Friday, April 30, 2021

அலை-43

 அலை-43

”தேவதைகளின் இல்லம்”- எங்கள் விடுதிவாழ் தேவதைகளில் நிறைய நல்ல தேவதைகளும் சில கடுப்பேத்தும் தேவதைகளும் உண்டு. புது வரவு மாணவிகளில் யாராவது அழகாகவோ திறமை வாய்ந்தவர்களாகவோ இருந்தால் அவர்களையே துரத்தி துரத்தி சீண்டுவதும் மட்டம் தட்டுவதும் அவர்கள் வாடிக்கை. நாங்க கொஞ்சம் பேர் “சுஹாசினி” மாதிரிதான் இருப்போம். தனியான திறமைன்னும் எதுவும் கிடையாது. அதனால் எந்த சிக்கலிலும் மாட்டாமல் சுதந்திரமாக அலைவோம். 


எங்கள் வகுப்பின் உஷாதான் எல்லோரிடமும் மாட்டிக் கொள்பவள். அழகாகவும் இருப்பாள் ரொம்ப அசடாகவும் இருப்பாள். யார் என்ன சொன்னாலும் நம்பிவிடக் கூடியவள். அவளை குமைப்பதற்கென்றே சில சீனியர்கள் உண்டு. நளினி நல்ல உயரத்துடன் கலரா அழகா இருப்பா. அவளும் அடிக்கடி சீண்டப் பட்டுக் கொண்டே இருப்பாள். பானு, சஹாயமேரி எல்லாம் நல்ல பாடக்கூடியவர்கள்.அதனால் அவர்களுக்கும் அடிக்கடி சங்கீதக் கச்சேரி நடக்கும். சூரியகாந்தி கல்லூரி தொடங்கிய நாளிலிருந்தே படிக்கத் தொடங்கிவிட்ட புத்தகப் புழு. அதனாலும் அவளை ஓட்டுவார்கள்.

இந்தமாதிரி எதிலும் சேராத சாமான்யர்கள் சங்கத்தில் நிறையபேர் இருந்தோம்.


 கிடத்தட்ட முதல் மூன்று மாதங்கள் முடிவதற்குள் அவரவர் ரசனைக்கேற்ப க்ரூப்(Gang) சேர்ந்துவிட்டோம். ஆனாலும் எல்லா க்ரூப்பும் மாறிக் கொண்டே இருக்கும்.நிரந்தரமான குழு என்று எதுவும் கிடையாது. எல்லோரும் எல்லோருடனும் தோழமையாக இருப்போம். அதுதான் எங்கள் வகுப்பின் ஸ்பெஷல்.


 அடிக்கடி ஹாஸ்டலில் மின்வெட்டு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் அவ்வளவு பேரும் ஒரே அறையில்கூடி பேச்சும் சிரிப்பும் கேலியுமாக செம ரகளை செய்வோம். பொதுவான பேச்சு எங்கள் வகுப்பு ஆண்பிள்ளைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான். எங்கள் கூட்டத்தில் சேராத சில பரிசுத்த ஆவிகளும் உண்டு. அவர்கள் பைபிளுடன் இணக்கமாகியிருப்பார்கள்.


ராகிங் பயம் தெளிந்து தேர்தல் முடிந்த பிறகு சுதந்திரமாக நடமாடத் தொடங்கியபோது எங்களின் இலக்கு மாலை வேளையின் நடைபயிற்சிதான். விடுதியில் தொடங்கி திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டைப் பிள்ளையார் கோவில்தான் எங்கள் இலக்கு. தினமும் அதுவரை நடந்துவிட்டு வரும்போது கிடைத்த அநுபவங்கள் பற்றி மட்டுமே ஏகப்பட்ட பகுதிகள் எழுதலாம்.


 கோவிலை அடுத்து ஆவின் பால் விற்பனை நிலையம் (milk parlour) உண்டு. சில கோஷ்டிகள் அங்கு  சென்றுவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்கள். திருச்செந்தூர் சாலை வரையுமே எங்கள் கல்லூரி வளாகம் இருந்ததால் பாதுகாப்பு பற்றிய கவலையே இருந்ததில்லை. 


சிரட்டை பிள்ளையார் நிறைய காதலர்களை சேர்த்து வைத்திருக்கிறார். நிறைய காதலர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி கொடுத்திருக்கிறார். வி.ஐ.பி. கடவுள், ஆனால் அவர் இருப்பதோ சின்னதா ஒரு கோவில். பரீட்சைக்கு முன்னாடி நிறைய பேரங்களும் பிரார்த்தனைகளும் அவர்முன் வைக்கப்படும். அதை ஒட்டியே சதக்கதுல்லா கல்லூரி உண்டு. எங்கள் வயதை ஒட்டிய நிறைய மாணவர்கள் அங்கு சுற்றிக் கொண்டிருப்பார்கள். 


எங்கள் விடுதியின் வழியாக வரும் ஒரே பேருந்து ’9’ ஆம் நம்பர் டவுண் பஸ். அது ராஜவல்லிபுரம் வரை செல்லும். அந்த பேருந்து செல்லும் வழித்தடமும் எங்கள் நடைப்பயணமும் ஒரே பாதையில்தான் இருக்கும். அந்த பேருந்தில் எண்ணி நாலுபேர் கூட இருக்க மாட்டாங்க. ஆனாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி தினமும் எங்கள் பாதையில் கடந்து செல்லும். ஒருநாள்கூட நாங்கள் யரும் அந்த பேருந்தில் பயணம் செய்ததில்லை. கல்லூரிக்கும் கோவிலுக்கும் நடுவில் பைன் ஆர்ட்ஸ் அறை இருக்கும். அதிலிருந்து சில சமயங்களில் கர்ண கடூரமாக வாத்தியங்கள் இசைக்கப்படும் சத்தம் கேட்கும்.


விடுதியிலுள்ள அனைவருமே ஏதோ ஒரு நேரத்தில் அந்த சாலைகளில் நடை பயின்று கொண்டிருப்பார்கள்.  எங்கள் வகுப்பில் பெயர் வரிசைப்படி நான் , உஷா , விஜயலக்ஷ்மி எல்லாம் அடுத்தடுத்து வருவோம். விஜி எனது அறைத்தோழியாகவும் இருந்ததால் நாங்கள் மூவரும் அடிக்கடி சேர்ந்து நடைப்பயிற்சி செல்வோம். முதலில் சீனியர்கள் எங்களை வழிமறித்து கலாட்டா செய்ததெல்லாம் உண்டு. அதிலும் உஷா கூட போகும்போது கண்டிப்பாக நடக்கும். எங்களுக்கு முந்தின ஆண்டு பயின்ற சீனியர் கபீர் மற்றும் பெருமாள்சாமி இருவரும்தான் எங்களை அடிக்கடி கலாய்ப்பார்கள். ஆனால் உஷாவுக்கு அந்த வகுப்பில் நிறைய  சொந்தக்காரர்கள்  இருந்ததால் சீரியசான ராகிங் நடக்காது. 


மூன்று மாதங்கள் போல் முடிந்ததும் நிரந்தர அறைகள் கொடுக்கப்பட்டன. நானும் விஜியும் சேர்ந்தே வந்தோம். முதலில் மாரி எங்க கூட வந்தாள், அப்புறமா ராமேஸ்வரி அறைத் தோழியாக இணைந்தாள். நிறைய பேர் அவர்களின் ஊர்க்காரர்கள் சொந்தக்காரர்கள் போன்ற காரணங்களால் வெவ்வேறு தளங்களில் உள்ள அறைகளுக்குப் பிரிந்து போய்விட்டார்கள். நாங்கள் மூன்றாம் மாடியில் சாலையை பார்த்தமாதிரி இருக்கும் அறையில் செட்டில் ஆகிவிட்டோம். படிப்பு முடியும் வரை அதே அறையில்தான் இருந்தோம். 


அறைகள் திசைக்கொன்றாக இருந்தாலும் அவ்வப்போது யாராவது ஒருத்தர் அறையில் கூடி புரணி(Gossip) பேசுவது வாடிக்கையாக இருந்தது. எனக்கு சினிமா பார்ப்பதுதான் ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு. வாரத்துக்கு ஏழு சினிமா பார்க்கச் சொன்னாலும் பார்ப்பேன். அப்படிப்பட்ட எனக்கு உற்ற தோழியாகக் கிடைத்தாள் பானு. அவளும் நானும் சேர்ந்து பார்த்த திரைப்படங்கள் கணக்கில்லாதவை. பானு அழகாகப் பாடுவள், அனால் எழுத்துப்பிழை அடிக்கடி வரும் . உதாரணமா “காற்றுக்கென்ன வேலி” பாட்டு அவள் வாயில் சரளமாக நடை பயிலும். ஆனால் “ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” ன்னு படுறதுக்குப் பதிலா “பொந்துக்குள்ளேஅடங்கி விடாது”ன்னு பாடுவாள். நாந்தான் அவளுக்கு தப்புகளைத் திருத்தும் பாடலாசிரியர்.


ஊர் சுத்துறது விளையாட்டுன்னு யார்கூட சுத்தினாலும், படிப்புன்னு வந்துட்டா சூரியகாந்திதான் எங்க குரு. பொழுதனைக்கும் படிச்சுகிட்டே இருப்பாள். நாளைக்கு ஏதாச்சும் பரீட்சை இருந்தால் அவகிட்டே போயி கொஞ்ச நேரம் கேட்டால் போதும், பரீட்சை சூப்பரா எழுதிடலாம். தெளிவா மனசுலே நிக்கிற மாதிரி செய்முறை விளக்கத்தோட சொல்லித் தந்திடுவாள். அவள் தயவுலேதான் நான் நிறைய பரீட்சை எழுதியிருக்கேன். எனக்கு பாதி பாடங்களுக்கான புத்தகங்களே இருக்காது. 


 BSc படித்துவிட்டு வருபவர்களுக்கு graduate quota வில் நான்கு சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த அடிப்படையில் வந்த மீனாக்கா தான் எங்க எல்லாருக்கும் கார்டியன். படிக்காட்டி திட்டு வாங்குவது, அடிக்கடி ஊர் சுத்தப் போகும்போது கண்டிக்கிறது எல்லாம் அக்காதான். நாங்க ரெண்டுபேரும் சுத்த சைவம் என்பதால் அக்காவுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கம். ஆனாலும் அடிக்கடி அவங்க கண்ணுலேயே படமாட்டேன். தூரமாகவே இருந்து சலாம் போட்டுக்கிறதுதான். சந்திரலீலான்னும் ஒரு அக்கா இருந்தாங்க. ரொம்ப அமைதி, எப்பவும் சிரிச்ச முகம், அவ்ளோதான். 


அடுத்த வாத்தியாரம்மா லோகநாயகிதான். உண்மையிலேயே உலக நாயகிதான். நெத்தியச் சுருக்கி ஒரு முறை முறைச்சான்னா வகுப்பு ஆம்பிள்ளைப் பசங்களே அரண்டு போயிடுவாங்க. ஸ்டெல்லா , ராமலக்ஷ்மி, சஹாயமேரி ,லோகா எல்லாம் எப்போதும் சேர்ந்துதான் அலையுவாங்க. மெத்தப் படிக்கிற மேதாவிங்க. அவங்களைவிட்டு நாங்க கொஞ்சம் தள்ளியே இருப்போம். பக்கத்துலே போனா டக்குன்னு புத்தகத்தைக் கையிலே குடுத்து படிக்க வைச்சிடுவா லோகா. எதுக்கு வீண் வம்புன்னு ரெண்டாவது தளத்துக்கு போகவே மாட்டோம்.


ஜெயா மாதிரி ஜாலியான ஆளைப் பார்க்கவே முடியாது. அவள் ஸ்டைலே தனி. “என்னடா பொல்லாத வாழ்க்கை” ன்னு பாடிகிட்டேதான் வராண்டாவில் நடப்பாள். சிதம்பரம், சுப்பு, சிவகாமி , சுகந்தி எல்லாம் அமைதியான பிள்ளைகள். விஜி மட்டும் ரெண்டுபேர் உண்டு. அதனால் மூக்கு கொஞ்சம் நீளமான விஜிக்கு கிளி விஜின்னு பேர் வைச்சிட்டோம்.  


 தினசரி வந்து செல்லும் Dayscholars  ஆக நிறையபேர்  இருந்தார்கள். அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நட்பு வந்தது. விடுதியிலிருந்தவர்கள் ரொம்ப சீக்கிரமா அந்நியோன்யம் ஆயிட்டோம்.


நாற்பத்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அந்த அன்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அலை-42

 அலை-42

தேர்தல் என்று வந்துவிட்டாலே எல்லாமே தலைகீழாகத்தான் மாறிவிடும் போல் இருக்கிறது. நாங்கள் முதலாமாண்டு படித்தபோது மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவையின் தேர்தல் நடந்தது.கல்லூரி முழுவதும் ஒரே களேபரமாக இருந்துச்சு. மாணவர்களிடையே எத்தனை எத்தனை பிரிவுகளையும் பிணக்குகளையும் உண்டாக்கியது .


நான் வார இறுதி நாட்களில் திருநெல்வேலியில் இருந்த பெரியக்கா வீட்டிற்கு சென்றுவிடுவேன். அதனால் தேர்தல் களேபரங்களில் அதிகமாக சிக்கவில்லை. நிறைய விஷயங்கள் புரியாமலே இரு.துச்சு.

எந்தக் காலமாக இருந்தாலும் தேர்தலின்போது மதம், சாதி பிரிவுகள் போன்றவற்றின் ஆளுமைகள் தவிர்க்க முடியாதது போலும். நாற்பத்து நாலு வருடங்களுக்கு முன்னரும் ,இன்றைய தேர்தலுக்கு சற்றும் வேறுபாடின்றி சாதீய அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி தேர்தல் களைகட்டிக் கொண்டிருந்தது. புரிந்தும் புரியாமலும் ஒவ்வொரு குழுவில் சேர்க்கப்பட்டு பந்தாடப் பட்டோம். நான் எந்த க்ரூப்பில் இருந்தேன் என்று எனக்கு கடைசி வரை ஞாபகம் இல்லை.


தேர்தல் வந்ததால் நடந்த மிக நல்ல விஷயம், ராகிங் என்பதே இல்லாமல் போனதுதான். ராகிங்க்கு பயந்து சீனியர்களைத் தவிர்த்து ஓடிக்கொண்டிருந்தது மாறிப்போய் ,வி.ஐ.பி.கள் மாதிரி மிதப்பாக அலைந்தோம்.  பெரிய தலைகள்தான் எங்களைத் தாங்கிக் கொண்டாடினார்கள். 


இரண்டு பெரிய தலைகள் மோதிக் கொண்டார்கள். ரெண்டுபேரையும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் விடுதியிலிருந்த சீனியர்கள் மூலம் சில சமயம் தன்மையாகவும், சில நேரங்களில் மிரட்டலாகவும் அவர்களைப் பற்றிய பரிந்துரைகள் வரும். பூம் பூம் மாடுகள் மாதிரி தலையை ஆட்டிக் கேட்டுக் கொள்வோம்.  பெண்கள் சார்பாக பிளாரன்ஸ் அக்காவும் G.E.லதா அக்காவும் போட்டி போட்டாங்க. ரெண்டு பேருமே  விடுதியில் இருந்ததால் ரெண்டு கோஷ்டியும் விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.


ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப் முடிந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு சீனியர் வழி மறித்து நீ சோடியமா என்று கேட்டார். கெமிஸ்ட்ரி சம்பந்தமான கேள்வியை அவர் ஏன் கேட்கிறார் என்று புரியவில்லை. அதற்குள் யாரோ விரிவுரையாளர் வந்ததால் பதில் சொல்லும் முன்பே விலகிப் போய்விட்டார். எனக்கு ஒரே மண்டைக் குடைச்சலாக இருந்தது. கெமிஸ்ட்ரி லேபில் ஏதோ சேட்டை பண்ணியதை கண்டுபிடித்துவிட்டதாக பயந்து போய்விட்டேன். 

விடுதிக்கு வந்ததும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது சோடியம் கதையைச் சொன்னேன். சிலர் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள், சிலர் சந்தோஷமாக ஆரவாரித்தார்கள். ஏனென்று சொல்லாமல் கொஞ்ச நேரம் கலாய்த்துவிட்டு மெதுவாக விளக்கம் சொன்னாங்க. யார் விளக்கினாங்கன்னு மறந்துடுச்சு. கெமிஸ்ட்ரியில் சோடியம் உப்பின் சிம்பல் (SYMBOL) Na+. அது ஒரு சாதிப் பிரிவின் முதல் இரண்டு எழுத்துகள். இலை மறை காயாக நான் அந்த பிரிவைச் சேர்ந்தவளா எனக் கேட்டிருக்கிறார். நான் அக்கா வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்ததால் இந்த சங்கேத பாஷைகளெல்லாம் முதலில் புரியவில்லை. போகப் போக புரிந்து கொண்டேன்.


தேர்தல் முடிந்து  மாரியப்பன் என்பவர் ஜெயித்ததாகவும், பிராயன் சக்ரவர்த்தி என்பவர் தோற்றதாகவும் முடிவுகள் வந்தன. அதுவரைக்கும் வகுப்புக்குள்ளேயே ஒருவித இறுக்கமான சூழ்நிலை இருந்து கொண்டிருந்தது. முடிவு வெளியானதும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு மாற ஆரம்பித்தோம். தேர்தல் காரணமாக மாணவர்களிடையே சின்ன சின்ன க்ரூப்புகள் பிரிய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் பெண்கள் விடுதியில் அப்படி எந்த பிரிவினையும் தென்படவில்லை.  


எங்கள் கல்லூரி தமிழ் நாட்டின் தென்கோடியில் இருந்ததால் நிறைய மாணவ மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களது பேச்சுத் தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் “ மக்கா, மக்களே” ன்னுதான் கூப்பிடுவாங்க. முதலில் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், பின்னர் அதுவே பிடித்துப் போய்விட்டது. மச்சான்ஸ் என்ற வார்த்தை மாணவர்களிடையே ரொம்ப பிரபலம் (நமீதா எங்களிடமிருந்துதான் காப்பி அடிச்சிருப்பாங்க). பிடிக்காத யாரைப் பார்த்தாலும் “இவன் சரியான தொட்டி”ன்னு சொல்லுவாங்க, விசித்திரமான உவமானமாக இருக்கும். 


எங்கள் மருத்துவக் கல்லூரி(டிவிஎம்சி)க்குன்னே ஸ்பெஷல் பாஷை ஒன்றும் உண்டு. எல்லா வார்த்தையையும் தலை கீழாக்கிப் பேசுவது. ’மாடு’ என்பதை ’டுமா’ன்னு சொல்லிட்டு அதிலும் ஒரு எக்ஸ்ப்ரஷனாக ’ஸ்’ சேர்த்து ”டும்ஸ்” என்று கூப்பிடுவது. பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் சுலபமாக திருப்பிப்போட்டு பேசுவார்கள். முதலில் ஒண்ணுமே புரியாது. போகப் போக நாங்களே அப்படிப் பேச ஆரம்பித்துவிட்டோம். அதிலும் “கைக்ழுவ” (வழுக்கை) என்ற வார்த்தை ரொம்ப பிரச்னைகளை பின் வந்த காலங்களில் உண்டாக்கியது. சில நேரங்களில் தேர்ந்த வித்தகர்கள் பெரிய வாக்கியத்தைக் கூட ரிவர்ஸ் பண்ணிப் பேசுவாங்க. டுபாப்சா(சாப்பாடு)தான் எல்லார் வாயிலும் புகுந்து வதைபடும் வார்த்தை. 


கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் மற்றவர்கள் அறியாமல் கதைப்பதற்கு இந்த மொழியையே பயன்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியருக்குத் தெரியாமல் சில்மிஷங்கள் பண்ணவும் இந்த மொழியே பயன்படும். இப்படியே பேசிப்பேசி, சில நேரங்களில் முறையான வார்த்தைகள் கூட பிழையாகத் தோன்றுவதும் உண்டு.


நல்லவேளையாக தமிழைக் கொலை செய்வதாகக் கூறி யாரும் எங்களை வதைத்தெடுக்கவில்லை.

அலை-41

 அலை-41

”அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” தினம் தினம்…..


கல்லூரியின் முதல் வருட அநுபவம் பின்பக்கத்தின் பளீரொளி(Flash-back)யின் இனிய தொடக்கம். முதல் முத்தம், முதல் காதல் போல் முதல் வருட கல்லூரி அநுபவமும் தனித்துவம் வாய்ந்ததுதான். ஒவ்வொரு நாளும் புதுப்புது நிகழ்வுகள் புதிய உறவுகளின் அறிமுகம். ஆனால் முதலாண்டின் படிப்பு மட்டும் அரைத்த மாவையே அரைத்தது போல் பழைய பஞ்சாங்கம். ஆனால் அதையும் சுவைபட ரசிக்கும்படியாக நிறைய விஷயங்கள் இருந்தது. 


கற்பித்த ஆசிரியர்கள் அநேகம்பேர் மருத்துவர் அல்லாத மருத்துவக்கல்லூரி ஆசான்கள். முதல் வருடத்தில் அடித்த லூட்டிகளும் சேட்டைகளும் மருத்துவப் படிப்பில் பின் விளைவுகளை ஏற்படுத்தாத அளவுக்கு சுதந்திரம் தந்திருந்த பெருந்தன்மையாளர்கள். அதனாலேயே பயமறியாக் கன்றுகளாக பாடிப் பறந்து திரிந்தோம்.   


வகுப்பறை மூன்றாம் மாடியில் இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்குரிய ஆய்வகங்கள் வெவ்வேறு மூலைகளில் இருக்கும். பிஸிக்ஸ் லேப் கீழ்தளத்தின் மேற்கு மூலை என்றால், கெமிஸ்ட்ரி லேப் கிழக்கு மூலையில் இருக்கும். பயாலஜி ஆய்வகம் மூன்றாம் மாடியிலேயே இருந்தது. வகுப்புகளுக்கு ஓரிடமும், ஆய்வகங்களுக்கு வேறிடமுமாக வராண்டாக்களில்  நடைபயில்வதுததான் அந்தக் காலத்தில் எங்களுக்குப் பிடித்த எக்ஸ்கர்ஷன். 


ஒரே கூட்டமாக இணைந்திருந்த எங்களை, ஆய்வகங்களின் இட வசதி மற்றும் இலகுவாக கற்பித்தல் காரணமாக மூன்று குழுமங்களாகப் பிரித்துவிட்டார்கள், ஒவ்வொரு குழுமத்திலும் சுமார் இருபத்தைந்து பேர் இருப்போம். அதன் அடிப்படையில் பூத்த சிறு சிறு நட்பு வட்டங்கள் நெருக்கமானதும் இந்த அடிப்படையில்தான். என் பெயர்  ‘ T ’ யில் ஆரம்பித்ததால் மூன்றாம் குழுமமான ‘ C ‘ Batch-இல் இணைந்தேன். மருத்துவக் கல்லூரியில் ‘ C ‘ Batch என்றால் பெயிலாகி அடுத்த வருஷம் படிக்கும் additional batch  என்றும் அர்த்தம் உண்டு. 


ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பேராசிரியர், உதவி பேராசிரியர், விரிவுரையாளர் மற்றும் செய்முறை ஆசிரியர்கள் என ஏகப்பட்டபேர் உண்டு. ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றியுமே ஒரு பதிவு போடலாம். அவ்வளவு  interaction ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்தது. மருந்துக்குக்கூட ஒரு பெண் விரிவுரையாளர் கிடையாது.


ஆங்கிலத்திற்கு மட்டும் ஒரே ஒரு பேராசிரியர் இருந்த மாதிரி ஞாபகம். சிங்கம் மாதிரி சிங்கிள் ஆக இரூந்திருப்பார். தலைகீழ் ’ப’ வடிவ மீசையுடன் அக்கா வீட்டு பனைக்கு முக்கால் பனை உயரத்துடன் இருப்பார். ஆங்கிலத்தில் என்ன படித்தோம், என்ன பரீட்சை எழுதினோம் என்றே நினைவில்லை. எங்கள் வகுப்பறையின் வாசலை ஒட்டியே அவர் அறையும் இருந்ததால் தினசரி அவரைப் பார்க்கும் பாக்கியம் உண்டு.


பயாலஜி ஆய்வகம் எனக்கு ரொம்ப பிடித்த இடம். பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி மாதிரி கற்பனையில் படிக்காமல் கண்முன்னே படிப்பதால் , அதற்கென்று ஒரு ரசனை உண்டு. பேராசிரியர் Dr. பாலகிருஷ்னன், மலையாளி என்று நினைக்கிறேன், ரொம்ப பேச மாட்டார். ஆனால் அவரது வகுப்புகள் நீரோடைபோல் தெளிவாக இருக்கும். அவருக்கும் சேர்த்து டெமொன்ஸ்ட்ரேட்டர் அடுக்கு மொழியில் பேசி அசத்துவார். அவருக்கு ரைமிங் words என்று பட்டப்பெயர் வைத்தே கூப்பிட்டதால், இயற்பெயர் மறந்தே போய்விட்டது, கருப்பைய்யா சார் என்று நினைக்கிறேன். ஒரு வார்த்தை சொல்லும்போது அதுக்குள்ள இணைச்சொற்கள் (synonyms) நாலைந்தாவது சேர்த்துதான் சொல்லுவார். அவருக்கு பெரிய fan-club உண்டு. AP என்றழைக்கப்படும் அருள்பிரகாசம் சாரும் ரொம்ப பேச மாட்டார், முகத்திலும் எந்த பாவனையும் தெரியாது.


பிஸிக்ஸ் லேபில் பேராசிரியர் ரொம்ப தங்கமானவர். எல்லோரையும் தன் குழந்தைகள் போல் கரிசனையுடன் நடத்துபவர். தும்பைப்பூ மாதிரி நரை முடியுடன் வலம் வருபவரை , நாங்கள் “பெரியப்பா” என்று செல்லமாக அழைப்போம். லேசாக கூன்போட்டு ஆடி ஆடி நடந்து வருவதைப் பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். உதவி பேராசிரியர் கனகசபாபதி சார் உர் உர் டைப். சிரிக்கவே மாட்டார். அவர் பேசுவதே காதில் விழாத மாதிரி மெல்லிசாகத்தான் பேசுவார் . ஆனாலும் அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம்தான். அவருக்கு நேர் எதிரிடையாக இருப்பார் மஹாதேவன் சார். படபடப்பாக பேசிக் கொண்டு ஜாலியாக இருப்பார். நன்கு பாட்டும் பாடுவார். என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம்தான் கேட்போம்.


கெமிஸ்ட்ரி லேப் போகக் கொஞ்சம் கடியாகத்தான் இருக்கும். அதன் பேராசிரியர் பெயர்கூட மறந்துவிட்டது. ரெட்டி என முடியும் பெயர் என்பதால் சீனியர்கள் அவரை ”ரொட்டி” என்றே அழைப்பார்கள். நாங்களும் அந்த பெயரையே பழகிக் கொண்டோம். உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து அவர் நடந்து சென்றதைப் பார்த்ததே இல்லை. உதவி பேராசிரியர் சமத் சார்ன்னு நினைக்கிறேன். கஷ்டமான கெமிஸ்ட்ரி கூட இஷ்டமாகிற மாதிரி சொல்லித் தருவார். அவரும் ரிசர்வ்ட் டைப்தான்.ஆனாலும் அவரிடம் ஒரு ஒட்டுதல் இருக்கும். பாபனாசம் சார் எதிலும் Cut&right ஆக இருக்கும் பேர்வழி. அதனால் அவருக்கு பட்டப் பெயரெல்லாம் வைக்கவில்லை. அநியாயத்துக்குக் குள்ளமாக இருப்பார், அதனால் உயர வளர்ந்த வணங்காமுடிகள்கூட  தலைகுனிஞ்சுதான் அவரிடம் பேசணும் .அவர் பாடம் எடுக்கும் பாங்கு நன்றாகவே இருக்கும்.  


செல்வசேகரன் சார் ரொம்ப இயல்பாகப் பழகக் கூடியவர். எல்லாருடைய குடும்ப விபரங்களையும் விசாரிப்பார், கவலையுடன் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவார் .அதனால் அவரிடம் எல்லோருக்கும் நல்ல நட்பு இருக்கும். நாங்கள் கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் புதிதாக சத்யமூர்த்தி சார் டெமான்ஸ்ட்ரேட்டர் ஆகச் சேர்ந்தார். படித்து முடித்தவுடன் வந்திருந்ததால் எங்களைவிட நாலைந்து வயது வித்தியாசம் மட்டுமே இருந்திருக்கும். வாத்தியார் என்பதைவிட சீனியர் என்று நினைக்கிறமாதிரி இருப்பார். மேலும் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்புடன் அவர் பேசுவதைக் கேட்க காமெடியாக இருக்கும். வகுப்பில் அவரது உச்சரிப்பைக் கேலி பண்ணி அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும். அவருக்கு பெண்களெல்லாம் சேர்ந்து ஒரு பட்டப் பெயர் கூட வைத்திருந்தோம்.  


நாராயணசாமி சார் என்று Statistics ஆசிரியர்  உண்டு . ஐந்தாவது வருடம் SPM exam இல் எழுத வேண்டிய Statistics பரிட்சைக்கு முதலாம் ஆண்டில் வகுப்பெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு.   Mean mode median என்றெல்லாம் எதேதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டிருப்பார். அநேகமாக எல்லோரும் சத்தமாக  அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். (SPM பரீட்சை எழுதியபோதுதான் அவர் எடுத்த வகுப்புகளின் முக்கியத்துவம் புரிந்தது.)

எல்லா உதவி பேராசிரியர்களும் கண்டிப்பாகத் தென்பட்ட போது, அனைத்து டெமான்ஸ்ட்ரேட்டர்களும் இயல்பாக இருந்ததால் வகுப்புகள் போரடிக்காமல் சென்றது. 


எங்களுக்கு அடுத்த batch உடன் முதலாமண்டு pre-clinical வருஷம் நிப்பாட்டப் பட்டுவிட்டது. ஜூனியர்களெல்லாம் நேரடியாக அனாடமி படிக்க வேண்டியதாகிவிட்டது. நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். ராகிங் பிரச்னைகள், வீட்டு ஞாபகத்தால் வரும் ஹோம் சிக்னஸ் எல்லாவற்றையும் முதலாண்டிலேயே கடந்து வந்துவிட்டதால் அனாடமி படிக்கப் போகும்போது தெளிந்து விட்டோம்.  ஐந்தரை வருடங்கள் + ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜன் என ஆறறை வருடங்கள் படித்தோம். அந்த நீண்ட பயணத்தில் தொடர்ந்த நட்பு என்பதால் 77 BATCH இன் நட்பு இன்றும் இறுக்கமாகவும் இணக்கமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 


முதலாமாண்டு பாடங்கள் மருத்துவப் படிப்பிற்கு உதவியாக இருந்ததோ, இல்லையோ அந்த வருடத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப தேவையாக இருந்தது. வாழ்க்கையின் மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில் தொடங்கி வாலிப வயதுகளில் வந்த நட்பு தனிதான். ஒவ்வொருவரின் பலம் பலவீனம் எல்லாம் பாசாங்குகளற்று வெளிப்பட்ட வெள்ளந்தியான பருவம்.

மறுபடியும் வாழ முடியுமா என ஏங்க வைத்த காலம்,

நினைவலைகளாகவாவது வலம் வரட்டும்.

அலை-40

 அலை-40

“House of Angels” – தேவதைகளின் இல்லம்!

எங்க ஹாஸ்டல் பெயரே ரொம்ப அம்சமானது. மருத்துவக்கல்லூரி வாழ்வின் வசந்தங்களைத் தந்தது. அதில் வாழ்ந்து சென்ற எல்லோருக்குமே அது “Cinderella’s Castle”” தான். விதவிதமான கனவுகளைக் காண வைத்த அதிசய உலகம் அது. 


முதல்நாள் கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்த நட்பின் வட்டம் 44 வருடங்களைக் கடந்து இன்றளவும் தொடர்கிறது. அதற்கு முதல் காரணமாக இருந்த களம் எங்களின் ”தேவதைகளின் இல்லம்.”


ஹாஸ்டலின் நுழைவு வாயில்தான் வரவேற்பறையாகவும், உறவினர்களைச் சந்திக்கும் இடமாகவும் இருக்கும். அதற்கென தனியான விசிட்டர்ஸ் ஹால் (visitors hall) இருந்தபோதும் யாரும் அதை அதிகமாகப் பயன் படுத்துவதில்லை. அதனால் வாசலில் எப்போதும் கலகலப்புக்குக் குறைவு இருக்காது. உள்ளே நுழைந்ததும் மாடிப்படிகளுக்குச் செல்லும் படிக்கட்டுதான் நேர் எதிரே இருக்கும். வகுப்பு முடிந்து வந்ததும் முதலாண்டு மாணவிகளெல்லாம் குடுகுடுவென்று படியேறி ஓடிப்போய் எங்கள் தளங்களுக்குச் சென்றுவிடுவோம். 


எனக்கு அன்றுதான் ஹாஸ்டலின் முதல்நாள். ஆனால் நிறையபேர் முந்தினநாள் சாயங்காலமே வந்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு படபடப்பு கொஞ்சம் மட்டுப்பட்டு தெரிந்தது. அவரவர் அறைகளில் சென்று ஓய்வெடுத்த பின்பு சக தோழிகளின் அறிமுகம், அரட்டை என்று சாயங்காலம் நன்றாகவே கடந்தது. வகுப்பறையில் அறிமுகப் படலம் நடந்தபோது எல்லோருடைய பெயரையும் கேட்டிருந்தாலும் கூட முகமும் பெயரும் அவ்வளவு எளிதில் புரிபடவில்லை. ஆனாலும் பாடிப்பறந்த குருவிகளெல்லாம் கூடிக் குலவி சிரித்து மகிழ்ந்தோம்.

அவ்வப்போது ராகிங் பற்றி பேச்சு வந்தபோது கொஞ்சம் பயம் வந்தாலும் , அதை எதிர்கொள்ளும் துணிவும் கூடவே வந்தது.


எங்க ஹாஸ்டல் மாடிப்படிகளின் இருபுறமும் இரண்டு பகுதிகளாக இருக்கும்.கிழக்குப் பக்கம் இரு வரிசைகளாகவும் மேற்குப் பக்கம் ஒரு வரிசையிலும் அறைகள் இருக்கும். எங்கள் அறைகள் கிழக்குப்பக்கம் என்பதால், மேலிருந்து பார்த்தால் கீழுள்ள அறைகள் எல்லாம் தெரியும். எட்டிப் பார்க்கும்போது யாராவது சீனியர் நடந்து போனால் சட்டென்று பின் சென்று ஒளிந்து கொள்ளுவோம். கண்ணுலே பட்டா கடத்திட்டுப் போயிட மாட்டாங்களா?


 எங்களுக்கு வார்டன் பெத்தம்மா மேடம் என்று சொன்னார்கள். ஆனால் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு கீழ் அறையில் தங்கியிருந்த ஹவுஸ்கீப்பர் அம்மாவுக்கு என்றும் சொன்னார்கள். அந்த அம்மாவைப் பார்த்தாலே கொஞ்சம் வில்லி மாதிரி தெரிந்ததால் எனக்கு பிடிக்காமல் போய்விட்டது.


எங்கள் வகுப்பில் நாகர்கோவிலில் இருந்து வந்த க்ரூப் கொஞ்சம் பீலாவாக ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த கோஷ்டி ஒன்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை மாதிரி கிராமத்திலிருந்து வந்தவர்கள் சின்ன குழுவாக சேர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 


எதிர் வராண்டாவில் இருந்து ஒரு சீனியர் வந்து எங்களில் ரெண்டு மூணுபேரைக் கூட்டிட்டு போய் அவங்க ரூமில் வைத்து பாட்டுப் பாடச் சொன்னாங்க. ”மூன்று முடிச்சு” படம் வந்த புதுசு என்பதால் ”ஆடி வெள்ளி தேடி வந்து” பாடினேன் என்று நினைக்கிறேன். ஆனால் “வசந்த கால நதிகளிலே” பாட்டு பாடச் சொன்னாங்க. ஆம்பிளை வாய்ஸில் பாட வைத்து கலாய்க்கிறாங்களாம். யாரோ ஒருத்தரை ”ஆயிரம் நிலவே வா” பாடலை பாடச் சொன்னாங்க, எப்படி? - ஒவ்வொரு நம்பராக இறக்கி “தொளாயிரத்து 99 நிலவே வா, 998 நிலவே வா”ன்னு அவங்க நிப்பாட்டச்  சொல்ற வரை பாடணும். எப்படியோ பாடி முடிச்சு தப்பிச்சு ஓடி வந்திட்டோம்.


அறைக்கு வந்த பின்புதான், ஒவ்வொருத்தரும் ஏதோ ஒருசீனியர்கிட்டே மாட்டிக் கிட்டாங்கன்னு தெரிஞ்சுது. ஆனால் சீரியஸான ராகிங் யாருக்கும் இல்லை. ராகிங் கிடையாது, யாராவது பண்ணினால் உடனடியாக புகார் தெரிவிக்கவும்னு சொல்லியிருந்தாலும், சின்னச் சின்ன ராகிங் நடக்கத்தான் செய்தது. அதையெல்லாம் நாங்களும் சரியான கோணத்தில் எடுத்துக் கொண்டு புகார் அளிக்காமலும், பிரச்னை ஏற்படுத்தாமலும் பதவிசாக நடந்து கொண்டோம்.


எங்க வகுப்பில் நிறைய பேர் மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த சாதாரண பெண்கள். அதிலும் ஒப்பனை செய்து அழகை மிகைப்படுத்திக் காட்டத் தெரியாத குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அதனால் ரொம்ப சிம்பிள் ஆக இருப்போம். அதனால் எங்களை மட்டம் தட்டும் விதமாக மெஸ்ஸில் வைத்து சில சீனியர்கள் கேலி பேசி குமைத்தார்கள். நாங்க யாரும் அதைப் பொருட்படுத்தவும் இல்லை. நானெல்லாம் அந்தக்காலத்தில்  “கோபுரங்கள் சாய்வதில்லை” சுஹாசினி மாதிரிதான் இருப்பேன். நாங்க எல்லோருமே அதே நிலையில்தான் இருந்திருப்போம், ஒரு சில அழகிகளைத் தவிர.


என்னோட நண்பர் ஒருவர் எப்பவும் சொல்லுவார் ”பெண்களில் அழகு,அழகில்லைன்னு பிரிக்கக்கூடாது; அழகு, மிக அழகுன்னுதான் பார்க்கணும்” ன்னு சொல்லுவார்.  நாங்க அழகா இருந்திருக்கோம். நாட்கள் செல்லச் செல்ல மிக அழகாக ஆகிவிட்டோம். 


எங்க மெஸ்தான் , எல்லோருக்கும் ரொம்ப பிடித்த இடம். ரொம்ப சாதாரணமான ஹாலில் நீள பெஞ்சும் மேஜையும் போட்டிருப்பாங்க. ”ப” வடிவத்தில் இருக்கும் இருக்கைகளில், எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு அரங்கேறும் விவாதங்கள் சூடு பறக்கும். மெஸ் பற்றியே தனிப் பதிவு போடலாம். 

இரவு சாப்பாடு முடிந்தபின் படுக்கப் போக வேண்டும். ஆனாலும் எல்லோருக்கும் புது அநுபவங்களைப் பேசி விமர்சிக்க ஆசை இருந்ததால் எல்லோரும் கூட்டமாக அமர்ந்து கொஞ்ச நேரம் அரட்டை அடித்தோம். 


மூவர் தங்கும் அறையில் மூன்று கட்டில்களும், மேஜையும், நாற்காலியும் தரப் பட்டிருந்தன. மின்விசிறி கூடக் கிடையாது. ரெண்டு ஜன்னல்கள் உண்டு, திறந்து வைத்தால் நல்லா காற்று வரும். A/C room இல்லாட்டி ஹாஸ்டலுக்குப் போக மாட்டேன் என்று சொல்லும் நம் வாரிசுகளுக்கு இது புதுமையாக இருக்கும்.MBBS முடிக்கும் வரைக்கும் மின்விசிறி இல்லாத அறையில்தான் தங்கி இருந்திருக்கிறோம்.


ஒவ்வொரு வராண்டாவின் மூலையிலும் பொதுவான குளியலறை மற்றும் கழிவறைகள் இருக்கும். அதுவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் இருக்கும். துண்டு போட்டு ரிசர்வ் செய்தால்தான் முதலில் குளித்து கிளம்ப முடியும். நல்ல வேளையாக வாஷ் பேசின் வெளிப்புறமாக இருக்கும். அதனால் பல் விளக்கவும் முகம் கழுவவும் முண்டியடிக்க வேண்டியதில்லை. வாஷ் பேசினை அணைத்து நிற்கும் கம்பிகளினூடே தெரியும் ,கல்லூரியும் அதை ஒட்டி செல்லும் சாலைகளும்.


 பெண்கள் விடுதியை வட்டமிடும் மன்மத ராஜாக்களின் சேஷ்டைகளை அந்தக் கம்பிகளின் வழியே ரசிப்பது எங்கள் விடுதியிலுள்ள நிறையபேருக்கு அன்றாட பொழுது போக்கு. 


முதல்நாளே வீட்டு ஞாபகம் வந்து தவிப்பவர்களுக்கு ஒரே புகலிடம் போன் ரூம். மாடிப்படிக்கட்டின் அடியிலுள்ள புறாக்கூண்டு மாதிரி இடம்தான் போன் ரூம். அதன் பொறுப்பாளராக ஒரு அட்டெண்டர் உட்கார்ந்திருப்பார்.  அப்போதெல்லாம் நேரடியாகப் பேச முடியாது. டிரங்க் கால் பதிவு செய்துவிட்டு காத்திருக்கணும். வரும் காலங்களில் எவ்வளவு நேரம் தவம் கிடப்போம் என்று அன்றைக்குத் தெரியவில்லை.


மேலே சொன்னதையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கும்போது நமக்கே கண்ணைக் கட்டுதே, அடுத்த தலைமுறை வாரிசுங்க கற்பனையிலாவது பார்த்து ரசிப்பாங்களா இல்லை கண்டபடி குமைப்பாங்களா?

அலை-39

 அலை-39

“புதிய பாதை புதிய பயணம்”

மருத்துவக் கல்லூரியின் முதல் நாள். மறக்க முடியாத நாள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளவேண்டிய நாள். ஆனால் நிறைய விஷயங்கள் மறந்து போய் அங்கும் இங்குமாக சில நிகழ்வுகள் மட்டுமே நினைவுப் பெட்டகத்தில் உள்ளடக்கிக் கொள்ளப்பட்ட நாள். சுதந்திர தினம் கழிந்து வந்த புதன் அல்லது வியாழக்கிழமை 17.08.1977 அன்று கல்லூரி திறக்கப்பட்டது.    


திருநெல்வேலி அக்கா வீட்டிலிருந்து தினசரி வந்து செல்வது சிரமமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே விடுதியில் சேர அனுமதி வாங்கியிருந்தோம்.. அதனால் கல்லூரி திறந்த அன்று காலையில்தான் விடுதிக்கு வந்தேன் .


தாவணிக் கனவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு புடவையில்தான் கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்ற கட்டாயம். அப்போதெல்லாம் சுடிதார் என்ற பெயர்கூட எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. PUC படிக்கும்போது புடவை கட்டியதாகவே நினைவில்லை. அதனால் மருத்துவக் கல்லூரியில் சேரும்போதுதான் முதல் முதலாக எனக்கென்று புடவைகள் எடுத்திருந்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பச்சை சுங்குடிச் சேலையைக் கட்டிக் கொண்டேன். அதுவரை கட்டைக் கை(half sleeve) ஜாக்கெட் போட்டதிலிருந்து மாறுதலுக்காக முக்கால் கை(three fourth) வைத்து போட்டுக் கொண்டேன்.


பள்ளி இறுதி வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியருக்கு தரங்கதரா கெமிக்கல்ஸ் ஆலை(எங்க ஊரின் பெரிய ஆலை)யிலிருந்து விழா நடத்தி பரிசுப் பொருட்கள் தருவது வழக்கம். எனக்கும் ராஜதுரை(வகுப்புத் தோழன்)க்கும் அந்த வருடம் அழகான லெதர் சூட்கேஸ் பரிசளித்திருந்தார்கள். வெளியூர்களுக்கு சென்று படித்து மென்மேலும் வளரவேண்டுமென்று வாழ்த்தி கொடுத்திருந்தார்கள். அதில் எனது உடைமைகளை அடுக்கி எடுத்துக்கொண்டேன். பாசிப்பயறு கலரில் அழகான சூட்கேஸ்.  விடுதிக்கு எடுத்து செல்லவேண்டிய அடிப்படை விஷயங்களும் வாங்கித் தந்திருந்தார்கள். ஹைகிரவுண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து விடுதிவரை அந்த கனமான பெட்டியை யாரோ தூக்கி வந்தார்கள்.


.விடுதியில் நுழைந்தவுடன் ஒரே களேபரமாக இருந்தது. பீஸ் கட்ட வந்தபோது இருந்த அமைதிக்கு இப்போ தெரிந்த சலசலப்பு நேர் எதிராக இருந்தது. கொஞ்ச பேர் கைகளில் கோட் தொங்கவிட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். சிலர் வராண்டாக்களில் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.ஒருசிலர் எங்கும் போகாமல் வரவேற்பறையில் நின்று கொண்டிருந்த முதலாம் ஆண்டு மாவிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.


 எங்க ஊரிலிருந்து இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் இந்திராக்காவிடம் அறிமுகப் படுத்தி என்னை ஒப்படைக்க அப்பா நினைத்திருந்தார்கள். வாட்ச்மேனிடம் தகவல் சொல்லி அனுப்பி கொஞ்ச நேரத்தில் இந்திராக்கா வந்தாங்க. பள்ளியில் படிக்கும் போது பார்த்ததைவிட ரொம்பவே மாறியிருந்தாங்க. கஞ்சி போட்ட காட்டன் புடவையில் ஸ்டைலாக ஒரு மருத்துவருக்குரிய நிதானத்துடன் வந்தாங்க. அப்பா அவர்களிடம் பேசிய பிறகு வார்டன் மூலம் எனக்கு அறை ஒதுக்கப்பட்டது.  


மூன்றாவது மாடியின் பின்பக்க வராண்டாவின் மேற்கு மூலையிலிருந்தது எனக்கு ஒதுக்கப்பட்ட அறை- 51ஆம் நம்பர்.விடுதியின்  கடைசி அறை. நான்தான் கடைசியாக வந்த ஆள் போலும். ராகிங் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் மூன்றாம் மாடியில் போட்டு விட்டார்கள். நான் சென்றபோது அறைத் தோழிகள் யாரையும் காணவில்லை. சாப்பிடச் சென்றிருந்தார்கள் போலும். சுவரில் பதிக்கப்பட்ட மூன்று பெரிய கப்போர்டுகளில் ஒன்று மட்டும் காலியாக இருந்தது. எனது உடைமைகளை அதில் வைத்துக் கொண்டேன்.


 முதலாமாண்டு மாணவிகள் அனைவரையும் வரவேற்பு அறையிலிருந்து ஒரே குழுவாக கல்லூரிக்கு அழைத்துச் செல்வார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.எனவே அறையில் தனியாக உட்கார்ந்து போரடிப்பதை விட வரவேற்பறைக்குச் சென்றுவிடலாமென்று கிளம்பினேன். கையோடு எடுத்துவந்திருந்த ஆங்கில நாவல் ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே சென்றேன். 

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்தால் பக்கத்தில் குண்டு போட்டால்கூட எனக்குக் கேட்காது என்று வீட்டில் அடிக்கடி திட்டு வாங்குவேன். அதற்கேற்ப நாவலில் ஆழ்ந்து போய் சுற்றுப் புறத்தையே மறந்துவிட்டேன். நிறைய பேர் என்னை முறைத்துப் பார்த்து சென்றதைக்கூட அறிந்திருக்கவில்லை.


 திடீரென கூட்டம் சேர்ந்து சத்தம் அதிகமான பிறகே தலையைத் தூக்கிப் பார்த்தேன். முதலாமாண்டு மாணவிகளை வரிசையில் நிற்க வைத்திருந்தார்கள். நானும் தடதடவென்று ஓடிப்போய் வரிசையில் சேர்ந்து கொண்டேன். அதுவரை ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமில்லாமல் இருந்ததால், சீரியஸாக புத்தகத்தில் மூழ்கியிருந்த என்னை சீனியராக நினைத்துக் கொண்டார்கள். நானும் முதலாம் ஆண்டுதான் என்று தெரிந்ததும் சிலர் என்னை முறைத்துப் பார்த்ததுபோல் தோன்றியது.


எங்களது கல்லூரிப் பருவத்தில் வருஷத்துக்கு 75 மாணவர்கள் மட்டுமே. அதில் பெண்கள் சரிபாதி அளவில் இருந்திருப்போம். அதிலும் வீட்டிலிருந்து வரும் மாணவிகளும் இருப்பதால் விடுதி மாணவியர் எண்ணிக்கை சொற்பமாகவே தெரிந்தது.  வீட்டிலிருந்து வந்தவர்களும் விடுதியில் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார்கள். வரிசையாக ஊர்வலம் செல்வதுபோல் விடுதியிலிருந்து கல்லூரிக்குச் சென்றோம். முன்னாலும் பின்னாலும் காவலுக்கு யாரோ வந்தார்கள். இடையிடையே சைக்கிளில் வட்டமிட்ட ஹீரோக்கள் எங்கள் ஊர்வலத்தைப் பார்த்து கேலி செய்து பயமுறுத்த முயற்சி செய்தார்கள். பயம் கலந்த குறுகுறுப்புடன் நாங்களும் அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே நடந்தோம்.

இப்போதும் முன் வாசல் வழியாகச் செல்லாமல் சைக்கிள் ஸ்டாண்ட் வழியாகவே அழைத்துச் செல்லப் பட்டோம்.

கதவை ஒட்டியே சென்ற படிக்கட்டு வழியாக மூன்றாவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எல்லாம் ராகிங்கிலிருந்து பாதுகாக்கத் தானாம். சீனியர்களுக்கு மேலே வர அநுமதி இல்லையாம்.


 அனைவரையும் பெரிய லெக்சர் ஹாலில் அமர வைத்தார்கள். பெரிய அறை , மூன்று வரிசைகளாக பெஞ்சுகள் படிபடியான உயரங்களில் போடப்பட்டிருந்தது. பெண்கள் இடப்புறமும் ஆண்கள் வலப்புறமும் உட்கார வைக்கப்பட்டார்கள். எல்லோரையும் அகர வரிசைப்படி (alphabetical order)  உட்கார வைத்தார்கள். என் பெயர் தாணு(Thanu)  என்பதால் கடைசி வரிசைக்குப் போய்விட்டேன். எனக்குப் பிறகும் நாலுபேர் இருந்தார்கள். (உஷா, விஜயலக்ஷ்மி.M.,விஜயலக்ஷ்மி.P., விசாலாக்ஷி என அவர்கள் பெயர்களைப் பின்பு தெரிந்து கொண்டேன்).நாங்கள் ஐவரும்தான் கடைசி வரிசை. அந்த வரிசையின் பாதையை ஒட்டிய முதல் இருக்கை என்னுடையது.அதனால் ரொம்ப சேட்டை பண்ண முடியாது, வாத்தியாரின் நேரடி பார்வை படும் இடமாக இருந்தது. நடு வரிசையில் சில பின் பெஞ்ச் ஆண்கள் வந்து அமர்ந்து கொண்டார்கள். 


அதன்பிறகு அறிமுகப் படலம், கல்லூரி பற்றிய தகவல்கள், விளக்கங்கள் எல்லாம் சொல்லப் பட்டன. வழக்கம் போல வகுப்பறைக்குள் சொல்லப்பட்டவை எல்லாம் காத்தோட போயிடுச்சு. எதுவும் மனசுலே தங்கவில்லை. ராகிங் பத்தியும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன பிரச்னை என்றாலும் உடனே வந்து புகார் தெரிவிக்க வேண்டியது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்கள். நாங்கள் அமரவைக்கப்பட்ட வகுப்பறை ஆங்கிலத் துறையைச் சார்ந்தது. அதை ஒட்டியே ஆங்கில பேராசிரியரின் அறையும் இருந்தது.

நாங்கள் படித்த காலங்களில் MBBS 6 ½ வருட படிப்பாக இருந்தது. முதல் வருடம் PRE-CLINICAL  YEAR என்று அறிமுகப் படிப்பாக இருந்தது. பெளதிகம்(physics), வேதியியல்(chemistry), உயிரியல் (biology),  இத்துடன் சேர்ந்து ஆங்கிலமும் ஒரு பேப்பர். ஒரு வகையில் சொல்லப் போனால் மருத்துவ மாணவர்களின் Honey-moon வருஷம் என்றே சொல்லலாம். ”ஆத்தா நான் டாக்டராயிட்டேன்” நோயாளியைப் பார்க்கணும் ஊசி போடணும் அப்படீங்கிற கனவுகளோட வந்தவங்களுக்கெல்லாம் கொஞ்சம் சப்பென்று தோணும்படியாக மறுபடியும் PUC வகுப்புகள் மாதிரியே பாடத்திட்டம். 


ஒரு வழியாக தகவல்கள் அறியப்பட்டு மறுநாளிலிருந்து அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும் விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டோம். 

மதிய உணவு இடைவேளையின்போதும் ஊர்வலம் தொடங்கி விடுதிக்கு சென்றோம். வீட்டிலிருந்து வருபவர்கள் சாப்பிடும் அறை மூன்றாவது மாடியிலேயே கல்லூரி வளாகத்திலேயே   இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள். மாணவர்களையும் இதே பாணியில் ஊர்வலமாகத்தான் அழைத்துப் போனார்களா என்பது தெரியவில்லை.


 அதற்குள் PUC யில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், நாகர்கோவிலில் இருந்து வந்தவர்கள், பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர்கள் என்று சின்னச் சின்ன குழுக்களாகச் சேர  ஆரம்பித்தார்கள், அதனால் விடுதிக்குத் திரும்பும் போது பேச்சுச் சத்தமும் அரட்டையும் ஆரம்பமாகிவிட்டது. எனக்குத்தான் கிராமத்திலிருந்து வந்திருந்ததால் எந்த தோஸ்த்தும் கிடைக்கவில்லை.

மதிய உணவு இடைவேளையை சீனியர்கள் வராத சமயமாகப் பார்த்து ஏற்பாடு செய்திருந்ததால் எந்த தொந்தரவும் இல்லாமல் சாப்பிட முடிந்தது. மதிய வகுப்புகளுக்குச் செல்ல நேரம் இருந்தபடியால் அவரவர் அறைகளுக்குச் சென்றோம். அங்குதான் என் அறைத் தோழிகள் மாரியம்மாள், விஜயலக்ஷ்மி.P. இருவரையும் சந்தித்தேன். எனக்கும் தோஸ்த்துங்க கிடைச்சிட்டாங்க. புதிய பயணத்தின் இனிய சொந்தங்கள்.