Tuesday, October 03, 2023

அலை-99

 அலை-99

“எட்டு எட்டா மனுச வாழ்வைப் பிரிக்கணும்”
சாஸ்திரம் சம்பிரதாயங்களில் அவ்வளவா ஈடுபாடு இல்லைன்னாலும் பிடித்த விஷயங்களைத் தனக்கு உகந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வேளைகளில் சொலவடைகளும் (பழமொழிகளும் உவமானங்களும்) நம் வசப்படும். அப்படித்தான் எட்டாம் எணூள்ள ஆகஸ்ட்டு மாதமும் என் Favourite List இல் எப்போதும் இருக்கிறது.நிறைய பேருக்கு எட்டு என்ற எண் பிடிக்காது. எனக்கு ரொம்ப பிடித்த எண் அதுதான். பிறந்தநாள் டிசம்பர் எட்டு, திருமண நாள் ஏப்ரல் எட்டு, மகள் பிறந்த நாள் பதினெட்டு, மகன் பிறந்தது ஆகஸ்ட்டு ,அன்புத் தம்பி நாராயணன் எட்டாவது மேதை என்று எல்லா விஷயங்களிலும் எட்டு என்னுடன் ஒட்டிக் கொள்ளும். DGO முடித்துவிட்டு ஈரோட்டில் குடிபுகுந்ததும் 1992 இன் எட்டாவது மாசம்தான். சொல்லி வைத்ததுபோல் இந்த “அலை’’ எழுத ஆரம்பித்ததும் 2020 ஆகஸ்ட்டில்தான். இந்த வருடம் 2023 ஆகஸ்ட்டுடன் 98 பதிவுகள் எழுதி முடித்திருக்கிறேன். முன்னுரை, முடிவுரை சேர்த்து அதை 100ஆகப் பண்ணி புத்தகமாக வெளியிடலாம் என சகோதரர்கள் அறிவுரை சொன்னார்கள். அதனால்தான் இந்த முடிவுரை அலை. (முதல் பாகத்தின் முடிவுரை மட்டுமே.) நூறு என்ற கணக்கு சரியாக வேண்டுமென்று முன்னுரையும் எழுதி வைத்திருக்கிறேன்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்திருக்கேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது எழுத்தை வாசித்த, நேசித்த நண்பர்களும் உறவினர்களும் கொடுத்த உற்சாகம்தான் என்னைத் தடைபடாமல் எழுத வைத்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் உதிரிப் பூக்கள் போன்ற “அலை”கள் புத்தக வடிவில் மாலை ஆகவேண்டுமென்றால் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒருசில மாதங்கள்கூட ஆகலாம். அதுவரைக்கும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேனே, அதையெல்லாம் இடைச் சொறுகலாக இணைக்கலாமா அல்லது அடுத்த பாகத்துக்கு ஒதுக்கி வைக்கலாமா என்ற விவாதம் வந்தது. எழுதுவது என் இயல்பு . இணைப்பதும் கோர்ப்பதும் சகோதரர்கள்பாடு. ஒரு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பு பார்த்தேன். அதுவரைக்கும் , கதை எழுத முடியுமா என முயற்சித்துப் பார்க்கிறேன் என சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே விழா மலர்கள், சங்கம் சம்பந்தப்பட்ட நியூஸ் பத்திரிக்கைகள் எல்லாம் வடிவமைத்த அநுபவம் கொஞ்சம் இருப்பதால் புத்தகம் போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது.
முதன் முதலில் “அலை” எழுத ஆரம்பித்தபோது எந்த திட்டமும் கிடையாது. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததுபோல் தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன். எந்தவித நெறிமுறையோ ஒழுங்கோ கிடையாது. இயல்பாகத் தோன்றியதை எளிமையாக எழுதத் தொடங்கினேன். “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்”தான் என்பது போகப்போகத் தெரிந்தது. அடுத்து வந்த அலைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அத்தியாய அந்தஸ்து கொடுத்து தலைப்புகள் இணைத்தேன். ஒவ்வொரு தலைப்பு வைக்கும்போதும் குறுஞ்சிரிப்பு ஒன்றும் கூடவே வரும். அவ்வளவு ரசித்துக்கொண்டே தலைப்பு வைப்பேன்.பதிவுடன் சம்பந்தப்பட்டதாக நச் என்று இருக்க வேண்டும் என யோசிப்பேன். ஏதாவது உவமைகள் சொல்ல சினிமா பாடல்களோ, கவிதை வரிகளோ, திருக்குறளோ சேர்க்க முடிந்தால் அந்தப் பதிவு மிகவும் இஷ்டமானதாகிப் போகும்.
இளமைக்கால நினைவுகளைத்தான் வெகு தொலைவில் பின்னோக்கி பார்க்கவேண்டியிருந்தது. ஆனால் எழுதிக் கொண்டிருக்கும்போதே பழைய காட்சிகள் மனத்திரையில் படம்போல் ஓடும்.அவற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம். மறுபடியும் அந்த நாட்களுக்கே போய்விடமுடியாதா என ஏங்க வைத்த நாட்கள். Alzheimer மாதிரி மறதி நோய் வருவதற்குள் நினைவில் வருவதை எழுதுவோம் என கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.பறவைகள் போல் பாடித்திரிந்த காலம், படிப்பு தவிர வேறு எந்தப் பொறுப்பும் இல்லாத நாட்கள். நம்மை அடிக்கவும், அரவணைக்கவும், வழிநடத்தவும் எத்தனையோ உறவுகள். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பதுபோல் இன்னும் அதன் மிச்சங்கள் நினைவுகளில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.சுய சரிதைபோல் தோண்றக்கூடாது என்பதால் நிறைய விஷயங்களை சென்சார் செய்திருக்கிறேன். அவையெல்லாம் எங்கள் “குடும்பம்” வாட்ஸ் அப்பில் பின்னூட்டங்களாக விரிவு படுத்தப்படுகிறது.கூட்டுக் குடும்ப வாழ்வில் வளர்ந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதுமே தொடர்கதைதான்.
முதலில் பதிவில் இருந்து படிக்காமல் இடையில் படிக்க நேர்ந்தவர்களுக்கு அடிக்கடி இடறும் கதாபாத்திரங்களில் “யார் அந்த எழில்?” என்ற கேள்வி வரும். காதல் கணவரைப் பெயர் சொல்லி அழைப்பது எங்கள் காலங்களில் நாகரீகமற்றது என்றாலும் நான் முதலில் இருந்தே அப்படி கூப்பிட்டுப் பழகிவிட்டேன். நயினார் அண்ணனும் தம்பி நானாவும் சமகாலத்திய சகோதரர்கள் என்பதால் எனது அநுபவங்களில் அடிக்கடி இடறுபவர்கள். கல்லூரிக் காலமே இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருப்பதால் கல்யாணம், குழந்தைப்பேறு, அரசுப்பணி என்று ஏகப்பட்டது (மனக்)கிடப்பில் உள்ளது. வடிவேலு பாணியில் “ச்சோ இப்பவே கண்ணைக் கட்டுதே”ந்னு தோணுது.
ஒரு விஷயத்தை ஆரம்பிப்பதுதான் கஷ்டம் . காலையில் நடைப்பயிற்சி செல்வது சுலபம், ஆனால் குறித்த நேரத்துக்குத் துயில் எழுவது சிரமம். அது போல்தான், எழுத முனைவதும். என்ன எழுத வேண்டுமென்று தீர்மானித்துவிட்டால் தடையின்றி தொடரும் எழுத்துப் பணியும். இப்போது என்ன எழுதுவது எப்படித் தொடங்குவது போன்ற விஷயங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. சமகால அரசியல் தொடங்கி, நம்மைச் சுற்றி நகரும் மனிதர்கள், நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் என ஏகப்பட்ட முகாந்திரங்கள் மென்மேலும் எழுதத் தூண்டுகிறது.
மருத்துவக் கல்லூரி விஷயங்கள் எல்லோரையும் ஈர்க்குமா என்று தெரியாது. அதனால்தான் அங்கு நடந்த பொதுவான நிகழ்வுகளை மட்டும் அவ்வப்போது எழுதினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதை சொல்லும் “கனாக் காலம்” அது. வயதும் வயோதிகமும் நேரமும் இடம் கொடுத்தால் அடுத்த பதிப்பாக மருத்துவக்கல்லூரி நாட்களில் நடை பயில்கிறேன். பயணக் கட்டுரைகள் எழுதுவது சுலபமாகவும் நிறைய விஷயங்கள் பொதிந்ததாகவும் இருக்கிறது. சில சமயங்களில் ஒரு பதிவில் முடிக்க இயலாமல் போய்விடுகிறது. ஆறுமுகநேரி முதல் அமெரிக்கா வரை, திருநெல்வேலி முதல் டோக்கியோ வரை சென்று கண்டு கழித்த விஷயங்களைப் பயணக் கட்டுரைகளாக எழுதுவது எனது அடுத்த முயற்சியாக இருக்கும்.
நிறைய(ஆக்கபூர்வமான) விமர்சனங்களும் அறிவுரைகளும் நண்பர்களிடமிருந்து அவ்வப்போது வரும். அதில் ஒன்று அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்ப போட்டோ போடும்படி சிலர் கூறினார்கள். புத்தக வடிவமாக வரும்போது நிழற்படங்கள் , கேலிச்சித்திரங்கள் எல்லாம் இணைக்க உத்தேசித்திருக்கிறோம். உங்கள் சொந்த குடும்ப அநுபவங்களாக இல்லாமல் பொதுவான தளத்தில் எழுதுமாறும் கூறினார்கள். அதற்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமென்று நினைக்கிறேன். சிறுகதைகள் எழுதலாம் என்று சொன்னதையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறுகிய வாசகர் வட்டம் என்னை சிறு எழுத்தாளர் அளவுக்கு அங்கீகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பதிவுகளை நிறைய நண்பர்கள் அவர்களின் நண்பர், உறவினர் குழுமங்களுக்கு அனுப்பி என் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தியுள்ளார்கள்.
நிறையபேர் இளமைக்காலம் என் அநுபவங்களின் சாயலுடன் ஒத்துப் போவது போல் தோன்றும் போதெல்லாம் கைபேசியில் என்னை அழைத்து பேசுவதும் அவ்வப்போது நடக்கும். அறுபத்து மூன்று வருடங்கள்,கிட்டத்தட்ட 23000 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறுதுளி அளவுதான் எழுதியிருக்கிறேன். மஹாசமுத்திரம் போன்ற பரந்து கிடக்கும் வாழ்வில் சின்னஞ் சிறு அலைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன.
குழந்தை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எட்டு பருவங்களில் கடைசிக் கட்டத்தை எட்டுவதற்குள் இயன்றவரை எழுத வேண்டும், இயல்பாக எழுத வேண்டும். உங்கள் அனைவரின் வாசிப்பும் நேசிப்பும் எனக்கு ஊக்கம் அளிக்கட்டும்.
முதல் பாகத்தின் முடிவு செய்யும் இந்த அலை அடுத்த பாகத்தின் முதல் அலையாகட்டும்.
என்றென்றும் அன்புடன்
தாணு.

அலை-98

 அலை-98

“தண்ணீர் தண்ணீர்”
இப்படி அலையப்போகும் நாட்கள் அருகில் வந்துவிட்டதோ என்ற அச்சம் மனதுக்குள் இருக்கிறது. “தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்கக்கூடாது” என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறை எங்களுடையது. காசு நீட்டினால் பாட்டிலில் தண்ணீர்; அதையும் பாதி குடித்துவிட்டு மீதியைத் தூக்கி எறிந்துவிட்டுப் போகும் இன்றைய தலைமுறைக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை. ஆடம்பர விழாக்களில் அரைகுறையாக காலிபண்ணப்பட்டு அநாதையாக நின்று கொண்டிருக்கும் தண்ணீர் பாட்டில்களே அதற்கு சாட்சி. பழைய சம்பிரதாயப்படி குவளையில் மொண்டு தம்ளரில் ஊற்றுவது பரவாயில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. மலைபோல் குவியும் ப்ளாஸ்டிக் கழிவும் குறையும்.
தண்ணீர் சிக்கனம் என்பது எங்களுக்கெல்லாம் பால பாடம். ஊர் மொத்தத்துக்கும் தண்ணீர் சப்ளை செய்வது தெருக்குழாய்களில் வரும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர்தான். அதுவும் தினசரி வராது. பருவநிலை மாறுதலுக்கேற்ப இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவது வாரம் ஒருமுறை கூட வரலாம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் பணம் கட்டி வீட்டுக்குள் தனி குழாய் அமைத்துக் கொள்வார்கள். தங்கள் தேவைக்கு மேலே வரும் நீரை காசுக்கு தரும் பழக்கம் அப்போதிலிருந்தே இருக்கிறது. எங்க வீட்டு ஜனத்தொகைக்கு தெருக்குழாய் தண்ணீர் மட்டும் போதாது என்பதால் நாங்களும் விலைகொடுத்து வாங்கிக் கொள்ளுவோம். எட்டு குடம், பத்து குடம் என்று எண்ணிக்கைக்கு ஏற்ப விலை உண்டு.பள்ளிக்கூடம் செல்லும் முன்பு தண்ணீர் எடுத்துவைத்துவிட்டுப் போவது எனது பொறுப்பு.
சினிமாக்களில் வருவதுபோன்ற குழாயடிச் சண்டைகள் தெருக் குழாய்களில் சர்வ சாதாரணமாக நடக்கும். தண்ணீர் முறை வரும் நாட்களில் காலையிலிருந்தே குடங்கள் வரிசை கட்டிக் கொள்ளும். கொஞ்சம் அடாவடி கோஷ்டிகள் இடையில் குடங்களைக் கொண்டு சொறுகும்போது வாய்ச் சண்டை கைகலப்பாகவும் முடியும். தாராளமாய் தண்ணீர் கிடைக்கும் நாட்களில் ரெண்டுபேர் relay race மாதிரி எதிரெதிரே ஓடி ஓடி நிறைய குடத்தில் பிடிப்போம். மழைக்காலங்களில் தண்ணீர் சேறு கலந்து வரும்,வறட்சி காலங்களில் குப்பை சேர்ந்து வரும். அதையெல்லாம் வடிகட்ட வேஷ்டித் துணிகள் எல்லோரின் இடுப்பிலும் தொங்கிக் கொண்டிருக்கும்.
பருவமழை காலங்களில் காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கத் தண்ணீரில் குளோரின் கலந்து வரும்.அப்போதெல்லாம் உடனே பயன்படுத்த முடியாது என்பதால் சேகரித்து வைக்க நிறைய பாத்திரங்கள் தேவைப்படும். அதற்கும் விதவிதமான பாத்திரங்கள் இருக்கும். குடி தண்ணீருக்கு மண்பானை, சமையலுக்கு வெண்கலப் பாத்திரங்கள், குளிக்க சிமெண்ட் தொட்டிகள் என எல்லாமே இயற்கையோடு இயைந்து இருக்கும். ப்ளாஸ்டிக் குடம், பக்கெட் எதுவும் அப்போது கிடையாது. சில்வர் அல்லது பித்தளைக் குடம், இரும்பு வாளி அல்லது தகர டின்கள்தான் உண்டு.
எங்க ஊர் கடற்கரைக்கு மிக அருகில் உள்ள ஊர் என்பதால் ஆழ்குழாய் போர்வெல்கள் கிடையாது. போர் போட்டால் கடல் தண்ணீர்தான் வரும் என்பதால் ஆழமில்லாத கிணறுகள்தான் இருக்கும். அநேகமாக வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். வீட்டிலுள்ளவர்களே கிணறு தோண்டிக் கொள்ளும் வகையில் உதிரி மணல்பாங்கான தரை இருக்கும். Shallow well என்று சொல்லுவார்கள். தண்ணீர் இறைக்க இறைக்க மெதுவாக ஊறிக்கொண்டே இருக்கும். எப்போதாவது கிணறு தூர் வாருவதுகூட நாங்களே செய்து கொள்ளுவோம். கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும். ஒருசில கிணறுகளில் மட்டும் நல்ல தண்ணீர் வரும். அதுமாதிரி கிணறு ஒன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு அருகில் உண்டு. ஒரு குடம் தண்ணீர் எடுப்பதற்கே எங்க வீட்டிலிருந்து இரண்டு கி.மீ.க்குமேல் நடக்க வேண்டும். அங்கும் பெரிய வரிசை இருக்கும். ஊற ஊற தான் இறைக்க வேண்டியிருக்கும். நான் சொல்லும் இடங்களெல்லாம் ராஜஸ்தான் பாலைவனத்து ஊர்கள் இல்லை, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள்தான்.
உப்புத் தண்ணீரில் தலைக்குக் குளிக்க முடியாது என்பதால் குளிப்பதற்கும் சேர்த்து தண்ணீர் பிடித்து வைக்கவேண்டியிருக்கும். அண்ணன்கள் கிணறுகளை நாடிச் சென்றுவிடுவார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்துவதற்கு அட்டகாசமான ஏற்பாடு இருக்கும். ஏற்றம் இறைக்க பயன்படுவதுபோல் கனமான கம்பின் ஒரு முனையில் பெரிய பாறாங்கல் கட்டியிருக்கும். மறுமுனையில் மெலிந்த நீளமான மூங்கில் அல்லது சவுக்கு கம்பு கட்டப்பட்டு அதன் நுனியில் பக்கெட் கட்டி வைச்சிருப்பாங்க. அதை ஒரு பெரிய தூண் மாதிரி மரத்துடன் இணைத்திருப்பாங்க. கொஞ்சம் பலத்துடன் மூங்கிலைக் கீழிறக்கி தண்ணீர் மொண்டு லேசாகத் தூக்கினல் போதும் பின்பாரத்தின் துணையுடன் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் ஈஸியாக இறைத்துக் கொள்ளலாம். இதைத்தான் துலாக்கிணறுன்னு சொல்லுவாங்க. அவ்வப்போது ஊறிக் கொண்டே இருப்பதால் மார்கழி மாதக் குளிரில் கூட தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். சேர்து வைத்து மொத்த துணிகளும் துவைக்க , லீவு நாளில் குளிக்க பண்டாரங்குளம், குதிரைக்காரன் குண்டு, நல்லூர் குளம் என ரெண்டு மூணு குளங்கள் உண்டு. நீச்சல் பழகியதும், துண்டு விரித்து மீன் பிடிக்கக் கற்றுக் கொண்டதும் அங்கேதான். ஊருக்கு வெளிப்புறமாக இருப்பதால் தினசரி செல்வது முடியாது.
தண்ணீர் பிரச்னை என்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைதான் இன்னும் இருக்கிறது என்பதைப் போனவாரம் ஆறுமுகநேரியில் அண்ணன் வீட்டிற்குச் சென்றபோது கண்கூடாகப் பார்த்தேன். இருள்விலகாத காலை நேரத்தில் முனிசிபாலிட்டி குழாய்களில் தண்ணீர் திறந்துவிட்டிருந்ததால் அத்தை, மதினி எல்லோரும் சுறுசுறுப்பாகக் குடங்களுடன் ஓடிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் வீட்டில் சொந்த குழாய் பதிக்கப்பட்டிருந்தாலும், தண்ணீரை எடுத்து அண்டா, குடங்கள், பாத்திரம், பக்கெட் என எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்டிருந்தான். வழியனுப்ப சென்றிருந்த எங்களுக்குக் காஃபி போடக் கூட அபுதாபியிலிருந்து வந்திருந்த மருமகள்தான் எழுந்து வர வேண்டியிருந்தது. தாமிரபரணி நதியின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் அடுத்து எத்தனை நாள் கழித்து தண்ணீர் வருமோ என்று தெரியாததால் அத்தனை வேலை.கிராமங்களில் ப்ளாஸ்டிக் கேன் தண்ணீர் பயன்பாடு அவ்வளவு அதிகமாக இல்லை என்பதால் இந்த முயற்சி. ஈரோட்டில் என்றைக்கு கார்ப்பரேஷன் தண்ணீர் வருகிறது என்றே நமக்குத் தெரிவதில்லை.
ஊரைப்பிரிந்து வந்து நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டாலும் தண்ணீர் பற்றிய உணர்வு ஆழ்மனதில் பதிந்து கிடப்பதால் இன்றுவரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வீணாக்க மனசு வருவதில்லை. பாதி குடித்த பாட்டில்களில் உள்ள தண்ணீர் கைகழுவ, காய்கறி கழுவ உபயோகமாகும். RO machine இல் இருந்து வரும் உபரி நீர் பாத்திரம் கழுவ எப்போதும் இரண்டு பாத்திரங்களில் உட்கார்ந்திருக்கும். அரிசி களையும் தண்ணீர், சமையலில் வெளியேறும் கழிவு திரவங்கள் எல்லாம் கழனித் தொட்டியில் சேகரிக்கப்பட்டு செடிக்கு ஊற்றப்படும். இதெல்லாம் நான் மட்டும் செய்வதில்லை. எங்கள் வீட்டில் வேலைக்கு வருபவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முதல் பயிற்சி.
குழாயைத் திறந்தால் தண்ணீர் வெள்ளம் போல் கொட்டினாலும் ஒரு பக்கெட் தண்ணீருக்குமேல் குளிக்க செலவழிப்பது இல்லை. “நல்ல உடம்புக்கு நாழி தண்ணீர்”ன்னு பெரியவங்க அடிக்கடி சொல்றது பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துவிட்டது.
மண்பானைத் தண்ணீர் குடித்த போது வராத உபாதைகளும் நோய்களும் பாட்டில் தண்ணீருக்கு மாறியபின் அதிகமாகியிருக்கிறது. நாவின் சுவை அரும்புகளை மலரவிடுவதற்காக நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் பெரும்பாலான தாது உப்புக்களும் நீக்கப்படுவதால் நிறைய நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. எண்பது வயதில்கூட எங்க ஆச்சிக்கு வராத உடல் சோர்வு அறுபதுகளில் என்னை ஒத்தவர்களுக்கு ஏற்படுவது தாது உப்பு குறைபாடுகளால்தான். உடம்பின் 75% தண்ணீர்தான்; உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். ஆனால் தண்ணீரின் அருமை தெரியாமல் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.
தண்ணீரை நேசிப்போம்
தனிநபராய் சேமிப்போம்.

Like
Comment
Share