Thursday, April 14, 2022

அலை-68

 [4:14 pm, 14/04/2022] Nancy Jio: அலை-68

மருத்துவக் கல்லூரி படிப்பில் மிக முக்கியமானது நோயாளிகளைப் பரிசோதனை செய்து அந்த நோய் பற்றி பேராசிரியரிடம் விளக்கிச் சொல்லும் Case presentation. எத்தனை தரம் பண்ணியிருந்தாலும் ஒவ்வொரு நோயாளி பற்றி விளக்கும்போதும் நா வறண்டு , நாடித்துடிப்பு எகிறி , வேர்த்து விறுவிறுத்துப் போவது நிறைய பேருக்கு வாடிக்கை. மிகச் சிலர் மட்டுமே அதை ரசித்து செய்வார்கள். மற்றவர்களெல்லாம் கொலைக்களத்துக்குச் செல்லும் ஆடு போலவே செல்வார்கள். 


எவ்வளவு விரிவாகப் படித்திருந்தாலும் அங்கு அலசப்படும் நோயின் தன்மையிலிருந்து விலகி சம்பந்தமே இல்லாத மற்றொரு நோயின் தன்மையைக் கூட அலசமுடிகின்ற அறிவுக் களஞ்சியம் அந்த விவாத மேடை. புத்தகங்கள் சொல்லித் தராத எண்ணற்ற நுணுக்கங்களையும் அகன்ற பார்வையையும் தரும் அறிவு மேடையும்கூட.  அதில் ஒரு அங்கமாக நின்று கவனித்தாலே கற்பவை ஏராளம். விளக்கிச் சொல்பவராக மாட்டிக் கொண்டால் தலை உருளுவது நிச்சயம் என்றாலும் 

அறிவு மேம்படும் என்பது சத்தியம்.


Final year  மாணவர்கள்தான் பெரும்பாலும் விளக்கமளிப்பவர்களாக இருப்பார்கள். நாலாம் ஆண்டு மாணவர்கள் அடுத்த வருடத்துக்கான ஒத்திகையாக ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இதயத்தில் ஓட்டை, மூளையில் இரத்தக் கட்டு, நுரையீரல் அழற்சி போன்ற சொற்களெல்லாம்  Latin, Greek மாதிரி இருக்கும். அடிப்படை அறிவு கூட இல்லாத விஷயங்களைப் பற்றி விவாதம் நடக்கும் போது மந்திரிச்சுவிட்ட மாதிரியேதான் நின்னுகிட்டு இருப்போம். அதிலும் முதல் மூணு மாசங்கள் out of Focus மாதிரிதான் இருந்தது.  


எனக்கு முதலில் பொது மருத்துவ பகுதியில்தான் போஸ்ட்டிங் போட்டிருந்த மாதிரி நினைவு இருக்கிறது. அறுவை சிகிச்சை பகுதியிலாவது கண்முன்னாடி கட்டியோ குட்டியோ தெரியும், கொஞ்சமாவது புரியும். மருத்துவப் பகுதியில் எல்லாமே கற்பனைக் குதிரையில் ஏறிப் பறந்துதான் படிக்கணும். இதயத்தில் முணுமுணுப்பு கேட்குதுன்னு யாராவது சொன்னால் எல்லாருக்கும் கேக்குற மாதிரியே இருக்கும். ஸ்பீக்கர் அவுட்டான காது உள்ளவங்களுக்குக்கூட கேட்கும். பரீட்சை சமயத்தில் இந்த முணுமுணுப்புகள் எல்லாம் புயலாய் மாறி படுத்தி வைப்பது தனிக்கதை. 


சீனியர்ஸ் முழுமையாக நோய் பற்றி கண்டுபிடிச்சு சொன்னபிறகு இளையவர்களெல்லாம் கர்ம சிரத்தையோடு வரிசை கட்டி முணுமுணுப்பை ஸ்டெதாஸ்கோப் மூலம் தேடு தேடுன்னு தேடுவோம். வெறும் காத்துதான் கேக்குதுன்னு உண்மையைச் சொல்ல முடியாது. ஆமாம் கேக்குதுன்னு சொல்லிட்டு அப்பிடியே ரிவர்ஸ் எடுத்திடணும்.  நல்லா கேக்கலையேன்னு சொல்லிட்டால் தீவிரவாதியைப் பார்க்குறமாதிரி எல்லாரும் முறைப்பாங்க.


ஒருவழியாக கண்டுபிடிச்ச விஷயங்களையும் கேஸ் ஷீட்டில் எழுதியிருக்கும் விஷயங்களையும் பொருத்திப்பார்த்து நோயின் தன்மையை சீனியர் உறுதி செய்து கொள்வார். அதன் பிறகு எல்லாருமாகச் சேர்ந்து அதற்குரிய பரிசோதனைகள், பக்க விளைவுகள், மருத்துவம் எல்லாம் குறித்து விவாதிப்பார்கள். பேராசிரியர் வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.  கோட் போட்டுகிட்டு கழுத்தில் ஸ்டெத் வேறு போட்டிருக்கும்போது, கேள்விகூட கேட்காட்டி நல்லாயிருக்காதே என்று நாங்களும் எங்க பங்குக்கு நோயாளியிடம் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்போம். 


ஒவ்வொரு பேராசிரியரும் ஒவ்வொரு மாதிரி கேள்வி கேட்பார்கள். சிலர் முழு கதையையும் கேட்டுவிட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். சிலர் விளக்குபவரைப் பேசவே விடாமல் ஒவ்வொரு வாக்கியத்தையும் தடைப்படுத்தி அவ்வப்போது கேள்வி கேட்பார்கள். இன்னும் சிலர் எந்த விளக்கமும் கேட்காமல் நேராக இறுதிச் சுற்றுக்குப் போய்விடுவார்கள். எப்படி கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தயார் நிலையில் இருப்பதில்தான் எங்கள் படிப்பின் மகத்துவமே இருக்கிறது. அந்த நோயைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக விவாதமும் நடக்கலாம். எதுவுமே சொல்லாமல் அதைக் கடந்து போய் சப்பென்று ஸ்வாரஸ்யம் இல்லாமலும் முடியலாம். 


உதவிப் பேராசிரியர்களிடம் விளக்கும்போது கொஞ்சம் நிதானமாக சொல்பவர்கள் துறைத் தலைவரிடம் அதே நோயைப் பற்றி விளக்கும்போது தடுமாறுவது அடிக்கடி நடக்கும். பரீட்சையின் போது பரிசோதகராக வருபவர் என்பதால் அந்தச் சின்ன பதட்டம் எல்லோருக்குமே இருக்கும். ஆனால் அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பரீட்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால்  தலைவரிடம் விளக்கம் சொல்ல ஏகப்போட்டியாகவும் இருக்கும்.  அவரிடம் சரியாக சொல்லிவிட்டால் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய மாதிரிதான். பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் நோயாளிகள் ரொம்ப நாட்கள் அந்த வார்டில் இருப்பார்கள். அதனால் அவங்களே எங்களுக்கு டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. எந்த இடத்தில் முணுமுணுப்பு நன்றாகக் கேட்கும் என்று சொல்லும் அளவுக்கு google doctor மாதிரி இருப்பாங்க.


சீனியர்கள் திண்டாட்டம் இளையவர்கள் கொண்டாட்டம் என்று இருக்கும் சூழலில் போரடித்துக் கொண்டிருக்கும் நாங்கள் ஏதாவது குறும்பு பண்ணிக்கொண்டே இருப்போம். ஆசிரியரின் கோட் பையிலிருந்து கைக்குட்டையைத் திருடுவதிலிருந்து எதிரே விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பவரை கடுப்பேத்தும் வண்ணமாக கேலி சைகைகள் செய்வது வரை ஏதாவது செய்து கொண்டிருப்போம். என்றைக்காவது இலக்கு மாறிப்போய் எங்களை யாராவது கேள்வி கேட்டுவிட்டால்  அவ்ளோதான் செத்தாண்டா சேகர்னு மாட்டிக்குவோம். ஆண்டாண்டு காலமாக எல்லா இளையவர்களும் அப்படித்தான். 


ஆனால் ஒருதரம் எழில் விளக்கிக் கொண்டிருந்தபோது 

எதிரில் நின்றிருந்த நாங்கள் சேட்டை பண்ணியதற்காக நல்லா திட்டு வாங்கினேன். அதிலிருந்து அவங்களைப் பார்த்தாலே சிடுமூஞ்சின்னு சொல்லி விலகிப் போயிடுவோம்.


 சாயங்கால வேளைகளில் எழில், எபி, ஜியோ மூணுபேரும் பெண்கள் விடுதியின் நிரந்தர விருந்தாளிகள். கும்பலாக கிறிஸ்தவ பெண்கள் கூட்டம் அவங்களைச் சுற்றி நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். Christmas Carols அது இதுன்னு ஏதோ விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். என் வகுப்புத் தோழிகளும் அதில் உண்டு. 

அவங்ககிட்டே போய் எழிலை நல்லா திட்டியிருக்கிறேன். ”அந்தப் பையன் என்ன ரொம்பத்தான் பண்ணிக்கிறான். முட்டைக் கண்ணை வைச்சுகிட்டு முறைக்கிற வேலையெல்லாம் ஆகாதுன்னு சொல்லு” ன்னு எகிறியிருக்கிறோம். அதுக்குப் பிறகு எழில் present பண்ற அன்னைக்கு நாங்க ஆப்செண்ட் ஆயிடுவோம். அதே பிரிவில் தெய்வப்ரசாத், ஐவி அக்கா எல்லாம் இருப்பாங்க. நாங்க எல்லாம் அவங்ககூட இணக்கமாகி நல்லா ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். 


ஒவ்வொரு துறையில் மூன்றுமாதம் போஸ்ட்டிங் முடிந்ததும் யூனிட் பார்ட்டி ஒன்று நடக்கும். அந்த பிரிவின் ஆசிரியர்கள் அத்தனை நாட்களும் சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி பாராட்டும் விதமாக அதை நடத்துவார்கள். எங்களுக்குள்ளேயே பணம் பிரித்து நடத்துவோம். அருகிலுள்ள ஹோட்டலோ தொலைவிலுள்ள சுற்றுலாத் தளங்களோ வசதிக்கேற்ப ஏற்பாடு நடக்கும். அந்த முறை ஜங்ஷனில் உள்ள ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழில்தான் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தார்கள். என்னையும் கலந்து கொள்ள அழைத்தபோது நான் மறுத்துவிட்டேன். திட்டு வாங்கியிருந்ததால் இருந்த கோபம் ஒருபுறம், சரசக்காவின் கணவர் அகாலமாக இறந்து சில நாட்களே ஆகியிருந்த சோகம் மறுபுறம். அந்த யூனிட் பார்ட்டியைத் தவிர்த்துவிட்டேன்.


ஆனால் விலகிப் போகும் உறவுகள் விலகவே முடியாத பந்தங்களாவது காலத்தின் கட்டாயம் போலும். கல்லூரியின் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானபோது பெண்கள் ஷட்டில் பூப்பந்து அணிக்கு பயிற்சியாளர்களாக இந்த மூவர் அணிதான் வந்தது. எங்க வகுப்பில் நான் நளினி விஜி மூவரும் உண்டு. சில சீனியர்களும் உண்டு. தினமும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது சண்டைக்காரர்கள் சமாதானமாகி நண்பர்களாகிவிட்டோம். மாலையில் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி நடக்கும். காலை வேளைகளில் கல்லூரிக்குள் அலுவலக அறை முன்னாலிருக்கும் உட்புற மைதானத்தில் பயிற்சி நடக்கும். மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் நடை பெற இருந்ததால் தொடர் பயிற்சி நடந்துகொண்டே இருந்தது.


மூன்று பேரிலும் எழில்தான் கொஞ்சம் சீரியஸாக ரிசர்வ்டாக இருப்பாங்க. ரொம்ப பேச மாட்டாங்க. எபி , ஜியோ இருவரும் ரொம்ப இயல்பாக நட்பாக இருப்பாங்க. எபி ஒரு ஜீனியஸ். மைதானத்தில் பந்து போடுவதிலிருந்து அதை எதிர் கொள்வது வரை எல்லாத்துக்குமே ஒரு கணக்கு வைச்சிருப்பாங்க. மூவரிலும் ஜியோதான் பாஸ். நட்பிற்கு இலக்கணம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஜியோதான். எங்களது முப்பத்து நான்கு ஆண்டுகால மணவாழ்க்கையின் வலுவான அடித்தளம் அந்த நட்பினால் அமைந்தது என்றால் மிகையாகாது. 


 “A woman’s Friendship Always ends in LOVE ” – எங்கேயோ படித்தது , என் வாழ்விலும் நடந்தது.