காண்டேகரின் கிரெளஞ்சவதம்
``அன்பு செலுத்துவதென்றால் மலரோடு விளையாடுவது என்று நினைத்திருந்தேன்.அது மல்லிகையாக இல்லாவிட்டாலும் ரோஜாவாக இருக்கும்;ஒரு சமயம் ரோஜாவின் முள்பட்டுக் கையில் ரத்தம் வரலாம் என்பதற்குமேல் என் கற்பனை ஓடியதில்லை. இன்று அறிந்து கொண்டேன்;அன்பு செலுத்துவதென்றால் நெருப்போடு விளையாடுவது’’-
காண்டேகரின் `கிரெளஞ்சவதம்’’ படித்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான மேற்கோளாக இருக்குமென்று நினைக்கிறேன். ரோஜாவை முள்ளுடன் பார்க்கும்போதெல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வந்துவிடும்.
இன்னும் பக்கத்துக்கு பக்கம் வாழ்க்கையோடு இயைந்த தத்துவங்களைச் சலிப்புத்தட்டாமல் சொல்வதில் அவருக்கு இணை அவரே! அவரது படைப்புகளை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் திறமை அதைவிட சுகம். காண்டேகரின் நாவல் ஏதாவது இருக்கான்னு கடைகளில் விசாரிக்கும்போது, நிறைய சமயங்களில், அற்பமாக பார்த்த கடைக்காரர்கள் உண்டு. அநேக நேரங்களில் பெரிய கடைகளில் அவர்களை மட்டம் தட்டும் விதமாக காண்டேகர் பற்றி கேட்ட நாட்களும் உண்டு, கண்டிப்பாக இருக்காது என்ற தைரியத்தில்(நல்ல வேளையாக என்றும் மூக்குடை பட்டது இல்லை).ரொம்ப நாட்கள் அவரது புத்தகங்கள் சரிவரக் கிடைக்காமல் இருந்தது.சமீபத்தில் அல்லையான்ஸ் பதிப்பகம் அவரது புத்தகங்கள் அனைத்தும் மலிவுத் தொகுப்பாக போட்டிருந்தார்கள். வாங்கி ஹாலில் அலங்காரமாக அடுக்கிவிட்டேன். கிரெளஞ்சவதம் மட்டும்தான் வாசிக்க பொழுது இருந்தது.
முதல் முதலில் வாசித்தபோது, காதலித்த நாட்களில், அர்த்தம் வேறுமாதிரி இருந்தது. சண்டை போடும் நாட்களில் மட்டும் இந்த வார்த்தைகள் கீதோபதேசம் மாதிரி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அன்பு என்பதே மனிதர்களை நெருப்பில் வேகவிடும் கொடூரமான விஷயமாகத் தெரியும். காதல் கை கூடி வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் இந்த அன்பு செலுத்துவது நம்மைப் பாடாய்ப் படுத்திதான் வைக்கிறது.
அன்பு என்ற வார்த்தை வரும்போதே , எதிர்பார்ப்பு என்ற துணையும் கூடவே வந்து விடுகிறது. ஒரு தலைப் பட்சமாக எதிர்பார்ப்புகளே அற்ற அன்பு செலுத்துவது ஞானிகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். நம்(என்) போன்ற சராசரிகளுக்கு சாத்தியப் படுவதில்லை. அதனால் வரும் சலிப்புகளும் சங்கடங்களும், இனிமேல் யாரிடமும் அன்பாகப் பழகவே கூடாது என்ற வீம்பை உருவாக்கும். ஆனால் அடுத்த நிமிடமே வேறு வகையில் அன்பு வயப்படுவது மனித இயல்பு.
இந்த ஆண்கள் வேண்டுமானால் விதண்டாவாதமாக எதிர்பார்ப்புகளற்ற நேசத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட பலவீனமானவர்கள் ஆண்களே. பெண்களின் possessivnessஐ கிண்டலடிக்க வேண்டுமானால் இந்த வாதம் பயன்படலாம். உண்மையில் கூடுதல் எதிர்பார்ப்புகள் அவர்களுடையதுதான்.
அதே காண்டேகர் அன்பின் ஆழம் எதுவரை போய் நிற்கும்னு அழகா ஒரு கவிதையை மேற்கோளாகச் சொல்வார்:
``முன்இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன்நெடு நாள்இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!’’
வேடனின் அம்பு பட்டு ஆண் பறவை இறந்தது கண்டு பெண் பறவை இனி வெகுநாள் வாழப்போவதில்லை என்று வால்மீகி புலம்புவதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வெவ்வேறு விதமாக பொருள் சொல்லியிருப்பார். கதை முழுவதிலும் வரும் இந்த பாடல் வரிகள் வால்மீகியின் உத்தமராம சரிதம் படிக்காமல் போனோமே என ஏங்க வைக்கும். சுலோ(கதை நாயகி)வின் எண்ண ஓட்டங்கள் ஒவ்வொரு வயது மாற்றத்திலும் நமக்குள்ளும் பரிணாம மாற்றமாக நிகழ்வது போன்றே இருக்கும். திலீபனும், அப்பண்ணாவும் அவர்கள் பாணியில் இந்த கவிதைக்கு கருத்துகொள்வது இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். மூன்று கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டத்தில் மட்டுமே முழுக் கதையையும் நகர்த்தியிருப்பார். திடுக்கிடும் சம்பவங்களோ, கிளர்ச்சியூட்டும் வசனங்களோ இல்லாமல் யதார்த்தமான தத்துவங்களால் மட்டுமே கதை நகரும்.
`ஒருவரிடம் ஆசை வைப்பதும்,வைக்காமல் இருப்பதும் மனிதர்கள் கையில் இல்லை. அன்பு காவியத்தைப் போன்றது. அதை நாமாக நினைக்கும் போது செய்ய முடியாது’- ரொம்ப சத்தியமான வார்த்தைகள். அதனால்தான்,சலனமில்லாமல் செல்லும் வாழ்க்கைச் சக்கரம் திடீர்க் காதல்களால் நிலை தடுமாறிவிடுகிறது. கடிவாளத்தைத் திறம்பட பிடித்தவர்கள் ஊர் போய்ச் சேர்வார்கள், தவற விடுபவர்கள் திக்கற்று கஷ்டப்படுவார்கள்.
``ஒருவன் நூறு அழகிய நாவல்கள் எழுதிவிடலாம்.சுய சரிதம் ஒரே தடவைதான் எழுத வேண்டுமென்றாலும்கூட, அது அவனால் ஆகாத வேலை.அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதல்ல.எந்தப் பெண்ணும் தன் யதார்த்தமான சுய சரிதையை எழுத முடியாது என்பதுதான் உண்மை’’- சுய சரிதை என்ன சின்ன மலரும் நினைவுகள் கூட எடிட் செய்யப்பட்டே எழுதப்படும்!!!
கிரெஞ்சவதம் வாசித்து முடித்த அன்றே அது பற்றி எழுத வேண்டுமென்று கை அரித்தது. ஆனால் நிறைய பேர் வாசிக்காமலே போய்விடலாம். எப்படியும் ஒருநாள் மதி `நட்சத்திரமாக விருப்பமா’ என்று கேட்பார்கள், அப்போது எழுதிவிட வேண்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டேன். நேரம் பற்றாமல் போய்விட்டது, நன்கு தயார் செய்து எழுதியிருந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி சொல்லியிருக்கலாம்.
காதலும், அன்பும் மட்டுமே பற்றி சொல்லியுள்ளேன். திலீபனின் புரட்சிக் கருத்துக்கள் பற்றி ஒரு வரிகூட சொல்லவில்லையே என்று ரெண்டு மூணுபேர் முணுமுணுப்பது கேட்கிறது. `புரட்சியின் மறுபெயர் காதல்’ என்பதுதானே திலீபனின் வாதம்!
கவுண்டமணி-செந்தில் பாணியில் வாழைப்பழ ஜோக்தான் -``அதுதாண்ணே இது’’!!
கண்ணதாசனின் கவிதைகள் எப்படி எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரி இருக்குமோ, அதே போலவே இவரது தத்துவ விளக்கங்களும் காலம் கடந்து சுவை கூட்டுகிறது.