Saturday, February 25, 2006

நால்வர் அணியால் நானும் சங்கிலியில்

`சங்கிலித் தொடர்’ன்னு ஏதோ இருக்குதேன்னு ஜோ பதிவிலிருந்து பின்னோக்கி போய்ப் பார்க்கும்போது, திடீர்னு இளா பதிவில் என்னையும் `சங்கிலி’யிட்டிருப்பது தெரிந்தது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் `நதி மூலம்’ பார்க்கலாம்னு துருவினாலும் அதுக்கு மேல் போக முடியலை. அதுக்குள் தருமி வேறு உன் பாடு- எப்படியோ தொடர்ந்து கொள் என்று சாபமிட்டிருந்தார்(சும்மா கேலிதான்);சிங். ஜெயக்குமார் இந்த அக்காவை அன்புடன் அழைத்திருந்தார்;சமீபத்தில் பாரதியின் நாலு நல்ல வார்த்தையாகிப் போனேன் -இனியும் சங்கிலியைப் பின்னாமல் விட்டால், அதை உடைத்த பாவியாகிவிடுவேனோ என்ற அவசரத்தில் இந்தப் பதிவு!!

மேற்கொண்ட நான்கு வேலைகள்:
சென்னை, ராமாராவ் பாலி க்ளினிக்கில் தகுதி பெற்ற மருத்துவராய் முதல் பணி ஆரம்பம்
அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சொந்த க்ளினிக் வைத்து சுதந்திரமாகத் திரிந்த அடுத்த கட்டம்.
அரசுப் பணியில் ஊர் ஊராகச் சுற்றியது படு கஷ்டம்.
ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கியிருப்பது இன்றைய கால கட்டம்.

மிகவும் பிடித்த 4 படங்கள்:
1. தம்பிக்கு எந்த ஊரு
2. மெளனராகம்
3. சிந்து பைரவி
4. கோகுலத்தில் சீதை
(நாற்பது படங்களுக்கு மேல் இருக்கும் லிஸ்ட்டில், முன்னுரிமை தரப்பட்டவை)

வசித்த நான்கு இடங்கள்:
1. ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம்-பிறந்த ஊர்
2. ஹைகிரவுண்ட்,திருநெல்வேலி-படித்த ஊர்(கல்லூரி)
3. நுங்கம்பாக்கம், சென்னை-திருமணத்துக்கு முன்
4. ஈரோடு - திருமணத்துக்குப் பின்.
(நாடோடியாய்த் திரிந்தவர்களிடம் நாலு ஊர் மட்டும் சொல்லச் சொல்வது கொடுமை. ரொம்ப கஷ்டப்பட்டு தேர்வு செய்த லிஸ்ட்)

பிடித்த 4 டிவி நிகழ்ச்சிகள்:
1. K Tvயில் இரவு 8 மணி சினிமா,பிடித்த படம் வரும்போது.
2. நேரம் குறிப்பிடமுடியாத இடைவேளைகளில் சன் ந்யூஸ்
3. சேனல் பாகுபாடில்லாமல் பாடல் வரும் அலைவரிசை
4. ??????
(ரொம்ப கஷ்டமான கேள்வி)

சுற்றுலா சென்ற நாலு இடங்கள்:
1 .டார்ஜிலிங் & காங்டாக்
2.டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர்
3. அவுரங்காபாத்- அஜந்தா , எல்லோரா
4. ஹைதராபாத்
(மிக சமீபமாகச் சென்ற இடங்கள்)

பிடித்த 4 உணவுகள்:
புளிக்குழம்பு, தேங்காய்த் துவையல்
அவியல், இடி சாம்பார்(சாம்பார் பொடி உரலில் இடிப்பார்கள்)
கூட்டாஞ்சோறு, கூழ் வத்தல்
இட்லி, லைன் சட்னி( கொஞ்சூண்டு தேங்காயில் பாத்திரம் நிறைய எங்க அம்மா வைக்கும் சட்னி)
(இது எல்லாமே எனக்கு விடுமுறையில்தான் கிடைக்கும், அப்போதானே ஊரிலிருந்து அக்கா மதினி எல்லாரும் வருவாங்க, செய்து தருவாங்க!!)

நான் இருந்திருக்க வேண்டிய நாலு இடங்கள்:

1. அரும்பாக்கம் க்ளினிக் தொடர்ந்திருந்தால் சென்னை வாசி
2. அரசுப் பணி நீடித்திருந்தால் எந்த ஊரோ?
3. DGO படிக்கப் போகாமலிருந்தால் தூத்துக்குடி
4. கிடைத்த MD படித்திருந்தால் கோயம்புத்தூர்

தினமும் உலா வரும் 4 இடங்கள்:
1. தமிழ்மணம்
2. ஜி மெயில்
3. யாஹூ
4. ஹாட் மெயில்

பிடித்த 4 பாடல்கள்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வா வெண்ணிலா உன்னைத்தானே
நிலாவே வா வா(மெளன ராகம்)
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல்

நன்றி சொல்ல வேண்டிய நால்வர்
இளா
தருமி
ஜெயக்குமார்
பாரதி

இந்த சங்கிலித் தொடர் எதனால் ஆரம்பித்தார்களோ, ஆனால் எழுத வேண்டுமென்ற கடமை உணர்வைத் தூண்டிவிடுகிறது.

என் அன்புச் சங்கிலியின் பிடியில் வரவேண்டிய நால்வர்

சிரில் அலெக்ஸ்

சித்தன்

ஸ்டேஷன்பென்ச் ராம்கி

செல்வராஜ்



Saturday, February 11, 2006

வாரிசு உருவாகிறது

வாரிசுகளை உருவாக்குவது அரசியலிலும், சினிமாவிலும் சர்வ சாதாரணம். அதைத் தமிழ்மணத்தில் உருவாக்கும் முதல் ஆள் நானாக இருப்பேனோ என்ற புளகாங்கிதத்தில் ஏற்பட்டது இந்தப் பதிவு.
சற்று ஓய்வாக இருந்த நேரத்தில் மகளிடம்(பதினொன்றாம் வகுப்பு மாணவி) என் பதிவுகளைக் காண்பித்து பேசிக்கொண்டிருந்த போது மெதுவாகத் தானும் சில கவிதைகள் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னாள். ஏற்கனவே எங்கள் get2gether மலருக்கு சில ஆங்கில கவிதைகள் எழுதித் தந்திருந்தாள். தமிழ் கவிதைகளுக்கு ஒரு நோட் போட்டு அப்பப்போ தோணும்போது எழுதியதாகச் சொல்லி சின்ன தொகுப்பு கொடுத்தாள். நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது. ஆங்கில மோகமும் புழக்கமும் அதிகமாக உள்ள சூழலில் தமிழில் கவிதை எழுத விழைந்த என் அன்பு மகளின் தமிழ் ஆர்வத்தைச் சிறப்பிக்கும் விதமாக இந்தப் பதிவு.
அவளுக்கெனவே ஒரு ப்ளாக் தனியாக தொடங்கப்போவதாக அவளிடம் சொல்லியுள்ளேன்(தேர்வு முடிந்த பின்பு) அதன் முன்னோட்டமான இதற்கு உங்களின் ஆதரவைப் பொறுத்து அவள் தமிழ்ப் பயணம் தொடரும்.இனி வருவது அவள் கவிதைகள்!!!!!!

ஏழைப் பெண்

தலைகுனிந்து
நாணத்துடன் நடந்தால் .....வெகுளி
பாரதிகண்ட பெண்ணாக
நேர்ப்பார்வையுடன் நடந்தால்....ஆணவம்

குடும்பத்தைக் காப்பாற்ற
செல்கிறாள் வேலைக்கு;
அவளைக் காப்பாற்ற
யாருண்டு நாளைக்கு!

கனவுகளைச் சுமந்து
மேடை ஏறுகிறாள்..........விவாகம்
வரதட்சணையால் கனவுகள் இழந்து
நீதிமன்றம் செல்கிறாள்.......விவாகரத்து!

இவை சமுதாயத்தின் கொடுமை
இதுவே பெண் அடிமை
துவண்டுவிடாதே பெண்ணே இதைக் கண்டு
உயர்ந்துகாட்டு உன்மேல் நம்பிக்கை கொண்டு!

காளானுக்கே கொடுப்பாய் பூச்செண்டு
ஆளப்பிறந்தவள் பெண்ணென்று!


ஆசை;ஆசை

இமயமலையின் மீது ஏறி நிற்க ஆசை
நிலவின் மீது கூடைப்பந்தாட ஆசை
ஆப்ரிக்க காட்டிற்குள் நுழைய ஆசை
சிங்கத்தின்மீது சவாரி செல்ல ஆசை
வரிக்குதிரையின் வரிகளை எண்ண ஆசை
பாலைவனத்தில் நீச்சல்குளம் கட்ட ஆசை
பூவிற்குள் வண்டாய் நுழைந்து
தேனைத் திருட ஆசை
என் ஆசிரியர்களுக்கும் ஒருநாள்
பாடம் நடத்திட ஆசை
இந்தியத் திருநாட்டின்
இணையற்ற ஜனாதிபதியாக ஆசை
இத்தனை ஆசைகளும் நிறைவேற
இன்பமுடன் நூறாண்டு வாழ ஆசை!!


கல்பனா சாவ்லா

கனவு கண்டாய் அன்று
வானம் எல்லையில்லை என்று
உலக மரபுகளைக் கொன்று
விண்வெளியை வென்று
சாதித்துக் காட்டினாய் நன்று!

கற்பனை மட்டும் போதாது
அது வெற்றியென்று ஆகாது
நல்குரவு என்று பாராது
நன்கு உழைப்பதே தக்கது
இதை உணர்த்தினாய் இப்போது!

விண்கலத்தில் சென்றாய்
எங்களை விட்டுப் பிரிந்தாய்
விண்மீன்களுடன் கலந்தாய்
ஆனாலும்
எங்கள் மனதில் நீங்காது நின்றாய்!!


தோழன்

எனக்கு உன்னை
சிறுவயதிலிருந்தே தெரியும்!
ஆனால்
பார்வையால் மட்டுமே
நமக்குப் பேசத் தெரியும்!
உன் பார்வையால்தான்
நான் உயிர் வாழ்கிறேன்!
இதனால்
ஞாயிறுகூட விடுமுறை எடுக்காமல்
என்னைப் பார்க்கவரும் சூரியனே!
இரவில் மட்டும்
என்னை விட்டு
விலகுவது ஏன்?

மலரே
மலரே! மலரே!
இயற்கையின் குழந்தையே
சிரித்தாய் மலர்ந்தாய்
உலகை அழகாக்கினாய்.

கண்ணதாசன் பாடலைப் போல் அழகு
வானவில்லைப் போல் வண்ணம்
குழந்தையின் பாதத்தைப் போல் மென்மை
இவையே உன் தன்மை!

இப்படி, உன் அழகில்
டைட்டானிக் கப்பல் போல்
மூழ்கியிருக்கும் ரசிகையின் கூந்தலில்
வந்தமர உனக்கு விருப்பமா?

எண்ணங்களும் ஆக்கமும் அவளது தனிச் சொத்து, தட்டச்சு செய்தது மட்டுமே என் பங்கு.

Sunday, February 05, 2006

தற்காலிக விடைபெறல்


எனக்கு முன் எழுதிய `நட்சத்திரங்கள்’ எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தனித் தன்மையுடன் எழுதிச் சென்றார்கள். எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்தாலும் யாரோ எழுதியிருப்பது போன்ற மாயைதான் தெரிகிறது. ஆனாலும் கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வது, மதியின் விருந்தோம்பலை அவமதிப்பது போலாகிவிடும் என்பதால் என் சிறு பிள்ளைத்தனமான பதிவுகளை உங்கள்முன் சமர்ப்பித்தேன்.. வாதத்துக்குரிய விஷயங்களை அலசி வலைப்பூகளில் செம்பூக்கள் பூக்க விடாமல், மணம் வீசும் வாரமாகவே இருக்கும் பொருட்டு, நிகழ்வுகளையும் நினைவுகளையும் பற்றி மட்டுமே பேசினேன்.
அதற்கு முக்கிய காரணம், கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு சூடான விவாதத்தின் நடுவில் ஒரு பெண் வலைப்பதிவர் சார்பற்ற முறையில் சின்ன கருத்து சொன்னபோது, அவரையெல்லாம் அந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதுபோன்ற பதிலை வாசித்தேன். பெண்களுக்கு ஆழ்ந்து சிந்தித்து விவாதம் செய்யும் அறிவு இருக்கப்போவதில்லை என்ற தொனியில் பதில் சொல்லப்பட்டதாக எனக்குப் பட்டது. அதிகமாக விவாதத்தில் கலந்து கொள்ளாததால் ஒரு விஷயம் குறித்த திறனாய்வு பெண்களுக்கு இருக்காது என்று கருத்து கொள்ளப்பட்டது போலும். நிறைய விவாதங்களின் இடையே ஒரு பார்வையாளினியாக பலமுறை எட்டிப் பார்த்துள்ளேன்.
இந்த ஆண்களின் விவாதமும் அவ்வளவுதான்! எத்தனையோ விஷயங்களில் பிடித்த முயலுக்கு மூணு கால் பாணியில்தான் எல்லா விவாதங்களுமே உள்ளது. தாம் சொன்ன அர்த்தம்தான் சரியென்ற போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான், ஆனால் நியாயமே எதிர்புறம் இருந்தாலும் விதண்டா வாதத்துக்காக நாட்கணக்கில் இழுத்துச் செல்லப்பட்ட பதிவுகளையும் பார்த்தேன். Man is subjected to changes at all ages என்று எங்கேயோ வாசித்த நினைவு. மனிதனே மாறும்போது மனிதனால் கைக்கொள்ளப்படும் கருத்துக்கள் மாறலாகாதா? மாறக்கூடாது என்ற பிடிவாதத்துடனே சிலர் இருப்பதும் தெரிகிறது. சமூகம் பலதரப்பட்ட மனிதர்களின் கலவை, ஆனால் இணையம் படித்தவர்களின் பாசறை. சராசரி மனிதர்களின் பார்வையைவிட நம் பார்வை சற்றே தரம் உயர்ந்து இருக்கவேண்டுமென்பதே என் கருத்து.
என்ன, கருத்து கந்தசாமி மாதிரி உபதேசம் செய்யிறேனா? நிச்சயமா இல்லை. ஒரு புத்தகம் வாசிப்பதை விட, பத்திரிகையை அலசுவதை விட, டிவி பார்ப்பதைவிட வலைத்தளங்களில் பறந்து பறந்து படிப்பது, புது சுவையாக இருக்கிறது. இடையில் கடிபடும் சின்ன கற்கள் சில சமயங்களில் கசப்பு சுவை கூட்டிவிடுகிறதே என்ற ஆதங்கம்தான். அதனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? (சாப்பாடு என்றவுடன் துளசி நினைவு வந்துவிட்டது. என் வாரத்தில் லீவ் வாங்கிட்டு போயிட்டதால் அவங்ககூட `கா’ விட்டுட்டேன்னு சொல்லீடுங்க புள்ளைங்களா!)
முதல் ரெண்டுமூணு பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என்னால் இயன்றவரை பதில் எழுதிக் கொண்டிருந்தேன். ப்ளாக்கருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, பின்னூட்டங்களை யெல்லாம் ஒதுக்கி விட்டது. `கமெண்ட் மாட்ரேஷனுக்குள் சென்றால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மன்னிக்காவும்’ னு சளைக்காமல் கடுப்பேத்திகிட்டே இருந்தது. அதனால் சின்ன சோர்வு வந்துவிட்டதால் அடுத்த பதிவு எழுதவே மனசில்லாமல் உட்கார்ந்திருந்து, தினமும் கடைசி நிமிடங்களில்தான் போஸ்ட் பண்ணினேன்.
பரவாயில்லை, பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட, நண்பர்களின் ரசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற கவலைதான். இந்த குழப்பத்திலேயே, மற்றவர்களின் பதிவை வாசித்தாலும் பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது. தினமும் வீட்டுக்கு இரவு 12 மணிவாக்கில் போவதால், கணவரும் குழந்தைகளும்வேறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். `நான் இந்த வார நட்சத்திரமாக்கும், அதனால் கொஞ்சம் வேலை’ ன்னு சொன்னாலும், அந்த நட்சத்திரம் கான்செப்ட் என்னன்னு புரிஞ்சுக்காததால் கொஞ்சம் எரிச்சலுடன் அலைந்தார்கள். ஒருவழியா இன்னைக்கு பிள்ளைகளுக்கு `பீசா’வும், ஆத்துக்காரருக்கு அவிச்ச கடலையும் பரிமாறி ஐஸ் வைச்சாச்சு!
இந்த ஒரு வாரமும் என் அறுவையைத் தாங்கிக் கொண்ட தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்த மதி, காசி அவ்ர்களுக்கும் நன்றி. எதுவுமே எழுதி வைச்சுக்கலைங்கிறதாலே கொஞ்சம் டென்ஷன்தான். ஏதாவது வேலையில் மாட்டிகிட்டு சொதப்பிடக் கூடாதேன்னு! ஒருவழியா நேர்முகத் தேர்வு முடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு.
மத்தவங்க மாதிரி நட்சத்திர வாரம் முடிஞ்சதும் காணாமப் போயிடுவேன்னு நினைக்காதீங்க! இனிமேல்தானே நம்ம அறுவை முழுவீச்சில் ஆரம்பிக்கப் போகுது!
அடுத்து வரப்போற நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு அறிவுரை
*முதல் பதிவு போட்டவுடனேயே போய், சொக்கார் சொந்தக்காரர், நண்பர் , நண்பரல்லாதோர் எல்லாப் பதிவிலும் போய் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் குடுத்திடுங்க!
*ரெண்டு நண்பர்களை stand-by ஆக ரெடி பண்ணி வைச்சுக்கோங்க, அடிக்கடி மாடரேஷனை பப்ளிஷ் பண்ண வசதியா இருக்கும்.
*பின்னூட்ட நாயகர்களையும், நாயகிகளையும் கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க.
*என்னோட பதிவையும் அப்பப்போ எட்டிப் பார்த்துக்கோங்க!!!!




ஆதலினால் காதல் செய்வீர்

`காதல் என்பது எது வரை’
எல்லாராலும் எப்போவுமே கேட்கப்படும் கேள்விதான். ஒவ்வொருத்தரும் அவங்களோட நிகழ்கால வாழ்க்கையைப் பொறுத்து வித விதமா அர்த்தம் சொல்லிக்குவாங்க. என்னைப் பொறுத்தவரை காதல்ங்கிறது சாகிற வரை கூட வரப் போவது.

காதல்ங்கிறது ஆண்-பெண் காதல் மட்டுமில்லைங்கிறது என்னோட அபிப்பிராயம். அந்தக் காதலுமே அடிக்கடி அவஸ்தைக்குள்ளானாலும், அடித்தளமாயிருக்கிற அன்பு மாறப் போறதில்லை. என்னோட பதிவுகளை வாசித்த என் தம்பி, இளமைக்காலம் பற்றி எழுதிட்டே, கல்லூரி வாழ்க்கை பற்றியும் எழுதிட்டே, உன் இல்லற வாழ்க்கை பத்தி எழுதினால் என்னன்னு மெயில் அனுப்பியிருந்தான்.

எல்லோரின் இல்லற வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். வாழ்க்கையின் நிகழ்ச்சிகளும் அன்றாட போராட்டங்களும் கொஞ்சம் வேறு வேறாகத் தெரிந்தாலும், அடிப்படை அநுபவங்கள் ஒன்றாகத்தானே இருக்க முடியும். அதனால் பொதுவாகவே இல்லற வாழ்க்கை பற்றி எழுதலாம்னு நினைத்தேன்.

கல்யாணம் என்பது காதலித்தோ, உறவுகளால் சேர்த்து வைக்கப்பட்டோ உருவானாலும், வாழ்க்கைக்கு க.மு.; க.பி.(கல்யாணத்துக்கு முன், பின்) என்று இரண்டு பாகங்கள்தான். காதல் வயப்பட்டு,காத்திருந்து , போராடி மணம் செய்து கொள்வதினாலேயே வாழ்க்கை சொர்க்கமாக இருந்து விடப் போவதில்லை. குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் புதிதாய் அறிந்து வாழ்வதாலும் அந்த வாழ்க்கை நரகமாகவும் ஆகிவிடப் போவதில்லை. வாழ்க்கை அதன் நிச்சயித்த போக்குபடிதான் நடக்கும்

காதலிக்கும் காலங்களில் நல்ல பக்கங்களை மட்டுமே பரிமாறிக் கொள்வதாலும், பிரச்னை ஏற்படுமோ என்று தோன்றும் விஷயங்களைப் பற்றி பேசாமலே இருந்துவிடுவதாலும் அதன் தாக்கம் க.பி. வாழ்க்கையில் இடறத்தான் செய்யும். அதைக் குற்றமாகப் பார்த்து பிரச்னையாக்கும்போதுதான் நிறைய காதல் மணங்கள் தோற்றுவிடுகின்றன.

நமது சமூகத்தில் திருமணம் என்பது இரண்டுபேருக்கு இடையில் நடப்பது அல்ல, இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடப்பது. இரண்டு மனமும் ஒன்றிப் போய் சந்தோஷமாக வாழ்ந்தாலும் அதைக் குலைக்கவென்றே ஏகப்பட்ட விஷமங்கள் குடும்பம் என்ற போர்வையில் வரும். நன்கு படித்து, முற்போக்கான எண்ணம் கொண்ட வீடுகளில் கூட வீட்டுக்கு வரும் மருமகளின்மேல் ஒரு அந்நியத்தனம் வருவது ஏனோ தெரிவதில்லை. மனிதர்கள் நல்லவர்கள், ஆனால் சமூகம் கொடுமையானது.

ஆணாதிக்கம் மிகுந்த நம் சமூகத்தில், கணவன் என்ற குடும்பத்தலைவனின் மன முதிர்வு, பொறுத்தாட்கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் போன்றவற்றைப் பொறுத்தே பிரச்னைகள் கொம்பு சீவப் படுகின்றன. ஆனால் அந்த நேரத்தில் மட்டும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, பெண்களின் சண்டையாலும், விட்டுக் கொடுக்காத தன்மையாலுமே பிரச்னைகள் ஏற்படுவதாக் மாய்மாலம் காட்டி ஒதுங்கிக் கொள்வர். தம்மால் முடியாத காரியம் என்று ஆணாதிக்கப் போர்வையை விலக்கிக் கொள்ளும் சமயமும் இதுவாகத்தான் இருக்கும்!
எனக்கு மிக நெருங்கிய குடும்பத்தின் கதையில், காதல் மணம்தான், குடும்பத்தாரின் தலையீடு கூட அவ்வளவு தூரம் கிடையாது. ஆனால் அந்தப் பெண்ணின் மனம் திரிந்து போன காரணத்தால் தினமும் சண்டையும், குழப்பமும். ஆனால் அந்தக் கணவர் அவளது பிரச்னையின் வேர்கள் எங்கு என்று புரிந்து கொண்டு, பொறுமையாக குடும்பத்தை வழி நடத்துகிறார். ஆணின் பங்களிப்பு குடும்பத்தை நேர் பாதையில் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.அவளுக்கு சரிக்கு சமமாக அவரும் பொங்க ஆரம்பித்தால் , அங்கு குடித்தனம் நடக்காது! இங்கு ஆணாதிக்கம் அன்பை வலுக்கட்டாயமாக திணிக்கிறது.

மற்றுமொரு நண்பர் வீட்டில் தனக்காக குடும்பம் ,உறவுகள் முதலியவற்றைத் துறந்து வந்திருக்கும் பெண்ணிடம் காட்ட வேண்டிய சாதாரண புரிதலைக் கூட காட்டாததால், மனம் வெதும்பி நிற்கும் மனைவியைப் பார்க்கிறேன். மனைவியின் பொறுமையும், விட்டுக் கொடுத்தலும் அங்கே நிலைமைய நேர் செய்துகொள்கிறது.

இது போன்ற பிரச்னைகள் கல்யாணம் ஆன புதிதில் அநேகமாக வருவதில்லை, எல்லா வகையிலும் செட்டில் ஆகிவிட்டதாக நினைக்கும் மத்திய வயதில்தான் வருகிறது.

திருமணம் ஆன புதிதில், வாழ்க்கை காட்டும் புதுமைகளும், உடல்ரீதியான ஈர்ப்பும் , சின்னச் சின்ன வேற்றுமைகளைப் பெரிதாக்குவதில்லை. கொஞ்ச நாள் போனபிறகு, இனக்கவர்ச்சி மறைந்து ஒரு சலிப்பு ஏற்படும் வயதில், குழந்தைகள் என்ற பாலம், அவர்களை இணைக்கும் கருவியாகிறது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற அடுத்தடுத்த பொறுப்புகள், இருவருக்குமிடையில் உள்ள பேதங்களைப் பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு வழியாக பொறுப்புகளை முடித்து நிம்மதியாக உட்காரும்போதுதான், இணைப் பறவைகளுக்கிடையே உள்ள இடைவெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த உடல் மாற்றங்கள் பெரிய அளவில் மன அழுத்தத்தைக் கொடுக்கும் நேரம்;ஆண்களுக்கு அதுவரை ஓடி ஓடி உழைத்ததால் ஏற்படும் சலிப்புடன் கூடிய அலுப்பு. இருவருமே தாங்கள்தான் கவனிக்கப் பட வேண்டிய நிலையில் இருக்கிறோம், எதிராளி கவனிக்கவில்லை என்ற குறையுடன் வாழ்க்கை ஓடும் போது, ஏகப்பட்ட மன முறிவுகள்.
சமீப காலங்களில் விவாகரத்து கோரும் தம்பதியரின் வயது அறுபதுகளைச் சுற்றியே இருப்பதாக, வக்கீல் தோழி ஒருவர் சொன்னார்.அவர்களின் கதையைக் கேட்டால், இளமைக் காலத்தில் உருகி உருகி காதலித்த்வர்களாய் இருப்பார்கள். எங்கே போனது அந்தக் காதல்? இன்னும் மனதின் அடியில்தான் புதைக்கப்பட்டுதான் உள்ளது, ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் புரிந்து கொள்ள அவகாசமே எடுத்துக் கொள்ளாததினால் வந்த மனமுறிவு.

இயந்திரகதியான வாழ்க்கையில், தம்பதியர் தனித்து செலவிடும் நேரங்களே குறுகி விட்டன. சதாகாலமும் குடும்பத்தின் நிகழ்வுகள் பற்றியே பேசி , சிந்தித்து, தங்களைப் பற்றிய உணர்வே இல்லாமல் போய்விட்டவர்கள். செக்ஸ் என்பது கூட ஒரு உடல் தேவை என்ற அளவில்தான் ஏற்றுக் கொள்ளப் படுகிறதே ஒழிய, இரு மனங்களின் சங்கமத்திற்கான அடையாளமாகக் கொள்ளப் படுவதில்லை.

சமீபத்தில் ஸ்டேட்ஸில் இருந்து வந்திருந்த என் உறவினர் ஒரு அழகான விஷயம் சொன்னார். அங்கேயும் வாரத்தின் 5 நாட்கள் மிக இயந்திரத்தனமான வாழ்க்கைதானே. அங்கே டேட்டிங் என்ற விஷயத்தின் சித்தாந்தமே வேறாம். தம்பதியர்தான் கண்டிப்பாக டேட்டிங் போகணுமாம். குழந்தைகளை நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ பொறுப்பேற்றுக் கொளளச் செய்துவிட்டு கண்டிப்பாக டேட்டிங் போக வேண்டுமாம், அப்போதுதான் தம்பதியரின் அன்பு சாஸ்வதமாக இருக்கும் என்று புரிந்து செய்கின்றார்கள்.

நம் ஊரில் `அது போல் ‘ டேட்டிங் ( நமது மனதில் டேட்டிங்க்கு ஒரு அர்த்தம் வைத்திருக்கிறோமே, அதுவல்ல) சமாச்சாரம் கண்டிப்பாக வர வேண்டும். மன உளைச்சல்களுடன் அலைமோதும் நிறைய தம்பதியர் அதனால் பயனடைவார்கள். அப்படி ஒரு சூழல் வந்த பிறகுதான் காதல் என்பது எதுவரைன்னு அறுதியிட்டுச் சொல்ல முடியும்.( ஆலப்புழா படகு வீடுகள் ஐடியல் லொகேஷன்!!)

கடற்கரைக் கவிதைகள்

`திருநெல்வேலிக்காரங்க தேர் பார்க்க மாட்டாங்க, திருச்செந்தூர்க்காரங்க கடல்லே குளிக்க மாட்டாங்க’ என்பது எங்க ஊர்ப்பக்க வட்டார மொழி. ஆனால் திருச்செந்தூர் பக்கத்து ஊர்காரங்களுக்கு கடல் குளியல்னா உசுரு. திருச்செந்தூர் பத்தி நிறையப் பேர் அழகழகா எழுதியிருக்காங்க. நான் அதைச் சுத்தி உள்ள கடற்கரைகள் பத்தி மட்டும்தான் சொல்லப் போறேன்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக் கிழக்கு கடற்கரையில் எத்தனையோ புகழ் பெற்ற கடற்கரைகள் இருந்தாலும், செந்தூரின் அழகே அழகு. கோவில் வாசலிலிருந்து பார்த்தால் மணப்பாடு வரை தெரியும்,பின்னாடி திரும்பிப் பார்த்தல் காயல்பட்டிணம் வரை தெரியும்.

மற்ற கடற்கரைகளைக் காட்டிலும் தென்கோடி வரவர தேசிய ஒருமைப்பாடு தெரியிற மாதிரி அமைந்திருக்கும். திருச்செந்தூர் இந்துக்களின் புனிதக் கடவுளின் தலமாக இருக்கிறது. அதனை ஒட்டிய வீரபாண்டியன்பட்டினம் முழுவதுமாக கிறிஸ்தவர்களைக் கொண்டது. அதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் திருச்செந்தூருக்கு இணையான பிரசித்தி பெற்றது. முருகன் கோயில் கோபுரம் எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ அதே போன்று நெடிதுயர்ந்த தேவாலயக் கோபுரங்களும் மிக அழகு. அதை அடுத்த காயல்பட்டிணம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஊர். அங்குள்ள மசூதியும் மிக்க சிறப்பு வாய்ந்ததே!
இந்த மூணு ஊர்களைப் பற்றி அப்புறம் எழுதறேன்

இந்த மூன்று ஊரின் பிள்ளைகளும் படிக்கும் பொது கல்லூரி ஆதிதனார் கல்லூரி. சுற்றி உள்ள ஊர்களின் பாடசாலைகளிலும் அநேகமாக மூன்று மத ஆசிரியர்களும் நல்லிணக்கத்துடன் இன்று வரை பணியாற்றி வருகிறார்கள். நாட்டின் பல மூலைகளிலும் ஏற்படும் மதக் கலவரங்கள் இங்குள்ளவர்களை அந்நியப் படுத்தியதில்லை. அந்த வகையில் நான் பிறந்த மண் புண்ணியம் செய்ததே!
ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது தென்தமிழகத்தைப் பார்வையிட வந்த போது இந்த மூன்று மதத் தலங்களிலும் பிரியமுடன் வழிபட்டதாகக் கேள்வி.
தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையை குமரி வரை நீட்டிக்கும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு இணைக்கும் போது இன்னும் அழகிய கடற்கரைகள் வெளி உலகுக்குத் தெரியும்.
செந்தூரில் இருந்து குமரி நோக்கி செல்லும் போது அடுத்து வருவது மணப்பாடு கடற்கரை. சமீபத்தில் வந்த `இயற்கை’ படம் பார்த்தவர்களுக்கு அந்த கடற்கரைதான் மணப்பாடு என்று தெரியும். ரொம்ப அழகான ஆரவாரம் இல்லாத கடல். நிலப்பரப்பு கொஞ்ச தூரம் உள்ளே சென்று சின்ன தீபகற்பத்தை உருவாக்கியிருப்பதால் ஊரின் பக்கம் உள்ள கடல் அமைதியாக இருக்கும் .செந்தூரின் சீற்றம் மிக்க கடலில் குளிக்க பயப்படுபவர்கள் இந்த அமைதிக் கடலில் குளிக்கலாம்.

மீன் பிரியர்களுக்கு நாக்கில் தினவு எடுக்கும் வகையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட விதவிதமான மீன்கள் கடற்கரையில் கொட்டப் பட்டிருக்கும். கடற்கரையிலிருந்து ஊரை நிமிர்ந்து பார்த்தால் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தேவாலயங்கள் எட்டி எட்டி பார்க்கும். படகு வைத்திருப்பவர்களைக் கொஞ்சம் அன்புடன் கேட்டால், கடலுக்குள் கட்டுமரத்தில் கூட்டிச் செல்வார்கள்,த்ரில்லிங்காக இருக்கும். மோட்டார் படகிலும் செல்லலாம்.
எங்களைக் கடலுக்குள் 2 கி.மீ. தூரம் வரை கூட்டிச் சென்று படகை நிறுத்திக் கொண்டார்கள். அலையே தெரியவில்லை, ஆழமும் குறைவுதானாம், குதித்து நீச்சல் கூட அடிக்கலாம்னு சொன்னாங்க. எங்க வாண்டுக ரெண்டும் குதிப்பேன்னு நிக்குதுங்க! அவ்வளவு அமைதியாக இருந்தது.
மணப்பாடுக்கும் செந்தூருக்கும் நடுவில் சின்ன கடற்கரை- குலசேகரப் பட்டிணம். அந்தக் காலத்தில் அங்கே மட்டும்தான் டீச்சர் ட்ரெயினிங் கல்லூரி இருந்ததாம். எங்க அக்காவிலிருந்து, மாமியார் வரை அதன் மாணவிகள். தசரா சமயத்தில் அங்குள்ள கோவில் திருவிழா ரொம்ப பிரசித்தி. விதவிதமான வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வாடிக்கை. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வேண்டுதல் நிரைவேற்ற வருகிறார்கள். அந்த சீசனில் அந்த ரோட்டிலேயே போகக் கூடாது, பயங்கர ட்ராபிக் ஜாம் ஆகிவிடும்.

மணப்பாட்டில் குளித்துவிட்டு ஈரம் காயாமலே அடுத்த கடலுக்குள் இறங்கி விடலாம், வரிசையாக கடற்கரைக் கிராமங்கள்தான். ஆனாலும் அடுத்த சிறப்பு உவரி கடலுக்குத்தான். கடற்கரையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் , கப்பல் வடிவத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். கடலில் இருந்து பார்த்தால், கப்பல் தரை தட்டி நிற்பது போலவே இருக்குமாம். கடலுக்கும் ஊருக்கும் இடைவெளி 10 அடிகூட இருக்காது, அலையின் சீற்றமோ சாதாரண நாட்களில் கூட ரொம்ப பயங்கரமா இருக்குது. புயல் வீசும்போது எப்படி இருக்குமோன்னு அச்சமாக இருந்தது.

ஒரே கடல்தான், ஆனாலும் எத்தனை பரிமாணங்கள்! செந்தூரில் அழகும் ஆக்ரோஷமும், மணப்பாடில் ரொம்ப அமைதியாக, உவரியில் பயங்கர வேகமும் சீற்றமுமாக!

இதையெல்லாம் பார்த்துவிட்டு கன்னியாகுமரி கடற்கரை போனால் ரொம்ப கமர்ஷியலாக இருப்பதுபோல் தோணிவிடுகிறது. சுற்றுலா அந்தஸ்து வந்ததுமே அதன் இயற்கை அழகு கெட்டுப் போய்விட்டது.

நடுவில் முட்டம் கடற்கரை எங்கேயோ இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன், இன்றுவரை பார்க்கவில்லை. `அலைகள் ஓய்வதில்லை’ வந்ததிலிருந்து பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தபோதும், எப்படியோ தட்டிப் போய்விடுகிறது. அதிலும் `சுட்ட மீனும் சுறாப் புட்டும்’ பற்றி சிரில் அலெக்ஸ் எழுதியதைப் படித்த பிறகு அடுத்த முறை கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்த்தாச்சு.

எப்பவும் நம்ம ஊர் கடலையே பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த முறை மேற்குக் கடற்கரை விருந்தளித்தது. கேரளாவின் கடல் வேறுவிதமான அழகு. இய்ற்கை அழகு கெடாதபடி கடற்கரையை சுற்றுலா மையங்களாகவும் மாற்றி வைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆலப்புழாவில் பேக் வாட்டர் போட்டிங் போனது மறக்க முடியாத அநுபவம். ரெண்டு பக்கமும் வீடுகளைப் பிரிப்பதே தண்ணீர்ப் பரப்புதான். அதில் மீனோ, காய்கறிகளோ வியாபாரம் செய்பவர்கள் இக்குணியூண்டு படகில் கூவிக் கூவி வியாபாரம் செய்ததைப் பார்க்க புதுமையாகவும் அழகாகவும் இருந்தது. எதிர் வீட்டுக்கு ஊர்வம்பு பேசப் போகணும்னாக்கூட படகில்தான் போகணும். சுவாரசியமான பொழுதுபோக்கு இல்லையா? படகு வீடுகளைப்ப் பார்த்தால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறைபோல் சவுகரியமாக இருக்குது. நிறைய தேனிலவு தம்பதிகள் அதில் தங்க வருவாங்களாம். நமக்கும் காலம் கடந்துவிடவில்லை, அறுபதாம் கல்யாணம் முடிச்சுட்டு நேரா இங்கே வந்திட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிகிட்டேன்.
என்ன கடல் காற்று ரொம்ப உப்பு கரிக்குதா? விளக்கமாகவே எழுதலைங்களே! சும்ம கோடி காட்டியிருக்கேன், எப்படியும் பின்னூட்டங்களில் கடல் இளவரசர்கள் அதிக விபரங்களைச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில். மேலே இருப்பது திருச்செந்தூர் கடல்தான், வள்ளி ஒளிந்த குகைக்கு முன்பு உள்ள பகுதி.
பி.கு:பின்னூட்டப் பெட்டியில் கமெண்ட் மாடரேஷன் ஏதோ தகராறு பண்ணுது, அதனால் பின்னூட்டங்கள் மறைந்து கொள்கின்றன. என்னுடனாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் எப்பவும் போல் பின்னூட்டமிடவும். நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளேன். நாளையாவது சரியாகுதா பார்க்கலாம்.

Friday, February 03, 2006

சினிமாக் கிறுக்கர்கள் சபை

சினிமா என்பது மத்தியதரக் குடும்பங்களின் தவிர்க்க முடியாத பொழுது போக்கு அம்சம். குடும்பத்தவர் அனைவரையும் சுற்றுலா மாதிரி வெளியே கூட்டிச் செல்ல முடியாத பட்ஜெட் பத்மநாபர்களுக்கு சர்வ ரோக நிவாரணி சினிமாதான். எவ்வளவுதான் டிவி, விசிடி, டிவிடின்னு புது கண்டுபிடிப்புகள் வந்தாலும் ,தியேட்டரில் போய் ஜனரஞ்சகமாக சினிமா பார்க்கும் சுகம் வராது.
ஒவ்வொரு வயதிலும் சினிமா பார்க்கும் முறை வேண்டுமானால் மாறலாம், ரசிப்புத் தன்மை மாறாது. சின்ன வயசில் டூரிங் தியேட்டரில் பட்ம் பார்த்தப்போ என்ன ஒரு லயிப்பு. அப்போதெல்லாம் படம் சரியா புரியாது, அம்மா அக்காவெல்லாம் உருகி உருகி படம் பார்க்கும்போது நமக்கு போரடிக்கும். மணலைக் கூட்டி கோபுரம் மாதிரி கட்டி, அதன் உச்சியை கொஞ்சம் தட்டி விட்டு சிம்மாசனம் மாதிரி செய்து அதில் ஏறி உக்காந்துக்கிறது. பின்னாடி இருந்து யாராச்சும் மறைக்குதுன்னு சொன்னாலும், சின்ன சிணுங்கல் சிணுங்கினால் போதும், அம்மா அவங்க கூட மினி சண்டை போட்டு அரியணையைத் தக்க வைத்துவிடுவாங்க. மறைக்குதுன்னு சொன்னவங்க மூச்சு காட்டாமல் தள்ளி உக்காந்து பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க வாண்டும் அதேதானே பண்ணியிருக்கும். இடைவேளை எப்போடா விடுவாங்கன்னு பார்க்க வேண்டியது, அப்போதானே முறுக்கு சுண்டல் எல்லாம் வரும். சாப்பிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டிருந்தால் படம் முடிஞ்சிருக்கும்.

நிரந்தரத் தியேட்டர் வந்த பிறகு இந்த சுகம் போயிட்டுது ஆனாலும் இங்கே வேறே ஜாலி. திரையை ஒட்டி சின்ன மேடை இருக்கும். கூட்டம் அதிகமா இருக்கும் காலங்களில் அதுல உட்கார்ந்து பார்க்கும்போது, சிவாஜி எம்.ஜி.ஆர் எல்லோரும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பாங்க!தரை டிக்கெட்டில் உட்கார்ந்து `ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தலைவர் விதவிதமா பாவாடை கட்டி வந்த சீன்களை உருக்கமா பார்த்து ரசிச்ச காலம்.
மருத்துவக் கல்லூரி போனபிறகு வீட்லே நம்ம ஸ்டேட்டஸ் உசந்திட்டதாலே, பென்ச் டிக்கெட்டுக்கு புரமோஷன். அனாலும் தரையை ஏக்கத்தோடதான் பார்த்துக்குவேன், அங்கேதான் பால்ய தோழிகளெல்லாம் உக்கர்ந்திருப்பாங்க.
கல்லூரி வந்த பிறகு சினிமா பார்க்கிற ஸ்டைலே மாறிடுச்சு. ஒவ்வொரு படத்துக்கும் குறிப்பிட்ட துணை செட் ஆயிடும். கமல் படம் சிலரோட, ரஜினி வேறு சிலரோட, பாரதிராஜா வேற க்ரூப் கூடன்னு செம டைட் செட்யூல். சளைக்காமல் படம் போயிடுவோம். யாராவது ஒருத்தர் கையில் ஐந்து ரூபா இருந்தா போதும், ரெண்டுபேரா கிளம்பிட வேண்டியது. பஸ் காசு 35+35 , எழுபது பைசா!!! சினிமாவுக்கு ரெண்டு ரூபா, கணக்கு சரியாயிடுச்சா?
யாருக்காவது கெஸ்ட் வந்திட்டு போனால் பாக்கெட் மணி கிடைத்துவிடும், உடனே ஜூட்தான். படம் பார்த்துட்டு வந்து மெஸ்ஸில் வட்ட மேஜை மாநாடு போட்டு படத்தை அக்கு வேறு ஆணி வேறா அலசுறது. சில சமயம் பெரிய சண்டையில் போய் முடிஞ்சுடும். பூர்ணிமா ஜெயராம் அழகுதானா இல்லையான்னுகூட சண்டை போட்டு ஒரு மாசம் அறைத் தோழிகூட பேசாமல் இருந்தது கூட உண்டு.

இந்த சந்தோஷமெல்லாம் ,காதல் என்ற மாயாவி பீடிக்கும் வரைதான். அதற்குப் பிறகு சொல்லாமல் சைட்டு கூட சினிமா போறதுதான் தலையாய வேலை. ஒருத்தருக்குத் தெரியாமல் அடுத்தவர் அவங்க அவங்க ஆளுங்ககூட கிளம்பிப் போய், ஒரே தியேட்டரில் முன்னும் பின்னுமாக உட்கார நேர்ந்து அசடு வழியும் நிகழ்ச்சிகள் ரொம்ப சாதாரணமாக நடக்கும்.

எங்க காலத்திலெல்லாம், சினிமா தியேட்டர்தான் காதலர்களின் சொர்க்க வாசல். அநேகமா மருத்துவக் கல்லூரி ஜோடிகள் குறைந்தது பத்தாவது ஒவ்வொரு காட்சியிலும் இருப்பார்கள். இடையிடையே இந்த வாத்தியார்கள் வேறு படத்துக்கு வந்து தர்மசங்கடப் படுத்திடுவாங்க.
படிச்சு முடிச்சு சென்னையில் செட்டில் ஆன காலத்தில்தான் சுகமாக சினிமா பார்த்ததாக தோணுது. அழகா டிக்கெட் புக் பண்ணிட்டு , சுகமா ஆட்டோவில் போய் இறங்கி, நமக்குன்னு நேர்ந்துவிட்ட சீட்டில் உட்கார்ந்து, ஏ.சி. தியேட்டரில் படம் பார்ப்பதே தனி சுகம்தாங்க
.
ஊரிலிருந்து யார் சென்னை வந்தாலும் உடனே படத்துக்கு டிக்கெட் எடுப்பதுதான் முதல் அஜெண்டா. நிறைய நேரங்கள் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டு காலாற மவுண்ட் ரோடிலிருந்து வீடு வரை படம் பற்றி விவாதித்துக்கொண்டே நடப்பது நல்லா இருக்கும். இப்போகூட நான் சென்னை வருகிரேனென்றால் என் தம்பி ,முதல் காரியமாய் சினிமா டிக்கெட் தான் எடுப்பான், ரிட்டர்னுக்கு ட்ரெயின் டிக்கெட் கூட ரெண்டாம் பட்சம்தான்.

இவ்வளவு ரத்தத்தில் ஊறிப் போன சினிமா பார்க்கும் பழக்கம் ஈரோடு வந்த பிறகு ஏன் நசித்துப் போனது? சுகாதாரச் சீர்கேடான திரை அரங்குகள், முன்பதிவு இல்லாத அவலம், குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு புறம் அமரவேண்டிய ஸீட்டிங், இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவு கமர்ஷியல்தனம் நிறைந்த படங்கள்.

அழகிய தீயே; அழகி; தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எல்லாம் இத்தனை அசெளகரியங்களிலும் தியேட்டரில் போய் பார்க்க முடிந்தது அந்த படங்களின் வெற்றிதான்.இவ்வளவுதூரம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப்போனது சினிமா.

யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது. என்னோட எழுத்துக்களிலும், பின்னூட்டங்களிலும் சினிமாவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். என்னால் ஒரு விஷயத்தைப் புரிய வைக்க உதவும் அற்புதமான சாதனம் சினிமா, அதை வெளிக்காட்டிக் கொள்வதில் என்ன தவறு?
தற்போதைய சினிமாக்களை முழுதுமாக உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பது என் அங்கலாய்ப்பு, அது கூட எனது பார்வையின் கோணம் மாறியதால் இருக்கலாம். இப்போதைய இளைய தலைமுறையை குறிவைத்து எடுக்கப் படும் படங்கள், அடுத்த தலைமுறை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கு தோதாக இல்லாமலிருக்கலாம் என்பதுகூட ஒரு வாதம்தான்.
`மன்மத ராசா மன்மத ராசா’ பாடலை என்னால் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. ஆனால் என் மகன் ` தனுஷ் அண்ணா என்ன அழகா ஆடறாங்க’ன்னு சொன்னப்போ பார்வையின் கோணங்கள் மாறுவது புரிந்தது.
சினிமாவிலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை, வாழ்க்கையின் மாறுபட்ட வடிவங்களை அலசும் ஆரோகியமான மனம் இருந்தால் போதும். சினிமா என்பது சாமான்னியர்களுக்கு எட்டாத கனவு தேசமாக இருந்தபோது அதைத் தலையில் தூக்கி ஆடினார்கள். இப்போது சகலருக்கும் புரிந்த ஒன்றாகி , எவரும் பங்கேற்கலாம் என்ற நிலைமை வந்ததும் அதைத் தரையில் போட்டு மிதிக்கும் பாங்கு பெருகிவிட்டது.
சினிமாவினால் வரும் சீரழிவுகள் சினிமாவிலிருந்தேவா வருகின்றது? அதில் வரும் நிகழ்வுகள் தங்கள் பிரச்னைபோல் இருப்பதால் ஈர்க்கப்பட்டு அதுபோல் செய்தாலென்ன என்று முடிவெடுக்கும் அரை வேக்காடுகளின் அவசர புத்தி. அதுபோன்ற சங்கடங்களை உருவாக்கும் சமுதாயத்தின் முட்டுக் கட்டைகள்.
நாட்டை ஆளும் தலைவர்களையே சினிமா மூலம்தான் இனம் கண்டுகொள்ளும் நிலைமையில்தான் இன்னும் நிறைய சமுதாயங்கள் இருக்கின்றன. அதில் நல்ல விஷயங்களைக் கொஞ்சமாவது சொல்ல வேண்டுமென்ற தார்மீகக் கடமையுணர்வு சேரன் போன்ற சிலருக்காவது இருக்கும்பட்சத்தில், சினிமா நல்ல மீடியம்தான்.
ஆதலினால் நண்பர்களே-

``நிறைய சினிமா பார்த்து
நிறைவாய் விமர்சனம் செய்து
சேருங்கள் சீக்கிரம்
சினிமாக் கிறுக்கர்களின் சபையில்’’

Thursday, February 02, 2006

கல்லூரியின் ஹிட் லிஸ்ட்

பள்ளிப் பருவத்து நினைவுகளும் சேஷ்டைகளும் ஒருவிதம் என்றாலும், கல்லூரியில் அடிக்கும் லூட்டிதான் ரொம்ப விசேஷமானது. அதிலும் மிக நீண்ட வருடங்கள் ( எங்கள் காலத்தில் ஆறரை வருடங்கள்) ஒரே கல்லூரியில் படிக்கும்போது பண்ணப்படும் குரும்புகள் எத்தனை வகை! மிசா சட்டம் அமுலுக்கிருந்த கால கட்டத்தில் தேர்வு நடந்ததால் என்போன்ற சாமான்யர்களுக்கும் சீட் கிடைத்தது. எங்கள் வகுப்பில் எல்லோருமே ஒரே பொருளாதாரத் தட்டில்தான் இருப்போம். எங்களுக்கு முந்திய, பிந்திய வகுப்பு மாணவர்களில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும். நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் படிப்பதிலிருந்து குறும்புகள் வரை ஒரே தட்டில் இருக்கும். எல்லா வகுப்பு போலவும் படிப்பே பிரதானமான முன் பென்ச் மக்களை எங்கள் குழுவில் சேர்த்துக் கொள்வதில்லை. பசங்களே பரவாயில்லை என்னும்படி பெண்களாகிய எங்கள் குறும்புகள் இருக்கும். ஆனால் யாரையும் காயப்படுத்துவதில்லை, கலாய்த்துக் கொண்டே இருப்போம்.

பெண்கள் ஹாஸ்டல் கல்லூரியின் பின்புறத்திலேயே இருக்கும். எங்கள் அறையில் இருந்து பார்த்தால் கல்லூரி வராண்டாவில் நடப்பவை துல்லியமாகத் தெரியும், அவ்வளவு அருகாமை. சில விஷயங்களுக்கு நன்மையாக இருந்தாலும் , பல விஷயங்களுக்கு, இந்த அமைப்பு இடைஞ்சலாகவும் இருக்கும். நூலகம் சென்றுவரும் புத்தகப் புழுக்களுக்கு, இரவு எந்நேரமானாலும் திரும்புவது சுலபம். ஆனால் ஹாஸ்டலே வீடாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப பிரச்னை.சுதந்திரமாக அப்படி இப்படி இருக்க முடியாது. கல்லூரியில் சேர்ந்த புதிதில்தான் நிறைய பேர் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டோம். கல்லூரியைச் சுற்றி உள்ள சாலையில் செல்லாமல் பழக முடியாது. அதனால் வந்த வம்பு, வாத்தியாரின் ஹிட் லிஸ்ட்டில் எங்கள் பெயர் சேர்க்கப்பட்டது!(ஹிட் லிஸ்ட் என்றால் இந்த வருடம் யாரெல்லாம் பெயில் பண்ணப்படுவார்கள் என்பது பரீட்சைக்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டுவிடும் லிஸ்ட்) எதுக்காகத் தெரியுமா? புரொபஸர் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிரே சைக்கிளில் சென்ற அம்மணி இறங்கி வணக்கம் சொல்லவில்லை!! எப்படி சொல்ல முடியும்? இறங்கினால் ஏறத் தெரியாதே!!யாராவது ஏற்றித்தான் விடணும், வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டே எவ்வளவு நேரம்னாலும் செல்லும்! இதைப் போய் வாத்தியாரிடம் விளக்க முடியுமா? வைச்சாரு எங்களை தீவிரவாதிகள் லிஸ்ட்டில். ஆனாலும் நாங்க எப்படி ஆளுங்க? மூணுமாசம் சோறு தண்ணி இல்லாமல் படிச்சு பாஸ் பண்ணிட்டோம். அப்பாடி ஒரு கண்டம் தப்பிச்சோம்.( எங்க வீட்லேயெல்லாம் என்ன நிபந்தனை தெரியுமா? என்ன சேட்டை வேணா பண்ணிக்கோங்க, பெயில் மட்டும் ஆகக் கூடாது!) ஆனாலும் விதி எங்களை விடுவதாயில்லை. இரண்டாம் வருடம்,ஆய்வுக்கூடங்களில் டெமான்ஸ்ட்ரேஷன் நடக்கும்போது ஆசிரியரை சுற்றி கும்பலாக நிற்கும்போது, பின்னாடி நிற்பவர்களுக்கு சரியாகக் கேட்காது. என் வகுப்புத் தோழி ஒருத்தி, கொஞ்சம் குறும்பு கூடுதலாக உள்ளவள்; வேண்டுமென்று செய்தாளோ தற்செயலாகச் செய்தாளோ எட்டிப் பார்க்கும் முகமாக எதையோ பற்றிக் கொள்வதாக நினைத்து வாத்தியாரின் ஓவர் கோட்டைப் பிடித்து இழுத்துவிட்டாள். ஆனால் பலே அள், அவர் திரும்பும்போது சட்டென்று விலகி விட்டாள், மாட்டியவள் நான்! இந்த வருஷமும் ஹிட் லிஸ்ட். மறுபடி அதே கதை, வெறித்தனமாகப் படிச்சு பாஸாயிட்டோம்.( எங்க குழுவில் யார் சேட்டை பண்ணினாலும், எல்லார் பெயரும் மொத்தமாக லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு விடும்) ரெண்டாம் கண்டம் தப்பிச்சாச்சு!
இனிமேல் வாத்தியார்களிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்னு முடிவெடுத்து மூனாம் ஆண்டு நுழைந்தால், விதி வகுப்புத் தோழனின் மூலம் வந்தது! நாங்க பாட்டுக்கு `மாப்பிள்ளை பென்ச்’சில் உட்கார்ந்து எங்களுக்குள் `மகளிர் மட்டும்’ கதைகள் பேசி சிரித்ததைத் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டான்(ர்). அதில் தெரிந்த நியாயமின்மைக்கு நீதி கேட்கும் முகமாக தோழியர் இடை புகுந்து, சின்ன கலாட்டாவாகி, வகுப்புக்கு செல்லாமல் வெளியிருப்பு போராட்டம்! அந்த வருஷ ப்ரொபஸர் ரொம்ப ஸ்டிரிக்ட். சண்டைக்கு மூல காரணம் நாங்களே என்று மனதில் பதிய விட்டு மறுபடி ஹிட் லிஸ்ட், மறுபடி அதே கதை.( நிஜமாகவே எல்லா வருடமும் ஒரே அட்டெம்ப்ட்டில் தேர்வான ஒரு சிலரில் நானும் ஒருத்தி, நம்புங்கப்பா)
அப்பாடி ஒருவழியாக தப்பித்து மருத்துவமனை பக்கம் ஓடி வந்தாச்சு. எல்லா வருடத்து மாணவர்களும் கலந்து வகுப்புகளுக்கு செல்வதால், நம்மை விட கில்லாடியான ஆட்கள் அங்கே இருந்ததால் ,நம்ம சாயம் வெளுக்கலை. சின்னச் சின்ன குறும்புகள் செய்தாலும், பெரிய குறும்புகளுக்கு முன் காணாமல் போய்விட்டன. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிது வருத்தம் என்றாலும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம்.
ஆனாலும் நாலாம் வருட தேர்வுக்கு நான்கு நாட்களே இருந்த போது அப்பா திடீரென தவறிவிட்ட அதிர்ச்சி , தேர்வையே புறம் தள்ளும் சோகத்துக்கு கொண்டு போய்விட்டது. கண்டிப்பாக தேர்வெழுத முடியாது என்று நினைத்திருந்தபோது, ஏதோ பிரச்னையால் திடீர் ஸ்டிரைக் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குத் தேர்வே தள்ளி வைக்கப் பட்டது!!
இறுதியாண்டு, இதுதான் எல்லா ரெக்கார்டுகளிலும் வரும். அதனால் கொஞ்சம் பம்மிப் பதுங்கி வாலைச் சுருட்டிக் கொண்டோம்.ஆனால் எல்லா நண்பர்களின் ரிசல்ட்டையும் கேலிக்குள்ளாக்கும் விதமாக ஒரு பிரச்னையான ப்ரொபஸர். படிப்பிற்கும் தேர்வு முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்னும் நிலை. எல்லோருமே மன அழுத்தத்துடன் க்ளினிகல் பரீட்சை சென்றோம். பெயிலானவுடன் பரீட்சை லீவுக்கு யார் யார் வீட்டுக்கு எப்போ போய் டேரா போடறதுன்னு பேச்சு வார்த்தை நடக்குது!ஆனால் பாருங்க, வெளியிலிருந்து வந்த எக்ஸாமினர் நிலைமையின் தன்மையை உணர்ந்து மார்க்குகளை அள்ளிப் போட்டு தகுதி வாய்ந்த மாணவர்களையெல்லாம் கடைத் தேற்றிவிட்டார்!!! எப்படியோ நாங்களும் மருத்துவர்களாயிட்டோம்!
கல்லூரியின் வசந்த காலம்னா அது ஹவுஸ் சர்ஜன் பண்ணிய போதுதான். அந்த சமயத்திலும் கூட பசங்க என்னைச் சிக்கலில் மாட்டி விட்டுட்டாங்க! ஒரு பார்ட்டியின் போது எங்க HOD தன்னைப்பற்றிய உண்மையான விமர்சனங்களை வரவேற்பதாகச் சொன்னபோது எல்லோரும் முகஸ்த்துதியாக அள்ளி வீசிக் கொண்டிருந்த போது, அவரின் அடுத்த பக்கத்தை சொல்லும்படியாகிவிட்டது, ஓவர் பாசாங்கைத் தாங்க முடியாமல். அவ்வளவுதான், course completion certificate தராமல் போயிடுவார்ன்னு பயம் காட்டி குழப்பிட்டாங்க. ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்ற எல்லோரையும் விட ஒளிவு மறைவின்றி பேசிய என்னிடம் அவர் கூடுதல் அன்போடு இருந்ததாகப் பட்டது!

நாங்க பண்ணிய சேட்டைகளே இப்படி என்றால் ,எங்க பசங்க அட்டகாசத்துக்கு கேட்கணுமா? `ஒருதலை ராகம்’ படம்னு நினைக்கிறேன், பெண்கள் எல்லோரும் கும்பலா போயிட்டு வந்துகிட்டு இருக்கோம். ஹாஸ்டலுக்கு கொஞ்சம் முன்னாடி இருட்டா இருக்கும், அந்த இடத்தில் சாலையின் குறுக்கே யாரோ படுத்திருப்பது போல் இருந்தது. குடிபோதையா, பிணமா, எதுவுமே கணிக்க முடியாத மசமச இருட்டு. எல்லோருமே ஒருவித தயக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் போது கொஞ்சம் தைரியமான தோழி மெதுவாக அருகே சென்று குனிந்தாள். வீலென்று ஒரு சத்தம், எல்லோரும் ஆளுக்கொரு திக்கில் சிதறி ஓடினோம், என்ன நடந்தது என்று கூட யாருக்கும் புரியவில்லை. படபடப்பு நீங்கியதும் ஆளாளுக்கு கொஞ்ச தூரம் தள்ளி நின்று ஆராய்ந்து பார்த்தால், சாலையின் நடுவில் யாரோ உட்கார்ந்திருக்காங்க, குனிந்து பார்த்த தோழி பயப்படாமல் நிற்கிறாள். பயம் தெளிந்து மெதுவாக எல்லோருமாக பக்கத்தில் போய்ப் பார்த்தால், எங்கள் வகுப்பு நண்பர் ஒருவர் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாங்களெல்லோரும் சினிமா போயிருப்பதைத் தெரிந்து கொண்டு, எங்களைக் குமைப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். மெதுவாக அக்கம் பக்க புதர்களிலிருந்து மீதி நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த வீலென்ற சத்தமும், எல்லோரும் சிதறி ஓடியதும் இன்று நினைத்தாலும், சிரிப்பை அடக்க முடிவதில்லை.
இவர்களைக் கடுப்பேற்றுவதற்காகவே பெண்கள் மட்டும் குற்றாலம் சென்றோம், பழிக்குப் பழி!! எவ்வளவுதான் வீம்பும், சண்டையும், தகராறும் போட்டாலும், எங்களுக்குள் உள்ள அன்பும் உரிமையும் மற்ற வகுப்பில் உண்டா என்று சொல்லத் தெரியவில்லை.அதை சமீபத்தில் உனர்ந்து கொண்டோம்.
25 வருடங்கள் கழித்து போனவருடம் கொடைக்கானலில் get2gether போட்டோம், வகுப்பு நண்பர்கள் மட்டும், குடும்பத்தினர் நீங்கலாக. அதே அளவு நட்பு, அன்பு, புரிதல் எல்லாம் இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் இருந்தது கண்டு புளகாங்கித்துப் போனோம். குடும்பத்தினரை நீக்கிவிட்டு இதைகைய சந்திப்பு தேவையா என்று எல்லா தரப்பிலிருந்தும் விமர்சனங்கள்., கண்டனங்கள்; காதுகளைச் செவிடாக்கிக் கொண்டு நடத்தி முடித்தோம், மனதை நிறைத்துக்கொண்டு திரும்பி வந்தோம். (organise பண்ணிய ஆளு யாரு, நானாச்சே, சலசலப்புக்கெல்லாம் அஞ்சுவேனா)
எதைப் பற்றி எழுதுவது என்ற முன்னேற்பாடின்றி உட்கார்ந்ததால், தோணியபடி எழுதிவிட்டேன், எல்லாமே `நட்புக்காக’த்தானே!
``உள்ளம் என்பது ஆமை-அதில்
உண்மை என்பது ஊமை;
சொல்லில் வருவது பாதி-நெஞ்சில்
உறங்கிக் கிடக்குது மீதி’’

(சொன்னதை விட சொல்ல மறந்த கதைகள் ஏராளம்)

Wednesday, February 01, 2006

பெண்களைக் காப்பாற்றுங்கள்

நாளிதழில் அடிக்கடி காணப்படும் செய்தி` பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது’-`பச்சிளம் குழந்தையின் சடலம் புதர் மறைவில் வீசப்பட்ட பரிதாபம்’ – இன்னும் சோகம் தாங்கிய சிசுக்களின் மரணப் பட்டியல். சமீப காலங்களில் இவை அளவுக்கு அதிகமாகக் கண்ணில் படுவதுபோல் ஒரு தோற்றம். இத்தைகைய சிசுக்கள் அநேகமாக, பெண்குழந்தைகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த சோகமாக `அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் புதிய வரவு’களும் பெண்குழந்தைகளே.
காலம் காலமாக பெண்சிசுக்கொலைகள் சில மாவட்டங்களின் பொதுச் சொத்தாக இருந்தது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வு இயக்கங்களும் கட்டுப் படுத்த முடியாத அளவு கொடூரமாக காணப்பட்ட நிகழ்ச்சிகள் இடையில் சற்று குறைந்தது போல் காணப்பட்டது. அரசும் தங்களின் அயரா உழைப்பின் மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொண்டது.. ஆனால் பெண் குழந்தை பிறப்பின் விழுக்காடு படிப்படியாகக் குறைந்து கொண்டேதான் வந்ததே ஒழிய இடையில் கூடியது போல் தெரியவில்லை. இப்போது மறுபடியும் பழைய நிலைக்கே சிசுக்கொலை விகிதம் கூடி வருகிறது. இடையில் நடந்தது என்னவாக இருக்கும்?
மருத்துவ புரட்சியின் பலனாக இடையில் ஸ்கேன் என்ற மாயக் கண்ணாடி கிடைக்கப் பெற்றவுடன் கருவிலிருக்கும் குழந்தையின் செக்ஸ் கண்டுகொள்ளப்பட்டது. தங்களுக்கு வேண்டாத குழந்தையைக் கருவிலேயே அழித்துக் கொள்ளும் விஷயம் காதும் காதும் வைத்த மாதிரி அரங்கேறத் தொடங்கியது. கண்முன் ரத்தமும் சதையுமாகப் பிறக்கும் குழந்தையைக் கொல்வதைவிட, கண்மூடிய மயக்க நிலையில் அந்தக் குழந்தையைத் தவிர்த்துவிடும் வசதி எல்லோருக்கும் ரொம்ப செளகரியமான முறையாகப் போய்விட்டது. இந்தக் கால கட்டங்களில்தான் பெண் சிசுக்கொலை குறைந்தாலும், பெண்குழந்தை பிறப்பு அதிகரிக்காமல் போனது.
இந்த வசதியால் வந்த வக்கிரம், மறுபடி மறுபடி கருத்தரிப்பது, ஸ்கேன் செய்து, மறுபடி கருக்கலைப்பு செய்வது என தொலைக்காட்சி சீரியல் போல் ஆக ஆரம்பித்தது. அரசு இயந்திரமும் எப்போதும் போல் விழுக்காடுகளை தோண்டித் துருவி விஷயத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும்போது , சமுதாயத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இதன் தாக்கம் புரையோடிப் போய்விட்டது. `கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுவது சட்டப்படி குற்றம்’ என்று கண்டிப்பான நடைமுறை கொண்டு வந்ததும் , மறுபடி ஆரம்பிச்சிட்டாங்க சிசுக் கொலையை. ஆக! எந்த வகையானாலும் ,பெண்குழந்தை வேண்டாம் என்பதுதான் basic பிரச்னை.
தன் இனம் வேண்டாமென்று வலுக்கட்டாயமாக முயற்சிகளை மேற்கொள்வதே ஒரு பெண்தான். அந்த அளவு பெண் குழந்தை மேல் வெறுப்பா? பெற்ற குழந்தையைக் கொல்ல அனுமதிக்கும் தாய் எப்படி ஒரு மனுஷத் தன்மையுள்ளவள் ஆவாள்?ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அதை அனுமதிப்பவள் பெண்ணே அல்ல. இப்படி ஆயிரமாயிரம் கேள்விகளும் அதைவிட அதிகமான விமர்சனங்களும் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கருவில் அழித்தாலும், கண்முன்னே கள்ளிப் பால் கொடுத்து கொன்றாலும் அந்தப் பெண்ணின் மனம் சந்தோஷமா படப் போகிறது? சினிமாவுக்குப் போவதுபோல் சீரியல் பார்ப்பதுபோல், ஒரு குழந்தையை வயிற்றில் தாங்கி காவு கொடுப்பது இலகுவான விஷயமா? இத்தனையையும் தாண்டி ஏன் நடக்கிறது? சமுதாயம்தான் காரணம். `திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டைத் தடுக்க முடியாது’. பெண்களின் வளர்ப்பும் திருமணமும் சில சமூகங்களில் கணக்குப் போட்டு பார்க்க முடியாத எல்லைகளில் இருக்கிறது. அத்தைகைய வீடுகளில்தான் பெண்சிசுக் கொலையும் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தவிர ஏனைய இடங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இல்லை என்பதை மறுக்க முடியாது.
என்னுடைய நண்பரின் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. ஒரே பெண்தான். சமீபத்தில் சில பொருளாதாரச் சிக்கல்களால் ஓரளவுதான் சீர் செய்ய முடியும் என்ற நிலை. மாப்பிள்ளை வீட்டார் பெருந்தன்மையுடன் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்வது உங்கள் விருப்பப்படி என்று சொல்லிவிட்டனர். ஆனால் கொடுமையைப் பாருங்க! பெண்வீட்டு சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து, அதெப்படி விட்டுக் கொடுக்கலாச்சு, கார் கொடு, வீடு கொடு, இவ்வளவுக்கு குறைச்சலாக நகை போடக்கூடாது என்று ஏக கலாட்டா. மிகவும் படித்த, ஓரளவு நல்ல வசதி உள்ள ,ஒரு பெண் மட்டுமே உள்ள குடும்பத்தின் நிலை. இது ஏதோ ராமாயணக் காலத்துக் கதை அல்ல, நாலு நாளைக்கு முன்னால் நடந்த கதை. இதுவே ரெண்டாவதும் ஒரு பெண் இருந்து அதற்கும் சேமிக்க வெண்டிய நிலைமை இருந்தால், அந்த தகப்பனின் நிலை என்னவாகும்? படித்தவர்கள் நாம்தான் இதை மாற்ற பாடுபடவேண்டும், இது போன்ற பேச்சுகளுக்கு செவி கொடுக்கலாகாது என்பதெல்லாம் விவாதத்திற்கும் வலைப்பூ பதிவுகளுக்கும் சாத்தியமாகலாம். யதார்த்தம் என்பது வேறு. சமுதாயத்தின் ஆணிவேரை மாற்றாமல் மலர்களும் கனிகளும் இலைகளும் மாற முடியாது.
இவ்வளவு ஆழமான பிரச்னையை, வெறும் `ஸ்கேன் பார்த்து செக்ஸ் சொல்லக்கூடாது’ என்ற சின்ன சட்டத்தால் மட்டும் சரி செய்ய முடியுமா? ஸ்கேனில் பார்க்கமாட்டாங்க, பிறந்ததும் பார்க்கத்தானே செய்வாங்க. அபார்ஷன் என்ற நிலையிலிருந்து சிசுக் கொலை என்ற காட்சி மாறல்தான் நடக்கும். ஜனத்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கருக்கலைப்பை சட்டமாக்கிவிட்டு, பெண்குழந்தைக்காக கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று sub-division போட்டால் இந்த பிரச்னையை எப்படித் தடுக்க முடியும்? கருக்கலைப்பு சட்டத்தையே ரத்து செய்தாலன்றி இதை மட்டும் கட்டுப்படுத்துவது எப்படி?
இரண்டு மாதங்களுக்குள் குழந்தை வேண்டாமென்று கருக்கலைப்பு செய்வதை அனுமதிக்கும் போது, மனோ ரீதியாக, ஐந்து மாதத்தில் செய்யும் கருக்கலைப்பும் அதே கோணத்தில்தானே பார்க்கப்படும். அதன் மீது அதிகப்படியான பயமோ தயக்கமோ வருவதில்லையே?செக்ஸ் பார்த்து கருக்கலைப்பு செய்வது குற்றம் என அச்சுறுத்தும் அதே அரசு, ஐந்து மாத கருவையும் கலைக்கும் வீரியம் மிகுந்த மாத்திரைகளை மருந்துக் கடைகளில் சாதாரணமாக புழங்க அனுமதிப்பது எதைகைய முரண்பாடு? முறைப்படுத்தப்படாத போலி மருத்துவர்களிடம் அறைகுறையாக அபார்ஷன் செய்துகொண்டு அல்லலுறும் அபலைகளும் எத்தனை பேர்!
இதையெல்லாம் தாண்டி தொட்டில் குழந்தைகளாக மாறும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? `அநாதைகள்’ என்ற புதிய சமுதாயம் உருவாக இது அடிகோலுமோ?
கேள்விகள் மண்டையைக் குடைந்தாலும், எந்த வகையில் நம் பங்கு இருக்கவேண்டும் என்பதே குழப்பமாகத்தான் இருக்கிறது.
நேற்றைய என் பதிவில் சொன்னதுபோல், ``அழகை வழிபடுவதுபோல் உண்மையை வழிபடுவது அவ்வளவு எளிதன்று’’.
பெண்கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கெ முதல் இடம் என்று பெண்களையே முன்னிலைப்படுத்தும் நிலைமை வராவிட்டால், பெண்களின் ஜனத்தொகை இன்னும் குறைந்து,பாஞ்சாலி ஸ்டைல் திருமணங்கள்தான் நடக்கும். இதை விளையாட்டுக்காகச் சொல்லவில்லை,உண்மையாகவே சொல்கிறேன். இப்போதே ஆண்:பெண் விகிதாச்சாரம் 4-5: 1 இருப்பதால்தான் இந்த அரசியல் சட்டங்களும் அச்சுறுத்தல்களும்.