கொடிவேரி அணை
அடிக்கிற வெயிலுக்கும் வீசுற அனல் காற்றுக்கும் , எங்கேயாவது நீர் நிலைகள் தென்பட்டால் மூழ்கிப் போயிடலாமான்னு இருக்கு இல்லையா?
திருமண நாள் கொண்டாட ஒரு வருடமாக ப்ளான் பண்ணி, ஐரோப்பா டூரில் ஆரம்பித்து, அது சிங்கப்பூராகத் தேய்ந்து, இடைவேளையில் சிம்லாதான் என்று தீர்மானிக்கப்பட்டு , வழக்கம்போல எங்கேயும் போகவில்லை. என் கணவருக்கு `எல்லைக் காவல் தெய்வம்’ னு பேர் வைச்சிருக்கேன். நாலுநாள் வெளியூர் போயிட்டாக்கூட யாராச்சும் ஈரோட்டைத் தூக்கிட்டுப் போயிடுவாங்கன்னு கருத்தோட காவல் காக்கிற ஆளு( சும்மா விளையாட்டுக்கு அவங்களைக் கிண்டுவதற்குச் சொல்றது).
கடைசி கடைசியா `இவ்விடத்தால’ இருக்கிற கொடிவேரியாவது போவோம்னு அருள் பாலிச்சாங்க! நானும் குழந்தைகளும், கூடுதலா நண்பரோட பிள்ளைகள் ரெண்டுபேருமா காலையிலிருந்தே வெயிட்டிங். திருமண நாளை முன்னிட்டு மருத்துவமனையை மூடவெல்லாம் முடியாது, மக்கள் பின்னிடுவாங்க. எங்க ஊர் பெரிய மாரியம்மன் கோவிலில் மஞ்சத் தண்ணீர் தெளிக்கும் வைபவம் என்பதால் ஊர்லே நாட்டிலே எல்லாருக்கும் லீவ், எனக்கும் லீவ்!!!
`காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’’ கதையாக ஒரு வழியா அந்தி சாயற நேரத்துக்கு எங்களைக் கூட்டிப் போக வந்திட்டாங்க.
கார்லே போறப்பொ ஒரே டென்ஷன். ஒருவேளை அணைக்குள்ளே நுழையும் நேரம் முடிந்திருந்தால் பொக்குன்னு போயிடுமேன்னு கவலை. அப்படி இல்லாட்டி வண்டியை நேரே பவானிசாகருக்குத் திருப்பிக்கலாம், அங்கே வண்ண விளக்குகளெல்லாம் சனிக்கிழமைதான் போடுவாங்க சூப்பரா இருக்கும்னு பிள்ளைகளை மனதளவில் ரெடி பண்ணிகிட்டே வந்தோம்.
அப்பாடி கொடிவேரி வந்து சேர்ந்தாச்சு, கேட்டும் திறந்திருந்தது!! நுழைவுச் சீட்டு கொடுப்பவர் கடையைக் கட்டிட்டு போயிட்டாரு. அதுக்குப் பிறகு Open to all தான் போலிருக்கு. இறங்கியதும் பிள்ளைகளெல்லாம் குளிக்க ஆயத்தமா ஓடினப்போ நான் மட்டும் கேமிராவும் கையுமா சுத்திகிட்டு இருந்தேன். பின்னே! உங்களுக்கெல்லாம் `படம்’ காட்டுறதா வேறே ப்ராமிஸ் பண்ணியிருந்தேனே! மேலே போட்டிருப்பது அதிலிருந்து ஒரு படம்தான்.
கொடிவேரி அணை என்பது சின்ன அழகான அணை. தண்ணி வடியும் இடம் சூப்பரான அருவி. பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரிதான். பெரியார் மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம்(Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை(பவானி ஆறு காவேரியுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது-அழகான சங்கமேச்வரர் ஆலயத்துடன்)
கொடிவேரியின் மேல்தட்டு அமைதியான ஏரிபோன்ற பரந்த நீர்ப்பரப்பு. அதில் படகு சவாரி போவது சுகமான அனுபவம். அக்கரைக் கொடிவேரியின் கரையில் ஏறியதும் சின்ன ஓட்டுவீடு இருக்கும். `சின்னத் தம்பி’ படத்தில் வரும் பிரபுவின் வீடு. பரிசல்காரர்களுக்கு அங்கு நடத்தப் பட்ட ஷூட்டிங்குகள், அங்கு விஜயம் செய்த திரையுலகப் பிரமுகங்கள் பற்றி நடந்த கதைகளும், சொந்தக் கற்பனைகளுடன் கூடிய புருடாக்களும் சொல்வது பெருமை, கேட்பது நமக்கு ஜாலி. `அன்னக்கிளி’ முதல்` வெற்றிவேல் சக்திவேல்’ வரை பெரிய சகாப்தங்களை உள்ளடக்கிய இடம்.
படகு சவாரி முடித்துவிட்டு குளிக்கக் கிளம்பினால் மேலே அணையிலா கீழே அருவியிலா என்பது அவரவர் நீச்சல் திறமையைப் பொறுத்தது. மேலே கொஞ்ச தூரம் வரை சிமெண்ட் தளம் போடப்பட்டிருக்கும், அதில் நின்று கொண்டு குளிக்கலாம். வெளியிலிருந்து பார்க்கும்போது பயமுறுத்துவதாக இருக்கும், ஆனால் இறங்கினால் இடுப்பளவுதான் ஆழம். அதற்கு மீறுவது அருவியாகிக் கொட்டிவிடும், தடுப்புச் சுவரின் உயரமே அவ்வளவுதான். அதைப் பிடித்துக்கொண்டே அக்கரை வரை தண்ணீரில் நடக்கவும் செய்யலாம். வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பயத்துடன் பரிசலில் மட்டும் போகும்போது, வேண்டுமென்றே தண்ணீருக்குள் நடந்து சென்று எங்கள் `வீரத்தைக்’ காட்டிக் கொள்வது பிடித்தமான விளையாட்டு! அதுவும் ஆன்பிள்ளைகளைத் துச்சப் பார்வை பார்த்துக் கொண்டு பெண்கள் நடப்பது கூடுதல் த்ரில்.
கீழே அருவியில் குளிப்பது கொஞ்சம் அபாயம் நிறைந்ததுதான். ஆழம் மிகக் குறைவாகவே இருந்தாலும், வழுக்குப் பாறைகளும், சுழல்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. பொறுமையாக தேர்ந்த அநுபவத்துடன் செல்லும் எங்களைப் போன்ற ஆட்களுக்கு பிரமாதமான இடம். குற்றாலம் போனால்கூட இவ்வளவு ப்ரீயாகக் குளிக்க முடியாது. தண்ணீரின் வீச்சும் உடலுக்கு ஒத்தடம் கொடுக்கும் விதமாகவே இருக்கும். குட்டிப் பிள்ளைகளை இறங்கி ஓடும் ஆற்றில் விளையாட விடலாம், பயமிருக்காது.
ஆனால் தண்ணி அடித்துவிட்டு குளிக்கவென்றே வரும் கூட்டத்தினர் அடிக்கடி விபத்துக்களில் மாட்டுவதும் சகஜம். சில சுழல்களின் ஆழம் கண்டுபிடிக்கமுடியாதது. நிதானத்துடன் இருப்பவர்கள் தடம் பார்த்து குளிக்கச் செல்லுவர். நிலை மறந்தவர்கள் மூழ்கி இறந்துவிடும் அபாயமும் உண்டு. அதனால் கொடிவேரி செல்ல நினைப்பவர்கள் கைடாக என்னையும் அழைத்துச் செல்லவும். கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 40 நிமிடப் பயணம்.
கொடிவேரி மீன் பற்றிச் சொல்லாமல் முடித்தால் பரஞ்சோதி வருத்தப் படுவார். சுடச்சுட அப்போதே பிடித்த மீன்களைப் பொரித்துக் கொடுப்பார்கள். குளித்த சோர்வு நீங்க சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்கு அந்தச் சுவை மறக்கவே மறக்காது. நாங்க போன அன்றுதான் நேரமாகிவிட்டதே, கடையெல்லாம் காலி. ஆனாலும் என் கணவர் துருவி விசாரித்து அண்மையிலுள்ள கிராமத்தில் கடை கண்டுபிடித்து பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து ஹீரோ ஆயிட்டாங்க. அன்னைக்கு உண்மையாலுமே அவங்கதானே ஹீரோ! (அப்போதானே நான் ஹீரோயின் ஆகமுடியும்-கண்டுக்காதீங்க!)
எல்லோருக்கும் திருமண நாள் விருந்தாக ஒரு அணையும் அருவியும் சுற்றிக் காட்டிட்டேன் பார்த்தீங்களா!! வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.