அலை-91
அலை-91
“வாசிப்பும் வாசகியும்”
சங்கம் வளர்த்த மதுரையில் “கலைஞர் நினைவு நூலகம்” திறக்கப்பட்டுள்ளது. வாசிப்பு என்பது பேப்பரில் இருந்து இணையத்திற்குத் தாவிவிட்ட பிறகு நூலகத்தின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால் அதிக அளவில் பயன்பட வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. புத்தகங்களைச் சொந்தமாக வாங்கமுடியாத நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு நூலகத்தின் அருமை புரியும்.
தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசிப்பு என்பதும் ஆரம்பித்துவிட்டது. ஆரம்பப் பள்ளி நாட்களில் சந்தைக்கடை முனையிலிருக்கும் ஹோட்டலின் திண்ணைதான் எனது முதல் நூலகம். தினத்தந்தி என்ற பத்திரிகைதான் முதலில் பரிச்சயமான நாளிதழ். எல்லோரும் இலவசமாக படிக்கும் வகையில் தினத்தந்தி நாளிதழும், “ராணி” வார இதழும் ஜன்னல் கம்பிகளில் சொறுகி வைக்கப்பட்டிருக்கும். பள்ளிக்குச் செல்லும் முன்பு “சிந்துபாத்” தொடர்கதைச் சித்திரத்தைத் தவறாமல் வாசிக்கும் அளவுக்கு நிரந்தர வாசகியானது அந்த திண்ணை நூலகத்தில்தான். சிந்துபாதின் தண்ணீர்க் குடுவை ரொம்ப பிடித்த பொருள்.ராணி வார இதழில் வரும் “ குரங்கு குசலா”வுக்கு தனி இடம் மனதில் உண்டு.
உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் வாசிப்பின் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. தோழி அமராவதி வீட்டில் கிடைத்த சித்திரக் கதைகளும் அதில் வீர சாகசம் செய்யும் “இரும்புக் கை மாயாவி” போன்றவர்களும் கனவுகளில் வரும் கதாநாயகர்கள் ஆனார்கள். அப்போதைய மாயாவிதான் இப்போதைய அநிமேஷன் விளையாட்டுகளின் முன்னோடி. ரிமோட் இல்லாமலே தாவுவதும் குதிப்பதும் சண்டையிடுவதும் அபாரமாயிருக்கும். பாக்கியம் ராமசாமியின் “அப்புசாமித் தாத்தா” சிரிக்க வைத்தபோது ஜாவர் சீத்தாராமனின் ”உடல் பொருள் ஆனந்தி” அமாநுஷ்யங்களுடன் பயம் காட்டியது. வார இதழ்களிலிருந்து பைண்டு பண்ணப்பட்ட தொடர் கதைகள் அகிலன், கல்கி, சாண்டில்யன், நா.பா., போன்ற நாவலாசிரியர்களை அறிமுகம் செய்ததோடு இளஞ்செழியன், இதயச்சந்திரன், கருணாகரன், அநபாயன் என ஏகப்பட்ட நாயகர்களைக் கனவுலகில் சஞ்சரிக்க விட்டன. வந்தியத்தேவன் அந்தக் காலத்திலேயே எங்களைக் கொள்ளைகொண்ட நாயகன்.
சரித்திர நாவல்களுக்கு இணையாக சமூக நாவல்களின்பால் காதல்வயப்பட வைத்தது ஜெயகாந்தனின் படைப்புகள். பதின்ம வயதுகளில் படித்தபோது புரியாத நிறைய விஷயங்கள் காதல் வயப்பட்டபோது வேறு விதமாகவும், நாற்பது வயதில் இன்னுமொரு கோணத்திலும் புரிதலுக்குள்ளானது ஜெயகாந்தனின் சிந்தனைகள் செய்த ஜாலம். அந்த வயதில் புரிதல் குறைவாகவும் ஞாபக சக்தி அதிகமாகவும் இருந்ததால் அன்று படித்த புத்தகங்களின் சில மேற்கோள்கள் இன்றளவும் பசுமரத்தாணியாக மனதில் உள்ளன. காதலுக்கு முன் (கா.மு.) காதலுக்கு பின் (கா.பி.) என்று வாசிப்பை ஈஸியாக வகைப் படுத்திவிடலாம். ஒவ்வொரு மேற்கோளும் கவிதை வரிகளும் நமக்காகவே எழுதப் பட்டவை போன்றே இருக்கும். குறிஞ்சி மலர் நாவலில் வரும் கவிதைவரிகள் மாதிரி.
“கூப்பிட்டா மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிப்பிட்டா கொய்யாவைக் கிளிகள் கொத்தும்
சாப்பிட்டால் வருகின்ற ஏப்பம் போல
கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக்காதல்”-
இதுபோல் எத்தனையோ உதாரணங்கள் கைவசம் உண்டு. பிடித்த நாவல்கள் மறுபடி மறுபடி வாசிக்கத் தூண்டும். காதலில் உருகிப் போகும்போதும் ஊடலில் கொதித்துப் போகும்போதும், ஏதாவது ஒரு நிகழ்வு அந்தக் கதைகளின் அத்தியாயத்தை நம்முடன் கைகோர்த்துக் கொள்ளும்.
வீட்டில் நாங்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் இருந்ததால் குமுதம், விகடன், கல்கி போன்ற வார இதழ்கள் வீட்டில் வாங்க ஆரம்பித்தார்கள். முன்பக்க அட்டையிலிருந்து பின்பக்கம் வரை ஒருவரிகூட விடாமல் படிக்க ஆரம்பித்தபோது சுஜாதா, சிவசங்கரி, இந்துமதி என பலரையும் தெரிந்து கொள்ள முடிந்தது. கைக்கூ கவிதைகளும், சிரிப்பு துணுக்குகளும் வாசிப்பை மேலும் மேலும் தூண்டியது. ஒவ்வொரு எழுத்தாளரின் நடையும் வெவ்வேறு விதமாக இருந்ததைப் புரிந்து கொள்ளும் வயதும் வந்துவிட்டது. கிடைத்ததையெல்லாம் படித்த நிலைமை மாறி, பிடித்ததை எல்லாம் தேடிப்போகும் ஆவல் கூடியது.
“யாதுமாகி நின்றாய் காளி” என்ற சிறுகதையை ரயில் பயணத்தின் போது வாசித்துவிட்டு யாருப்பா இந்த பாலகுமாரன் என்று ஆர்வத்தோடு தேட ஆரம்பித்தபோது கிடைத்த “அகல்யா”வும் “மெர்க்குரிப் பூக்களும்” வேறு உலகத்தைக் காட்டின. தமிழில் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் முதல் ரமணி சந்திரன் வரை பாரபட்சமின்றி வாசிப்புக்குத் தீனி போட்டு நேரங்களைக் களவாடிக் கொண்டார்கள். விவரிக்க ஆரம்பித்தால் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்” சின்ன புத்தகமாகிவிடும்.
தமிழுக்கு இணையாக ஆங்கில நாவல்களும் என் வாசிப்பு வட்டத்துக்குள் அடக்கம். காண்டேகரின் “கிரெளஞ்சவதம்” பற்றி சொல்லாமல் தமிழ் லிஸ்ட் முடிவடையாது.
கல்லூரிப் படிப்பிற்கு ஆங்கிலப்புலமை அத்தியாவசியம் எனக்கருதி ஆங்கில பத்திரிகைகளைப் புரட்ட ஆரம்பித்தது செவ்வாய்க் கிழமை வரும் ஹிண்டுவின் “Know your English” பகுதி. நயினார் அண்ணன் BBA படிப்பில் ஆங்கில உச்சரிப்புகள் சம்பந்தமான துணைப்பாடம் எடுத்திருந்ததால் ஆங்கில நாவல்கள் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தன. அது போக Sherlock Homes, James Hardley Chase போன்ற துப்பறிவு நாவல்களே முதலில் பரிச்சயமாகி இருந்தது, ஏனென்றால் வாடகை நூலகங்களில் அவைதான் கிடைக்கும். ஏதோ ஒரு நாள் Harold Robbins Novel ஒன்று கிடைத்து வாசித்துக் கொண்டிருந்தபோது பாவியைப் பார்ப்பதுபோல் சில தோழியர் என்னை முறைத்துக் கொண்டிருந்தனர். புரியாத புதிருக்கு விடை சில நாட்கள் கழித்துதான் தெரிந்தது. Harold Robbins ஆபாச எழுத்தாளராம், அவர் கதையை வாசித்ததால் நான் பாவியாகிப் போனேனாம். அட்டையில் வேறு அமெரிக்கன் ஸ்டைலில் பெண்கள் படம் இருக்கும். எதுக்கடா வம்பு என்று அதற்குப் பிறகு ஆங்கில நாவல்களுக்கு அட்டை போட்டு படிக்க ஆரம்பித்தேன்.
Sidney Sheldon என்பவரின் கதைகள் உனக்கு பிடிக்கும் என்று Rage of Angels புத்தகத்தை எபி தந்ததிலிருந்து அடுத்தடுத்து ஆங்கில நாவல்கள் மீதும் மோகம் அதிகமானது. இரவுப் பணிகள் சமயத்தில் சுப்பாராவ் சார் எனக்கும் தில்லைக்கும் “கோமா” என்ற நாவலின் கதை பற்றி சிலாக்கியமாக சொன்னதிலிருந்து ராபின் குக் நாவல்களுக்கு அடிமையாகிப் போனேன். மருத்துவரான அவருடைய கதைகள் நிறைய மருத்துவம் சார்ந்து இருப்பதால் இன்னும் கொஞ்சம் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. அதிலும் அவரது TOXIN கதையில் மாட்டிறைச்சி பதப்படுத்துவது பற்றி தத்ரூபமாக எழுதியிருந்ததை வாசித்த பிறகு மாமிசம் சாப்பிடுவதையே பத்து வருடங்களுக்கு மேல் நிப்பாட்டி விட்டேன். அவ்வளவு ஒன்ற வைத்துவிடும் எழுத்துநடை. Jeffery Archer, Irwing Wallace, Arthur Hailey என்று லிஸ்ட் நீண்டுகொண்டேதான் போகிறது. ஈரோடுக்கு வந்த பிறகுகூட நிறைய எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கண் மருத்துவர் கனகசபை Pelican brief தந்த பிறகுதான் John Grisham கதைகளே பரிச்சயமானது.
தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு எப்படியாவது போய் விடுவேன். நிறைய புத்தகங்கள் வாங்கினாலும் அதில் பாதியாவது pirated copies ஆகத்தான் இருக்கும். அவற்றின் விலை குறைவாக இருக்கும். அப்போதான் யாராவது படிக்கக் கேட்டால் மொத்தம் மொத்தமாக குடுக்க முடியும். அடுத்த வருஷமும் அதே பிரதிகள் வாங்கிக்கலாம். படிக்க ஆசைப்படுபவர்களுக்கு புத்தகம் கொடுப்பது ஒரு சுகாநுபவம். ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ மூலமாக அதே மாதிரி புத்தகக் கண்காட்சி எங்கள் ஊரிலும் வந்துவிட்டதால் என் மினி நூலகத்தின் புத்தக எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
வாசித்து முடிக்காத புத்தகங்களும் நிறைய இருக்கிறது. தெரிந்து கொள்ளப்படாத எழுத்தாளர்களும் நிறையபேர் இருக்கிறார்கள். வாசிப்பதும் எழுதுவதும் இலக்கு அல்ல , பயணம். தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். வாசிப்பை நேசியுங்கள்.