Monday, December 26, 2005

கருப்பு ஞாபகங்கள்

கடந்த வருடம் நடந்த
கசப்பான நிகழ்ச்சிகள்..

கணப்பொழுது நினைத்துப் போகும் நம்
கண்களுக்கே கண்ணீர் நிற்கவில்லை
கணப்பொழுதுகூட மறக்காத நெஞ்சங்களுக்கு?
கண்ணீர் வற்றி இதயமே வறண்டிருக்கும்.

செய்தி என்பது
நாலுபுறமிருந்தும் வேண்டியதுதான்
ஆனால் மனிதர்களை
நாராய்க் கிழித்துப்போட்டு வரவேண்டுமா?

ஸ்ரீரங்கமோ கும்பகோணமோ
ஸ்ரீநகரோ நாகையோ
இயற்கை அன்னை மனம்வைத்து
இனியாவது இரக்கம் காட்டட்டும்.

தில்லியோ திருநெல்வேலியோ
பீகாரோ பீளமேடோ
மனித மனங்கள் மனம்திருந்தி
வன்முறையை மறுதலிக்கட்டும்.

கடந்த காலங்களின் கறுப்பு தினங்களுக்கு
அஞ்சலியோடு விடைகொடுத்துவிட்டு
வரப்போகும் புத்தாண்டு
இருண்ட இதயங்களில் ஒளிஏற்றட்டும்.

Friday, December 23, 2005

நேற்றும் இன்றும்

அன்று........
`இரவின் மடியில்’ கேட்ட பாடல்கள்
இன்னிசையாக இருந்தது;
பகலின் ஒளியில் பார்த்த காட்சிகள்
பட்டாம்பூச்சியாக பறக்க வைத்தது;
நினைத்து மகிழ்ந்த கணங்கள்
நிழற்படம்போல் கண்ணிலேயே தவழ்ந்தது.
படித்தவை சுவைத்தது
பஞ்சணை கொஞ்சியது
பல்வரிசை பளீரிட்டது
பரபரவென்று நேரம் பறந்தது!
இன்று.....
பசித்தவன் தான் பழங்கணக்கு பார்ப்பானா?
பாதிமுதுமை பார்க்க வைக்கிறது என்னையும்!
அட உன்னையும்தான்!
படிக்கட்டு ஏறினால் மூச்சு வாங்கும்
பார்வை மங்கி கண்ணாடி முகத்தில் ஏறும்!
பாழாய்ப்போன மனசு மட்டும்
பள்ளியையும் கல்லூரியையும் பசுமையாய்
புரட்டிப் பார்த்து பெருமூச்சு படர விடும்!
காதலையும் கவிதைகளையும் இளமையையும்
திரும்பிப் பார்த்து திருப்திப் படும்!

என்றும்.......
வாழ்க்கையை
ரசித்தவர்களுக்குத் திருப்திதான்....
தொலைத்தவர்களுக்கோ
எதிலுமே விரக்திதான்!!

Monday, December 12, 2005

அடையாளங்கள் தவறா?

அடையாளங்களைத் தொலைத்தல் என்பது எவருக்குமே சாத்தியமாகாத ஒன்று. எழுத்திலோ நடை உடை பாவனைகளிலோ வருந்தித் தருவித்துக் கொள்ளும் புது வேஷங்களுக்கு இடையிலும் நம் original அடையாளம் மறைந்து போவதில்லை. இது நமது பலவீனமல்ல, நம் வேர்களின் பலங்கள். அந்த அடையாளம் எதனாலும் வரலாம்- மொழி, ஜாதி, மதம், படிப்பு- எதுவாகத்தான் இருக்கட்டுமே. அதை ஏன் மறைக்க வேண்டும்? அந்தந்த விஷயங்களின் துவேஷ சிந்தனைக்கு இடம் தராத வகையில், அடுத்தவர் மனதைப் பாதிக்காத வகையில் அந்த அடையாளங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?

`தமிழன்’ என்ற மொழியின் அடிப்படையிலான அடையாளத்தை வரவேற்பதும், பெருமைப் படுத்துவதும் சரியென்று ஏற்றுக் கொள்ளும் நாம் மற்ற அடிப்படையிலான அடையாளங்களை மட்டும் கூறு போட்டு விமர்சிப்பதேன்? தமிழ்மணத்தில் எல்லோரின் ஒருமித்த உணர்வும் தமிழின் அடிப்படை என்பதால்!! இதில் வரும் அடிதடி சண்டைக் காட்சிகள், அடுத்து, `தேவர் மணம்’; பார்ப்பணர் வலைப்பூ’ ; `நாடார் பதிவுகள்’; etc,etc போன்ற தனித்தனி குழுமங்களை உருவாக்குமோ என்னவோ?

`நீங்கள் தமிழரா’ என்று விழிக்கப்படும்போது ,ஒரு புலம்பெயர்ந்தவருக்கு எவ்வளவு புல்லரிப்பு வருமோ, அதே அளவு `நீங்க திருநெல்வேலியா’ என்று கேட்கப்படும்போது எனக்கு வரும். இன்னாரின் சொந்தமா என்று என் கணவர் வீட்டு மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது `ஆம்’ என்று சொன்னாலும்,
என் பிறந்த வழிச் சொந்தங்களையும் பிரதிபலிக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றுவது எந்த ஜாதியின் அடிப்படையோ, மதத்தின் பாதிப்போ இல்லை. என் வளர்ப்பின் அடையாளத்தைத் தொலைத்துவிடுவேனோ என்ற அங்கலாய்ப்பாக இருக்கலாம்.

குழலி, தேன்துளி பத்மா, ராமச்சந்திரன் உஷா போன்றவர்கள் தங்களால் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வுகளை அந்தந்த சூழலின் பாதிப்புடன் எழுதும்போது ,அதற்கு ஒரு முத்திரை குத்திவிட்டுப் போவது ` படித்தவர்களின்’ அடையாளம் போலும்.

பள்ளிப் பருவத்தில் பாதி புரிந்தும் புரியாத வயதில் என் அண்ணன் தீவிரமாக எனக்குள் போதித்திருந்த கருத்து, `ஜாதி மத பிரிவினைகள் எல்லாம் practical ஆக போக்கணும்னா, ஒரு வீட்டில் ஏற்படும் திருமண சம்பந்தங்கள் பல வகுப்புகளையும் பல மதங்களையும் சார்ந்து இருக்கணும்’ என்பது. ( அவனால் பாவம் அதை நடைமுறைப் படுத்த முடியலை- அக்கா பொண்ணுமேல் காதல் வந்துவிட்டது) நானும் தம்பியும் அண்ணன் வாக்கை மீறாமல் காப்பாற்றிவிட்டோம். ஆனாலும் எங்களின் அடையாளம் இன்னும் ஆறுமுகநேரி சந்தைக்கடையின் புழுதி மணல்தான்!!!

Friday, December 09, 2005

தோழிக்காக!

படைப்புகள் படிக்கப்பட்டன
படித்தவர்களால் பாராட்டவும்பட்டன
அத்தனை சிறப்புகளையும் பின்தள்ளியது
அன்புத் தோழியின் அங்கீகரிப்பு!

இடைவெளியற்ற வேலைப் பளுவும்
இயந்திரகதியான வாழ்க்கைச் சூழலும்
இடைப்பட்ட காலங்களில்
இடர்ப் படுத்தியது என் எழுத்துலகை!

இன்று நீ வந்தாய்-என்
இதய விளக்கில் எண்ணெய் ஊற்ற
உன் சிரிப்பென்ற தீக்குச்சியால்
என் மனதைப் பற்ற வைத்தாய்!

புதிய அத்தியாயம் துவங்குகிறேன்
பழைய தூசியைத் தட்டிவிட்டு
விருந்தோ மருந்தோ மூணுநாள் என
விடைபெற முடியாமல் திணறவேண்டும் நீ!!!

Friday, December 02, 2005

எங்க ஆட்டுக்கும் `சிசேரியன்'

`கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி சொல்லும்’கிற மாதிரி, டாக்டர் வீட்டு ஆட்டுக்குட்டிக்குக்கூட அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் பார்க்க வேண்டியிருக்குது.

போனவருஷ `அறுவடைத் திருநாள்’ சமயம் எங்க வீட்டு குட்டிப்பையன் ஒரு ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்துவந்தான். அதுகூட ஏக கொஞ்சல் குலவல். ஆனால் அது போடற புழுக்கைகளை சுத்தம் செய்ய தகுந்த உதவியாளர்கள் இல்லாததால் தோட்டத்தில் கொண்டுபோய் விட்டுட்டோம். ஆனாலும் ஞாயிறுதோறும் அதைப் பார்த்து கொஞ்சிட்டு வராட்டி அவனுக்கு இருப்பு கொள்ளாது. சமீபத்தில் போனப்போ அது குட்டி போடப்போறதாக தோட்டக்காரத் தம்பி சொல்லிச்சு. இவனுக்கு ஏக சந்தோஷம், ரெண்டு குட்டிகூட விளையாடப்போறோம்னு.

முந்தாநாள், நானும் என் ஹஸ்பெண்டும் செம பிஸி! திடீர்னு தோட்டக்காரன் போன் பண்ணி ஆடு குட்டிபோட முடியாமல் கஷ்டப்படுது, கவனிக்காமல் போயிட்டா செத்துப் போயிடும்போல இருக்குங்கிறான். எங்க ரெண்டுபேருக்கும் நகற முடியாதபடி கேஸ். வேற வழியில்லாமல் பிரெண்ட் வெட்டினரி மருத்துவரை ட்ரைவர்கூட அனுப்பி போய்ப் பார்த்துட்டு வரச் சொன்னோம். அவர் அங்கிருந்து போனில், உடனடியா ஆப்பரேஷன் பண்ணணும் குட்டி குறுக்கே கிடக்குதுன்னு சொன்னார். அதுக்கு சிரமப்பட வேணாம்னு தோணினால் கசாப்புக் கடைக்குக் கொடுத்திடலாம், உங்க விருப்பம் என்னன்னு கேட்டார். ரொம்ப கஷ்டமா இருந்தது, அதைக் கேட்டு. ஆப்பரேஷன் பண்ணினா ஆடு பிழைக்க வாய்ப்பு இருந்தா பண்ணிடுங்கன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லிட்டார். ஆனால் நாங்க நேரிடையாக உடனிருந்து உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதையும் சொல்லிட்டோம். அவரே எல்லாம் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார். இது எதுவும் எங்க பையனிடம் சொல்லலை, மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுவானே!

ஒரு வழியா எங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு கால்நடை அறுவை அரங்குக்குப் போனப்போ ராத்திரி 11 மணிக்கு மேலே ஆயிடுச்சு. எங்க நண்பரான கால்நடை மருத்துவரும், அறுவை சிகிச்சை செய்த அவரது நண்பரும் ஆட்டுக்கு bedside duty பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்போதான் ஆடு மயக்க மருந்து எபெக்ட்டில் இருந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்பப்போ கண்ணை முழிச்சு எங்களைப் பாவமா பார்த்துச்சு.

குட்டி சைஸ் கொஞ்சம் பெரிதாக இருந்துச்சாம், குறுக்கே வேறு கிடந்ததால் பிரசவம் ஆக முடியாமல் தவித்திருக்கிறது. கீழே வர முடியாததால் கர்ப்பப்பை உள்புறமாக கிழிந்துவிட்டது, குட்டியும் இறந்துவிட்டது. அறுவை சிகிச்சை மூலம் இறந்த குட்டியை எடுத்துவிட்டு கர்ப்பப்பையைத் தைத்திருப்பதாக நண்பர் சொன்னார். கர்ப்பப் பையும் வெகுநேர போராட்டத்தால் கிழிந்திருந்ததால், மிகவும் சிதைந்து போயிருப்பதாகவும் சொன்னார். 24 மணிநேரம் கழித்துதான் ஆடு பிழைக்கும் வகை அறியமுடியுமென்று சொன்னார். இதே வகையான விளக்கங்களைப் பலமுறை நோயாளிகளுக்குச் சொல்ல நேருமென்றாலும், வாயில்லா ஜீவனின் அவஸ்தையைத் தக்க தருணத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.

கா.ந. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முறை, மயக்கம் கொடுக்க உபயோகித்த மருந்துகள், கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் முதலியவை பற்றி விளக்கிச் சொன்னார். ஒருநாளாவது தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் IV Fluids கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். எங்கள் மருத்துவ மனையின் கார் ஷெட்டில் அதற்குத் தேவையான வசதிகளுடன் படுக்கை தயாரிக்கப் பட்டது. செவிலியர்களுக்கு ஊசி குத்தும் முறை, காயத்துக்கு மருந்து போடும் விதமெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். ஆனாலும் என் கணவரே அத்தனை வேலையிலும் ஓடி ஓடி வந்து ஊசி போட்டுவிட்டு சென்றார். இன்றுதான் மேரி(எங்க செல்ல ஆடு) மெதுவாக எழுந்து நிற்கிறது, கொஞ்சம் கொஞ்சம் புல் சாப்பிடுது!!! கா.ந. மருத்துவர் தினமும் ஒருதரம் வந்து பார்த்துவிட்டு போகிறார்.
நேற்றுதான் எங்க பையனுக்கு சொன்னோம். ரொம்ப வலிச்சுதா, குட்டி ஆடு எப்படி இருந்திச்சு, எல்லாம் சாப்பிட கொடுக்கலாமான்னு ஏகப்பட்ட கேள்விகளுடன் ஒருதரம் பார்த்துட்டு ஸ்கூலுக்கு போயிருக்கான். வந்த பிறகுதான் நோயாளியின் சொந்தக்காரர்களுக்கு விளக்கம் சொல்லும் பாணியில் அவனை கன்வின்ஸ் பண்ணணும். தோட்டத்தில் விட்டதால்தான் இப்படி ஆயிடுச்சு, வீட்டிலேயே நம்ம கூட வைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்கிறது அவனது வாதம். அவன் கால்நடை மருத்துவர்தான் ஆகப் போறானாம்!

அறுவை சிகிச்சையை உடனிருந்து பார்க்க முடியலையேன்னு என் வீட்டுக்காரருக்கு வருத்தம். மனிதர்களுக்கு போடப்படும் விதமாகவே மருந்துகள், தையல் நரம்புகள், மயக்கம் எல்லாமுமே! ஆனால் குழந்தைகளுக்கு போடப்படும் அளவில் !
(கசாப்புக் கடையில் வெட்டுப் படும் ஆடுகளின் நிலையை மனது ஏனோ ஒருதரம் நினைத்துப் பார்க்கிறது).