Thursday, March 31, 2022

அலை-67

 அலை-67

“பணிமூப்பு ஓய்வு”- 31.03.2018
இன்றோடு அரசு மருத்துவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈரோடு தலைமை மருத்துவமனை போன்ற பிஸியான இடத்திலிருந்து ஓய்வு பெறும்போது அதன் பின் வரக்கூடிய நாட்களை நினைத்து மலைப்பாகவே இருந்தது. சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம் ஏழரை மணிக்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாதது. மந்திரிச்சு விட்ட மாதிரி தினமும் எழுந்து அரக்கப் பரக்க ஓடிய கால்கள் மறுநாள் முதல் என்ன செய்யப்போகிறது என குழப்பம் ஏற்படுத்திய நாள் இது. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் திரண்டு வந்து விழாக்கோலம் கொண்ட நாளும் கூட.
எங்கள் வகுப்பிலேயே முதல் முதலில் அரசுப்பணியில் சேர்ந்தது நானாகத்தான் இருக்கும். 1986 ஆம் வருடம் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம்பித்த பயணம் ஈரோட்டில் வந்து நிலை கொண்டுவிட்டது. போகாத ஊரில்லை சுற்றாத அரசு மருத்துவ மனைகள் இல்லை என்பதுபோல் பல ஊர் தண்ணி குடிச்சாச்சு. உதவி மருத்துவர் முதல் துணை இயக்குநர் (பொ) வரை எத்தனையோ பதவிகளில் குப்பை கொட்டியாச்சு. அரசுப் பணியில் கற்றதும் பெற்றதும் இழந்ததும்கூட ஏராளம். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் தொடர் விடுப்பில் இருந்ததால் இயக்குநர் (DMS) ஆகியிருக்க வேண்டியதையும் இழந்தது தனி சோகக் கதை. ஆனாலும் அடிச்சுப் பிடிச்சு மறுபடி பணியில் இணைந்து ஓய்வூதியம் (Pension) பெறுவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசாச்சே!
பணி ஓய்வு பெற்ற அன்று எதிர்காலத்தைப் பற்றி ஏகப்பட்ட அறிவுரைகள் ஆலோசனைகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தொடர்ச்சியா ஒருவாரம் காலை பத்து மணிக்கு முன்னாடி படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூடாது என்பதுதான் மனதுக்குள் ஓடிய முதல் தீர்மானம். அடுத்ததாக நர்ஸிங் ஹோம் நேரத்தை மாற்றியமைத்து ப்ராக்டீஸில் முழுமையாக ஈடுபடணும். வெளிநாட்டுப் பயணங்கள் இனிமேல் தடையின்றி செல்லலாம். இப்படி ஏகப்பட்ட தீர்மானங்களோடு ஏப்ரல் மாதம் முதல் தேதி விடிந்தது.
அதன்பின் வந்த எதுவுமே நான் நினைத்தபடி நடக்கவே இல்லை. வேலைக்கு சென்ற நாட்களை விட ஓய்வு பெற்றபின் நாட்கள் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. வேலைக்குப் போகும்போது குடும்பத்தில் ஏதாவது விசேஷம் வந்தால் விடுப்பு கிடைக்கவில்லை என்ற சாக்கு போக்குடன் பத்துலே நாலு விசேஷத்துக்குப் போகாமல் இருந்துவிடலாம். இப்போ அதெல்லாம் சொல்ல முடியாது. நீ ஃப்ரீயாகத்தானே இருப்பாய், கண்டிப்பாக வந்துவிடு என்ற மிரட்டலுடன் கூடிய அழைப்புகளுக்கு கண்டிப்பாக செவி சாய்க்க வேண்டும். உறவுகளெல்லாம் தொலை தூரத்தில் இருப்பதால் சென்னைக்கும் நெல்லைக்கும் கூடுதலாக மகள் வீட்டுக்கு பெங்களூருவுக்குமாக பறந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
இப்படி இலக்கே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் நண்பன் அஸ்வதரன், முகநூலில் இலக்கின்றி செலவழிக்கும் நேரத்தில் பெண்கள் நலம் குறித்து எழுதலாமே என கேட்ட கேள்வியின் வெளிப்பாடாக குமுதம் ஹெல்த் இதழில் சில மருத்துவக் கட்டுரைகள் தமிழில் எழுத ஆரம்பித்தேன். கொரோனா காரணமாக பத்திரிக்கை வருவது தடைப்பட்டதால் மருத்துவக் கட்டுரைகள் எழுதுவதும் நின்றுபோனது.
அப்போழுதுதான் என் எண்ண அலைகளைப் புரட்டிப்பார்க்கும் “அலை” கள் மீது தவழ ஆரம்பித்தேன். முதலில் ஒரு பொழுது போக்குபோல் எழுத ஆரம்பித்தது தொடர் அலைகளாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
முதலில் எனது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அலை’விடு தூது அனுப்பிப் பார்த்தேன். ஓரளவு ரசிக்கக்கூடிய தன்மையில் இருப்பதைப் புரிந்து கொண்டேன். அதனடிப்படையில் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு தனிமனித அநுபவங்கள் மட்டுமே, அதை எல்லோராலும் எப்படி ரசிக்க முடியும் என்ற தயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.ஆனால் எனது எழுத்துக்களின் ஊர்வலத்தில் வாசிப்பவர்களின் அநுபவங்களின் சாயலும் ஆங்காங்கே தென்படக் கூடிய வாய்ப்புகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எனது வயதைஒத்த நண்பர்களுக்கு பரிச்சயமான நிகழ்ச்சிகள் “அலை”யில் தென்படலாம், ஆனால் இளைய தலைமுறைக்கு போரடிக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறும் உரையாடல்களின் இடையில் “மேடம்! உங்க அலை சூப்பராக இருக்குது” என்ற விமர்சனங்கள் நிஜமாகவே என்னை அசைத்துப் போட்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுவன் என் “அலை”யின் இணைப்பு (Link) கேட்டபோது ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்போல் ஆகிவிட்டேன்.
அவ்வப்போது தலைகாட்டும் தங்க்லீஷ் வார்த்தைகள், பேச்சு வழக்கு சொற்கள், கொடுந்தமிழ் வார்த்தைகள் என்ற கதம்பத்தை எனது எழுத்துக்களில் அங்கங்கே படர விட்டிருப்பேன். என்மேல் அக்கறை உள்ள சில நண்பர்கள் இன்னும் நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தலாமே என்று அன்புடன் கேட்டிருக்கிறார்கள். எனது ரசிகர்கூட்டம் 12 வயதுமுதல் 85 வயதுவரை , தமிழே தெரியாத பிற மொழியினரையும் உள்ளடக்கியது. Google Translate இல் போட்டு வாசித்து ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் சென்றடையும் போது சில சமரசங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வார்த்தைகளின் வீரியம் வாசிப்பவர்களை பயந்து ஓட வைத்துவிடக் கூடாது என்பதும் ஒரு காரணம்.உண்மையாகவே என் நண்பன் ஒருவன் ஃபோன் செய்து “அக்கா! நல்லா எழுதுறீங்க, ஆனால் இடையிடையே புரியாத பாஷை எல்லாம் எழுதுறீங்க. ‘பதின்ம வயது’ன்னா என்ன?” என்று கேட்டான்.
தினசரி எழுதும் வழக்கமும் எனக்குள் இல்லை. சில சமயம் வெட்டியாக கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன், ஆனால் எழுதத் தோன்றாது. சில சமயம் சமையல் செய்யும்போது கவிதைபோன்ற வார்த்தைகள் அடுக்கடுக்காகத் தோன்றும். வேலைகளை முடித்துவிட்டு எழுத உட்கார்ந்தால் எதுவுமே சரியாக வராது. ஒரு மூடு வந்து எழுதிக் கொண்டிருக்கும்போது நோயாளி வந்திருப்பதாக கதவை மெதுவாகத் திறந்து சேதி வரும். எப்படியோ திக்கித் திணறி நினைப்பதை வார்த்தை வடிவத்தில் கொண்டுவருகிறேன்.
நான் தமிழில் எழுதுவதைப் பார்த்து என் தோழர்களும் உறவினர்களும் ஆச்சரியப் படுகிறார்கள். தமிழில் இப்படி எழுதுவாய்
என்றே தெரியாதே என்று
அதிசயித்துக் கேட்டிருக்கிறார்கள். தமிழ் ஐயா மறைதிரு. குழைக்காதன்
அவர்களையே இந்தப் பெருமை சாரும்.
இதுபோல் எழுதி அரங்கேற்ற சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகுதான் நிறையபேரின் திறமைகள் வெளிக் கொணரப் படுகின்றன. தோழி பானுவின் பாடும் திறமை குடத்திலிட்ட விளக்காக இருந்தது. SMULE வந்த பிறகு அவளின் பாடல்கள் எங்கெங்கெல்லாமோ ஒலித்துக் கொண்டிருக்கிறது. சுபாவின் Relax Please, ராம்கியின் ஜென்ராம் மீடியா எல்லாமே ஊடகங்களின் வளர்ச்சியால் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைகிறது.
ஊடக வளர்ச்சி தனிமனித சலிப்புகளை ஓரம்கட்டிவிடுகிறது.எனது எழுத்துக்கள்
ஏற்றம் பெற்றிருப்பதும் வாட்ஸ்
ஆப் மூலமாகத்தான். பணி ஓய்வுக்குப்பின் என்ன செய்வது என்ற கவலையே இல்லாமல் அனைவருடனும் தொடர்பில் இருக்கும் செளகரியத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான் நாலு ஆண்டுகள் கழிந்த பின்னரும் அதே உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நான் நினைத்தபடியே நடந்து கொண்டிருக்கிறது. தொலைதூர பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் நிறைய போக ஆரம்பிச்சாச்சு.
பழைய வழக்கப்படி காடாறுமாசம் நாடாறுமாசம் எல்லாம் இப்போ கிடையாது. மூணுமாசம்தான் முறிவுப்புள்ளி. சைனா, ரஷ்யா போன்ற நாடுகளை பூகோள புத்தகத்தில் பார்த்திருந்த காலம் போய் மாஸ்கோவிலும் பீஜிங்கிலும் ஃபோட்டோ எடுக்கும் அளவுக்கு ஊர் சுத்தியாச்சு. கொரோனா காலத்தில்கூட தொலை தூரம் போக முடியாட்டியும் பக்கத்திலே சத்தியமங்கலம் காடுகளில் ஹாஸனுர், கடம்பூர்னு குட்டிகுட்டி பிக்னிக் போய்க்கொள்ள வேண்டியதுதான். ஒன்றுக்கும் வழியில்லாட்டி இருக்கவே இருக்குது சித்தோட்டில் உள்ள தோட்டமும் தண்ணீர்த் தொட்டியும்.
பணிஓய்வு என்பது அரசு வேலையில் இருந்து மட்டும்தான். மருத்துவராக இல்லாமல் ஆசிரியையாகவோ கிளார்க்காகவோ இருந்தால்கூட இப்படித்தான் வாழ்க்கை செல்லவேண்டும். வயது மூப்பு வந்துவிட்டதாக நினைக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். மனதின் இளமை வாழ்க்கையை ரசிக்க வைக்கும்.
4

அலை-66

 அலை-66

“அந்த ஏழு நாட்கள்”
நினைவலைகளுக்கு நடுவே ஒரு நிகழ்வலை. எத்தனையோ ஏழுநாட்களைக் கடந்து வந்திருந்தாலும் சில நாட்கள் மறக்கமுடியாதவை ஆகிவிடும். இந்த வருடம் மார்ச் 13 முதல் 19 வரை வந்த ஏழுநாட்களும் மிகக் குறிப்பிடப்பட வேண்டியவை. கல்லூரி காலத்து நாட்களை மறுபடியும் வாழ்ந்து பார்த்த ஒரு அநுபவம். 77ஆம் அண்டு வகுப்பு நண்பர்கள் பதினோரு பேர் குடும்பத்தினர் நால்வர் என பதினைந்துபேர் கொண்ட குழுவாக வடகிழக்கு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம்.
எனக்கு ரொம்ப நாளாக அசாம் மாகாணத்தில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அதனுடன் சேர்த்து அருகிலுள்ள மேகாலயாவின் சிரபுஞ்சியையும் பார்த்துவிடலாம் என யோசனை வந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வகுப்புத் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது கொஞ்சம் தொலைவான இடங்களுக்கு சென்று வரலாமே என்ற விவாதங்கள் நடந்திருந்தது.இந்த பயணத்துக்கு யாரெல்லாம் வரமுடியும் என்ற வேட்டையில் இறங்கினேன்.
எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் இணக்கமாக இருப்பவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கணும். முட்டுக்கட்டை போடுபவர்களிடம் ஆரம்பித்தால் திட்டமே சொதப்பலாகிவிடும். எனக்கு இணையாகவும் துணையாகவும் இருக்கும் நளினி மற்றும் மாரியிடம் முதலில் சொன்னேன். இருவருக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் இருந்தபோதும் அவற்றை வேறு நாட்களுக்குத் தள்ளி வைத்துவிட்டு ஓகே சொல்லிவிட்டார்கள். சோம்ஸ் அண்ணாதான் எப்பவும் எங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர். எழிலுக்கு முதுகுவலி இருந்ததால் நான் மட்டும்தான் போவதாக ஏற்பாடு. நளினியின் கணவர் ரவி , எழில் வராததால் கம்பெனி இல்லையே என முதலில் தயங்கினாலும் மற்ற நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் சரியென்று சொல்லிவிட்டார்.
அடுத்ததாகப் பிரயாணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாஸ்கர் அண்ணாவும் சரியென்று சொல்லிவிட்டார்கள். நாகர்கோவில் மும்மூர்த்திகள் ஸ்டீபன், சைமன், முத்தையாவும் நாலாவதாக பாலகிருஷ்ணனும் சேர்ந்ததும் டூர் களைகட்டிவிட்டது. எங்கு சென்றாலும் மறக்காமல் இணையக்கூடிய பராசக்தியை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் சமீபத்திய மூட்டு வலியிலிருந்து தேறி வரும் அவளுக்கு அசாம் ரோடுகளின் பயணம் தாங்குமா என்ற சந்தேகத்துடன் மெதுவாகக் கேட்டேன். உடனே வருவதாகக் கூறிவிட்டாள். பரா வரும்போது ரூஃபஸும் வந்துதானே ஆகவேண்டும்.
சில பல காரணங்களால் அண்ட்ரூ, பானு, ஹரி எல்லோரும் இந்த முறை வர முடியவில்லை.
சாலிட்டீஸ்வரனின் மகன் அசாம் மருத்துவக் கல்லூரியில் MD படித்துக் கொண்டிருந்ததால் அவரையும் கூப்பிட்டுப் பார்த்தேன். முதலில் தயங்கினாலும் மகன் கொடுத்த உற்சாகத்தில்
ஜெயந்தியும் அவரும் சேர்ந்து கொண்டார்கள். சைமனின் மகள் ஷிரின் இயற்கை வளங்களில் ஈடுபாடு உள்ளதால் அவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.
முதலில் பத்துபேர் செல்வதாக இருந்ததால் 12 இருக்கைகள் கொண்ட வண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. பதினைந்துபேர் சேர்ந்துவிட்டதால் கொஞ்சம் பெரிய வண்டியாக மாற்றி ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னும் அதிக நபர்கள் சேர்ந்தால் இரண்டு வண்டிகள் அல்லது பேருந்து மாதிரி பெரிய வாகனம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ட்ராவல்ஸில் சொல்லிவிட்டதால் அதன் பின்னர் யாரிடமும் சொல்லாமல் அமுக்கமாக இருந்துவிட்டேன்.
ஞாயிறு காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து கெளகாத்திக்கு நேரடி ஃப்ளைட். சனிக்கிழமை இரவு அனைவரும் சென்னை வந்துவிடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தென்பகுதியில் இருந்து வருபவர்கள் தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் வந்துவிட்டார்கள். திரும்பிச் செல்லும்போது அனைவருக்குமே திருவனந்தபுரம் கனெக்டிங் விமானம் பதிவு செய்யப்பட்டு விட்டது. நான் சனிக்கிழமை ட்ரெயின் மூலம் சென்னை சென்று தம்பி நாராயணன் வீட்டில் தங்கிக்கொண்டேன்.
கெளகாத்தி விமான நிலையத்தில் இறங்கி அங்குள்ள பிரபலமான கோவில்கள் ஒன்றிரண்டு பார்த்துவிட்டு ஷில்லாங் சென்று தங்க வேண்டும். காலை உணவு விமான நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஷிரின் மற்றும் ஜெயந்தி தவிர அனைவரும் அறுபது தாண்டியவர்கள். பசி தாங்குவது கஷ்டம். இதைக்கேட்டதும் தம்பி மனைவி விஜி அதிகாலை 3 மணிக்கே எழுந்து வாழைப்பூ வடை சுடச்சுட செய்து தந்தாள். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர் என்பதால் ஆசையுடனும் அக்கறையுடனும் செய்துகொடுத்தாள். ஏற்கனவே மாரி முறுக்கு செய்வதாகவும், நான் ப்ளம் கேக், பராசக்தி கடலை மிட்டாய், தட்டை , அவித்த பனங் கிழங்கு கொண்டுவருவதாகவும் திட்டம் தீட்டிவிட்டோம்.
அந்த ஏழுநாட்களின் முதல் நாளாக ஞாயிறு அதிகாலை அனைவரும் விமான நிலையத்தில் ஒன்று கூடினோம். அனைவரையும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. செக்யூரிட்டி செக் முடிந்தவுடன் வடை, கேக் ,முறுக்கு என்று வித விதமாக சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து திரும்பி வரும்வரை அந்த உற்சாகமும் சந்தோஷமும் குறையவே இல்லை.
North East Tourism ரொம்ப அலுப்பூட்டும் வகையில் ரொம்ப நேரம் பிரயாணம் செய்வதாகவே இருந்தது. ஆடி காரும் பென்ஸ் காரும் உள்ளவர்களெல்லாம் அந்த Tempo Traveller Van இல் கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தபோதும் நண்பர்களுடன் இணைந்திருந்த சந்தோஷம் மட்டும் குறையவே இல்லை.
பிரயாணத் திட்டத்தில் ஏகப்பட்ட இடங்கள் பார்க்க வேண்டி இருந்ததால் தினம் தினம் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கும்படி இருந்தது. பெட்டியைப் பிரிப்பதும் அடுக்குவதும் தினசரி வாடிக்கையாகிப் போனது. நாங்கள் சென்ற சீசனும் ரொம்ப வெயில் காலமாக இருந்ததால் வண்டியில் சென்ற பிரயாணங்கள் கடுப்பேத்துவதாகவே இருந்தது. ஆனால் பார்க்க சென்ற ஒவ்வொரு இடமும் மிகச் சிறப்பானதாக இருந்ததால் அந்த கஷ்டங்களை பொறுத்துக் கொண்டோம்.
மேகாலயாவில் முதல் முதலில் பார்க்கச் சென்றது டவ்கி ஆற்றில் படகுச் சவாரி. பங்களாதேஷ் எல்லையில் இருந்த ஆற்றின் தெள்ளத்தெளிவான நீரோட்டத்தில் கீழே தெரிந்த பளிங்குக் கற்களும், அமர்ந்திருந்த படகின் நிழலும் அருமையோ அருமை.ஆற்றின்
குறுக்காகவே
இரண்டு நாடுகளின்
காவலர்களும் நின்று
கொண்டு எல்லை தாண்டுபவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்
கள்.அந்த நிலையிலும் ஷிரின் அந்தப் பக்கம் போய் இளநி குடிச்சுட்டு வந்துவிட்டாள்.மெஹா சைஸில் இருந்த எலந்தப்பழத்தில் பச்சை மிளகாய் மசாலா போட்டு சாப்பிட்டது சூப்பர் சுவை.
அங்கிருந்து Living root Bridge (single decker) சென்றோம். ஆற்றின் இரு கரையில் உள்ள ரப்பர் மரங்களின் வேர்கள் எதிர் கரைக்கு நீண்டு சென்று இயற்கையான பாலங்கள் ஏற்படுத்தியிருந்தன. இது போல் பத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் மேகாலயாவில் இருக்கின்றனவாம்.500 வருடம் பழமையான பாலங்களும் உண்டு.
பாலத்துக்குச் செல்ல ரொம்ப இறங்கணும், வழுக்கும் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக பில்ட்-அப் கொடுத்து பயம் காட்டியிருந்தார்கள். அதனால் பராவை தொல்லைபடுத்த வேண்டாம் என்று வண்டியிலேயே விட்டுச் சென்றோம். ஆனால் நாங்களெல்லாம் அஞ்சு நிமிஷத்தில் வேர்ப் பாலத்துக்குச் சென்றுவிட்டோம். குற்றாலத்தில் குரங்குகள் மாதிரி ஏறித் திரிந்த எங்களுக்கு அது ஜுஜுபி trek ஆகத்தான் இருந்தது. வேர்ப் பாலத்தில் நடக்க த்ரில்லாகத்தான் இருந்தது.ஆற்றுக்குள் இறங்கி பாலத்தைப் பார்த்தால் பிரம்மாண்டமாக
இருந்தது.
அஞ்சு மணிக்கே அங்கு இருட்ட ஆரம்பித்துவிடுகிறது, அடுத்து மாவ்லிந்நாக் என்ற ஊருக்கு அடித்து பிடித்து சென்றோம்.ஆசியாவிலேயே மிக சுத்தமான கிராமம் என்று அழைக்கப்படுகிறது. யாரும் தெருக்களில் குப்பை கொட்டுவதில்லை, மூலைக்கு மூலை குப்பைத் தொட்டிகள் இருந்தன. மின்சாரம் இல்லாததால் முழுநிலவின் அழகில் அந்த கிராமம் இன்னும் ரம்யமாகத் தெரிந்தது.
அங்கிருந்து சிரபுஞ்சி சென்று ஹோட்டலில் தஞ்சமடைந்தோம். தமிழர் ஒருவர் அங்குள்ள காசி(khasi)பழங்குடி பெண்ணை மணந்து அந்த விடுதியை நடத்தி வருகிறார். தோசை, சட்னி, சாம்பார் என அமர்க்களமாக சாப்பிட்டோம்.
பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் ‘பிரண்டை’ துவையல் பண்ண ஆள் கிடைக்காததால் நான்
ஆண்களுடன் சீட்டாட்ட க்ரூப்பில் இணைந்து கொண்டேன். மறுநாள் காலையில் எல்லோருமாக நிதானமாக எழுந்து நடைப்பயணம் சென்றோம். ஆசியாவிலேயே மிக அதிக மழைப் பொழிவு உள்ள இடமாக வர்ணிக்கப்பட்ட சிரபுஞ்சி காய்ந்து கிடந்ததைப் பார்த்து மனம் நொந்தோம். ஜூன் மாதத்திற்குப் பிறகு நன்றாக இருக்குமாம், ஆனால் காசிரங்காவில் காண்டாமிருகம் பார்ப்பது அரிது என்பதால்தான் இந்த சீசனைத் தேர்ந்தெடுத்தோம்.
அங்கிருந்த Double decker living root bridge க்கு இறங்க 3000 அடிகள் நடக்க வேண்டும் என்றார்கள். எனவே அதை தவிர்த்தோம். எங்கள் விடுதியின் உரிமையாளினி ஏஞ்சலா நல்லா தமிழ் பேசியதுடன், அருகில் இன்னுமொரு இரட்டை அடுக்கு பாலம் இருப்பதாகக் கூறி துணைக்கு ஒரு ஆளும் அனுப்பினார்கள். ஏற்ற இறக்கம் அதிகம் இருக்காது என்றதால் பராவையும் ஊக்கப்படுத்தி அழைத்துச் சென்றோம். பத்து நிமிஷ நடைக்குள் எதிரே தெரிந்தது அழகான ரெட்டை அடுக்கு வேர்ப்பாலம். எங்க சந்தோஷத்தைச் சொல்லி மாளாது.
பாலத்தில் ஏறி நடந்து, போட்டோ எடுத்து பிரிய மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். சுற்றுலா தலங்களின் லிஸ்ட்டில் இன்னும் இணைக்கப்படாமல் இருந்ததால் கூட்டமே இன்றி தனிக்காட்டு ராஜாக்களாக கும்மாளமிட்டு ரசித்தோம். முந்தின நாள் ஒற்றைப் பாலம் வராததற்கும் சேர்த்து பராசக்திதான் மிக அதிகமாக ரசித்தாள். ஏஞ்சலாவுக்கு ஒரு ஓஓ போட்டுகிட்டோம்.
அடுத்து சென்ற மவ்ஸ்மாய் குகை கொஞ்சம் அமாநுஷ்யத்தைக் கொடுக்கத்தான் செய்தது. சில இடங்களில் உட்கார்ந்து தவழ்ந்து வரவேண்டியிருந்தது. குகையின் வெளியே வந்து மேகாலயாவின் புரதான ஆடைகள் அணிந்து போட்டோ எடுத்த போது கத்திச் சண்டை போட்டுக் கொண்டார்கள் ஸ்டீபன், பாஸ் அண்ணா மற்றும் ரூஃபஸ். பிடித்தது கத்தி என்றாலும் ரசித்தது என்னவோ காமெடிதான்.
வரும் வழியில் ஒழுக்குத் தண்ணீராய் விழுந்த மிக உயரமான அருவியையும் பார்த்தோம்.
இரவு ஷில்லாங்கில் தங்கிவிட்டு மறுநாள் காசிரங்கா தேசிய பூங்கா பார்க்கக் கிளம்பினோம். செல்லும் வழியில் உமியம் ஏரியில் படகு சவாரி சென்றோம். உமியம் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரி அது. சுற்றிலும் பச்சைப் பசேலென்ற மலைகளின் நடுவே படகில் சென்றது ரம்யமாக இருந்தது. படகு சவாரி முடித்ததும் கொஞ்ச நேரம் திண்டுகளில் அமர்ந்து
அரட்டை அடித்தோம்.
அந்தி சாயும் நேரத்தில் காசிரங்காவை நெருங்கிய தருணத்திலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் தென்படத் தொடங்கிவிட்டது. நம்ம ஊர்லே மாடு மேயுறமாதிரி ஜாலியா நிக்குது. மறுநாள் காலையில் இன்னும் அதிகமாகப் பார்க்கலாம் என கைடு சொன்னதால் கீழே இறங்குவதைத் தவிர்த்தோம். வெயில் காலத்தில்தான் ஈஸியாகப் பார்க்கலாமாம்.
அதிகாலையில் யானைமேல் ஏறி சென்றபோது காண்டாமிருகம் கைக்கெட்டும் தூரத்தில் மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது அதுவரை இருந்த பிரயாணக் களைப்பு, சுட்டெரிக்கும் வெயில் எல்லாம் மறந்தே போய்விட்டது. இரண்டாவது சுற்றாக ஜீப் சஃபாரி சென்றும் இன்னும் அதிகமாகப் பார்த்தோம். மறுநாள் கெளகாத்தி அருகிலுள்ள பொபிடோரா (மினி காசிரங்கா) வனவிலங்கு சரணாலயத்தில் மேலும் அதிக காண்டாமிருகங்களைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். கண்ணு பூத்துப் போகும் அளவுக்கு காண்டாஸ் பார்த்தோம்.
அடுத்ததாகச் சென்ற ஆர்க்கிட் பூங்காவில் ஏகப்பட்ட அரிய வகை மலர்கள் , அதை விளக்கிச் சொல்ல நேர்த்தியான கைடு என்று பொருத்தமாக இருந்தது. ஸ்டீபன் நெறைய செடிகள் வாங்கினார். நேரமின்மையால் அதுவரை தவற விட்டிருந்த அசாமின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் அங்கு பார்க்க முடிந்தது.
மூங்கில் கைவினைப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் அங்கு விற்பனை செய்யப்பட்டன. நாங்கள் அனைவரும் மொத்தம் மொத்தமாக வாங்கியதில் அனைத்தும் தீர்ந்து போய்விட்டன.
மதிய உணவு முடித்துவிட்டு நேராக கெளகாத்தி சென்று மேஃப்ளவர் ஹோட்டலில் தஞ்சமடைந்தோம்.பெண்களின் நால்வர் அணி அத்தனை நாட்களும் தேக்கி வைத்திருந்த புரணிகளை வெளிவிட்டு வெகுநேரம் வரை பிரண்டைத் துவையல் அரைத்து மகிழ்ந்தோம். டெல்லியில் இருந்து தோழி சுபாவும் எங்களுடன் இணையும் பொருட்டு முதல்நாளே கெளகாத்தி வந்து சேர்ந்துவிட்டாள். மறுநாள் அவளும் எங்களுடன் பொபிடொரா வருவதாக சொன்னதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. குகனுடன் ஐவரானோம் என்பதுபோல் சுபாவுடன் ஐவர் ஆனோம். ஐந்து பெண்களும் ஏழு ஆண்களுமாக பன்னிரெண்டுபேர் ஒரே வகுப்பிலிருந்து இணைவது பெரிய விஷயம்தான்.
பொபிடோராவில் காசிரங்கா அளவு சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் மிக அருகில் இயற்கையான சூழலில் நிறைய காண்டா பார்த்தோம். அதிலும் கம்பீரமாக ஒரு காண்டா வாய்க்காலில் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு குளிக்கச் சென்ற மொத்த அசைவுகளும் சூப்பரோ சூப்பர். மதிய உணவிற்காக ரோடு ரோடாக அலைந்தோம். ஒரு உணவு விடுதி கூட திறக்கப்படவில்லை. அன்று ஹோலி பண்டிகை என்பதால் எல்லாம் மூடிவிட்டார்கள். நல்ல வேளையாக கைத்தறிப் பொருட்காட்சி அருகில் நடப்பதாக சுபா சொன்னாள். நேராக அங்கே போய்விட்டோம். வித விதமாக ஆறேழு மாநிலங்களின் சுவையான உணவுகளை ருசித்தோம்.
வடகிழக்கு பகுதியில் மாலை 7 மணிக்கே கடைகள் எல்லாம் மூடிவிடுகிறார்கள். அதனால் ஷாப்பிங் போவதே முடியாமல் போய்விட்டது. தற்செயலாகக் கிடைத்த பொருட்காட்சியில் ஓரளவு பொருட்கள் வாங்க முடிந்தது. பெண்கள் அனைவரும் ஷாப்பிங்கில் பிஸியாக இருந்ததால் ஆண்கள் மட்டும் பிரம்மபுத்திராவில் கப்பல் சவாரி சென்றார்கள். சுபாவின் கார் இருந்ததால் வேனுக்குக் காத்திராமல் அறைக்குத் திரும்பி பெட்டிகளை அடுக்க ஆரம்பித்துவிட்டோம். அப்போதே டூர் முடியும் தருணத்தை நினைத்து சின்ன சோகம் உண்டாகிவிட்டது.
கல்லூரி நாட்களுக்குப் பிறகு அதிக அளவிலான க்ளாஸ்மேட்ஸ் சேர்ந்து சென்ற பயணம் இதுவாகத்தான் இருக்கும். அதனால் கல்லூரி நாட்களே மறுபடியும் வந்ததுபோல் ஒரு மாயை. இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமான நண்பர்களை இணைக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்த உன்னதமான பயணம்.
பிரயாண தூரங்கள் அதிகமாக இருந்ததாகப் பார்க்காமல் நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்து அரட்டையடித்த நேரங்கள் அதிகமென்று எடுத்துக் கொண்டோம்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்களிலிருந்து இப்போதைய காலம் வரை சுமார் நாற்பத்தைந்து வருட கதைகளைப் பற்றிப் பேசிப் பேசி நேரம் போவது தெரியாமல் ஜாலியாக இருந்தோம். ஆனால் இப்போதைய அரட்டையில் ஒரு அன்பும் நட்பும் இழைகளாகப் பின்னப்பட்டு ஒவ்வொருவரும் வாஞ்சையுடன் பேசிக் கொண்டிருந்தது மனதுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது. வருடா வருடம் ஒன்றுகூடும் நிகழ்வுகள்(getogether) இருந்தாலும் சில மணித்துளிகள் மட்டுமே பேசிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஏழுதினங்கள் இணைந்திருந்த பொழுதுகள் புரிதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை என எண்ணற்ற பண்புகளால் நட்புக்கு மேன்மை சேர்த்திருக்கின்றன.
“அந்த ஏழு நாட்கள்
ஆரவாரமாக ஏழு ஆண்கள்
ஐந்தாம் படையாகப் பெண்கள்
அரவணைக்கும் தோழமையாக
அணிசேர்ந்த குடும்பத்தினர்
தென் திசைக் காற்று
வடகிழக்கில் வீசியதால் வசந்தமானது நாட்கள்
அந்த ஏழு நாட்கள்”

அலை-65

 அலை-65

“பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்”- இனிய மகளிர் தின
வாழ்த்துகள்
.
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பெண்களைத் திமிர் பிடித்தவள் என முத்திரை குத்திவிடும் சமுதாயத்தில் அவ்வப்போது மகளிர் தினங்களும் வந்துதான் செல்கின்றன. நிலைமை என்னவோ மாறினமாதிரி தெரியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரியேதான் இப்பவும் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பொருளாதார சுதந்திரமும் கல்வி அறிவும் கொஞ்சூண்டு கூடியிருக்கிறது. கல்வி கற்பதிலும் தேர்ச்சி விகிதத்திலும் பெண்கள் முனைப்புடன் முன்னேறி வருகிறார்கள். சம்பாதிப்பதிலும் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுகிறார்கள். ஆனாலும் சமத்துவம் பெற்றுவிட்டார்களா என்பது பெரிய கேள்விக் குறிதான்.
சமநிலையைத் தாங்க முடியாத ஆண் பேரினவாதம் ( male chavunism) ஆழ வேரூன்றி இருப்பதால் விவாகரத்துகள்தான் அதிகரிக்கின்றன. அதற்கும் பெண்களே காரணகர்த்தாக்களாக உருவகிக்கப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள். எங்கள் தலைமுறை வாய்மூடி சகித்துக் கொண்டது. இன்றைய தலைமுறை எதிர்த்து நின்று காயப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலங்களும் கோலங்களும் மாறினாலும் பெண்களின் நிலைமை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
இந்தமாதிரி உலகளாவிய விஷயங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிட்டுக் குருவிகளாகச் சுற்றித் திரிந்த வாலிபப் பருவத்தில் எங்களுக்கு ஆண்கள் தேவ தூதர்களாகத்தான் தெரிந்தார்கள். அன்பும் நட்பும் காதலும் பின்னிப் பிணைந்திருந்ததால் ஆண்களைப் பற்றிக் குறை பட்டுக் கொண்டதே இல்லை. பெண் உரிமை பெண் சுதந்திரம் எல்லாம் ஏட்டளவில் மட்டுமே இருந்தது.
இரண்டாம் வருடம் வரை கட்டுப்பாடுடன் இருந்தவர்களெல்லாம்கூட மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபின் காதல் வயப்படத் தொடங்கியது கண்கூடாகத் தெரிந்தது. எங்களைப்போல் பொறுப்பற்றுத் திரிந்தவர்களைக்கூட அந்த மாய வலை விட்டு வைக்கவில்லை.
காதலிக்கத் தொடங்கியவர்களைக் குமைப்பதும் அவர்களை நோண்டி நோண்டிக் கதை கேட்பதும்தான் எங்களது நிரந்தரப் பொழுது போக்கு. காதல் மீட்டிங் முடிந்துவரும் தோழியரை ஒதுக்குப்புறமாகத் தள்ளிக் கொண்டு போக ஒரு அடாவடிக் கூட்டம் ரெடியாக இருக்கும். அவன் என்ன சொன்னான், நீ என்ன சொன்னாய் என்பதில் ஆரம்பித்து அன்றைய கடலை முழுவதையும் கேட்டு முடித்தால்தான் அன்றைய பொழுது நல்லதாக முடியும். இடையிடையே ஊடல்படலம் வந்துவிட்டால் அந்த வாரம் முழுவதும் முகாரி ராகம்தான். நாங்களும் சோகப்பட்டுக் கொள்வோம்.
காலையில் புற நோயாளிகள் பிரிவு முடிந்ததும் தேநீர் இடைவேளை(tea-break) வருமே அதுதான் கடலைகளைக் காதல்களாக்கும் இனிய பொன்காலைப் பொழுது. 7மணி OP க்காகக் காலை உணவை
அரைகுறையாக சாப்பிட்டு வருபவர்களும் சாப்பிடாமல் வந்தவர்களும் தஞ்சமடையும் இடம்தான் சீத்தாலக்ஷ்மி ஹோட்டல். ரெண்டு மூணு சின்ன அறைகளும் சின்ன ஹாலும் உள்ள சாதாரண ஹோட்டல். ஆனால் எங்க எல்லோருக்குமே தாஜ்மஹாலையும் மிஞ்சிய கனவுக் கோட்டை. அந்த சமயத்தில் பிரபலமான சினிமாப் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருகும்.
அவங்கவங்க வார்டு தோழர்கள்,வகுப்பெடுக்கும் வாத்தியார்கள், செவிலியர் தோழிகள் என சின்னச் சின்ன குழுக்களாக சாப்பிட வருவாங்க. குழுக்களும் நண்பர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒரே குழுவினர் தொடர்ந்து இணைந்துவர ஆரம்பித்தால் அங்கு ஒரு காதல் பூ மொட்டுவிட ஆரம்பித்து விட்டது எனப் புரிந்து
கொள்ளலாம். யூனிட் சார்பாக வருபவர்கள் ஹாலில் அமர்ந்து
அட்டகாசமாக அரட்டை அடிக்கும்போது இந்த
க்ரூப் சின்ன அறைகளில் அமர்ந்து சத்தம் எழும்பாமல் கதை
அடிப்பார்கள். கொஞ்ச நாட்கள் கடந்ததும் கோரஸ் பாடியவர்கள்
எண்ணிக்கை குறைந்து டூயட்பாட ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய 'காபி டே'யில் நடப்பதுதான் அன்றைய
சீத்தாலக்ஷ்மி நாட்கள். ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணிவிட வேண்டிய வாத்தியாரும் அடுத்த மேஜையில் அமர்ந்திருப்பார்.
பசிச்சு சாப்பிடுவதைவிட பந்தயம் கட்டுவது,
சிறப்பாக வேலை செய்து treat கொடுப்பது, அறுவைசிகிச்சையில் கற்றுக் கொடுத்த சீனியர் அல்லது ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பது போன்ற
ஏகப்பட்ட காரணங்களுக்காக எல்லோருமே நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆகியிருப்போம். நிறைய பேருக்கு நிரந்தர அக்கவுண்ட்டும் இருக்கும். Treat கொடுக்க பணம் இல்லேன்னு தப்பிக்கவும் முடியாது. அக்கவுண்ட்டில் எழுத வைச்சிடுவாங்க. பெரிய விருந்தெல்லாம் கிடையாது. டீ/காபி, வடை போன்ற சாதாரண ஐட்டங்கள்தான். நல்ல வேளையாக KFC மாதிரி கடைகள் அப்போது இல்லை.
நாங்க மூன்றாம் ஆண்டில் இருந்தபோது ஐந்தாம் ஆண்டு மாணவர்கள்தான் அடிக்கடி ட்ரீட் கொடுப்பார்கள். நாங்க ஓசியில்
ஒரு வெட்டு வெட்டிக்குவோம். ஆனாலும் எங்களைக் குமைச்சி அடாவடி பண்ணி ட்ரீட் வாங்க ஒரு கோஷ்டியும் உண்டு.அப்படி வந்த குழுவில் அறிமுகமான ஆசாமிதான் எழில் , ரெண்டு வருடங்கள் சீனியர். அன்றைய நண்பர் இன்றைய கணவர். அலைகள் அடுத்த பாகத்திற்கு
நகரப் போகிறது.

அலை-64

 அலை-64

வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான கட்டம் மருத்துவக் கல்லூரிப் பருவம்தான். ஐந்தரை வருடங்கள் கல்லூரிப் படிப்பு அதன் பின் ஒரு வருடம் பயிற்சி மருத்துவ காலம் என மொத்தமாக ஆறரை வருடங்கள் .இன்னும் சிலர் சீனியர் ஹவுஸ் சர்ஜன் என மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் அங்கேயே பயிற்சி பெறுவார்கள். இளமைப் பருவத்தின் மிக முக்கியமான காலமான பதினாறு வயது முதல் இருபத்து மூன்று வருடங்கள் வரை இணைந்திருந்த பொழுதுகள். இளமை ஊஞ்சலாடிய நாட்கள்.
எல்லா கல்லூரிகளுக்கும் பொதுவான முறைதான் என்றாலும் எங்கள் கல்லூரிக்கென்று நிறைய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஆணும் பெண்ணும் இருபத்திநாலு மணிநேரமும் இணைந்து பணியாற்றுவது மருத்துவக் கல்லூரியில்தான்.
கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் படிப்பவர்களும் இந்த பருவத்தைக் கடப்பவர்கள்தான், இதே மாதிரி அநுபவங்கள் ஏற்படலாம். ஆனால் எங்கள் உறவுகள் தொடர்புகள் சொந்தங்கள் அனைத்தும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டது. எங்களுக்கிடையில் தூரங்கள் அதிகரித்தாலும் தொடர்பு விட்டுப்போனது போகாது. என்றென்றும் எங்களை இணைக்கும் பாலமாக நோயாளிகள் இருப்பார்கள். பாடம் கற்ற ஆசிரியருக்கே மருத்துவம் செய்யும் நிலையில் அடுத்த தலைமுறை மருத்துவர் இருப்பார். ஆசிரியரின் குடும்பமே மாணவரின் பராமரிப்பில் இருப்பது சாதாரணமாக நடக்கும்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று நீட்டி முழக்கிச் சொன்னாலும், ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரி என்று சொன்னால்தான் ஊருக்குள் எல்லோருக்கும் தெரியும். அதிலேயும் ஒரு “க்” போட்டு அழுத்தமாக ஹை‘க்’கிரவுண்டுன்னு சொல்லணும். அப்போதான் மஜாவாக இருக்கும். இப்போது எழுதும்போது கூட அந்தப் பெயரை உச்சரிக்கும் போது ‘ இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’தான்.
மூன்று வருட மருத்துவ மாணவர்கள், ஒரு வருட பயிற்சி மருத்துவர்கள், சீனியர் ஹவுஸ் சர்ஜன் பண்ணுபவர்கள்,ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மருத்துவர்களும் முட்டி மோதி உழன்று கொண்டிருக்கும் இடம். இஷ்ட தெய்வங்களாகவும் ஒரு சில துஷ்ட தேவதைகளுமாக ஆசிரியர்களும் பேராசிரியர்களும், அனைவருக்கும் குட்டு வைக்கும் இடத்தில் துறைத் தலைவர்களும் கிடுக்கிப்பிடி போடும் சாஹர சங்கமம் அது.
சீனியர்களும் ஜூனியர்களும் ஒரே நோயாளியை அவரவர் கண்ணோட்டத்துடன் பரிசோதித்து விவாதித்து விளக்கம் பெற்று வைத்தியம் செய்யும்போது அங்கே ஒரு நல்ல மருத்துவன் உருவாகிறான். அதே சமயம் வயது வித்தியாசங்கள் மறைந்து ஒரு குடையின்கீழ் வரும் உறவுகள் காலம் கடந்தும் நிலைத்திருக்கிறது. புத்தகங்களில் படித்ததை விட சீனியர்களிடம் கற்றுக் கொண்டதுதான் அதிகம். ஆசிரியரிடம் கேட்கத் தயங்கும் சந்தேகங்களைக் கூட சீனியரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
நாங்கள் படித்த காலங்களில் எல்லாம் சீனியர்களை அக்கா என்றும் ஆண்களை சார் என்றும்தான் அழைப்போம். கொஞ்சம் நெருங்கியவர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் கலாச்சாரம் அங்கங்கே உண்டு. வகுப்புத் தோழர்களை நேரில் பார்க்கும் போது நீங்க நாங்கன்னு கூப்பிட்டுக் கொள்வதும், சகாக்களுடன் இருக்கும்போது அவன், அவள் என்று பேசிக் கொள்வதும் எழுதப்படாத விதிகள்.
மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நிறைய சுதந்திரம் இருக்கும். பொறுப்பற்று வானம்பாடிகள் மாதிரி பறந்து திரியலாம். நோயாளியை பரிசோதித்து ஆசிரியரிடம் விளக்க வேண்டியதில்லை. ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டு ஓணான் போல் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.பேராசிரியரிடம் சீனியர்கள் குட்டுப் படுவதையும் திட்டு வாங்குவதையும் நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக் கொள்ளலாம். வகுப்பு போரடித்தால் சத்தமில்லாமல் நழுவி ஓடியும் விடலாம். நம்மளைத் தேடுவோரே இருக்க மாட்டாங்க.
எந்த OP க்கு போனாலும் புதுப் பிள்ளைங்க என்று நம்மளை ரொம்பப் படுத்த மாட்டாங்க. எங்களுக்கு முதல் போஸ்டிங் தொற்று நோய் வார்டு என்று நினைக்கிறேன். ஊசி போடவெல்லாம் கத்துக்குறதுக்கு முன்னாடியே அங்கே போயிட்டோம். வெறிநாய்க்கடி, ரண ஜன்னி (Tetanus) போன்ற நோயாளிகள்தான் அங்கே இருப்பாங்க.வலிப்பு வரும் வேளைகளில் பார்க்கவே சங்கடமாக இருக்கும். நல்ல வேளையாக காலரா நோயாளிகள் யாருமில்லை. பயந்துகொண்டேதான் போனோம். ஆனால் அதன் பொறுப்பு ஆசிரியர் Dr. Edwin Sir ரொம்ப ஃப்ரெண்ட்லியாக இருந்ததால் அந்த போஸ்டிங் தடையின்றி போய்விட்டது.
எங்கள் க்ரூப்பில் சுகந்தி, சூரி, தங்கராஜ், தாணு, தில்லை, விஜி, விசா அனைவரும் இருந்ததாக ஞாபகம். என்னைத் தவிர அந்த க்ரூப்பில் எல்லோரும் பயங்கர படிப்ஸ். அதனாலே தனியாகக் கட் அடிக்க முடியாது. விஜி மட்டும் கொஞ்சம் என்னைமாதிரி ஜாலி வகை. சூரியகாந்தியோ கொஞ்சம் சேட்டை பண்ணினாலும் கண்ணாலேயே எரித்துவிடுவதுபோல் பார்த்து எச்சரிப்பாள். அவளுக்குப் பயந்தே எல்லா வகுப்புக்கும் தவறாமல் போய்க் கொண்டிருந்தேன்.
எங்களது வகுப்பிலிருந்து C Batch க்கு நிறைய பேர் போயிட்டமாதிரி முந்தின வகுப்பிலிருந்து நிறைய பேர் எங்க கூட சேர்ந்த்திருந்தாங்க. அதிலும் வாசகுமார், விஜயகுமார், வைரமுத்துராஜா என ஒரு கும்பல் அகர வரிசைப்படி எங்களுடன் இணைந்தார்கள். முதல் வருஷம் எங்களை செமையாக ராகிங் என்ற பெயரில் கலாய்த்தவர்கள். கடைசி வருஷம் வரைகூட அவங்களைப் பார்த்து ஓடியிருக்கிறேன். வைரம்ஸ் மட்டும் சிரித்த முகத்துடன் கொஞ்சம் நட்புடன் பேசுவார். அதனால் அவருடன் சகஜமாகப் பபேசினால்,உடனே நம்மளை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க.
வார்டு போஸ்டிங் வரும்போது எல்லாரையும் இன்னும் சின்னச் சின்னக் குழுக்களாகப் பிரிச்சுடுவாங்க. எப்போழுதும் தங்கரஜ், தாணு, தில்லை மூணுபேரும் ஒண்ணாகத்தான் இருப்போம். ஆறரை வருடங்களும் இணைபிரியாத மூவர் நாங்களாகத்தான் இருந்திருப்போம். தில்லை மட்டும் இடையில் Medicine AS unitக்கு விரும்பிச் சென்றுவிட்டார்.
பொது மருத்துவத்தில் மூன்றாம் அலகு Dr.PSS unit தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் யூனிட் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லுவாங்க. வகுப்பு எடுப்பதைக் கேட்டுகிட்டே இருக்கலாம்னு சொல்லுவாங்க. எங்களுக்கு கேள்வி ஞானம்தான். மூன்றாம் ஆண்டு மக்கள் கடைசியில் அல்லவா நிப்போம், ஒண்ணுமே கேட்காது. அவர் அவ்ளோ மென்மையாகப் பேசுவார்.
அவரோட உதவி பேராசிரியர் ஸ்ரீநிவாசன் சார். அவர் இன்னும் மென்மையாகப் பேசுவார். அவர் வகுப்பிலும் எதுவும் காதில் விழுந்ததில்லை. ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் (Case Presentation ) விளக்கம் சொல்லிகிட்டு இருப்பாங்க. நாங்க ஜாலியாக ஏதாச்சும் சேட்டை பண்ணிகிட்டு இருப்போம். நாமளும் அஞ்சாம் வருஷம் படிச்சுக்கலாம்னு ஒரு தைரியம்தான்.
அறுவை சிகிச்சை பகுதியிலும் எனக்கு மூணாம் அலகுதான். RH Unit என்று அழைக்கப்படும் Dr. R. ஹரிஹரன் சார் யூனிட். கோமதிநாயகம் சாரும் சுப்பாராவ் சாரும் உதவி பேராசிரியர்கள். மாரிமுத்து சார் அவ்வப்போது சேர்ந்து கொள்வார். வைகுண்டராமன் சாரும் அப்போதுதான் வந்து சேர்ந்தார். குழந்தைநல அறுவை சிகிச்சை நிபுணர் என்றாலும் கொஞ்ச நாள் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தார்.தீக்காயங்களுக்கான வார்டு பொறுப்பில் இருந்தார்.
வைகுண்டராமன் சார் அசப்பில் பாபி பட கதானாயகன் ரிஷி கபூர் போலவே இருப்பார். அதனால் அவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் எதனாலோ எப்பவும் உர்ரென்று சிடுமூஞ்சியாகவே வலம் வருவார்.
சுப்பாராவ் சாரிடமிருந்துதான் Robin Cook Novels வாசிக்கும் பழக்கம் வந்தது. அதுவரை சிட்னி ஷெல்டன்தான் all time favourite. பெரிய மீசையுடன் ஒருவர் RH sir இன் நிழல்போல் வந்து கொண்டே இருப்பார். சீனியர் ஹவுஸ் சர்ஜன் என்று பின்னால் தெரிந்து கொண்டோம்.
பொது மருத்துவத்துக்கும் அறுவை சிகிச்சைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அறுவை சிகிச்சையில் கண்முன்னாடி தெரியும் கட்டிகள், வீக்கங்கள், புண்கள், தையல்கள் பற்றி டக் டக்கென்று விவாதித்து இன்ன வைத்தியம் என்று முடிவுடன் அடுத்த நோயாளிக்குப் போய்விடலாம். பொது மருத்துவத்தில் நோயாளி சொல்லுவதற்கும் உடம்பிலுள்ள நோய்க்கும் தொடர்பே இருக்காது. துருவித் துருவி கேட்டாலும் சம்பந்தமில்லாத பதில்கள்தான் நிறைய வரும். விவாதங்களும் நீண்டுகொண்டே இருக்கும். அப்போவே முடிவு செய்திட்டேன் , நமக்கு அறுவை சிகிச்சைதான் சரி என்று.
மகப்பேறு மருத்துவத்தில் இரண்டு யூனிட்டுகள் உண்டு. நான் GS madam unit. ஆக்னஸ் மேடம் நல்லா சொல்லித் தருவாங்கள். ஆனால் அவங்க முதல் யூனிட்டில் இருந்தாங்க. நிறைய உதவி பேராசிரியைகள் உண்டு. என் பெயரிலேயே தாணுமதி மேடம் இருந்தாங்க. பாக்கியம் பார்வதி, மீனாட்சி, சகுந்தலா என ஒன்றிரண்டு பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது.
மூணாம் வருஷம் முழுவதுமே பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அரைகுறையாக ஏதோ படித்தோம். அப்போது படிக்கும் அனைத்துக்குமான தேர்வு ஐந்தாம் வருடத்தில்தான் வரும் என்பதால் விட்டேத்தியாக இருப்போம். ஒருமாதிரி Honey-moon period மாதிரிதான் அந்த வருஷம் ஓடிப்போனது.
மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு தியரி வகுப்புகள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்.
Pharmacology என்ற ஒரே பாடம்தான் மூன்றாம் வருடம் தேர்வுக்குரியது. அவ்ளோ மாத்திரை மருந்துகள் பற்றியும் நுணுக்கமாகப் படிக்கணும். மருந்து கண்டுபிடிச்சது தொடங்கி, நோயாளிக்கு கொடுக்கப்படும் வரை உள்ள கதைகள் ஒருபுறம். சாப்பிட்ட பின் அந்த மருந்து எப்படி வேலை செய்யும், என்னனென்ன உபத்திரவங்களைப் பக்க விளைவாகத் தரும், எந்த அவயங்களையெல்லாம் பாதிக்கும், எப்படி வெளியேறும்- அப்பப்பா எழுதும்போதே கண்ணைக் கட்டுதே, படிக்கும் போது எப்படி இருந்திருக்கும்.
பாதி விஷயங்களைப் புரியாமலேயே மனப்பாடம் செய்திருப்போம். புரிந்த விஷயங்களிலோ ஆயிரத்தெட்டு சந்தேகம் இருக்கும். ஆனாலும் முனகல் சத்தமே வராமல் வகுப்பு கவனிக்கணும். Pharmacology professor கனகாம்பாள் மேடம் பயங்கர terror. அவங்க சிரிச்சே பார்த்ததில்லை.
அதுபோக பொது மருத்துவம், OG, surgery, Forensic, Pathology எல்லா பாடங்களின் தியரியும் தினமும் நடக்கும். நிறைய வகுப்புகள் எனக்கு Latin, French போல் அந்நிய மொழிகளாகவே தெரிந்தது. என்னை மாதிரி நிறைய பேர் உண்ட மயக்கத்துடன்தான் இருப்பார்கள். தூங்குபவர்களைப் பற்றி எந்த ஆசிரியரும் கண்டு கொண்டதே இல்லை. வகுப்பைத் தொந்தரவு செய்யாமல் தூங்கிவிட்டால் நல்லதுன்னு விட்டுடுவாங்க.
இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள். ஆனால் அவற்றின் இடைச் சொறுகல்களாக தினமும் ஏதாவது வித்தியாசமான விஷயமோ ஜாலியான நிகழ்ச்சியோ நடக்கும் . அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது அலைகள் மூன்றாம் வருடத்தையே தாண்டாது போலிருக்கு. அத்தனை நிகழ்ச்சிகள் மனதில் முட்டி மோதுகின்றன. என் ஒருத்தியின் அநுபவங்களே தோண்டத் தோண்டப் பொங்கி வரும்போது சக நண்பர்களின் பங்களிப்பையும் சேர்த்தால் என்னே சுகானுபவம்.அலை-64

இதெல்லாம் அன்றாட நிகழ்வுகள். ஆனால் அவற்றின் இடைச் சொறுகல்களாக தினமும் ஏதாவது வித்தியாசமான விஷயமோ ஜாலியான நிகழ்ச்சியோ நடக்கும் . அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது அலைகள் மூன்றாம் வருடத்தையே தாண்டாது போலிருக்கு. அத்தனை நிகழ்ச்சிகள் மனதில் முட்டி மோதுகின்றன. என் ஒருத்தியின் அநுபவங்களே தோண்டத் தோண்டப் பொங்கி வரும்போது சக நண்பர்களின் பங்களிப்பையும் சேர்த்தால் என்னே சுகானுபவம்.