Friday, December 16, 2022

அலை-78

 அலை-78

 “அப்பாவின் நினைவுகள்”

பெற்றோர்களை நினைக்க சிறப்பு தினம் தேவையில்லை. தினம் தினம் நம்மைக் கடந்து செல்லும் அவர்களின் நினைவு. ஆனாலும் அப்பாவின் நினைவு நாளான இன்று அப்பாவின் உருவம் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. எப்பவுமே வெள்ளை நிற ஆடைதான். நான்கு முழ வேட்டியும் ஜிப்பா ஸ்டைலில் அரைக் கை சட்டையும்தான் நிரந்தர ஆடை. கைலி கட்டியோ கலர் சட்டை போட்டோ பார்த்ததில்லை. 


உயரமான மெலிந்த தேகமும் சீரான நடையும் வெள்ளை உடையும் எந்தக் கூட்டத்திலும் அப்பாவைத் தனியாகக் காட்டும். புறங்கை கட்டிக்கொண்டு நடப்பதும் தனித் தன்மைதான். நெற்றியில் மகுடம் வைத்தது போன்று எலும்பு புடைத்து இருப்பது அந்தக் கால கம்யூனிஸ்ட்டுக்குத் திலகம் வைத்தது போல் இருக்கும். அதிர்ந்து பேசியதில்லை, எங்களை அடித்தும் வளர்க்கவில்லை. ஆனாலும் அப்பா என்றால் மரியாதை கலந்த பயம் இருந்தது. அப்பாவின் அமைதியான தீர்க்கமான நடவடிக்கைகள் நம்மைப் புடம் போடுவதாக இருக்குமே தவிர நம்மைத் தர்ம சங்கடப் படுத்துவதாக இருக்காது. 


ஒரு நாள் நானும் எழிலும் சீத்தாலக்ஷ்மி ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த அப்பாவும் அதே இடத்துக்குக் காஃபி குடிக்க வந்தார்கள். எங்கள் இருவரையும் பார்த்தும் எந்தவித சலனமும் இல்லாமல் காஃபி அருந்திவிட்டு சென்றுவிட்டார்கள். அதன்பிறகு விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றபோதுகூட அது குறித்து எதுவுமே கேட்கவில்லை. நானாகச் சோல்ல வேண்டிய தருணம் வந்தபோது அப்பா மறைந்துவிட்டார்கள்.


நான்காவது வருட பரீட்சைக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் போது திடீரென வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. அப்பாவிற்கு உடம்பு சீரியஸாக இருப்பதால் உடனடியாகக் கிளம்பி வருமாறு சொன்னார்கள். அந்த சமயத்தில் எழில் நண்பர் எபிநேசர் விடுதிக்கு ஏதோ வேலையாக வந்திருந்தார்கள். ஊருக்குச் செல்ல கையில் பணம்கூட இல்லை. எபிதான் நண்பர் ஒருவரிடமிருந்து பணம் ஏற்பாடு செய்து தந்தார். என்னை பஸ் ஏற்றிவிட ஹைகிரவுண்டு பேருந்து நிறுத்தம் வரை துணையாக வந்தார். 

அப்பாவிற்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது, தேவைப்பட்டால் இங்கேயே கூட்டி வந்துவிடு என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஒரே வரியில் விளக்கம் சொன்னேன். எங்கள் வீட்டில் யாருக்கு சீரியஸ் என்றாலும் தகவல் சொல்ல மாட்டார்கள். அப்பாவிற்கு ஏதோ ஆகிவிட்டதால்தான் எனக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள் என சொல்லும்போதே பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டேன்.


எனக்கு அவ்வளவு சீக்கிரம் கண்ணீரே வராது. சினிமாவில் வரும் சில நெகிழ்ச்சியான காட்சிகளில் கண்ணீர் வரும்போதுகூட மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் துடைத்துக் கொள்வேன். பிறர் முன்னாடி அழுவது பிடிக்கவே பிடிக்காது. நான் அழுவதைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்ட எபி தானும் என்கூட வருவதாகச் சொல்லி பணம் எடுக்க C-17 அறைக்குச் சென்றார்கள். ஆனால் அதுவரை தாமதிக்க முடியாததால் அடுத்து வந்த பேருந்தில் ஏறி தனியாகவே கிளம்பிவிட்டேன். 


வாழ்க்கையில் மறக்க முடியாத சில தருணங்களில் ஒன்றான அப்பாவின் மரணம். பேருந்தில் ஏறிய பிறகும்  என்னைக் கதறி அழவைத்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பாவைப் படுக்க வைத்திருந்த கோலம் ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் அழியாக் காட்சி. நயினார் அண்ணன் வருவதற்காகக் காத்திருந்தார்கள். அண்ணன் கொஞ்சம் தொலைவான ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்து பயணம் செய்து வர அதிக நேரமாகிவிட்டது. 


ஒவ்வொருவராக அழுது அழுது மயக்கமாவதும், அவர்களைத் தெளிய வைப்பதுமாக அலங்கோலப் பட்டுக் கிடந்தது வீடு. நயினார் அண்ணன் வந்ததும் வாசல் நிலைக்காலைப் பிடித்துக் கொண்டு அப்பாவின் முகத்தைப் பார்த்து தாரை தாரையாகக் கண்ணீர் விட்டான். 


அப்பாவின் மரணம் எதிர் பாராத ஒன்று. எப்போதும் போல் காலைகடன்களுக்காக பனங்காடு போய்விட்டு வீட்டில் வந்து கால் கை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வரும்போது சட்டென்று கீழே விழுந்து அடுத்த நிமிடம் உயிர் பிரிந்துவிட்டதாம். மருத்துவம் படித்த பிறகு திடீர் மரணத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் தெரிந்து கொண்டாலும் அன்று அப்பாவின் மரணம் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாகிவிட்டது.


இறந்தவீட்டுக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் நான் காட்சிப் பொருளாகிப் போனேன். இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காமல் போய்விட்டாரே என்று அங்கலாய்த்துக் கொண்ட கூட்டமும் இருந்தது. பேரப்பிள்ளைகள் நெய்ப்பந்தம் பிடிக்க  விமரிசையாக இறுதி ஊர்வலம் சென்ற பிறகுதான் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. வகுப்புத் தோழர்களும் எழில் மற்றும் நண்பர்களும் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். அப்பாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் உறவினர்களும் கூடியிருந்ததில் சந்தைகடை வளாகமே நிரம்பி வழிந்தது. 


அப்பாவின் திடீர் மரணத்தால் விட்ட குறை தொட்ட குறையாக செய்ய முடியாத விஷயங்கள் அநேகம் உண்டு. வீட்டிலேயே ஒரு டிஸ்பென்சரி மாதிரி வைக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லியிருந்தார்களாம். அதை நிறைவேற்ற முடியவில்லை. எழில் பற்றி சொல்லி அப்பாவின் ஒப்புதல் பெற முடியாமல் போய்விட்டது. அப்பாவுக்கு சரியான மருத்துவம் பார்க்க முடியாததும் மனக்குறையாகவே இருக்கிறது. 


அப்பாவுக்கு முழங்காலில் படை போன்ற தோல்வியாதி இருந்தது. அப்பப்போ அதிகமாகி நீர்போல் வடியும். காய்ந்த பிறகு அந்த இடம் வெண் தேமல் மாதிரி மாறிவிடும். நான் மூன்றாம் வருடம் சென்ற பிறகு தோல் மருத்துவ பிரிவில் ஆலோசனை பெற்று வெண்தேமல் மறையும் களிம்புகள் வாங்கிக் கொடுத்தேன் . ஆனால் முறைப்படி வைத்தியம் செய்யும் முன் காலம் கடந்துவிட்டது. 


அப்பாவின் முத்திரைகள் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தருணங்களில் இன்றளவும் உதவிக் கொண்டிருக்கிறது. தலைமைப் பண்பு, போராட்ட குணம், உதவி செய்யும் பாங்கு எல்லாமே அப்பாவிடமிருந்து வந்தவைகள்தான். அவையத்து முந்தியிருக்கச் செய்த அப்பாவின் ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்லும் கருவிகள் நாங்கள். 


ஐநூற்று முத்துப் பிள்ளையை அறியாத ஆறுமுகநேரிக்காரர்கள் அன்று இல்லை. அந்த ஆலமரத்தின் விழுதுகள் உலகம் முழுவதும் இன்று.

முத்துக்கள் குடும்பத்தின் முதல்முத்து

அனைத்து வாரிசுகளுக்கும் அடித்தளமாய் ஞானமாய் விளங்கும்

அப்பாவின் நினைவுகள் நம்மை வழிநடத்தும்

Tuesday, December 13, 2022

அலை-80

 அலை-80

 “மருத்துவம் பேசுவோம்”

நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி பேசப்படும் பொருள் உடல் நலமாகத்தான் இருக்கும். இயல்புக்கு மாறாக சின்னத் தலைவலியோ காய்ச்சலோ வந்தாலும்கூட அதுகுறித்தே அன்று முழுவதும் மனது சுற்றித் திரியும். “If health is lost everything is lost” என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உடல்நலம் பேணாத மனிதர்களே இல்லை எனலாம். 


ஆனால் அதற்குத் தேவையான முயற்சிகளை எல்லோராலும் கடைப்பிடிக்க முடிகிறதா என்பதும் கேள்விக்குறிதான். பொருளாதார சிக்கல்கள், பருவநிலை மாற்றங்கள், அறியாமை, கிருமிகள், கட்டிகள், வயதுமூப்பு என எண்ணற்ற காரணிகள் நம் நலத்தைச் சீண்டிப் பார்ப்பவையாகவே உள்ளன. இயற்கையாக வரும் தொந்தரவுகளைவிட நாமே வரவழைத்துக் கொள்ளும் வியாதிகளும் அதிகம் உண்டு.


அறுபது வயதைக் கடந்துவிட்டேன், ஆனால் இதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கே போனதில்லை, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதே இல்லை எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் மனிதர்கள்கூட சிறு சிறு உடல்நலக் கோளாறுகளை எதிர் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைத் தாங்கும் வலிமை அவர்களுக்கு அதிகம் இருந்திருக்கும். சளி பிடித்தால் வைத்தியம் பார்த்தால் ஏழு நாட்களில் சரியாகிவிடும், எந்த வைத்தியமும் பார்க்காமல் விட்டால் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்று கேலியாகப் பேசுவது கூட உண்டு.


இத்தைகைய சூழலில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு எப்போதும் ஏக கிராக்கிதான். அதிலும் எழுபதுகளில் டாக்டர் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டது உண்மைதான். எங்க குடும்பத்தில் நான் தான் முதல் டாக்டர். அறிவிலும் மேதாவித்தனத்திலும் என்னை விட சிறந்து விளங்கிய அண்ணனோ தம்பியோ மருத்துவம் படிப்பதில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. 


ஏற்கனவே வீட்டுக்குக் கடைக்குட்டி என்பதால் கிடைத்த சலுகைகளுடன் படிப்பும் சேர்ந்து கொண்டதால் ரொம்ப செல்லமாகிப் போனேன். 

முதல்வருடம் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே பெரிய டாக்டராக நினைத்துக்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரி வாசலுக்குப் போகவே இன்னும் ரெண்டு வருடம் ஆகும் என்பதைச் சொல்லி மனசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவ்வப்போது தெரிந்த ஆலோசனைகளைச் சொல்லி சமாளித்துக் கொள்ளுவேன். 


ஊரிலிருந்து அவ்வப்போது வைத்தியத்துக்கு வரும் உறவினர்களைப் பொறுப்பாக அழைத்துச் சென்று உரிய மருத்துவர்களிடம் காண்பித்து செய்யும் உதவிகளே குடும்பத்தில் பெருமையாகப் பேசப்பட்டது.

வீட்டுக்கு வருபவர்களிடம் என்னை அறிமுகப்படுத்துவதே ‘ஹைகிரவுண்ட்டில் டாக்டருக்குப் படிக்கிறாள்’ என்பதுதான். தாணு என்று உரிமையாகக் கூப்பிட்ட வகுப்புத் தோழர்கள்கூட ”என்ன டாக்டர் செளக்கியமா” என்று கூப்பிடத்தொடங்கிய காலம் தொட்டு டாக்டர் என்பதே  முதல் அடையாளமாகிப்போனது. முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் போகப்போகப் பழகிப் போனது. 


மூன்றாவது வருடம் வந்த பிறகு நோய்களும் மருந்துகளும் பரிச்சியம் ஆகத் தொடங்கிவிட்டது. விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது சின்னச் சின நோவுகளுக்கு வைத்தியம் செய்துகொள்ள ரெண்டுபேராவது வந்துவிடுவார்கள். உள்ளுக்குள் உதறலாக இருந்தாலும் பந்தாவாக கேள்விகள் கேட்டு அதற்கு ஒரு தீர்வும் சொல்லிக் கொள்ளுவேன். கொஞ்சம் வித்தியாசமான அறிகுறிகள் இருந்தால் ஹைகிரவுண்டுக்கு வரச் சொல்லி முதுநிலை சிறப்பு மருத்துவர்களிடம் காட்டி சரி செய்ய வைப்பேன். 


எங்க வீட்டில் எல்லோருக்கும் என்மேல் ரொம்ப நம்பிக்கை. நான் என்ன சொன்னாலும் அப்படியே கடைப்பிடித்து விடுவார்கள். விதண்டா வாதமோ நொரண்டு பேச்சுகளோ இருக்காது. நான் மூன்றாம் வருடம் படித்தபோது தம்பி நாராயணன் ஷங்கர் நகரில் படித்துக் கொண்டிருந்தான். திடீரென வயிற்று வலி என்றவுடன் என்னிடம் வந்துவிட்டான். 


நான் மூன்றாவது யூனிட்டில் ஹரிகரன் சார் யூனிட்டில் படித்துக் கொண்டிருந்தேன். 

தம்பிக்கு அப்பெண்டிசைட்டிஸ் என்று கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. வீட்டில் அதுவரை யாருக்கும் அறுவை சிகிச்சை என்ற பேச்சே இருந்ததில்லை. கட்டியோ குட்டியோ எதற்காகவும் யார் மீதும் கத்தி வைத்ததில்லை. அக்கா மதினி எல்லோருக்கும் சுகப்பிரசவம்தான் தம்பிக்குத்தான் முதல் அறுவை சிகிச்சை. எல்லோரும் ரொம்ப பயந்து போயிருந்தார்கள். 


எங்கள் பயம் புரிந்தமாதிரி ஹரிஹரன் சாரே அறுவை சிகிச்சை செய்ய வருவதாகச் சொல்லிவிட்டார்.

மூன்றாமாண்டு மாணவியின் சகோதரனுக்கு அறுவை சிகிச்சை செய்ய துறைத்தலைவராக இருந்த ஹரிஹரன் சாரே அந்த அகால நேரத்தில் வந்தது குடும்பத்தினர் அனைவரையும் நிம்மதிப் படுத்தியது. ஆப்பரேஷன் சுமுகமாக நடந்து தம்பியை வார்டுக்குக் கூட்டி வந்த பிறகுதான் எல்லோர் முகத்திலும் சிரிப்பே வந்தது. பெரிய டாக்டரே வந்து ஆப்பரேஷன் செய்தார் என்று வருவோர் போவோரிடமெல்லாம் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். 


அறுவை சிகிச்சைக்குப் பின் வைத்தியம் பார்க்கும் வார்டில் துணைக்கு ஆண்களே இருக்க வேண்டும். ஆனாலும் நான் உடனிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன பின்பும் கூட அப்பா அந்த வார்டின் வெளிப்புற வெராண்டாவில் தரையில் படுத்திருந்த காட்சி நிழற்படமாக இன்றும்  நினைவில் ஓடுகிறது. 


நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்கு பெரிய தையல் போடும் வழக்கம் இருந்ததால் ஒரு வாரத்துக்குத் தம்பி மருத்துவ மனையிலேயே இருந்தான். 

எங்க யூனிட் நோயாளி என்பதால் நானும் அவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளும் வசதி கிடைத்தது. விசாரிக்க வரும் சொந்தக்காரங்க கூட்டம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் டாக்டர் தம்பி என்பதால் யாரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை. 


ஆப்பரேஷன் பண்ணிய டாக்டரைவிட துணைக்கு நின்ற தாணு ஹீரோயின் ஆகிவிட்டாள். இனிமேல் என்ன நோய் வந்தாலும் நேரே பஸ் பிடிச்சு ஹைகிரவுண்டு வந்துவிட வேண்டியதுதான் என நிறைய பேர் அன்னைக்கே முடிவு பண்ணிட்டாங்க. படித்து முடிக்கும் வரை அது தொடர்கதையாகத்தான் இருந்தது.


மருத்துவத்தை உன்னதமான தொழில் (Noble Profession) என்று அழைப்பதின் மகத்துவத்தை அப்போதிருந்தே உணர முடிந்தது.

அலை-77

 அலை-76

“குமரி அலை”
ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் குழுமத்திலிருந்து வருடம் தோறும் ‘மகளிர் மட்டும்’ சுற்றுலா செல்வது வாடிக்கை. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் எங்குமே செல்லவில்லை. நான் தலைமைப் பொறுப்பு ஏற்றபின்பும்கூட எங்குமே செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் கார்டிலியா பயணக் கப்பல் சென்னையிலிருந்து சுற்றுலா கூட்டிச் சென்றதை அடுத்து மும்முரமாக பயண ஏற்பாடுகள் ஆரம்பித்தோம். ஆனால் அதன்மீது அவ்வளவாக மக்களுக்கு ஈடுபாடு ஏற்படாததால் பார்க்காத இடத்திற்குப் போகலாமே என்று சில தோழியர் சொன்னார்கள்.
எல்லோரும் பிஸி மருத்துவர்கள், ரெண்டு அல்லது மூன்று நாட்களுக்குமேல் வெளியூர் வர முடியாது. ஏற்கனவே விசாகப்பட்டினம் போய் வந்தாச்சு. கூட்டிக் கழிச்சுப் பார்த்து ரெண்டு இடங்கள் தேறிச்சு. ஹைதராபாத் அல்லது வதோதரா சரிப்பட்டு வருமென்று தோன்றியது. கான்பரன்ஸ், மீட்டிங் என்றெல்லாம் ஹைதராபாத்துக்கு நிறைய பேர் போய் வந்துவிட்டதால் வதோதரா என்று முடிவாச்சு. எங்க ஆஸ்தான ட்ராவல் ஏஜண்ட் GT Holidays மூலம் ஒரு பயண தொகுப்பும் வாங்கி EOGS group இல் போட்டு விட்டாச்சு.
நானும் செயலாளர் பூர்ணிமாவும் தினமும் க்ரூப்பைத் திறந்து பார்த்தால் மொத்தமே 7-8 பேர்தான் விருப்பம் தெரிவித்தார்கள். நாப்பது அம்பதுன்னு போற கூட்டம் ஏழுபேராகப் போனால் சரி வராதுன்னு நாங்களே அதை ரத்து செய்துவிட்டோம். நாம தலைவியாக இருக்கும்போது நம்ம ஊரை சுத்திக் காட்டினால் நல்லாருக்குமேன்னு தோணுச்சு. கன்யாகுமரி போலாமான்னு கேட்டப்போ நிறைய பேருக்கு உடன்பாடு இல்லை.
ஈரோட்டிலிருந்து வெள்ளி இரவு புகை வண்டியில் கிளம்பினால் சனி மற்றும் ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு திங்கள் காலை ஈரோடு வந்து சேர்துவிடலாம். பயணம் இலகுவாக இருக்கும், இரண்டு நாட்கள் முழுதாகக் கிடைக்கும், சேர்ந்து போவது எந்த இடமாக இருந்தாலும் ஜாலி பண்ணிக் கொள்வோம் என்று சொன்னவுடன் ஒரு கும்பல் ரெடியாகிவிட்டாங்க. புகைவண்டி டிக்கெட் எடுப்பது , லோக்கலில் சுற்றிப் பார்ப்பது, ரிஸார்ட் ஒழுங்கு பண்ணுவது எல்லாம் நம்மாலே முடியாது என்பதால் GT Holidays கிட்டேயே பொறுப்பை விட்டுட்டோம்.
நாகர்கோவிலில் அனந்தியா ரிஸார்ட்தான் வேண்டுமென்றும் சொல்லியாச்சு. A/C train, Resort, லோக்கலில் சுற்ற A/C bus , ஆறுவேளை உணவு எல்லாம் சேர்த்து 10000/ ரூபாய்தான் என்றவுடன் எல்லோருக்கும் சந்தோஷமாகிப் போனது. உறவினர்கள், நண்பர்கள் (பெண்கள் மட்டும்) அழைத்து வரலாம் என்று சொன்னதும் எண்ணிக்கை அரை சதத்தைத் தாண்டிவிட்டது.
இத்தனை பேர் போகும்போது ஸ்பெஷல் ஆடை அலங்காரங்கள் வேண்டுமென்று ஒரே கலரில் ட்ரெஸ் எடுத்துக் கொண்டோம். இதுவரை மாடர்ன் ட்ரெஸ் போடாதவர்கள் எல்லாம்கூட சுடிதார் தைத்துக் கொண்டார்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே கலரில், (மயில் வண்ண நீலம்) 150 மீட்டர் அளவில் துணி கிடைக்காமல் கடை கடையாக ஏறி இறங்கியது தனிக்கதை. எப்படியோ பூர்ணிமா ஒரு ஆளைப் பிடிச்சு துணி ஏற்பாடு செய்துவிட்டாள். அதை வாங்கி தனித் தனி அளவுகளாக வெட்டி அனுப்பி வைத்த நாளில் இருந்தே டூர் மூட் களை கட்டிவிட்டது. இடையிடையே பயணத் தொகுப்பில் சில மாற்றங்கள் செய்வது பற்றி யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பயனம் தொடங்க சில நாட்கள் இருக்கும்போதே ரெண்டு மூணுபேர் வரமுடியாத சூழல் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் வர ஆசைப்பட்ட சிலரை அதில் இணைத்துக் கொண்டோம். பயணச்சீட்டு ரத்து செய்து மாற்று சீட்டுகள் வாங்கி அதே எண்ணிக்கை மாறாமல் ஏற்பாடாகிவிட்டது. தோழி கிருஷ்ணவேணி குடும்பத்தினர் பன்னிரெண்டுபேர் வர இருந்ததால் எங்கள் குழுமத்தில் இணைக்க முடியவில்லை. ஆனாலும் அவர்களே தனிப்பட்ட முறையில் பதிவு செய்து எங்களுடனேயே பயணித்தார்கள்.
பார்த்துப் பார்த்து தீபாவளிக்கு அடுத்தவாரம் ஒழுங்கு பண்ணினால், அந்த ஞாயிறு அன்று முஹூர்த்த நாளாம். முக்கியமான திருமணங்களுக்கு வீட்டுக்கு ஒருவர் போனால் போதும் என்ற கணக்கில் கணவர்களுக்கு ஹோம் ஒர்க் கொடுத்துவிட்டு பயணத்துக்கு ரெடியாகிவிட்டோம். சனிக்கிழமை முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் கன்யாகுமரியில் அதிக மழைக்கு வாய்ப்புன்னு செய்திகள் வேறு. மழை பெய்தால் முழு நேரமும் விடுதியிலேயே உட்கார்ந்து எஞ்சாய் பண்ணவேண்டியதுதான்னு நினைச்சுகிட்டோம். இரவு 8.50க்கு ட்ரெயின் என்பதால் யாரும் சரிவர சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று சிம்பிளாக மினி ஸ்னாக்ஸ் எற்பாடு செய்யப்பட்டது.
எங்களுடன் பயணம் முழுவதற்கும் உதவி செய்ய இரண்டு டூர் மேனேஜர்கள் ஆஜராகிவிட்டார்கள். வெள்ளிக்கிழமை இரவு ஸ்டேஷன் வளாகத்தில் காரை நிறுத்த இடமில்லாமல் ஜே ஜே என இருந்தது. ஆறிலிருந்து எழுபதுக்கு மேலும் வயதுள்ளவர்கள் ப்ளாட்ஃபாரத்தில் கும்பலாக அரட்டை அடித்து குதூகலமாக இருந்ததைப் பார்க்கவே அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது. புகைவண்டியில் ஏறியதும் அன்னதான style இல் எல்லோருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நாகர்கோவிலில் இறங்கியதும் குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் நேராக ரிஸார்ட் போயிட்டாங்க.
மற்றவர்களெல்லாம் ஹோட்டலில் செக் இன் ஆகி ரெடியாவதற்கு முன்னரே காஃபி குடிக்க விரும்பியதால் அனைவரும் ரோட்டோர கடையில் சுடச் சுட குடித்தோம். யாருமே பந்தா பரமசிவமாக இல்லாமல் எல்லோரும் எளிமையாக நடந்துகொண்டது மிகச் சிறப்பு. எல்லோரும் ரெடியானதும் ஆரியபவனில் ஆவி பறக்கும் இட்லி, தோசை, பூரி என அனைத்து ரகங்களையும் ஒரு கை பார்த்துவிட்டு கோவிலுக்குக் கிளம்பினோம்.
முதலில் நாகராஜா கோவில் சென்றோம். நாகலிங்கப் பூ கொத்தொ கொத்தாகப் பூத்திருந்த அழகைப் படமெடுத்து கொண்டோம். அடுத்ததாக சிறப்பு வழிபாடு, என் பெயருடைய சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்குச் சென்றோம். (தாணு- சிவன், மால்- திருமால், அயன் – பிரம்மா) என மூன்று கடவுள்களும் இணைந்த காட்சியளிக்கும் தலம். நண்பர் மூலம் வழிகாட்டி ஏற்பாடு செய்திருந்ததால் நன்கு விளக்கிச் சொல்லக் கேட்டோம். பெரிய ஆஞ்சநேயர் உடம்பு முழுக்க வெண்ணைய் பூசிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து முட்டம் கடற்கரை சென்றோம். பருவமழை சீசன் என்பதால் வெயில் குறைவாகத்தான் இருந்தது. “கடலோரக் கவிதைகள்” படம் எடுத்த இடம் என்பதால் நிறைய பேர் ஜென்னிஃபர் டீச்சர் மாதிரி குடையுடன் அலைகள் முன்னர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஜென்னிஃபர் டீச்சர் மாதிரி கையில் குச்சி எடுக்காத குறையாக எல்லோரையும் கடலுக்குள் இறங்காதபடி எச்சரித்துக் கொண்டே இருந்தேன். அதனால் ஒரு போட்டோவில்கூட நான் இருக்க மாட்டேன்.
[1:29 pm, 07/11/2022] Nancy Jio: எப்படி தடுத்தாலும் ஆர்வ மிகுதியில் ஓடுபவர்களை ஒண்ணும் செய்ய முடியவில்லை. குழந்தைகளாகிப் போன பாட்டிகள் அதிகம்தான். ஆர்ப்பரித்துவந்த அலைகளில் சிலர் புரண்டனர், சிலர் பாறைகளில் காலை இடித்துக் கொண்டனர், முதலில் தயங்கி தயங்கி நின்ற சிலரும் தண்ணீரில் கால் நனைக்கும் ஆசையில் அலை முத்தமிட்ட இடங்களில் நடந்ததால் எல்லோர் உடைகளும் நன்கு நனைந்துவிட்டது. கடல் தண்ணீரின் கச கசப்பு பழக்கமில்லாததால் பத்மனாபபுரம் அரண்மனையைப் பார்ப்பதை ஒத்திவைத்துவிட்டு ரிஸார்ட்டுக்கே போய்விட்டோம்..
மதிய உணவு ரெடியாக இருந்தது. எற்கனவே மீன் குழம்பு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லியிருந்ததால் சுவையான உணவு கிடைத்தது. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு நீச்சல் குளத்தில் இறங்கிவிட்டோம். பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ரிஸார்ட் இருந்தது. மலைகளும் ஏரியும் காடும் கலந்த மிக அற்புதமான இயற்கை சூழல். புல்வெளிகள், தோட்டங்கள் என ரம்யமான இடம்.
அந்தி சாயும் வேளையிலிருந்தே எங்கள் getogether உம் ஆரம்பித்துவிட்டது.
தமிழ்ச்செல்வி மிக சுவாரசியமான விளையாட்டுகளுக்கான பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த்ஹிருந்தாள்.கலகலப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்துவிட்டாள். குட்டிகள் முதல் பாட்டிகள் வரை அனைவரையும் ஈடுபட வைத்த போட்டிகள் அநேகம். முத்தாய்ப்பாக பாட்டுக்குப் பாட்டு (அந்தாக்ஷாரி) களைகட்டியது. யாருக்குமே சாப்பிடப் போக இஷ்டமில்லாமல் ஒரே பாட்டுதான். எதற்கும் இருக்கட்டுமென்று நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தோம். எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கொடுத்துவிட்டோம்.
காலையில் எழுந்து சின்ன நடைப்பயணம் முடித்துவிட்டு மறுபடியும் நீச்சல்குளத்தில் தஞ்சம் அடைந்தோம். திருப்பரப்பு நீர்வீழ்ச்சி செல்வதுதான் ஏற்பாடு. ஆனல் வெள்ளம் காரணமாக அருவியில் குளிக்க தடை. எனவே நீச்சல் குளமே கதியென்று கிடந்தோம். அங்கும் பாட்டுக்கு பாட்டு, தண்ணீரில் நடை போட்டி என ஏக ரகளை.பூர்ணிமா க்ரூப் போட்டோவுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் வேறு வழியின்றி வெளியே வந்தோம். எல்லோரும் ஒன்றுபோல் நீலக் கலர் உடைகளில் வந்தபோது பாரதிராஜாவின் கனவுக் கன்னிகள் போலவே தெரிந்தோம்.
ஒரே போட்டோ ஷூட்தான். ஏரிக்கரை, புல்தரை, நீச்சல்குளம் என வெவ்வேறு லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. கிளம்ப மனமில்லாமல் பேருந்தில் ஏறினோம். இன்னும் ஒருநாள்கூட இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கும்.
விடு ஜூட் என்று வண்டி கன்யாகுமரி நோக்கி ’பறந்தது’ 20கிமீ வேகத்தில். பேருந்து ஓட்டுநர்தான் ஒத்துழைப்பே இல்லாத ஆள். சீக்கிரம் போனால் படகு சவாரியும் போயிட்டு பகவதி அம்மன் கோவிலுக்கும் போகலாம் என்று கணித்திருந்தோம். ஆனால் வண்டி ஓட்டம் காரணமாக இரண்டு குழுக்கள் தனிதனியாகப் போகவேண்டி வந்தது.
ஒருவழியாக வானிலை முன்னறிவிப்புப் படி , படகில் ஏறச் செல்லும்போது செம மழை. விவேகானந்தர் பாறையில் இறங்கும் போது மழை விட்டுவிட்டது. நம்ம மக்களெல்லாம் முக்கடல் சங்கமத்தில் டைட்டானிக் போஸ் கொடுத்து போட்டோக்கள் க்ளிக்கிக் கொண்டார்கள்.
திரும்பிவரும் வழியில் எப்போதும் டூர் முடிக்கும் வழக்கமாக ரோட்டோர ஷாப்பிங் நடந்தது.
நான், தமிழ்ச் செல்வி, சுகந்தி மூவரும் ஜாலியாக நடந்து வரும்போது கொப்பரைகளில் இருந்து ஆவி பறக்கும் இட்லிகள் தட்டப்படுவதைப் பார்த்தோம். நைஸாக உள்ளே நுழைந்து ஆளுக்கு ரெண்டு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு ஒண்ணும் தெரியாதது போல் பஸ் வரும் வழி பார்த்து நின்றோம். பூர்ணிமா காதில் இதை மெதுவாக சொன்னதும், தனக்கும் வாங்கித் தந்தால்தான் ஆச்சுன்னு கிளம்பிட்டாள். மறுபடியும் அதே கடைக்கு சென்று அதே ரெண்டு இட்லி. பஸ் கிளம்பும் வரை இதுபற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. தலைவியும் செயலாளரும் மட்டும் தனியாகப் போயிட்டு வந்தீங்களான்னு அடி போட்டுறுவாங்க. நம்ம ஊரு இட்லி சாம்பாருக்காக ரெண்டு அடி வாங்கிக்கலாம்தான்.
நாகர்கோவில் புகைவண்டி நிலையத்தில் எஸ்கலேட்டர் வேலை செய்யாததால் சிரமத்துடன் பொருட்களை சுமந்து வந்து ரயில் பெட்டிகளில்ல் ஏற் இரவு சாப்பாடு பொட்டலங்களைப் பிரித்தோம். அதிக அளவில் சாப்பாடு இருந்ததால் இரண்டுபேருக்கு ஒரு பார்சல் போதும் என பங்கு போட்டுக்கொண்டு மீதி இருந்தவற்றை டிக்கட் பரிசோதகர் மூலம் அங்கிருந்த பணியாளர்களுக்குக் கொடுத்துவிட்டோம். எத்தனையோ முறை பார்த்த குமரிமுனை தான். ஆனாலும் என் சக தோழியருடன் பார்த்தபோது இன்னும் சிறப்பாகத் தெரிந்தது. மழையில் அவதிப்படாமல்,பிரச்னைகள் ஏதுமின்றி அனைவரும் நலமாக வீடு சேர்ந்ததில் மனம் நிறைவுற்றது.
இனிய பயணம் இன்புற அமைந்ததில் எல்லோருடைய பங்கும் இருந்தது. சிறப்புற ஏற்பாடு செய்திருந்த GT holidays, எப்போதும் புன்னகையுடன் எங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட சந்தோஷ்& அஸ்வின், திறமையாக ஒருங்கிணைத்த பூர்ணிமா என அனைவரின் பங்கும் பாராட்டப்பட வேண்டியது.

அலை-76

 அலை-76

“ பொன்னியின் செல்வன்”
தமிழை நேசிப்பவர்களின் தவப்புதல்வன் என்றே சொல்லலாம். வரலாற்று நாவல்களில் சாண்டில்யன் அவர்களின் எழுத்துக்களே முதல் வரிசையில் நின்றாலும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தனித்து நிற்கிறது. கதை சொல்லப்பட்ட விதமா,பாத்திரப் படைப்பா, கதாபாத்திரங்களின்பால் ஏற்பட்ட தோழமையா என்று அறுதியிட்டு சொல்லமுடியாத எண்ணற்ற விஷயங்கள் பொ.செ.வை மனதுக்கு மிக நெருக்கமாக்கியிருக்கிறது. நாம் சுற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை, காஞ்சி,காவிரி,கொள்ளிடம் என கதாபாத்திரங்கள் பயணிக்கும்போது நாமும் அவர்களுடனேயே சேர்ந்து பயணிக்கிறோம்.தமிழகத்தையே கதைக்களமாகக் கொண்ட முழுநீள நாவல்.
எத்தனையோ முறை நாவலாக வாசித்திருந்த அதே பொ.செ. உயிரோவியமாக திரையில் வரப்போவதை ஆவலுடன் எதிபார்த்திருந்த எண்ணற்ற ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பொதுவாக நாவல்கள் திரைப்படங்கள் ஆகும்போது மொழி, நடை,கதை எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு compromise இருக்கும். அதனால் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் மணிரத்னத்தின் பொ.செ.இன்னும் மேம்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.
அதிகாலையிலேயே எனது தம்பி நாராயணனின் திரைவிமர்சனத்தை வாசித்தபொழுதே எனது “அலை” யும் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டது.
“பொன்னியின் செல்வன்” நாவலை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்றே கணக்கு வைக்கவில்லை. ஒருமுறை கையில் எடுத்துவிட்டால் ஐந்து பாகங்களையும் ஒரே மூச்சில் படிக்காமல் கீழே வைக்கமுடியாது. வந்தியதேவன் ,நந்தினி, குந்தவை,பழுவேட்டரையர் என சரித்திர காலத்திலேயே மனசு சுழன்று கொண்டிருக்கும் .எனது வீட்டு நூலகத்தின் நிரந்தர தொகுப்பு கல்கியின் பொ.செ. இரவல் வாங்கிச் செல்பவர்கள் திருப்பித் தர மறந்தாலும் அடுத்து வரும் புத்தகத் திருவிழாவில் புதுசாக வாங்கி வைத்துவிடுவேன். பொ.செ. கதாபாத்திரங்களுடன் அத்தனை நெருக்கம். அத்தகைய
கதாபாத்திரங்களைத் திரையில் உயிரோவியங்களாக முதல்நாள் காட்சியாக பார்த்த்போது மனசுக்குள் பட்டாம்பூச்சி படபடக்கத்தான் செய்கிறது.தோழி வீட்டுத் திருமணம் பட வெளியீட்டு அன்றே இருந்ததால் சென்னையில் முதல்நாள் காட்சி பார்க்க முடிந்தது. அதுவும் ஒத்த ரசனையுள்ள அண்ணன் தம்பியுடன்.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால மக்களும் ரசிக்கும்படியாக காட்சிகளும் வசனங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது மிகச் சிறப்பு. செந்தமிழில் செப்பாமலும் கொடுந்தமிழில் கொல்லாமலும் இயல்பாகக் கதையைப் புரிந்து கொள்ளும்படி உரையாடல்கள் இருப்பதே படத்தின் வெற்றிக்கு சான்றாகும். அந்நிய மொழி பேசப்படும்போது subtitle களும் இணைந்து வருவது சமூக மாற்றத்துக்கேற்ப வளைந்து கொடுத்திருப்பதை புலப்படுத்தியது. இதுபோன்ற கூடுதல் இணைப்புகளால் தமிழ் கலாச்சாரம் அகில இந்தியாவும் ரசிக்கும் வண்ணம் Pan-India திரைப்படமாக வெற்றிபெறும் வாய்ப்பு பெற்றுள்ளது.
அனைத்து உழைப்பிற்கும் பின்புலமாக மணிரத்னம் என்ற மந்திரவாதி இருப்பது ஒவ்வொரு frame-இலும் தெரிகிறது. மனுஷன் என்னமாதிரி யோசித்து ஆராய்ச்சி செய்து படமாக்கியிருக்கிறார் .அந்த மந்திரவாதியையே மகுடி ஊதி மயக்கும் பின்னணி இசையின் சொந்தக்காரர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் ரொம்ப பிரமாதமாகத் தெரியவில்லை. ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்துவிட்டார்(இது தமிழ் வார்த்தையான்னு தெரியாது). அடுத்து மனதைக் கவர்ந்தது வெளிப்புறக் காட்சிகளும் செட்டிங்குகளும்தான். சோழர் காலத்திற்கே நம்மை அழைத்துப்போவது போல் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக வியப்பில் ஆழ்த்தியது கதா பாத்திரங்களின் தேர்வு. இந்த கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொருவரும் அந்தந்த பாத்திரமாகவே மாறிவிட்டார்கள். சரத்குமார்,பார்த்திபன்,பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற சீனியர்கள் முதல் கார்த்தி,ஜெயம் ரவி,விக்ரம் பிரபு போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் வரை அப்படியொரு அற்புதமான நடிப்பு. மிகைப்படுத்தப் பட்ட நடிப்போ பஞ்ச் வசனங்களோ இல்லாத இயல்பான நடை. சுட்டித்தனத்துக்கும் குறும்புக்கும் ஏற்ற மாதிரி கார்த்தி எங்கள் கற்பனை வந்தியத்தேவனுக்கு வடிவம் கொடுத்துவிட்டார்.
கதையின் நாயகன் அருள்மொழி வர்மன் என்றாலும் ஆக்ரோஷமான ஆதித்த கரிகாலனைச் சுற்றியே முதல் பாகம் நகர்கிறது.மிகப் பொருத்தமாக விக்ரம். அந்தக் கோபமும் மூர்க்கமும் சூப்பர். “ராவணன்” படத்தில் ஐஸுவுக்கும் விக்ரமுக்கும் இடையில் காணப்படும் காதலுக்கும் பொ.செ.வில் வரும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பது போலவே எனக்கு தோன்றுகிறது. மோதலுடன் இணைந்த காதல்.
நாயகிகளாக த்ரிஷாவும் ஐஸ்வர்யாவும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். த்ரிஷாவின் இதழோரத்தில் சதாகாலமும் சுழன்று கொண்டிருக்கும் குறும்புப் புன்னகைக்கு நானே மயங்கிவிட்டேன். உலக அழகி பற்றி சொல்லவே வேண்டாம் “காந்தக் கண்ணழகி”தான்.
ஆனால் எல்லோரையும்விட எனக்கு ரொம்பப் பிடிச்சது ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராம்தான். மேக் அப் , நையாண்டி எல்லாம் அப்படியே நாவலில் வரும் திருமலை போலவே இருக்கிறது.
திரைப்படத்தில் இன்னும் சில குறைகளும் தவறுகளும் விமர்சிக்கப்படலாம்.மணி இந்த காட்சியை அப்படி வைத்திருக்கலாம், இந்த காட்சியில் ஏதோ சாயல் தெரிகிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் தொடரலாம் .அதற்கெல்லாம் முன்பாக தெளிந்த மனதுடன் நாவலைத் திரைப்படமாக ரசிக்கவேண்டும் என்பதால் முதல்நாள் காட்சியே பார்த்தாச்சு.சுமார் மூன்று மணிநேரக் காட்சி. முதல் பாகம் முடிந்தது,இரண்டாம் பாகம் 2023 இல் என்று திரையில் அறிவித்த பின்பும் கூட இருக்கையிலிருந்து எழுந்திரிக்க மனமில்லாமல் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
ஒருசில கற்பனப் பாத்திரங்கள் தவிர இது நமது மண்ணின் உண்மைச் சம்பவங்களுடன் தொடர்புடையது என்று உணர்ந்து பார்க்கவேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு science fiction,alien characters போன்ற ரசனைகளிலிருந்து மாறுபட்ட களமாக இருக்கும்.ஆனால் ரசிக்கும்படியும் இருக்கும்.நாவல் வாசிக்காதவர்கள்கூட ரசிக்கும்வண்ணம் தான் எடுக்கப்பட்டிருகிறது.

அலை-75

 அலை-75

”முன்னாள் மாணவர்கள் கூடுகை”
தி-லி மருத்துவக் கல்லூரியின் இந்தக் கூடுகை வரும் செப்டம்பர் 25ஆம் நாள் நடைபெற இருக்கிறது. நானும் ட்ரெயின் டிக்கட் எல்லாம் எடுத்துட்டேன். வருடாந்திர கூடுகை, நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் போன்றவற்றில் வகுப்புத் தோழர்களை அடிக்கடி சந்திப்பது உண்டு. ஆனாலும் சமகால நண்பர்களைச்(contemporaries) சந்திக்க இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் சரியானதாக இருக்கும். நாம அக்கா, சார் என்று கூப்பிட்டவர்களும், நம்மை அக்கா என்று அழைத்தவர்களும் முட்டி மோதிக்கொள்ளப்போகும் முக்கிய சந்திப்பு.
திருநெல்வேலியில் படித்து அங்கேயே குடியேறியிருக்கும் நண்பர்களின் இடைவிடாத முயற்சியால் முன்னாள் மாணவர்கள் சங்கம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கொண்டு வருகிறது. அதை கெளரவிக்கும் வகையில் விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதிலும் கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக தோழி பானு இருக்கும்போது தோள் கொடுக்க வேண்டியதும் அவசியமாகிவிட்டது. அப்பப்போ திருநெல்வேலி காற்றை முகர்ந்தால்தான் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
பழனியப்பன் சார் கல்லூரிக்கு சென்று பார்த்துவிட்டு மாணவர் சங்க ஏற்பாடுகள் பற்றி அழகாக எழுதியிருந்தார்கள். இன்று செப்-1 , “நெல்லை தினம்” கொண்டாடப்படும் நேரத்தில் தி-லியில் செட்டில் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தை அதிகமாக்கியது அவ்வரிகள். ஆனாலும் ஊரைவிட்டு வந்து 38 ஆண்டுகள் ஆனபோதும் “நீங்க திருநெல்வேலியா, பேச்சு அப்பிடியே இருக்கு” ன்னு சொல்றமாதிரி நெல்லைத்தமிழ் நாவில் ஒட்டிக் கொண்டுள்ளது.
கல்லூரியின் வளர்ச்சி, புதிய கட்டிடங்கள் , மேம்படுத்தப்பட்ட சுற்றுச் சூழல் எல்லாம் நிறைவைத் தந்தாலும் எங்க கல்லூரி என்று அழைக்கப்பட்ட 70’s சூழல்தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. நாங்க படிக்கும்போது ஒரே கட்டிடம்தான். அது சொல்லும் ஓராயிரம் கதைகள். பெண்கள் விடுதியில் இருந்து பார்த்தால் கல்லூரியின் தெற்குப்பகுதிகள் முழுவதும் தெரியும். மேற்குப் பகுதி அடைப்புகள் இன்றி இருப்பதால் அங்கு யார் நடந்தாலும் இங்கிருந்தே தெரியும்.
கீழே பிஸிக்ஸ் ஆய்வகம், முதல் மாடியில் பாரன்ஸிக் , இரண்டாம் மாடியில் டேஸ்-காலர்கள் (பெண்கள்)உணவருந்தும் அறை இருக்கும். நடுப்பகுதியை சைக்கிள் ஸ்டாண்ட் மறைத்துவிடுவதால் எதுவும் தெரியாது. MBBS படிப்புக்கான அத்தனை துறைகளும் அந்த ஒரே கட்டிடத்துக்குள் அடங்கிவிடும். எல்லா வருஷமும் அதே குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்டணும். விரிவுரையாளர்களும் ஆய்வகங்களும் மட்டும் மாறும். அதனால் கல்லூரியை அங்குலம் அங்குலமாக அறிந்தவர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்
கட்டிடத்தின் மேற்கு மூலையில்தான் பிணவறை (mortuary)இருக்கும். பிரேதப் பரிசோதனைகளின் போது உறவினர்களும் காவல் அலுவலர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். மற்ற நேரங்களில் அந்த இடம் ஒரு அமாநுஷ்யத்துடனேயே இருக்கும். அதற்கு நேர் மாறாக சைக்கிள் ஸ்டாண்ட் கலகலப்பாக இருக்கும்.
தினமும் கல்லூரியை சுற்றி நடைப்பயிற்சி செய்வது எங்கள் வழக்கம். ரோட்டுக்கு அந்தப் புறம் உள்ள சதக்கதுல்லா கல்லூரி மாணவர்களும் அந்த சாலைகளையே பயன் படுத்துவதால் அவ்வப்போது சில தகறாறுகளும் வரும்.
இரண்டாவது மாடியின் கடைக்கோடியில் நூலகம் உண்டு. நெறைய படிப்ஸ் கோஷ்டிகள் தினமும் அங்கு சென்று படிப்பாங்க. நாங்களெல்லாம் மழைக்குக் கூட அங்கு ஒதுங்கியதில்லை. முதல் காரணம் அங்கே சத்தம் போடக்கூடாது, பேசக் கூடாது. ரெண்டுமே நமக்கு சரிப்பட்டு வராது. ட்ரான்ஸிஸ்டரில் பாட்டுக் கேட்டுக் கொண்டே படிக்கும் ஆசாமிகள் நாங்கள்.
சிரட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில்தான் எங்கள் ஃபைனார்ட்ஸ் அறை உண்டு. அதைக் கடந்து போகும்போது கொட்டு சத்தமோ, கிடார் சத்தமோ கேட்கும். அந்த அறைக்குள் சென்று பார்த்ததே இல்லை. தி-லி பொறியியல் கல்லூரி கட்டும் முகாந்திரமாக அந்த அறையையும் அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. கல்லூரியின் கிழக்குப் புறமாக பெரிய மைதானம் உண்டு. அங்குதான் சகல விதமான விளையாட்டுகளும் நடக்கும்.
கல்லூரியின் முகப்பில் இரண்டு பிரம்மாண்டமான வாயில்கள் இருந்தபோதும், யாருமே அதை உபயோகித்ததில்லை. சைக்கிள் ஸ்டாண்ட் அருகிலும், அனாடமி ஹால் அருகிலும் உள்ள சிறு வாயில்கள்தான் எங்களின் திட்டிவாசல்கள். நூலகத்தின் நேரம் முடியும் வரை அந்த வாயில்கள் திறந்தே இருக்கும்.
அனாடமி ஹாலின் வெளிப்புரம் இருக்கும் சிறிய மைதானத்தில் திறந்த வெளி சினிமா போடுவார்கள். கேலியும் கிண்டலும் விசில் சத்தமும் கைதட்டலுமாக ரொம்ப ஜாலியாக இருக்கும். வயதும் வாலிபமும் கடலையும் காதலும் பெருக்கெடுத்து ஓடும். அதைக் குமைப்பதற்கும் ஒரு கூட்டம் வரும். தன்ணியடித்து வந்து தகராறு செய்பவர்களும் உண்டு. ஜாலியான சேஷ்டைகள் செய்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் கூட்டமும் உண்டு.
நாங்கள் படித்த எழுபதுகளில், பொழுதுபோக்கு அம்சம் என்பது சினிமா மட்டுமே. தொலைக்காட்சிகூட மிகக் குறைந்த அளவுதான். வெள்ளிக்கிழமை “ஒளியும் ஒலியும்” ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா என்ற அளவில்தான் உண்டு. அதனால் கல்லூரிதான் எங்களின் பொழுது போக்குக் களமுமாக இருந்தது. விடுதியின் பக்கவாட்டில் கைப்பந்து விளையாடுவது, கல்லூரியில் அலுவலக அறை முன்னால் உள்ள இடத்தில் இறகுப் பந்து விளையாடுவது என்று எந்நேரமும் துறு துறுவென்றுதான் சுற்றித் திரிவோம்.
எங்க கல்லூரி வளாகம் அத்துவானக் காடுபோல்தான் இருக்கும். சாயங்காலத்துக்குப் பிறகு வெளியே இருந்து சுடுகுஞ்சு உள்ளே வரமுடியாது. கும்மிருட்டாக இருந்தாலும் பயமே வந்ததில்லை. பாதுகாப்பு அரணாக எங்கள் கல்லூரி மாணவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்ற தைரியம் உண்டு. அதற்கு ஏற்றாற்போல் அர்த்த ராத்திரியில் கூட விடுதி முன்னால் சைக்கிள் பவனி அவ்வப்போது நடக்கும்.
மருத்துவமனை வளாகமும் ஒரே பெரிய கட்டிடம்தான்.தீப்பெட்டி அடுக்கி வைத்ததுபோல் அங்கங்கே கண், தோல், TB, ID என்று குட்டி குட்டி பிரிவுகள் இருக்கும். மகப்பேறு மட்டும் கொஞ்சம் பெரிதாகத் தனிக் கட்டிடத்தில் இருக்கும்.ஒரு யூனிட்டில் இருந்து எட்டிப் பார்த்தால் அடுத்த யூனிட் தெரியும். ஒரே வெராண்டாவில் அத்தனை புற நோயாளிகள் பிரிவும் அடங்கிவிடும். வார்டுகள், மருந்தகம், பரிசோதனைக்கூடம், எக்ஸ்ரே என்று சகல விஷயங்களையும் ஒரே இடத்தில் வைத்திருந்தார்கள்.
“சிறுகக் கட்டி பெருக வாழ்” என்று சொல்வார்கள். உண்மையாகவே சின்ன வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்ததால் எல்லோருக்குள்ளும் ஒரு பரிச்சியம் இருந்தது. எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் இருந்த ரெண்டு மூணு வருட மாணவர்களை இன்றளவும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிகிறது. தற்போதைய மாணவர்களுக்கு அவர்கள் வகுப்புத் தோழர்களையே முழுவதுமாகத் தெரியவில்லை.
முன்னாள் மாணவர் கூடுகையின்போது ”நடை பயின்ற கால்கள் தன்னின் தடயத்தை”ப் பார்க்க வேண்டும்.
Arumuga Nainar, Illayaravi Dharmalingam and 25 others
6 comments
1 share
Like
Comment
Share

அலை-74

 அலை-74

மூன்றாம் வருடத்தில் வந்த முக்கியமான நிகழ்ச்சி என்றால் (Inter-medical Sports) மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள்தான். அந்த வருடம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. எங்கள் கல்லூரியிலிருந்து எல்லா விளையாட்டுகளிலும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறைய பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்கள்.
விளையாடத் தெரியணும் என்ற அவசியமில்லை. பேட் பிடிக்கத் தெரிந்தால் இறகுப் பந்து, ஓங்கி அடிக்கத் தெரியும் என்றால் வாலிபால், ஓடத்தெரியும் என்பதால் ஓட்டப் பந்தயம். செம ஜாலியான தேர்வுகள்தான். அந்த அடிப்படையில் நானும் இறகுப்பந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்தேன். சர்வீஸ் போடத் தெரியும். எழிலும் ஜியோவும் கொஞ்சம் பயிற்சி கொடுத்திருந்தார்கள். எங்கள் கல்லூரியின் கால்பந்து அணியும் ஆண்கள் பூப்பந்து அணியும் சிறப்பாக இருக்கும். மற்ற விளையாட்டுகளுக்கும் ஏற்கனவே பயிற்சிகள் ஆரம்பித்திருந்தன.
எங்க வகுப்பிலிருந்து மட்டுமே கணிசமான நபர்கள் அந்தக் குழுவில் இருந்தோம். தடகளப் போட்டிகளில் மரகதமணி மாதிரி திறமை வாய்ந்தவர்கள் வட்டு எறியும் போட்டியில் தயாராக இருந்தார்கள். ரிலே ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, டென்னிகாய்ட் என எல்லா பிரிவுகளிலும் பெயர் கொடுத்து கும்பலாகக் கிளம்பிவிட்டோம். எந்த விளையாட்டிலும் இல்லாதவர்களை மாற்று பங்கேற்பாளராக (substitute) இணைத்துக் கொண்டோம். பானு, மேகலா போன்ற ஆசாமிகள் அப்படித்தான் உள்ளே சேர்ந்து கொண்டார்கள். தோழியரை விட்டுவிட்டு எங்களாலும் எங்கும் போக முடியாது.
திருநெல்வேலியிலிருந்து புகைவண்டி மார்க்கமாக தஞ்சாவூர் செல்வதாக ஏற்பாடு. பகல் நேர வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கும்பலாக ஏறிக்கொண்டு குதூகலமாகப் போன பிரயாணம் அது. அந்தக் காலத்தில் ஜனதா எக்ஸ்பிரஸ் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட வண்டி அது. எல்லா வருட மருத்துவ மாணவர்களும் இணைந்துகொண்ட கதம்ப மாலை. அதனால் கிடைத்த சுகந்த மணமும் மகிழ்ச்சியும் எல்லோரையும் வசீகரித்துக் கொண்டது. நிறைய பேருக்கு உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. நடக்கும் வழிகளிலும் கதவின் பக்கத்திலுமாக உட்கார்ந்திருந்தோம்.
கல்யாண வீடுபோல் கலகலப்பாக இருந்த அந்த ரயில் பயணம் நிறைய புது உறவுகளை உண்டாக்கியதுன்னு கூடச் சொல்லலாம். கோரஸ் பாடல்கள் ஒருபுறம், கிசுகிசுப்பான கடலைகள் மற்றொருபுறம், சீனியர்களின் அழிச்சாட்டியம் இன்னொருபுறம் என செம ஜாலியாக பயணித்தோம். எனக்கு உட்காரக் கிடைத்த இடமோ கால்பலகை(Foot-board)யில் எழிலுக்கு அடுத்த இருக்கை. எங்களைச் சுற்றி வகுப்புத் தோழர் தோழியர்களும் உட்கார்ந்து செம அரட்டை அடித்துக் கொண்டோம்.
எழிலின் அறைத் தோழர்களில் ஒருவரான கண்ணன் சிலோன் பாய்லா பாடல்கள் நன்றாகப் பாடுவார். அங்கிருந்த காட்சிகளுக்கு ஏதுவாக இட்டுக்கட்டி அழகான பாடலொன்று அரங்கேற்றினார். “கோபமேது மத்தவா” என்ற அந்தப் பாடல் பயங்கர பிரபலமாயிடுச்சு. காதல் அரும்பும் நிலையில் இருந்த நிறைய ஜோடிகளுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனது. நாங்கள் சென்ற வண்டி ரெகுலர் வழியில் செல்லாமல் கார்டு லைன் எனப்படும் பாதையில் செல்ல இருந்ததால் இடைவெளியில் ஏதோ ஊரில் இறங்கி வண்டி மாற்றிக் கொண்டோம்.
என் வகுப்புத் தோழியர் எல்லாம் “எழில் அண்ணே” என்றுதான் அன்போடு கூப்பிடுவாங்க. அந்த அன்புமழையில் நனைந்து கொண்டதால் திருச்சி புகை வண்டி நிலையத்தில் பிரியாணி வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார்கள். எழில் பெரியப்பா வீடு திருச்சி என்பதால் அடிக்கடி அங்கு சென்று வந்திருந்த அநுபவத்தால் மிக நம்பிக்கையுடன் சொல்லியிருந்தார்கள். திருச்சியில் குறிப்பிட்ட சில நிமிடங்களே வண்டி நிற்கும் என்ற நிலையில் மிகத் துல்லியமாக நேரக் கணக்கீடு செய்து ஓடிப்போய் பிரியாணி வாங்கி வந்து ஹீரோயிஸம் காட்டிகிட்டாங்க. நாங்க எல்லோரும் அவங்களுக்கு ஒரு “ஓ” போட்டுகிட்டோம். ஓசியில் பிரியாணி கிடைக்கும்போது அதைக்கூட பாராட்டாவிட்டால் எப்படி? நான் அப்போது சைவம் என்பதால் பிரியாணி சாப்பிட முடியவில்லை.
பகல் முழுவதும் பிரயாணம் செய்து அதுவரை பார்த்திராத ஊர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தோம். பெண்கள் விடுதியில் எங்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டோம். மறுநாள் விளையாடப்போகும் அணிகள் குறித்து அலசப்பட்டதைவிட ரயில் பயணத்தில் ஏற்பட்ட கசமுசாக்கள் பற்றியே அதிகம் புரணி பேசப்பட்டது. அங்கங்கே கள்ளச் சிரிப்புகளுடன் கடந்து போன கன்னிகைகளிடம் ஆயிரம் கதைகள் அடக்கம். எனக்கும் அதில் கொஞ்சம் கதைகள் உண்டு.
அடுத்துவந்த இரண்டு நாட்களும் போட்டியில் பங்கேற்பதிலும் விளையாடுபவர்களை உற்சாகப் படுத்துவதுமாக பகல் பொழுதுகள் இறக்கை கட்டிப் பறந்தன. இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடக்கும். சில மேடைகளுக்கருகில் பெண்கள் போகவே கூடாது போன்ற மாதிரி நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கும். தெரியாமல் சில இடங்களில் மூக்கை நுழைத்துவிட்டு புறமுதுகு காட்டி ஓடிவந்தது கூட சுவாரஸ்யமான அநுபவம்தான்.
நான் இறகுப் பந்து ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். பந்து எடுக்க பின்பக்கமாக சென்றபோது சறுக்கி விழுந்து இடது மணிக்கட்டில் சரியான அடி. எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் எழில் இருந்ததால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு ஸ்கூட்டரில் கூட்டிச் சென்றார்கள். எழிலின் அண்ணா Dr.கிருபாகரன் அங்கு மருத்துவராக இருந்ததால் வண்டியும் வைத்தியமும் டக் டக்கென்று கிடைத்துவிட்டது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவும் இருந்ததால் உடனடியாக மாவுக்கட்டும் போட்டு விட்டார்கள்.
எல்லோரும் உற்சாகமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது நான் மட்டும் வெட்டியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
எழிலுக்கு போட்டிகள் இல்லாத தினத்தில் எங்களை முக்கொம்பு அணைக்கட்டுக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார்கள். கைக்கட்டுடன் நான் மற்றும் பானு, ஷுபா, மேகலா,எழில் , தம்பிதுரை , அண்ட்ரூ ஆக ஏழு பேராக ஊர் சுற்றக் கிளம்பி விட்டோம்.
தஞ்சையிலிருந்து பஸ் பிடித்து திருச்சி வந்து அங்கிருந்து இன்னொரு பஸ் எடுத்து முக்கொம்பு சென்றோம். காவிரியின் பிரம்மாண்டம் மனதை கொள்ளை கொண்டது. அருகிலிருந்த பூங்காவையும் சுற்றிப் பார்த்துவிட்டு மலைக்கோட்டை செல்ல கிளம்பினோம்.
நாங்கள் காவிரியில் இறங்கி விளையாடிய இடத்திலிருந்து ஒரு பெண்ணை சுழல் விழுங்கிய அபாயம் பற்றி அப்போதான் எழில் மெதுவாகச் சொன்னாங்க. மனம் திடுக்கிட்டது உண்மைதான் என்றாலும் அடுத்து சுற்றிப்பார்த்த இடங்கள் எல்லாவற்றையும் மறக்க வைத்துவிட்டது. மலைக்கோட்டையின் உச்சி பிள்ளையாரைத் தரிசிக்க அத்தனை படிகள் ஏறியபோதும் அலுப்பே தெரியாத சூழல். கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் நினைவூட்டல் களமாக உள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பார்த்த மகிழந்த கலகலப்பான நிகழ்ச்சிகள் இன்னும் ஏராளம். எங்கள் கல்லூரி ஏதாவது விளையாட்டில் வெற்றி பெற்றார்களா என்பது நினைவில்லை. தோற்கப்போவது போல் தெரிந்துவிட்டால் போட்டியைக் கேலிக் கூத்தாக்கி விடுவார்கள். கூடைப்பந்து மைதானத்துக்குள் கால்பந்து ஷூ போட்டுட்டு போக வேண்டியது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே எதிர் பக்கம் பந்து போட்டுவிடுவாங்க.. இல்லாட்டி திடீர்னு எதிர் டீம் கையில் பந்தைக் குடுத்துட்டு ஜாலி நடை போடுவாங்க. எங்க பெண்கள் டீமுக்கு ஆண்கள் டீம் விளையாட்டைப் பார்ப்பதைவிட இந்த மாதிரி காமெடி காட்சிகள் பார்ப்பதில் அலாதி பிரியம்.
போட்டிகள் இல்லாத நேரங்களில் எங்க மக்கள் அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. கல்லூரியச் சுற்றிலும் ஏராளமாக முந்திரி மரங்கள் இருக்கும் . அதன் குடை விரித்த கிளைகளின்கீழ் திண்மையான நிழல் படர்ந்திருக்கும். அதில் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கலாய்ப்பதே எங்கள் குழுவின் வாடிக்கையாக இருக்கும். பேசிக்கொண்டிருக்கும் ஜோடிகளுக்கு இடையே போய் ரெண்டு மூணுபேர் உட்கார்ந்து கொள்வார்கள். கண் சிமிட்டாமல் அங்கிருக்கும் பெண்ணையே குறுகுறுவென்று பார்ப்பார்கள். தர்ம சங்கடமான நிலைமையிலிருந்து தப்பிக்க விட்டேன் சாமின்னு ஆளுக்கொரு பக்கம் சிட்டாகப் பறந்திடுவாங்க. முந்திரி தோப்பு முழுக்க இப்படியே கும்பலாகப் போய் அத்தனை பேரையும் விரட்டி விட்டுடுவாங்க. கேட்கக் காமெடியாக இருந்தாலும் அந்த பசங்களை நினைச்சா பாவமாகத்தான் இருக்கும்.
எனக்குக் கையில் மாவுக்கட்டு இருந்ததால் எந்த விளையாட்டிலும் சேர முடியாமல் முழு நேர பார்வையாளர் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டேன். அதனால் நிறைய கோமாளித்தனங்களைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குத்தான் அதிகம் கிடைத்தது. எழில் மாதிரி ஒரு உறவு பலப்பட அந்த கைக்கட்டு ஒரு காரணமாக இருந்தது. பிற்காலத்தில் கால்கட்டு போட அதுதான் ஆரம்பப் புள்ளி என்பது அப்போது தெரியாது. அதுவரை எழில் என்றால் ஒரு புத்தகப்புழு, சின்சியர் சிகாமணி என்று ஒதுங்கிப்போனது மாறி எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட அடித்தளமிட்டது தஞ்சை மண்.
கிறிஸ்துவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாலும் எங்களுக்காகத் தஞ்சை பெரியகோயிலைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றார்கள். உச்சிபிள்ளையார் கோவிலுக்கு வரவும் ஆட்சேபமே தெரிவிக்கவில்லை. அவங்களுக்கு மதம் ,மனிதம், நட்பு எல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை இருந்ததால்தான் எங்கள் நட்பு மென்மேலும் வளர்ந்தது.
A woman’s Friendship Always ends in Love
Illayaravi Dharmalingam, Sekar Subramanian and 18 others
8 comments
Like
Comment
Share