`
காதல் என்பது எது வரை’எல்லாராலும் எப்போவுமே கேட்கப்படும் கேள்விதான். ஒவ்வொருத்தரும் அவங்களோட நிகழ்கால வாழ்க்கையைப் பொறுத்து வித விதமா அர்த்தம் சொல்லிக்குவாங்க. என்னைப் பொறுத்தவரை காதல்ங்கிறது சாகிற வரை கூட வரப் போவது.
காதல்ங்கிறது ஆண்-பெண் காதல் மட்டுமில்லைங்கிறது என்னோட அபிப்பிராயம். அந்தக் காதலுமே அடிக்கடி அவஸ்தைக்குள்ளானாலும், அடித்தளமாயிருக்கிற அன்பு மாறப் போறதில்லை. என்னோட பதிவுகளை வாசித்த என் தம்பி, இளமைக்காலம் பற்றி எழுதிட்டே, கல்லூரி வாழ்க்கை பற்றியும் எழுதிட்டே, உன் இல்லற வாழ்க்கை பத்தி எழுதினால் என்னன்னு மெயில் அனுப்பியிருந்தான்.
எல்லோரின் இல்லற வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். வாழ்க்கையின் நிகழ்ச்சிகளும் அன்றாட போராட்டங்களும் கொஞ்சம் வேறு வேறாகத் தெரிந்தாலும், அடிப்படை அநுபவங்கள் ஒன்றாகத்தானே இருக்க முடியும். அதனால் பொதுவாகவே இல்லற வாழ்க்கை பற்றி எழுதலாம்னு நினைத்தேன்.
கல்யாணம் என்பது காதலித்தோ, உறவுகளால் சேர்த்து வைக்கப்பட்டோ உருவானாலும், வாழ்க்கைக்கு
க.மு.;
க.பி.(கல்யாணத்துக்கு முன், பின்) என்று இரண்டு பாகங்கள்தான். காதல் வயப்பட்டு,காத்திருந்து , போராடி மணம் செய்து கொள்வதினாலேயே வாழ்க்கை சொர்க்கமாக இருந்து விடப் போவதில்லை. குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் புதிதாய் அறிந்து வாழ்வதாலும் அந்த வாழ்க்கை நரகமாகவும் ஆகிவிடப் போவதில்லை. வாழ்க்கை அதன் நிச்சயித்த போக்குபடிதான் நடக்கும்
காதலிக்கும் காலங்களில் நல்ல பக்கங்களை மட்டுமே பரிமாறிக் கொள்வதாலும், பிரச்னை ஏற்படுமோ என்று தோன்றும் விஷயங்களைப் பற்றி பேசாமலே இருந்துவிடுவதாலும் அதன் தாக்கம் க.பி. வாழ்க்கையில் இடறத்தான் செய்யும். அதைக் குற்றமாகப் பார்த்து பிரச்னையாக்கும்போதுதான் நிறைய காதல் மணங்கள் தோற்றுவிடுகின்றன.
நமது சமூகத்தில் திருமணம் என்பது இரண்டுபேருக்கு இடையில் நடப்பது அல்ல, இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடப்பது. இரண்டு மனமும் ஒன்றிப் போய் சந்தோஷமாக வாழ்ந்தாலும் அதைக் குலைக்கவென்றே ஏகப்பட்ட விஷமங்கள் குடும்பம் என்ற போர்வையில் வரும். நன்கு படித்து, முற்போக்கான எண்ணம் கொண்ட வீடுகளில் கூட வீட்டுக்கு வரும் மருமகளின்மேல் ஒரு அந்நியத்தனம் வருவது ஏனோ தெரிவதில்லை. மனிதர்கள் நல்லவர்கள், ஆனால் சமூகம் கொடுமையானது.
ஆணாதிக்கம் மிகுந்த நம் சமூகத்தில், கணவன் என்ற குடும்பத்தலைவனின் மன முதிர்வு, பொறுத்தாட்கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றைப் பொறுத்தே பிரச்னைகள் கொம்பு சீவப் படுகின்றன. ஆனால் அந்த நேரத்தில் மட்டும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, பெண்களின் சண்டையாலும், விட்டுக் கொடுக்காத தன்மையாலுமே பிரச்னைகள் ஏற்படுவதாக் மாய்மாலம் காட்டி ஒதுங்கிக் கொள்வர். தம்மால் முடியாத காரியம் என்று ஆணாதிக்கப் போர்வையை விலக்கிக் கொள்ளும் சமயமும் இதுவாகத்தான் இருக்கும்!
எனக்கு மிக நெருங்கிய குடும்பத்தின் கதையில், காதல் மணம்தான், குடும்பத்தாரின் தலையீடு கூட அவ்வளவு தூரம் கிடையாது. ஆனால் அந்தப் பெண்ணின் மனம் திரிந்து போன காரணத்தால் தினமும் சண்டையும், குழப்பமும். ஆனால் அந்தக் கணவர் அவளது பிரச்னையின் வேர்கள் எங்கு என்று புரிந்து கொண்டு, பொறுமையாக குடும்பத்தை வழி நடத்துகிறார். ஆணின் பங்களிப்பு குடும்பத்தை நேர் பாதையில் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.அவளுக்கு சரிக்கு சமமாக அவரும் பொங்க ஆரம்பித்தால் , அங்கு குடித்தனம் நடக்காது! இங்கு ஆணாதிக்கம் அன்பை வலுக்கட்டாயமாக திணிக்கிறது.
மற்றுமொரு நண்பர் வீட்டில் தனக்காக குடும்பம் ,உறவுகள் முதலியவற்றைத் துறந்து வந்திருக்கும் பெண்ணிடம் காட்ட வேண்டிய சாதாரண புரிதலைக் கூட காட்டாததால், மனம் வெதும்பி நிற்கும் மனைவியைப் பார்க்கிறேன். மனைவியின் பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் அங்கே நிலைமைய நேர் செய்துகொள்கிறது.
இது போன்ற பிரச்னைகள் கல்யாணம் ஆன புதிதில் அநேகமாக வருவதில்லை, எல்லா வகையிலும் செட்டில் ஆகிவிட்டதாக நினைக்கும் மத்திய வயதில்தான் வருகிறது.
திருமணம் ஆன புதிதில், வாழ்க்கை காட்டும் புதுமைகளும், உடல்ரீதியான ஈர்ப்பும் , சின்னச் சின்ன வேற்றுமைகளைப் பெரிதாக்குவதில்லை. கொஞ்ச நாள் போனபிறகு, இனக்கவர்ச்சி மறைந்து ஒரு சலிப்பு ஏற்படும் வயதில், குழந்தைகள் என்ற பாலம், அவர்களை இணைக்கும் கருவியாகிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற அடுத்தடுத்த பொறுப்புகள், இருவருக்குமிடையில் உள்ள பேதங்களைப் பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு வழியாக பொறுப்புகளை முடித்து நிம்மதியாக உட்காரும்போதுதான், இணைப் பறவைகளுக்கிடையே உள்ள இடைவெளியே தெரிய ஆரம்பிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த உடல் மாற்றங்கள் பெரிய அளவில் மன அழுத்தத்தைக் கொடுக்கும் நேரம்;ஆண்களுக்கு அதுவரை ஓடி ஓடி உழைத்ததால் ஏற்படும் சலிப்புடன் கூடிய அலுப்பு. இருவருமே தாங்கள்தான் கவனிக்கப் பட வேண்டிய நிலையில் இருக்கிறோம், எதிராளி கவனிக்கவில்லை என்ற குறையுடன் வாழ்க்கை ஓடும் போது, ஏகப்பட்ட மன முறிவுகள்.
சமீப காலங்களில் விவாகரத்து கோரும் தம்பதியரின் வயது அறுபதுகளைச் சுற்றியே இருப்பதாக, வக்கீல் தோழி ஒருவர் சொன்னார்.அவர்களின் கதையைக் கேட்டால், இளமைக் காலத்தில் உருகி உருகி காதலித்த்வர்களாய் இருப்பார்கள். எங்கே போனது அந்தக் காதல்? இன்னும் மனதின் அடியில்தான் புதைக்கப்பட்டுதான் உள்ளது, ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் புரிந்து கொள்ள அவகாசமே எடுத்துக் கொள்ளாததினால் வந்த மனமுறிவு.
இயந்திரகதியான வாழ்க்கையில், தம்பதியர் தனித்து செலவிடும் நேரங்களே குறுகி விட்டன. சதாகாலமும் குடும்பத்தின் நிகழ்வுகள் பற்றியே பேசி , சிந்தித்து, தங்களைப் பற்றிய உணர்வே இல்லாமல் போய்விட்டவர்கள். செக்ஸ் என்பது கூட ஒரு உடல் தேவை என்ற அளவில்தான் ஏற்றுக் கொள்ளப் படுகிறதே ஒழிய, இரு மனங்களின் சங்கமத்திற்கான அடையாளமாகக் கொள்ளப் படுவதில்லை.
சமீபத்தில் ஸ்டேட்ஸில் இருந்து வந்திருந்த என் உறவினர் ஒரு அழகான விஷயம் சொன்னார். அங்கேயும் வாரத்தின் 5 நாட்கள் மிக இயந்திரத்தனமான வாழ்க்கைதானே. அங்கே டேட்டிங் என்ற விஷயத்தின் சித்தாந்தமே வேறாம். தம்பதியர்தான் கண்டிப்பாக டேட்டிங் போகணுமாம். குழந்தைகளை நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ பொறுப்பேற்றுக் கொளளச் செய்துவிட்டு கண்டிப்பாக டேட்டிங் போக வேண்டுமாம், அப்போதுதான் தம்பதியரின் அன்பு சாஸ்வதமாக இருக்கும் என்று புரிந்து செய்கின்றார்கள்.
நம் ஊரில் `அது போல் ‘ டேட்டிங் ( நமது மனதில் டேட்டிங்க்கு ஒரு அர்த்தம் வைத்திருக்கிறோமே, அதுவல்ல) சமாச்சாரம் கண்டிப்பாக வர வேண்டும். மன உளைச்சல்களுடன் அலைமோதும் நிறைய தம்பதியர் அதனால் பயனடைவார்கள். அப்படி ஒரு சூழல் வந்த பிறகுதான் காதல் என்பது எதுவரைன்னு அறுதியிட்டுச் சொல்ல முடியும்.( ஆலப்புழா படகு வீடுகள் ஐடியல் லொகேஷன்!!)