அலை-43
அலை-43
”தேவதைகளின் இல்லம்”- எங்கள் விடுதிவாழ் தேவதைகளில் நிறைய நல்ல தேவதைகளும் சில கடுப்பேத்தும் தேவதைகளும் உண்டு. புது வரவு மாணவிகளில் யாராவது அழகாகவோ திறமை வாய்ந்தவர்களாகவோ இருந்தால் அவர்களையே துரத்தி துரத்தி சீண்டுவதும் மட்டம் தட்டுவதும் அவர்கள் வாடிக்கை. நாங்க கொஞ்சம் பேர் “சுஹாசினி” மாதிரிதான் இருப்போம். தனியான திறமைன்னும் எதுவும் கிடையாது. அதனால் எந்த சிக்கலிலும் மாட்டாமல் சுதந்திரமாக அலைவோம்.
எங்கள் வகுப்பின் உஷாதான் எல்லோரிடமும் மாட்டிக் கொள்பவள். அழகாகவும் இருப்பாள் ரொம்ப அசடாகவும் இருப்பாள். யார் என்ன சொன்னாலும் நம்பிவிடக் கூடியவள். அவளை குமைப்பதற்கென்றே சில சீனியர்கள் உண்டு. நளினி நல்ல உயரத்துடன் கலரா அழகா இருப்பா. அவளும் அடிக்கடி சீண்டப் பட்டுக் கொண்டே இருப்பாள். பானு, சஹாயமேரி எல்லாம் நல்ல பாடக்கூடியவர்கள்.அதனால் அவர்களுக்கும் அடிக்கடி சங்கீதக் கச்சேரி நடக்கும். சூரியகாந்தி கல்லூரி தொடங்கிய நாளிலிருந்தே படிக்கத் தொடங்கிவிட்ட புத்தகப் புழு. அதனாலும் அவளை ஓட்டுவார்கள்.
இந்தமாதிரி எதிலும் சேராத சாமான்யர்கள் சங்கத்தில் நிறையபேர் இருந்தோம்.
கிடத்தட்ட முதல் மூன்று மாதங்கள் முடிவதற்குள் அவரவர் ரசனைக்கேற்ப க்ரூப்(Gang) சேர்ந்துவிட்டோம். ஆனாலும் எல்லா க்ரூப்பும் மாறிக் கொண்டே இருக்கும்.நிரந்தரமான குழு என்று எதுவும் கிடையாது. எல்லோரும் எல்லோருடனும் தோழமையாக இருப்போம். அதுதான் எங்கள் வகுப்பின் ஸ்பெஷல்.
அடிக்கடி ஹாஸ்டலில் மின்வெட்டு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அவ்வளவு பேரும் ஒரே அறையில்கூடி பேச்சும் சிரிப்பும் கேலியுமாக செம ரகளை செய்வோம். பொதுவான பேச்சு எங்கள் வகுப்பு ஆண்பிள்ளைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான். எங்கள் கூட்டத்தில் சேராத சில பரிசுத்த ஆவிகளும் உண்டு. அவர்கள் பைபிளுடன் இணக்கமாகியிருப்பார்கள்.
ராகிங் பயம் தெளிந்து தேர்தல் முடிந்த பிறகு சுதந்திரமாக நடமாடத் தொடங்கியபோது எங்களின் இலக்கு மாலை வேளையின் நடைபயிற்சிதான். விடுதியில் தொடங்கி திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டைப் பிள்ளையார் கோவில்தான் எங்கள் இலக்கு. தினமும் அதுவரை நடந்துவிட்டு வரும்போது கிடைத்த அநுபவங்கள் பற்றி மட்டுமே ஏகப்பட்ட பகுதிகள் எழுதலாம்.
கோவிலை அடுத்து ஆவின் பால் விற்பனை நிலையம் (milk parlour) உண்டு. சில கோஷ்டிகள் அங்கு சென்றுவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்கள். திருச்செந்தூர் சாலை வரையுமே எங்கள் கல்லூரி வளாகம் இருந்ததால் பாதுகாப்பு பற்றிய கவலையே இருந்ததில்லை.
சிரட்டை பிள்ளையார் நிறைய காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறார். நிறைய காதலர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி கொடுத்திருக்கிறார். வி.ஐ.பி. கடவுள், ஆனால் அவர் இருப்பதோ சின்னதா ஒரு கோவில். பரீட்சைக்கு முன்னாடி நிறைய பேரங்களும் பிரார்த்தனைகளும் அவர்முன் வைக்கப்படும். அதை ஒட்டியே சதக்கதுல்லா கல்லூரி உண்டு. எங்கள் வயதை ஒட்டிய நிறைய மாணவர்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
எங்கள் விடுதியின் வழியாக வரும் ஒரே பேருந்து ’9’ ஆம் நம்பர் டவுண் பஸ். அது ராஜவல்லிபுரம் வரை செல்லும். அந்த பேருந்து செல்லும் வழித்தடமும் எங்கள் நடைப்பயணமும் ஒரே பாதையில்தான் இருக்கும். அந்த பேருந்தில் எண்ணி நாலுபேர் கூட இருக்க மாட்டாங்க. ஆனாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி தினமும் எங்கள் பாதையில் கடந்து செல்லும். ஒருநாள்கூட நாங்கள் யரும் அந்த பேருந்தில் பயணம் செய்ததில்லை. கல்லூரிக்கும் கோவிலுக்கும் நடுவில் பைன் ஆர்ட்ஸ் அறை இருக்கும். அதிலிருந்து சில சமயங்களில் கர்ண கடூரமாக வாத்தியங்கள் இசைக்கப்படும் சத்தம் கேட்கும்.
விடுதியிலுள்ள அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் அந்த சாலைகளில் நடை பயின்று கொண்டிருப்பார்கள். எங்கள் வகுப்பில் பெயர் வரிசைப்படி நான் , உஷா , விஜயலக்ஷ்மி எல்லாம் அடுத்தடுத்து வருவோம். விஜி எனது அறைத்தோழியாகவும் இருந்ததால் நாங்கள் மூவரும் அடிக்கடி சேர்ந்து நடைப்பயிற்சி செல்வோம். முதலில் சீனியர்கள் எங்களை வழிமறித்து கலாட்டா செய்ததெல்லாம் உண்டு. அதிலும் உஷா கூட போகும்போது கண்டிப்பாக நடக்கும். எங்களுக்கு முந்தின ஆண்டு பயின்ற சீனியர் கபீர் மற்றும் பெருமாள்சாமி இருவரும்தான் எங்களை அடிக்கடி கலாய்ப்பார்கள். ஆனால் உஷாவுக்கு அந்த வகுப்பில் நிறைய சொந்தக்காரர்கள் இருந்ததால் சீரியசான ராகிங் நடக்காது.
மூன்று மாதங்கள் போல் முடிந்ததும் நிரந்தர அறைகள் கொடுக்கப்பட்டன. நானும் விஜியும் சேர்ந்தே வந்தோம். முதலில் மாரி எங்க கூட வந்தாள், அப்புறமா ராமேஸ்வரி அறைத் தோழியாக இணைந்தாள். நிறைய பேர் அவர்களின் ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்கள் போன்ற காரணங்களால் வெவ்வேறு தளங்களில் உள்ள அறைகளுக்குப் பிரிந்து போய்விட்டார்கள். நாங்கள் மூன்றாம் மாடியில் சாலையை பார்த்தமாதிரி இருக்கும் அறையில் செட்டில் ஆகிவிட்டோம். படிப்பு முடியும் வரை அதே அறையில்தான் இருந்தோம்.
அறைகள் திசைக்கொன்றாக இருந்தாலும் அவ்வப்போது யாராவது ஒருத்தர் அறையில் கூடி புரணி(Gossip) பேசுவது வாடிக்கையாக இருந்தது. எனக்கு சினிமா பார்ப்பதுதான் ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு. வாரத்துக்கு ஏழு சினிமா பார்க்கச் சொன்னாலும் பார்ப்பேன். அப்படிப்பட்ட எனக்கு உற்ற தோழியாகக் கிடைத்தாள் பானு. அவளும் நானும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள் கணக்கில்லாதவை. பானு அழகாகப் பாடுவள், அனால் எழுத்துப்பிழை அடிக்கடி வரும் . உதாரணமா “காற்றுக்கென்ன வேலி” பாட்டு அவள் வாயில் சரளமாக நடை பயிலும். ஆனால் “ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” ன்னு படுறதுக்குப் பதிலா “பொந்துக்குள்ளேஅடங்கி விடாது”ன்னு பாடுவாள். நாந்தான் அவளுக்கு தப்புகளைத் திருத்தும் பாடலாசிரியர்.
ஊர் சுத்துறது விளையாட்டுன்னு யார்கூட சுத்தினாலும், படிப்புன்னு வந்துட்டா சூரியகாந்திதான் எங்க குரு. பொழுதனைக்கும் படிச்சுகிட்டே இருப்பாள். நாளைக்கு ஏதாச்சும் பரீட்சை இருந்தால் அவகிட்டே போயி கொஞ்ச நேரம் கேட்டால் போதும், பரீட்சை சூப்பரா எழுதிடலாம். தெளிவா மனசுலே நிக்கிற மாதிரி செய்முறை விளக்கத்தோட சொல்லித் தந்திடுவாள். அவள் தயவுலேதான் நான் நிறைய பரீட்சை எழுதியிருக்கேன். எனக்கு பாதி பாடங்களுக்கான புத்தகங்களே இருக்காது.
BSc படித்துவிட்டு வருபவர்களுக்கு graduate quota வில் நான்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அடிப்படையில் வந்த மீனாக்கா தான் எங்க எல்லாருக்கும் கார்டியன். படிக்காட்டி திட்டு வாங்குவது, அடிக்கடி ஊர் சுத்தப் போகும்போது கண்டிக்கிறது எல்லாம் அக்காதான். நாங்க ரெண்டுபேரும் சுத்த சைவம் என்பதால் அக்காவுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கம். ஆனாலும் அடிக்கடி அவங்க கண்ணுலேயே படமாட்டேன். தூரமாகவே இருந்து சலாம் போட்டுக்கிறதுதான். சந்திரலீலான்னும் ஒரு அக்கா இருந்தாங்க. ரொம்ப அமைதி, எப்பவும் சிரிச்ச முகம், அவ்ளோதான்.
அடுத்த வாத்தியாரம்மா லோகநாயகிதான். உண்மையிலேயே உலக நாயகிதான். நெத்தியச் சுருக்கி ஒரு முறை முறைச்சான்னா வகுப்பு ஆம்பிள்ளைப் பசங்களே அரண்டு போயிடுவாங்க. ஸ்டெல்லா , ராமலக்ஷ்மி, சஹாயமேரி ,லோகா எல்லாம் எப்போதும் சேர்ந்துதான் அலையுவாங்க. மெத்தப் படிக்கிற மேதாவிங்க. அவங்களைவிட்டு நாங்க கொஞ்சம் தள்ளியே இருப்போம். பக்கத்துலே போனா டக்குன்னு புத்தகத்தைக் கையிலே குடுத்து படிக்க வைச்சிடுவா லோகா. எதுக்கு வீண் வம்புன்னு ரெண்டாவது தளத்துக்கு போகவே மாட்டோம்.
ஜெயா மாதிரி ஜாலியான ஆளைப் பார்க்கவே முடியாது. அவள் ஸ்டைலே தனி. “என்னடா பொல்லாத வாழ்க்கை” ன்னு பாடிகிட்டேதான் வராண்டாவில் நடப்பாள். சிதம்பரம், சுப்பு, சிவகாமி , சுகந்தி எல்லாம் அமைதியான பிள்ளைகள். விஜி மட்டும் ரெண்டுபேர் உண்டு. அதனால் மூக்கு கொஞ்சம் நீளமான விஜிக்கு கிளி விஜின்னு பேர் வைச்சிட்டோம்.
தினசரி வந்து செல்லும் Dayscholars ஆக நிறையபேர் இருந்தார்கள். அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நட்பு வந்தது. விடுதியிலிருந்தவர்கள் ரொம்ப சீக்கிரமா அந்நியோன்யம் ஆயிட்டோம்.
நாற்பத்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அந்த அன்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.