Tuesday, November 15, 2005

`விடா'க்கண்டனும் `கொடா'க்கண்டனும்

(ராஜ் அவர்களின் பின்னூட்டத்திற்கு விளக்கம் நீளமானதாக இருபதால் ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன்).

நிச்சயமா BSc/MSc படிப்பது என்பது மருத்துவம் படிப்பதைவிட ஈஸியானதுதான். அந்த துறையின் பாடங்களைக் கற்றுத் தேற வேண்டிய அறிவும், கடின உழைப்பும் ,dedication உம் இருந்தால் போதுமானது. தனது தகுதியைப் பொறுத்து சீட் வாங்கலாம் என்பதே பெரிய ஆறுதலும், ஊக்கமும் இல்லையா?

ஆனால் மருத்துவம் போன்றவை வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் பகட்டான படிப்பு. பள்ளியின் முதல் மாணவனோ, மாநில ரேங்க் வாங்கியவனுக்கோகூட சீட் கிடைக்குமென்பதற்கு உத்திரவாதமே இல்லை. (பணத்தின் மூலம் வேண்டுமானால் வாங்கலாம்,அது தனிக் கதை) சுய முயற்சி கடுமையாக இருந்தாலும் கூட தோற்றுப் போகும் நிலைமை மிக அதிகம். மருத்துவம் படிக்கும் எதிர்பார்ப்புடன் படிக்கும் மாணவர்களின் மன இறுக்கம் இருக்கிறதே, அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. .மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் சீட்டைத் தவற விடும்போது, அந்த தோல்வி அளவிட முடியாதது. மருத்துவம் முயற்சி பண்ணி கிடைக்காதபோது மனநோய்க்கு ஆளான மாணவர்கள் கூட இருக்கிறார்கள்.அத்தைகைய மன உளைச்சல்களுடன் பெறப்படும் அக்கல்வி உடனே செட்டில் ஆகக் கூடிய வாய்ப்பை எந்த அளவு பெற்றுத் தருகிறது? மேற் படிப்பு செல்லாமல் செட்டில் ஆகவே முடிவதில்லை.மறுபடி அதே சர்க்கஸ்தான் PG படிப்பதற்கும். எல்லாப் போராட்டங்களையும் கடந்து ஒருவழியாக ஒரு நிலைப்பாட்டுக்குள் வரும்போது, அநேகமாக ஆண்களுக்கு வழுக்கை விழுந்து தொப்பை ஏறியிருக்கும், பெண்கள் முதிர் கன்னியர்களாகியிருப்பார்கள். வாழ்க்கையின் பெரும் பயணத்தை முடித்த களைப்புடன் அமர முடியாது. அடுத்த போராட்டமே அதன்பிறகுதானே ஆரம்பிக்கப் போகிறது.பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு உட்காரவும் முடியாது. மருத்துவம் படிக்க குறிக்கோளை மனதில் ஏற்றிக் கொள்வதிலிருந்து, படித்து முடித்து `நல்ல’ முறையில் செட்டில் ஆவது வரை உள்ள மனப் போராட்டங்களை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தால், நாலைந்து பதிவுகளாவது நீட்ட வேண்டியிருக்கும்.

படிக்கும் காலங்களில் ஜாலியாக சுற்றுவதும், சந்தோஷமாகத் திரிவதும் எல்லாக் கல்லூரி மாணவர்களின் பொதுச் சொத்து. ஆனால், மிக நீண்ட வருடங்கள் ஒரே கல்லூரி வளாகத்தில் சுற்றித் திரிவதால், மெடிக்கோஸ் சுற்றுவதுமட்டும் ஊரறிந்த ரகசியமாக இருக்கும். மற்றபடி படிப்பு விஷயத்தில் அவரவர் SYLLABUS அவரவர்களுக்கு முக்கியமானதே. நான் ஜாலியாகப் படிக்கலாம் என்று சொன்னது அந்த பாடங்களை அல்ல, அந்த படிப்பை( not the subject but the speciality- have I explained properly Raj?)

படித்த பின்பு செட்டில் ஆவதும், BSc/MSc இல் சுலபம்தானே. நாம் இருக்கும் இடம் எத்தைகைய குக்கிராமமாக இருந்தாலும், வருங்காலத் துணை எந்த ஊரில் இருப்பவராக இருந்தாலும் அடிப்படைத் தகுதியான டிகிரி போதுமானது .தனது அறிவு, விடா முயற்சி போன்றவற்றைப் பொறுத்து அந்தத் துறையில் டாக்டரேட் வரை போகலாம்.. அதிலுள்ள முயற்சிகளுக்கு வானமே எல்லை. மருத்துவம் படிக்குமளவு சிறந்த மாணவர்களாக்த் தேறுபவர்களுக்கு பெளதீகமோ வேதியலோ படிப்பது கடினமாக இருக்குமா? படிக்க வேண்டிய கல்லூரி, ஊர், பிரிவுகள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பதில்லையா? Doctorate போன்ற அளவு முன்னேறி வரும்போது, பொறுப்பும், எதிர்பார்ப்பும், கஷ்டங்களும் அதிகரிக்கும். ஆனால் அத்தைகைய முயற்சிகள் எதுவுமின்றி MSc போன்ற அளவு வந்தாலே நல்ல முறையில் செட்டில் ஆகலாம் என்பதுதான் என் விவாதம்.

நான் ஜாலியாக இருப்பது என்று சொன்னது, மன இறுக்கமற்ற துறை என்ற அர்த்தத்தில்தான். மருத்துவர்களின் சிரித்த முகங்களின் பின்னே எத்தனை இறுக்கமான இதயமும், பர பரவென்று சுற்றித் திரியும் கால்களின் பின்னே எத்தனை நிம்மதியற்ற மனதும் இருக்குமென்பது எத்தனை பேருக்கு மனதில் பதிவாகிறது? `MSc முடிச்சுட்டு டாக்டரேட் எல்லாம் வாங்கியிருக்கிறார்’ என்று ஒருவரைச் சுட்டிக்காட்டும்போது, அவரின் அறிவை உயர்த்தும் விதமாகப் புகழும் மனிதர்கள், ஒரு டாக்டரைப் பற்றிப் பேசும்போது, எவ்வளவு பிடித்த டாக்டராக இருந்தாலும் கூட `அவங்களுக்கென்ன பிரமாதமான ப்ராக்டீஸ்’ என்று சொல்லும்போது, அந்த டாக்டரின் அறிவைக் குறித்து சொல்லுவதில்லை. அவரது வருமானம் குறித்தே `வஞ்சப் புகழ்ச்சி’யாகப் பேசுவதுதான் யதார்த்த வாழ்க்கை.

எப்பவுமே அதே துறையில் இருப்பவர்களுக்குத்தான் அதிலுள்ள மேடு பள்ளங்கள் தெரியும். அதனால்தான் அக்கரைப் பச்சை பரவாயில்லை என்று தோன்றுகிறது. எனக்கு MSc படிப்பது அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் basically படிப்பது எந்த துறையாக இருந்தாலும், முயற்சியும் கடின உழைப்பும் இல்லாவிட்டால் எதிலுமே சோபிக்க முடியாது.

(கேள்விகளை விடாமல் தொடுத்த விடாக்கண்டனையும், பதிலில் பிடிகொடாமல் சமாளித்த கொடாக்கண்டனையும் யார் யாரென்று இந்நேரம் புரிந்திருக்குமே!!)

Sunday, November 13, 2005

வாத்தியார்களும் மாணவர்களும்

எனது `ராகிங்’ பதிவிற்கு ராமநாதன் இட்டிருந்த பின்னூட்டம் என் மனதில் எழுப்பிய தாக்கங்களே இந்தப் பதிவு. ரஷ்யாவில் ஆசிரியர்-மாணவர் இடையேயான உறவுகள் பற்றி எழுதியிருந்தார்.
தமிழ்நாட்டில் பொதுவாக எங்க ஊர் மாதிரியான மத்திய தர நகரங்களில் ஆசிரியர்- மாணவன் உறவு சமீப காலங்களில் ரொம்பவே சிதைந்து வருகிறது. நல்ல STANDARD MAINTAIN பண்ணி ஓரளவு தரம் இருப்பதாக அறியப் பட்ட பள்ளிகளில் கூட வாத்தியார்-மாணவன் உறவு ஆரோக்கியமானதாக இல்லை.

தவறு எங்கு ஆரம்பிக்கிறது?ஒரு சின்ன அலசல்.

தற்போதைய கல்வித் தரத்தின் கூடுதல் சுமை; தொழிற் கல்விகளையே குறிவைத்து பிள்ளைகளை கல்வி கற்கத் தூண்டும் பெற்றோர்; இயந்தரத்தனமாக்கி விடப்பட்ட போதிக்கும் முறைகள்; `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ சுகம் என்றிருந்த ஆசிரியர் சமுதாயம்,பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே நினைத்து வேலைக்கு செல்வது; ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதெல்லாம் அடக்கியாளும் தன்மை,அதை பள்ளிகளில் கடைப்பிடித்தலாகாது என்ற மாறுபட்ட மனோபாவம்—இன்னும் இதுபோல் சில பல காரணங்கள்.

பள்ளிப் பருவம் முடிக்கும்போது தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைக் கல்வியை விடுத்து, குருவி தலையில் பனங்காய் வைப்பது போன்ற அளவுக்கு மீறிய பாடத் திட்டங்கள். 5 வருடங்களில் மருத்துவம் படிக்கும்போது படித்த பாடங்கள் அனைத்தும், +2 முடிக்கும்போதே முழுவதும் கற்றுக் கொள்ள வேண்டும் போன்ற சுமையான SYLLABUS. பயாலஜி எடுத்த அனைவரும் மருத்துவம் படிக்கப் போவதில்லை, ஆனாலும் அனைவருக்கும் அதே பாடத் திட்டம்தான். இதில் இன்னொரு BEAUTY என்னவென்றால், அதை நடத்தும் ஆசிரியர் பலருக்கே அது புரியாமல், சில டாக்டர்களிடம் ரகசியமாக TUTION எடுத்துக் கொள்வதும் உண்டு.(இது கதையல்ல நிஜம்). கணிதம் பற்றியோ சொல்லவே வேண்டாம். தினம் ஒரு புது மாறுதல்.

இத்தைகைய குழப்பமான பாடத் திட்டமும், நடத்துதல் சிரமங்களும் சேர்ந்து ட்யூஷன் போகாமல் முடியாது என்ற நிலைக்கு குழந்தைகளைத் தள்ளி விடுகின்றன. எங்கள் காலத்தில் ட்யூஷன் போவதென்றாலே அவமானமான விஷயம். மக்கு பசங்களும் சேட்டைக்காரப் பசங்களும்(இரு பாலருக்கும் பொதுவானதுதான்) மட்டும்தான் ட்யூஷன் போவாங்க. அநேக இடங்களில் ட்யூஷன் வாத்தியார் வகுப்பில் நல்லா படிக்கும் மாணவராகவே இருப்பார்கள். ஆசிரியர்களில் ட்யூஷன் எடுப்பவர்களும் குறைவாகவே இருப்பாங்க.
இப்போ ட்யூஷன் எடுப்பதே ஒரு `கை’வந்த கலையாகிவிட்டது. அதிலும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள். ஒரு வகுப்பின் மாணவன் அடுத்த வகுப்பு வாத்தியாரிடம் ட்யூஷன் செல்லக்கூடாது. மீறி போய்விட்டால் அந்த மாணவன் வருஷம் முழுவதும் ஏதோ ஒரு நொண்டி காரணத்துக்காக வகுப்பறையின் வெளியிலேயே நிற்கும் தண்டனை நாட்கள் அதிகமாக இருக்கும். மிக மோசமான வசவுகளால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப் பட்டு முன்பிருந்ததை விடவும் குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும் உண்டு. அதனாலேயே, இப்போதெல்லாம், பெற்றோர்கள் உஷாராக பள்ளி திறந்ததும், வகுப்பாசிரியரைத் தெரிந்துகொண்டு ட்யூஷன் பீஸ் என்ற காணிக்கைகளை அந்த பூசாரிகளுக்கு படைத்துவிடுகிறார்கள். அதன் பிறகுதான் புத்தகங்கள் கூட வீட்டுக்குள் வரும்.

சமீபத்தில் ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவதைப் பற்றிய விவாதம் ஒன்று வந்ததே, அதைவிடக் கொடுமையானது, இவர்களின் பீஸ் வாங்கும் முறைகள். ஒரு பாடத்துக்கு இவ்வளவு என்று `ரேட்’ நிர்ணயித்து விடுவார்கள். அதை ஒன்று அல்லது இரண்டு தவணையில் கொடுத்துவிட வேண்டும். அதைத்தானே அவர்கள் வட்டிக்கு விட வேண்டும்!!!! நான் 1-ஆம் வகுப்பிலிருந்து DG0 வரை படிக்க ஆன செலவுக்கு நிகரான தொகை என் பெண்ணின் ஒரு வருட ட்யூஷன் பீஸ்! என்னதான் MONEY INFLATION என்றாலும்கூட கணக்கு ரொம்பவே உதைக்குது!!
(விளையாட்டாக என் பெண்ணிடம் நான் சொல்வது `குட்டிம்மா! கஷ்டப்பட்டு MEDICAL or ENGINEERING படிச்சுட்டு அடுத்தவங்களை நாடி வாழப் போறதைவிட, ஜாலியாக BSc-MSc- maths or physics படிச்சுட்டு வீட்டிலேயே ட்யூஷன் எடுத்தால் அதைவிட நிம்மதியாக செட்டில் ஆயிடலாமே’ என்று!(நல்ல அறிவுரைதானுங்களே?) வருமான வரி கட்ட வேண்டியதில்லை; நுகர்வோர் நீதிமன்றங்களில் கூண்டேற வேண்டியதில்லை; நினைத்த நாட்களில் விடுமுறை; ட்ரான்ஸ்பர் போன்ற தொந்தரவில்லை- எவ்வளவு வசதி பாருங்க?ஆனா அது கொஞ்சம் மக்கு, மருத்துவம்தான் படிக்கப் போவதா பீற்றிக்கொண்டிருக்குது, தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?)

இந்த மாதிரி ஆசிரியர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் மாறத் தொடங்கியபின், மாணவர்களின் மனோபாவமும் மாறத்தானே செய்யும். நல்ல மதிப்பெண்களெடுத்து வாத்தியார் கையால் மோதிரக் குட்டு வாங்கும் சந்தோஷங்களே சமீப காலங்களில் இல்லை. வாத்தியாருக்கு PET மாணவன், குறிப்பிட்ட வாத்தியாரின் ரசிகர் கூட்டம் போன்றவையெல்லாம் இருக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.அப்படியே இருந்தாலும், இலுப்பைப் பூ போல்தான்னு நினைக்கிறேன்.
ரசிகர் கூட்டம் இருக்குதோ இல்லையோ, ஹால் டிக்கெட் கைக்கு வந்ததும், வாத்தியாரைத் `தனியாக கவனிக்கும்’ கூட்டம் இருக்கிறதென்பதை சமீபத்தில் தெரிந்துகொண்ட போது அதிர்ச்சியாக இருந்தது. `வினை விதைத்தவர்கள்தான் வினை அறுக்கிறார்கள்’ என்பது புலன் ஆனாலும், கேட்கும்போது மனது வலித்தது.
`எங்க காலத்திலே’ என்று ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் முகத்தை சுழிக்கும் இப்போதைய இளைய சமுதாயம், எங்கள் கால ஆசிரியர் - மாணவர் உறவுகளைப் போன்ற சந்தோஷங்களை இழந்த ஏழைகளே!
இனிக்க இனிக்க தமிழ் உணர்வு ஊட்டி, இணையம் வரை நட்புள்ளங்களைப் பெற வைத்த தமிழாசிரியர் குழைக்காதன் சார்! அவரை சார் என்று சொன்ன காலங்களை விட `பெரியப்பா’ என்று சொல்வதுதான் அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அவரது அன்றைய மாணவர்கள் இன்றும் ஒரு பெரியப்பாவிடம் காட்டும் உண்மையான வாஞ்சையுடன் அவரைக் கண்டு அளவளாவுவது அரிய காட்சி. `டேய் நாராயணா உன் பெயரை எப்படி எழுதறது தெரியுமா’ன்னு சமீபத்தில் என் தம்பியிடம் `ந்ஆர்ஆய்அண்அன்’ என்று அந்த நடுங்கும் கரங்களால் எழுதிக் காட்டியபோது மெய்சிலிர்த்தது.தமிழ் மீது அவருக்கிருந்த ஈடுபாடு, இப்போதைய ஆசிரியர்களில் காண முடியுமா என்பது சந்தேகமே! அவர்மேல் எங்களுக்கிருக்கும் மாறா அன்பு, தற்போதைய மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியர்கள் மேல் இருக்குமா? இன்னும் கணிதம் சொல்லிக் கொடுத்த இப்ராஹிம் சார், ஆங்கிலம் கற்றுத் தந்த அந்தோணி முத்து சார் என்று ஒரு தேசிய ஒருமைப்பாடே எங்கள் பள்ளியில் கோலோச்சி எங்களை வழிப்படுத்தியது. ஊருக்குப் போனால் பழைய சாரையெல்லாம் ஒரு ரவுண்டு பார்க்கப் போவது ரொம்ப பிடித்த நிகழ்ச்சி. இப்போதைய பிள்ளைகள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி சென்ற பின், பழைய பள்ளியின் பக்கம் தலை வைத்துப் படுப்பதே தண்டனைபோல் அல்லவா பிள்ளைகள் நினைக்கிறார்கள்.
(இவை பொதுவான நிகழ்ச்சிகள். எங்கள் வீட்டிலும் ஆசிரியைகள்,
லெக்சரர்கள் உண்டு. தனிப்பட யாரையும் புண்படுத்தும் நோக்கமும் அல்ல.)

Wednesday, November 09, 2005

`ராகிங்'ன்னா என்ன?

மருத்துவக் கல்லூரி ராகிங் என்பது பரவலாக அலசப் படும் ஒன்று. மகனோ மகளோ மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப் படும்போது அதை முழுமையாக அனுபவிக்கமுடியாதபடி, சின்ன நெருடல் ராகிங் காரணமாக எல்லா பெற்றோரிடமும் இருக்கும். அவ்வளவு மாகாத்மியம் பொருந்திய ராகிங் பயங்கரத்திலிருந்து தப்பித்த பெருமை எங்கள் வகுப்பையே சாரும்.
திருநெல்வேலி மரு.கல்லூரியில் முதலாமண்டு காலடி வைக்கிறோம்,தெரிந்தவர்களும் நண்பர்களும் பயம் காட்டி அனுப்பியிருந்த நேரம்.லேடீஸ் ஹாஸ்டலில்(House of angels) இருந்து வகுப்பறை வரை ஊர்வலம் போல் நாங்கள் கலர் கலராக செல்ல, முன்னும் பின்னும் இரு `அடியாட்கள்’ எங்களுக்கு காவலுக்கு வந்தாங்க. எங்க கல்லூரியின் சைக்கிள் ஸ்டாண்ட் தான் எல்லா நல்லது கெட்டதிலும் பங்கேற்கும் கதாபாத்திரம் (`அழகன்’ படத்து டெலிபோன் மாதிரி). எல்லா சீனியர் குங்ரகு(மாற்றிப் படிக்கவும்-குரங்கு)களும் வரிசையா நின்னுகிட்டு கத்தறதும், சீட்டியடிக்கிறதும், முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பாவம்போல தலை குனிந்து போனோம்.
ஆனால் சாயங்காலம் ஆனதும் சீனே மாறிப்போச்சு!

ரொம்ப நாள் நிலுவையில் இருந்த கல்லூரி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்ததால், எங்களுக்கு ராகிங்கில் இருந்து exemption. போட்டியிடுபவர் பற்றிய எந்த விபரமும் அறியப்படாதவர்கள் என்பதால், எங்களை தாஜா பண்ணினா கணிசமான வோட்டு கிடைக்குமே!! எனவே இரண்டு தரப்பினரும் அன்பைப் பொழிஞ்சு தள்ளிட்டாங்க. (ஜாதி பிரிவு, மதப் பிரிவு, பொருளாதாரப் பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகளை அந்த தேர்தல் எங்களுக்குள் உண்டாக்கி அதனடிப்படையிலேயே நண்பர் வட்டம் அமையும் வண்ணம் செய்துவிட்டது ஒரு வகையில் நெருடலான பாதிப்பே)

என்னதான் ராகிங் இல்லையென்று சந்தோஷப் பட்டுக் கொண்டாலும், அதை இழந்ததால் நாங்கள் இழந்ததும் கொஞ்சம் அதிகமே. வக்கிரப் படுத்தப் படாமல் செய்யப் பட்ட ராகிங் மூலம் சீனியர் மாணவர்களின் அன்புக்கு பாத்திரமாகும்போது, நிறைய உதவிகள் கிடைக்கும். கஷ்டப்படும் மாணவர்களுக்கு புத்தகங்கள் முதலானவை சேகரித்துக் கொடுப்பதிலிருந்து, பீஸ் கட்ட தாமதமாகும்போது உதவி செய்வது வரை நிறைய நட்புணர்வும் உருவாகும். எங்கள் கல்லூரி ஓரளவு கிராமீயத்தனமான atmosphereஐயே கொண்டதாக இருந்ததால் ரொம்ப சீரியஸான ராகிங் இருக்காது. ஆனால் சின்ன சின்னதா ரசிக்கிறமாதிரி நிறைய நடக்கும். அது முதலாண்டில் மட்டும் அல்ல, முதல் clinical yearஇன் போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நுழையும் வரை நடக்கும்.

உதாரணத்துக்கு:
முதல் க்ளினிகல் ஆண்டில் ஊசிபோடும் பிரிவில்தான் முதல் பாடம் ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் க்ளாஸ் சிரிஞ்ச் தான். அதை ஸ்டெரிலைசரில் இருந்து எடுத்து பிக்ஸ் பண்ணி ஊசி மாட்டி, மருந்து ஏத்தி-அப்பப்பா பெரிய வேலை அப்போது. அடிக்கடி சிரிஞ்ச் கீழே விழுந்து உடைந்து செவிலியர்களிடம் திட்டு வாங்குவதும் நடக்கும். எனக்கு immediate senior மாணவர் ஒருவர், என்னை குமைச்சுடணும்கிற நோக்கத்தோட வந்து தனக்கு ஊசி போட்டு விடுமாறு கையைக் காட்டிட்டு நின்றார். கையைப் பிடித்து ஊசி போட்டால் காலேஜ் முழுக்க, `அவள் என் கையைப் பிடிச்சா’ன்னு புரணி பேசறது, போடாமல் தயங்கி நின்னா அதையே சாக்காக வைச்சுகிட்டு மேலும் மேலும் கிண்டல் பண்றது. இதுதான் அங்கே நடைமுறை. அதனால் சீனியர் குங்ரகுங்க தலையைப் பார்த்ததுமே பெண்கள் கூட்டம் ஒழிஞ்சுக்குவாங்க. நாந்தான் கொஞ்சம் அடாவடி ஆச்சே, பொறுமையா B12 ஊசியை லோடு பண்ணினேன், நிதானமா அவர் சட்டைக் கையை மடிச்சுவிட்டுட்டு நறுக்குன்னு ஊசியை ஏத்திட்டேன். இதை எதிர்பார்க்காத அவர் `ஆ’ன்னு கத்தினதும் சக நண்பரே சிரிச்சுட்டார். அதற்குப் பிறகு நாங்க நல்ல நண்பர்களாயிட்டோம்.

ஆண்களுக்கு ராகிங் கொஞ்சம் சீரியசாக இருந்திருக்கலாம். என்ன மாதிரி ராகிங் செய்யப்பட்டோம்னு இது நாள்வரை எங்க வீட்டுக்காரர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லையே!!

ஆமா! ராகிங்னா என்ன?(தலைப்புக்குப் பொருத்தமா வந்திட்டேனா?)

முகம்தெரியாத மனிதர்கள்
முதல்தரம் பார்க்கும்போது
முரட்டுத்தனம் காட்டினாலும்

இறுதிவரை இணைந்து நின்று
இன்னுயிர் நண்பர்களாவதுதான்
நாங்கள் கண்ட ராகிங்!!

இன்றைய ராகிங் கண்டு
நானும் பயப்படுகிறேன்
மகளைக் கல்லூரி அனுப்ப!!