அலை-52
அலை-52
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்".
எனது “அலை”க்கும் ஒரு வயதாகிவிட்டது. 2020 ஆகஸ்ட் 26 இல் விளையாட்டுப் போல் எழுத ஆரம்பித்து இத்துடன் 52 பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எப்படியோ சொல்லி வைத்த மாதிரி ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்பது போல் எனது அலைகளும் ஒரு வருடத்தில் 52 பதிவுகளைக் கண்டுவிட்டது. தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு என்றாலும் பொருத்தமானதாக அமைந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
இந்த வருடம் முழுவதும் கிடைத்த பின்னூட்டங்களும் ஊக்கப்படுத்திய விமர்சனங்களும் எனது எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே ஏற்றுக் கொள்கிறேன். ”அலை”களைக் கோர்த்து ஒரு புத்தகமாக வெளியிடச் சொல்லி நிறைய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள்.எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் எனக்குள் சிறிய தயக்கம் இருக்கிறது.
அண்மைக் காலத்தில் புத்தகங்கள் வாசிக்கும் தன்மை மிகவும் குறைந்து விட்டதாகவே தோணுகிறது. வாட்ஸ் ஆப்பும் கைபேசியும் வாசிக்கும் பழக்கத்தை எளிதாகவும் கைக்கு அடக்கமாகவும் கொண்டு போய்விட்டதால் புத்தகங்களின் மேல் உள்ள ஈடுபாடு குறைவாகவே இருக்குமோ என்ற தயக்கம்தான். ஆனாலும் 100 பதிவுகளாவது எழுதிவிட்டு புத்தக வடிவம் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
கல்லூரி நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச் சின்ன கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் காதல் கவிதைகளாகத்தான் இருக்கும். வயசு அப்படி. அவற்றை யாரிடமும் அவ்வளவாக பகிர்ந்து கொள்ள முடியாது. வயதுக்கேற்ற வெட்கம் காரணமாக இருக்கலாம். எனது பென்ச் தோழிகள் மட்டும் அடிக்கடி என் கிறுக்கல்களை வாசிப்பதுண்டு. ஆனாலும் கோர்வையாக எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை அப்போது வரவில்லை.
சுமார் 16 வருடங்களுக்கு முன்பு இதே ஆகஸ்ட் மாதத்தில் என் தோழன் ராம்கி(ஊடகவியலாளர் ஜென்ராம்) இணையத்தில் தமிழில் எழுத அழைத்தான். அப்போதுதான் வலைப்பூக்கள்(Blogs) பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். “தமிழ்மணம்” என்ற குழுமத்தின் மூலம் எழுத ஆரம்பித்தேன். “நட்புக்காக” என்ற எனது வலைப்பூ அப்போதுதான் அரங்கேறியது. தமிழில் தட்டச்சு செய்வது பெரிய விஷயமாக இருந்தது. அதைக் கற்றுக் கொண்டு சின்னச் சின்ன கட்டுரைகள், கவிதைகள் , விமர்சனங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எழுத்துப் பணியைத் தொடர இயலவில்லை.”தமிழ்மணம்” மூலம் அறிமுகமான நண்பர்கள் இப்போதும் முகநூல் நண்பர்களாகத் தொடர்பில் இருக்கிறார்கள்.
தமிழில் எழுதுவது பொழுதுபோக்குக்காக அல்ல, அதில் ஒரு அற்புதமான சுகம் இருக்கிறது. சினிமா பார்ப்பதில்கூட எனது சாய்ஸ் தமிழ்தான். நிறைய பிற மொழிப் படங்கள் சிறப்பாக இருப்பதாகப் பேசப் பட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பார்க்க மாட்டேன். யதார்த்தமே இல்லாத அறுவை படமாக இருந்தாலும் தமிழ் படம் தான் முதலில் பார்ப்பேன். இது குறித்து நண்பர்களுடன் நிறைய விவாதங்கள் நடந்தாலும் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இது தமிழ் வெறி அல்ல. தமிழ் மீது கொண்ட பாசம்.
ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையாகவே அலையை வாசிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பலதரப்பட்ட ரசனைகளை உடையவர்கள் என்பதால் கொஞ்சம் மாற்றிக் கொண்டேன். நேயர் விருப்பத்தை மீறி அரங்கேறும் எதுவும் வெற்றி பெறாது. ”பதின்ம வயதுகளில்” என்று ஒருதரம் எழுதியிருந்தது புரியாமல் போன் செய்து விளக்கம் கேட்ட நண்பன்கூட உண்டு.
எனது நெருங்கிய உறவினர்கள் தமிழ் தெரியாவிட்டால் கூட Google Translate இல் பதிவிறக்கம் செய்து ”அலை” களை வாசிப்பதாகக் கேள்விப்பட்டு நெகிழ்ந்திருக்கிறேன். எனது மருத்துவ நண்பர்கள் நிறைய பேர் நேரம் கிடைக்கும்போது எப்படியாவது ’அலை’ வாசித்துவிடுவதாகக் கூறுவார்கள். அதில் சாப்பிடவும் தூங்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மகப்பேறு மருத்துவர்களும் உண்டு என்பது தனிச் சிறப்பு.என்ன தவம் செய்தேன் இத்தைகைய நண்பர்கள் வட்டத்தைப் பெற என்று புரிய வைத்தது இந்த எழுத்துக்கள் மூலமாகத்தான்.
வேலைப்பளு , கொரோனா கால தனிமை போன்ற சோர்வடைய வைக்கும் நேரங்களில் எழுத ஆரம்பித்தால் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாகி விடுகிறேன். நிறைய நேரங்களில் எழுத ஆரம்பிக்கும்போது நினைத்த கரு மாறிப்போய் புதுப்புது அலைகள் மனசை உருட்டிக் கொண்டுபோய் வேறு எதையோ எழுத வைத்துவிடும். திருச்செந்தூர் கடலலைகளில் புரண்ட மாதிரி உல்டாவாக எழுதிவிடுவேன்.
பழைய கதைகளை எழுதும்போது எனக்கு நினைவுக்கு வந்ததை மட்டுமே எழுதியிருப்பேன். அதை வாசித்தவுடன், அதில் தொடர்புடைய நண்பர்கள் விட்டுப்போன சங்கதி அல்லது நபர் பற்றி பின்னூட்டத்தில் சொல்லுவார்கள். அடடா! இவ்வளவு முக்கியமானதை விட்டு விட்டோமே என்று நினைக்கும் அளவுக்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும்."சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி" என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தம்.
உண்மையாகவே வாழ்க்கை பெரிய நாடக மேடைதான். அள்ள அள்ள குறையாத அநுபவங்கள் அநேகம். எனது எழுத்தில் வருவது சிறு துளி மட்டுமே. அதிலும் சில கசப்பான அநுபவங்களை இருட்டடிப்பு செய்துவிடுவேன். சிலர் மனதை நோகச் செய்யுமோ என தோன்றும் விஷயங்களையும் எழுதுவதில்லை.
மருத்துவக் கல்லூரி வாழ்க்கை மிக முக்கியமான பருவத்தின் அநுபவங்கள். பதினாறு வயது வெகுளித்தனத்துடன் காலடி எடுத்துவைத்து மிக நீண்ட ஆறரை வருடங்கள் கொண்ட நீண்ட பயணம். எங்களது பலம், பலவீனம், ஆசை, கனவு எல்லாவற்றையும் தயக்கமின்றி பகிர்ந்து கொண்ட நண்பர்களை உள்ளடக்கியது. பாசாங்குகளற்ற நட்பு. ஒவ்வொருவரைப் பற்றியும் ஏகப்பட்ட அலைகள் எழுதலாம்.
எப்போதுதான் எழில் அண்ணனைப் பற்றி எழுதப் போறீங்கன்னு ஏகப்பட்ட நச்சரிப்பு. இப்போதுதான் முதல் வருட நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். அண்ணன் வர மூன்றாம் ஆண்டு ஆகும் தம்பிகளே, அதுவரை காத்திருங்கள்.
ஆகஸ்ட் மாதம் வாழ்க்கையில் அநேக நல்ல விஷயங்களைத் தந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்ததும் ஆகஸ்ட்டில்தான். எனது எழுத்துப் பயணம் தொடங்கியதும், இடைவெளி விட்டுத் தொடர்வதும் அதே ஆகஸ்ட் மாதம்தான். அருமையான மகன் டேனியல் பிறந்ததும் ஆகஸ்ட் தான். அநேக பயணங்கள் செல்வதும் ஆகஸ்ட் தான் . ஆடி மாதத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சைகள் குறைவாக இருப்பதால் அன்புக் கணவரின் அப்பாயிண்ட்மெண்ட் அப்போதுதான் கிடைக்கும்.
ஒரு வருடம் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் வரப்போகும் வருடத்திலும் என்னுடன் பயணம் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்.
My blog: www.forusdear.blogspot.com