 அலை-99

“எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிக்கணும்”
சாஸ்திரம் சம்பிரதாயங்களில் அவ்வளவா ஈடுபாடு இல்லைன்னாலும் பிடித்த விஷயங்களைத் தனக்கு உகந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வேளைகளில் சொலவடைகளும் (பழமொழிகளும் உவமானங்களும்) நம் வசப்படும். அப்படித்தான் எட்டாம் எணூள்ள ஆகஸ்ட்டு மாதமும் என் Favourite List இல் எப்போதும் இருக்கிறது.நிறைய பேருக்கு எட்டு என்ற எண் பிடிக்காது. எனக்கு ரொம்ப பிடித்த எண் அதுதான். பிறந்தநாள் டிசம்பர் எட்டு, திருமண நாள் ஏப்ரல் எட்டு, மகள் பிறந்த நாள் பதினெட்டு, மகன் பிறந்தது ஆகஸ்ட்டு ,அன்புத் தம்பி நாராயணன் எட்டாவது மேதை என்று எல்லா விஷயங்களிலும் எட்டு என்னுடன் ஒட்டிக் கொள்ளும். DGO முடித்துவிட்டு ஈரோட்டில் குடிபுகுந்ததும் 1992 இன் எட்டாவது மாசம்தான். சொல்லி வைத்ததுபோல் இந்த “அலை’’ எழுத ஆரம்பித்ததும் 2020 ஆகஸ்ட்டில்தான். இந்த வருடம் 2023 ஆகஸ்ட்டுடன் 98 பதிவுகள் எழுதி முடித்திருக்கிறேன். முன்னுரை, முடிவுரை சேர்த்து அதை 100ஆகப் பண்ணி புத்தகமாக வெளியிடலாம் என சகோதரர்கள் அறிவுரை சொன்னார்கள். அதனால்தான் இந்த முடிவுரை அலை. (முதல் பாகத்தின் முடிவுரை மட்டுமே.) நூறு என்ற கணக்கு சரியாக வேண்டுமென்று முன்னுரையும் எழுதி வைத்திருக்கிறேன்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்திருக்கேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது எழுத்தை வாசித்த, நேசித்த நண்பர்களும் உறவினர்களும் கொடுத்த உற்சாகம்தான் என்னைத் தடைபடாமல் எழுத வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் உதிரிப் பூக்கள் போன்ற “அலை”கள் புத்தக வடிவில் மாலை ஆகவேண்டுமென்றால் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒருசில மாதங்கள்கூட ஆகலாம். அதுவரைக்கும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேனே, அதையெல்லாம் இடைச் சொறுகலாக இணைக்கலாமா அல்லது அடுத்த பாகத்துக்கு ஒதுக்கி வைக்கலாமா என்ற விவாதம் வந்தது. எழுதுவது என் இயல்பு . இணைப்பதும் கோர்ப்பதும் சகோதரர்கள்பாடு. ஒரு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பு பார்த்தேன். அதுவரைக்கும் , கதை எழுத முடியுமா என முயற்சித்துப் பார்க்கிறேன் என சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே விழா மலர்கள், சங்கம் சம்பந்தப்பட்ட நியூஸ் பத்திரிக்கைகள் எல்லாம் வடிவமைத்த அநுபவம் கொஞ்சம் இருப்பதால் புத்தகம் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது.
முதன் முதலில் “அலை” எழுத ஆரம்பித்தபோது எந்த திட்டமும் கிடையாது. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல் தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன். எந்தவித நெறிமுறையோ ஒழுங்கோ கிடையாது. இயல்பாகத் தோன்றியதை எளிமையாக எழுதத் தொடங்கினேன். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்”தான் என்பது போகப்போகத் தெரிந்தது. அடுத்து வந்த அலைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அத்தியாய அந்தஸ்து கொடுத்து தலைப்புகள் இணைத்தேன். ஒவ்வொரு தலைப்பு வைக்கும்போதும் குறுஞ்சிரிப்பு ஒன்றும் கூடவே வரும். அவ்வளவு ரசித்துக்கொண்டே தலைப்பு வைப்பேன்.பதிவுடன் சம்பந்தப்பட்டதாக நச் என்று இருக்க வேண்டும் என யோசிப்பேன். ஏதாவது உவமைகள் சொல்ல சினிமா பாடல்களோ, கவிதை வரிகளோ, திருக்குறளோ சேர்க்க முடிந்தால் அந்தப் பதிவு மிகவும் இஷ்டமானதாகிப் போகும்.
இளமைக்கால நினைவுகளைத்தான் வெகு தொலைவில் பின்னோக்கி பார்க்கவேண்டியிருந்தது. ஆனால் எழுதிக் கொண்டிருக்கும்போதே பழைய காட்சிகள் மனத்திரையில் படம்போல் ஓடும்.அவற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம். மறுபடியும் அந்த நாட்களுக்கே போய்விடமுடியாதா என ஏங்க வைத்த நாட்கள். Alzheimer மாதிரி மறதி நோய் வருவதற்குள் நினைவில் வருவதை எழுதுவோம் என கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.பறவைகள் போல் பாடித்திரிந்த காலம், படிப்பு தவிர வேறு எந்தப் பொறுப்பும் இல்லாத நாட்கள். நம்மை அடிக்கவும், அரவணைக்கவும், வழிநடத்தவும் எத்தனையோ உறவுகள். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பதுபோல் இன்னும் அதன் மிச்சங்கள் நினைவுகளில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.சுய சரிதைபோல் தோண்றக்கூடாது என்பதால் நிறைய விஷயங்களை சென்சார் செய்திருக்கிறேன். அவையெல்லாம் எங்கள் “குடும்பம்” வாட்ஸ் அப்பில் பின்னூட்டங்களாக விரிவு படுத்தப்படுகிறது.கூட்டுக் குடும்ப வாழ்வில் வளர்ந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதுமே தொடர்கதைதான்.
முதலில் பதிவில் இருந்து படிக்காமல் இடையில் படிக்க நேர்ந்தவர்களுக்கு அடிக்கடி இடறும் கதாபாத்திரங்களில் “யார் அந்த எழில்?” என்ற கேள்வி வரும். காதல் கணவரைப் பெயர் சொல்லி அழைப்பது எங்கள் காலங்களில் நாகரீகமற்றது என்றாலும் நான் முதலில் இருந்தே அப்படி கூப்பிட்டுப் பழகிவிட்டேன். நயினார் அண்ணனும் தம்பி நானாவும் சமகாலத்திய சகோதரர்கள் என்பதால் எனது அநுபவங்களில் அடிக்கடி இடறுபவர்கள். கல்லூரிக் காலமே இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருப்பதால் கல்யாணம், குழந்தைப்பேறு, அரசுப்பணி என்று ஏகப்பட்டது (மனக்)கிடப்பில் உள்ளது. வடிவேலு பாணியில் “ச்சோ இப்பவே கண்ணைக் கட்டுதே”ந்னு தோணுது.
ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதுதான் கஷ்டம் . காலையில் நடைப்பயிற்சி செல்வது சுலபம், ஆனால் குறித்த நேரத்துக்குத் துயில் எழுவது சிரமம். அது போல்தான், எழுத முனைவதும். என்ன எழுத வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் தடையின்றி தொடரும் எழுத்துப் பணியும். இப்போது என்ன எழுதுவது எப்படித் தொடங்குவது போன்ற விஷயங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. சமகால அரசியல் தொடங்கி, நம்மைச் சுற்றி நகரும் மனிதர்கள், நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் என ஏகப்பட்ட முகாந்திரங்கள் மென்மேலும் எழுதத் தூண்டுகிறது.
மருத்துவக் கல்லூரி விஷயங்கள் எல்லோரையும் ஈர்க்குமா என்று தெரியாது. அதனால்தான் அங்கு நடந்த பொதுவான நிகழ்வுகளை மட்டும் அவ்வப்போது எழுதினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை சொல்லும் “கனாக் காலம்” அது. வயதும் வயோதிகமும் நேரமும் இடம் கொடுத்தால் அடுத்த பதிப்பாக மருத்துவக்கல்லூரி நாட்களில் நடை பயில்கிறேன். பயணக் கட்டுரைகள் எழுதுவது சுலபமாகவும் நிறைய விஷயங்கள் பொதிந்ததாகவும் இருக்கிறது. சில சமயங்களில் ஒரு பதிவில் முடிக்க இயலாமல் போய்விடுகிறது. ஆறுமுகநேரி முதல் அமெரிக்கா வரை, திருநெல்வேலி முதல் டோக்கியோ வரை சென்று கண்டு கழித்த விஷயங்களைப் பயணக் கட்டுரைகளாக எழுதுவது எனது அடுத்த முயற்சியாக இருக்கும்.
நிறைய(ஆக்கபூர்வமான) விமர்சனங்களும் அறிவுரைகளும் நண்பர்களிடமிருந்து அவ்வப்போது வரும். அதில் ஒன்று அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்ப போட்டோ போடும்படி சிலர் கூறினார்கள். புத்தக வடிவமாக வரும்போது நிழற்படங்கள் , கேலிச்சித்திரங்கள் எல்லாம் இணைக்க உத்தேசித்திருக்கிறோம். உங்கள் சொந்த குடும்ப அநுபவங்களாக இல்லாமல் பொதுவான தளத்தில் எழுதுமாறும் கூறினார்கள். அதற்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமென்று நினைக்கிறேன். சிறுகதைகள் எழுதலாம் என்று சொன்னதையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறுகிய வாசகர் வட்டம் என்னை சிறு எழுத்தாளர் அளவுக்கு அங்கீகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதிவுகளை நிறைய நண்பர்கள் அவர்களின் நண்பர், உறவினர் குழுமங்களுக்கு அனுப்பி என் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தியுள்ளார்கள்.
நிறையபேர் இளமைக்காலம் என் அநுபவங்களின் சாயலுடன் ஒத்துப் போவது போல் தோன்றும் போதெல்லாம் கைபேசியில் என்னை அழைத்து பேசுவதும் அவ்வப்போது நடக்கும். அறுபத்து மூன்று வருடங்கள்,கிட்டத்தட்ட 23000 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறுதுளி அளவுதான் எழுதியிருக்கிறேன். மஹாசமுத்திரம் போன்ற பரந்து கிடக்கும் வாழ்வில் சின்னஞ் சிறு அலைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
குழந்தை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எட்டு பருவங்களில் கடைசிக் கட்டத்தை எட்டுவதற்குள் இயன்றவரை எழுத வேண்டும், இயல்பாக எழுத வேண்டும். உங்கள் அனைவரின் வாசிப்பும் நேசிப்பும் எனக்கு ஊக்கம் அளிக்கட்டும்.
முதல் பாகத்தின் முடிவு செய்யும் இந்த அலை அடுத்த பாகத்தின் முதல் அலையாகட்டும்.
என்றென்றும் அன்புடன்
தாணு.

அலை-98

 அலை-98

“தண்ணீர் தண்ணீர்”
இப்படி அலையப்போகும் நாட்கள் அருகில் வந்துவிட்டதோ என்ற அச்சம் மனதுக்குள் இருக்கிறது. “தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்கக்கூடாது” என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறை எங்களுடையது. காசு நீட்டினால் பாட்டிலில் தண்ணீர்; அதையும் பாதி குடித்துவிட்டு மீதியைத் தூக்கி எறிந்துவிட்டுப் போகும் இன்றைய தலைமுறைக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை. ஆடம்பர விழாக்களில் அரைகுறையாக காலிபண்ணப்பட்டு அநாதையாக நின்று கொண்டிருக்கும் தண்ணீர் பாட்டில்களே அதற்கு சாட்சி. பழைய சம்பிரதாயப்படி குவளையில் மொண்டு தம்ளரில் ஊற்றுவது பரவாயில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. மலைபோல் குவியும் ப்ளாஸ்டிக் கழிவும் குறையும்.
தண்ணீர் சிக்கனம் என்பது எங்களுக்கெல்லாம் பால பாடம். ஊர் மொத்தத்துக்கும் தண்ணீர் சப்ளை செய்வது தெருக்குழாய்களில் வரும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர்தான். அதுவும் தினசரி வராது. பருவநிலை மாறுதலுக்கேற்ப இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவது வாரம் ஒருமுறை கூட வரலாம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் பணம் கட்டி வீட்டுக்குள் தனி குழாய் அமைத்துக் கொள்வார்கள். தங்கள் தேவைக்கு மேலே வரும் நீரை காசுக்கு தரும் பழக்கம் அப்போதிலிருந்தே இருக்கிறது. எங்க வீட்டு ஜனத்தொகைக்கு தெருக்குழாய் தண்ணீர் மட்டும் போதாது என்பதால் நாங்களும் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுவோம். எட்டு குடம், பத்து குடம் என்று எண்ணிக்கைக்கு ஏற்ப விலை உண்டு.பள்ளிக்கூடம் செல்லும் முன்பு தண்ணீர் எடுத்துவைத்துவிட்டுப் போவது எனது பொறுப்பு.
சினிமாக்களில் வருவதுபோன்ற குழாயடிச் சண்டைகள் தெருக் குழாய்களில் சர்வ சாதாரணமாக நடக்கும். தண்ணீர் முறை வரும் நாட்களில் காலையிலிருந்தே குடங்கள் வரிசை கட்டிக் கொள்ளும். கொஞ்சம் அடாவடி கோஷ்டிகள் இடையில் குடங்களைக் கொண்டு சொறுகும்போது வாய்ச் சண்டை கைகலப்பாகவும் முடியும். தாராளமாய் தண்ணீர் கிடைக்கும் நாட்களில் ரெண்டுபேர் relay race மாதிரி எதிரெதிரே ஓடி ஓடி நிறைய குடத்தில் பிடிப்போம். மழைக்காலங்களில் தண்ணீர் சேறு கலந்து வரும்,வறட்சி காலங்களில் குப்பை சேர்ந்து வரும். அதையெல்லாம் வடிகட்ட வேஷ்டித் துணிகள் எல்லோரின் இடுப்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும்.
பருவமழை காலங்களில் காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கத் தண்ணீரில் குளோரின் கலந்து வரும்.அப்போதெல்லாம் உடனே பயன்படுத்த முடியாது என்பதால் சேகரித்து வைக்க நிறைய பாத்திரங்கள் தேவைப்படும். அதற்கும் விதவிதமான பாத்திரங்கள் இருக்கும். குடி தண்ணீருக்கு மண்பானை, சமையலுக்கு வெண்கலப் பாத்திரங்கள், குளிக்க சிமெண்ட் தொட்டிகள் என எல்லாமே இயற்கையோடு இயைந்து இருக்கும். ப்ளாஸ்டிக் குடம், பக்கெட் எதுவும் அப்போது கிடையாது. சில்வர் அல்லது பித்தளைக் குடம், இரும்பு வாளி அல்லது தகர டின்கள்தான் உண்டு.
எங்க ஊர் கடற்கரைக்கு மிக அருகில் உள்ள ஊர் என்பதால் ஆழ்குழாய் போர்வெல்கள் கிடையாது. போர் போட்டால் கடல் தண்ணீர்தான் வரும் என்பதால் ஆழமில்லாத கிணறுகள்தான் இருக்கும். அநேகமாக வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். வீட்டிலுள்ளவர்களே கிணறு தோண்டிக் கொள்ளும் வகையில் உதிரி மணல்பாங்கான தரை இருக்கும். Shallow well என்று சொல்லுவார்கள். தண்ணீர் இறைக்க இறைக்க மெதுவாக ஊறிக்கொண்டே இருக்கும். எப்போதாவது கிணறு தூர் வாருவதுகூட நாங்களே செய்து கொள்ளுவோம். கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும். ஒருசில கிணறுகளில் மட்டும் நல்ல தண்ணீர் வரும். அதுமாதிரி கிணறு ஒன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு அருகில் உண்டு. ஒரு குடம் தண்ணீர் எடுப்பதற்கே எங்க வீட்டிலிருந்து இரண்டு கி.மீ.க்குமேல் நடக்க வேண்டும். அங்கும் பெரிய வரிசை இருக்கும். ஊற ஊற தான் இறைக்க வேண்டியிருக்கும். நான் சொல்லும் இடங்களெல்லாம் ராஜஸ்தான் பாலைவனத்து ஊர்கள் இல்லை, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள்தான்.
உப்புத் தண்ணீரில் தலைக்குக் குளிக்க முடியாது என்பதால் குளிப்பதற்கும் சேர்த்து தண்ணீர் பிடித்து வைக்கவேண்டியிருக்கும். அண்ணன்கள் கிணறுகளை நாடிச் சென்றுவிடுவார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்துவதற்கு அட்டகாசமான ஏற்பாடு இருக்கும். ஏற்றம் இறைக்க பயன்படுவதுபோல் கனமான கம்பின் ஒரு முனையில் பெரிய பாறாங்கல் கட்டியிருக்கும். மறுமுனையில் மெலிந்த நீளமான மூங்கில் அல்லது சவுக்கு கம்பு கட்டப்பட்டு அதன் நுனியில் பக்கெட் கட்டி வைச்சிருப்பாங்க. அதை ஒரு பெரிய தூண் மாதிரி மரத்துடன் இணைத்திருப்பாங்க. கொஞ்சம் பலத்துடன் மூங்கிலைக் கீழிறக்கி தண்ணீர் மொண்டு லேசாகத் தூக்கினல் போதும் பின்பாரத்தின் துணையுடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் ஈஸியாக இறைத்துக் கொள்ளலாம். இதைத்தான் துலாக்கிணறுன்னு சொல்லுவாங்க. அவ்வப்போது ஊறிக் கொண்டே இருப்பதால் மார்கழி மாதக் குளிரில் கூட தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். சேர்து வைத்து மொத்த துணிகளும் துவைக்க , லீவு நாளில் குளிக்க பண்டாரங்குளம், குதிரைக்காரன் குண்டு, நல்லூர் குளம் என ரெண்டு மூணு குளங்கள் உண்டு. நீச்சல் பழகியதும், துண்டு விரித்து மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டதும் அங்கேதான். ஊருக்கு வெளிப்புறமாக இருப்பதால் தினசரி செல்வது முடியாது.
தண்ணீர் பிரச்னை என்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைதான் இன்னும் இருக்கிறது என்பதைப் போனவாரம் ஆறுமுகநேரியில் அண்ணன் வீட்டிற்குச் சென்றபோது கண்கூடாகப் பார்த்தேன். இருள்விலகாத காலை நேரத்தில் முனிசிபாலிட்டி குழாய்களில் தண்ணீர் திறந்துவிட்டிருந்ததால் அத்தை, மதினி எல்லோரும் சுறுசுறுப்பாகக் குடங்களுடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் வீட்டில் சொந்த குழாய் பதிக்கப்பட்டிருந்தாலும், தண்ணீரை எடுத்து அண்டா, குடங்கள், பாத்திரம், பக்கெட் என எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்டிருந்தான். வழியனுப்ப சென்றிருந்த எங்களுக்குக் காஃபி போடக் கூட அபுதாபியிலிருந்து வந்திருந்த மருமகள்தான் எழுந்து வர வேண்டியிருந்தது. தாமிரபரணி நதியின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் அடுத்து எத்தனை நாள் கழித்து தண்ணீர் வருமோ என்று தெரியாததால் அத்தனை வேலை.கிராமங்களில் ப்ளாஸ்டிக் கேன் தண்ணீர் பயன்பாடு அவ்வளவு அதிகமாக இல்லை என்பதால் இந்த முயற்சி. ஈரோட்டில் என்றைக்கு கார்ப்பரேஷன் தண்ணீர் வருகிறது என்றே நமக்குத் தெரிவதில்லை.
ஊரைப்பிரிந்து வந்து நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டாலும் தண்ணீர் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பதிந்து கிடப்பதால் இன்றுவரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாக்க மனசு வருவதில்லை. பாதி குடித்த பாட்டில்களில் உள்ள தண்ணீர் கைகழுவ, காய்கறி கழுவ உபயோகமாகும். RO machine இல் இருந்து வரும் உபரி நீர் பாத்திரம் கழுவ எப்போதும் இரண்டு பாத்திரங்களில் உட்கார்ந்திருக்கும். அரிசி களையும் தண்ணீர், சமையலில் வெளியேறும் கழிவு திரவங்கள் எல்லாம் கழனித் தொட்டியில் சேகரிக்கப்பட்டு செடிக்கு ஊற்றப்படும். இதெல்லாம் நான் மட்டும் செய்வதில்லை. எங்கள் வீட்டில் வேலைக்கு வருபவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முதல் பயிற்சி.
குழாயைத் திறந்தால் தண்ணீர் வெள்ளம் போல் கொட்டினாலும் ஒரு பக்கெட் தண்ணீருக்குமேல் குளிக்க செலவழிப்பது இல்லை. “நல்ல உடம்புக்கு நாழி தண்ணீர்”ன்னு பெரியவங்க அடிக்கடி சொல்றது பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது.
மண்பானைத் தண்ணீர் குடித்த போது வராத உபாதைகளும் நோய்களும் பாட்டில் தண்ணீருக்கு மாறியபின் அதிகமாகியிருக்கிறது. நாவின் சுவை அரும்புகளை மலரவிடுவதற்காக நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பெரும்பாலான தாது உப்புக்களும் நீக்கப்படுவதால் நிறைய நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. எண்பது வயதில்கூட எங்க ஆச்சிக்கு வராத உடல் சோர்வு அறுபதுகளில் என்னை ஒத்தவர்களுக்கு ஏற்படுவது தாது உப்பு குறைபாடுகளால்தான். உடம்பின் 75% தண்ணீர்தான்; உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். ஆனால் தண்ணீரின் அருமை தெரியாமல் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.
தண்ணீரை நேசிப்போம்
தனிநபராய் சேமிப்போம்.

Like
Comment
Share

Saturday, September 02, 2023

அலை-97

 அலை-97

“வர்க்கலா போனோமே கலக்கலா ”

உலகம் சுற்றி ஊரெல்லாம் பார்த்து அதிசயித்து கிடந்தாலும். அருகிலிருக்கும் இடங்களில் சிலவற்றைப் பார்க்கும்போது கிடைக்கும் பரவசம் அளவிடமுடியாதது. இந்தமுறை எங்களின் கேரளா பிரயாணமும் அப்படித்தான் அமைந்தது. ஈரோட்டின் மகப்பேறு மருத்துவர்களின் “மகளிர் மட்டும்” பிரயாணம் கடந்தவாரம் 65 நபர்களுடன் புகைவண்டியில் தொடங்கியது. கெளதமியின் நாலுவயது பேரன் முதல் 74 வயது தங்கம் மேடம் வரை பலதரப்பட்ட முகங்கள். புகைவண்டி நிலையத்தின் நடைமேடையில்   “No தங்கமணி enjoy” ன்னு சந்தோஷப்பட்டுகிட்டது வழியனுப்ப வந்த கணவர்களா பிரயாணம் செல்ல இருந்த மனைவியரான்னு சொல்ல முடியாதபடி ஒரே களேபரம். 


இரவு சாப்பாடு முடித்துவிட்டு வரும்படி சொல்லியிருந்தாலும் கோபி, அந்தியூர் போன்ற இடங்களிலிருந்து வருபவர்களைக் கருத்தில் கொண்டு கொண்டு கொஞ்சம் சாப்பாடு பொட்டலங்களும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எங்க குழுமத்தின் ‘அன்னபூரணி’ பூர்ணிமா வீட்டு இட்லியும் காரச் சட்னியும் கொண்டு வந்திருந்தாள். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு வந்தவங்ககூட சட்னி வாசத்தால் பந்தியில் பாய்ந்துவிட்டோம். 65 பேருக்கும் ஒரே கோச்சில் இடம் கிடைக்காததால் ஆங்காங்கே செட்டில் ஆகி சீக்கிரமே தூங்கிவிட்டோம். காலையில் கொல்லம் புகைவண்டி நிலையத்திலேயே இறங்கி வர்கலா அகில் ரிஸார்ட்டுக்குப் போய்விட்டோம். 


வர்கலாவில் மிகவும் பிரசித்தி பெற்ற 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஜனார்த்தனசாமி திருக்கோவிலுக்கு முதலில் சென்றோம். அங்கிங்கெனாதபடி எல்லா சுவர்களிலும் தீபம் ஏற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும் இரவு பூஜைக்கு வந்திருந்தால் கண்களுக்கும் விருந்து கிடைத்திருக்குமென்று தோன்றியது. நாங்கள் சென்றபோது துலாபாரத்தில் வைத்து ஒரு குழந்தைக்கு எடைக்கு எடை சர்க்கரை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 

அங்கிருந்து நேராக ஜடாயு சிற்ப பூங்காவிற்கு சென்றோம். 200 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட உலகத்திலேயே மிகப் பெரிய பறவை சிற்பம். ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது போரிட்டு இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயு கீழே விழுந்த இடம் என்ற சிறப்புப் பெற்றது. ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சியில் இத்தைகைய இதிகாச வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகப் பிரம்மாண்டமான பூங்காவை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள பறவையைக் காண தரமான ரோப் கார் வசதி உள்ளது. ப்ளாஸ்டிக் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ராமர் பாதம், வற்றாத நீரூற்று போன்ற அடையாளச் சின்னங்களும் சுற்றி இருந்தன. 


பஸ் பிரயாணத்தின்போது நேரம் செலவழிக்க ஏகப்பட்ட விளையாட்டுகளைத் தமிழ்செல்வி எடுத்து வந்திருந்தாள். குழந்தைகளும் பெரியவர்களும் ரசித்து விளையாடினார்கள். மதிய உணவிற்குப்பின் வர்கலா Cliff க்குப் போனோம். பாறைகளுடன் கூடிய கடற்கரை கோவாவிற்குப் பிறகு இங்குதான் இருக்கிறது. அதனால் மினி கோவா என்றே அழைக்கிறார்கள். ஒருபக்கம் அரபிக் கடல் மறுபக்கம் கடைத்தெரு நடுவில் வளைந்து செல்லும் பாதை என்று ஒரு சொர்க்கபுரியே அங்கு இருந்தது. பாறை விளிம்பில் நடந்து செல்லும்போது ரசிக்கும் கடலின் அழகு கொள்ளையோ கொள்ளை. பாலித் தீவில் டைனோசர் பாறையை பார்க்க போன அநுபவம் நினைவுக்கு வந்தது.தென்மேற்குப் பருவக்காற்று சீசன் இன்னும் முடிவடையாததால் கடலில் குளிக்க தடை இருந்தது. அதனால் கீழே இறங்கிச் செல்லும் கூட்டமும் குறைவாகவே இருந்தது. மற்ற நேரங்களில் குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக இருக்குமாம். போட்டோ எடுப்பதற்கு மிகச் சிறந்த இடம். தலைவி ரேவதி எனக்கு அன்புடன் கொடுத்த ‘இதயம்’ தொட்ட காஃபி பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருந்துச்சு.


எங்கள் ரிஸார்ட்டின் அருகிலேயே கடலுக்கு இறங்கும் பாதை இருப்பதால் எல்லோரும் கடற்கரைக்கு ஏதுவான உடை மாற்றிக்கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள். ஒரு கூட்டம் கடற்கரை ஷாப்பிங் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நடக்கக் கஷ்டப்பட்ட சிலர் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்தார்கள். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும் நானும் நீச்சல் குளம் வந்துவிட்டேன். தண்ணீரில் இறங்க பயந்து கொண்டிருந்தவர்களை உள்ளே இழுத்துப் போடும் வேலையை ஆரம்பித்தோம். வெற்றிகரமாக தங்கம் மேடத்தை உள்ளே இறக்கி அவர்களை சந்தோஷப்படுத்தியது மறக்க முடியாத நிகழ்வு. எல்லோருக்கும் அசதியாக இருந்ததால் உள்விளையாட்டுகள் நாளை பார்த்துக் கொள்ளலாம் எனத் தூங்கச் சென்றோம். ஆனால் பொடிசுகளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான்.


அதிகாலையிலேயே அலாரம் வைத்து எல்லோரையும் கிளப்பி 9 மணிக்குள் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றுவிட்டோம். லோட்டஸ் மருத்துவமனை மருத்துவர் உஷா சஹாதேவன் அவர்கள் முயற்சியால் எல்லா ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டு அமைதியான முறையில் கோவில் தரிசனம் நடந்தது. உள்ளே வராத சிலர் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளுக்குச் சென்றார்கள். உள்ளே சென்றவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தனித்தனி வழிகாட்டிகளுடன் ஸ்தலபுராணம் விளக்கப்பட்டு நன்றாக ஸ்வாமி தரிசனம் செய்தார்கள். 


போட்டோ எடுக்க அனுமதி கிடையாது, உடை கட்டுப்பாடு உண்டு, பிற மதத்தினருக்கு அனுமதியில்லை என்று ஏகப்பட்ட கெடுபிடி. கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலவறைகளும் சன்னிதிக்கு அருகிலேயே இருந்தபடியால் ஆயுதம் தரித்த காவலர்களின் கூரிய பார்வையும் தொடர்ந்தது. ஆனால் ரோட்டரி தலைவர்களின் பரிந்துரை இருந்ததால் தள்ளு முள்ளு இல்லாமல் அமைதியாக தரிசனம் நடந்தது. பாதம், உடல், தலை என மூன்று பாகமாக சாமி தரிசனம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லட்சார்ச்சனையின்போது கோவில் முழுக்க தீபம் ஏற்றி வழிபாடு நடக்குமாம். உள்ளே கொட்டப்பட்டிருக்கும் மணல் முழுவதும் அகற்றி புது மணல் நிரப்புவார்களாம். 


பூவார் ரிஸார்ட் நோக்கி செல்லும் வழியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஆழிமலை சிவன் கோவிலுக்குள்ளும் எட்டிப் பார்த்துவிட்டோம். அமர்ந்த நிலையில் சிவபெருமானின் கைகளில் உடுக்கையும் திரிசூலமும் அழகாக செதுக்கப்பட்டிருந்தது. எங்க டாக்டரம்மா பூங்கோதையின் போட்டோகிராபி திறமையால் சூரிய ஒளி சிவபெருமானின் உச்சியில் இறங்குவது போன்ற தோற்றம் சூப்பராக வந்திருந்தது. பூவார் ரிஸார்ட்டுக்கு செல்லவே படகில்தான் செல்ல வேண்டும். அருமையான ஓணம் சாப்பாடு சாஸ்திரப்படி பரிமாறப்பட்டது. மூணு பாயாசம் வரும் என்று நிச்சயமாக எங்கள் மக்கள் எதிர்பார்க்கவில்லை. வெயில் மிக அதிகமாக இருந்ததால் கோவளம் செல்லும் யோசனையைக் கைவிட்டு பூவார் கடற்கரையிலேயே நேரம் செலவிட்டோம். போன வருஷம் முட்டம் கடற்கரையில் ஏற்பட்ட அநுபவம் காரணமாக யாரையும் தண்ணீருக்குள் அதிகமாக இறங்கவிடாமல் தடுப்பதிலேயே எனது நேரமெல்லாம் ஓடிவிட்டது. சூரிய அஸ்தமனம் பார்த்துவிட்டு ரிஸார்ட்டில் உள் அரங்கு விளையாட்டுகளில் மூழ்கிவிட்டோம். 


பலூன், பட்டியல், பொட்டட்டோ என ஏகப்பட்ட விஷயங்களை வைத்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விளையாட்டுகளில் ஈடுபட வைத்த தமிழ்செல்விக்கு பெரிய “ஓ” போடலாம். Black Thunders மாதிரி கறுப்பு உடையில் தோன்றி கலக்கலா நடனம் ஆடி அதிர வைச்சாங்க அஷ்ட தேவிகள். அம்மாவும் பொண்ணுமாக ஜோடி சேர்ந்துகிட்டது சூப்பர். மறுநாள் காலையில் கோவளம் பீச் போனதுதான் பிரயணத்தின் High-light. மங்கிய அதிகாலை வெளிச்சத்தில் பறவைகளின் சத்தமும் கடல் அலைகளின் ஓசையும் மட்டும் கேட்ட மந்தகாசமான வேளையில் படகில் சென்ற அனுபவம் அனைவரையும் மெய்மறக்க வைத்துவிட்டது.கோவளம் கடற்கரை மழை சீசனுக்குப் பிறகு அன்றுதான் திறக்கப்பட்டதாம். அதனால் எங்களை கடலில் விளையாட அனுமதித்துவிட்டார்கள். ஆனாலும் குளிக்கும் அளவுக்குத் துணை இல்லாததால் கால்களை நனைத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். வரும் வழியில் செக்ரெட்டரி தரணி சோப் குமிழிகளைக் கையில் பிடிப்பதுபோல் எல்லோரையும் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து அசத்திவிட்டாள்.


மதிய உணவு வரை ரிஸார்ட்டில் இருந்த அட்வென்சர் விளையாட்டுகளில் பங்கேற்றும், விதம் விதமாக போட்டோக்கள் க்ளிக்கியும், போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும் பொழுது பறந்துவிட்டது. நச்சுன்னு நண்டுக்கறியும் நளபாகமுமாக சாப்பிட்டுவிட்டு முத்தாய்ப்பாக லூலூ மால் சென்று எட்டிப்பார்த்துவிட்டு புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். இறங்கியதுமே பேரதிர்ச்சி. “நடுவுலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” பாணியில் எங்களில் கொஞ்சம் பேருக்கு பதிவு செய்யப்பட்டிருந்த  HA1 coach ஐ எங்கு தேடியும் காணவில்லை. ஆகட்டும் பார்த்துக்கலாம் என்று 16 பேரும் H1 முதல் வகுப்பில் ஏறிக் கொண்டோம். உஷாவின் மருமகள் ஷ்ருதி ரொம்ப ஸ்மார்ட்டாக TTE யின் லேப் டாப்பில் இருந்து லிஸ்ட் கண்டுபிடித்து இருக்கைகளை A1 இல் உறுதி செய்து எங்களை ஆசுவாசப் படுத்தி விட்டாள். ஓணம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் அது. 


பசுமை  நிறைந்த நினைவுகளுடன் அடுத்த டூர் எப்போது என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் பத்திரமாக ஈரோடு வந்து சேர்ந்தோம்.

Friday, August 18, 2023

அலை-96

 அலை-96

“APC மஹாலக்ஷ்மி கல்லூரி ”

பள்ளிப் பருவத்துக்கும் மருத்துவக் கல்லூரி வாழ்க்கைக்கும் நடுவில் கிடைத்த ஒருவருட இடைவெளிப் பருவம் மாப்பிள்ளையூரணியில்தான், APC மஹாலக்க்ஷ்மி கல்லூரியில்தான். 1976 இல் PUC படிக்க தூத்துக்குடி போன அந்த சில நாட்கள். ஐநூற்றுமுத்துவின் மகள் ஐநூறு மார்க்குகளுக்கு அதிகமாக வாங்கியபோதும் பொருளாதார நிலைமையால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த மஹாலக்ஷ்மி கல்லூரியில்தான் சேர வேண்டியிருந்தது. சாரா டக்கரும் செயிண்ட் மேரி கல்லூரியும் பெருமை வாய்ந்த கல்லூரிகளாகவும் இருகரம் கூப்பி வரவேற்கக் காத்திருந்த போதும் அங்கெல்லாம் பீஸ் கட்டுவது கடினம் என்பதால் இங்கு சேர்ந்தேன். APC வீரபாகு பிள்ளை அவர்கள் அப்பாவின் நண்பர் என்பதால் எனக்குக் கல்லூரிக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. விடுதிக்கு மட்டும்தான் கட்ட வேண்டும். நான் அந்தக் கல்லூரியின் மூன்றாவது batch.


APCM கல்லூரியின் பொன்விழா இந்த வருடம் கொண்டாடப்படுவதற்கான அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கல்லூரியில் படித்தது 47 வருடங்களுக்கு முன்பு என்பதை நம்ப முடியவில்லை. ஏதோ ரெண்டுமூணு வருஷம்தான் ஆன மாதிரி இருக்குது. கல்லூரியின் முன்னாள் மாணவி என்று நினைக்கும்போதே அங்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஒருசில ஆசிரியைகளும் நினைவுக்கு வருகிறார்கள். அந்தக் காலத்திலெல்லாம் Pet students, favourite teachers என்பதெல்லாம் ஒரு வழக்கமாகவே இருக்கும். பெளதிகம் சொல்லிக்கொடுத்த மெடில்டா மிஸ் நிறைய பேருக்கு பிடித்த ஆசிரியை. சக மாணவிகளின் பரீட்சைப் பேப்பரை என்னைத் திருத்தச் சொல்லும் அளவுக்கு மிஸ்ஸுக்கு என்னைப் பிடிக்கும். உணவு இடைவேளைகளில்கூட பெளதிக ஆய்வுக் கூடத்தில்தான் இருப்பேன். ஆனாலும் பெளதிகம் அவ்வளவு இஷ்டம் கிடையாது.


உயிரியல்தான் அப்பவே ரொம்ப பிடிச்ச பாடம். அதிலும் தாவரவியலைவிட விலங்கியல்தான் ரொம்ப பிடிக்கும். தவளை, கரப்பான்பூச்சி கூறாக்குதல் (dissection) அப்போவே எங்களுக்கு உண்டு. ரெண்டு ஜீவராசிகளைப் பார்த்தாலும் பயமும் அருவெறுப்பும் உண்டு என்றாலும் கூறாக்கல் செய்து உள்ளுறுப்புகளைப் பற்றி படிப்பது மிகவும் பிடித்திருந்தது. தவளையாவது கொஞ்சம் பெரியதாக இருக்கும். போர்டில் குண்டூசிகளைக் குத்தி நிலைப்படுத்திவிடலாம். கரப்பான்பூச்சி ரொம்ப மெல்லிசாக இருக்கும். நிறைய நேரங்களில் பிடித்து வைப்பதற்குள்ளாகவே நசுங்கிப் போய்விடும். கூறாக்குதல் முடிந்த பிறகு ஒருவித நாற்றம் எத்தனை தரம் சோப்புப் போட்டுக் கழுவினாலும் கையை விட்டுப் போகாது. அன்னைக்கு அருவருப்புப் படாமல் சாப்பிடுவதுகூட கஷ்டம்தான்.


வயது முதிர்ந்த ஆசிரியைகள் கொஞ்சம் கடுகடுவென்று இருப்பார்கள். திருமணமாகாத சில இளம் ஆசிரியைகள் எங்களுடன் இலகுவாகக் கூட்டு சேர்ந்துகொள்வார்கள். கெமிஸ்ட்ரியில் ரத்தினமணி மிஸ், ஆங்கிலத்தில் சூர்யா மிஸ் எல்லாம் அந்த ரகம். அதிலும் சூர்யா மிஸ்ஸுக்கு அந்த சமயத்தில்தான் திருமணம் நடைபெற இருந்தது. கனவுலகில் சஞ்சரித்தபடி அவங்க வராண்டாவில் நடைபோடுவதைத் திருட்டுத்தனமாகப் பார்த்து கேலி செய்வது எங்களுக்குப் பொழுதுபோக்கு. தமிழில் இளம்பிறை மணிமாறன் மிஸ் ரொம்ப அழகாகப் பேசுவாங்க. பட்டிமன்றங்களில் எல்லாம் பேசக்கூடிய சிறந்த பேச்சாளர் என்றும் சொல்லுவாங்க. 


நடைபெறப்போகும் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைச் சந்திக்கும் ஆவல் இருந்தாலும் விழா நடைபெறும் நாளில் பிற அலுவல் இருப்பதால் என்னால் போக இயலாது. கல்லூரியை விட்டு வந்தபின்பு மறுபடி கல்லூரிக்குள் போகவே இல்லை. விடுதிக் கட்டிடம் அப்படியே இருக்கிறதா என்று பார்க்க மிகுந்த ஆவல். தரைத்தளம் மட்டும் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் இல்லாத மொட்டை மாடிகளுடன் அத்துவானக் காட்டில் இருந்தது. நாங்க படித்தபோது பயங்கர தண்ணீர்ப் பஞ்சம் வேறு.. கழிவறைகளுக்கு மட்டும் சேறு கலந்த தண்ணீர் நிரப்புவார்கள். குளிக்க துணி துவைக்க அருகிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றுக்குப் போக வேண்டும். அதுவும் எட்டையபுரம் மெயின் சாலையைக் கடந்து எதிர்புறம் போக வேண்டும்.


காலையில் எழுந்ததும் ப்ளாஸ்டிக் வாளிகளில் துணிமணிகளை நிரப்பிக் கொண்டு எறும்பு ஊர்வதுபோல் ஊர்வலமாகக் கிணற்றடிக்குப் போக வேண்டும். மொத்த விடுதிக் கூட்டமும் அங்கேதான் இருக்கும் என்பதால் அங்கேயும் தள்ளுமுள்ளுதான். அவசர காக்காக் குளியல் குளித்து அழுக்குத் துணிகளைத் துவைத்து எடுத்துக் கிளம்பினால்தான் மெஸ்ஸுக்கு நேரத்தில் போக முடியும். பெரிய ஆஸ்பெஸ்டாஸ் அரங்கத்தில் அன்னதானத்துக்கு  உட்கார வைத்த மாதிரி எல்லோரும் வரிசையாக உட்காரணும். தினமும் இட்லியும் சாம்பாரும்தான். அதுவும் அளவுதான். வேண்டுமென்றால் மறுபடியும் கேட்கலாம், ஆனால் அப்படிக் கேட்பவர்கள் மதிய உணவு இடைவேளை வரை காத்திருக்கும்படி ஆகிவிடும். மூன்றுவேளை உணவுமே ரொம்ப ரொம்ப சுமாராகத்தான் இருக்கும்.


சாப்பிடாமல் வந்தவர்கள் குறைவாகச் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருகிலுள்ள கேண்டீனுக்குத்தான் படையெடுப்பார்கள். அங்கே அமுத சுரபி மாதிரி கல்கோணா எனப்படும் பதார்த்தம் இருக்கும். வாங்கி வாயில் போட்டால் என்ன முயற்சி செய்தாலும் கரைய வைக்க முடியாது. மணிக்கணக்காக மென்று கொண்டிருக்கலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் பார்வையாளர் தினத்துக்கு வரும் உறவினர்கள் சாப்பாடுதான் எடுத்து வருவார்கள். நான் சனிக்கிழமையானால் வீட்டுக்கு ஓடிவிடுவேன். அடுத்த வாரத்துக்கும் சேர்த்து நல்லா சாப்பிட்டுவிட்டு வருவேன். எப்போவாவது ஊருக்குப் போகாட்டி யாராவது பார்க்க வருவாங்க. எங்க அம்மா ஒரே ஒருதரம் என்னைப் பார்க்க வந்துருக்காங்க. அப்படியே தூத்துக்குடி கூட்டிட்டுப் போய் மாட்டினி ஷோ “ஷோலே” படம் பார்த்துட்டு ஹோட்டலில் சாப்பிட வைச்சுட்டு விடுதியில் விட்டார்கள். 


புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரி என்பதால் புதுப்புது கட்டிடங்கள் கட்ட அஸ்திவாரம் போடப்பட்ட கூரையில்லாத அறைகள் நிறைய உண்டு. ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து பாக்கெட் ரேடியோவில் சினிமாப் பாடல்கள் கேட்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. அன்னக்கிளி படம் வெளிவந்து இளையராஜா பற்றி பேச ஆரம்பித்த நாட்கள். ’மச்சானைப் பார்த்திங்களா’ பாடல் ரொம்ப பிரசித்தம். புதுப்படப் பாடல்கள்னு நிகழ்ச்சி வரும்போது அதில் கேட்ட பாடல்களுக்குண்டான படங்களை அடுத்த லீவில் திருநெல்வேலிக்குப் போய் பார்த்துவிடுவேன். புதுப்படங்கள் எல்லாம் திருநெல்வேலியில்தான் ரிலீஸ் ஆகும். 


இன்னொரு கூட்டம் மொட்டை மாடியில் உட்கார்ந்து பஜனைப் பாடல்கள் பாடுவாங்க. இரவு சாப்பாடு வேளை வரைக்கும் அது தொடரும். எனக்கு போரடிக்கும்போதெல்லாம் அங்கே போய் உட்கார்ந்து நானும் பாடிக் கொண்டிருப்பேன். அப்போ பாடிய பாடல்கள் இன்னும்கூட மனப்பாடமாக நினைவிருக்கிறது என்றால் எத்தனை தரம் கேட்டு பாடியிருப்பேன். புத்தகங்கள் மட்டும்தான் நிரந்தரத் துணை. நிறைய நாவல்கள் அந்த வருஷத்தில் படித்தேன். காலேஜ் பாடம் ஒருநாள்கூட அறையில் படித்ததில்லை. வகுப்பில் கவனிப்பதோடு சரி. ஒரே அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே விளக்கில் படிக்கும்போது எனக்கெல்லாம் படிக்கவே வராது. ஏதாவது வகுப்புத் தேர்வு இருந்தால்மட்டும்  காலையிலேயே எழுந்து வெராண்டாவில் உட்கார்ந்து படிப்பேன்.


வருடாந்திரத் தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது நான் தான் வகுப்பில் முதலாவதாக வந்திருந்தேன். மருத்துவக் கல்லூரியில் சேர மாற்றுச் சான்றிதழ் (T.C.) கேட்டபோது தர மறுத்துவிட்டார்கள். நல்ல மதிப்பெண் பெற்றவர்களெல்லாம் கல்லூரியிலிருந்து போய்விட்டால் கல்லூரியின் மதிப்பு குறைந்துவிடும். எனவே நான் அங்கேயே மேல்படிப்பு படிக்க வேண்டும். எல்லா சலுகைகளும் உண்டு என பேரம் வேறு. பிறகு அப்பா தாளாளர் அவர்களிடம் முறையிட்ட பிறகுதான் சான்றிதழ் கிடைத்தது.


பொன்விழா நிகழ்ச்சியில் மலர் வெளியீடு ஏதாவது உண்டா, PUC மட்டும் படித்தவர்களை முன்னாள் மாணவியரில் சேர்ப்பார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் எனது வெற்றி படிக்கட்டில் இரண்டாம் படியான APC Mahalaxmi கல்லூரியின் முன்னாள் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

அலை-95

 அலை-95

“கையெழுத்தும் தலையெழுத்தும்”

பழைய புத்தகங்களைத் தூசிதட்டிவிட்டு புத்தகத் திருவிழாவில் வாங்கி வந்த புதுப்புத்தகங்கள் அடுக்கும்போது சின்ன நோட்டு ஒன்று கிடைத்தது. ஏதோ ஒரு புத்தகத்திலிருந்த மேற்கோள்களை எடுத்து எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன். அதைப் பார்த்ததும் ரொம்ப மலைப்பாக இருந்தது. நூறு பக்கங்களுக்கு மேல் கையால் எழுதியிருக்கிறேன்,அதுவும் நீட்டாக அழகாக . இப்போ அதுமாதிரி எழுத முடியுமான்னு சந்தேகமா இருக்கு. அதிக பட்சமாக நோயாளிகளின் மாத்திரை சீட்டிலோ உள்நோயாளி அட்டைகளில் தினசரி முன்னேற்றம் குறித்தோ எழுதுவதுதான் இப்போதைக்கு பேனா பிடித்து எழுதுவது. யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என்பதால் அதுவும் கோழிக் கிறுக்கல்களாகத்தான் இருக்கும். மற்ற எண்ணங்களும் எழுத்துக்களும்  கணிணியில் தட்டச்சு செய்துவிடுவதால் கோர்வையாக எழுதும் வழக்கமே மறந்து போய்விட்டது.


முதல் முதலில் மணலில் “அ” எழுதியதிலிருந்து ரிடையர்ட் ஆகும்வரை அரசு மருத்துவமனைப் பணியில் எழுதிக் கொண்டே இருந்த கைகள் எப்படி திடீரென எழுத மறந்தன என யோசிக்கிறேன். வாட்ஸ் அப், முகநூல் எல்லாம் டைப் செய்யத் தூண்டித் தூண்டி எழுதுவதையே மறக்கடித்துவிட்டன. அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த தீங்கு. தினமும் கொஞ்சமாவது எழுதுவது மூளையின் செயல்திறனுக்கு ரொம்ப நல்லது என்று எப்போதோ படிச்சது. ஆனாலும் அதைக் கடைப்பிடிக்கத்தான் அந்த மூளையே அனுமதிப்பதில்லை.


பள்ளிப் பருவத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு கையெழுத்து பயிற்சியெல்லாம் எடுப்போம். நாலு கோடு போட்ட நோட்டில் குனிஞ்சு குனிஞ்சு அழகா எழுதணும். கோட்டுக்கு வெளியே போயிடக் கூடாது, கொம்பு போடுறது அளவாக இருக்கணும். ரெண்டு கோடு போட்ட நோட்டில் capital letters, small letters , கோடு போடாத நோட்டில் கோணலாகப் போகாமல் நேராக எழுதுறது என எத்தனை வித்தைகள் கற்றிருந்தோம். கையெழுத்துக்குன்னு தனியா மார்க் வேறே போடுவாங்க. அவ்வளவு கஷ்டப்பட்டு கற்ற வித்தையை எவ்வளவு எளிதில் புறம் தள்ளியிருக்கிறோம்.


எங்க வீட்டில் சரசக்காவின் கையெழுத்துதான் ரொம்ப அழகாக இருக்கும். தமிழ் பண்டிட் என்பதால் தமிழில் உருட்டி உருட்டி எழுதுவாள்.அச்சுக் கோர்த்த மாதிரி இருக்கும். ஆனால் அவள்தான் வாழ்க்கையில் அநேக கஷ்டங்களை அனுபவிச்சாள். செக்கண்ணன் எழுத்தும் அதே மாதிரி அழகாக இருக்கும், வீட்டில் விசேஷங்கள் சம்பந்தமான விஷயங்களெல்லாம் அவன்தான் எழுதுவான். அவனும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் முன்னேறினான். கையெழுத்து அழகா இருந்தால் தலையெழுத்து நல்லா இருக்காதுன்னு சொல்றது உண்மைதானோன்னு எண்ணத் தோன்றும். மத்தவங்க கையெழுத்தெல்லாம் கொஞ்சம் சுமார் ரகம் தான். 


நயினார் அண்ணன் எழுத்துக்கள் classic ஆக இருக்கும். தனது திருமணப் பத்திரிக்கையை சொந்தக் கையெழுத்தில் எழுதி அச்சில் வார்த்திருந்தான். நானெல்லாம்  ஆஹா என வியந்து பார்த்த நாட்கள். நான் மூட் நல்லாயிருந்தால் சரசக்கா மாதிரி அழகா எழுதுவேன். போரடிச்சா கோழி கிண்டிடுவேன். காதல் கடிதங்களும் கவிதைகளும் கண்ணுலே ஒத்திக்கிற மாதிரி எழுதியிருக்கிறேன். பரீட்சை பேப்பரில் முதலில் உருட்டி அழகாக எழுத ஆரம்பிச்சுட்டு முடிக்கும்போது நேரம் பத்தாமல் கிறுக்கலில் முடிப்பது எல்லோருக்குமே பொதுவானதுதான். 


அந்தக்கால கதாசிரியர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக கைகளால்தான் எழுதியிருக்கிறார்கள். கதாசிரியர் என்றாலே பேனாவும் பரீட்சை அட்டையில் சொருகப்பட்ட பேப்பரும்தான் நம் கண்முன்னால் வரும். ஒரு கதை எழுதுவதற்கு எத்தனை ரீம் பேப்பர்கள் செலவாகியிருக்குமோ தெரியாது. இன்றைய “பொன்னியின் செல்வன்” அன்று கல்கியின் கைகளில் உருவானது எத்தனை மாதங்களோ வருடங்களோ தெரியாது. ஆனால் ரசித்து எழுதும்போது நேரம் ஒரு பொருட்டல்லதான்.


எண்பதுகளில் எங்க ஊர் “ஸ்டேஷன் பெஞ்ச்” நண்பர்கள் கூட்டமெல்லாம் சேர்ந்து கையெழுத்துப் பிரதிகளில் சினிமா விமர்சனம் செய்வார்கள். ‘பாலைவனச் சோலை’ படத்துக்குக் கூட அப்படி ஒரு கைப்பிரதி பார்த்த மாதிரி நினைவிருக்கிறது.நாலைஞ்சு பேர் சேர்ந்து கையால் எழுதியே circulate பண்ணுவாங்க. நாழிதளில் வரும் போட்டோக்களை வெட்டி ஒட்டி அது குறித்து கட்டுரை எழுதுவார்கள். அதைப்பார்த்து எனக்கு அப்போதே எழுதுவதற்கு ஒரு inspiration வந்திருக்கிறது.

அவ்வப்போது சின்ன கவிதைகள் எழுதுவேன் , ஆனால் பாதுகாத்து வைத்திருக்கவில்லை. கல்லூரியின் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து எழுதும் கவிதைகளுக்கு தோழி விசாலாட்சிதான் ஒரே ரசிகை. வகுப்பெடுக்கும் வாத்தியாரிலிருந்து எதிர் புறம் அமர்ந்திருக்கும் மாணவர்கள்வரை எதைப்பற்றியாவது கைக்கூ கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருப்பேன். சத்யமூர்த்தி சார் , நடனசபாபதி சார் எல்லாம் வகுப்பெடுக்கும்போது கடைசி பெஞ்ச் வரை கேட்கவே செய்யாது. போரடிக்காமல் இருக்க அவர்களைப் பற்றிகூட கவிதை எழுதிக் கொண்டிருப்பேன்.


கொஞ்ச காலத்துக்குத் தோழிகளுடன் கடிதப் போக்குவரத்து இருந்தபோது Inland letter இல் நுணுக்கி நுணுக்கி பெரிய கதைகளோடு கடிதம் போகும். பதில் வந்ததும் திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்வதுமுண்டு. அந்த அநுபவத்துடன் எழில் ஈரோடு சென்ற புதிதில் பெரிய கடிதம் எழுதி அனுப்பினேன். ரசித்து படித்திருப்பாங்க என்று புளகாங்கிதத்துடன் காத்திருந்தேன். தொலைபேசியில் பேசியபோது கடிதம் எப்படி இருந்தது என்று ஆர்வத்துடன் கேட்டேன். Composition மாதிரி ரொம்ப நீளமா இருந்தது பாதிதான் படித்திருக்கிறேன் மீதி நாளைக்கு படிக்கிறேன்னு சொன்னாங்க. அதுதான் அவங்களுக்கு நான் எழுதிய முதலும் கடைசியுமான கடிதம். ஆனால் அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெளிவா  கத்துகிட்டேன். என்ன எழுதினாலும் நச்சுன்னு எழுதணும், வழ வழண்ணு எழுதக்கூடாது. படிக்கிறவங்களுக்கு போரடிக்கிறதுக்குள்ளே முடிச்சிடணும்னு முடிவெடுத்துகிட்டேன்.அதனால்தான் என்னோட “அலை” எல்லாமே 30mb க்கு மேலே போகாது.  


என்னோட பதிவுகளைப் புத்தகமாகப் போடச் சொல்லி நிறைய நண்பர்களும் உறவினர்களும் யோசனை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் நப்பாசை இருக்குது. ஆனால் தயக்கமும் இருக்குது. புத்தகக் கண்காட்சிக்குப் போனபோது குமுதம் பப்ளிகேஷனில் நண்பன் ராம்கியின் “எரிதழல்” என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் கிடைத்தது. அவனை பாதித்த விஷயங்கள் பற்றி சின்னச் சின்ன கட்டுரைகளாக எழுதியிருந்த பதிவு. வாங்கிட்டு வந்த அன்னைக்கே முழு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும் என்று உத்வேகத்துடன் ஆரம்பித்தேன், ஆனால் இன்னும் பத்து கட்டுரை கூட வாசித்து முடிக்கவில்லை. நம்ம எல்லோருடைய வாசிப்பு threshold உம் அவ்வளவுதான். புத்தகம்தான் கையில் இருக்கிறதே அப்பப்போ வாசித்துக் கொள்ளலாம் என்று தோன்றிவிடும். என் எழுத்துக்களை புத்தகமாக்குவதற்கான  தயக்கத்துக்குக் இந்த மாதிரி காரணமும் இருக்குது.


தொலைத் தொடர்புகள் முன்னேற ஆரம்பித்துவிட்டதால் கடிதம் எழுதும் வழக்கமும் ரொம்பவே குறைய ஆரம்பித்துவிட்டது. வாழ்த்து மடல்கள் மட்டுமே கடிதத் தொடர்பாகிவிட்டது.இப்போ அதுவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே போய்விடுகிறது. தட்டச்சுகூட செய்வதில்லை, just forward.தான். என்னிடம் கூட நிறையபேர் கேட்டாங்க. எப்படி இவ்வளவு நீளமா எழுதுறீங்க, மைக்கில் பேசி ரெக்கார்ட் பண்ணுவீங்களா என்றெல்லாம் கேட்டாங்க. தமிழ் Font மூலம் தட்டச்சுதான் செய்கிறேன். ஆனால் வேகமாகச் செய்துவிடுவேன். காசோலையில் கையெழுத்துபோடுவதே வேறுமாதிரி இருக்கிறது என்று திரும்பி வந்துவிடுகிறது. பக்கம் பக்கமாக கையில் எழுதுவதெல்லாம் இனிமேல் சாத்தியமே இல்லை. ஆனாலும் தாளில் பேனா கொண்டு எழுத வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

SAVE PAPER SAVE TREES என்ற எண்ணமும் இடைச் சொறுகலாக ஓடுகிறது.

Tuesday, August 15, 2023

அலை-94

 அலை-94

“குற்றாலம்”

சும்மா குளுகுளுன்னு இருக்குதான்னு கேட்பதற்குக் ‘குத்தால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா’ ன்னு உவமானத்தோட கேக்குறது எங்க ஊர் வழக்கம். “கோடை வந்தால் ஊட்டிக்குப் போவேன் பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்”னு பாடுறது கேலிக்குரிய விஷயம் இல்லை. பொதிகை மலையில் பொங்கி வழியும் குற்றால அருவிகளுக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. மூலிகைத்தன்மை வாய்ந்த நீருக்கு நிறைய வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக ஐதீகம். குற்றால சாரலில் நனையாத தென்மாவட்டவாசிகளே இருக்கமாட்டார்கள். 


பயணம் மேற்கொண்ட எத்தனையோ ஊர்களில் பல்வேறு அருவிகளைப் பார்த்திருந்தாலும் எவையுமே குற்றாலத்துக்கு ஈடுகிடையாது. பதினைஞ்சு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே எட்டுக்கும் மேற்பட்ட அருவிகள் விதவிதமான அழகுகளுடன் அமைந்திருப்பது பேரானந்தம். தென்மேற்குப் பருவமழை கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் ஆரம்பிக்கும்போது குற்றால சாரலும் ஆரம்பித்துவிடும். ஜூன் மாசம் வந்தாலே திருநெல்வேலிவரைக்கும் அந்த சாரலின் தாக்கம் இருக்கும். சாரல் ஆரம்பிச்சதுமே குற்றாலத்துக்கு டூர் போக ஆட்கள் ரெடியாகிவிடுவாங்க. 


60’s KIDS (நாங்கதான்) காலத்திலெல்லாம் கார், பைக் எதுவும் கிடையாது. பேருந்துதான் எங்களின் முதன்மை வாகனம். கொஞ்சம் கூட்டமா சேர்ந்திட்டா பணம் கலெக்ட் பண்ணி வேன் எடுத்துக்குவோம். அதிகாலையிலேயே பஸ் பிடித்து குற்றாலம் போயிட்டால் நடந்து போகும் தூரத்தில்தான் மெயின் பால்ஸ் (பேரருவி) இருக்கும். ஆசை தீரக்குளிச்சுட்டு அங்கிருந்து மற்ற அருவிகளுக்குப் போக டவுண் பஸ் கிடைக்கும். அல்லது தனியார் வேன் , டிரக்கர் என சொல்லப்படும் ஜீப் எல்லாம் வாடகைக்குக் கிடைக்கும். அந்த காலத்தில் ஆட்டோரிக்க்ஷா இருந்துச்சான்னு ஞாபகமில்லை. டிரக்கர்தான் பேமஸ். ஆனால் நேர விரையமில்லாமல் எந்த நேரத்திலும் சவாரி போகலாம்.


பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, ஷெண்பகாதேவி அருவி, தேனருவி, பழைய குற்றாலம் என ஏகப்பட்ட அருவிகள் இருந்தாலும் மெயின் அருவியும் ஐந்தருவியும்தான் எப்போதும் எங்களோட இலக்கு. ரெண்டுமே ஈஸியா போகும் தூரத்தில் இருக்கும், தண்ணீரும் ஆர்ப்பரித்துக் கொட்டும். மெயின் அருவி எப்பவும் கூட்டமாகத்தான் இருக்கும். சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் இலகுவாக செல்லக் கூடிய இடம் என்பதால் தண்ணீர் கொட்டும் போதெல்லாம் தள்ளு முள்ளுதான். சீசன் நேரத்தில் பேரருவி கொட்டும் அழகை நின்று ரசித்துக் கொண்டே இருக்கலாம். தண்ணீர் கம்பியைத் தாண்டி விழுகுதாம் என்று சொன்னால் சூப்பர் சீசன் என்று அர்த்தம்.


மெயின் அருவியில் கீழே தண்ணீர் விழும் முன்பு ‘பொங்குமாங் கடல்’ என சொல்லப்படும் 20 அடி ஆழமுள்ள குழியில் கொட்டி அதன்பிறகுதான் கீழே ஆர்ப்பரித்து விழும். இரண்டு நிலையில் விழும்போதுகூட அதன் வேகமும் வலிமையும் கட்டுக்கடங்காது. ஒவ்வொரு துளியும் பாறாங்கல்லில் மோதுவதுபோல்தான் இருக்கும்.  சில நேரங்களில் சிறு பாறைகளும் உருண்டோடி வந்து மண்டை உடையும் அபாயமும் இருக்கும். ஆபத்து இல்லாத அழகே இல்லைபோலும். அருகிலேயே குற்றாலநாதர் கோவிலும் எண்ணெய்க் குளியலுக்கான இடங்களும் இருப்பதால் அந்த இடமே எப்போதும் திருவிழாக் கோலத்தில்தான் இருக்கும். கூட்டம் பிடிக்காதவர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்கி இரவு நேரங்களில் ஆனந்தக் குளியல் போடுவார்கள். பளீரென்ற மின் விளக்குகளும் பாதுகாவலாக போலீஸும் இருப்பதால் பயமின்றி குளிக்கலாம்.

 

ஐந்தருவி சென்றால் இன்னும்கூட வசதியாகக்  குளிக்கலாம் . ஐந்து பாகங்களாகப் பிரிந்து கொட்டும் அருவி குறைந்த உயரத்திலிருந்து விழுவதால் சுகமாகவும் குளிக்கலாம். ஆண்களின் இடையூறு இல்லாமலிருக்கக் குறுக்கே கம்பி போட்டு வைத்திருப்பார்கள். குளிப்பவர்களின் பொருட்களைப் பார்த்துக் கொள்பவர்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக திண்டுகளும் இருப்பதால் பெண்களுக்கு ஏற்ற குளியல் இடம் ஐந்தருவிதான். அதுக்கு பக்கத்தில்தான் பழத்தோட்ட அருவியும் இருக்கும். ஆனால் அது சின்னதாகவும் அனுமதி வாங்கிக் குளிக்க வேண்டியதாகவும் இருப்பதால் அங்கே போறதே இல்லை. 


அங்கிருந்து கிளம்பினால் நேரே பழைய குற்றாலம்தான், டிரக்கர்தான் ஈஸியா கூட்டிட்டுப் போயிடுமே. போற வழியிலே புலி அருவி இருக்குது. ஆனால் அதுவும் சின்ன அருவிதான். குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனால் செளகரியமாகக் குளிக்கலாம். தரையெல்லாம் மேடு பள்ளமின்றி கட்டிவிடப்பட்டிருக்கும். புலி தண்ணீர் குடிக்க வருவதால்தான் புலி அருவி எனப் பெயர் வந்ததாகச்  சொல்லுவாங்க. ஆனால் புலியைப் பார்த்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதிகாலையிலேயே வந்துட்டு போயிருக்குமோ என்னவோ தெரியாது. பழைய குற்றாலத்தில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது நிறைய சுற்றுலா வாசிகள் அங்கு போவதில்லை. அதனால் ரொம்ப நேரம் குளிக்கலாம். ஆண் பெண்  குளிக்க தனி இடங்கள், சமதரை, தண்ணீர் விழுந்து செல்லும் இடத்தில் சின்ன நீச்சல் தொட்டி போன்ற அமைப்பு எல்லாம் இருப்பதால் வாடிக்கையாக வருபவர்கள் பழைய குற்றால அருவியைத்தான் விரும்புவார்கள்.


இதெல்லாம் பொதுவாகக் குற்றாலத்துக்கு செல்லும் வழிமுறைகள். சாகசப் பிரியர்களுக்கு என்றும் இடங்கள் இருக்கின்றன. மெயின் அருவியிலிருந்து ட்ரெக்கிங் பண்ணி மேலே போக வழித்தடங்கள் உண்டு. ஆரம்ப கட்டத்தில் சிறிதாக சிற்றருவி வரும். மெயின் அருவியின் கசகசப்பிலிருந்து தப்பித்து இங்கு வந்து படுத்துக் கொண்டே குளிப்பவர்களும் உண்டு. இடையில் சிறு பாதை பிரிந்து பொங்குமாங் கடல் உள்ள இடத்துக்குப் போகும். அதைத் தாண்டி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் தெரிவது ஷெண்பகாதேவி அருவி கொட்டும் அற்புதமான காட்சி. அருவி கொட்டும் இடத்தில் சின்ன நீச்சல் குளம் போல் உருவாகி இருக்கும். சாகசப் பிரியர்கள் பாறை முகட்டிலிருந்து டைவ் பண்ணி அந்தக் குளத்தில் குதிப்பார்கள். கொஞ்சம் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் அந்த நீச்சல் குளத்தில் பயமின்றி குளிக்கலாம்.


சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வகுப்பு கூடுகைக்காகக் குற்றாலம் போனபோது நாங்க கொஞ்சபேர் மட்டும் ஷெண்பகாதேவிக்கு ட்ரெக்கிங் போனோம். அப்போவே மேலே ஏறிச் செல்ல அநுமதி வாங்க வேண்டியிருந்தது.  தில்லைதான் அதெல்லாம் வாங்கி எங்களுக்கு லீடராக வந்தார். ஆண்களெல்லாம் பாறையில் ஏறி குதித்துக் கொண்டும் பெண்களெல்லாம் குளத்தில் ஊறிக்கொண்டும் இருந்தோம். திடீர்னு எழில் கிட்டே நானும் டைவ் பண்ணவான்னு கேட்க அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. என்ன ஏதுன்னு யோசிக்காமல் நானும் அவங்ககூடப் போய் டைவ் பண்ணிட்டேன். நீச்சல் தெரியும் என்ற தைரியம், டேனியும் எழிலும் பக்கத்தில் இருந்ததால் தைரியமா குதிச்சுட்டேன். அதை அப்புறமா வீடியோவில் பார்த்த பிறகுதான் பயமே வந்துச்சு. த்ரில்லிங் அநுபவம்தான்.


அதற்கும் மேலே ட்ரெக் பண்ணலாம், ஒத்தையடி பாதை உண்டு. செங்குத்தாக ஏறிப்போனால் தேனருவி வரும். சாதாரணமா யாரும் அங்கே போக மாட்டாங்க. நான் பி.யூ.சி. படிச்சப்போ நயினார் அண்ணன் எங்களை அங்கு கூட்டிட்டு போனான். குரும்பூர் சித்தி பிள்ளைங்க செல்லமக்கா, ராஜமக்கா, சுப்பையா அண்ணன்,முருகன் அண்ணன் என்று கூட்டமாகப் போனோம். பறவைகளின் சத்தமும் அருவிச் சத்தமும் மட்டுமே கேட்கும் அமாநுஷ்யமான அமைதியான இடம். ஆனால் சுற்றித் தெரிந்த காட்சிகள் கொள்ளை அழகு. இப்போல்லாம் அங்கே முடியாதாம், தடை போட்டிருக்காங்கன்னு கேள்வி. 

மருத்துவ கல்லூரியிலிருந்து மாணவர்கள் அப்பப்போ கூட்டமா சைக்கிளில் குற்றாலம் போவாங்க. அவங்க எஞ்சாய் பண்றதே தனிதான்.


எல்லா இடமும் சுத்திட்டு வந்தாலும் கடைசியா போக வேண்டியது பார்டர் பரோட்டா கடைதான். நாங்க படிக்கிறப்போ எல்லாம் அது இருந்துச்சான்னு தெரியாது. ஆனால் இப்போ குற்றாலம் போனால் கண்டிப்பாக அந்தக் கடையில் சாப்பிடாமல் வரமுடியாது. கீத்துக் கொட்டகைதான் என்றாலும் சுவையில் தனித்துவம். வெளிநாடெல்லாம் போய் நயாகரா பார்த்து “AWESOME” ன்னு சொல்றவங்களெல்லாம் ஒரு தடவையாவது சீசனில் குற்றாலத்துக்குப் போய் எண்ணெய் மசாஜ் பண்ணிட்டு அருவியில் குளிச்சுட்டு பார்டர் பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு  வாங்க. ரெண்டுதரம் awesome சொல்லுவீங்க. குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதுன்னு உவமையோட பாட ஆரம்பிச்சுடுவீங்க.

Thursday, August 10, 2023

அலை-93

 அலை-93

 “பனைமரம்”

இந்தப் பேரைக் கேட்டதுமே நிறைய பேருக்குக்  “கள்ளு” ஞாபகம்தான் வரும். ஆனால் எங்களுக்கெல்லாம் நிறைய கதைகள்தான் நினைவுக்கு வரும். நாங்க சின்னப் பசங்களாக இருந்தபோது எங்களைச் சுற்றிச் சுற்றி பனை மரங்கள்தான் அதிகமாக இருந்தன. ஆனால் இப்போது பனை மரங்களைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டியிருக்குது. கோடிக் கணக்கில் காணப்பட்ட மரங்கள் இப்போது வெகு வேகமாகக் குறைந்து வருகின்றன. உரிய அனுமதி இன்றி பனை மரங்களை வெட்டக் கூடாது என்ற அரசாணை வந்தபிறகு ஓரளவு அதன் அழிவு தடுக்கப் பட்டிருக்கிறது. 


பனை மரம் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா என்று கேட்பவர்களுக்கு அதன் அருமை புரியவில்லை என்பதுதான் உண்மை. பனைமரத்துடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இல்லாமல் அன்றைய நாட்கள் நகர்ந்தது இல்லை. அந்த மரத்தின் மேன்மை புரிந்தோ புரியாமலோ அதன் பயன்களை முழுவதும் அநுபவித்த சந்ததிகள் நாங்கள்தான். பதனி, நுங்கு, பனம் பழம், பனம் கிழங்கு,கருப்பட்டி,தவுண் என்று எச்சில் ஊறவைக்கும் ஏகப்பட்ட ஐட்டங்கள் உண்டு. இப்போ இதெல்லாம் ஆன்லைனில் ஏகப்பட்ட விலைக்குக் கிடைக்கிறது.


பி.எஸ்.ஆர். தாத்தா வீட்டுத் தோட்டத்தில் ஏகப்பட்ட பனைமரங்கள் உண்டு. காலையில் தூக்குச் சட்டியுடன் தாத்தா வீட்டிற்குப் போய்விட்டால் குடும்பம் மொத்தத்திற்கும் பதநி (பதநீர்) கிடைச்சிடும். எங்க வீட்டுலேதான் ஜனத்தொகை அதிகமாச்சே, அதனால் ஷிஃப்ட் போட்டு யாராவது ஒருத்தர் தூக்குசட்டியுடன் காலையில் ஆஜராகிவிடுவோம். வீட்டில் கொண்டுவந்து வைக்கிறதுக்குள்ளே மொத்தமும் காலியாகிவிடும். அத்துணை ருசியாக இருக்கும். காஃபி குடிச்ச வயிறுடன் பதனி குடிக்காதீங்க, வயிற்றைக் கலக்கிடும்னு அம்மா கத்தினாலும் கேட்காமல் அவசர அவசரமாக சட்டி காலிபண்ணப்படும். 


கோடை விடுமுறை நாட்களில் மாலைப் பதநி கிடைக்கும். மாம்பழ சீசனும் அப்போதுதான் வரும். மாலைப் பதநியில் மாம்பழம் வெட்டிப்போட்டுக் குடிக்கும் சுவை இருக்குதே, வேறு எந்த பானமும் அதை அடிச்சுக்க முடியாது. பதநியைத் தம்ளரில் குடிப்பது அவ்வளவு ஸ்பெஷல் கிடையாது. பட்டையில் குடித்தால் தனி மவுசு. பனை ஓலையை விரித்து boat-shape (படகு மாதிரி) இல் பாத்திரம் மாதிரி செய்து தருவார்கள். அதுதான் பட்டை, குடிமகன்கள் போடும் பட்டை அல்ல .அது நிறைய பதநி ஊற்றி கீழே சிந்தாமல் குடிக்க முயற்சித்து பாதி ஆடையில் ஊற்றிக் கொள்வதும் நடக்கும். பதநி புளித்து கள்ளாகிவிடாமலிருக்க லேசாக சுண்ணாம்பு கலந்திருப்பார்கள். அப்போதெல்லாம் சாராயக் கடை, டாஸ்மாக் எதுவும் கிடையாது. கள் இறக்குவதற்காக சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களும் ஆங்காங்கே மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.


நுங்கு வைக்கும் காலம் வந்துவிட்டால் குலை குலையாக நுங்கு சந்தைக்கு வந்துவிடும். அதை ஓட்டிலிருந்து பெருவிரல் மூலமாக லாவகமாக எடுத்து சாப்பிடுவதில் சிலர் வல்லவர்களாக இருப்பார்கள். நுங்கு சீசன் முடிஞ்சதும் பனம் பழம் வர ஆரம்பிச்சுடும். ஃப்ரஷாக கிடைக்கும் பனம் பழத்தைச் சுட்டு சாப்பிடணும். மத்தவங்களுக்குக் குடுக்காமல் திருட்டுத் தனமா சாப்பிடவே முடியாது. தணல் அடுப்பில் சுடும்போதே வாசம் ஊரைத் தூக்கிடும். சூடு ஆறும் முன்பே ஆளுக்கொரு பக்கம் பிச்சு சாப்பிட்டுறுவோம். காய்ந்த பனம்பழத்தையும் தூரப்போட மாட்டாங்க. மரத்து மூட்டிலேயே லேசா மண்ணைக் கொத்திட்டு பொதைச்சு வைச்சிட்டா ரெண்டு மூணு மாசம் கழிச்சு பனங்கிழங்கு வளர்ந்திடும். பிடுங்க மறந்து போயி அப்படியே விட்டுட்டாலும் அதிலிருந்து பனம்பூ எனப்படும் தவுண் கிடைச்சிடும். 


பனங்கிழங்குதான் எப்பவுமே டாப் ரேட்டில் இருக்கும். பொங்கல் சமயத்தில்தான் எங்க ஊரில் கிழங்கு சீசன் அதிகமாக இருக்கும். பொங்கல் வைத்து முடித்ததும் அந்த தணலில் கிழங்கை சொறுகி வைத்துவிட்டுப் பிறகு எடுத்து சாப்பிடணும். சுட்ட கிழங்குக்கு என்றே ஒரு தனி வாசமும் சுவையும் இருக்கும், தந்தூரி சிக்கன் மாதிரி. அதிக எண்ணிக்கையில் கிழங்கு கிடைக்கும்போது இட்லி பாத்திரம் அல்லது மண்பானையில் வேகவைத்து தருவார்கள். மஞ்சள் தூளும் உப்பும் கலந்து வேகும். சுட்ட கிழங்கும் அவிச்ச கிழங்கும் வெவ்வேறு வகை ருசி. மீதமாகும் கிழங்குகளைச் சின்னத் துண்டுகளாக உடைச்சி அதனுடன் பச்சை மிளகாய் , தேங்காய் ,பூண்டு , உப்பு எல்லாம் சேர்த்து உரலில் போட்டு தட்டி ஆளுக்கு ஒரு கை கொடுத்திடுவாங்க.அம்மாவின் அட்சய பாத்திரத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமென்றால் அதெல்லாம் பனை மரத்தின் கைங்கரியம்தான். 


பனைமரம் தின்பதற்குத் தருவதோடு நிற்காமல் அதிகமான வீட்டு உபயோகப் பொருட்களையும் தரும். நாங்கள் வாழ்ந்த வளர்ந்த காலங்களில் வீட்டில் இருப்பவற்றில் அநேகம் பொருட்கள் பனை மரத்தினுடையதுதான். வீட்டுக் கூரைக்கு பனை ஓலைதான் பயன்படும். தென்னங்கீற்றுகளைவிட பனை ஓலை விலை குறைந்தது, எளிதில் கிடைக்கக்கூடியது. தென்னங்கீற்றுபோல் பின்ன வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினாலே போதும், குளிர்ச்சியான அறைகள் தயாராகிவிடும். ஓலைகளைத் தாங்கும் சட்டங்கள்கூட பனங் கம்புகள்தான். கம்புகள் ரொம்ப உறுதியாக இருக்கும். கரையான் அரித்தோ இற்றுப் போயோ பார்த்ததில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறை ஓலை மாற்றும் போது கூட அதே கம்புகள்தான் இருக்கும்.வீட்டுக்குக் கூரை மாற்றும் போது குட்டீஸ் கீழிருந்து ஓலையை எடுத்துக் கொடுப்போம், அண்ணன்களோ மற்ற பெரியவர்களோ மேலே அமர்ந்து அடுக்குவார்கள். அதைக் கட்டுவதற்குக்கூட பனை நார்தான் உபயோகமாகும். சிமெண்ட், கம்பி என்ற புதுப்புது விஷயங்கள் வந்த பிறகு பனை மரத்தின் பொருட்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. 


காய்கறி வாங்கப் போவதிலிருந்து பொருட்களை பத்திரப் படுத்தி வைப்பது வரை பனைஓலைப் பெட்டிகளில்தான். வெவ்வேறு அளவுகளில் ஓலைபெட்டிகள்தான் வீடு முழுக்க இருக்கும். பிய்ந்து போய்விட்டால் தூக்கி எறிந்துவிட்டு புதுசு வாங்கிக்கலாம். சுற்றுச் சூழல் மாசு எதுவும் வராது, ஓலை எளிதில் மக்கிப்போய்விடும். பள்ளியில் சாரணியர் வகுப்பில்கூட எங்களுக்கு ஓலைப்பெட்டி செய்வது பற்றித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். இப்போகூட எனக்கு ஓலைப்பெட்டி செய்ய முடியும்னு தோணுது. மூடி போட்ட ஓலைப் பெட்டிகளில் எங்கள் சிறுவாடு காசு, க்ளிப்புகள் எல்லாம் இருக்கும். திருமணமாகி செல்லும்போது அரிசிப்பெட்டியாக  செல்வது பனை ஓலைப் பெட்டிகள்தான்.


அதே பாணியில்தான் ஓலைப் பாயும் செய்ய வேண்டும். அழகாக சுருட்டி வைத்துக் கொள்ளலாம். அழுக்காகிவிட்டால் குளத்தில் கொண்டுபோய் அலசிட்டு வந்திடுவோம். தென்னங்கீற்றுத் தட்டிகள் வெளிவாசலில் போடவும் பனை ஓலைப் பாய்கள் உள்வீட்டில் உபயோகிக்க என்றும் இருந்தன. சின்னச் சின்ன ஓலைப்பாய்கள் திருவிழா சமயங்களில் தெருக்கூத்து பார்க்கப் போகும்போது மணலில் விரிக்க வசதியாக இருக்கும். இடையில் தூக்கம் வந்தால் அதிலேயே படுத்தும் கொள்ளலாம். எங்க ஊரில் பிரபலமான நார்க் கட்டில் பனை நாரில்தான் பின்னப்படும். கால்களும் சட்டமும்கூட பனங் கம்புகள்தான். என் மகள் சிறு குழந்தையாக இருந்தபோதுகூட நார்க்கட்டிலில் படுக்க வைத்துதான் குளிப்பாட்டியிருக்கிறேன். அவள் உருவத்துக்கு ஏற்றமாதிரி மினி நார்க்கட்டிலை என் மாமனார் செய்து தந்திருந்தார்கள். நாசரேத்தில் இருந்து வேலூருக்கு லாரியில் வந்தது.


பனை ஓலையில் செய்யப்படும் ஓலைக் கொழுக்கட்டை எங்க ஊர்ப் பக்கம் ரொம்ப பிரசித்தம். சீக்கிரம் கெட்டுப் போகாது. ஓலை வாசமும் மாவு வாசமும் சேர்ந்து வரும் கலவையான மணம் சிறப்பாக இருக்கும். திடீர்னு எனக்கு ஓலைக் கொழுக்கட்டை சாப்பிடும் ஆசை வந்துவிட்டால் எழில் எங்கிருந்தாவது பனை ஓலை வெட்டிக் கொண்டுவந்து கொழுக்கட்டை செய்து தருவாங்க. செம டேஸ்ட்டாக இருக்கும். ஓலைகளை சமஅளவு கொண்டு வெட்டி ,துடைத்து, பூரம் உள்ளே வைத்து, ஆவியில் வேக வைத்து - பெரிய வேலைதான் என்றாலும் சாப்பிடும்போது சுவையோ சுவைதான்.


பனங்கருப்பட்டி பற்றி சொல்லாவிட்டால் பனை மரத்தை அவமதித்தாகி விடும். எனக்கு எப்பவுமே பிடித்தது கருப்பட்டி காஃபிதான் (கடுங்காப்பி). ஊரிலிருந்து யார் வந்தாலும் எனக்கு கருப்பட்டி வாங்கி வருவதுதான் வாடிக்கை. அதிலும் விதவிதமாக உண்டு. புட்டு கருப்பட்டி, சில்லு கருப்படி, சுக்கு கருப்பட்டி, அச்சு வெல்லம் என வித விதமாக செய்வார்கள். ஓலைப்பெட்டியில் கிடைக்கும் புட்டு கருப்பட்டி நிறைய சமயங்களில் Souvenir ஆக மாறும். பனை மேல் உள்ள பாசத்தால் அலீஸ் நிச்சயதார்த்தத்தின் போது Return Gift ஆக மூடி போட்ட ஓலைப்பெட்டிதான் கொடுத்தோம். ஊரிலிருந்து மருமகன் முத்துராமன் ஆயிரம் பெட்டிகள் முடையச் சொல்லி வாங்கி அனுப்பினான். திருமணத்தின் போது நாலாயிரம் பெட்டி தேவை என்று கேட்ட போது ஓலை பின்னும் ஆட்கள் கிடைக்கவில்லை என்று வாங்க முடியவில்லை.  


இவ்வளவு உபயோகம் தரக்கூடிய பனைமரம் ஏன் அழிக்கப்படுகிறது என்ற கேள்வி மனதுக்குள் குடைந்தாலும் , நாமும் ஒரு காரணம் என்று உள் மனது சொல்கிறது. நார்க்கட்டில் போய் தேக்கு மரக்கட்டில், ஓலைப்பெட்டி இடம் மாறி பாலிதீன் உபயோகம், ஓலை வீடு மாறி காங்கிரீட் கட்டிடங்கள் என்று நம்மை அறியாமலேயே புதினங்களுக்கு இடம் கொடுத்து நல்லவற்றை அழியச் செய்கிறோம். மறுபடியும் பனைமரத்தின் உபயோகம் மானுடத்துக்கு அமையுமா என்ற கேள்வியுடன் , ஊரில் எங்க வீட்டு புறக்கடையில் நிற்கும் ஒற்றைப் பனை மரத்தைப் பெருமூச்சுடன் பார்த்து விட்டு வந்தேன். எங்கள் தோட்டத்தில் விதைபோட்டு நாலைந்து பனை மரங்கள் வளர ஆரம்பித்திருக்கின்றன. 

பனை பொருட்களை ஆதரித்து

பனை மரம் பெருகப் பண்ணுவோம்.

Tuesday, August 08, 2023

அலை-92

 அலை-92

 “கேள்வி ஞானம்”

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு-பாடம் 

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” 

உதாரணம் காட்டச் சொன்னால் எல்லோரும் உடனே கர்ம வீரர் காமராஜர் என்று சொல்லுவாங்க. ஆனால் எனக்குத் தெரிஞ்சு முதல் மேதை எங்க அம்மாதான். கையெழுத்து கூடப் போடத் தெரியாது. ஆனால் எட்டு பிள்ளைகளைப் பெற்று பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்ததில் எங்க அம்மாவின் பங்கு மிக மிக அதிகம். வாய்ப்பாடு, கால்குலேட்டர், கம்ப்யூட்டர் என்று கணக்கு போட ஆயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் ஒரு நொடியில் மனக்கணக்காக அம்மா போடும் கணக்கு அபாரமாக இருக்கும். பொருளாதார வசதிக்கேற்ப சமையல் முதல் சடங்குகள் வரை அனைத்துக்கும் ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பாங்க.


வரவு செலவு என்பது இன்றைய பாலன்ஸ் ஷீட் மாதிரி கிடையாது, ஒவ்வொரு அசைவிலும் செயலிலும் இருக்க வேண்டும் என்பதை அம்மாவிடமிருந்து அன்றே கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆத்துலே போட்டாலும் அளந்துதான் போடணும் என்பதை அன்றே புரிய வைத்ததால்தான் ஊதாரித்தனமான செலவுகள் எங்களால் இன்றுகூட செய்ய முடிவதில்லை. ஆடி காரே வாங்க முடியுமென்றாலும் மாருதி கார் போதுமென்ற மனப்பக்குவத்தைத் தந்தது அன்றைய படிப்பு. ஐநூறு ரூபாய்க்கு மேல் புடவை எடுப்பதற்கு இன்றுவரை மனது ஒப்புவதில்லை. கஞ்சப் பிசிநாறி எஞ்சாய் பண்ணத் தெரியாதவள் என்று நெருங்கிய நண்பர்கள் கேலி பண்ணினாலும் இயல்பை மாற்ற முடிவதில்லை. 


எங்க வீட்டுக்கு யார் எந்த அகால வேளையில் வந்தாலும் முதலில் சாப்பிட வைப்பதுதான் எங்கம்மாவின் குணம். அதனால் எங்க வீட்டுக்கு மங்கம்மா சத்திரம் என்ற செல்லப் பெயர் கூட உண்டு. அந்த உணவளிக்கும் பாங்கு என் மனதிலும் ஆழப் பதிந்துவிட்டதால் இன்றுவரை ஆசிரியர் காலனியிலுள்ள எங்கள் வீடும் மினி சத்திரம்தான். எனக்கு வாய்த்தவரும் என் அம்மாவைப் போன்ற மனதுடையவர் என்பதால் விருந்தோம்பல் தடையின்றி நடக்கிறது. சாப்பிட வைப்பது அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்பவர்களும் உண்டு. விருந்துக்கு அழைத்து சாப்பிட வைப்பது வேறு எந்த நேரம் வந்தாலும் சாப்பிட வைப்பது வேறு.


அம்மாவைப் போலவே அண்ணன்மார்கள், அக்காக்கள், மதினி, தம்பி என்று ஒவ்வொருவரிடமிருந்தும் எத்தனையோ  விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ரொம்ப பார்த்துப் பார்த்து வளர்ந்தது சரக்காவும் நயினார் அண்ணனும்தான். தலைவாரி விடுவதிலிருந்து புத்தகங்கள் வாசிப்பது, சினிமாவுக்குப் போவது என்று எல்லாமே சரசக்காகூடத்தான். கடுகடு துரை அண்ணன் முதல் துறுதுறு செக்கண்ணன், சுட்டிப்பயல் நானா என எல்லோரையும் அனுசரித்துப் போகும் அக்காவின் செயல்கள் அன்று புரியவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு எல்லோரையும் அரவணைக்கும் குணம் எனக்கும் அக்காவிடமிருந்துதான் வந்திருக்கும் என்பது புரிந்தது. தமிழ் மீது மிகுந்த ஆர்வம் வந்ததற்கும் தமிழ் பண்டிதரான சரசக்காதான் முக்கிய காரணம்.


பரீட்சை எழுதிட்டு வந்ததும் அதை நயினார் அண்ணனிடம் கொடுத்து விடைகளை சரி பார்க்கும் போது எத்தனை மார்க்குகள் வரும் என்று அப்பவே தெரிந்துவிடும். மருத்துவ முதுகலை பரீட்சை வரைக்கும்கூட அந்தப் பழக்கம் தொடர்ந்தே வந்தது. அண்ணன் வெளியில் கிளம்பும் முன்பு கால்களை மிகச் சுத்தமாக துடைத்துவிட்டுதான் செருப்பு அணிவது வழக்கம். சின்ன மணல் துகள் இருந்தால்கூட மறுபடி கால்களைத் துடைப்பான். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால்தானோ என்னவோ இன்றுவரை காலில் சின்ன பிசிறு இருந்தால்கூட என்னால் செருப்பு அணிய முடிவதில்லை. எங்க எட்டுபேரில் படிக்காத மேதையாக வடிவு அக்கா இருந்தாலும் அவள் துணிமணிகளை மடித்து பெட்டியில் வைத்து எங்களுக்கு வழங்கிய பாங்குதான் இன்று என் அலமாரியின் அடுக்குகள் ஒழுங்குடன் இருக்கக் காரணம்.


எங்கள் மூத்த மதினி வீட்டு வேலைகளைச் செய்த தன்னலமற்ற பாங்கு பார்த்து வளர்ந்த எங்க வீட்டுப் பெண்களனைவரும் வாழ்க்கைப் பட்ட இடங்களில் சிறந்த மருமகள்களாக இருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதுகூட மதினி மாங்கு மாங்கென்று எங்க வீட்டு ஆட்டு உரலில் இட்லிக்கு மாவு ஆட்டிய காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. கணவரின் தம்பி தங்கைகளைத் தன் சொந்தமாகவே பாவித்து பிரதி பலன் பார்க்காமல் எங்களை வளர்த்ததால்தான் நாங்களும் போன இடத்தில் மருமகள்களாக இல்லாமல் மகளாக மாறிப் போயிருக்கிறோம். இதுபோல் எத்தனையோ பாடங்களை அப்போது உணர்ந்து கொள்ளாமல் பயின்றுவிட்டோம். இப்போது உணர்ந்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் எந்தப் புத்தகத்திலும்  எந்த பள்ளியிலும் சொல்லித் தரப் பட்டிருக்காது.


எனக்கு முன்னால் இரண்டு அண்ணன்கள் அடுத்தது தம்பி அவர்கள் மூவரின் தோழர்கள் என என்னைச் சுற்றி ஆண்கள் பட்டாளமே இருந்தது. சின்ன வயதிலிருந்து பெண் தோழியரே ரொம்பக் குறைவு. அண்ணனின் நண்பர்கள் நடத்தும் விவாதங்களின் இடையேயும் நான் இருப்பேன். நிறைய விஷயங்கள் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். ஆனாலும் நிறைய சிந்தனைக் களங்களை உருவாக்கும். “ஸ்டேஷன் பெஞ்ச்” உரையாடல்கள் அவ்வப்போது காதுகளில் விழுந்து கொண்டிருக்கும். மிசா, எமர்ஜென்சி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அடிக்கடி கடந்து செல்லும். அரசியல் நிகழ்வுகள் குறித்து விபரமாகத் தெரியாவிட்டாலும் சமகால நிகழ்வுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சம் புரியும்.   இதுபோன்ற பாடங்கள் என் நண்பர்கள் மூலமும் நிறைய கிடைத்திருக்கிறது. எனக்கு வாய்த்த நண்பர்களும் தோழியரும் என்னைப் புடம் போட்டதில் முக்கிய பங்கு வகித்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பயங்கரமாகக் கோபம் வரும். யார் என்னவென்றெல்லாம் பார்க்காமல் சண்டை போட்டுவிடுவேன். இப்பவும் அந்த குணம் முழுசாப் போயிடலை, ஆனால் கொஞ்சம் குறைந்திருக்கிறது. என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக திருத்தியதே என் தோழியர்தான். எனக்கு Intellectual ஆகப் பேசத் தெரியும் ஆனால் இங்கிதமாகப் பேசத் தெரியாது. எனது கோபத்தின் உச்ச வரம்பு என்னவென்று நண்பன் ராம்கியிடம் கேட்டால் பெரிய கதை ஒன்று சொல்லுவான். 


கல்லூரிப் பருவம் வந்த பிறகு நண்பர்களின் வட்டம் பெரிசாகிறது. ஒவ்வொருவரைப் பார்த்து அவர்களிடம் இருந்த நல்ல குணங்களைக் கடைப்பிடிக்க முயன்ற பிறகு நம் இயல்புகளும் மாற்றத்துக்குள்ளாகி சீராகும். அதனால்தான் வளர் இளம் பருவத்துக்குப் பிறகு நம்மிடையே நிறைய மாற்றங்கள் வருகிறது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ன்னு பாடிக்கிட வேண்டியதுதான்.அதிலும் காதல் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடத்தான் வேண்டும், நம் கோபம் செல்லுபடி ஆகாத ஒரே இடம் காதல் கோட்டைதான். 


குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்த படிக்காத மேதை எங்க அம்மாவுக்கு இணையாக மெத்தப் படித்த என் மாதிரி அடுத்த தலைமுறை நிமிர்ந்து நிற்கிறதா என்பது கேள்விக் குறியே. படிப்பும், பணமும், அந்தஸ்தும் மட்டுமே வாழ்க்கை முறையை நிர்ணயிப்பதில்லை. முன் ஏர் சென்ற வழியில் நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு குடும்ப உறவுகளுடன் இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. பெற்றோரை அநாதைகளாகத் தவிக்கவிடும் அயல்நாட்டு மகன்களும், அடுத்த வீட்டில் இருந்துகொண்டே பாகப்பிரிவினை செய்யும் அடுத்த தலைமுறையும் ஏட்டுக் கல்வியை மட்டுமே கற்றுக் கொண்டு தங்களை அறிவு ஜீவிகளாகப் பார்க்கிறார்கள். கேள்வி ஞானம் என்பது அவர்களைப் பொறுத்தவரை இல்லவே இல்லை. விரையமாகிக் கொண்டிருப்பது குடும்ப உறவுகள் மட்டுமே. கற்றவைகளை நாமாவது கற்பிப்போம் நம் குழந்தைகளுக்கு.


“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.”

Friday, July 21, 2023

அலை-91

 அலை-91

“வாசிப்பும் வாசகியும்”

சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நினைவு நூலகம்” திறக்கப்பட்டுள்ளது. வாசிப்பு என்பது பேப்பரில் இருந்து இணையத்திற்குத் தாவிவிட்ட பிறகு நூலகத்தின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் அதிக அளவில் பயன்பட வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. புத்தகங்களைச் சொந்தமாக வாங்கமுடியாத நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு நூலகத்தின் அருமை புரியும்.


தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசிப்பு என்பதும் ஆரம்பித்துவிட்டது. ஆரம்பப் பள்ளி நாட்களில் சந்தைக்கடை முனையிலிருக்கும் ஹோட்டலின் திண்ணைதான் எனது முதல் நூலகம். தினத்தந்தி என்ற பத்திரிகைதான் முதலில் பரிச்சயமான நாளிதழ். எல்லோரும் இலவசமாக படிக்கும் வகையில் தினத்தந்தி நாளிதழும், “ராணி” வார இதழும் ஜன்னல் கம்பிகளில் சொறுகி வைக்கப்பட்டிருக்கும். பள்ளிக்குச் செல்லும் முன்பு “சிந்துபாத்” தொடர்கதைச் சித்திரத்தைத் தவறாமல் வாசிக்கும் அளவுக்கு நிரந்தர வாசகியானது அந்த திண்ணை நூலகத்தில்தான். சிந்துபாதின் தண்ணீர்க் குடுவை ரொம்ப பிடித்த பொருள்.ராணி வார இதழில் வரும் “ குரங்கு குசலா”வுக்கு தனி இடம் மனதில் உண்டு. 


உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் வாசிப்பின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. தோழி அமராவதி வீட்டில் கிடைத்த சித்திரக் கதைகளும் அதில் வீர சாகசம் செய்யும் “இரும்புக் கை மாயாவி” போன்றவர்களும் கனவுகளில் வரும் கதாநாயகர்கள் ஆனார்கள். அப்போதைய மாயாவிதான் இப்போதைய அநிமேஷன் விளையாட்டுகளின் முன்னோடி.  ரிமோட் இல்லாமலே தாவுவதும் குதிப்பதும் சண்டையிடுவதும் அபாரமாயிருக்கும். பாக்கியம் ராமசாமியின் “அப்புசாமித் தாத்தா” சிரிக்க வைத்தபோது ஜாவர் சீத்தாராமனின் ”உடல் பொருள் ஆனந்தி” அமாநுஷ்யங்களுடன் பயம் காட்டியது. வார இதழ்களிலிருந்து பைண்டு பண்ணப்பட்ட தொடர் கதைகள் அகிலன், கல்கி, சாண்டில்யன், நா.பா., போன்ற நாவலாசிரியர்களை அறிமுகம் செய்ததோடு  இளஞ்செழியன், இதயச்சந்திரன், கருணாகரன், அநபாயன் என ஏகப்பட்ட நாயகர்களைக் கனவுலகில் சஞ்சரிக்க விட்டன. வந்தியத்தேவன் அந்தக் காலத்திலேயே எங்களைக் கொள்ளைகொண்ட நாயகன்.


சரித்திர நாவல்களுக்கு இணையாக சமூக நாவல்களின்பால் காதல்வயப்பட வைத்தது ஜெயகாந்தனின் படைப்புகள். பதின்ம வயதுகளில் படித்தபோது புரியாத நிறைய விஷயங்கள் காதல் வயப்பட்டபோது வேறு விதமாகவும், நாற்பது வயதில் இன்னுமொரு கோணத்திலும் புரிதலுக்குள்ளானது ஜெயகாந்தனின் சிந்தனைகள் செய்த ஜாலம். அந்த வயதில் புரிதல் குறைவாகவும் ஞாபக சக்தி அதிகமாகவும் இருந்ததால் அன்று படித்த புத்தகங்களின் சில மேற்கோள்கள் இன்றளவும் பசுமரத்தாணியாக மனதில் உள்ளன. காதலுக்கு முன் (கா.மு.)  காதலுக்கு பின் (கா.பி.) என்று வாசிப்பை ஈஸியாக வகைப் படுத்திவிடலாம். ஒவ்வொரு மேற்கோளும் கவிதை வரிகளும் நமக்காகவே எழுதப் பட்டவை போன்றே இருக்கும். குறிஞ்சி மலர் நாவலில் வரும் கவிதைவரிகள்  மாதிரி.

  

“கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்

தேதி குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்

சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போல 

கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக்காதல்”-

 

இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் கைவசம் உண்டு. பிடித்த நாவல்கள் மறுபடி மறுபடி வாசிக்கத் தூண்டும். காதலில் உருகிப் போகும்போதும் ஊடலில் கொதித்துப் போகும்போதும், ஏதாவது ஒரு நிகழ்வு அந்தக் கதைகளின் அத்தியாயத்தை நம்முடன் கைகோர்த்துக் கொள்ளும்.

 

வீட்டில் நாங்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் இருந்ததால் குமுதம், விகடன், கல்கி போன்ற வார இதழ்கள் வீட்டில் வாங்க ஆரம்பித்தார்கள். முன்பக்க அட்டையிலிருந்து பின்பக்கம் வரை ஒருவரிகூட விடாமல் படிக்க ஆரம்பித்தபோது சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி என பலரையும் தெரிந்து கொள்ள முடிந்தது. கைக்கூ கவிதைகளும், சிரிப்பு துணுக்குகளும் வாசிப்பை மேலும் மேலும் தூண்டியது. ஒவ்வொரு எழுத்தாளரின் நடையும் வெவ்வேறு விதமாக இருந்ததைப் புரிந்து கொள்ளும் வயதும் வந்துவிட்டது. கிடைத்ததையெல்லாம் படித்த நிலைமை மாறி, பிடித்ததை எல்லாம் தேடிப்போகும் ஆவல் கூடியது.


 “யாதுமாகி நின்றாய் காளி” என்ற சிறுகதையை ரயில் பயணத்தின் போது வாசித்துவிட்டு யாருப்பா இந்த பாலகுமாரன் என்று ஆர்வத்தோடு தேட ஆரம்பித்தபோது கிடைத்த “அகல்யா”வும்  “மெர்க்குரிப் பூக்களும்” வேறு உலகத்தைக் காட்டின. தமிழில் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் முதல் ரமணி சந்திரன் வரை பாரபட்சமின்றி வாசிப்புக்குத் தீனி போட்டு நேரங்களைக் களவாடிக் கொண்டார்கள். விவரிக்க ஆரம்பித்தால் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” சின்ன புத்தகமாகிவிடும். 


தமிழுக்கு இணையாக ஆங்கில நாவல்களும் என் வாசிப்பு வட்டத்துக்குள் அடக்கம். காண்டேகரின் “கிரெளஞ்சவதம்” பற்றி சொல்லாமல் தமிழ் லிஸ்ட் முடிவடையாது.


கல்லூரிப் படிப்பிற்கு ஆங்கிலப்புலமை அத்தியாவசியம் எனக்கருதி ஆங்கில பத்திரிகைகளைப் புரட்ட ஆரம்பித்தது செவ்வாய்க் கிழமை வரும் ஹிண்டுவின் “Know your English” பகுதி. நயினார் அண்ணன் BBA படிப்பில் ஆங்கில உச்சரிப்புகள் சம்பந்தமான துணைப்பாடம் எடுத்திருந்ததால் ஆங்கில நாவல்கள் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தன. அது போக Sherlock Homes, James Hardley Chase போன்ற துப்பறிவு நாவல்களே முதலில் பரிச்சயமாகி இருந்தது, ஏனென்றால் வாடகை நூலகங்களில் அவைதான் கிடைக்கும். ஏதோ ஒரு நாள் Harold Robbins Novel ஒன்று கிடைத்து வாசித்துக் கொண்டிருந்தபோது பாவியைப் பார்ப்பதுபோல் சில தோழியர் என்னை முறைத்துக் கொண்டிருந்தனர். புரியாத புதிருக்கு விடை சில நாட்கள் கழித்துதான் தெரிந்தது.  Harold Robbins ஆபாச எழுத்தாளராம், அவர் கதையை வாசித்ததால் நான் பாவியாகிப் போனேனாம். அட்டையில் வேறு அமெரிக்கன் ஸ்டைலில் பெண்கள் படம் இருக்கும். எதுக்கடா வம்பு என்று அதற்குப் பிறகு ஆங்கில நாவல்களுக்கு அட்டை போட்டு படிக்க ஆரம்பித்தேன். 


Sidney Sheldon என்பவரின் கதைகள் உனக்கு பிடிக்கும் என்று Rage of Angels புத்தகத்தை எபி தந்ததிலிருந்து அடுத்தடுத்து ஆங்கில நாவல்கள் மீதும் மோகம் அதிகமானது. இரவுப் பணிகள் சமயத்தில் சுப்பாராவ் சார் எனக்கும் தில்லைக்கும்  “கோமா” என்ற நாவலின் கதை பற்றி சிலாக்கியமாக சொன்னதிலிருந்து ராபின் குக் நாவல்களுக்கு அடிமையாகிப் போனேன். மருத்துவரான அவருடைய கதைகள் நிறைய மருத்துவம் சார்ந்து இருப்பதால் இன்னும் கொஞ்சம் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. அதிலும் அவரது TOXIN கதையில் மாட்டிறைச்சி பதப்படுத்துவது பற்றி தத்ரூபமாக  எழுதியிருந்ததை வாசித்த பிறகு மாமிசம் சாப்பிடுவதையே பத்து வருடங்களுக்கு மேல் நிப்பாட்டி விட்டேன். அவ்வளவு ஒன்ற வைத்துவிடும் எழுத்துநடை. Jeffery Archer, Irwing Wallace, Arthur Hailey என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகிறது. ஈரோடுக்கு வந்த பிறகுகூட நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கண் மருத்துவர் கனகசபை Pelican brief தந்த பிறகுதான் John Grisham  கதைகளே பரிச்சயமானது.


தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு எப்படியாவது போய் விடுவேன். நிறைய புத்தகங்கள் வாங்கினாலும் அதில் பாதியாவது  pirated copies ஆகத்தான் இருக்கும். அவற்றின் விலை குறைவாக இருக்கும். அப்போதான் யாராவது படிக்கக் கேட்டால் மொத்தம் மொத்தமாக குடுக்க முடியும். அடுத்த வருஷமும் அதே பிரதிகள் வாங்கிக்கலாம். படிக்க ஆசைப்படுபவர்களுக்கு புத்தகம் கொடுப்பது ஒரு சுகாநுபவம். ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ மூலமாக அதே மாதிரி புத்தகக் கண்காட்சி எங்கள் ஊரிலும் வந்துவிட்டதால் என் மினி நூலகத்தின் புத்தக எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.


வாசித்து முடிக்காத புத்தகங்களும் நிறைய இருக்கிறது. தெரிந்து கொள்ளப்படாத எழுத்தாளர்களும் நிறையபேர் இருக்கிறார்கள். வாசிப்பதும் எழுதுவதும் இலக்கு அல்ல , பயணம். தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். வாசிப்பை நேசியுங்கள்.