Sunday, May 28, 2006

கடப்பாரை- காக்கைக் கம்பி

ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு என்ன விஷயம் பத்தி எழுத ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கும்போதே, நம்ம துளசி ஒரு லீட் கொடுத்திட்டாங்க. `கடப்பாரை’ பத்தி கேட்டிருந்தாங்க. அது பத்தி ஒரு ஜோக் நினைப்பு வந்ததும் அதையே மறுபிரவேசப் பதிவாக்கிவிட்டேன்.

எங்க அண்ணனோட பள்ளிப் பருவத்து ஜோக் இது. அந்தக் காலத்திலெல்லாம் வகுப்பில் பெயர் கிரமமாக உக்கார வைக்க மாட்டாங்க, உயரப்படிதான் உக்காரணும். முதல் வரிசையில் என் அண்ணனும் அவன் தோழர்கள் நால்வரும் உக்கார்ந்திருப்பாங்க. அதில் மோகன் என்று ஒரு அண்ணன், கேரள நண்பர். அவரது தமிழ் கேட்கவே ரொம்ப காமெடியாக இருக்கும், அத்துடன் அவர் ரொம்ப அப்பாவி வேறு. மத்த நாலு வாண்டுகள் என்ன சொன்னாலும் அதை கர்ம சிரத்தையாக நம்பிவிடுபவர்.

ஒருநாள் ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது `CROW-BAR’( அதாங்க நம்ம துளசி கேட்ட கடப்பாரை) என்றால் என்னன்னு கேடிருக்கார். முதல் வரிசை அளுங்க யாருக்கும் தெரியலை, ஆனாலும் தப்பா சொல்லி மாட்ட மொகன் அண்ணாவை ஒப்பேத்திட்டாங்க. அவரிடம் இவங்க நாலுபேரும் சீரியஸாக விவாதிக்கின்றனர்.
`டேய் மோகா! CROW –ன்னா என்னடா?’
அவங்களும் பயபக்தியுடன் `காக்கை’ என்று பதில் சொல்றாங்க.
`BAR’ –ன்னா என்னடா?’
பதில் பளீர்னு வருது இந்த அப்பாவியிடம் இருந்து `கம்பி
`அப்போ CROW-BAR ன்னா ``காக்கைக் கம்பி” தானேன்னு முடிச்சிட்டாங்க.
பதில் தெரிந்த சந்தோஷத்தில் வேகமா எழுந்து `சார், நான் சொல்றேன்’ன்னு வாத்தியாரைக் கூப்பிட்டாச்சு. வேறு யாருக்கோ பூஜை பண்ணிக் கொண்டிருந்த ஆசிரியர் இவங்க பக்கம் வந்து `சொல்லு’ ன்னு கேட்கிறார்.
மொத்த வகுப்பையும் ஒருதரம் ஹீரோ மாதிரி சுத்திப் பார்த்துட்டு `காக்கைக் கம்பி’ ன்னு சத்தமா சொல்லிட்டு வாத்தியாரின் பாராட்டுதலுக்காக காத்திருக்கிறார். ஆசிரியருக்கு ஒண்ணும் புரியலை. `என்னடா சொல்றே’ன்னு கேட்கிறார். அப்போ கூட சுதாரிச்சுக்கத் தெரியாத அப்பாவித் தனத்துடன் ஆங்கிலத்துக்கு மிகச் சரியான தமிழ் அர்த்தம் விளக்குகிறார் அண்ணா.
அடுத்த நொடியில் படபடவென்று சத்தம். பாராட்டுக்களுடன் வந்த கைதட்டல்கள் அல்ல. சரமாரியாக முதுகில் விழுந்த அடி. ஏவி விட்ட நால்வர் அணி பரிதாபமாக பயந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அடி வாங்கிய ஏமாளியை சாயங்காலமே சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போய் ஐஸ் வச்சி சரி பண்ணியது தனிக்கதை.

(அப்பாடி பதிவு ஒண்ணு போட்டாச்சு- மக்கள் நம்மளை மறந்திடக் கூடாதில்லே)