Tuesday, December 15, 2020

அலை-32

 அலை-32

“நோய் நாடி நோய் முதல் நாடி”ன்னு அறிவார்த்தமாகப் பாடினாலும் எல்லாத்தையும் உள்ளடக்கியது கைநாடி தான். மருத்துவம் அசுர வேகத்தில் வளர்ந்தாலும் அடிப்படை என்னமோ கைபிடிச்சு (பல்ஸ்) நாடித்துடிப்பு பார்ப்பதில்தான் இருக்குது.  


சமீப காலமாக மருத்துவ உலகமே கலப்பட மருத்துவ சிகிச்சைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. நானும் அதில் ஒரு அங்கம்தான். ஆனால் அறுபதுகளில் இருந்த நிலைமையே வேறு.

அலோபதி, ஹோமியோபதி, சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம்னு ஏகப்பட்ட மிக்ஸிங். எதுவானா என்ன சீக்கிரமாகக் குணமாகி அன்றாட இயல்புக்கு  திரும்பணும் என்பதற்கு மேல் யோசித்ததில்லை. தரம்பிரித்து வைத்தியம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானமும் வளரலை வியாதிகளும் அதிகமாக இல்லை. இருக்கிறதைவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வசதி வாய்ப்புகளும்  இல்லை. இருப்பதில் எது தோதாக உள்ளதோ அந்த வைத்தியமே சிறந்ததாக இருந்தது.


எங்க ஊர் மொத்தத்துக்கும் ஒரே ஒரு அலோபதி மருத்துவர்தான் உண்டு. அய்யாத்துரை டாக்டர்தான் சுத்துப்பட்டு கிராமங்களுக்கும் பரிச்சியமான கைராசி மருத்துவர். ஆறுமுகநேரி தர்மாஸ்பத்திரி (அரசு இலவச மருத்துவமனை) யின் நிரந்தர மருத்துவரும் அவர்தான். வீட்லே யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா நேரே தர்மாஸ்பத்திரிக்குப்போய் வரிசையில் நின்று நாலைந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால் வியாதியெல்லாம் "போயே போச்சு" . அதுக்கும் சரியாகவில்லை என்றால் சாயங்கால வேளைகளில் அவரது வீட்டில் தனியார் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் என்ன வியாதிக்குப் போனாலும் இடுப்பில் இரண்டு ஊசிகள் நிச்சயம் . அதுக்கு பயந்தே காலையில் அரசு டிஸ்பென்ஸரியில் மாத்திரை வாங்கிக் கொள்வோம். கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கே ஊசி போடுவது குறைவு.


அதே டிஸ்பென்ஸரியில் நர்ஸாக வேலைபார்த்த ராசமக்கா (ராஜம்மாள்) தான் ஊசி போடுவது, புண்ணுக்கு  கட்டு போடுவது எல்லாம் பண்ணுவாங்க . எங்க குடும்பத்துக்கு ரொம்ப தெரிந்தவங்க ,அவங்க மகனும் தம்பி நானாவும் வகுப்புத் தோழர்கள்  என்பதால் நிறைய நாட்கள் மருத்துவரைப் பார்க்காமலே அக்காவிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு ஓடி வந்துவிடுவோம். நாலைந்து வாசல்கள் கொண்ட மருத்துவ நிலையம் என்பதால் பின்னாடி வழியே போயிட்டு அப்படியே ஓடி வந்துவிடலாம். அய்யாத்துரை டாக்டரிடம் அவ்ளோ பயம்.

 

தரங்கதரா கம்பெனி டிஸ்பென்ஸரியில் வகுப்புத் தோழி லக்ஷ்மியின் அப்பா மருத்துவராக இருந்தார். ஆனாலும் ஏனோ அங்கு வைத்தியம் பார்க்கப் போனதில்லை. அங்கு வேலை பார்த்த கம்பவுண்டர் அண்ணாச்சிதான் காய்ச்சல் சளி போன்ற சிறு வியாதிகளுக்கு மாத்திரை தந்து உதவி செய்வார்.


 வீட்டிலேயே பாட்டி வைத்தியமும் நடக்கும். சளி பிடித்தால் ஆவி பிடிப்பது, நெத்தியில் பத்து போடுவது (வடிவேலு ஸ்டைலில் ’பத்து’ இல்லை), கஷாயம் குடிப்பதுன்னு கொடுமையான வைத்தியங்களும்  நடக்கும், நாங்க ஓடி ஒளிஞ்சுக்கிறதும் நடக்கும். இந்த கஷாயம் குடிக்கிற கொடுமைக்கு பயந்தே அலோபதி மாத்திரைகளை முழுங்கிடுவோம்.  ரொம்ப முரண்டு பிடிச்சா அய்யாதுரை டாக்டர்கிட்டே போகலாம்னு சொல்லுவாங்க சப்த நாடியும் கப்சிப்புன்னு ஆகிடும். மடக் மடக்னு கஷாயத்தைக் குடிச்சுட வேண்டியதுதான். 


கஷாயத்திலே வேறே ஏகப்பட்ட வித்தைகளை வைச்சிருப்பாங்க, வித விதமா காய்ச்சுவாங்க. பூச்சி மருந்துன்னு வேப்பிலைக் கஷாயம் தருவாங்க. அந்தக் கசப்பைக் குடிச்சா, மனுஷங்களே நாக்அவுட் ஆயிடுவாங்க,புழு பூச்சியெல்லாம் எம்மாத்திரம்? சளியை முறிக்கிறதுக்குன்னு இஞ்சிச்சாறு கொதிக்கவைச்சு தருவாங்க,அது காரமோ காரம்.  குத்திருமல் ( குத்தி குத்தி தொடர்ச்சியா இருமுறது) சரி பண்ண பச்சை வெங்காயம் கூட நண்டு   சேர்த்து உரலில் இடிச்சு ஒருவிதமான சாறு செய்வாங்க,மூக்கு பக்கம்கொண்டு வந்தாலே வாந்தி வந்திடும். இப்படி ஏகப்பட்ட மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையாக ஒவ்வொரு வீடும் இருக்கும். மினி மருத்துவர்களாக அம்மாவும் ஆச்சியும் இருப்பாங்க. இதெல்லாம் சித்த வைத்தியமா ஹோமியோபதியான்னு தெரியாது, ஹோம் வைத்தியம்னு மட்டும் தெரியும். அம்மாவா அய்யதுரையா என்பது நம்ம சாய்ஸ்தான். எழுபதுகளின் தொடக்கத்தில் வெளியூரிலிருந்து வந்து தனியார் க்ளினிக்  நடத்திய மருத்துவர்களால் கொஞ்சம் பயம் தெளிந்து வைத்தியம் பார்த்துக் கொண்டோம். 


அந்தக்காலத்தில் டைபாட்டிக்(Typhoid) காய்ச்சல்  தான் ரொம்ப சீரியஸான நோய். திருச்செந்தூர் தர்மாஸ்பத்திரிக்குப் போய் பெட்லே சேர்த்துதான் வைத்தியம் பார்க்கணும். எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது அங்கே அட்மிட் ஆகி பத்து நாளைக்குமேல் தங்கியிருந்து அப்புறம்தான் காய்ச்சல் சரியானது. அதுக்குப்பிறகு அந்த மருத்துவமனைக்குள் இன்றுவரை நான் போனதே இல்லை. காய்ச்சல் சரியான பிறகு ஒரு பத்தியம் வைப்பாங்க பாருங்க அதைவிட காய்ச்சலில் கிடப்பதே மேல். புளி காரம் கூடாதுன்னு கஞ்சி மட்டும்தான் கிடைக்கும். அதுக்குப்பிறகும் புளில்லாக் கறின்னு உப்பு சப்பில்லாத குழம்பு ஒண்ணு ஸ்பெஷலா செய்வாங்க.   ஒரு மாசத்துக்கு மேலே நோயாளி மாதிரியே கவனிப்புகள் கிடைக்கும். ஆனால் நாக்கும் மூக்கும் சுவையான மணக்கும் உணவுக்கு ஏங்கும். பார்க்க வர்றவங்களெல்லாம் ஆரஞ்சுப்பழமாகவே வாங்கிட்டு வருவாங்க. அதுக்குப் பிறகு ரெண்டு மூணு வருஷத்துக்கு ஆரஞ்சைப் பார்த்தாலே அலர்ஜியாயிடும்.


தப்பித்தவறிகூட வீர விளையாட்டுகளில் களமிறங்கி அடி பட்டுவிடக் கூடாது. சின்ன சுளுக்கிலிருந்து பெரிய எலும்பு முறிவுவரை கைதேர்ந்த வைத்தியர் பண்டாரவிளை வைத்தியர்தான் . இந்தக்கால எலும்பு முறிவு வைத்தியர்களுக்குக் கூட அவ்ளோ கீர்த்தியும் மவுசும் கிடைக்காது. வீட்லேயே வந்து கட்டுப்போட்டுவிடுவார். எல்லா முறிவுக்கும் ஒரே மாதிரி கட்டுதான் . ரெண்டு மரக்கட்டையை அண்டை கொடுத்து முட்டைவைச்சு பத்து போட்டுவிடுவார். கட்டைப் பிரிக்கும் போது எலும்பு எப்படி உடைஞ்சுதோ அதே கோணத்தில்  பிரபுதேவா மாதிரி போஸ் கொடுக்கும். ஆனாலும் அவர் போடுற கட்டுதான் மக்களிடையே ரொம்ப பிரபலம். எங்க ஆச்சி அம்மா எல்லாரும் அப்பப்போ கட்டு போட்டு பார்த்திருக்கிறேன். அதுலேயும் அசையவே கூடாதுன்னு  வேறே சொல்லிட்டு போயிடுவாரு.  எங்க ஆச்சி அதுக்குப்பிறகு நேரே நடந்தே நான் பார்க்கலை .லொடுக்கு பாண்டி மாதிரி விஸ்க்கி விஸ்க்கிதான் கடைசி வரை நடந்தாங்க.


சின்ன வியாதிகளுக்கே இந்தப்பாடு என்றால் பிரசவம் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கும் இதே நிலைமைதான். எங்க வீட்டில் எல்லாருக்கும் வீட்டிலேயேதான் பிரசவம் நடக்கும். அம்மாவும் சித்தியும் பேறுகாலம் பார்ப்பதில் கில்லாடிகள். உதவிக்கு பயிற்சிபெற்ற தாதி ( Trained Dai) ஒருவரை வைத்துக்கொண்டு பிரசவம் பார்ப்பார்கள். எங்க அம்மாவுக்கு நான் ஏழாவது பெண். இன்றைய நிலையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. கார்த்திகை மாதம் அடை மழையில் பிறந்தேன். சுகப்பிரசவமாகி அம்மாவின் அணைப்பில் இருந்திருக்கிறேன். எங்கள்வீடு மண்சுவரால் ஆனது .. அடை மழையில் சுவர் நனைந்து ஊறிப்போய் இடிந்து விழுந்துவிட்டது. நல்ல வேளையாக நாங்கள் படுத்திருந்த கீழ்ப்புறமாக விழாமல் மேல்புறமாக விழுந்தது . இல்லாவிட்டால் இந்த அலையை எழுத ஆள் இருந்திருக்காது. பிறந்தபோதே பிரச்னையை எதிர்கொள்ளும் அதிர்ஷ்டக்காரியாக பிறந்திருக்கிறேன் . ஏழாவது பெண் இரந்தாலும் கிடைக்காதாம். இறக்காமலும் கிடைத்தது அதிர்ஷ்டம்தானே! 


இதுபோன்ற அசெளகரியங்களும் பிரச்னைகளும் இருந்தாலும் வேறே வழியில்லாமல் இதுபோன்ற வைத்திய உதவிகள்தான் எங்களுக்குக் கிடைத்தது.  கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உதவி வேண்டுமென்றால்கூட தூத்துக்குடி அமெரிக்கன் ஹாஸ்பிட்டலுக்கோ திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கோதான் போகவேண்டும் . ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல் அய்யாதுரை டாக்டரும் பண்டாரவிளை வைத்தியரும்தான் எங்களின் கைகண்ட மருத்துவ தெய்வங்களாகத் தெரிந்தார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத நிறைய இழப்புகள்  இருந்தது .

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் சொந்தக்கார அண்ணன் வயிறு வீங்கி இறப்பதும் ,சுகப்பிரசவமாக பிறந்த குழந்தைகள் திடீரென மூச்சுத் திணறி மரிப்பதும் , பிரசவத்தில் கர்ப்பிணிகள் இறப்பதும் ஏனென்றே தெரியாமல் அங்கீகரிக்கப்பட்ட சோகமாக அரங்கேறிக் கொண்டே இருக்கும்.


 மருத்துவத்தின் வளர்ச்சிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாமலும், அறியாமையால் வரும் மூட நம்பிக்கைகளாலும், கிடைக்கும் வைத்தியமே சிறந்தது என்ற பிடிவாத கொள்கைகளாலும் நிறைய இழப்புகளை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளப்படும். இன்றும் கூட மேம்படுத்தப்பட்ட மருத்துவ உதவிகள் பெற குறைந்த பட்சம் நாற்பது கிலோமீட்டராவது பிரயாணம் செய்யும் நிலையில்தான் எங்கள் ஊர் போன்ற கிராமங்கள் இருக்கின்றன.


"அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" ன்னு திருவள்ளுவர் எப்பவோ சொல்லிட்டு போயிட்டார். அந்த. செயல்முறைகள்தான் இன்னமும் ஒழுங்குக்குள் வரமுடியாமல் கலப்படமாகிக் கொண்டிருக்கிறது.

அலை-31

 அலை-31

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று சுற்றித் திரிந்த காலங்களில் எதை எதையெல்லாமோ   சாப்பிட்டிருக்கிறோம். அன்று விளையாட்டாக சாப்பிட்ட நிறைய பொருட்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் பொருட்களாக இருப்பது சிறப்பு. என்னே எங்கள் கிராமங்களின் மண்ணுக்கு வாய்த்த பெருமை! இன்று இளவட்டங்களும் நகர மாந்தரும் தூக்கி எறியும் பொருட்களில் நிறைய ஐட்டம் அன்று எங்களின் நொறுக்குத் தீனியாக இருந்திருக்கிறது.


 ஒவ்வொரு பூவுக்கும் தனித்தனி வாசம் இருப்பதுபோல் ஒவ்வொரு பழக்கொட்டைக்கும், பழத்தின் விதைகளுக்கும் தனித்தன்மையான ருசி இருக்கும். அதன் அருமையெல்லாம் தெரியாமல் இன்றைய தலைமுறை கொட்டைகளற்ற (seedless) பழங்களையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். நாங்க அந்தக்கால அறிவாளிகள். பழம் தின்று கொட்டை போடுபவர்களுக்கு நடுவே கொட்டைகளையும் கொறித்துக்கொண்டு அலையும் கோமாளிகள்.


 நிறையபேர் மாம்பழம்,நாவல்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை ருசித்துவிட்டு அதன் கொட்டைகளைக் குப்பையில் போடுவாங்க. ஆனால்அந்தக் கொட்டைகளைக் கல் வைத்து உடைத்து உள்ளே இருக்கும் விதைப்பகுதியைக்கூட வீணாக்காமல் ருசிபார்க்கும் திறமை கொண்டது எங்கள் வானர சேனை. சிறிது கசப்போடு துவர்ப்பாக இருக்கும் கொட்டையின் உள்பகுதியை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் பழரசம் அருந்தியது போன்ற இனிப்பு சுவை வரும்.  


மாம்பழக்கொட்டை ஒருவித ருசி என்றால் நாவல் பழத்தின் கொட்டை வேறேமாதிரி சுவையுடன்  துவர்ப்பாக இருக்கும். அதைக் காயவைத்து எடுக்கும்போது மேல்தோல் அழகாகப்பிரிந்து வரும் அதைப் பொடி செய்து சாப்பிடலாம், அப்படியேவும் சாப்பிடலாம். அதே நாவல்பழக் கொட்டைகள் , இன்று சர்க்கரைவியாதிக்கு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேசஅளவில் அதற்கு ஏக மவுசு.  அதனால் நாவல் பழத்தின் விலையும் உச்சத்துக்குப் போய்விட்டது. எங்கள் பள்ளியின் காம்பவுண்டை அணைத்து நிற்கும் நாவல் மரத்தின் பழங்களைக் கல் கொண்டு அடித்து பொறுக்கி கழுவி சாப்பிட்டது பசுமை நிறைந்த நினைவுகள். மண்ணுலே விழுந்தாலும் கண்டுக்கிறதே கிடையாது, கழுவி சாப்பிட்டுக்குவோம்.


மஞ்சள் பூசணி விதை மிகத் தாராளமாக கிடைக்கும். எல்லோர் வீட்டு புழக்கடையிலும் பூசணிக்காய் உருண்டுகொண்டிருக்கும். சமையலுக்குக் காயை வெட்டியபின், அதன் விதைகளைத் தனியாக எடுத்து காய வைச்சிடுவாங்க. நல்லா காய்ந்தபிறகு உருக்குச்சட்டி(வடைச்சட்டி)யில் போட்டு மிதமான தணலில் வறுத்து உப்பு போட்டு சாப்பிட்டால் இப்போதைய finger-chips எல்லாம் பிச்சை வாங்கணும். சில அவசரக்குடுக்கைகள் பச்சையாகவும் சாப்பிடுவாங்க. ஆனால் ஒவ்வொண்ணா உரித்து உள்ளிருக்கும் பருப்பை சாப்பிடுவது நேர விரயம்.


கொல்லாங்கொட்டை (முந்திரிப் பருப்பு) எங்க ஊர்ப்பக்கம் நாசரேத்தில் அதிகமாகக் கிடைக்கும். செம்மண் தேரியின் சிறந்த பயிர்ப்பாசனம் இந்த முந்திரி மரங்கள். பள்ளிப் பருவத்தில் Drawing Class-ல் கொல்லாம்பழம் கொட்டையுடன் வரைவதுதான் பயிற்சி . பெண்மையின் நளினம்போல் இடை சிறுத்து உடல் பருத்து , உச்சிக் கொண்டையாக கொல்லாங்கொட்டையுடன் காட்சி தரும்போது அவ்ளோ அழகு. அதுவும் சிவப்பு, மஞ்சள் என்று கலர் கலராக வேறு இருக்கும். நல்ல நீர்ச்சத்துடன் தளதளவென்றுவேறே இருக்கும். பழம் ரொம்பத் துவர்ப்பாக இருந்தாலும், துண்டு போட்டு உப்பு தொட்டு சாப்பிடும்போது நல்ல கிக் வரும் .கொல்லாங்கொட்டையைத் தணலில் சுடும்போது மிக ரம்யமான வாசம் வரும். தெருவே மணக்கும். கொட்டையை உடைத்து சாப்பிடும்போது ஆவலை அடக்க முடியாமல் அவசரமாக சாப்பிட்டு நாக்கு சுட்டுக் கொண்ட நாட்கள் நிறைய உண்டு. 


பலாக்கொட்டை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இப்பவும் எல்லாரும் அதை சமையலில் உபயோகிக்கிறாங்க. தனியாகவும் அவித்து (வேகவைத்து) சாப்பிடலாம். புளியங்கொட்டையைக்கூட விட்டு வைத்ததில்லை. எது கிடைச்சாலும் உடனே சுட்டு சாப்பிட்டுவிட வேண்டியதுதான்.


 நெல்லிக்காயின் கொட்டையை அப்படியே பற்களுக்கு இடையில் வைத்து கடித்து உடைத்து சாப்பிடுவோம். எலந்தப்பழ கொட்டைதான் முயற்சி பண்ணிப் பார்க்காத ஒண்ணு.


 ரோட்டோரங்களில் காடுபோல் வளர்ந்து கிடக்கும் குட்டைத் தக்காளி (goose-berry) , அதற்கு ஜோடி போட்டு முளைத்துக் கிடக்கும் சொடுக்கு தக்காளி போன்ற செடிகளின் பழங்கள் வெறும் வாயை மெல்லும் எங்களின் வாய்க்கு அவல்மாதிரி. தக்காளிப்பழ ருசியுடன் மிளகு சைஸில் புறம்போக்கு இடத்திலெல்லாம் வர்ந்து கிடக்கும்.


பனைமரம்தான் எங்களுக்கு எத்தனை விதமான பண்டங்களைத் தந்திருக்கிறது. பனைமரம் என்றதுமே பதனி(பதநீர்)தான் நினைவுக்கு வரும். தெருவோடு பதனி விற்பது அன்றாட நிகழ்வாகவே இருக்கும். மண்பானையைத் தலையில் சுமந்து பதனி விற்கும் பெண்கள் அதிகம்.பனங்காட்டுக்குள் போனால் விடிலிகளில் ஆண்கள் பதனி விற்பார்கள். பதனியில் கருப்பட்டி காய்ச்சுற சமயமாக இருந்தால் சுடச்சுட கிடைக்கும்


 எங்க வீட்டுக்கு பதனி சப்ளை அப்பாவின் நண்பரான PSR தாத்தா வீட்டிலிருந்து கிடைத்துவிடும். தெஷணமாற நாடார் சங்கத்தின் தலைவராக இருந்த தாத்தாவுக்கு சொந்தமான தோப்பில் நிறைய பனைமரங்கள் உண்டு. அதனால் எங்களுக்கு பதனி வேண்டுமென்றால் பெரிய தூக்குச்சட்டியுடன் தாத்தா வீட்டிற்குப் போயிட வேண்டியதுதான். நுரை ததும்ப தெளிவான பதனி கிடைக்கும். அடிக்கடி நான்தான் வாங்கப்போவேன். 

பதனி ரெண்டுவேளையும் இறக்குவாங்க. காலைப் பதனி ஒருவித சுவை என்றால் மாலைப் பதனி வேறு  ஒரு சுவையுடன் இருக்கும். கோடைகாலங்களில்தான் அதிக அளவில் பதனி கிடைக்கும். மாம்பழ சீசனும் அப்போதான் வரும். மாலைப்பதனியில் மாம்பழம் வெட்டிப்போட்டு குடித்தால் சுவையோ சுவைதான். அதுவும் பட்டை(பனை ஓலைக் குடுவை)யில் குடித்தால் பரம சுகம். பனை ஓலையை விசிறி மாதிரி விரித்து சின்னக்குடுவை மாதிரி மடித்து இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் குடிக்க வேண்டும்.


பனங்காய் கருப்புக்கலரில் பச்சை கிரீடம் அணிந்து ராஜா மாதிரி இருக்கும். விறகடுப்பில் பனங்காய் சுடும்போது வரும் வாசனை தூரமா இருக்கிறவங்களையும் இழுத்துட்டு வந்திடும். மஞ்சள் கலரில் நார்நாராக உரித்து சாப்பிட ஆரம்பிச்சா தோல்கூட மிஞ்சாது.. காஞ்ச பனங்காய்களைக் கம்புகளில் இணைத்து கட்டவண்டி ஓட்டியிருக்கோம்.


பனங்காய்  முளைத்து வரும்போது கிடைக்கும் பனங்கிழங்கு தைப்பொங்கலை ஒட்டிதான் நிறைய கிடைக்கும். தணலில் சுட்டு சாப்பிடுவது ஒருவித சுவை. அவிச்சு சாப்பிடும்போது வேறு சுவை. பெரிய மண்பானையில் மூச்சுத்திணறும் அளவுக்கு பனங்கிழங்கு அவிப்பாங்க. தோல் உரிச்சு வேக வைக்கிற அளவுக்கு பொறுமை கிடையாது. ஒரு ஈடு அவிச்சு தட்டிட்டு அண்ணாந்து பார்க்கிறதுக்குள்ளே அபுட்டும் காலி. கிழங்கும் ஒண்ணு ரெண்டுன்னு வாங் மாட்டாங்க, நூத்துக் கணக்குலேதான் பர்ச்சேஸ் இருக்கும்.


அவிச்சு வைச்ச பனங்கிழங்கு மீதமானாலும் வீணாகாது. துண்டுதுண்டா வெட்டி, அதோட பச்சைமிகாய், பூண்டு, தேங்காய் போட்டு உரலில் இடிச்சு ஆளுக்கொரு உருண்டை கிடைக்கும்.. வீணாகுமோன்னு கவலையே வராது.


பனங்கிழங்கை பிரிச்சு எடுத்த பிறகு பனங்கொட்டையை வெட்டிப் பார்த்தால் பளபளனௌனு முத்துப்போல் தவுணு மின்னும். நறுக்குன்னு crunchyஆக மிதமான இனிப்புடன் இருக்கும். பனங்காய் முத்துவதற்கு முன்னால் நொங்கு பறிச்சு போடுவாங்க. விரலால் நோண்டி லாவகமாக எடுத்து வாயில் போடுவது தனி கலை. எனக்கு இன்னமுமம் ஒழுங்கா சாப்பிடத் தெரியாது.


பனைமரத்தின் எந்தப் பாகமும் வீணாகாது. பனை ஓலை,பட்டை,பலகை எல்லாமே உபயோகமான பொருட்கள். ஆனால் நாங்கள் பார்த்து ரசித்து பயனடைந்த பனங்காடு இப்போது ஊராகவும் தெருவாவும் மாறிவிட்டது. பனைஓலைப் பொருட்களை அயல் நாட்டு பயணங்களின் நினைவுப் பொருட்களாக வாங்கி வருகிறோம். 


கருப்பு வண்ணத்தின் இலக்கணம் இக்கணம்

கடந்தகால நினைவுகளின்

கனவுச் சோலையாகிவிட்டதது

அலை-30

 அலை-30

”தீராத விளையாட்டுப் பிள்ளைகள்” நாங்கள். ஆனால் அந்த விளையாட்டுப் பிள்ளைகள் வில்லாதி வில்லர்களாகும் நாட்களும் உண்டு. ஒத்த கருத்துக்களுடன் விளையாடும்போது ஏக குழைவும் கொஞ்சலுமாக இருப்பாங்க. சண்டைன்னு வந்துவிட்டால் குடுமிப்பிடியும் உண்டு, குள்ளநரித்தனமும் உண்டு. நிறைய சில்மிஷங்கள் அரங்கேறும்.


வீட்டுக்குள் வைத்து விளையாடும் (in-door games) விளையாட்டுகளில் சண்டை வந்தால் , ஆட்டத்தைக் கலைத்துவிட்டு ஆளுக்கொரு மூலையில் ஒதுங்கிக் கொள்ளலாம். சீட்டுக்கட்டுகள் பறக்கும், பல்லாங்குழி, தாயம் எல்லாவற்றின் காய்களும் வீடுமுழுக்க சிதறி பாதி ஐட்டம் காணாமல் போகும். ஆனால் மறுபடியும் எல்லாரும் சமாதானம் ஆனதும் கலெக்ட் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் வீதியில் விளையாடும் வீர விளையாட்டுகளில் சண்டை வந்தால்  வெட்டுப்பழி குத்துப் பழிதான். அடிதடி, கைகலப்பு எல்லாம் வந்துவிடும். அதிலும் அடுத்த தெருவரைக்கும் தொடர்புள்ள விளையாட்டுகளில் வீம்பும் வீரமும் ஜாஸ்தி.


 எங்க வீடு சந்தையை ஒட்டி இருந்ததால் வீட்டைசுத்தி நிறைய இடவசதி இருக்கும். நிறைய விளையாட்டுகளுக்கு போதுமான ஆடுகளமும் உண்டு. எனக்கு முன்னாடியும் அடுத்ததும் சகோதரர்களாகவே இருந்ததால் நானும் ஆம்பிள்ளைப் பையன் (tomboy) மாதிரியே வளர்ந்திட்டேன். சந்தையை ஒட்டி வீடுகளே இல்லாதிருந்ததால் மருந்துக்குக் கூட பெண்பிள்ளைத் தோழிகள் கிடைக்கலை. வீடு தங்காமல் ஆம்பிள்ளைப் பசங்ககூட விளையாடுவதற்கு அப்பப்போ அடியும் வாங்கிக்குவேன். 


 நானாவின் நண்பர்களுடன்தான் அதிகம் விளையாடியதாக ஞாபகம். அந்தப் பசங்கதான் என்னை விட சின்னப் பசங்களாக இருப்பானுக, கொஞ்சம் அதட்டிக்கிடலாம். அண்ணன்களோட நண்பர்களெல்லாம் ரொம்ப பெரியவங்களா இருப்பாங்க, என்னையெல்லாம் சேர்த்துக்கவும் மாட்டாங்க. 


பம்பரம்,கட்டைக்குச்சி,கோலி எல்லாம் விளையாடுவோம்.

பம்பரம் விளையாட கொஞ்சம் திறமை வேணும். பம்பரக் கயிற்றை சுத்துறதே தனி டெக்னிக்தான். அப்போதான் குறிபார்த்து குத்துறது சரியாக இருக்கும். ஓங்கி குத்துறதுலே உள்ளே வைச்சிருக்கிற பம்பரம் துண்டாகத் தெரிச்சிடும். எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் எனக்கு ஒருநாளும் ஒழுங்காக பம்பரம் விடத் தெரியாது. சுத்தும்போதே பாதி நேரம் கயிறு உருவிட்டு வந்திடும். அதையும் மீறி சுத்தி விட்டேன்னாலும் விடும்போது ஒழுங்காக சுத்தாது. ஆனாலும் மறுபடியும் அந்தப் பசங்ககூடத்தான் விளையாடணும், வேறே கம்பெனியே கிடையாது. என்னை ஒப்புக்குச் சப்பாணியாகவே வைச்சிருப்பானுக. என் தம்பிக்கு என்னைவிட திறமைசாலி என்ற பெருமை பீத்தல்வேறே இருக்கும். 


குலை குலையா முந்திரிக்கா, பச்சக்குதிரை தாண்டுறது , கோகோ, திருடன் – போலீஸ், கண்ணாமூச்சி, கிச்சுகிச்சு தாம்பாளம் எல்லாம்  மூந்தி கருக்குற (அந்தி சாயும் நேரம்- dusk) நேரத்திலேதான் விளையாடுவோம். வெளிச்சம் தேவையில்லாத விளையாட்டுகளில் இதெல்லாம் உண்டு. பெரியவங்க, குழந்தைகள் எல்லாரும் சேர்ந்துகூட சில விளையாட்டுகள் விளையாடலாம். 


எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து உள்புறமாகத் திரும்பியிருக்கணும். ஆட்டத்தை ஆரம்பிக்கிறவங்க ஒரு துண்டு அல்லது கைக்குட்டையைக் கையிலெடுத்துகிட்டு வெளிப்புறமாக சுத்தி வரணும். அதுக்கு இசைவாக உள்ள பாட்டைப் பாடிகிட்டு சுத்தி வரணும்- ”குலை குலையா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்திவா; கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலே பார் கண்டுபிடி” ன்னு பாடிகிட்டே சுத்தணும். யாரை மாட்டிவிடணும்னு தோணுதோ அவங்க முதுகுக்குப் பின்னாடி துண்டைப் போட்டுவிட்டு ஓடணும். அவங்க அந்த துண்டை எடுத்துகிட்டு துரத்துவாங்க. அதுக்குள்ளே அவங்க எந்திரிச்ச காலி இடத்தில் போய் உட்கார்ந்திட்டா துண்டு வைச்சிருக்கிறவங்க திருடன். அவங்க மறுபடி பாடிகிட்டே அடுத்த திருடனைத் தேடுவாங்க. ஓடுவதும் துரத்துவதுமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம். போரடிக்காத விளையாட்டு.


பச்சக்குதிரை தாண்டுவதற்குக் கொஞ்சம் பயிற்சி வேணும். முதலில் நீட்டி வைத்திருக்கும் கால்களைத் தாண்டணும், அப்புறம் காலுக்கு மேலே ஒரு கை, பிறகு ரெண்டாவது கை என்று உயரம் கூடிகிட்டே இருக்கும். அப்புறம் முட்டிபோட்டு குனிந்து உட்காரணும், பிறகு முட்டியை நேர் செய்து வில் மாதிரி போஸ் வரும்போது தாண்டுவது கொஞ்சம் கஷ்டம். ஒவ்வொரு கட்டத்துக்கும் (POSE)  ஒவ்வொரு பெயர் இருக்கும்- “ஆவியம், மணியாவியம், லக்குதிரை, லக்குதிரை கொக்கு,லக்குதிரை மண்ணு” என்று ஸ்பெஷல் பெயர்கள் வேறு உண்டு. ஒன்றிரண்டு பெயர்கள் மறந்த மாதிரி இருக்கு. எப்படியும் பின்னூட்டமிடும் போது என் தம்பி நினைவு படுத்திவிடுவான்.


கோகோ விளையாடும்போது பிடிக்காத ஆசாமிகளைத் தொட்டுவிட்டு செல்லுவதற்குப் பதிலாக தள்ளிவிட்டுக் குப்புற விழ வைக்கும் அழிச்சாட்டியங்களும் நடக்கும். அதுக்குத் தனி பஞ்சாயத்தும் நடக்கும். திருடன் - போலீஸ் விளையாட நிறைய வங்குகளும் மறைவிடங்களும் உண்டு. தேடிக் கண்டுபிடிப்பதற்கு உண்மையான ஸ்காட்லாந்து யார்ட் வந்தால்கூட கஷ்டம். பாவம் எங்க போலீஸ், திருடன் தான் கடைசியில் ஜெயிப்பான். அதனாலே நம்பர் எண்ணும்போதே ஓட்டைக் கண்ணு போட்டு ஒரு திருடனையாவது நோட்டம் விட்டுக்குவாங்க.


கண்ணைக் கட்டி காட்டிலேயெல்லாம் விட வேண்டாம், எங்க சந்தைக்கடையில் விட்டால் போதும் , சுத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். பெரிய இடம் என்பதால் ஊளையிடுவதும் பின்னாடி இருந்து கிச்சுகிச்சு மூட்டுவதுமாக ஏக ரகளையாக இருக்கும். கண்ணைக் கட்டி விடுறவங்க சமாதான விரும்பிகளாக இருக்கும் நாட்களில் லேசா இடைவெளி விட்டு கட்டி விட்டுடுவாங்க. செக் பண்ணுவதற்காக இது எத்தனை என்று விரல்களைக் காட்டும்போது வேண்டுமென்றே தப்பாகச் சொல்லி , கண்கட்டு சரியாக இருப்பதாகப் பாவலா காட்டிக்குவாங்க. பிடிக்காத ஆசாமிகளாப் பார்த்து கண்ணுவைச்சு முதலில் பிடிச்சுடுவாங்க.


கிச்சுகிச்சு தாம்பாளம் ரொம்ப சின்னப் பசங்கதான் விளையாடுவாங்க. மணல் மேடுகள் பாத்திபோல் நீளமாக பிடித்துவைக்கணும் அதனுள் ஏதேனும் சின்ன பொருளை , அநேகமாக சிலேட்டுக் குச்சி (பல்பம்) ஒளித்து வைக்க வேண்டும். ஒளித்து வைக்கும் செயலைச் செய்யும் போது “கிச்சுகிச்சு தாம்பாளம், கீயாக் கீயாத் தாம்பாளம்” என்று பாடிக்கொண்டு செய்யணும், எதிராளியைத் திசை திருப்ப. ஆட்காட்டி விரல் மற்றும் மோதிரவிரல்களுக்கு இடையில் குச்சியைப் பிடித்துக்கொண்டு மணல்மேட்டில் பாம்புபோல் நெளிந்து சென்று ஏதோ ஒரு இடத்தில் போட்டுவிட வேண்டும். எதிராளிக்கு எந்த இடத்தில் குச்சி விழுந்தது என்று தெரியக்கூடாது. எதிராளி உத்தேசமாக ஒரு இடத்தை தெரிவு செய்து இணைந்த உள்ளங்கைகளால் அந்த இடத்தை மூடவேண்டும். குச்சி வைச்சவங்க மறுபடியும் பாடிக்கொண்டே விரல்களை நுழைத்து மறைத்து வைத்த பொருளை எடுக்கணும். இணைந்த கைகளுக்குள் குச்சி இருந்தால் எதிராளி வென்றவர். இல்லாட்டி ஒளிச்சு வைச்சவங்க ஜெயிச்சுடுவாங்க.


சில சமயங்களில் அண்ணன்களும் எங்களுடன் விளையாட்டுகளில் இணைவதுண்டு. நயினார் அண்ணன் அந்தக்காலத்திலேயே புதையல் வேட்டை (Treasure Hunt) நன்றாகச் செய்வான். அம்மியின் அடியில் பார்க்கவும் என்று நேராக எழுதமாட்டான்; அரைக்கும் இயந்திரத்தின் அடியில் உள்ளது என்பதுபோல் சிலேடையாக எழுதுவான். கொஞ்சம் பேர் அம்மியை நோக்கி ஓடுவாங்க, சிலர் ஆட்டு உரலைத் தேடிப் போவாங்க. புதையலை முதலில் கண்டு பிடிக்கும்போது தங்கப்புதையலே (Mackenna’s Gold) கிடைச்ச மாதிரி ஏகப் பெருமையாக இருக்கும்.


ஆட்டத்தின் இடைச் சொறுகலாக சின்னச் சின்ன சில்மிஷங்களும் உண்டு. பல்லாங்குழி விளையாட்டு முடிந்ததும் அதில் உபயோகித்த புளியங் கொட்டைகளைத் தரையில் உரசி சூடேற்றி பக்கத்தில் உள்ளவர்களின் தோலைப் பதம் பார்க்கும் வில்லன்களும் உண்டு. சுள்ளுன்னு சூடேறும், நல்லா வலிக்கும். 


கருவேல மரத்திலுள்ள முட்கள் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். அதைக் கால் பெருவிரலில் பொருத்திக்கொண்டு அன்புடன் அருகில் வருவதுபோல் வந்து ஊசிகுத்திவிடும் அமெச்சூர் டாக்டர்களும் உண்டு. 


விடலைப்பருவ விளையாட்டுகள் 

மீள்பதிவுகளாக 

மறுபடி எழுதவைக்கின்றன

மறந்துபோன நினைவுகளாக இருந்தவை

விளையாடச்  சொல்லி

 மறுபடியும் அழைக்கின்றன.

அலை-29

 அலை-29

“பிறந்தநாள் இன்று பிறந்தநாள்” என்று சிலோன் ரேடியோவில் தினமும் ஒலிக்கும் பாடலைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடியதில்லை. ஆனால் வீட்டின் முதல் குழந்தைகளின்  பிறந்தநாளை மட்டும் மிக விமர்சனையாகக் கொண்டாடுவோம். மினி திருமணவிழா போல் ஆர்ப்பாட்டமாக நடக்கும். கண்டிப்பாக தலைச்சன் குழந்தைக்கு பெரிய அளவில் கொண்டாடினாலும் வசதிப்பட்டோர் அடுத்தடுத்த வாரிசுகளுக்கும் கொண்டாடுவாங்க.


இரண்டுநாட்கள் திருவிழா போல் வீடு களைகட்டும். முதல்நாள் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்த நாளை வீட்டில் வைத்து சிறப்பாகக் கொண்டாடுவாங்க. நெருங்கிய சொந்த பந்தங்களெல்லாம் முதல் நாளே வந்திடுவாங்க. பிறந்தநாள் கொண்டாடப்படும் வாண்டுக்குப் புதுத்துணி மாலையெல்லாம் போட்டு உள்ளூர் சிவன் கோவிலில் போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்து விருந்து சாப்பிடுவாங்க. வடை பாயாசத்தோடு அறுசுவை விருந்து நடக்கும். எவ்வளவு கூட்டம் வந்தாலும் தலைமாடு கால்மாடுன்னு அட்ஜஸ்ட் பண்ணி படுத்து உருண்டுக்குவோம். 


இரண்டாம்நாள் தான் ரொம்ப விசேஷம். மொட்டை அடிச்சு காது குத்துவது. எங்க வீட்டில் எல்லோருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில்தான் மொட்டை அடிப்பாங்க. 8 கிமீதான் ரெண்டு ஊருக்குமுள்ள இடைவெளி. முதல்நாள் வர முடியாத சொந்தங்கள்கூட காது குத்தும் விழாவிற்கு நேரடியாகத் திருச்செந்தூருக்கே வந்திடுவாங்க. 


மறுநாள் கிளம்புவதற்கு முதல்நாள் இரவிலிருந்தே சாப்பாடு ரெடி பண்ணுவாங்க. அது என்னவோ மொட்டை போடப் போகும் போதெல்லாம் புளியோதரைதான் செய்வாங்க. எத்தனை கூட்டம் வந்தாலும் தாங்கும் அமுத சுரபி புளியோதரைதான்.

நல்லெண்ணெய் விட்டு கிளறி நிலக்கடலையோ கொண்டக்கடலையோ போட்டு கலந்து செய்திருப்பாங்க. வாசம் மூக்கைத் துளைக்கும். பெரிய பெரிய தூக்குப்பாத்திரம், போணிச்சட்டியிலெல்லாம் அடைச்சி வைச்சிடுவாங்க. தொட்டுக்கொள்ள வசதியாக வறுத்துஅரைத்த தேங்காய்த் துவையல்தான் பொதுவாக இருக்கும். எப்போதாவது வற்றல் வடகம் துணை சேரும்.


எங்க ஊரிலிருந்து ரயிலில் போவது பிக்னிக் மாதிரி இருக்கும். வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கும் , திருச்செந்தூர் ஸ்டேஷனிலிருந்து கோவிலுக்கும் போக வேண்டிய தூரம் மைல்கணக்கில் இருக்கும். ஆனாலும் கூட்டமும் ஆட்டமும் பேச்சுத்துணையும் களைப்பே இல்லாமல் செய்துவிடும். ஸ்டேஷனிலிருந்து குதிரைவண்டிகள் கோயிலுக்கு வாடகைக்கு ட்ரிப் அடிப்பாங்க. சில சமயங்களில் நாங்களும் அதில் போயிருக்கிறோம். வண்டியின் பின்பக்கத்தில் குறுக்குக் கம்பி போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரயாணம் தொடரும். குதிரைவண்டியின் பின்சீட்டில் உட்கார்ந்து காலைத் தொங்கப் போட்டுகிட்டு நடந்து போறவங்களுக்கு டாட்டா காட்டி வெறுப்பேத்துறப்போ பெருமையா இருக்கும்.


சில பிறந்த நாட்களுக்கு பஸ் பயணமும் போவதுண்டு. திருவிழா இல்லாத காலங்களில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.வீட்டுக்கு எட்டின தூரத்தில் இருக்கும் ரொட்டிக்கடை ஸ்டாப்பில் இருந்தே ஏறிக்கலாம். சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தூக்கிட்டுப் போறதும் ஈஸியாக இருக்கும். எங்க குடும்பம் ஏறிட்டால் பஸ் பத்தாது, ஸ்டாண்டிங்தான். கூட்டத்தைப் பார்த்துட்டு நிறைய பஸ் நிக்காமல் போவதும் உண்டு. “குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கி வைச்சார் எங்கப்பா” பாடல் எங்க குடும்பத்துக்கு ரொம்பவே பொருந்தும்.


 வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டு பிறந்த நாள் விழா கண்டிப்பாக  வந்திருக்கும். அப்போ வருஷத்துக்கு ஒருதரம் மொட்டை போடப் போயிருப்போம். அந்த ஜெனெரேஷன் இப்போ வளர்ந்து வருஷத்துக்கு ஒரு டிக்கெட் +2 பரீட்சை எழுதுது.


திருச்செந்தூர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில்தான் மொட்டை போடும் இடம் உண்டு. அதுக்கு அடுத்தாற் போல் கோவில் யானையைக் கட்டி வைக்கும் இடம் உண்டு. அதன் முன்புறமாக கடைகள் வரிசையாக இருக்கும்.  பிறந்தநாள் மொட்டை, நேர்த்திக்கடன் மொட்டை என்று வருஷம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் இடம் அது. மொட்டை போடும் வரிசையில் பிறந்த நாள் பேபி காத்திருக்கும்போது,பெரியவங்க எல்லாம் வேப்ப மர நிழலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னவங்க எல்லாம் யானையை வேடிக்கை பார்ப்போம் அல்லது கடைத்தெருவில் சுற்றிக்கொண்டிருப்போம். 

கோவிலில் மொட்டை அடிப்பவர்கள் மிகுந்த திறமைசாலிகளாக இருப்பார்கள். சின்னக்குழந்தைகள் அழுது திமிறினாலும் சின்னக் கீறல்கூட இல்லாமல் அழகாக மொட்டை போடுவாங்க. மொட்டை அடிச்சதும் சந்தனத்தை மொட்டை மண்டையில் குளிரக்குளிர பூசிவிடுவாங்க.


 அதுக்குப்பிறகுதான் காது குத்துறது. உண்மையாகவே பாவமாகத்தான் இருக்கும்.தாய்மாமன்கள் எல்லாம் பந்தாவாக ரெடடியா இருப்பாங்க. ஆண்டிசெப்டிக் லோஷன், டிஸ்போஸபிள் ஊசியெல்லாம் அப்போது கிடையாது. எல்லாருக்கும் ஒரே ஊசிதான். கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே ரெண்டு காதிலேயும் கம்மல் ஜம்முன்னு உக்கார்ந்திருக்கும்.


 அழுற குழந்தையைத் தூக்கிகிட்டு எல்லாரும் கடலுக்குக் குளிக்கபோவோம். 

அன்னைக்கு எல்லோரும் குளிக்க முடியாது, அடுத்தடுத்து பூஜை  இருக்கும். கடற்கரையை அணைத்திருக்கும் வெளிப்பிரகாரத்தின் கூரை ரொம்ப உயரமமாக இருக்கும், எல்லாம் கருங்கல்லில் ஆனது. இடையிடையே உள்ள கருங்கல் தூண்களைத் தொட்டுக் கொண்டும் சுற்றிக்கொண்டும் நாங்களெல்லாம் கூச்சலிட்டபடி கடலை நோக்கி ஓடுவோம். பட்டுப்பாவாடை பறக்க கால் தரையில் படாமல் சிட்டாகப் பறப்போம். கடலை நோக்கிச் செல்லும் தரை கீழ்நோக்கி சாய்வாக இறங்கும், மழைக்காலம் என்றால் வழுக்கிக்கூட விட்டுவிடும்.


 கிழக்குப் பக்க பிரகாரச்சுவரில் ஒரு பொந்து உண்டு. அதிலிருந்து பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் தெரிவார். கடற்காற்று அதில் புகுந்து செல்லும் ஒலி “ஓம்” என்று ஒலிப்பதாகச் சொல்லுவாங்க. 

இடது புறம் கடல் அலைகள் பிரகாரத்தின் பக்கச் சுவரில் மோதி மோதி போவது அழகாகவும் இருக்கும், ஆபாத்தானதாகவும் தோன்றும்.அமாவாசை பெளர்ணமி நாட்களில் அலைகள் உயரமாக எழும்பி நடந்து செல்பவர்கள்மேல் பூச்சிதறல்களாய் வீசி நனைக்கும்.பெரிய பெரிய பாறாங்கற்கள் காவல்காரர்களாய் அரண் அமைத்திருக்கும்.அலைகள் கொஞ்சம் சாதுவாக இருக்கும்போது கற்களின் மேல் தாவிக்குதித்து விளையாடலாம்.


குழந்தையைக் கடலில் குளிப்பாட்டி தலையில் சந்தனம் தேய்த்து பூஜை செய்ய கோவிலுக்குள் எடுத்துட்டு போவாங்க. உட்பிரகாரத்தில் ஸ்தல புராணம், முருகர் பற்றிய கதைகள் எல்லாம் பல வண்ணச் சித்திரங்களாய் சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும். அந்தச் சித்திரங்களின் பொருள் விளக்கங்களை யாராவது அண்ணனோ அக்காவோ சொல்லிக் கொண்டு வருவாங்க. நாங்களெல்லாம் வாய்பிளந்து கேட்டுக் கொண்டு வருவோம். ஒவ்வொரு வருஷமும் கதை சொல்லும் நபர்கள் மாறும்போது கற்பனை நயங்களும் மாறுவதால், எப்போதும் புதுசாகவே கதை கேட்பதுபோல் இருக்கும். 


பூஜையெல்லம் முடிஞ்சு வெளியே வந்ததும் சாப்பாட்டுப் பந்தி ஆரம்பிக்கும். கோவிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்கள் இருக்கும். செந்தில் ஆண்டவன் விடுதி, சஷ்டி மண்டபம், கதாகாலட்சேப மண்டபம் என ஏகப்பட்ட இடங்கள் உண்டு. அதில் ஏதாவது ஒரு மண்டபத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்படும். எல்லாரையும் வரிசையாக உட்கார வைத்து புளியோதரை பரிமாறப்படும் பாங்கைப் பார்த்து அன்னதானம் நடப்பதாக நினைத்து அழையா விருந்தாளிகள் சாப்பாட்டில் பங்கெடுப்பதும் நடக்கும். அடுத்த பிறந்தநாள் யாருக்கு , எப்போது என்பதெல்லாம் அப்போதே முடிவாகிக் கொண்டிருக்கும். 


மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது.. ”மொட்டை” அடிக்கப் போனதால்தானே நாலு கிலோமீட்டருக்குமேல் நடந்து ”முழங்கால்” வலி வந்தது. சம்பந்தம் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்குது.

அலை-28

 அலை-28

”பட்டாசைச் சுட்டு சுட்டுப் போடட்டுமா 

மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா”ன்னு அமர்க்களமா நடக்கும் தீபாவளி, இந்த வருஷம் நமுத்துப்போன புஸ்வாணம் மாதிரி கிடக்குது. அடாது மழை பெய்தாலும் விடாது பட்டாசு வெடிச்சு காதைச் செவிடாக்கினவங்க நாங்க. புதுத் துணி, பட்டாசு ரெண்டும்தான் எங்களோட தாரக மந்திரமே.


தீபாவளிக்கு ஒருமாசத்துக்கு முன்னாடியே புதுத் துணி எடுக்கிற வைபவம் தொடங்கிடும். துரை அண்ணன் தரங்கதாரா கம்பெனியில் வேலை பார்த்து வந்ததால் மொத்தமாகத் துணி எடுத்துகிட்டு அவனோட மாச சம்பளத்தில் பிடித்துக் கொள்வாங்க. அதனாலே ஒரு வருஷத்துக்குரிய துணிகளும் அப்பவே வாங்கிடுவாங்க. ஸ்கூல் யூனிபார்ம் எல்லாம்கூட அந்த பர்ச்சேஸ்லேயே வந்திடும். இல்லாட்டியும் வேறு எந்த விசேஷத்துக்கும் புதுத் துணியெல்லாம் கிடையாது. பிறந்தநாள், திருமணநாள், காதலர் தினம் மாதிரி பெயர்களெல்லாம் கேள்விப்பட்டதே கிடையாது. அதெல்லாம் கல்லூரிக்குப் போன பிறகு தெரிந்துகொண்ட லக்ஸரி.


ஆத்தூர்லேதான் கம்பெனியோட துணிக்கடை உண்டு. கொஞ்சம் பெரிய பசங்க ஆனபிறகுதான் நாங்களெல்லாம் கடைக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அதுக்கு முன்னாடி அக்காவோ அண்ணனோ போய் எடுத்து வருவாங்க. தருவதைப் போட்டுக்க வேண்டியதுதான், சாய்ஸ் எல்லாம் கிடையாது. தாவணிக் கனவுகளுக்கு வந்த பிறகுதான் என்னோட துணிகளை நானே செலெக்ட் பண்ணும் சந்தர்ப்பமே கிடைத்தது. ஆனால் ஏண்டா வந்தோம்னு இம்சைப் படற அளவுக்கு அந்தக் கடையில் கூட்டம்  இருக்கும். புதுத் துணி வந்ததும் அதன் வாசனையும், துணியை வருடும்போது கிடைக்கும் சுகமும் அலாதியானது.


துணி எடுத்த நாளிலிருந்து டெய்லர் கடைக்கு அலைவது அடுத்த எக்சர்சைஸ். ஒரு டெய்லரும் சொன்ன நாளைக்குள் துணி தைத்துத் தந்ததாக சரித்திரமே இருக்காது. தீபாவளிக்கு முதல்நாள் நடுராத்திரி வரைகூட டெய்லர் கடையில் பழியாய்க் காத்துக் கிடந்த வருடங்கள் அநேகம் உண்டு. அநேகமாக தைச்சு வாங்கின பிறகு அளவு சரியாகவே இருக்காது. எங்க ஊர் டெய்லர்களெல்லாம் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள். அடுத்த வருடம் குண்டாகிவிடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் ரெண்டு ஆள் நுழையிற மாதிரிதான் ட்ரெஸ் தைச்சுத் தருவாங்க. கடனேன்னு போட்டுக்க வேண்டியதுதான். ரெடிமேட் துணிகள்  எட்டிக் கூடப் பார்த்திராத கிராமத்துத் தீபாவளி. 


துணி வாங்க டெய்லர்கிட்டே போறதுக்கு முன்னாடி எங்க கண்ணெல்லாம் வாசலையே பார்த்துகிட்டு இருக்கும். துரை அண்ணன் எப்போ வருவான்னு தவம் கிடப்போம். அண்ணன் வரும்போதுதான் பட்டாசு வாங்கிட்டு வருவான். அதையெல்லாம் வரிசைப்படுத்தி பங்கு வைச்சுக் கொடுக்கிறதும் பெரியண்ணன்தான். மத்தவங்க கொடுத்தால் அடிபிடி ஆயிடும், எங்களையெல்லாம் கட்டுப்படுத்த முடியாது. அண்ணன் கர்ஜனையைக் கேட்டால் எல்லாரும் கப்சிப். அதனால் பட்டாசு பங்கீடு பிரச்னை இல்லாமல் நடக்கும்.

எனக்கு பட்டாசுன்னாலே ரொம்ப பயம். ஆனாலும் என் பங்கை விட மாட்டேன். அப்புறமா தம்பிகிட்டே பட்டாசெல்லாம் கொடுத்துட்டு மத்தாப்பு புஸ்வாணம்னு பண்டமாற்று பண்ணிக்கலாம். 


ஒவ்வொருத்தர் வெடிகளையும் வைக்க அவங்கவங்க சீக்ரெட் வங்குகள், பொந்துகள் உண்டு. இல்லாட்டி அடாவடி ஆம்பிள்ளைப் பசங்க திருடிட்டுப் போயிடுவானுக. ராத்திரியே பாதி பட்டாசுகளை வெடிச்சுடுவோம். மின்வசதி இல்லாத எங்க வீட்டு முற்றத்தில் பூத்துத் தெறிக்கும் மத்தாப்புகளின் வர்ணஜாலம் விவரிக்க முடியாத அழகு. எங்க வீட்டு வாசல் சந்தை என்பதால் ஏகப்பட்ட காலி இடம் உண்டு. ஆளாளுக்கு அவங்க கையிருப்புகளைக் கரியாக்கிக் கொண்டிருப்போம். தூங்கப்போகும் முன்னாடி பத்திரமாக ஒளித்தும் வைத்துவிடுவோம்.


இரண்டாம் ஆட்டம் சினிமா விடும் சமயத்தில் அம்மா எழுந்து பலகாரங்கள் செய்ய ஆரம்பிப்பாங்க. எங்க வீட்டு ஆண்பிள்ளைகள் அடுக்களையில் வேலை செய்யும் ஒரே சமயம் தீபாவளிதான். மத்த நேரமெல்லாம் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்து வைக்காமல் அதிலேயே கைகழுவிச் செல்லும் வாழைப்பழ சோம்பேறிகள். அம்மா வடை பஜ்ஜி எல்லாம் போடும்போது வெந்து எடுப்பாங்க அல்லது வடையெல்லாம் தட்டி போடுவாங்க, வெங்காயம் வெட்டிக்கொடுப்பாங்க (வெட்டிப்பசங்கன்னு சொல்லலாம்) 


அப்பா மெளன சாட்சியாக இவங்களுக்கெல்லாம் துணையாக அடுக்களையில் பெஞ்சில் சாய்ந்திருப்பாங்க. கால்மேல் கால் போட்டுக்கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு அண்டை கொடுத்து வில்போல் சாய்ந்திருக்கும் கோலம்தான் எப்பவும் என் மனதில் அப்பாவின் நினைவாகத் தங்கியுள்ளது. அதிகாலையில் அப்பா உக்கார்ந்து விளக்கு முன்னாடி வைத்திருக்கும் அவ்வளவு துணிக்கும் மஞ்சள் தடவுவாங்க. கம்யூனிஸ்ட்டுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பும் அவ்வளவுதான். 


பசங்களில் யாராவது ஒருத்தர் முன்னாடி எழுந்துட்டா மத்தவங்களைக் கடுப்பேத்தன்னு அணுகுண்டு வெடியாகப் போடுவானுக. தடால் தடால்னு நாங்களெல்லாம் எந்திரிச்சு ஓடினாலும் சுடுதண்ணீர் வரிசைப்படிதான் கிடைக்கும். எண்ணெய்க் குளியல் முடிச்சு புதுத் துணி போட்டுகிட்டு ராக்கெட் பட்டாசு போடும்போது ஏவுகணையே அனுப்பிட்ட மாதிரி பெருமையாக இருக்கும். எத்தனை விதமான வெடிகளும் மத்தாப்புகளும் அப்போ இருந்திச்சு. ஸ்டாண்டர்ட் பட்டாசுதான் அந்தக்காலத்தில்  ரொம்ப பேமஸ். மயில் லோகோ ஒட்டின அட்டைகள் இன்னும் கண்ணில் நிற்கின்றது.


இருட்டு விலகுறதுக்குள்ளே புஸ்வாணம்தான் முதலில் பத்த வைக்கணும். அதைக் கொளுத்துறதுக்கு கம்பி மத்தாப்புதான் வசதியாக இருக்கும். சின்னது பெருசுன்னு கோபுரம் கோபுரமாக பொங்கிப் பிரவகிக்கும் புஸ்வாணம் தெருவையே ஒளிரச் செய்துவிடும். இன்னொரு பக்கம் தரைச்சக்கரம் கொளுத்தி விட்டுறுவோம். அது சுத்தும்போது அதைத் தாண்டிக் குதிக்கிறது பெரிய பீலாவாக இருக்கும். பெரிய சக்கரம் என்றால் சின்னப்பசங்க சைடு வாங்கிடுவாங்க. கம்பி மத்தாப்புலே பொறி மத்தாப்பு கலர் கலராக வரும்போது அதைச் சுற்றி விளையாடுவது பார்க்க அழகாக இருக்கும். 


குருவி வெடி, அணுகுண்டு வெடின்னு நிறைய வெடிகளெல்லாம் இருந்தாலும் எனக்குப் பிடிச்சது ஓலை வெடியும், பொட்டு வெடியும்தான். அது ரெண்டும்தான் கொஞ்சமா சத்தம் போடும், பயமில்லாமல் வெடிக்கலாம். பொட்டு வெடி துப்பாக்கியில் வைத்து வெடிக்கத்தான் உகந்தது அதுக்குப்பேர் ரோல் வெடி. துப்பாக்கியில் லோட் பண்ணிட்டா முடியிற வரை டப்பு டப்புன்னு சுடலாம். அதை வெச்சுத்தான் திருடன் போலீஸ் விளையாடுவோம். பொட்டு வெடி, தனித்தனியாக இருக்கும். அதை கல்லில் வைச்சு கல், இரும்புக்கம்பி, சின்ன சுத்தின்னு ஏதாச்சும் வைச்சு அடிச்சு வெடிக்கணும். சில சமயங்களில் தரையில் தேய்த்தும்  வெடிக்க வைப்போம். வித்தை சரியாகத் தெரியாமல் தரையில் தேய்த்தால் ஆள்காட்டி விரல் பொத்துடும்.


ஓலைவெடி எங்க ஊர் பக்கத்திலேதான் ரொம்ப பேமஸ். பனை ஓலையில் செஞ்சிருப்பாங்க. ஒரு பாக்கெட் வாங்கினாலே ரொம்ப நேரம் வெடிக்கலாம். அண்ணன் ,தம்பியெல்லாம் அநாயசமா கையிலேயே கொளுத்தி தூரமா வீசுவாங்க. அவ்வளவு பெரிய வீரனான தம்பி ஒருதரம் பட்டாசு போட்டு மாட்டிகிட்டான். நமுத்துப்போன பட்டாசு வெடிக்காது. அதனால் அதிலுள்ள கந்தகத்தைப் பிரிச்சு பேப்பரில் கொட்டி பத்த வைச்சா புதுவிதமான வாணம் கிடைக்கும். அப்படி பண்ணும்போது ஒருதரம் பேப்பரைக் கொளுத்திட்டு அவன் நகருவதற்குள் கந்தகம் வெடித்து முகமெல்லாம் தீப்புண் ஆகிவிட்டது. ஆனாலும் அசர மாட்டாங்க அந்த வீர தீரனுங்க. அணுகுண்டு வெடியை டப்பாக்குள்ளே வைச்சு விடுவானுங்க. ராக்கெட் வெடியை கண்ணாடிப் பாட்டிலில் நிக்க வைச்சு கொளுத்துவாங்க. கொஞ்சம் திசை மாறிப்போச்சுன்னா பக்கத்திலே உள்ள ஓலைக் கூரையில் புகுந்திடும்.


மத்தாப்புகளெல்லம் கொளுத்தி முடிச்சதும் ஓரமா மண்ணில் புதையிற மாதிரி போடணும்னு அப்பப்போ பெரியவங்க சொல்லிகிட்டே இருப்பாங்க. ஆனாலும் பட்டாசு கொளுத்துற ஜோரில் எல்லாம் மறந்து போயிடும் . கம்பி மத்தாப்பைக் கொளுத்தி முடிச்சுட்டு அப்படியே போட்டுற வேண்டியது. அப்புறம் அதுலேயே காலை வைச்சு புண்ணாகிக்க வேண்டியது. இதெல்லாம் அடிக்கடி நடக்குறதுதான். ரொம்ப சின்ன பசங்களுக்குன்னு பாம்பு வெடி, பாம்பு மாத்திரைன்னு வாங்கித் தருவாங்க. உக்காந்த இடத்திலிருந்தே கொளுத்தலாம். ஆனால் தரையெல்லாம் நாசமாகிடும். 


தீபாவளி பொங்கலெல்லாம் வந்தா வயசுலே சின்னவங்களுக்குப் பெரியவங்க திருநீறு பூசி பணம் கொடுப்பாங்க. கடைக்குட்டியாக இருக்கிறவங்களுக்கு ஏகப்பட்ட பெரியவங்க இருப்பாங்க. அந்தப் பணமெல்லாம் மறுபடியும் பட்டாசாக வந்துவிடும். காசைக் கரியாக்குவதுன்னா இதுதான். தீபாவளி பலகாரங்களை பிறமதத்து நண்பர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கூரியர்ஸ் நாங்கதான். வேதமுத்து சார் வீட்டுக்கு நிறைய தரம் நான்தான் கொண்டு போயிருக்கிறேன் . அந்த விட்ட குறை தொட்ட குறையாகத்தான் (ஜான் ரத்னராஜ்) வேதமுத்து (என் மாமனார்) அவர்கள் வீட்டு மருமகளாகிவிட்டேன்.


தீய பாவி ஒழிந்து தீபாவளியா

தீபம் ஏற்றும் தீபாவளியா

நரகாசுரனை வதம் செய்ததா

இருளரசனை விரட்ட வைத்ததா

எதனால் வந்த ஒளியோ

எல்லோருக்கும் பிடித்த ஒளி

அதனால் பெற்றது

பலகாரம் பட்டாசு புதுத்துணி.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அலை-27

 அலை-27

”ரயில் சிநேகிதம்” என்ற வார்த்தை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தை. எப்போதோ தற்செயலாக அறிமுகமாகும் நண்பரைப் பற்றிப்  இப்படி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ”ரயில்” என்ற வார்த்தையே மிக ரம்யமானது. அதிலும் ரயில்வே ஸ்டேஷன் உள்ள ஊர்களில் வாழ்ந்தவர்களுக்கு ரயில் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கும்.

புகைவண்டி எனத் தமிழில் எழுத ஆவல் இருந்தாலும் இளமைக்கால வழக்கு சொல்லாக இருந்த ரயிலும், ரயில்வே ஸ்டேஷனும் எண்ண அலைகளின் கட்டுமரங்கள்.


எங்க ஊர்லே ரெண்டு ஸ்டேஷன்கள்  உண்டு. ஆறுமுகநேரி ஸ்டேஷன் ஊருக்கு வெளியே தரங்கதாரா தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதுபோல் அமைந்துவிட்டது. அதனால் அதை உபயோகிப்பதும் குறைவாகவே இருந்தது.  காயல்பட்டினம் ஸ்டேஷன்தான் எங்களுக்கு சொந்தமானது போன்ற உரிமையுடன் உபயோகித்துக் கொள்வோம். எங்க வீட்டிலிருந்து ரெண்டு ஸ்டேஷனும் சமதூரம்தான். காயல்பட்டினம் ஊருக்கும் ஸ்டேஷனுக்கும் இடையே மூணுகிலோமீட்டர் இடைவெளி இருந்ததால் அது எங்க ஊர் ஸ்டேஷனாகவே ஆகிவிட்டது.


பள்ளிக்கூடம் போக தினமும் காயல்பட்டினம் ஸ்டேஷனைத் தாண்டித்தான் போக வேண்டும். அதே நேரத்தில் திருச்செந்தூர் – திருநெல்வேலி புகைவண்டி (கிழக்கே போகும் ரயில்) கடந்து செல்லும் நேரமாக இருந்தால் ரயில்வே கேட் மூடப்பட்டுவிடும். காலையோ மாலையோ ஏதோ ஒருதரம் கேட்டில் மாட்டிக் கொள்வோம். இரண்டுபுறமும் நிற்கும் வாகனங்களைக் கடந்து போவது சிரமமாகத்தான்  இருக்கும். ஆனாலும் பாதசாரிகள் வாகனத்தில் உள்ளோரை அற்பமாகப் பார்த்து பெருமையுடன் கடந்து செல்லும் நேரம் அது. எங்களைத் தாண்டி பந்தாவாக சைக்கிளில் வந்த ”பாய்ஸ்’ கூட்டமெல்லாம் கேட்டில் மாட்டிக்குவாங்க, நடந்து சென்றவர்கள் வின்னர்ஸ் ஆகிவிடுவோம். பெரிய கேட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சுழல் கதவில் சுற்றிக் கொண்டு செல்வதும் ஜாலியாக இருக்கும். 


ட்ரெயின் வர்றதுக்கு ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே கேட் போட்டுறுவாங்க. முந்தின ஸ்டேஷனில் ரயில் கிளம்பும்போதே இங்கே கேட் மூடிடும். ரயில் வரும் திசையை எட்டிப்பார்த்துட்டே தண்டவாளத்தைக் கடந்துவிடலாம், வேகம் இல்லாமல் மெதுவாக திருநெல்வேலி தேர் போல அசைந்துதான் வரும். குறுக்குப்பாதையில் வந்தாலும் கைகாட்டி கீழிறக்கப்பட்டிருப்பதை வைத்து ரயில் வரும் நேரங்கள் தெரிந்துவிடும். பதட்டப்படாமல் தண்டவாளத்தைக் கடந்துவிடலாம். கைகாட்டியை இறக்கி ஏற்ற பெரிய இரும்புப் பெட்டிமீது பெரிய லீவர் ஒன்று  இருக்கும். அதை முன்னும் பின்னும் நகர்த்தினால் கைகாட்டி ஏறும் அல்லது இறங்கும். 


சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களுக்கு ஏற்றவாறு நாலைந்துதரம் மட்டுமே ரயில் போக்குவரத்து இருக்கும். மாணவர்கள் அனைவரும் சீசன் டிக்கெட் வைத்திருப்பார்கள். மத்திய தரக்குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது அந்த ரயிலும் சீசன் டிக்கெட்டும். குடும்பத்துக்கு ஒரு பட்டதாரியாவது எங்கள் ஊரில் உண்டு. 

 திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி மிகப் பிரபலமாக இருந்ததால் நாசரேத் பாளையங்கோட்டை போன்ற தூரமான ஊர்களில் இருந்துகூட ரயிலில் சீசன் டிக்கட் எடுத்து படிக்க வருவாங்க. 


எங்க ஊர் கூட்டம்தான் அதில் ரொம்ப அதிகமாக இருக்கும். காலையில் அவங்களெல்லாம் கல்லூரிக்குப் போற அலம்பலைப் பார்த்தா  ராஜேந்தர் சினிமா பார்த்த  மாதிரிதான் இருக்கும். எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தாலும் படிக்கட்டில் தொங்கிகிட்டே தான் போவாங்க.  இளமை ஊஞ்சலாடும் வயது என்பதால் பெருசுகளும் அதை ரசிப்பாங்களே தவிர திட்டமாட்டாங்க. அதனால் படிக்கட்டில் ஆடிகிட்டே போவாங்க. அதுக்கும் ஒருநாள் பிரச்சினை வந்தது.


ஒருநாள் சாயங்காலம் பள்ளி முடிஞ்சு நாங்ளெல்லாம் கூட்டமா நடந்து வந்துகிட்டு இருந்தோம்.  ட்ரெயின் ரிவர்ஸில் அடைக்கலாபுரம் (முந்தின ஸ்டேஷன்) நோக்கி போய்கிட்டு இருந்தது. அதுவரை ரயில் ரிவர்ஸில் போனதா வரலாறே கிடையாது.  அதைப்பார்த்து கேலிபேசி சிரித்துக் கொண்டே கடந்து போய்விட்டோம். திருச்செந்தூரில் ஏதோ திருவிழா சமயம் என்பதால் கோவில் சம்பந்தமான ஏதோ ஒரு நிகழ்வு என நினைத்துக் கொண்டோம். ரெண்டுமூணு நாளா ரயிலில்  ஏகக்கூட்டமாகவும் இருந்துச்சு.


  வீட்டுக்குப் போனால் அங்கே ஒரே களேபரமாக இருந்தது. எல்லோரும் அழுகையோட பரபரப்பாக  எங்கேயோ போகக் கிளம்பகிட்டு இருக்காங்க. இடிபோல் ஒரு செய்தி, நயினார் அண்ணன் ஓடுற ட்ரெயினில் இருந்து கீழே விழுந்துட்டானாம். ஒரே ஷாக். கீழே விழுந்த அண்ணனைக் காப்பாற்றத்தான் ரயில் பின்னாடி போயிருந்தது தெரியாமல் கேலி பேசிக் கடந்து வந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு,அண்ணனுக்கு என்ன ஆச்சுதோ என்ற பயம்,சுற்றி நின்னு அழுதவங்களைப் பார்த்து அழுகை என்று பலதரப்பட்ட உணர்வுகளால் வாழ்க்கையே ஸ்தம்பித்து நின்றதுபோல் இருந்த அந்த நிமிடங்கள் கொடுமையானவை.


நடந்த நிகழ்ச்சியைப் பின்னாடி கேள்விப்பட்டபோது இன்னும் பயங்கரமாக இருந்தது. திருவிழாக் கூட்டம் மிதமிஞ்சி இருந்ததால் படிக்கட்டில் தொங்கி வருவதுகூட நெருக்கடியாக இருந்திருக்கிறது. பக்த கோடிகளும் படிக்கட்டைப் பங்கு போட்டுக் கொண்டதால் மாணவர்கள் எல்லாரும் ஜன்னல் கம்பிகளையும் பிடித்து தொங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஹீரோயிசமாகத் தோன்றும்  படிக்கட்டுப் பயணம் திருவிழா சமயங்களில் ஆபத்துகளுக்கு அடிகோலிவிடுவதும் உண்டு. 


சம்பவத்தன்றுஅண்ணனும் ஜன்னலில் தொங்கிக்கொண்டு தான் வந்திருக்கிறான். அசந்தர்ப்பமாக கைவழுக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறான். இரண்டு ஸ்டேஷன்களுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இருந்ததால் ரயிலின் வேகமும் அதிகமாகவே இருந்திருக்கிறது. உடனே அபாயச்சங்கிலியை இழுத்து ஏகப்பட்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு அண்ணனைக் காப்பாற்ற ரயில் ரிவர்ஸில் போய் இருக்கிறது . காலேஜ் பசங்களின் போராட்டத்துக்குப் பயந்து  திருச்செந்தூர் வரை சென்று அரசு மருத்துவமனையில் அண்ணனை அனுமதித்த பிறகுதான் ரயில் ரிலீஸ் ஆனது. நல்ல வேளையாக அண்ணணின் உயிருக்கு ஆபத்தில்லை . சின்னச் சின்ன எலும்பு முறிவுகளுடன் கொஞ்சநாள் ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வந்தான். 


எங்க ஊர்லே ரயிலில் ஏறுறதும் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. டவுண் ஸ்டேஷன்களின் பிளாட்பாரத்துக்கு ஏற்றவாறு படிக்கட்டின் உயரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எங்க ஊர்லேயெல்லாம் மண்தரைதான். அதனாலே குட்டிப் பிள்ளைகளுக்கு ஏறணும்னா ரொம்ப கஷ்டம்,படிக்கட்டு உயரத்தில் இருக்கும் யாராவது தூக்கிதான் விடணும். ரெண்டுமூணு வாண்டுகள் இருந்துட்டா லக்கேஜ் தூக்கி எரியுறமாதிரி வீட்டு ஆம்பிளைங்க தூக்கிப்போடுவாங்க. விட்டலாச்சர்யா படம் மாதிரி உருண்டு எழுந்து ஓடிப்போய் சீட் பிடிச்சுக்குவோம்.  பெரியவங்களெல்லாம் சீட்லே உக்காந்துக்குவாங்க, வாண்டுகளுக்கெல்லாம் லக்கேஜ் வைக்கிற இடத்திலேதான் இருக்கை. எங்க ஊருக்கு பாசஞ்சர் ரயில்மட்டும்தான் வரும். அதனால் படுக்கை வசதிகளெல்லாம் கிடையாது.


ரயில் போக்குவரத்தில்லாத  மற்ற நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன்தான் எங்க ஊர் இளவல்களின் பொழுதுபோக்கு அரங்கம்.சிமெண்ட்டால் ஆன சொரசொரப்பான பெஞ்ச்தான் அரங்கேற்ற மேடை.  படிப்பு, அரசியல் தொடங்கி சினிமா, பாடல்கள், விளையாட்டு,புத்தகங்கள், கடவுள், கம்யூனிசம் என்று அனைத்து விவாதங்களும் அரங்கேறிய அழகான மேடை அது. பெண்களுக்கு அதில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் இருந்ததில்லை என்றாலும் அதன் தாக்கங்கள் எங்களை வழி நடத்தியது. 

அதிலிருந்து முளைத்து வந்த அரசியல் ஆர்வலர்கள் நயினார், ஜென்ராம் என தனித்துவத்துடன் சோசியல் மீடியாவில் வலம் வருகிறார்கள். மா.முருகன்(நினைவில் வாழும்), இளையரவி அஸ்வதரன், வெங்கட் போன்றவர்கள் பத்திரிக்கை உலகில் பரபரப்பாக பேசப்படுபவர்களாக இருக்கிறார்கள். நானா, பாரதி போன்றோர் திரைக்குப் பின்னால் எண்ணற்ற விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


மற்றவர்களின் பார்வையில் அரட்டை அரங்கமாகத் தோன்றும் ஸ்டேஷன் பெஞ்ச் எண்ணற்ற மேதைகளை எங்கள் ஊரிலிருந்து ஏற்றுமதி செய்திருக்கிறது. இணையத்தில் "தமிழ்மணம்" பகுதியில் நண்பன் ராம்கியின் வலைப்பூ (blog) பெயரே "ஸ்டேஷன் பெஞ்ச்" தான். 


படுக்கை வசதி வந்தாலும்

பாஸஜ்சர் ரயில்போல் சுகமில்லை

குளிரூட்டப்பட்ட போதும்

கடற்காற்றின் குழுமையில்லை

இணையத்தில் கதைத்தாலும்

ஸ்டேஷன் பெஞ்ச்சுக்கு இணையில்லை.

அலை-26

 அலை-26

நினைவலைகளில் நிம்மதியாக நீந்த முடியாமல் செய்துவிட்டது எங்கள் வீட்டு எலி ராஜ்ஜியம்.உண்மையி லேயே அராஜகம்தான் நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை தெரியாமல் தும்பை விட்டு வாலைப்பிடிக்க ஓடும் வேலைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.


எங்கவீடு தெருவின் கடைசி என்பதாலும், தெருமுனையின் காலிமனை புல்புதர்கள் மண்டி கிடப்பதாலும் வீடு முழுக்க எல்லா ஜன்னலிலும் கொசுவலை அடிச்சு வைச்சிருக்கோம்.கொசுத்தொந்தரவு குறைவுதான். ஆனாலும் சமையல் கட்டு பக்கமும் முன் கதவும் அடிக்கடி திறந்து வைக்க வேண்டிய தேவைகள் இருப்பதால் எப்படியும்  ஒண்ணு ரெண்டு கொசு உள்ளே அத்துமீறிப் புகுந்துவிடும். மறுபடி வெளியே போக முடியாமல் உள்ளேயே சுத்திசுத்தி எல்லாரையும் நல்லா கடிச்சு வைச்சிடும். அதே வழியாக அசந்த நேரங்களில் எலியும் உள்ளே புகுந்துவிடும். 


இந்தத் தொந்தரவுகளெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று பின்கதவு, முன்கதவு எல்லாத்துக்கும் வலைக்கதவு பொருத்தினோம். மெயின் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு வலைக்கதவை மட்டும் திறந்து வைத்துக்கொண்டால் என்ன ஒரு சுகம். நல்ல காற்றோட்டம், வெளிச்சம் எல்லாம் வந்து வீடே பளீரென்று தெரிந்தது. சரியான நேரத்தில் கொரோனா ஊரடங்கும் வந்ததால் முழுநேரமும் ஹாலிலேயே அமரும் பழக்கமும் வந்துவிட்டது.ஹால்கதவு முழுநேரமும் திறந்து வைச்சுக்க வசதியாகவும் இருந்தது. தொலைக்காட்ட்சி பார்த்துக் கொண்டே சீட்டு விளையாடுவது கதை பேசுவது என்று நாட்கள் தொய்வின்றி ஓடியதற்கு வலைக்கதவுகளும் காரணம்.


 வீட்டுக்கு வருபவர்களிடம் வலைக்கதவு போடத்தோன்றிய அறிவைப் பற்றிப் பேசி பெருமை அடித்துக் கொள்வதும் வாடிக்கையானது.

எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வைச்சது ஆனமுகனின் சாரதி , அதாங்க பிள்ளையாரோட வாகனம் “எலி’’. நான் கூட மிக சமீபமாக நேரம் போகாத சமயத்தில் S.J.சூர்யாவோட மான்ஸ்டர் படம் வேறே பார்த்திருந்தேன். கதாநாயகனின் நிலைமையைப் பார்த்து ரொம்ப பரிதாபப்பட்டுக் கொண்டேன்,நாமும் அதேமாதிரி அல்லல் படப்போறோம்னு தெரியாமல்.


எனது மகன் டேனியல் படித்துக் கொண்டிருக்கும்போது, நடுராத்திரிகளில் சிற்றுண்டிகளைத் தேடி சமையலறைப் பக்கம் போனபோது எலிமாதிரி ஏதோ ஓடின மதிரி இருந்ததாகச் சொன்னான். அவனோட மனப்பிராந்தி என்று கேலிபண்ணி நம்ம வீட்டுக்குள்ளே எலி வரவே முடியாதுன்னு மறுபடியும் பெருமை பீற்றிக் கொண்டேன்.  

எங்க வீட்டு ஹாலில் பெரிய பியானோ இருக்கும். சில நாட்கள் கழித்து அதனுள்ளிருந்து இரவு வேளைகளில் கரகரப்பான சத்தம் வருவதாகவும் சொன்னான். அதையும் பொருட்படுத்தவே இல்லை. நம்ம பசங்களை நாம் எப்பவுமே குழந்தையாகத்தான் நினைக்கிறது. அவங்க சொல்றதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அப்படி இப்படி பேசியே ரெண்டுமாசம்போல ஓடிடுச்சு.


செப்டம்பர்மாதம் ஸ்ரீவை அக்கா பொண்ணுங்க ஒரு வைத்தியத்துக்காக ஈரோடு வந்திருந்தாங்க. ரெண்டுபேரும் ஹாலில் சினிமா பார்த்துட்டு அப்படியே படுத்திருக்கும் போது பியானோவிலிருந்து எதையோ கடிக்கும் சத்தம் வர்றதாகச் சொன்னாங்க. அதுக்குப்பிறகும் தள்ளிப்போட முடியாமல் பியானோவைத் திறந்து பார்த்தோம். டேனி, நான், ட்ரைவர், சீத்தா,சிவகாமி என  நாங்க அஞ்சுபேர். மூடியைத் திறந்தவுடனேயே குட்டி எலி ஒண்ணு லாங் ஜம்ப் பண்ணி பியானோ கீ-களுக்குள் ஓடிடுச்சு. அப்படி இப்படி தட்டிதட்டி சத்தம் எழுப்பியதில் குதிச்சு வெளியே வந்துடுச்சு. ஆனால் டமால்னு பியானோ அடியில் புகுந்துடுச்சு. எல்லாரும் சேர்ந்து பியானோவைப் புரட்டியதும் தாவிக்குதிச்சு சோஃபா பின்னாடி ஓடிருச்சு. என்னே ஒரு வில்லத்தனம்!


சோஃபாவை தட்டினாலும் வெளியே வரலை. அதனாலே சோஃபாவை முன்னாடி இழுத்தப்போதான் தெரிந்தது எங்களின் அறியாமையும், எலி அண்ணாச்சியின் புத்திசாலித்தனமும். சோஃபாவின் பின்னாடியிருந்த ஜன்னலின் வலையில் பெரிய ஓட்டை போட்டிருந்தது. காற்று வரட்டும் என்று ஜன்னலைத் திறந்து வைத்திருந்ததன் பலன். வசதியாக ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து நெட்லானில் வசதியாக ஒட்டை போட்டு வைத்துக்கொண்டு தினசரி விருந்தாளியாக வந்து போய்க் கொண்டிருந்திருக்கிறது. சரிதான் எலி ஜன்னல் வழியாக வெளியே ஓடிடுச்சு,காற்றும் வேண்டாம், களவாணிப்பசங்களோட சங்காத்தமும் வேண்டாமென்று ஜன்னல் கதவுகளையெல்லாம் இறுக்க மூடிட்டோம். அதற்குள் பியானோவில் நிறைய கீ-களை கடித்து பழுது பண்ணியிருந்தது.


ரெண்டுமூணுநாள் கழிச்சு ஹாலில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருவிதமான நாற்றம் வந்தது. எழில் வீட்டுக்குள்ளே வரும்போதே ஏதோ செத்துக்கிடக்கிற வாசனை வருதுன்னு சொல்லிகிட்டே வந்தாங்க. எல்லா இடமும் தேடினோம், எதுவும் இல்லை. ஆயா பிளீச்சிங் பவுடரெல்லாம் கரைச்சு வீடு துடைச்சாங்க ஆனாலும் நாற்றம் போகலை. மறுபடியும் பியானோவைத் திறந்து பார்த்தால் உள்ளே ஒரு எலி செத்துக் கிடந்தது. ஒருவழியா அதை எடுத்துப்போட்டு வீடெல்லாம் மறுபடி சுத்தம் செய்து, ஏக வேலையாயிடுச்சு.


கதவெல்லாம் மூடிட்ட பிறகும் எலி வருதுன்னா, ஒருவேளை இதன் தோழர்கள் எவரேனும் ஸ்டோர் ரூமில் ஒளிந்திருக்கலாம் என்று எலி பிஸ்கட் (ஒருவிதமான பாய்சன்) அங்கங்கே வைச்சி கதவையெல்லாம் நல்லா மூடி வைச்சிட்டோம். வித்தியாசமா  எதுவுமே நடக்கலை, ஆனால் எலி ஹாலில் மறுபடியும் நடக்குதுன்னு டேனி சொன்னான். இனிமேல் வேலைக்கு ஆகாதுன்னு எழில் Rat-glue ன்னு நாலைஞ்சு அட்டை வாங்கிட்டு வந்தாங்க. எலி அதைத்தாண்டிப்போகும்போது பச்சக்குன்னு அந்த அட்டையில் ஒட்டிக்கும், நகர முடியாது. 


சமையலறையிலும் ஹாலிலும் அங்கங்கே “எலி விளையாடும் இடங்கள்’’ பார்த்து அந்த அட்டைகளை வச்சிட்டோம். காலையில் எழுத்ததும் காபிகூட போடாமல் அட்டைகளைத்தான் ஓடிப்போய்ப் பார்த்தேன். சமையலறையில் எதுவும் இல்லை. ஹாலில் பார்த்தால் ஒரே அட்டையில் ரெண்டு சுண்டெலிங்க ஒட்டிக்கிடந்தன, கீச் மூச்-ன்னு கத்திகிட்டு. ட்ரைவருக்குக் கார் ஓட்ற வேலையைவிட அட்டையில் ஒட்டியிருக்கிற எலியை அப்புறப்படுத்துறதுதான் அன்னைக்கு பெரிய வேலை.


வடிவேலு பாணியில் ஒரு ஓரமா உக்காந்து சிந்திச்சுப் பார்த்தப்போ ஒரு விஷயம் தெளிவாச்சு. எல்லா கதவு ஜன்னலும் மூடியிருக்கு, சமையலறையிலும் எலியைக் காணோம். பிறகு எங்கேதான் இருக்கு அந்த அமுத சுரபி, அடுத்தடுத்து எலி சப்ளை பண்ணிகிட்டுன்னு யோசிச்சேன். ஹாலில்தான் எங்கேயோ இருக்குதுன்னு முடிவு பண்ணிட்டோம். சோஃபாவுக்கு அடியில்தான் ஒவ்வொருதரம் துறத்துறப்போவும் ஓடுச்சு. அதனால் எல்லா சோஃபாவையும் குப்புறக் கவிழ்த்துப் போட்டோம். அடிப்பாகத்தில் ரெண்டு பெரிய ஓட்டைகள் இருந்தது. அதுக்குள்ளே எங்கே போய் எப்படி ஒளிஞ்சிருக்கும்னு தெரியலை. அதனால் எப்படியும் வெளியே வந்துதானே ஆகணும்னு சோஃபா காலைச் சுத்தி நாலு அட்டையை வச்சிட்டோம்.


கிடத்தட்ட நாலைஞ்சு நாள் எந்த சலனமும் இல்லை. 

இனிமேல் எலித்தொல்லை இருக்காது. ஏற்கனவே மாட்டினதுதான் கடைசி போலிருக்கு, நிம்மதியா இருக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போ அட்டைகளோட இடம் மாறிக் கிடந்தது. ஆயாதான் பெறுக்கும்போது தள்ளிவிட்டுருச்சுன்னு அதைக் கடிந்து கொண்டேன்.ஆனால் தினமும் அட்டைகள்  இடம் மாறிகிட்டே இருந்துச்சு.அப்படீன்னா ஆசாமிங்க எங்கேயோ பதுங்கி இருக்காங்கன்னு புரிஞ்சிடுச்சு. ஆனால்  மாட்ட மாட்டேங்குது. பெரிய எஞ்சினீயர் லெவலுக்கு யோசனை பண்ணி வெவ்வேறு கோணங்களில் நாலு அட்டைகளை வைத்தேன். 


சக்சஸ், மறுநாள் காலையில் ரெண்டு சுண்டெலி ஒரே அட்டையில் ஒட்டிக்கிடந்தது.

எதுக்கும் கொஞ்ச நாளைக்கு தொடர்ச்சியாக அட்டைகளை வைச்சிடுவோம், சோஃபாவில் மிச்சம் ஏதும் இருந்தால் மாட்டிக்கும் என்று யோசித்தோம். ஆனால் பழைய அட்டைகளெல்லாம் அழுக்காக இருந்ததால் அதையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு புதுசு வாங்கிக்கலாம் என்று கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தோம். 


மறுபடியும் ஹாலில் உட்கார்ந்து க்ரிக்கெட் பார்க்கும்போது, எழில் திரும்பவும் எலி செத்த வாசம் வருதுன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. உங்களுக்கு நிச்சயமா கொரொனா இல்லை, வாசனை நரம்புகள் சூப்பர்னு கேலி பண்ணிட்டு அசால்ட்டாக இருந்துட்டேன். 

மறுநாள் காலையில் நாற்றம் அதிகமானதும், மறுபடி சோஃபா தலைகீழ் சர்க்கஸ் பண்ணுச்சு. அங்கேயும் எதுவும் இல்லை. எதேச்சையாகப் பார்த்தால் சின்ன சோஃபாவின் அடியில் அட்டையில் ஒட்டிய நிலையில் செத்த எலி., பெரிய சைஸ். இதுவும் ரெண்டுநாளைக்கு முன்பே ஒட்டியிருந்திருக்கணும். அட்டையை ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலை வரை தள்ளிக்கொண்டு வந்து சின்ன சோஃபா அடியில் மாட்டியிருக்கிறது. மறுபடியும் சுத்தம் செய்யும் படலம்.  இப்பவும் விட்டில் பல இடங்களில் அங்கங்கே அட்டைகள் பரப்பி வைக்கப்பட்டே இருக்கிறது.


கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்கு உலகமே நடுங்கிகொண்டு இருக்கும் போது, நாங்க மட்டும் வித விதமான சைஸில் எலி பிடிக்கும் எக்சர்சைஸ் பண்ணிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் சானிடைசர் இருக்குதோ இல்லையோ, எலி பிடிக்க அட்டைகள் உண்டு.

அலை-25

 அலை-25

சின்ன வயதில் ஆறுமுகநேரிக்குப் பிறகு பிடிச்ச ஊருன்னா ஸ்ரீவைகுண்டம்தான். லீவுக்கெல்லாம் அக்கா வீட்டுக்குத்தான் போவேன். நாட்கள் ஓடுவதே தெரியாமல் ஏகப்பட்ட விளையாட்டுகளும் பொழுது போக்குகளும் இருக்கும். என் வயசுத் தோழிகள் நிறைய பேர் இருப்பாங்க. அதனால் எப்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 


அந்தக்காலத்தில் வீடுகளுக்கு நல்ல தண்ணீர் வசதியெல்லாம் கிடையாது. தெருவில் அடிபம்ப்பில் உப்பு தண்ணீர்தான் வரும். தாமிரபரணி ஆற்றிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துதான் சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். ஆறு இருக்கும் ரெண்டு கிலோமீட்டருக்கு அப்பால், அங்கிருந்து குடத்தில் எடுத்து வரவேண்டும். ஆனால் அது அவ்ளோ ஜாலியான விஷயமாக இருக்கும்.தெருவிலுள்ள மொத்த பெண்பிள்ளைகளும் கோஷ்டி சேர்ந்து அரட்டையும் சிரிப்புமாக ஆத்துக்குப் போவோம். 


ஸ்ரீவை ஆற்றில்தான் நீச்சலே பழகினேன். காலியான பித்தளைக் குடத்தைத் குப்புறக் கவிழ்த்து இடதுகையால் பிடித்துக்கொண்டு வலது கையைத் துடுப்பு மாதிரி அடித்து நீச்சல் பழகணும். அநேகமா அந்த ஊர் பிள்ளைகள் எல்லாரும் அப்படித்தான் நீச்சல் பழகி இருப்பாங்க.முதல்லே பழகும்போது குடம் பல்டி அடித்து நம்மளையும் தண்ணீரில் மூழ்க வைச்சிடும். மூக்குக்குள்ளே எல்லாம் தண்ணி போய் சளி பிடிச்சாலும் மறுபடி மறுபடி முயற்சி பண்ணி எப்படியோ கத்துக்குவோம். முதலில் கரையோரம் தவளை நீச்சல் பண்ணினாலும் நாள் செல்லச் செல்ல நீச்சல் கைவந்த கலை ஆகிவிடும். அதுக்குப் பிறகு ஓடுற தண்ணியிலே எதிர் நீச்சலெல்லாம் சர்வ சாதாரணம் ஆயிடும். 


குடத்தில் தண்ணீர் பிடிப்பதுதான் செம காமெடியாக இருக்கும். அதே ஆற்றில் துணி துவைத்து, சோப்புப் போட்டு குளித்துவிட்டு கொஞ்சம் ஆழத்தில் போய் தண்ணீர் பிடித்தால் அது நல்ல தண்ணீராம். அதைக் கொதிக்க வைத்துக்கூட குடித்ததாக நினைவில்லை. ஆனால் ஒருநாள்கூட வயிற்றுப்போக்கோ வேறு எந்த வியாதியோ வரவில்லை. மருத்துவக் கல்லூரி போனபிறகுதான் எவ்வளவு சுகாதாரமற்ற தண்ணீர் குடித்திருக்கிறோம் என்பதே புரிந்தது.


ஆற்றுக்குப் போகும்போது இருந்த குதூகலம் திரும்பும் போது இருக்காது. உடம்பில் ஈரத்துணி, இடுப்பில் வெயிட்டான குடம், தோளில் துவைத்த துணிகள் என்று இம்சையாகத்தான் இருக்கும். ஆனாலும் மறுநாள் காலையில் அத்தனை பேரும் கச்சிதமாக வந்திடுவாங்க. ஊர்ப் புரணி முழுவதும் அந்த அரைமணி நேரத்தில் அரங்கேறிடும்.


 மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங்கறை கோவில் படிக்கட்டெல்லாம் முங்கிடும். அப்போ நீச்சலும் கிடையாது, அரட்டையும் கிடையாது. அக்கா கூடவே போயிட்டு அவள்கூடவே வந்திடணும். ஆனால் ரெண்டு கரைதட்டி போற தண்ணீரை வேடிக்கை பார்ப்பது சுகானுபவம். தண்ணீர் ரொம்ப அதிகமாகப் போனால் அருகில் செல்லும் வாய்க்காலில்தான் குளிக்கணும். ஆழம் அதிகமாகவும் இழுப்பு ஜாஸ்தியாகவும் இருப்பதால் கொஞ்சம் பயமாக இருக்கும்.


ஆற்றங்கரை மட்டும் அழகல்ல, அக்கா வீடு இருக்கும் தெருவே அழகுதான். எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும். வயசுக்கு வந்த பெண்பிள்ளைகள் வெளிவாசலுக்கு வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே எல்லா பொழுதுபோக்குகளும் உண்டு.அதிலும் தாயக்கட்டம் விளையாடுவதுதான் முழுநேர பொழுது போக்காக இருக்கும்.


 சமையல் முடித்துவிட்டு சிறுசு பெருசு எல்லாம் ஒரே வீட்டில் கூடிடுவாங்க. ஒரே காம்பவுண்டுக்குள் நாலைஞ்சு வீடுங்கஇருக்கும். நாலுபேர் விளையாடுவதை எட்டு பேர் விளையாண்டால்தான் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். தாயம், வெட்டு, குத்துன்னு ஏகக் களேபரமாக மதிய சாப்பட்டு நேரத்தைத் தாண்டி கூட விளையாட்டு தொடரும், மறுபடி சாப்பிட்டுவிட்டும் தொடரும். தாயக்கட்டையை உருட்டுவதைவிட காய்களை நகர்த்துவதில்தான் திறமையே இருக்கும். வெட்டுப்படாமல் “சொர்க்கம்” போவதுதான் குறிக்கோள்.


ரொம்ப பெரிய கூட்டமாகிவிட்டால் அமெச்சூர் ஆட்டக்காரர்களுக்கு பல்லாங்குழி ஆட்டம் ரெடியாக இருக்கும். இன்னொரு பக்கத்தில் சீட்டுக்கட்டில் “கழுதை” விளையாட்டு தொடங்கியிருக்கும். ”ஆறுகல்” ஆட்டம்னு கற்களைப் பரப்பி மேலே தூக்கிப்போட்டு கீழே உள்ள கற்களை அள்ளும் விளையாட்டும் நடக்கும். எதுவாயிருந்தா என்ன, லீவு முடியிற வரைக்கும் நேரம் பற்றாமல் விளையாட்டுகள் நடந்துகொண்டே இருக்கும். 


 ஒவ்வொரு தெருவிலுள்ள கோவிலுக்கும் சாயங்கால வேளைகளில் போவதும் உண்டு.  நவதிருப்பதிகளில் ஒன்று ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில். அங்கும் ஏகப்பட்ட திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரைத் திருவிழாதான் ரொம்ப விசேஷமாக நடக்கும். கோடை விடுமுறையில் வரும் பெரிய பண்டிகையும் அதுதான்.


 அதிலேயும் ரொம்ப பிடிச்சது தேர்த் திருவிழாதான். அன்னைக்குத்தான் சாமி பல்லக்குக்கு முன்னாடி நிறைய தேங்காய் உடைப்பாங்க. தேங்காய் வீணாகாமல் இருக்க ,அக்கா தேங்காய்ப்பாலில் சீடை செய்வாள். மொறுமொறுப்பாய் தேங்காய்ப்பால் மணத்துடன் சீடையை வாயில் போட்டதும் உடனே கரைந்து அவ்வளவு ருசியாக இருக்கும். நானும் சமீபத்தில் சீடை செய்து பார்த்தேன்,உடைப்பதற்குக் கல் தேவைப்பட்டது.

சித்திரை வருஷப் பிறப்பன்று செய்யும் வேப்பம்பூ ரசமும் பிரத்தியேகமாய் அங்குதான் சாப்பிட்டிருக்கேன். 


விசேஷ காலங்களில் கோவிலில் கதாகாலட்சேபம், பாட்டுக் கச்சேரி எல்லாம் நடக்கும். ஒரு நிகழ்ச்சியைக் கூடத் தவற விடுவதே இல்லை. பாட்டுக்கச்சேரிக்குக் கூட்டிட்டுப் போக பசங்க துணைக்கு வேணும் என்பதால் என் தம்பி ரொம்ப பிகு பண்ணிக்குவான். அப்போதானே அவன் பவரைக் காட்ட முடியும்.

பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பும் ரொம்பப் பிரபலம்தான். கார்த்திகை மாதம் அரைப்பரிட்சை லீவில் வரும். பெரிய கதவு முன்னாடி எல்லாரும் காத்திருப்பாங்க. குறிப்பிட்ட பூஜை முடிந்ததும் கதவு திறந்ததும் கும்பலா உள்ளே பாய்ஞ்சிடுவாங்க. பயங்கர தள்ளுமுள்ளாக இருக்கும். அதனால் அந்தப் பக்கமே நான் போகமாட்டேன்.


ஊரின் நடுவில் ஒரு பழங்காலக் கோட்டை உண்டு ,மண்ணினால் ஆன கோட்டைச்சுவர் சுற்றி இருக்கும். அதற்குள் நிறையக் குடும்பங்களும் உண்டு. அவர்கள் பரம்பரையாக வசித்துவரும் கோட்டைப் பிள்ளைமார்கள் எனவும், அந்த வீட்டுப் பெண்கள் வெளியே வரமாட்டார்கள் என்றும் அக்கா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருதரம் கூட உள்ளே போய்ப் பார்க்க முடிந்ததில்லை. மண்சுவரிலான கோட்டைச் சுவரும் அதை அடுத்த சிவன்கோவிலும், கோவிலின் எதிரில் இருக்கும் மொட்டைத் தேரடியும் எங்களுக்கு விளையாடவும் பொழுதுபோக்கவும் ஏற்றதான விளையாட்டு மைதானங்கள். 


ஐந்து விளக்குகள் பொருத்தப்பட்ட(அஞ்சிலாம்பு) மைதானத்தின் நடுவிலிருந்து ஒருமணி நேரத்துக்கு ஒருதரம் சங்கு ஊதப்படும். அதைப் பொறுத்து கோவிலின் பூஜை நேரங்களைக் கணக்கிடுவார்கள்போலும். அந்த மைதானத்தில் அடிக்கடி கட்சிக் கூட்டங்களும் நடக்கும். அத்தானோட பெட்டிக்கடை வாசலில் இருந்து வேடிக்கை பார்க்கலாம். சின்னத்தான் சைக்கிள் கடை வைச்சிருந்தாங்க. வாடகை சைக்கிளும் வைச்சிருப்பாங்க. அதை எடுத்துட்டு தெருவெல்லாம் சுத்திக்கிறதுதான், நமக்குத்தான் வாடகை கொடுக்க வேண்டாமே. ஆம்பிளைப் பசங்ககூட சைக்கிள் பந்தயமெல்லாம் நடக்கும்.


நவதிருப்பதியோட ரெண்டுமூணு கோவில்கள் ஸ்ரீவைகுண்டத்தைச் சுத்தியேதான் இருக்குது. ஏதோ ஒரு பண்டிகையின்போது அந்த கோவிலுக்கெல்லாம் நடத்தியே கூட்டிட்டுப் போவாங்க. அதிலும் இரட்டைத் திருப்பதிங்கிறது கொஞ்சம் தொலைவு அதிகமாக இருக்கும். அன்னைக்கு சோறுகூட கிடைக்காது. இட்லி விரதமாம், மூணுவேளையும் இட்லிதான். அதிலும் சட்னி சாம்பாரெல்லாம் கெட்டுப் போயிடும்னு இட்லிப் பொடிதான் கிடைக்கும். வறவறன்னு அதைச் சாப்பிடறதும் கஷ்டமாக இருக்கும். பாதயாத்திரையும் போய் வற இட்லியும் சாப்பிடுவிட்டு பொழுது சாயும்போதுதான் வீட்டுக்கு வந்து சேருவோம். ரெண்டு நாளைக்குக் கால் ரத்தம்கட்டி நடக்கிறதே சிரமமாகிவிடும். ஆனாலும் அத்தான் சொன்னால் தட்டவே முடியாது. (அற்ப ஆயுளில் எங்களைவிட்டு பிரிந்துவிட்ட எங்களின் அன்பான அத்தான்.)


அக்காவுக்கு அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்ததால், விடுமுறைக்குச் செல்லும்போதெல்லாம் குழந்தை வளர்ப்பு இலவசப் பாடமாகக் கிடைக்கும். அப்படி ஆலமரம்போல் எங்களை அரவணைத்த குடும்பம் அத்தான் இறந்தபிறகு ஸ்ரீவைகுண்டத்தையே காலிசெய்து ஆறுமுகநேரியில் ஐக்கியமாகிவிட்டாலும் எனது எண்ண அலைகளில் ஸ்ரீவை ஒரு அழகுப்பெட்டகம்.


வருஷங்கள் மறைந்தாலும்

மனச்சிறையில் மங்காமலிருக்கும்

ஆறும் ஊரும்.