Wednesday, August 31, 2005

பாண்டவர்களைத் தண்டியுங்கள்

தேன்துளியில் தோழிக்கு எழுதப்பட்ட கடிதம் மனதை மிகவும்
வருத்திவிட்டது. பெண்களைச் செயலிழக்கச் செய்யவும் அவர்கள்
முன்னேற முயலும்போது காலைப் பிடித்திழுப்பதாகவுமே நிறைய
பாலியல் வன்முறைகள் அரங்கேறுகின்றன. அது வரம்புமீறி உயிர்களை காவுவாங்கும் அளவு போவது எதனால்?

சிறுவயதிலிருந்தே பெண்மையைப் போற்றுவதாக மாய்மாலம் காட்டி கட்டுப்பாடு என்ற தங்க கூண்டில் சிறையிட்டு விடுகிறோம். அதிலிருந்து விரும்பி வெளிவந்தால் வேலி தாண்டிய வெள்ளாடாக சித்தரிக்கப்படுவோம் அல்லது சமுதாய ஒழுக்கத்தையே கெடுத்த கோடாரிக் காம்பாக்கப்படுவோம்.

பாலியல் வன்மைகளை ஒரு ரோட்டோர விபத்தாக நினைத்து
புகார் பதிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கும் இயல்பு நிலைமை பெண்களுக்கு வரவேண்டும். அந்த நிலைமை வரும்போதுதான் கற்பு பற்றிய அனாவசிய சீண்டுதல், மனவிகாரங்கள் தவிர்க்கப்பட்டு இத்தகைய இழப்புகள் குறையும்.
கண்ணகியும் சீதையும் மேற்கோள்களாக காட்டப்ப்படுவதைத் தவிர்த்து காட்சிப்பொருட்கள் ஆக்கப்படவேண்டும். பாஞ்சாலியைப்
பாவியாக்கிய பாண்டவர்கள்தான் தண்டிக்கப்பட வேண்டும்.

Tuesday, August 30, 2005

மங்கையராய்ப் பிறப்பதற்கே...

பிறந்த பொழுதிலேயே
பிறர்க்கெனவே நேர்ந்துவிடப்பட்டவள்.
பருவங்கள் மாறும்போது
பணிசெய்யும் இல்லங்கள்தான் மாறும்.

இளமையில் தாய் வீடு
இடையினில் புகுந்தவீடு
முதுமையில் மகன் வீடு
முடியாதபோது முதியோர் வீடு(விடுதி)

பாசம் தரும் பெற்றவர்கள்
இதயம் நுழைந்து பார்ப்பதில்லை
சொந்தம் கொள்ளும் துணைவர்கள்
சுதந்திரத்தைத் தருவதில்லை.

சிறகில்லாப் பறவைகளாய்
சிரிக்க மறந்த பதுமைகளாய்
மழலை தரும் மேன்மையராய்
மகிழ்ச்சி தரும் மனைவியராய்

கானல் நீரான வாழ்வில்
கற்பூரமாகிப் போனவர்கள்
............பெண்கள்...............

Monday, August 29, 2005

மலரும் மங்கையும் ஒரு ஜாதி

முகர்ந்து மட்டும் பார்த்துவிட்டு
முத்தமிடாமல் சென்றுவிட்ட
முட்டாள் வண்டிற்காக-ஒரு
முல்லைமலர் வாடாமல் காத்திருக்கிறது!

காத்திருப்பது மலருக்குத் தவம்
காக்கவைப்பது வண்டின் குணம்
மலர் உதிர்ந்து சருகாகும் முன்
முட்டாள் வண்டு முத்தமிடுமா???

என் மகள் இனியவள்
இனி........அவள்.........!

மயக்கும் பார்வையினால்
மனதைக் கொள்ளை கொண்டாயடி
உதட்டுச் சுழிப்பினிலே
உள்ளம் உருக வைத்தாயடி!

வெள்ளைச் சிரிப்பினிலே
வெஞ்சினம் விலகச் செய்வாயடி
கிள்ளை மொழியினிலே
தேகம் சிலிர்க்க வைப்பாயடி!

தூங்க முயலும் வேளையில்
தூங்கவிடாது
பாஷையற்ற உன் கொஞ்சல்கள்.

சாப்பிட அமரும் வேளையில்
சாப்பிடவிடாது
சங்கீதமான உன் சிணுங்கல்கள்!

பிஞ்சுக் காலால் உதைத்து
பஞ்சுக் கையால் அடித்து
பொக்கை வாயால் கடித்து
சின்ன இதழ்களால் முத்தமிட்டு....

அத்தனை இன்பங்களையும்
ஐந்து வயதுக்குள் கொட்டிவிட்டு
கொட்டமடிக்க பள்ளி சென்றாய்
பட்ட மரம்போல் தவிக்க விட்டு!!

Saturday, August 27, 2005

கருவறையிலிருந்து....

கதகதப்பான அரவணைப்பு
கண்மூடி எந்தன் லயிப்பு
சின்னச்சின்ன குலுக்கல்கள்
சிணுங்கி உருளுது என் உடல்

ஓயாது ஒலிக்கும் பின்னணிபோல்
ஒடிவந்து என்னுள் பதிக்கும்
நாபிக் கொடிமூலம்
நான் உணரும் உன் இதயத்துடிப்பு.

சுகம் தந்தாய் பேணிக்காத்து
சொர்க்கமும் தந்தாய் அடைகாத்து!

அம்மா.............

என்ன பாட்டு பாட….....

எழுதத் துவங்கிவிட்டேன்
என்ன எழுதுவதென்ற சிந்தனையற்று.
எழுத்தாளர்கள் பாடு எத்தனை கஷ்டமென்று
எழுத அமர்ந்த வேளையில்தான் புரிகிறது!

காதல் பற்றி எழுதலாமா?
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
என்றொரு
கேலிச்சிரிப்பு பின்னால் கேட்கிறது!

அரசியல் பற்றி அலசலாமா?
ஆழ்ந்த அறிவில்லை அதில் எனக்கு.
அறைகுறையாக
அலசிஆராய்ந்து அவதிப்பட வேண்டாமே!

சினிமா பற்றி எழுதினால் என்ன?
அரைத்தமாவையே மறுபடியும் அரைத்து
ஏற்கனவே
சலித்துபோன பேனாமுனைகள் அதிகம்!

மருத்துவம் சார்ந்த மருந்தடிக்கலாமோ?
கணிணிமூலம் கரைகண்ட அறிஞர்களன்றி
உடல்நொந்த
நோயாளிகள் படிக்கப் போவதில்லையே!

ஒருவழியாக.....முடிவு செய்துவிட்டேன்!!!

குழந்தைகள் பற்றிக் கதைக்கலாம்
குழலையும் யாழையும் புறம் தள்ளி
மழலை மலர்களைக்
கொண்டாடலாம் அவர்கள் வளரும்வரை

(நானும் வளரும்வரை- எழுத்துக்களில்)!!!

Friday, August 26, 2005

அறிமுகம்
தென்கிழக்குச் சீமையின் சிற்றூரில் பிறந்து
பொருநை பாயும் திருநெல்வேலியில் மருத்துவம் பயின்று

எட்டில் மூணாவதாய்ப் பட்டணம் சேர்ந்து
பணிக்காலங்களில் பல ஊர்களிலும் புரண்டு

புதிய பந்தம் தந்த நிர்ப்பந்தம் மூலம்
வடமேற்கு கொங்கு தேசத்தில் தளம் அமைத்து

காவிரியின் மடியில் கவிதை பாட வந்தேன்
காது கொடுப்பவர்களுக்கு மட்டும்!!!