Thursday, January 23, 2025

அலை அலை-9

 அலை அலை-9

ஒடிஸாவுக்கு ஓடிவா-2ஆம் பகுதி


புவனேஷ்வரில் டிசம்பர் மாத குளிர் கடுமையாக இருக்கும் என்று நினைத்து ஸ்வெட்டர் scarf எல்லாம் பெட்டியில் அடைத்து வைத்திருந்தோம். ஆனால் வெயில் நம்ம ஊர் மாதிரியே இருந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். வித விதமாக உடைகள் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம் என சந்தோஷப் பட்டுக் கொண்டோம். ரயில் பயணத்தின் போதே க்ரூப்பில் எல்லோரும் ஒருவருகொருவர் பரிச்சியம் ஆகிவிட்டதால் யாரையும் தனிப்பட கவனிக்க வேண்டிய அவசியமின்றி இணைந்த கரங்களுடன் இனிதே பயணம் தொடங்கியது.


புவனேஷ்வரில் முதலில் பார்த்தது லிங்கராஜா கோவில். மிகவும் புரதானமான கோவில். கட்டிடக் கலைக்கு சான்றாகவும் ஆன்மீகத்தின் அங்கமாகவும் அட்டகாசமாக இருந்தது. கலிங்க கோபுரங்கள் கூம்பு வடிவில் உயரமாக இருந்தன.ஆனால் சாமி தரிசனம்தான்  காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஒரே மாதிரி இருக்கிறது. ஒழுங்கற்ற வரிசைகள், பக்தியை வியாபாரமாக்கும் புரோக்கர்கள், எதற்கு முண்டியடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாத பக்தர்கள், சாமியை மறைத்துக் கொண்டு அர்ச்சனைத் தட்டில் விழும் காணிக்கைகளையே குறி வைத்திருக்கும் அர்ச்சகர்கள் என சலிப்புற வைக்கும் காட்சிகள். ஆனாலும் அத்தனை அசெளகரியங்களிலும் உண்மையான பக்தியுடன் வணங்கி வழிபட்ட பக்தர்களின் பொறுமை பாராட்டப்பட வேண்டியது. எங்களுடன் வந்த guide ஒழுங்காக ஸ்தல புராணம் சொன்னாரோ இல்லையோ ஜெயந்தி தீர்க்கமாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தாள். பிற மதத்தவர்கள் கோவிலுக்குள் வர தடை என்று சொல்லியிருந்ததால் எனக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கப்பட்டு நான்சி என்ற பெயரை உச்சரிக்காமல் தாணு என எல்லோரும் கூப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டது. எனக்கு இவற்றிலெல்லாம் உடன்பாடும் இல்லை ஆட்சேபனையும் இல்லை. ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தேன். SLR Camera சகிதமாக எங்களை அழகாக போட்டோ எடுக்க ஜெயாவின் கணவர் பாபா தயாராக இருந்ததால் ஓடி ஓடி போஸ் கொடுத்துக் கொண்டோம்.


புவனேஷ்வரிலிருந்து பூரி செல்லும் வழியில் அமைந்துள்ள இடங்களைப் பார்த்துவிட்டு இரவு தங்குவதற்குப் பூரி செல்ல வேண்டும். அடுத்ததாக சென்ற இடம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தெளலி மலை. கலிங்கத்து போரில் வெற்றி வாகை சூடிய சக்க்ரவர்த்தி  அசோகர் மனம் திரும்பி பெளத்த மதத்தைத் தழுவிய இடம். அதைப் பறை சாற்றும் விதமாக அசோகரின் கல்வெட்டு அந்த மலையில் அமைந்திருக்கிறது. பாறையைப் பிளந்துகொண்டு யானை முகம் வெளிவருவதுபோன்ற சிற்பத்தின் அடியில் பிராகிருத மொழியில் செதுக்கப்பட்ட கல்வெட்டு சரித்திர சான்றாக நிற்கிறது. யானை முகத்தை சுற்றி நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். நல்ல வேளையாகக் கலிங்கத்துப் போரின் கூக்குரல்கள் காதில் ஒலிப்பது போல் தோன்றவில்லை. அதை ஒட்டிய பகுதிகளில் சமாதானத்தைப் பறைசாற்றும் விதமாக சாந்தி ஸ்தூபி, அசோக ஸ்தம்பம்,புத்த விஹாரங்கள் என அமைதியான சூழல் உலவுகிறது. மறு புறம் கலிங்கத்துப் போரில் இரத்த ஆறாக ஓடிய தயா நதி இதுதானா என ஆச்சரியப்படும் விதமாக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த இடங்களைப் பார்வையிட பார்க்கிங் இடதிலிருந்து குறைந்த  வாடகைக்கு ஆட்டோ  கிடைக்கிறது. 


பக்தியும் சரித்திரமும் படுத்திய பாட்டில் நேராக மதிய உணவில் பாய்ந்துவிட்டோம். உண்ட மயக்கம் தீரும் முன்பே பிபிலி என்ற கிராமத்திற்கு சென்றோம். அப்ளிக் கைவினைப் பொருட்கள் செய்வதில் பிரசித்தி பெற்ற இடம். பெரிய துணியில் பல வண்ணங்களில் சிறு சிறு துணிகளும் கண்ணாடிகளும் பதித்து பைகள்,சேலை,சுடிதார், விளக்கு என பலதரப்பட்ட பொருள்கள் செய்கிறார்கள். பொருட்காட்சிகளில் அப்பொருட்களுக்கு ஒட்டப்படும் விலையுடன் அங்கு சொல்லப்பட்ட விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு இடைத் தரகர்கள் செழிப்பது நன்கு புரிந்தது. சுற்றுலா செல்லும்போது ஷாப்பிங் போகக்கூடாது என முடிவெடுத்து இருந்ததையும் மீறி நிறைய பொருட்கள் வாங்கினேன். 


ஒடிஸாவின் பாரம்பரிய நடனத்தை கிராம அளவில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பூரிக்குக் கொஞ்சம் முன்னதாக ஒரு வீடு போன்ற இடத்தில் கைடு ஏற்பாடு செய்திருந்தார். வேன் போகமுடியாத இடைஞ்சல் நிறைந்த சந்துக்குள் போய் இருட்டடித்த குறுகலான படிகளில் ஏறி வெராண்டா போன்ற இடத்தில் அமர வைத்த போது எல்லோரும் சேர்ந்து என்னை உதைக்கப் போறாங்கன்னு கொஞ்சம் கிலியாகத்தான் இருந்தது. ஆனால் ஆட்டம் ஆரம்பித்ததும் எல்லோருமே மெய் மறந்து போனோம்.முன் காலத்தில் பெண்களை நாட்டியம் ஆட விடமாட்டார்களாம்.அதனால் ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடுவார்களாம். அதை இன்னும் கிராமங்களில் கடைப் பிடிக்கிறார்கள். 4 முதல் 12 வயதுவரையுள்ள ஆண் குழம்தைகள் ஆடுகிறார்கள். எங்கள் முன் ஆடிய க்ரூப்பில் ஒருவரைக் கூட எங்களால் ஆண்பிள்ளையாகப் பார்க்க முடியவில்லை, அத்தனை நளினமும் பாவனைகளும். உடல் வளைவும் நெளிவும் அபாரம். 14 வயதுக்குப் பிறகு நடன ஆசிரியர்கள் ஆகி விடுகிறார்கள் .பொருளாதார முன்னேற்றமில்லாத அவர்களின் வாழ்க்கைச் சூழல் எங்களைக் கலங்க வைத்ததும் உண்மை. பூரியில் Navy யின் கண்காட்சி நடந்து கொண்டிருந்ததால் வண்டி நிறுத்துவதில் குழப்பம் ஏற்பட்டு ஹோட்டலுக்காக கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை பூரி ஜெகனாதர் ஆலயத்திற்குப் போக வேண்டியிருந்ததால் எல்லோரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம்.


பிரசித்தி பெற்ற பூரி ஜெகனாதர் ஆலய தரிசனத்துக்கு அதிகாலையிலேயே போய் க்யூவில் நின்று கூட்டத்தில் இடி பட்டு மூச்சு வாங்கி ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. சரசக்கா கூட்டத்தில் மாட்டி கீழே விழுவதுபோல் ஆனபோது செக்கண்ணனும் முத்துராமனும் ஓடிப்போய் பாதுகாத்து விட்டார்கள். நாங்கள் திரும்பி வரும்போது பார்த்தால் கூட்டமும் இல்லை நெரிசலும் இல்லை. அதிகாலை பூஜை பார்க்கணும் என்று யரோ சொன்னதைக் கேட்டதால் சிக்கிரமே வந்தது எங்க தப்பு.ஆனாலும் எங்க ப்ரோகிராம் tightஆக இருந்ததால் காலையில் போனதே நல்லதுன்னு நெனைச்சுகிட்டோம். அடுத்தடுத்து அநுமார் கோவில், காளி கோவில் எல்லாம் பார்த்துட்டு கோனார்க் போயிட்டோம்.மணல் சிற்ப கண்காட்சி ஆரம்பமாகவில்லை. அதனால் கோனார்க் சூரிய பகவான் கோவிலை சுற்றிப் பார்த்தோம். கல்லில் கட்டப்பட்ட தேர் வடிவ கோவில். மிக நுட்பமாக் செதுக்கப்பட்ட கடவுள்கள், நடன மங்கையர், விலங்குகள்,பாலியல் விளையாட்டுகளைக் காட்டும் சிற்பங்கள் அனைத்தும் உண்டு.சூரிய பகவானை சிருஷ்டி தேவனாக பாவித்து பாலியல் சிற்பங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. 12 ஜோடி பிரம்மாண்டமான சக்கரங்களும் எட்டு குதிரைகளும் தேரை இழுப்பதுபோல் அமைக்கப் பட்டுள்ளது. சக்கரங்கள் 12 மாதங்களைக் குறிக்கின்றன. சக்கரத்தின் உள் பக்கம் எட்டு spokesகளுடன் நாள் கணக்கு சொல்கிறது. “கல்லின் மொழி மனிதனின் மொழியைத் தாண்டிச் செல்கிறது”என இரவீந்திரநாத் தாகூரால் பாராட்டப் பெற்ற கோவில்.இந்த சக்கரம் புதிய பத்து ரூபாய் தாளில் அச்சிடப்பட்டுள்ளது.கோவிலின் பல பகுதிகள் இடிந்துவிட்டாலும்  கோவில் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறது.


வருடம் தோறும் டிசம்பர் 1-5 தேதிக்ச்ளில் நடைபெறும் மணல் சிற்பங்களின் கண்காட்சி மாலை 4 மணிக்கு ஆரம்பித்தார்கள். முதல் ஆட்களாக உள்ளே நுழைந்து இருள் கவியும் வரை திகட்டத் திகட்ட பார்த்து ரசித்தோம். கண்முன்னே மணல் குவியலாக இருந்தது கண் மூக்கு வாய் என உருவானதும் மலை குகை என்று செதுக்கப்பட்டதும் பாம்பாகவும் சிங்கமாகவும் சீறிப் பாய்ந்ததும் வார்த்தையில் விளக்க முடியாத மாயாஜாலம். டூர் ஏற்பாடு செய்ததன் முழுப் பயனையும் அடைந்தோம். இரவு கவிழ்ந்ததும் கோனார்க் கோவிலின் பின்னணியில் நடந்த நடனவிழா முத்தாய்ப்பாகக் கண்களுக்கு விருந்தாகியது. 


மறுநாள் சிலிக்கா ஏரி போகும்போது பஸ்ஸில் நடத்திய (Dumb-Sharads) “ஊமை வேடங்கள்” எல்லாரையும் ஆடவும் பாடவும் அபிநயம் பிடிக்கவும் வைத்தன. “ஒவ்வொரு பூக்களுமே” பாடலை சரசக்கா சுருதி பிசகாமல் அற்புதமாகப் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றாள். 74 வயதில் அப்படிப் பாடுவது பெரிய விஷயம்.ஏரியில் பறவைகளூக்கு கார்ன் ப்ளேக்ஸ் போட்டு டால்பின் குதிப்பதைப் பார்த்து டைட்டானிக் ரேஞ்சுக்கு புகைப்படங்கள் எடுத்து ரசித்தாலும் அங்கே நடந்த பாட்டுக் கச்சேரிதான் ரொம்ப சூப்பர். எல்லோரையும் பாட வைத்த பாபா சார்தான் எங்கள் க்ரூப்பின் விழா மாஸ்டர். நந்தன்கனன் மிருகக் காட்சி சாலையையும் விட்டு வைக்கலை,எட்டிப் பார்த்துட்டோம். Safari van இருக்குன்னு சொன்னதால்தான் போகவே செஞ்சோம். வெள்ளை புலி, உள்ளங்கை அளவில் வித விதமான குரங்குகள் எல்லாம் நல்லாவே இருந்துச்சு. செயற்கையாக உருவாக்கப்பட்ட Zoo என்றாலும் பார்க்க நன்றாகவே இருந்தது.


பார்த்தவை ஏராளம் என்றாலும் பகிர்ந்தவை மிக சொற்பம். ஒரிஸாவை தீர்த்த யாத்திரை ஆக்காமல் சிறந்த சுற்றுலாவாக மாற்றிய க்ரூப் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அலை அலை-8

 அலை அலை-8

ஒடிஸாவுக்கு ஓடிவா!
முருகர் உலகமெல்லாம் மயில் ஏறி சுற்றி வந்தாலும் அப்பா அம்மாவைச் சுற்றிய விநாயகருக்குத்தான் பழம் கிடைத்தது. அது போலத்தான் உலகமெல்லாம் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருந்தாலும் குடும்பத்துடன் ஒடிஸா சென்று வந்தது வித்தியாசமான அநுபவம், மனம்நிறை நினைவுகள். 20 வருடங்களுக்கு முன் 60 பேர் கொண்ட கும்பலாக குடும்ப சுற்றுலா ஊட்டிக்கு சென்று வந்தது பின்பக்கத்தின் பளீரொளி(FLASK-BACK)யாக நினைவு வந்தது. இந்த முறை வித்தியாசமாக நீண்ட புகைவண்டிப் பயணம் செல்லலாம் என யோசித்தபோது நயினார் அண்ணன் கூட்டிச் சென்ற சிக்கிம் , டார்ஜிலிங் பயண நினைவுகள் அதை ஊக்கப்படுத்தியது.
முன்பு இதேபோல் யோசித்து ஹைதராபாத் போகலாம் என்று முயற்சி செய்தபோது கொரோனா சதி செய்து முட்டுக்கட்டை போட்டு விட்டது.டெல்லி,ஆக்ரா நிறையபேர் பார்த்திருப்பாங்க. அதனால் ஒடிஸா போகலாம்னு முடிவு பண்ணினேன். ஆனால் எங்கெங்கு காணினும் கோவில்களே தெரிந்தது. தீர்த்த யாத்திரை மாதிரி ஆகிவிடுமோன்னு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
டிசம்பர் 1-5 ஆம் தேதிகளில் மணல் சிற்பங்களின் கண்காட்சி (International Sand-Art Festival) மற்றும் கோனார்க் டான்ஸ் Festival நடைபெறுவது வழக்கம் என தெரிந்தது. அத்துடன் பூரி ஜெகனாதர் கோவில், கோனார்க் சூரிய பகவான் கோவில் எல்லாம் மிகச் சிறப்பு வாய்ந்த இடங்களாகவும் தெரிந்தது. எப்பவும் போலவே GT Holidays இல் பேசி எடுத்து மிகக் குறைந்த package இல் (Chennai to chennai all inclusive 21000/-) FIX பண்ணி குடும்பம் க்ரூப்பில் இதைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே சரசு அக்கா, சிவகாமிநாதன் அண்ணன், நயினார் அண்ணன், தம்பி நானா என நாங்கள் ஐவரும் சேர்ந்துவிட்டோம். பெரியண்ணனின் மகன் முத்துராமன், மருமகன் முருகன், சோம்ஸ் அங்கிள் ,நானாவின் சம்பந்தி பாலு,விஜி என 15 பேர் ரெடியாகிவிட்டோம். தற்செயலாக வகுப்புத் தோழர் ஆண்ட்ரூ வீட்டு கல்யாணத்தில் இதைப் பற்றிப் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேர் இணைந்து 25 பேர் கொண்ட க்ரூப்பாக மாறிவிட்டது. புகைவண்டியின் முன் பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே செய்ய வேண்டியிருந்ததால் அனைவருக்கும் ஆகஸ்ட்டு மாதத்திலேயே பதிவு பண்ணியாச்சு. வர முடியாதவர்களுக்கு பின்னாடி கேன்சல் பண்ணிக் கொள்ளலாம் என்று ஏற்பாடு.
பிரயாணம் கிளம்பும் வரைக்குமே ஒரே நெகடிவ் கருத்துகள்தான். ஒடிஸாவில் அந்த சமயத்தில்தான் புயல் சூறாவளி எல்லாம் வரும், ”அன்பே சிவம்” படம் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் மிதக்கப் போகுது, பேருந்து கூரைமேல்தான் ஏறி வரணும் எண்று ஏக விமரிசனங்கள். சரசக்கா (74 வயது) வேறே ஏற்கனவே ஆஸ்த்துமா நோயாளி , சரிப்பட்டு வராது வேறு மாசத்தில் போகலாம்னு சிலர்; 20 மணிநேரத்துக்கும் அதிகமான ரயில் பயணம் உடம்பு தாங்காது விமானத்தில் போகலாம்னு இன்னும் சிலர்; ஒரே கோயிலா பார்க்கணும்னா கும்பகோணம் போனால் போதுமே எதுக்கு இவ்ளோ தூரம் போகணும்னு சிலர்; இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள். ஆனாலும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். டிசம்பரில்தான் மணல் சிற்பங்கள் கண்காட்சி ஆண்டுதோறும் நடக்கிறது,புயல் வரும் என்றால் தொடர்ந்து நடத்துவாங்களா?அக்காவுக்கு தொந்தரவு வராதவாறு மருத்துவ உதவிகள் செய்து கொள்ளலாம், க்ரூப்பில் ஆறுக்கும் மேற் பட்ட மருத்துவர்கள் உண்டு;ரயில் பயணத்தின் சந்தோஷத்தை அநுபவிக்கத்தான் இந்தப் பயணமே என்று தகுந்த விளக்கங்கள் சொல்லி எல்லோரையும் சமாதானப் படுத்திவிட்டேன்.
ஒருவழியாகக் கிளம்பவேண்டிய நாளும் வந்தது. நவம்பர் 29ஆம் தேதி காலை பத்து மணிக்கு சென்னையிலிருந்து ரயில் ஏற வேண்டும். எல்லோரும் பயங்காட்டிய மாதிரியே பெங்கல் புயல் வீசட்டுமா வேண்டாமா என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. வெளியே வீறாப்பு பேசினாலும் உள்ளே கொஞ்சம் உதறல்தான்.Dr.Jeya& Dr. Kandhabhabha கோவையிலிருந்தும் நான், Dr.சோம்ஸ்,பிரபா ஈரோட்டிலிருந்தும் ஒரே ரயிலில் சென்னை வந்துவிட்டோம். மார்த்தாண்டத்தில் இருந்து Dr.Saliteeswaran& Dr.jeyanthi , பழனியிலிருந்து Dr.Hemaltha & வக்கீல் நீதிசெல்வன் சார் எல்லோரும் முந்தினநாளே சென்னையில் மகன்,மகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். பெரிய கும்பல் தூத்துக்குடியில் இருந்து வரணும், காலை 7.30க்குத்தான் கனெக்க்ஷன் ட்ரெயின் வந்து சேரும். மழையினால் தாமதமாகிவிட்டால் எல்லாம் சொதப்பல் ஆகிவிடும். ஏழு மணி சுமாருக்கு தாம்பரம் தாண்டிவிட்டோம் என முத்துராமன் சொன்னதும் தான் நிம்மதியாச்சு. ஏற்கனவே
பிரயாணத்திற்கான முன்னேற்பாடுகளெல்லாம் ஒழுங்கு படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் கொடுத்திருந்தோம். பயண இடைவேளை சில மணி நேரங்களே என்பதால் வெளியில் ஹோட்டல் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. செண்ட்ரல் ஸ்டேஷன் இல் இருந்த IRCTC யின் A/C retiring Hall ரொம்ப வசதியாக இருந்தது. ஒரு மணி நேரத்துக்கு 35 ரூபாய்கள் மட்டுமே கட்டணம். கழிவறை, குளியல் அறைகள், வசதியான இருக்கைகள் என எதிர் பார்த்ததைவிட செளகரியமாகவே இருந்தது.அங்கேயே வீட்டு உணவு சாப்பிடவும் அனுமதித்தார்கள். GT Holidays Van ஒழுங்கு பண்ணியிருந்ததால் எக்மோரில் இருந்து தூத்துக்குடி க்ரூப்பும் நேரத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். பெங்கல் புயல் கூட எங்கள் கூட்டத்தைப் பார்த்து வலுவிழந்துவிட்டதாகச் சொன்னார்கள்.காலை உணவு தம்பி நாராயணன் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தான். இட்லி ,சட்னி ,சாம்பார் என நளபாகம்தான். அவன் மனைவி கடைசி நேரத்தில் வர முடியாவிட்டாலும் எனக்கு மட்டும் என்று ஆறுமுகநேரி லைன் சட்னி கூட செய்து அனுப்பியிருந்தாள். சரசக்கா மருமகள் பருப்புவடை செய்து வழியனுப்ப வந்திருந்தாள். நண்பர் சால்ட்(சாலிட்டீஸ்வரன்) மருமகளுக்கு பிறந்தநாள் என அருமையான கேக் பொட்டணங்கள் வேறு வந்திருந்தது. ஆரம்பமே அட்டகாசம்தான். நயினார் அண்ணன் வர முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பானு, லோகா, விஜி, இந்திரா எல்லாம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரவில்லை. முடிவாக 20 பேர் கொண்ட சிறப்புக் குழு புவனேஸ்வர் நோக்கி செல்ல ரயில் ஏறினோம்.
ரயில் பயணங்கள் எப்போதுமே அலாதியானவை.மொத்த கூட்டமுமே இரண்டுமூணு பகுதிகளுக்குள் அடங்கிவிட்டது. முன்னேற்பாடாக ஆண்கள் அனைவரும் ஒரு பகுதி,பெண்கள் அடுத்த பகுதி,தம்பதியர்கள் கொஞ்சம் ஒதுங்கியமாதிரி என வறையறுத்துக் கொண்டோம். வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பெண்கள் குழாமின் அரட்டை கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என ஆண்கள் சீட்டுக் கச்சேரி ஆரம்பித்து விட்டார்கள்.சூட்கேஸ்கள் மேஜை மாதிரி அடுக்கப்பட்டு club-house rangeக்கு த்டபுடலாக ஆரமிச்சுட்டாங்க. ஏற்கனவே எட்டுபேர் இருந்ததால் நான் நைசாக கழண்டுபோய் வகுப்புத்தோழர்களுடன் “பிரண்டை” துவையல் செய்ய போய்விட்டேன். இன்னுமோரு சீட்டு கட்டு இருந்ததால் நாங்களும் ஒரு சீட்டு கச்சேரி ஆரம்பிச்சுட்டோம் . விஜி, அவங்க அத்தான்,ஜெயா,சால்ட், நான் என சூப்பர் க்ரூப் .ஊரிலிருந்து சரசக்கா கொண்டு வந்திருந்த பலகாரங்கள் கேக் என சிற்றுண்டி நொறுக்கல்களுடன் மதிய உணவு வரை நேரம் போனதே தெரியவில்லை. மதியத்திற்கும் புளிசாதம் தயிர்சாதம் என பொட்டலங்கள் துவையல் ஜோடி சேர்ந்து நளபாகம்தான். மதியம் எல்லோரும் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என முடிவுசெய்து செம தூக்கம். எழுந்த பிறகும் Non-stop கொண்டாட்டமாக அதே அரட்டை,சீட்டுக் கச்சேரி,கடலை போடுவது என நேரம் பறந்ததே தெரியாமல் இரவு உணவு வேளை வந்துவிட்டது. நானாவின் கச்சிதமான ஏற்பாட்டால் இரவுக்கும் பொடி இட்லி, சப்பாத்தி ,தக்காளி தொக்கு என விருந்துண்ணல்தான். உண்ட மயக்கத்தில் தொந்தரவே இல்லாத நிம்மதியான உறக்கம். விடிந்து பார்த்தால் 23மணிநேரப் பயணம் சட்டென்று முடிந்ததுபோல் புவனேஸ்வர் வந்துவிட்டது.

அலை அலை-7

 அலை அலை-7

“மஸாய் மாரா” -கென்யா
பகுதி -1
ஆடுன காலும் பாடின வாயும் நிக்காதுன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் ஊர் சுத்துற காலும் ஓரிடத்தில் நிக்காது. இடையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் சில காலம் ஓய்வில் இருந்ததால் ஊர் சுற்றுவது கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் ஆடி பிறந்ததுமே ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. ப்ராக்டீஸ் கொஞ்சம் மந்தமாக இருக்கும் ஆடியில்தான் பெரிய டூர் கிளம்புவோம். இந்த முறை அட்டகாசமான ஆப்பிரிக்கா பயணம்.நெடுநாள் கனவாக இருந்த கென்யா சஃபாரி என்ற மறக்க முடியாத பயணம். தான்சானியா நாட்டிலிருந்து தண்ணீர் தேவைக்காக கென்யாவின் மஸாய் மாரா காட்டிற்கு மில்லியன் கணக்கில் விலங்குகள் இடம் பெயரும் கண்கொள்ளா காட்சிகள். ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறப்பு வாய்ந்த நிகழ்வு இது . காட்டின் நுழைவு பீஸ், தங்குமிடம், பயணச் செலவு எல்லாமே கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பெரிய க்ரூப் சேர்க்கவில்லை. நான், எழில்,மகள்,மருமகன் , சம்பந்திகள் என சிக் என்று சிக்ஸ் பேக்ஸ் கிளம்பிட்டோம்.
பெங்களூருவிலிருந்து கிளம்பி கென்யா தலைநகரான நைரோபியில் இறங்கி காட்டுக்கு நடுவில் இருந்த மாரா புஷ் கேம்ப் நோக்கி பயணித்தோம். போகும் வழியில் கொஞ்ச நேரம் கண்ணை மூடிவிட்டு திறந்தால் ஒரே குழப்பம். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பயணித்துக் கொண்டு இருப்பது போலவே இருந்தது. மரங்கள், புதர்கள், செடிகள், தட்ப வெப்பம் எல்லாமே நம்ம ஊர் மாதிரியே இருந்துச்சு. எப்பவும் போல் GT Holidays மூலம்தான் பதிவு செய்திருந்தோம். ஆனாலும் முக்கிய தங்கும் விடுதிகள், ப்ளான் எல்லாம் மகள் அலீஸ்தான் முடிவு செய்தாள். காட்டிற்குள் நடுநாயகமான காட்டு விடுதியில் தங்குறமாதிரி புக் பண்ணினாள். கொஞ்சம் காசு அதிகம்தான் என்றாலும் வித்தியாசமான தங்கும் இடம். விடுதியில் வந்து இறங்கியதும் ஆட்டம் பாட்டத்துடன் பழங்குடியினரின் வரவேற்பு அற்புதமாக இருந்தது. இசை வல்லுனரான எழிலுக்கு FOUR-PARTS இல் அவர்கள் பாடியதைக் கேட்டதும் புளகாங்கிதமாகி அவர்களுடன் நடனமாடத் துவங்கிவிட்டார்கள்.
ஒரு பொதுவான உணவருந்தும் இடத்தைச் சுற்றி தற்காலிகமான கூடாரங்கள் டைப்பில் தங்கும் இடங்கள் இருந்தன. ஆரவாரமான சத்தங்களோ காதைக் கிழிக்கும் பாட்டு சத்தமோ இல்லாமல் இயற்கையான சத்தங்களுடன் அமைதியாகவும் கொஞ்சம் அமாநுஷ்யமாகவும் இருந்தது. ஆனால் மனதுக்குப் பிடித்த விதமாக இருந்தது. கூடாரங்கள் எல்லாம் யானை ஓங்கி மிதிச்சா சட்னியாகிவிடும் போல் தார்பாலின் துணிகளால் ஆனது. ஆனால் மூன்று நட்சத்திர ஹோட்டல் போல் எல்லா வசதிகளும் உள்ளேயே செய்திருந்தார்கள். விடுதியின் வரவேற்பறையில் இருந்து கூடாரத்திற்குக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும். அங்குள்ள பழங்குடியினர்கள்தான் பாதுகாவலர்கள். ஈட்டி, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். உள்ளே போய்விட்டால் அவர்களது துணையின்றி அடுத்த கூடரத்துக்குக் கூட செல்ல முடியாது. ஏனென்றால் சுற்றுச் சுவரோ வேலியோ கிடையாது. கதவைத் திறந்தால் நேரடியாகக் காடுதான். பகலெல்லாம் சோலார் மின்சக்தி, இரவில் 10 மணிவரை ஜெனரேட்டர் மூலம் மின்வசதி. ஏற்கனவே லே லடாக்கில் இதே மாதிரி அநுபவம் இருந்ததால் பயமாக இல்லை. மின்விளக்கு, மின் விசிறி, ஏர்-கண்டிஷன் இல்லாமலும் வாழ முடியும் என்பதை நினைவு படுத்திக் கொள்ளவாவது இது போன்ற பயணங்கள் அவசியம்.
பிரத்தியேகமான விறகு அடுப்பில் சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கிறது. குழாய்கள் மூலம் எல்லா கூடாரங்களுக்கும் விநியோகம் ஆகிறது. அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பினாலும் சுடச்சுட காஃபி , டீ எல்லாம் தயாராகவே இருக்கும். சாப்பாடும் நம்ம நாக்குக்கு உகந்த மாதிரி இருந்துச்சு. மசாலா சுவைகூட கொஞ்சம் நம்ம பக்கத்து பக்குவம் போலவே இருந்துச்சு. பாசுமதி அரிசி சாதம்தான் அடிப்படை உணவு. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன், மட்டன்,மாடு, பன்றி ,முட்டை என சகல ரகங்களும் உண்டு. மருமகனும் சம்மந்தியும் சுத்த சைவம் என்பதால் அங்குள்ள சமையல்காரர்கள் கேட்டு கேட்டு அவங்களுக்கு ஏற்ற மாதிரியும் செய்து கொடுத்தார்கள். அங்கு சாப்பிட்ட சிக்கன் சமோசா மாதிரி வேறெங்கும் சாப்பிட்டதில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் சுடச் சுட பரிமாறுவதில் கவனமாக இருந்தார்கள். பெரிய ஹோட்டல் மாதிரி பலதரப்பட்ட உணவுகள் கிடையாது. ஆனால் சிம்ப்பிளாகவும் சுவையாகவும் இருந்தது.
கென்யாவில் மட்டுமே நிறைய தேசிய விலங்கு பூங்காக்கள் இருக்கின்றன. சுற்றுலா அழைத்து செல்பவர்கள் ரெண்டு மூணு பூங்காக்களுக்கு அழைத்து செல்வார்கள். இடைப்பட்ட தூரம் கடக்கக் குறைந்தது ஆறுமணி நேரப் பயணம் செல்ல வேண்டும். ஆனால் எல்லா இடத்திலும் அதே விலங்குகள்தான். அதனால் நாங்கள் ஒரே பூங்காவில் தங்கி சஃபாரி செல்லும் பயண எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொண்டோம். அதனால் எல்லா திசைகளையும் சல்லடை போட முடிந்தது. Packing, un-packing போன்ற பிரச்னைகள் இல்லாமல் ஜாலியாகவும் சுற்ற முடிந்தது. அதிகாலையில் ஆரம்பித்தால் மதியம் வரை ஒரு ட்ரிப். சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து அடுத்த பிரயாணம் ஆரம்பித்தால் இருள் சூழும் வரை போய்க்கொண்டே இருப்போம். அதிகாலையும் பொழுது சாயும் வேளையும் மிக அரிதான விலங்குகள் பார்க்க முடியும்.
முதல்நாள் மதிய சாப்பாட்டிற்குதான் போய்ச் சேர்ந்தோம். கொஞ்ச நேரம் இளைப்பாறியதும் முதல் ரவுண்டு போகலாம் என்று சொன்னார்கள். ஆலீஸ் முன்யோசனையுடன் பெங்களூரிலிருந்தே நான்கு பைனாகுலர்கள் குறைந்த வாடகைக்கு எடுத்து வந்திருந்தாள்.நாங்களும் நண்பர்களிடமிருந்து இரண்டு பைனாகுலர் வாங்கி வந்திருந்தோம். கொழுந்தன் வேறே அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் பரிசாக SLR Camera கொடுத்து அனுப்பியிருந்தான். மகள் அறிவுரைப்படி குளிர் கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டுக்கொண்டு முதல் சவாரிக்காக விடுதி வாசலுக்கு வந்தோம். நம்ம ஊர் டிரெக்கர் ஜீப் மாதிரி ஒரு வண்டி நின்னுச்சு. அதில்தான் போகணும்னு சொன்னப்போ எதிர் பார்ப்பெல்லாம் அடங்கி புஸ் வாணமாயிடுச்சு. நாலு சக்கரமும் ஏழெட்டு சீட்டும் ஒரு கூரையும்தான் இருந்துச்சு. பாதுகாப்புக்கான ஜன்னலோ கம்பிகளோ எதுவுமே இல்லை. சிங்கம் வந்தால் ஜம்மென்று மடியில் சிங்காசனம் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தாழ்வாகவும் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வண்டியில் போனால்தான் விலங்குகளை அருகில் பார்க்கலாம் என ஓட்டுநர் கம் கைடு சொன்னார். மகளும் அப்படியே சொன்னாள். நேர்ந்துவிடப்பட்ட ஆடுகள் மாதிரி எல்லோரும் ஏறி அமர்ந்தோம் ….. திக் திக் என்ற உணர்வோடு………….பயணம் தொடங்கியது.

அலை அலை-6

 அலை அலை-6

“வைனு பாப்பு வான் காணகம்”
பயணம் போகணும்னு ஆரம்பிச்சுட்டா அதற்குரிய முன்னேற்பாடுகள் பக்காவா இருக்கணும். அவசரத்துலே அள்ளித் தெளிச்ச மாதிரி கிளம்பினால் சூடு பட்டுகிட்டுத்தான் திரும்பணும். பார்த்துப் பார்த்து எடுத்து வச்சாலும் கடைசியிலே ஏதாவது முக்கியமான ஒண்ணு மறந்து வச்சிட்டுதான் போயிருப்போம். பள்ளி , கல்லூரிகளில் டூர் போகும்போது யாராவது ஏற்பாடு செய்வார்கள், நாம ஜாலியா ஏறி உக்காந்து போயிட்டு வந்திடலாம். எதாச்சும் தடங்கல் ஏற்படும்போது டூர் அமைப்பாளர்களை வைச்சு செய்யுறதோட நம்ம கடமை முடிஞ்சிடும். ஆனால் நாமளே எல்லா ஏற்பாடும் செய்ய ஆரம்பிக்கும்போது முதலில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கும்.
மருத்துவப் படிப்பு முடிஞ்சதும் அண்ணனோட அரவணைப்பில் சென்னைக்கு வந்து செட்டில் ஆனபிறகுதான் ஒழுங்கு படுத்தவும் ஒருங்கிணைக்கவும் கற்றுக் கொண்டேன். நுங்கம்பாக்கத்தின் ராமானுஜம் செட்டி தெருதான் எங்கள் பயணங்களின் முதல் புள்ளி. கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவதுதான் என்னோட முதல் பயணத்திட்டம். அண்ணா சமாதி, மெரினா பீச், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் என திட்டம் போட்டு பல்லவன் பேருந்து பிடித்தே எல்லா இடமும் போயிட்டு வருவோம். சென்னை மாதிரி பொது போக்குவரத்து அமைப்பு எந்த ஊரிலும் இருக்காது. பல்லவனுக்கு இணை பாரினில் கிடையாது. பொழுது விடியும் முன்பு கட்டுசாதம் கட்டிகிட்டு கிளம்பினால் அர்த்த ராத்திரிவரை பயமில்லாத பயணங்கள்.
மஹாபலிபுரம் மாதிரி தூரமா போகணும்னா மட்டும் அண்ணன் வேன் ஏற்பாடு செய்து தருவான். போற வழியில் டைகர் கோவ் என்ற இடத்தில் அமர்ந்து இட்லி சட்னி சாப்பிட்டுவிட்டு போனால்தான் கற்சிற்பங்களின் அழகைக் கவனத்துடன் பார்க்க முடியும். வழியில் கோல்டன் பீச்சில் நுழைவுக் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நேரத்திலும் அதனுள் நுழையும் வாய்ப்பு கிடைக்காது. MGM, கிஷ்கிந்தா மாதிரி தீம் பார்க்குகள் எல்லாம் அப்போது ஆரம்பிக்கப் படவில்லை. ஊர் சுத்துறதெல்லாம் கட் ஆகி எனக்கு அரசு வேலை வேலூர் மாவட்டம் (தற்போது வட ஆற்காடு )ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்டுவிட்டார்கள். சென்னையிலிருந்து அந்த ஊருக்கு செல்வதே பெரிய டூர் மாதிரிதான். ஜோலார்ப்பேட்டை வரை புகை வண்டியில் போய் அங்கிருந்து பஸ் பிடிச்சு போனால் தப்பிச்சேன். 102B பஸ்ஸில் திருப்பத்தூர் போய் அங்கிருந்து ஆண்டியப்பனூர் போனால் ஒரு நாள் ஆயிடும். 1986இல் பஸ் வசதிகள் குறைவாகவே இருந்தது.
அங்கே நாலு மாசம்தான் இருந்தேன். சரசக்கா கோடை விடுமுறைக்கு அங்கே வந்திருந்தாள். பக்கத்தில் ஜவ்வாது மலையில் காவலூர் என்ற இடத்தில் வான் ஆய்வகம் (observatory) புதிதாகத் திறந்திருப்பதாகச் சொன்னார்கள். பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களே வந்து திறந்து வைத்ததாகவும் சொன்னார்கள். அப்படிப்பட்ட இடத்துக்குக் கண்டிப்பாகப் போகணும்னு முடிவெடுத்தாச்சு. ஆனால் அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ( Reserve forest). அரசுப் பணியின் மேன்மை அப்போதுதான் தெரிந்தது. எங்கள் சீனியர் மருத்துவர் நீதிநேசன் சார் அருமையாக ஏற்பாடு செய்து அங்கிருந்த விருந்தினர் மாளிகையில் தங்கவும் வானோக்கி நிலையத்தை சுற்றிப் பார்க்கவும் அநுமதி பெற்றுவிட்டார். மறக்க முடியாத பயணம்.
ஆ.சு.நி. வண்டியிலேயே போனோம். அப்போதான் அநுமதி சிக்கலில்லாமல் கிடைக்கும் என சார் சொல்லியிருந்தார். உடன் பணியாற்றும் மருந்தாளுநர்கள், செவிலியர் எல்லோரும் சேர்ந்து குழுவாகச் சென்றோம். முதல் posting இல் அரசுப்பணிமேல் வெறுப்பு வராமல் பார்த்துக் கொண்டவர் நீதிநேசன் சார். அவருக்கு “ புன்னகை மன்னன்” எனவும், வண்டி ஓட்டுநருக்கு “அக்கினி மன்னன்” (சிரிக்கவே மாட்டாரு மனுஷன்) எனவும் சரசக்கா நாமகரணம் செய்து வைத்திருந்தாள்.ஆலங்காயத்துக்கு மதியமே போய்ச் சேர்ந்துவிட்டாலும் சாயங்காலம்தான் தொலை நோக்கி கருவியில் பார்க்கணும்னு சொல்லிட்டாங்க.அதனால் நல்லா சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அந்தி சாயும் நேரத்தில் கிளம்பிப் போனோம்.
டெலெஸ்கோப் என்றால் ஸ்டாண்டில் மாட்டி வைச்சுருப்பாங்க , அது வழியா பார்க்கணும்னுதான் நெனைச்சிருந்தோம். ஆனால் கண்ணுக்கு முன்னாடி பெரிய பூதங்கள் மாதிரி ரெண்டுமூணு கட்டிடங்கள் வித்தியாசமான அமைப்புடன் நின்றிருந்தன. அவைதான் வானோக்கிகள் என்று சொன்னார்கள். அசந்து போயிட்டோம். அந்த பிரமிப்பு சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு வரும்வரை இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரையே ஒவ்வொரு கோணத்திலும் திறந்து மூடி வானத்தின் அற்புதங்களைக் காட்டியது. ஒரு 25 பைசா நாணயத்தை 40 கி.மீ.க்கு அப்பால் வைத்தால்கூடத் துல்லியமாகத் தெரியுமாம். விஞ்ஞானி அல்லாத பாமரர்களுக்கு அதன் துல்லியத்தை இந்த விதமாக விளக்கினார்கள். பெளதிகம் எனக்குக் கொஞ்சம் தராறுதான் என்றாலும் அங்கிருந்தவர்கள் விளக்கிச் சொல்லக் கேட்டபோது ஒவ்வொரு கோளும் நட்சத்திரமும் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. சனி, யூரேனஸ், ஜுபிடர் என ஒவ்வொன்றாக விளக்கினாலும் எதுவும் மண்டையில் ஏறவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மிக அருகில் பார்த்த பிரமிப்பு மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு என் குழந்தைகளுக்கு அந்த அற்புதத்தைக் காட்ட வேண்டுமென்று அழைத்து சென்றேன். ஏலகிரி மலையில் விடுதி எடுத்து தங்கிவிட்டு காவலூர் சென்றோம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்குமேல்தான் அனுமதி உண்டு என்று சொல்லிவிட்டதால் அருகிலேயே இருந்த சின்ன நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன்பிறகு சென்று பார்த்தோம். இப்போது எல்லாமே இணையத்தில் கிடைப்பதால் எனக்குக் கிடைத்த பிரமிப்பு அவர்களுக்கு ஏற்பட்டதா என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரசித்து பார்த்தார்கள்.Vainu Bappu Observatory என்று அந்த விஞ்ஞானியின் பெயரிலேயே செயல்படுகிறது.
ஜவ்வாது மலைப்பகுதி அந்தக் காலத்தில் நக்ஸலைட்டுகளின் கூடாரமாக இருந்தது. அதனால் இந்த மதிரி அரிய பிரதேசங்கள் வெளியில் தெரியாமலே இருந்தது. தண்டனை மாறுதலில்(Punishment transfer)தான் இந்த இடங்களுக்கு பணிநியமனம் செய்வார்களாம். எப்படியோ நானும் இங்கே வந்து மாட்டிக் கொண்டேன். எனது குவார்டர்ஸ் ரொம்ப பெருசு. சுத்தியும் புதரும் காடும்தான். நடந்து போற பாதையில் சுருட்டைப் பாம்பு என்று சொல்லப்படும் விஷப்பாம்பு சர்வ சாதாரணமா படுத்திருக்கும். எப்படியோ வீட்டிலிருந்து யாராவது SHIFT போட்டு துணைக்கு இருந்தார்கள். சென்னையிலிருந்து அக்கா மகன்,தம்பியின் தோழன் என ஒரு கூட்டம் வந்திருந்தார்கள். மருத்துவமனையின் எதிரிலேயே இருக்கும் பெரிய மலையில் மலையேற்றம் செய்து உச்சியில் போய் சீட்டுக் கட்டு விளையாடினோம்.
அண்ணன் சீக்கிரமே காஞ்சிபுரம் அருகில் பாலுசெட்டி சத்திரத்துக்கு மாறுதல் வாங்கிக் கொடுத்துவிட்டான். மாறுதலில் செல்வதற்குள் எங்க மருத்துவமனையின் எல்லைக்குள் இருந்த ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.எல்லா இடத்துக்கும் அரசு வண்டியில் போய் செம மரியாதையுடன் சுற்றி வந்தேன். இப்போது அவையெல்லாம் சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாறி இருக்கிறது.
பி.கு.:
காரில் சென்றால் வாணியம்பாடியிலிருந்து ஒரு மணி நேரத்தில் காவலூர் சென்றுவிடலாம். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அங்கிருப்பதுபோல் சென்றால் இலகுவாக சுற்றிப் பார்க்கலாம்