`விடா'க்கண்டனும் `கொடா'க்கண்டனும்
(ராஜ் அவர்களின் பின்னூட்டத்திற்கு விளக்கம் நீளமானதாக இருபதால் ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்).
நிச்சயமா BSc/MSc படிப்பது என்பது மருத்துவம் படிப்பதைவிட ஈஸியானதுதான். அந்த துறையின் பாடங்களைக் கற்றுத் தேற வேண்டிய அறிவும், கடின உழைப்பும் ,dedication உம் இருந்தால் போதுமானது. தனது தகுதியைப் பொறுத்து சீட் வாங்கலாம் என்பதே பெரிய ஆறுதலும், ஊக்கமும் இல்லையா?
ஆனால் மருத்துவம் போன்றவை வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பகட்டான படிப்பு. பள்ளியின் முதல் மாணவனோ, மாநில ரேங்க் வாங்கியவனுக்கோகூட சீட் கிடைக்குமென்பதற்கு உத்திரவாதமே இல்லை. (பணத்தின் மூலம் வேண்டுமானால் வாங்கலாம்,அது தனிக் கதை) சுய முயற்சி கடுமையாக இருந்தாலும் கூட தோற்றுப் போகும் நிலைமை மிக அதிகம். மருத்துவம் படிக்கும் எதிர்பார்ப்புடன் படிக்கும் மாணவர்களின் மன இறுக்கம் இருக்கிறதே, அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. .மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் சீட்டைத் தவற விடும்போது, அந்த தோல்வி அளவிட முடியாதது. மருத்துவம் முயற்சி பண்ணி கிடைக்காதபோது மனநோய்க்கு ஆளான மாணவர்கள் கூட இருக்கிறார்கள்.அத்தைகைய மன உளைச்சல்களுடன் பெறப்படும் அக்கல்வி உடனே செட்டில் ஆகக் கூடிய வாய்ப்பை எந்த அளவு பெற்றுத் தருகிறது? மேற் படிப்பு செல்லாமல் செட்டில் ஆகவே முடிவதில்லை.மறுபடி அதே சர்க்கஸ்தான் PG படிப்பதற்கும். எல்லாப் போராட்டங்களையும் கடந்து ஒருவழியாக ஒரு நிலைப்பாட்டுக்குள் வரும்போது, அநேகமாக ஆண்களுக்கு வழுக்கை விழுந்து தொப்பை ஏறியிருக்கும், பெண்கள் முதிர் கன்னியர்களாகியிருப்பார்கள். வாழ்க்கையின் பெரும் பயணத்தை முடித்த களைப்புடன் அமர முடியாது. அடுத்த போராட்டமே அதன்பிறகுதானே ஆரம்பிக்கப் போகிறது.பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு உட்காரவும் முடியாது. மருத்துவம் படிக்க குறிக்கோளை மனதில் ஏற்றிக் கொள்வதிலிருந்து, படித்து முடித்து `நல்ல’ முறையில் செட்டில் ஆவது வரை உள்ள மனப் போராட்டங்களை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தால், நாலைந்து பதிவுகளாவது நீட்ட வேண்டியிருக்கும்.
படிக்கும் காலங்களில் ஜாலியாக சுற்றுவதும், சந்தோஷமாகத் திரிவதும் எல்லாக் கல்லூரி மாணவர்களின் பொதுச் சொத்து. ஆனால், மிக நீண்ட வருடங்கள் ஒரே கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால், மெடிக்கோஸ் சுற்றுவதுமட்டும் ஊரறிந்த ரகசியமாக இருக்கும். மற்றபடி படிப்பு விஷயத்தில் அவரவர் SYLLABUS அவரவர்களுக்கு முக்கியமானதே. நான் ஜாலியாகப் படிக்கலாம் என்று சொன்னது அந்த பாடங்களை அல்ல, அந்த படிப்பை( not the subject but the speciality- have I explained properly Raj?)
படித்த பின்பு செட்டில் ஆவதும், BSc/MSc இல் சுலபம்தானே. நாம் இருக்கும் இடம் எத்தைகைய குக்கிராமமாக இருந்தாலும், வருங்காலத் துணை எந்த ஊரில் இருப்பவராக இருந்தாலும் அடிப்படைத் தகுதியான டிகிரி போதுமானது .தனது அறிவு, விடா முயற்சி போன்றவற்றைப் பொறுத்து அந்தத் துறையில் டாக்டரேட் வரை போகலாம்.. அதிலுள்ள முயற்சிகளுக்கு வானமே எல்லை. மருத்துவம் படிக்குமளவு சிறந்த மாணவர்களாக்த் தேறுபவர்களுக்கு பெளதீகமோ வேதியலோ படிப்பது கடினமாக இருக்குமா? படிக்க வேண்டிய கல்லூரி, ஊர், பிரிவுகள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லையா? Doctorate போன்ற அளவு முன்னேறி வரும்போது, பொறுப்பும், எதிர்பார்ப்பும், கஷ்டங்களும் அதிகரிக்கும். ஆனால் அத்தைகைய முயற்சிகள் எதுவுமின்றி MSc போன்ற அளவு வந்தாலே நல்ல முறையில் செட்டில் ஆகலாம் என்பதுதான் என் விவாதம்.
நான் ஜாலியாக இருப்பது என்று சொன்னது, மன இறுக்கமற்ற துறை என்ற அர்த்தத்தில்தான். மருத்துவர்களின் சிரித்த முகங்களின் பின்னே எத்தனை இறுக்கமான இதயமும், பர பரவென்று சுற்றித் திரியும் கால்களின் பின்னே எத்தனை நிம்மதியற்ற மனதும் இருக்குமென்பது எத்தனை பேருக்கு மனதில் பதிவாகிறது? `MSc முடிச்சுட்டு டாக்டரேட் எல்லாம் வாங்கியிருக்கிறார்’ என்று ஒருவரைச் சுட்டிக்காட்டும்போது, அவரின் அறிவை உயர்த்தும் விதமாகப் புகழும் மனிதர்கள், ஒரு டாக்டரைப் பற்றிப் பேசும்போது, எவ்வளவு பிடித்த டாக்டராக இருந்தாலும் கூட `அவங்களுக்கென்ன பிரமாதமான ப்ராக்டீஸ்’ என்று சொல்லும்போது, அந்த டாக்டரின் அறிவைக் குறித்து சொல்லுவதில்லை. அவரது வருமானம் குறித்தே `வஞ்சப் புகழ்ச்சி’யாகப் பேசுவதுதான் யதார்த்த வாழ்க்கை.
எப்பவுமே அதே துறையில் இருப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள மேடு பள்ளங்கள் தெரியும். அதனால்தான் அக்கரைப் பச்சை பரவாயில்லை என்று தோன்றுகிறது. எனக்கு MSc படிப்பது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் basically படிப்பது எந்த துறையாக இருந்தாலும், முயற்சியும் கடின உழைப்பும் இல்லாவிட்டால் எதிலுமே சோபிக்க முடியாது.
(கேள்விகளை விடாமல் தொடுத்த விடாக்கண்டனையும், பதிலில் பிடிகொடாமல் சமாளித்த கொடாக்கண்டனையும் யார் யாரென்று இந்நேரம் புரிந்திருக்குமே!!)