Tuesday, June 20, 2006

வாலிபமே வா! வா!!

வளர் சிதை மாற்றம்

பன்னிரண்டு வயது வரை
குட்டைப்பாவாடை ரெட்டைஜடை என்று
பட்டாம் பூச்சியாய்ப் பாடித் திரிந்தேன்

பார்த்ததெல்லாம் ஆசைப்பட்டேன்
பிடித்ததெல்லாம் பற்றிக் கொண்டேன்
கிடைக்காத போது அடம் பிடித்தேன்

தோழனோ தோழியோ பேதமின்றி சுற்றினேன்
தோலுக்கு வெளியேயும் பேதம் அறியேன்
தோழமை ஒன்றே சுகம் என்றிருந்தேன்

பதின்மூன்று வயது வந்தேன்
பார்வைகளின் பேதம் கண்டேன்
பட்டும்படாத உறவுகள் அறிந்தேன்

குட்டைப் பாவாடை கணுக்கால் இறங்கியது
மார்புக் கவசமாய் முந்தானை மூடியது
ரெட்டை ஜடை ஒருமைக்குத் தாவியது

பள்ளித் தோழர்கள் பாவிகளாக்கப் பட்டனர்
பள்ளி செல்லும் பாதை பரிசீலிக்கப்பட்டது
பள்ளி செல்வதே கேள்விக்குரியானது!

குதித்து விளையாடுவது தடுக்கப்பட்டது
குழுவினருடன் அரட்டை அஸ்தமனமானது
குனிந்து நடக்கக் குட்டு வைக்கப் பட்டது.

வயதுக்கு வரும் பருவம் என்றழைத்து
சிறு மலரின் சிறகுகளைப் பிய்த்துவிட்டு
பூ மலரும் நாளுக்கான முன்னேற்பாடாம்?!!!

நண்பர்களைப் பார்த்தும் வந்ததடி நாணம்
எதனாலோ இந்த இம்சைகள், அறியோம்
எதிரில் பார்த்தும் விலகிப் போனோம்

அப்பா பக்கத்தில் படுத்துக் கதை பேசத் தடை
அண்ணா தம்பிகளைத் தொட்டுப் பேசத் தடை
அடுத்த வீட்டு ஆண்களையோ பார்க்கவே தடை!

அடக்குமுறைகளும் எதிர்ப்பு இயக்கங்களும்
அடுக்களை தொடங்கி தெருப்படி வரை தொடர்ந்தது
அம்மா பிள்ளை சண்டைகள் தினமும் ஆர்ப்பரித்தன

அப்பாடி!

ஒருவழியாய்ப் பதினெட்டில் நுழைந்தேன்!
பள்ளியிலிருந்து கல்லூரி செல்லும் பருவம்
பழமையிலிருந்து மாறத் துடிக்கும் மனம்.
பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சித்தனம்

பதின்ம வயதுகளின் தயக்கம் நீக்கி
பத்தாம் பசலித்தனங்களிலிருந்து விடுபட்டு
இரண்டும் கெட்டான்தனத்திலிருந்து
இனி பெறப் போவது சுதந்திரம்!


BYE BYE ADOLOSCENCE!!
வாலிபமே வா வா!!

Monday, June 12, 2006

சண்டைக்கு இழுக்கும் ஜாதி

தருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்!
ஆனாலும் இந்த ஜாதிச் சண்டை இடைவெளி விட்டு விட்டு தவணை முறையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு மூலமும் கிடையாது, முடிவும் வராது. ஜாதி வேணுமா வேண்டாமான்னு ஒரு தர்க்கம், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி காட்டமான இன்னொரு தர்க்கம், இடையிடையே என் ஜாதி, உன் ஜாதி என்று தனிப்பட்ட மூர்க்கமான சர்ச்சைகள்- இவர்கள் எல்லோருமே படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகிவிட்டவர்கள்; அல்லது அடுத்த தலை முறையின் எதிர்காலத்துக்கு வழி வகை செய்து விட்டவர்கள்; அத்தி பூத்தாற் போன்றவர்களே இளைஞர்களாக இருக்கும் வாய்ப்பு. இரண்டும் கெட்டான் தனத்தில் இருக்கும் மத்திய வயதினரின் பார்வையே வேறாகத்தான் இருக்கும். அவர்கள் இந்த சண்டைக்கெல்லாம் வர மாட்டார்கள். ஓரமாக உட்கார்ந்து பிள்ளைகளின் படிப்பில் ஜாதி விஷயம் எத்தனைதூரம் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஆரய்ந்து கொண்டு இருப்பார்கள். ஜாதி அவர்களின் ஒவ்வொரு நாள் அசைவிலும் அங்கமாகியிருக்கும்.
பிறப்பு பதிவு பண்ண மருத்துவ மனையில் பதிவேடுகளில் முத்திரை பதிக்கும் நாளில் தொடங்கி மக்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பருவம் வரை இந்த ஜாதி அவர்களின் நிழல் போலத்தானே நடை போடுகிறது. எனக்கு ஜாதி பற்றி பேசுவதே பிடிக்காது என்று புறம்தள்ளி நடக்க முயற்சித்தால் பிறப்புச் சான்றிதழ்கூட வாங்க முடியாமல் தாசில்தார் அலுவலகத்துக்கும் மருத்துவ மனைக்கும் அல்லாட வேண்டியதுதான். இதில் தண்டிக்கப்படுபவர் யார்? எவருடைய பிறப்பு சான்றிதழிலும் ஜாதிக் குறியீடு தேவையில்லை என்று அரசு ஆணை போடப்பட்டால் ஒழிய அந்த கட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது. பள்ளி இறுதியில் ஜாதிச் சான்றிதழ்கள் பள்ளிக்கூடம் மூலமே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது ஆணை போடப் பட்டுள்ளது. அது வழங்கப்படும் விதம் பற்றி கேட்டால் இன்னும் கேலிக்குரியது. மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்தில் இருந்து கையெழுத்து வாங்க வருவார்கள். பள்ளியில் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு பழகிய குழந்தைகள் வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திடுவார்கள். ஜாதிச் சான்றிதழ் வந்த பிறகு பெற்றோர் மண்டையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்படி இருக்கும். சுத்த கிறிஸ்தவ பெயர்கள் இந்து மதத்திற்கும், இந்து பெயர்கள் முஸ்லீம் மதத்திற்குமாக மாற்றி எழுதப் பட்டிருக்கும் (ஜாதி ஒருங்கிணைப்பை சிறுவயதில் முறைப்படுத்தும் முகாந்திரமாக இந்த ஏற்பாடு இருக்குமோ என்று சந்தேகப் பட வேண்டாம்) எந்த ஜாதியா வேணா இருந்திட்டுப் போகட்டும்னு வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்க முடியுமா? ரிசர்வேஷன் பிரச்னைகள் அடுத்து கல்லூரிப் படிப்பிற்குத் தடைக் கல்லாகி விடுமே! விரும்பாவிட்டாலும் வித்தியாசத்தை நேர் செய்ய வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
என்னுடைய நெருங்கிய நண்பர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது. அவர்கள் கலப்பு மணம் செய்தவர்கள். இருவரின் ஜாதியோ மதமோ அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாதவாறு இயல்பான வாழ்க்கை நடத்துபவர்கள். ஒருவர் பார்வர்ட் கம்யூனிட்டி, அடுத்தவர் பிற்படுத்தப் பட்டோர் சமூகம். தங்கள் மகனுக்கு எந்த ஜாதியும் தேவையில்லை என்ற உணர்வுடன் ஓப்பன் கோட்டாவில் பதிவு செய்திருக்கிறார்கள். அவனது படிப்புக்கு ஏற்ற கல்வி கிடைக்கட்டும் , வேறெந்த ரிசர்வேஷனும் தேவையில்லை என்பது அவர்களின் ஒருமித்த கருத்து! அவனும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். ஆனாலும் இந்த ரிசர்வேஷன் பிரச்னையால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஏனைய நண்பர்கள் அனைவரும், அவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வாங்கும்படி நண்பரை ஒரே நச்சரிப்பு, என்னையும் சேர்த்துதான். `ஆடை அணியா ஊரில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கருத்துதான் என்னுடையதும். ஜாதி அடிப்படையிலேயே கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு சமுதாயத்தில், ஜாதியை மறுதலித்தல்கூட தவறான செய்கைதான். நல்ல வேளையாக எங்க எல்லோருக்கும் ஆசுவாசம் கிடைக்கும்படி ஓ.சி. கோட்டாவிலேயே நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டான். ஆனால் எத்தனை பேருக்கு இத்தைகைய வாய்ப்பு கிடைக்கும்? எத்தனை பெற்றோர்களால் புரட்சிகரமான கருத்துகளுக்காக புதல்வர்களைப் பலியிட முடியும்?பாரதியின் கனவுகளைப் பழங்கணக்காகத்தான் பார்க்க முடியும், மேற்கோள்களாக்கத்தான் காட்ட முடியும் இப்போதைக்கு.

எனக்குத் தெரிந்து ஜாதி பார்க்கப்படாத ஒரே ஏரியா காதலர் பூங்காதான். அங்கு ஆண் பெண் என்ற பேதம் தவிர ஜாதி மதம் எல்லாமே புறம் தள்ளப் பட்டவைதான். அங்கு கூட கல்யாணம் என்ற சடங்கு நிகழ்த்தப்பட வேண்டிய நிலையில்தான் ஜாதியும் மதமும் மூக்கை நுழைக்கின்றன. பெரிசுகளின் ஆசியோடு கல்யாணம் நடத்தப்படுமானால் ஏதாவது ஒரு ஜாதியும், மதமும் நசுக்கப்பட்டு dominant person இன் முறைப்படி எல்லாம் நடக்கும். அங்கும் ஜாதி மத பேதம் அழிக்கப்படுவதில்லை, இணைகோடுகள் ஒரே கோட்டில் செலுத்தப் படுகின்றன, அவ்வளவுதான். இதையெல்லாம் மீறி எங்கோ சில இடங்களில் ஜாதி மத பேதங்கள் தவிர்த்த அனுசரணையான திருமணங்களும் நடக்கின்றன. அவையெல்லம் மியூசியத்தில் உள்ள கண்காட்சிப் பொருளாகத்தான் சமுதாயத்தால் பார்க்கப் படுகிறது.
ஜாதியே தேவையில்லை என்று வாழ்வது நமது நாட்டில் சாத்தியமில்லை.
நமது குழந்தைகளுக்கு ஜாதி வேறுபாடுகளற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் தற்போதைய நிலைமையில் சாத்தியமான ஒன்று. நம்மால் செய்யக்கூடிய ஒன்றும்கூட.
எங்களது பள்ளிப் பருவ காலம் வரையில்கூட ஜாதிய வேறுபாடுகளை உணர்த்தும் உணவுப் பழக்கங்கள் இருந்தன. தயிர் சாதம் vs பழைய கஞ்சி போன்ற பிரிவினைகள் இப்போது பள்ளிகளில் காணப் படுவதில்லை. சைவம் vs அசைவம் கூட இப்போது ஜாதிப் பிரிவுகளைச் சொல்வதில்லை. சின்னச் சின்ன முன்னேற்றங்கள் அடுத்த தலைமுறையில் மெதுவாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை விடாப்பிடியாக கொழுந்துவிட்டு எரிய வைப்பவை அரசியல் ஆதாயங்களும் பதவி வேட்டைகளும்தான்.
எத்தனையோ உப்பு சப்பற்ற விஷயங்களுக்கெல்லாம் சட்டம் இயற்றவும், ஆணை பிறப்பிக்கவும் தெரிந்த அரசு எந்திரத்துக்கு, ஜாதி என்ற வார்த்தையை முக்கியமான பதிவுகளிலிருந்து விலக்க முடியாதா? கண்ணிருக்கும் குருடர்கள்! ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது!!

Tuesday, June 06, 2006

மது, நானும் வந்திட்டேன்!!!

வலைப்பதிவர் : தாணு

வலைப்பூ பெயர் : நட்புக்காக

சுட்டி :http://forusdear.blogspot.com

ஊர் : திருச்செந்தூர் அருகே `ஆறுமுகநேரி’ என்ற கிராமம்

நாடு :தமிழ்நாடு(நம்மை இணைத்ததும் அந்நாடே அன்றோ?)

வலைப்பூ அறிமுகம்செய்தவர்
`ஸ்டேஷன்பெஞ்ச்’ ராம்கி!
பாலர் பருவம் முதல் பள்ளி இறுதிவரை வகுப்புத் தோழன். நேற்றுவரை `நீ’யாக இருந்தவர் வலை உலகின் பண்பாடு காரணமாக `நீங்கள்’ ஆனவர்!!

முதல் பதிவு ஆரம்பித்த நாள் :26 th August 2005

இது எத்தனையாவது பதிவு :63

இப்பதிவின் சுட்டி :http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html
(சுட்டி இலவசக் கொத்தனார் உபயத்தால் சரி செய்யப் பட்டது))
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
ஒரே விதமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழல் போரடித்த தருணத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து Japanese language கற்றுக் கொள்ள விழைவதாக ராம்கியிடம் சொன்னேன். முதலில் வலைப்பூ பற்றி அறிந்துகொள்ளுமாறு சொல்லி அதற்குரிய முகாந்திரங்களையும் டவுண்லோட் செய்து கொடுத்த போது ஆரம்பித்த பூமாலை இன்றளவும் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது.

சந்தித்த அனுபவங்கள்:
இணையம் என்றாலே ஒரு வித மூடு மந்திரம், அதில் உலாவும் அன்பர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள், நாமும் புனை பெயருடன் தான் உலா வர வேண்டும் என்று இருந்த நினைப்பைப் புரட்டிப் போட்ட இடம் வலைப்பூ; நிழல்களை நிஜமாக்கித் தந்த நிச்சய பூமி; எழுத ஆரம்பித்த தருணத்திலேயே நம்மைப் பற்றிய விவரங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிய அழகான அன்பான உலகம்; தம்பிகள் முதல் மருமகன்கள் தொடங்கி, துளசி முதல் தருமி வரை என்னற்ற நண்பர்களைத் தந்த ச்ந்தோஷமான தளம்.; இன்னும் எத்தனையோ அனுபவங்கள்.
தீபாவளியன்று கோவை அருகில் `கல்லாறு’ சுற்றுலாத் தலம் அருகே நடந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த வெளி நாட்டுத் தொலைபேசி அழைப்பு `நான் உஷா பேசறேங்க, துபாயில் இருந்து’ .( நம்ம ராமச்சந்திரன் உஷா) அந்த நிமிடம் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஒரு மத்தியான தூக்கக் கலக்கத்தில் `NJ யில் இருந்து பத்மா (தேன்துளி பத்மா) பேசறேன்’ன்னு வெகுநேரம் அளவளாவிய போது அடைந்த புளகாங்கிதம்;
செல்வராஜ் ஈரோடு வந்தபோது, அத்தனை அலுவல்களுக்கிடையிலும் நேரில் வந்து பார்த்துச் சென்றது;
இன்னும் அருணா சீனிவாஸ், நம்ம மதுமிதா( இந்தப் பதிவின் காரணகர்த்தா) தருமி போன்றோர் தொலைபேசியில் பேசியபோது கிடைத்த நட்பு;
சிங்.ஜெயகுமார் முயற்சியால் , நான் விரும்பிக் கேட்ட புத்தகத்தை, கூரியர் மூலம் என் கையில் கிடைக்க வைத்த பெருந்தன்மை-
எனது பெயரைப் பார்த்து ஒத்த பெயருடைய சில நண்பர்கள், யாஹூ குழுமத்திலிருந்து நண்பர்களாகினார்கள். சில மருத்துவ நண்பர்களும் தொடர்பு கொண்டார்கள்
(சந்தித்த அனுபவங்களே பெரும் பதிவாகிவிடும் போலிருக்கே)

பெற்ற நண்பர்கள்:
சந்தித்த அனுபவங்களிலேயே ஓரளவு நட்பு வட்டம் வந்துவிட்டது. ஆனாலும் சிவா, இளா, சிபி, பரஞ்சோதி போன்ற பக்கத்து ஊர் நண்பர்களையே, வலைப்பூக்கள் மூலம்தான் அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும்பெயர் எழுதப்படாவிட்டாலும் நண்பர்கள் வட்டம் அதிகம்தான். எனது பதிவுகளில் தளராமல் பின்னூட்டமிடும் அனைவரும் என் நண்பர்களே!

கற்றவை:
வெகுகாலமாக எழுதுவதே மறந்து போயிருந்த நேரத்தில் மறுபடியும் எழுத ஆரம்பித்ததால் கிடைத்த relaxation நன்கு பயனளிப்பதாக உள்ளது. ஒரு சிக்கலான கேஸில் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் மனத் தளர்வைக்கூட நீக்கவல்லதாக என்னுடைய எழுத்துக்கள் உள்ளது.
எழுத்து சுதந்திரம் இருந்தாலும் கண்டபடி எழுதக் கூடாது என்பதை நிறைய பதிவுகள் வாசித்துக் கற்றுக் கொண்டேன்.
சில மருத்துவ முன்னேற்றங்களைக் கூட மற்றவர்கள் பதிவின் மூலம் நிறைய நேரம் அறிகிறேன். சந்திர வதனாவின் பதிவுகள் அதில் முக்கியமானது.
நியூஸி பற்றி வெளிப்படையாகத் தெரிந்தவற்றைவிட துளசி மாதிரி நண்பர்கள் விளக்கமாக எழுதும்போது, என் குழந்தைகளுக்கு அதைக் காட்டி சந்தோஷப் பட்டுக் கொள்கிறேன்.
உள்ளங்கையில் உலகம் என்பது நிஜமாகவே ஒரு திரைக்குள் குவிந்துகிடப்பதைத் தெரிந்துகொண்டேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
பார்த்ததை, கேட்டதை, நினைத்ததை என்று எது பற்றி வேண்டுமானாலும் எழுதக் கிடைத்த வாய்ப்பு போதாதா? எடிட் செய்யப்படாமல் நம் எண்ணங்கள் பிரதிபலிப்பதே எழுதக் கிடைத்த சுதந்திரத்தால்தானே!

இனி செய்ய நினைப்பவை:
ஒவ்வொரு பதிவு எழுதியதும் ,அடுத்து தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்று நினைக்கிறேன், முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு தவணை முறையிலாவது பதிவு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.
நிறைய பதிவுகள் வாசித்துவிட்டு போய்விடுகிறேன், முடிந்த அளவு பின்னூட்டமும் இட வேண்டுமென்று முயலவேண்டும்.
மதுமிதா போன்றோர் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதைப் பார்க்கும்போது, நாமும் ஏதாவது செய்யவேண்டுமென்று முனைப்பு வருகிறது, செயல் படுத்த முடிவதில்லை. ஏதேனும் ஒரு புதுமை செய்ய வேண்டும். (ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஆரம்பக்கல்வி திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி என்ற கிராமத்தில்.
MBBS- திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி
DGO - ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி
அரசு மருத்துவராக 15 வருடங்கள் ( வேலூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில்)
கணவரும் மருத்துவர் மயக்கவியல் நிபுணர்( அந்நாள் கல்லூரித் தோழர், இந்நாள் வாழ்க்கைத் துணைவர்)
கலப்புமணத்தில் விளைந்த முத்துக்கள் இரண்டு-
மகள் - +2 வில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்
மகன் -6 ஆம் வகுப்பு செல்கிறான்.
உடன் பிறந்தோர் என்னையும் சேர்த்து எட்டு பேர், அதில் ஒருவர் வலைப்பதிவரும் கூட!
47 வயதில் நடை பயின்று கொண்டிருக்கிறேன், ஆனாலும் முப்பது வயதுதான் மதிக்க முடியும் என்பது என் கணவரின் முகஸ்துதி! ( நம்மளைப் பற்றி நாமே மெச்சிக்காட்டி எப்படி?)

ஆர்வம்:
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது வலைப்பதிவு நண்பர்களை நேரில் பரிச்சியம் செய்து கொள்ள வேண்டுமென்று பேராவல். டூர் செல்லும்போது முன்பெல்லாம் புது இடங்களைப் பார்க்கும் ஆர்வம் இருக்கும். இப்போது அந்த இடத்தில் வலைப்பதிவு நண்பர் யாரையாவது சந்திக்க முடியுமா என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது.

(ஒருவழியா மூணு நாளா எழுதி இன்னைக்கு அரங்கேற்றிட்டேன் )