Monday, August 31, 2020

அலை-5

 அலை-5

சந்தைக்கடை: எங்க வீடும் சந்தைக்கடையும் வேறு வேறல்ல. எங்க வீட்டு விலாசமே 49- சந்தைத் தெரு தான். வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ரெண்டு நாள் கூடும் வாரச் சந்தை. இப்போதைய உழவர் சந்தைகள் மாதிரி, அக்கம் பக்கத்து கிராம விவசாயிகளின் விற்பனைக்கு ஏதுவானது. சந்தையின் ஒரு மூலையில் காவல் நிலையம் இருக்கும். 

உங்க வீடு எங்கே இருக்குன்னு கேட்டா சந்தைக்குள்ளேன்னு சொல்லிட்டா, தலமைச்செயலகம் மாதிரியான பிரபலமான இடம் அது. வழி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 


வாழுற வீட்டுக்கு வடக்கு வாசலாம். எங்க வீடும் வடக்கு வாசல்தான். அதுக்கு இன்னோரு பெயர் மங்கம்மா சத்திரம். வீட்டுக்கு யார் வந்தாலும் முதல்லே சாப்பிட வைக்கிறதுதான் எங்க வீட்டு பண்பாடு. எந்நேரமும் மண்பானையில் சோறு இருந்துகொண்டே இருக்கும். எங்கள் பள்ளி , கல்லூரித் தோழர் தோழியர் பெரும்பான்மையானவர்களுக்கு மிகப் பரிச்சியமானது இந்த சந்தைக்கடை வீடு. 


குச்சி வீடு ( பின் பக்கம்) ஓட்டு வீடு (முன்பக்கம்) உள்ள மிக எளிமையான அரண்மனை அது. குச்சிவீடு ஓலை வேய்ந்து, சாணி மெழுகிய தரையுடன் இருக்கும். ஓட்டு வீடு அங்கங்கே உடைந்த தரையுடன் காரை போட்டு இருக்கும். எங்க வீட்டுக்கு கதவே கிடையாது. உள்ளே வைத்து பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்களும் எதுவும் கிடையாது. நாய், பூனை போன்ற நண்பர்கள் வந்து சாப்பாட்டில் வாய் வைத்துவிடாமல் இருக்க மூங்கில்தட்டியால் ஆன  கதவு மட்டும் இருக்கும். 


ஓட்டு வீட்டுக் கதவு மட்டும் முன்புறம் பூட்டியே இருக்கும். எங்க வீட்டுக்கு எதிரில்தான் சந்தையின் மீன்கடை இருக்கும். வீட்டில் அனைவரும் சைவம் என்பதால் முன்புறம் வழியாக புழங்குவதே கிடையாது. அந்தக் காலத்தில் மீன்வாசனைக்கு உவ்வே போட்ட நான் இப்போ மீன்தான் சிறந்த அசைவ உணவுன்னு வெளுத்துக் கட்டிகிட்டு இருக்கேன். 


சந்தைக்கடைதான் எங்களுக்கு  விளையாட்டு மைதானம். எனக்கு முன்னாடி ரெண்டும் அண்ணன்கள், அடுத்தது தம்பி என்பதால் எனக்கு நண்பர்கள் அனைவரும் ஆண்பிள்ளைகளாகவே இருப்பார்கள். அவங்க கூட கோலி, கட்டகுச்சி (கில்லி), பம்பரம், கொல்லாங்கொட்டை ( முந்திரி பருப்பு) போன்ற வீர விளையாட்டுகள்தான் விளையாட முடியும். பல்லாங்குழி, தாயம் எல்லாம் லீவுக்கு அக்கா பசங்களெல்லாம்  வரும்போது மட்டும்தான் விளையாட முடியும். 


வாழைப்பழக் குலைகள் பழுக்க வைக்க நிறைய குழி வெட்டி வைச்சிருப்பாங்க. ஆறடிக்கு ஆறடியாவது இருக்கும். வாழைத்தார்களை உள்ளே வைச்சு களிமண்ணால் மூடி புகை போட்டுப் பழுக்க வைப்பாங்க. அந்த வேலை முடிஞ்சதும், எல்லாக் குழியும் பெப்பரப்பேன்னு திறந்து கிடக்கும். உள்ளே வெளியே விளையாட சூப்பரான இடம். மங்கி விளையாட்டுன்னு சொல்லுவோம்.குழிக்குள்ளே இருக்கிறவங்க வெளியே சுத்தி ஓடறவங்க காலைப் பிடிச்சு இழுத்தால் அவுட். பசங்க எல்லாம் நெட்டைக் கால் ஜாம்பவான்கள், பிடிபடாமல் குறுக்கே தாவிக் தாவிக் குதிச்சுடுவாங்க. கொஞ்ச நாள் ஆனபிறகு மண் சரிந்து குழி சின்னதான பிறகு விளையாட்டு ஈஸி ஆயிடும்.


சந்தையின் கடைகள் ஓலை வேய்ந்து, குறுக்கே பனங்கட்டை கொடுத்திருப்பாங்க. அதிலே தொங்கி ஆடுறதுதான் எங்க ஜிம் வொர்க் அப்!  நாலு கட்டையிலும்  ஆள் நின்னுகிட்டு நடுவுலே குரங்குன்னு ஒரு ஆளை நிப்பாட்டி ஓடுறது ,சிமெண்ட் மேடையில் ஏறிகிட்டு கல்லா மண்ணா விளையாடுறது. அப்பப்பா! எத்தனை விதமான விளையாட்டுகள் அப்போ இருந்திருக்கு. அதோட அருமை தெரியாமலே அநுபவிச்சு விளையாடியிருக்கோம். 


ஆம்பிளப் பசங்க கூட விளையாடப் போகக் கூடாதுன்னு அடிக்கடி அம்மா கிட்டே அடி வாங்கியிருப்பேன். ஆனாலும் அடங்கினது கிடையாது. எல்லா வீர விளையாட்டுகளும் விழுப்புண்கள் உண்டாக்கும். இரத்தக் கட்டு ஏற்பட்டாலும் சரி, கால் பிசகினாலும் சரி ,வீட்லே சொல்லவே முடியாது. சொன்னா வைத்தியம் கிடைக்குதோ இல்லையோ கண்டிப்பா அடி கிடைக்கும். எதுக்கு வம்பு?


முன்வாசலின் இன்னோரு பக்கம் (மண்) சட்டி பானைக் கடை இருக்கும். சந்தையில் கள்ளப் பண்டங்கள் வாங்க வீட்லே காசு தர மாட்டாங்க. சட்டிப்பானைக் கடை தேவருக்கு அத்தனை மண்பாண்டங்களையும் குடிசைக்குள்ளிருந்து எடுத்து சந்தையில் பரப்பவும், மறுபடி சாயங்காலம் உள்ளே எடுத்து வைக்கவும் ஆள் தேவைப்படும். லீவு நாளெல்லாம் நாங்க உழைப்பாளிகள் ஆயிடுவோம். வீட்லே அம்மா சொன்ன வேலை செய்றோமோ இல்லையோ தேவர் சொல்படி பானைகளை அடுக்கப் போயிடுவோம். அதுலே கிடைக்கிற காசுதான் சந்தைப் பலகாரங்களும் பழங்களும் வாங்கித் தின்பதற்கு பாக்கட் மணி.


எத்தனை விதமான மண் பாண்டங்கள் அப்போ இருந்துச்சு. குழந்தைகளின் சிறுவீட்டு சொப்புப் பானைகள் முதல் சம்சார வீடுகளின் சமையலறை பாத்திரங்கள் வரை அத்தனை விதங்களாக இருக்கும்.எங்க வீட்டில் அநேகமா எல்லாமே மண்பாத்திரங்கள்தான். நல்ல வேளையா காப்பி குடிக்க மட்டும் சில்வர் தம்ளர். இல்லாட்டி தம்ளர் உடைச்சே சொத்தைக் கரைச்சிருப்போம். மண்பானைத் தண்ணீரும், பழைய சோறும் மணக்க மணக்க இருக்கும். 


பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் உண்மையாவே நடக்கும். காக்கா தூக்கிட்டுப் போறதும், பொடிசுங்க துரத்திட்டுப் போறதும் வாடிக்கையாகவே நடக்கும். மாம்பழத்தை வாங்கி, நல்லா கசக்கிட்டு சின்ன ஓட்டை போட்டு அதுவழியா மாம்பழச் சாறு குடிச்சவங்களுக்கு இன்றைய ப்ரூட்டியும் மாசாவும் சுவை குறைந்ததுதான்.


சந்தையின் நடுவில் ஒரு கோணப் பூவரச மரம் இருக்கும். அதுதான் எங்க மீட்டிங் பாயிண்ட். விளையாட்டை நடத்துறவங்க அதுலேதான் லீடர் மாதிரி உக்காந்துகிட்டு ரூல்ஸ் சொல்லுவாங்க. சில நேரங்களில் மொசுக்கட்டை பூச்சி இருக்கிறது தெரியாமல் உக்காந்து அரிப்போட அலைஞ்சதும் உண்டு.

சந்தையின் அடுத்த கோடியில் நெடிது வளர்ந்த அத்தி மரம் இருக்கும். இன்னோரு ஓரத்தில் கொடுக்காப்புளி ( கோணப்புளியங்காய்) மரம் இருக்கும். சீசனுக்குத் தக்க எந்த மரத்திலெல்லாம் காய் இருக்குமோ அங்கெல்லாம் குரங்குமாதிரி ஏறி பழம் பறிச்சுடுவோம். எங்களைப் பார்த்துதான் கண்ணதாசன் “குரங்குகள் போலே மரங்களின் மேலே”ன்னு பாட்டுப் பாடியிருப்பார் போலிருக்கு.


சந்தை கொஞ்சம் தாழ்வான பகுதி. அதனாலே ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலங்களில் இடுப்பளவு தண்ணீர் அங்கே தேங்கிடும். நானே கார்த்திகையில் பிறந்த பெண்தான். அம்மாவுக்கு எல்லாமே வீட்லேதான் பிரசவம். நான் பிறந்த போது அடை மழையில் சுவர் நனைந்து ஊறி கீழே விழுதுடுச்சாம். நல்ல வேளையா நாங்க படுத்து இருந்ததற்கு எதிர்ப் புறம் விழுந்திருக்கு. இந்தப்புறம் சரிந்திருந்தால் அன்னைக்கே ஆள் காலி. ஆரம்பமே அட்வென்ச்சருடன் பிறந்த சிங்கப் பெண் நான்!


மழைத் தண்ணீர் காயறதுக்கு சில சமயங்களில் பத்து நாள் கூட ஆயிடும். காகிதக் கப்பல் விட்டு விளையாட சந்தோஷமாகவும் இருக்கும்; முட்டளவு தண்ணீரில் பள்ளிக்கூடம் போவது இம்சையாகவும் இருக்கும். மண்பாண்டங்கள் அந்த தண்ணீரில் மிதக்க மிதக்க  வியாபாரமும் நடக்கும். தண்ணீர் காஞ்ச பிறகு சேறு காயும் சமயம்தான் ரொம்ப இம்சை. சொதக் சொதகுன்னு கால் பூட்ஸ் போட்டுக்கும்.  


நான் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதே சந்தையில்தான். அங்கேதான் இடைவெளி விட்டு விட்டு உயரமான திண்டுகள் இருக்கும். இடைவெளியில் சைக்கிளில் இருந்து இறங்கினால் பெடல் போட்டு ஏறத் தெரியாது. அந்த திண்டுகள்தான் என்னை மறுபடி சைக்கிளில் ஏற்றும் ஆபத்பாந்தவர்கள்.  


காலையில் ஒவ்வொரு கடையா கொண்டு வந்து வைச்சு ஒழுங்கு படுத்தும் வியாபாரிகள் சத்தமும் ,வாங்குபவர்கள் சத்தமும், வீட்டு முன்னாடி ஒரு கல்யாணக் களையோடு இருக்கும். சாயங்காலம் எல்லாரும் கடையை மூடிட்டுப் போனபிறகு வரும் நிசப்தமும் வெறுமையும் கொஞ்சம் அமானுஷ்யமாகக் கூட இருக்கும். 


நான் வெட்டிலேதான் சிங்கப்பெண் வேஷம் போடுவேன், உண்மையிலேயே இருட்டுன்னா கொஞ்சம் பயம். எதாவது வேலையா சந்தையைக் கடக்க நேர்ந்தால் சத்தமா சினிமா பாட்டு பாடிட்டு ஓடியே வந்திடுவேன். எதோ சங்கீத ஆசையில் பாடறதா மத்தவங்க நினைச்சிருப்பாங்க. பயத்திலே பாடுறது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. 


பி.கு. என்னோட பதிவுகள் ஒவ்வொண்ணா பதிவேற்றும்போதும் அண்ணன்களும் தம்பியும் என் பதிவு சார்ந்த தகவல்கள் ஏகப்பட்டது பின்னூட்டமாக சொல்லி வருகிறார்கள். எனவே இதே நினைவலைகள் கொஞ்ச நாள் கழித்து மீள்பதிவாகவும் வரலாம். பொருத்தருள்க!!

Saturday, August 29, 2020

அலை-4

அலை-4

சினிமா தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பது என்பது இப்போ அசெளகரியமாகத் தெரிகிறது. வீட்டு வரவேற்பறையில் கால் நீட்டி அமர்ந்து வேண்டாத  காட்சிகளை ஓட விட்டுப் பார்க்கும் சுகத்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சின்ன வயசுலே கிராமங்களில் ஒரே பொழுது போக்கு சினிமாதான். 


எங்க வீட்டு ஜனத்தொகை அதிகம் என்பதாலும் வேலைப்பளு இருக்கும் என்பதாலும், எல்லாரும் ஒரே நாளில் படத்துக்குப் போக முடியாது. ரெண்டு மூணுநாள் சின்னச் சின்ன க்ரூப்பாகப் போவாங்க. சின்னப் பசங்களுக்கு டிக்கெட் கிடையாதுங்கிறதாலே எங்களுக்கு தினசரி சினிமாதான். 

நான் மருத்துவக் கல்லூரிலே சேர்ற வரைக்கும் எங்க வீட்லே மின்சார வசதி கிடையாது. மண்ணெண்ணெய் விளக்குதான். அதனாலே வீட்டுப் பாடம் எழுதறது, படிக்கிறது எல்லாம் சாயங்காலம் இல்லாட்டி காலையில்தான். எங்களை வீட்லே வைச்சு மேய்க்கிறதைவிட சினிமாவுக்குத் தள்ளிவிடுறதுதான் வீட்லே உள்ளவங்களுக்கும் நிம்மதி. 


சின்ன வயசுலே பார்த்த படங்களின் கதை வசனம் பாடல்கள் எல்லாம் இப்போ கூட மனப்பாடமா இருக்குது. ( அதுக்குப் பிறகு படிச்ச பள்ளிப்பாடங்கள் கொஞ்சம் கொஞ்சம் மறந்திருக்கும்) மூணு நாலுதடவை பார்த்த படம் மனப்பாடம் ஆகிறது இயற்கைதானே. அதுவும் சாதாரணமாகவா பார்ப்போம். அக்கா, மதினி, அம்மான்னு ஒவ்வொருவர் கூடப் பார்க்கும்போதும்  வித்தியாசமான ரசனையோட பார்ப்போம். 


எங்கம்மாவோட ரசனைதான் எனக்குள்ளும் ரொம்பத் தங்கி இருக்குன்னு நினைக்கிறேன். ஏதாவது வில்லத்தனமான சீன் வரும்போது “நாசமாப் போறவன்”னு திட்டுவது; உணர்ச்சிகரமான சீன்களில் அழுவது; காமெடி சீன்களில் உரக்கச் சிரிப்பது- இதெல்லாமே நான் அடிக்கடி செய்றதுதான். அதனாலேயே பக்கத்துலே உட்கார்ந்து படம் பார்ப்பவர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குவேன். என் பொண்ணும் பையனும் அநியாயத்துக்கு என்னைத் திட்றது இதுக்குத்தான். சினிமா பார்க்கும்போது மட்டும் சபைநாகரிகம் எல்லாம் காத்தாப் பறந்திடும்.


எங்க காலத்திலேயே டூரிங் தியேட்டர் மாறி நிரந்தர தியேட்டர் வந்துடுச்சு. ஆனாலும் டூரிங் தியேட்டரில் படம் பார்ப்பது அலாதி சுகம். மணல் தரைதான் எல்லாருக்கும், பெரும் புள்ளிகளுக்கு மட்டும் கடைசி வரிசைகளில் நாற்காலி போடப்பட்டிருக்கும். எங்களுக்கு முன்னாடி உக்கார்ந்திருக்கிறவங்க தலை மறைக்கும் போது மணலைக் கூட்டி மலை மாதிரி செஞ்சு அதுமேலே உக்காந்துக்குவோம், பெருமையா இருக்கும். 


எங்க அம்மா, ஆச்சி காலத்துலே இன்னும் மோசமாம். அப்போதுதான் அசையும் படங்கள் (movie ) வந்திருக்கு. ஒருநாள் எங்க ஆச்சி மற்றும் சொந்தக்காரங்க மகாபாரதம் மாதிரி ஏதோ போர் சம்பந்தப்பட்ட படம் பார்க்கப் போயிருக்காங்க. திடீர்னு யானைப்படை வந்ததைப் பார்த்துட்டு அவங்களைத்தான் மிதிக்க வருதுன்னு நினைச்சு தலை தெறிக்க எந்திரிச்சு ஓடினாங்களாம். எங்க அம்மா தலைமுறை அதை நக்கலாகப் பேசி சிரிப்பாங்க. அதைக் கேட்டவுடன் எங்க ஆச்சி(தாணுஆச்சி)க்கு ஒரு கோபம் வரும் பாருங்க. அதை ரசித்து சிரித்த தலைமுறை எங்களோடது. 


டூரிங் தியேட்டர்னா என்னன்னு கூடத் தெரியாதது நம்ம பிள்ளைகளோட தலைமுறை. 

நிரந்தரமான தியேட்டர் வசதி இல்லாத ஊர்களுக்கு ஆறு மாசம் ஒரு வருஷம்னு தற்காலிக திரை அரங்குகளை எழுப்பி சினிமா காட்டுவதுதான் டூரிங் ( TOURING Theaters) தியேட்டர்கள் .


நிரந்தர தியேட்டரும் பெரிய சொகுசெல்லாம் கிடையாது. ”தரை டிக்கெட், பெஞ்ச், சோபா” ன்னு ரெண்டு மூணு விதம் இருக்கும். நமக்கெல்லாம் தரை டிக்கெட்தான். (நான் MBBS சேர்ந்த பிறகு எனக்கு பதவி உயர்வு தந்து பெஞ்ச் டிக்கெட் எடுத்துக் கொடுத்தாங்க!) தரை டிக்கெட்டிலும் முன்னாடி தீயணைப்பன்கள் வைக்கும் இடம் கம்பி போட்டு தனிப்படுத்தப் பட்டிருக்கும். அதுக்குள்ளே போயிட்டா படுத்துகிட்டே பார்க்கலாம், பெரியவங்க அதுக்குள்ளே வர மாட்டாங்க. “ஆயிரத்தில் ஒருவன்” எம்.ஜி.ஆர். பாவாடை மாதிரி உடையணிந்து ஜெயலலிதாவுடன் ஓடும் காட்சிகளை எத்தனை தரம் படுத்துக் கொண்டே பார்த்திருப்போம்னு கணக்கே இருக்காது. 

தரை டிக்கெட்டில் கதவு ஓரம் உட்கார்ந்து பார்த்தால் கொஞ்சம் காற்று வரும். அதனால் கதவு சீட் பிடிக்க அடிபிடியாக இருக்கும்.எங்க சரசக்கா கூட போனால் அவள் ஒரு சுவர் ஓரமா உட்காரக் கூட்டிட்டுப் போயிடுவா, அவளோட வாடிக்கை இடமாம் அது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் மரக்கட்டையால் ஆன தடுப்பு மட்டுமே இருக்கும். சில படங்களுக்கு பெண்கள் பகுதி குறுகிப் போய்விடும். 


கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆனபிறகு டிக்கெட் கேட்க ஆரம்பித்த பிறகு திரும்பத் திரும்ப பார்க்கும் சந்தோஷம் தொலைந்து போனது. இடைவேளையில் கடலை, முறுக்கு எல்லாம் நாம் அமர்ந்திருக்கும் இடத்துக்கே விற்பனைக்கு வரும். எவ்ளோ வசதி பாருங்க. மல்ட்டிப்ளக்ஸ் மாதிரி  காஞ்சு போன பப்ஸும், தொண்டை எரியும் பெப்சியும் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. 


எங்க அம்மாவும் மூத்த மதினியும் வேலையெல்லாம் முடிச்சுட்டு இரண்டாம் ஆட்டம் தான் போக முடியும். மதினி தீவிர சிவாஜி ரசிகை. சிவாஜியோட அம்மா இறந்த அன்னைக்கு சாப்பிடாமல் அழுதுகிட்டு இருந்தாங்க. தன்னோட பையனுக்கு ( முத்துராமன்) மாமனார் பெயர் வைச்சதால் , பட்டப் பெயர் வைக்க “ வசந்த மாளிகை” சிவாஜி பெயர் வைச்சு “ஆன்ந்த்”ன்னு அன்போட கூப்பிடற அளவுக்கு தீவிர ரசிகை.


”தங்கம் தியேட்டர்” தான் எங்களுக்கு மாயாஜால், ஸ்கைவாக், எல்லாம். எங்க வீட்லேயிருந்து யாராவது ஒருத்தர் வந்தால்தான் “தங்கம்” தியேட்டரில் படம் போடுவான் என்று என் நண்பன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. தியேட்டரில் எங்களுக்கு சீசன் டிக்கெட் என்று கிண்டலடிப்பவர்களும் உண்டு. அடாது மழை பெய்தாலும் விடாது கறுப்பு மாதிரி சினிமாவுக்கு செல்வது எங்களுக்கு சாப்பாடு மாதிரி இல்லை, மூச்சு மாதிரி ( சினிமா பத்தி பேசும்போது சினிமா டயலாக் தானே போட முடியும்)


எங்க குடும்பத்தோட சினிமா ரசனைகள், படம் பார்த்த அநுபவங்களெல்லாம் எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் தான். அகா அண்ணகள் கிட்டே கேட்டால் பலவித சுவாரஸ்ய கதைகள் கிடைக்கும். எட்டு பேரோடதையும் வகைப் படுத்தினால் அதுவே பெரிய புத்தகமாகிடும். 


இப்போதைய லாக்டவுணில் Prime Time, Netflix, SUNNXTன்னு மாறி மாறி விதவிதமா நூறு படங்கள் பார்த்தாலும், அன்று பார்த்த மாடர்ன் தியேட்டரும், பாலச்சந்தரும், கறுப்பு வெள்ளைப் படங்களும் ஈடில்லாதவை.

நினைவலைகளில் சினிமா அலை மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கும்.

Friday, August 28, 2020

அலை-3

 

அலை – 3

”பெயர்” என்பது ஒருவரோட அடையாளம். அதை நக்கலடிப்பது, புனை பெயர் வைத்து அழைப்பது எல்லாம் ஏதோ ஒருவகையில் அவர்களைக் காயப் படுத்தலாம், இயல்பாக ஏற்றுக் கொள்ளவும் படலாம்.

எல்லா குழந்தைகளுக்கும் அம்சமான பெயர் வைத்துவிட்டு , கூப்பிட மட்டும் புனை பெயர் ( பட்டப் பெயர்) வைப்பது அந்தக்கால வழக்கம். எங்க வீடும் அதற்கு விதி விலக்கல்ல. ஆசை ஆசையா தாத்தா பெயர், ஆச்சி பெயரெல்லாம் வைச்சிடுவாங்க. ஆனா அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க, மரியாதைக் குறைவாம். ஒவ்வொருத்தருக்கும் கச முசன்னு  புனை பெயர், அதுக்கு ஒரு கதை!  

மூத்த அண்ணனுக்கு அப்பாவோட அப்பா பெயர் ராம்குமார் (குமாரசாமி தாத்தா),அம்மாவால் கூப்பிட முடியாதாம் , மாமனார் பெயராச்சே ! அதனால் ”துரை” ஆனான். ஆனால் அவனுக்கு வெள்ளைக்கார துரைன்னு நினைப்பு. செம மிலிட்டரி தோரணை. அவன்கிட்டே அடிவாங்காத பொடிசு கிடையாது. எதாவது வேலை சொல்லி செய்யாட்டி தொரண்ணன் கிட்டே சொல்லவா என்பதுதான் அம்மாவின் அஸ்திரம். கிடுகிடுன்னு வேலை ஆயிடும்.

மரகதம் அக்காவுக்கு அப்பாவோட அம்மா பெயர். அதனால் நல்லக்கா ஆனாள். ஆனால் அவள் அப்போ எங்களுக்கு கெட்ட அக்கா. மிலிட்டரியின் மகளிர் அணி. எங்க அப்பா யாரையும் அடித்தது இல்லை, அதட்டி திட்டியது கூட இல்லை. அண்ணனும் அக்காவும்தான் எங்களோட சட்டாம் பிள்ளைகள். அக்கா கல்யாணம் ஆகி போனப்புறம் கூட விடுமுறைக்கு வரும் போதுகூட மிலிட்டரி ஆட்சி தொடங்கிடுவாள். அவள்கையில் வெண்கல அகப்பையுடன் நின்ற நாட்கள் லேசா நினைவுக்கு வருது.  

மூணாவது அக்கா ரொம்ப சாது , சுடலை வடிவு , அப்பாவோட பெரியம்மா பெயராம். அவ்ளோ நீளமா கூப்பிட முடியாமல் நாங்களெல்லாரும் சேர்ந்து ”சொள்ளி” (சுடலி மருவியது) ஆக்கிட்டோம். சுடலின்னு சொல்றது கொஞ்சம் ஸ்டைலாக இல்லாதது போல் நினைச்சுட்டு அவளைக் கட்டிக்குடுத்த ஊர் பெயர் சொல்லி ஸ்ரீவைகுண்டத்து அக்கா ஆக்கிட்டோம். எங்க வீட்லேயே படிக்க மறுத்து வீட்டுக்குள் முடங்கிக் கொண்ட ஒரே பெண், அஞ்சாம் க்ளாஸ் தாண்டலை. அம்மாவுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்பட்டதால் சந்தோஷமாக அதை அங்கீகரித்துவிட்டாங்க.

நாலாவது பொண்ணு சரஸ்வதி பூஜை அன்று பிறந்ததால் சரஸ்வதி. அவளுக்கு பட்டப்பெயர் கிடையாது, நாங்களே சுருக்கி ”சச்சு” ஆக்கிட்டோம். பெயருக்கேற்றாற் போல் தமிழ்ப் பண்டிதை ஆனவள். காயல்பட்டிணத்தின் முக்காடு தேவதைகளின் தமிழ் அன்னை !! இப்போதைய எங்களின் தமிழ் அறிவுக்கும் பற்றுக்கும் அக்காவும் காரணம்.

ஐந்தாவது அண்ணன் சிவகாமி நாதன். என்ன காரணத்தாலோ அவனுக்கு ”செக்கன்” என்ற பட்டப் பெயர் வந்துவிட்டது. செக்கண்ணன்னு கூப்பிட்டால்தான் எங்களுக்கும் இனிமையாக இருக்கும். கிராம நிர்வாக அலுவலராக திருச்செந்தூரில் அண்ணன் பணியாற்றிய சமயம், என் கொழுந்தன் ( brother-in-law- Ezhil’s brother)அவன் மனைவி இருவரும் ஏதோ வேலையாக அண்ணனைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்தவர்களிடம் Mr. செக்கன் இருக்காங்களான்னு கேட்டிருக்காங்க (அதுதான் அண்ணனின் உண்மைப் பெயர்னு நினைச்சிருக்காங்க).அங்கிருந்தவங்க ஒரு மாதிரி முழிச்சாதும் தப்பான பெயர் சொல்லிட்டோம் போலன்னு நினைச்சு  Mr. செக்கார் இருக்காரான்னு ‘மரியாதையாய்” கேட்டிருக்காங்க. மறுபடியும் எதிரில் இருந்தவங்க ஒரு மாதிரி பார்த்ததும் ஏதோ தப்புன்னு புரிஞ்சுட்டு வெளியே வந்துட்டாங்க. தற்செயலா அங்கே வந்த அண்ணன் அவங்களுக்கு வேண்டிய உதவி செய்தது தனிக்கதை. இன்னைக்கும் Mr. செக்கார் கதை அடிக்கடி குடும்ப கூடுகைகளில் அசை போடப்பட்டு ரசிக்கப்படும்.

ஆறாவது அண்ணன் ஆறுமுக நயினார். அம்மாவின் தாய் மாமாவின் பெயராம். அவர் பூந்தி கடை வைத்திருந்ததால் அவர் பூந்தி தாத்தா, அண்ணன் பூந்தி அண்ணன். நான் சின்ன வயசா இருந்தப்போ எல்லாம் அந்தப் பட்டப் பெயரில்தான் கூப்பிட்டு இருக்கேன்.ஆனால் எதனாலோ அந்த பெயர் வழக்கொழிந்து போய்விட்டது. அண்ணனின் அறிவுக்கூர்மையும், அப்பாவுக்கு அடுத்தபடி வந்துவிட்ட நிதானமும், கம்யூனிஸ்ட் கொள்கைகளும் அவனை வேறு படுத்திக் காட்டியதால் புனைபெயர் மறைந்து நயினாருடன் நின்றுவிட்டது. பூந்தி நாவிலேயே கரைந்துவிட்டது.

ஏழாவது பொண்ணுதான் நான், இரந்தாலும் கிடைக்காதாம். எங்கம்மா அடிக்கடி சொல்லிக்குவாங்க. எங்க ஆச்சிக்கு சுசீந்திரம் பூர்வீகம். தாணுமலையன் சாமி பெயர் அவங்களுக்கு, தாணு அம்மாள். எனக்கு முன்னாடி  ஒன்றிரண்டு பேருக்கு அந்தப் பெயர் வைத்து , மருவி தாயம்மாள் ஆகிவிட்டதாம். அதனால் எனக்கு மொட்டையா ’தாணு’ ன்னு வைச்சுட்டாங்க. (தாணு என்பது ஆண்பிள்ளை பெயர்- சிவன் என்று பொருள்)  அப்படி பேர் வைச்சதாலோ என்னமோ யாரும் என்னைத் திட்ட முடியாது, அடிக்க முடியாது. பெரிய பிஸ்தாவெல்லாம் கிடையாது,ஆனால் பயங்கர கோபக்காரி, ரோஷம் ஜாஸ்தி. ஏன் என்று கேள்விகேட்டால் கூட கோபத்தில் கிணத்துக்குள்ளே குதிக்கப் போற ஆளு ( பேர் வைச்சதுக்கு ஏற்ப ருத்ர தாண்டவம்தான்) எதுக்கு இவ வம்புன்னு என்னை யாரும் அதிகமா திட்றதில்லே.

என்னை அதிகமா கடுப்பேத்தறதும் சண்டை பிடிக்கிறதும் கடைக்குட்டி தம்பி, எட்டாவது மேதை ,  நாராயணன்தான். அவன் பெயர் எங்க சின்னதாத்தா பெயர் என்பதால் செல்லமா “பட்டு”ன்னு கூப்பிடுவாங்க. எனக்கு சின்ன வயசுலேயே ”தன்வந்திரி” ன்னு பட்டப் பெயர் வைச்சவனும் அவன்தான். அப்போவே நான் டாக்டர் ஆவேன்னு தெரிஞ்சு அந்தப் பெயர் வைச்சிருப்பானோ? எட்டாவது மேதையாச்சே! அது தெரியாமல் அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட்டால் கடுப்பாயிடுவேன். அதனாலேயே ரெண்டுபேருக்கும் எப்போதும் குடுமிப் புடிதான். ஆனால் அவன் பேர் வைச்சது ஆழ் மனதில் பதிந்துதான் டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம்  தோன்றியிருக்குமோ? இருக்கலாம்.

இந்த எட்டு பேருக்கே இத்தனை பெயர் இருக்கே , 76 பேருக்கும் எத்தனை பெயர் இருக்கும்? ஆரம்ப காலங்களில் எழிலுக்கு எல்லார் பெயரும் சரியா நினைவிருக்காது, மெதுவா கூப்பிட்டு எந்த நம்பர் வீட்டு குட்டின்னு கேட்டுக்குவாங்க.  (இப்போ எல்லோரும் வளர்ந்திட்ட பிறகு ரொம்ப ஒட்டுதலாயிட்டது வேறுகதை.)

எல்லாருக்கும் பட்டப் பெயர் இருந்தாலும் எனக்கு மட்டும் இன்னொரு பெயரும் சேர்ந்துகிடுச்சு, தாணு – ’நான்சி தாணு’ ஆயிட்டேன். இந்தப் பெயர் வந்ததுக்கும் ஒரு கதை இருக்கு. சர்ச்-லே கல்யாணம் பண்ணுவதாக இருந்தால் அதற்கு ஒரு பெயர் தேவைப்பட்டது.  எழில் எப்பொழுதும் என்னை எந்த நிர்ப்பந்தமும் செய்ததில்லை. என்னையே ஒரு பெயர் தேர்வு செய்யச் சொன்னாங்க. அப்போதுதான் “ராஜ பார்வை” படம் வந்த புதுசு, அதிலே மாதவியோட , நான்சி கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சிருந்ததால், அந்த பேரையே தேர்வு செய்திட்டேன். அந்தப் பெயருக்குள்ள மவுசு இப்போதான் நல்லா தெரியுது. அயல்நாட்டு பயணங்களில் இந்தியப் பெயர்களை உச்சரித்து கொலை செய்யும்போது, என் பெயர் மட்டும் ஈஸியாக கடந்து போயிடும். கடல் கடந்து ஊர் சுற்றுவேன் என்று அப்போதே தெரிந்திருக்கிறது. ஆறுமுகநேரியில் பிறந்துட்டு அமெரிக்கா போவேன்னு அன்னைக்கு யாராவது சொல்லியிருந்தா கண்டிப்பா நம்பியிருக்க மாட்டேன்.

”காலங்கள் மாறினாலும் கடல் கடந்து பறந்தாலும்

வேர்கள் மட்டும் தென் தமிழகத்தில்தான்”

Wednesday, August 26, 2020

 

அலை -2

இன்று எங்கள் குழுமத்தில்  தோழி  விசாலாட்சி “இட்லி” பற்றிய கவிதை ஒன்று போட்டிருந்தாள். உடனே ஆறுமுகநேரி ( நான் பிறந்து வளர்ந்த ஊர்) சந்தைக்கடை ( எங்கள் வீடு வாரச்சந்தையின் முகப்பில் இருக்கும்) வீட்டில் இட்லியோடு வாழ்ந்த காலங்கள் கண்முன்னே!

காலையில் எத்தனை மணிக்கு அம்மா எழுந்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நாங்க கண் முழிக்கும் போது ஆவி பறக்கும் இட்லிகள் வாழை இலையில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும். பெரியண்ணன் ஏழு மணிக்குள் DCW ஆலைக்கு வேலைக்கு செல்ல வேண்டும். என்ன புயல் மழை என்றாலும் அந்த காலை வேளையிலேயே நாலைந்து இட்லிகளைச் சுடச் சுட அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவான். வேட்டியை மடிச்சு கட்டிகிட்டு கக்கத்தில் ஒரு தோல் பையை இடுக்கிக் கொண்டு அண்ணன் செல்வது தடையில்லா பாங்கு. அவன் விடுமுறை எடுத்ததாகவோ சோம்பிப் படுத்திருந்ததாகவோ பார்த்த நினைவுகள் அரிது.

சரி ! இட்லி ஆறிடப்போகுது. அடுக்காளை ( அடுப்பங்கறையின் சொல் வழக்கு) க்குப் போவோம். அண்ணன்கள், நான் , தம்பி எல்லாரும் ஒரே பள்ளிக்கூடம் என்பதால் ஒரே நேரத்தில் கிளம்பணும். முந்தி கிளம்பினவங்க தப்பிச்சாங்க, பின்னாடி வந்தவங்க மாட்னாங்க. இட்லி காலியாகிக் கொண்டிருக்கும். எங்க வீட்லே யாருக்கும் எண்ணிக்கையில் இட்லி சாப்பிட்டு பழக்கமில்லை , கொப்பரைதான் அளவு. (ஒரு ஈடு, ரெண்டு ஈடுன்னு சொல்லுவாங்களே அது தான் கொப்பறை) கிட்டத்தட்ட 15 இட்லிகள் இருக்கும். ஒரு கொப்பரையோட எழுந்துட்டா, அடுத்தவன் தப்பிச்சான். ஆறின இட்லி பாத்திரத்தில் இருக்கும்,ஆனால் ஆவி பறக்க இருக்காதே! (அப்பவே காஞ்சனா, முனி 1,2 எல்லாம் எங்க தோஸ்த்துங்க).

இட்லிக்கு தொட்டுக்க எங்கம்மா ஒரு தேங்காய் சட்னி செய்வாங்க பாருங்க..இப்போதான் அது பேர் தேங்காய் சட்னின்னு தெரியுது. அப்போல்லாம் அது பேர்  லைன்” சட்னி. உலகத்துலே வேறே எங்கேயும் கிடைக்காது. எங்கம்மா கைப்பக்குவம் அப்படி. அரை மூடி தேங்காய் வைச்சு 20 பேருக்கு சட்னி செய்வாங்க பாருங்க! புளி காரம் உப்பு எல்லாம் தூக்கலா போட்டு நல்லா தண்ணியா சட்னி கரைச்சு கொதிக்க வைச்சு கொஞ்சம் தோசை மாவை அதுலே கரைச்சு, கொழு கொழுன்னு ஒரு சட்னி வருமே, இப்போ நினைச்சாலும் நாக்குலே எச்சில் ஊறுது.

கல்யாணமான புதுசுலே சட்னியில் மாவு கரைக்கிறதுன்னு சொன்னவுடனே எழில் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க. அதோட எங்க வீட்லே லைன் சட்னி கதை முடிஞ்சுது. அப்பப்போ நான் மட்டும் கொஞ்சமா லைன் சட்னி செஞ்சுக்குவேன். ஆனாலும் அம்மாவின் கைமணம் ஒருநாளும் வரமாட்டேங்குது. என்னோட பொண்ணுமட்டும் அப்பப்போ என்கூட லைன் சட்னிக்கு ஆதரவு தருவாள். என்னைக்காவது சட்னி கொஞ்சம் தண்ணியா இருந்தால் எழில் இளக்காரமா , இன்னைக்கு லைன் சட்னியான்னு கேட்பாங்க.

மறுபடியும் சந்தக்கடைக்குப் போவோம்! சட்னிக்கு பதில் சாம்பார் இருந்தாலும் அதற்கும் அதே தலைவிதிதான். ஒரு மானிப்படி பருப்பில் பெரிய சட்டி நிறைய சாம்பார் வைச்சிடுவாங்க. லைன் சாம்பார்தான். இப்போ தோசை மாவுக்கு பதிலா கடலை மாவு. அதுக்குன்னு ஒரு சாம்பார் பொடி செஞ்சிருப்பாங்க. கடலைப் பருப்பு, அரிசி எல்லாம் வறுத்து பொடி பண்ணினது. ரெண்டும் கலந்து சாம்பார் சும்மா கொழு கொழுன்னு மணமா இருக்கும். எங்கேயாவது அத்தி பூத்த மாதிரி ஏதாச்சும் காய் தெரியும்.சாம்பாருக்கு தொட்டுக்கொள்ள முளகாப்பொடி (இட்லிப்பொடி) கிடைக்கும்.அது இன்னும் காரமாக இருக்கும்.

நாங்க எல்லாம் கொப்பரைகளை முழுங்கிட்டு பள்ளிக்கூடத்துக்கும் இட்லி எடுத்துட்டு (மதிய உணவு) போனபிறகு அப்பா மெதுவாகத்தான் சாப்பிட வருவாங்க. அப்பாவுக்கு மட்டும் அம்மா கெட்டிச் சட்னி எடுத்து வைச்சிருப்பாங்க அமிர்தமே சமைச்சாலும் , அரைகுறையா சமைச்சாலும் அப்பா சாப்பிடுவது எண்ணி ரெண்டு இட்லிதான். எனக்கெல்லாம் அப்போது ஆச்சரியமாகவே இருக்கும். எப்படி வயிறு நிறையுமென்று? ஆனால் இன்று புரிகிறது. நாமெல்லாம் அப்பாவின் வயது வந்தவுடன் ரெண்டு இட்லி சாப்பிடும் குழுமத்தில் இணைந்துவிட்டோமே!! உள்ளங்கையில் எச்சில் படாமல் விரல் நுனியால் அப்பா சாப்பிடும் வித்தைகூட புரியாத புதிர்தான்.நாங்களெல்லாம் லைன் சட்னியில் இட்லியை மிதக்கவிட்டு குழப்பி அடிக்கும்போது சில நேரங்களில் மணிக்கட்டு தாண்டி சட்னி வழியுமே, மிக சத்தான காலம் அது!!

.

அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு அம்மா சாப்பிட உட்காரும்போது நிறைய நேரங்களில் இட்லி இருப்பதில்லை. வழிச்சு ஊத்தின இட்லின்னு சொல்லுவோம். மாவு சட்டியைக் கழுவப்போடும் முன்பு அதிலுள்ள கடைசி மாவில் செய்யும் இட்லி, கொஞ்சம் கடினமாகவும் அளவற்றதாகவும் இருக்கும். அதுதான் அம்மாவின் சாப்பாடு. அடிக்கடி காபி குடித்தே வேலைகளில் மூழ்கிப் போவதுதான் வாடிக்கை.

காலையில் உள்ள இட்லி மீந்துபோனால் உப்புமாவெல்லாம் கிளறித் தர மாட்டார்கள். ”கிளற வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்” தான். சட்னி சாம்பார் எதுவும் இல்லாதபோது “சுண்டக்கறி” ( மீந்து போன குழம்பு காயெல்லாம் போட்டு சுண்டவைத்திருப்பார்கள்) இருக்கும்.

இட்லி தோசை தவிர பூரின்னு சொல்லுவாங்களே ,அதெல்லாம் தீபாவளிக்கு மட்டும்தான். அது பலகார வகையில் சேர்ந்திடும். சப்பாத்தி என்பது ராயல் க்ரூப். வெளிநாட்டுக்காரர்களை வேடிக்கை பார்ப்பது மாதிரி. என்னைக்காவது சப்பாத்தி செய்ய ஆரம்பித்தால் பெரிய களேபரமாக இருக்கும். பிசைவது, உருட்டுவது, தேய்ப்பது என்று ஆளாளுக்கு ஒரு வேலை உண்டு. கறி மசாலா வாசனை வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் ஒரே நாளும் அதுதான். பரோட்டா என்ற வார்த்தையோ பொருளோ என்னவென்றே தெரியாத நாட்கள் அவை.

சிக்கனத்தைப் பிள்ளைகள் கூட உணராத வகையில், எட்டு பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வர, பலவிதமான வித்தைகளை கைவசம் வைத்திருந்த எங்க அம்மாவைவிட பெரிய பொருளாதார மேதை யாருமில்லை. (கட்டுரைக்காக அவர்கள் இவர்கள் என்று எழுதினாலும் அம்மா , அண்ணன்கள், அக்காக்கள் அனைவரையும் நீ வா போ என ஒருமையில் அழைத்தே வளர்ந்துவிட்டோம். இடையிடையே அது கட்டுரையிலும் பிரதிபலிக்கலாம். மரியாதைக் குறைவால் அல்ல, மனதுக்கு மிக அருகே இருப்பதால்)

என்றென்றும் அன்புடன்

தாணு

26/08/2020

.

 

அலை -1

எழுத ஆரம்பித்த உடனேயே எனக்குள் இருக்கும் சந்தர்ப்பவாதி, தலையை நீட்ட ஆரம்பிச்சாச்சு. முதலில் கோர்வைப் படுத்திக் கொள், பருவங்களை வகைப்படுத்திக் கொள், நிகழ்வுகளைத் தரம் பிரித்துக் கொள் என்று ஏக அறிவுரை.

எந்த கட்டுக்குள்ளும் அடங்காமல் காட்டாறு மாதிரி போகவேண்டுமென்று மனது சொல்கிறது, ஆனால் விரல்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இன்று காலை மரகதம் அக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அதனால் அக்காவிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.

ஐநூற்றுமுத்து – நாகம்மாள் தம்பதியரின் இரண்டாம் மகள் மரகதம் அக்கா. எனக்கும் அக்காவுக்கும் 18 வருட இடைவெளி. நான் ஏழாவது பெண் அல்லவா? அதனால் நானே அக்காவுக்கு மகள் போன்ற ஸ்தானம்தான்.எதனாலேயோ அவளை நாங்கள் “நல்லக்கா” என்றே கூப்பிடுவோம். ஆனால் அவள் பொல்லாத அக்கா, சேட்டை பண்ணினால் கம்பெடுத்து முட்டிக்குக் கீழே விளாசிவிடுவாள், டீச்சரம்மாவாச்சே!!

அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு, இரு குழந்தைகளுக்கிடையில் இடைவெளி எதுவும் கிடையாது. ஒரு குழந்தை பிறந்து தாய்ப்பால் மறக்கடிக்கும் நிலையில் அடுத்த குழந்தை தங்கிவிடும். அதனால் கிடத்தட்ட இரண்டு-மூணு வருட இடைவெளிகளில் எட்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டவர் எங்கள் அம்மா. எனக்கும் நயினார் ( 6 வது மகன். ) அண்ணனுக்கும் மட்டும்தான் ஐந்து வருட இடைவெளி. எட்டாவது மேதையான தம்பி நாராயணனுக்கும் எனக்கும் இரண்டரை வருட இடைவெளி.

மூத்த அண்ணன் ( நினைவில் வாழும்) ராம்குமார். ஆனால் எங்களுக்கெல்லாம் “ துரை” அண்ணன் (தொரண்ணன்). அண்ணனோட குரல் மிகப் பிரபலம். சாதாரணமாகப் பேசினாலே மூணு தெருவுக்குக் கேட்கும். எதையும் மனசில் வைத்துக்கொள்ளத் தெரியாத அப்பாவி அண்ணன்.

மூன்றாவது அக்கா (நினைவில் வாழும் ) சுடலை வடிவு. சுதந்திர தினத்தன்று பிறந்தவள். ”சுதந்திரதேவி”ன்னு பெயரிடப் பட்டிருக்க வேண்டியவள் சுடலை வடிவானாள். நாலாவது தமிழ் பண்டிட் சரசக்கா, இளம் வயதிலேயே விதவையானாலும் தூண்போல் நின்று தன் குடும்பத்தைக் கரையேற்றியவள்.

ஐந்தாவது அண்ணன் சிவகாமிநாதன். இப்போது எங்கள் எல்லோருக்கும் அப்பா ஸ்தானத்திலிருந்து வழி நடத்துபவன். மூணு அக்கா, மூணு அண்ணன், ஒரு தம்பி என அம்சமான குடும்பத்தின் பெண்களில் கடைக்குட்டி நான்.

அப்பா தீவிர கம்யூனிஸ்ட் .ஆனாலும் அத்தனை குழந்தைகளுக்கும் சாமி பெயர். தனது சித்தாந்தங்களைப் பிறர்மீது திணிக்காத பண்பட்ட அரசியல்வாதி; குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி கட்டுப்பாடுகளுடன் வளர்க்காமல் அவரவர் தனித்துவத்துடன் இயல்பாய் வளர வழி செய்தவர். கையெழுத்துகூடப் போடத்தெரியாத அம்மாவை “ பாண்டிச்சேரி MLA “ என்று நாங்களெல்லாம் கேலி செய்யும் அளவுக்கு மகாராணி போல் வாழச் செய்தவர். அப்பாவின் பெயரிலுள்ள “ முத்து” அடுத்த தலைமுறை வாரிசுகளின் பெயர்களாய் பல்கிப் பெருகி மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

முத்துக்கு முத்தான செல்வங்கள் ஒவ்வொருவரைப் பற்றியுமே ஒவ்வொரு புத்தகம் எழுதலாம். ஐநூற்று முத்துவின் வாரிசுகள் 500 வரும்வரை யார் யார் இருப்போமோ தெரியவில்லை. ஒரு நூறு வரும்வரை இந்த தலைமுறை இருக்கும். ஏற்கனவே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள், பிள்ளைகளின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என எண்ணிக்கை 76 வந்துவிட்டது. வாழ்த்துங்கள் வளரட்டும்.

ரெண்டு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கே நாம் இன்று தடுமாறிக் கொண்டிருக்கும் போது எட்டு குழந்தைகளைப் பெற்று ஆலமரமாய் குடும்பத்து கிளைகளைப் பரப்பி வேறூன்றி நிற்கும் “ முத்துக்கள் ” குடும்பத்திற்கு என் முதல் பதிவு சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன் 

தாணு

26/08/2020

Tuesday, August 25, 2020

நினைவலைகளின் பயணம்

 

                நினைவலைகளின் பயணம்.          

தினம் தினம் இணையத்தில் வலம் வரும்போது நிறைய நண்பர்களோட பகிர்வுகள் என் மனதை வருடிச் சென்றது. சில நிகழ்வுகள் நான் வாழ்ந்ததாகவே தோன்றியது. அதையெல்லாம் வாசிக்க வாசிக்க, என்னுள் பொங்கிப் பிரவகிக்கும் எண்ணங்களை எழுத்துருவாக்கணும்கிற ஆசை அதிகமாகிடுச்சு. விபரம் தெரிய ஆரம்பித்த நாட்கள் முதல், கண்டு, பழகி அனுபவித்த , கடந்த காலம்  பெரிய தங்கச்சுரங்கமாகவே தெரிகிறது. அசை போட்டு எழுத ஆரம்பித்தால் ஆயுசு போதாதென்றே தோன்றுகிறது. ஆனாலும் முயற்சிக்கலாமென்று முடிவெடுத்துவிட்டேன்.

தொடர்பில்லாத சம்பவங்கள் வரலாம்; பருவங்கள் மாறி பரவலாம் ; நினைவில் நின்றவைகளை எழுதப் போகிறேன். அதில் நீங்களும் என்னுடன் பயணிப்பீர்கள்.

என்றென்றும் அன்புடன்

தாணு.