அலை-6
“அழியாத கோலங்கள்’ அநேகம் பேருக்குத் தெரியும். அழியும் கோலங்களிலும் அழகு உண்டுன்னு ரசித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஓணம் அன்று போட்ட பூக்கோலம், மனதில் வரைந்து விட்டகோலம் இந்த அலை.
விபரம் தெரிந்த நாளிலிருந்து எங்க வீட்டின் முன்வாசலில் கோலம் போடுவது அநேகமா நானாகத்தான் இருக்கும். பெரியவங்களுக்கெல்லாம் சமையல் வேலை, என்னைச் சுற்றியோ மூணும் பசங்க, அதனால் கோலம் போடுவது எப்போதும் என்னோட பொறுப்பு. சாதாரண காலங்களில் கோலம் போடுவது பெரிய பிரச்னை இல்லை. ஆனால் மார்கழி மாசம் குளிரில் போடணும் பாருங்க., யாரையாவது அதில் மாட்டி விடலாமானு மனசு அடிச்சுக்கும்.
சும்மாவெல்லாம் போய் கோலம் போட்டுட முடியாது. சந்தைக்கடை புழுதி மண்ணை முதலில் சுத்தமாகப் பெருக்கணும். பிறகு புழுதி அடங்கத் தண்ணீர் தெளிக்கணும். இப்போ மாதிரி பைப்பைத் திறந்தால் தண்ணீர் வரும் வசதியெல்லாம் அப்போ கிடையாது. வாளி போட்டு கிணத்துலேயிருந்து தண்ணி இறைச்சுத் தெளிக்கணும். பசங்களெல்லாம் ஜாலியா தூங்கிட்டு இருக்கும்போது பொண்ணுங்க மட்டும். மாங்கு மாங்குன்னு தண்ணி இறைச்சு தெளிக்கணும்.
ஆரம்ப காலங்களில் அவஸ்தையாகத் தெரிந்தது, நாள் செல்லச் செல்ல மிகவும் பிடித்த ஒன்றாகிப் போனது. கோலப்பொடி விரலில் எடுத்து கோலம் போட ஆரம்பித்ததும் எனக்குள் ஒரு ஓவியன் இயல்பாகவே தலையெடுப்பான்.
அந்தக்கால வார இதழ், நாழிதழ் எல்லாம் கோலம் பகுதியோடுதான் வரும். அந்த பேப்பர் பகுதிகளைத் தேடி அலைவது, கட்டிங் எடுத்து சேகரித்து வைப்பது எல்லாம் சுகமான காலங்கள்.
கோலங்களில்தான் எத்தனை விதங்கள். தினமும் வாசலில் போடுவது கோலப்பொடி. சாதாரண நாட்களில் வெள்ளைக் கலரில் சிரிக்கும் கோலங்கள், பண்டிகைக் காலங்களில் பல வண்ணங்களில் மலர்ந்து பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்.
அன்றாடம் போடும் போது அவசரக்கோலமாக அள்ளித்தெளித்து விட்டு பள்ளி செல்ல ஓடினாலும், விசேஷ நாட்களில் தெருவை அடைத்து வாசல் முழுக்க கோலம் போட்டால்தான் மனது திருப்தியாகும்.
கம்பிக் கோலம், புள்ளிக் கோலம்னு ரெண்டு தினுசு கோலம் உண்டு. கம்பிக் கோலம் சுலபமானது, ரெண்டு புள்ளிகளை அங்காங்கே இணைத்து இஷ்டப்பட்டபடி போடலாம் (சுடிதார் போட்ட கல்லூரி மாணவி மாதிரி) வரையறைகள் அதிகம் கிடையாது. கம்பிக் கோலத்தில் அழகழகான உருவங்களை வரையலாம். ரங்கோலி கோலம் கூட இதிலிருந்துதான் வந்திருக்கும். புள்ளிக் கோலம் கொஞ்சம் கடினமானது. வளைச்சு வளைச்சுப் போடணும். ஒரு வளைவு தப்பாகப் போனாலும் , முழுக் கோலமும் தப்பாகப் போய்விடும் ( புடவை கட்டும் பெண் மாதிரி, மடிப்பு வராட்டி சேலை கட்ட முடியாது) எனக்கு ரெண்டு கோலமும் அத்துப்படி என்பதால் சுடிதாரும் புடவையும் மாறி மாறி கட்டுவேன்.
கோலத்திற்குப் புள்ளி வைப்பதில்தான் திறமையே இருக்கின்றது. அடிஸ்கேல், கம்பு , நூல் போன்ற எந்த உதவியும் இல்லாமல் கண்ணும் விரலும் ஒன்றிணைந்து புள்ளி வைக்க வேண்டும். நேர் கோட்டில் வைக்கணும், புள்ளிகளுக்கு இடையில் இடைவெளி சமமாக இருக்கணும், புள்ளிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கணும். நேர் புள்ளியும் உண்டு, ஊடு புள்ளியும் உண்டு. புள்ளி சரியா வைச்சுட்டாலே பாதி கோலம் போட்டு முடிச்ச மாதிரிதான். என்ன? கணக்குப் பாடம் கேட்ட மாதிரி இருக்கா? கோலம் எல்லாமே கணக்கின் அடிப்படையில்தான். அது சரியில்லை என்றால் அலங்கோலம் ஆகிவிடும். அஞ்சு புள்ளியில் போடுற கோலம் , அதன் பெருக்குத் தொகைகளில் ( பத்து, பதினைந்து புள்ளிகள் கூட) அகலப்படுத்து வகையில் நிறைய கோலங்கள் உண்டு.
மார்கழி மாசம் வெறுமனே கோலம் மட்டும் போட்டுவிட்டு போக முடியாது. அதன் மேல் சாணி பிள்ளையார் பிடித்து வைத்து, அதில் ஏதாவது பூ சொறுக வேண்டும். அப்படி பூ வைப்பவர்கள் வீட்டில்தான் பொங்கலுக்கு அடுத்த நாள் குழந்தைகளின் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். அதனால் எங்கள் வீட்டு வாசலில் எல்லா மார்கழியும் பிள்ளையார் பூ வைத்திருப்பார். எங்க அப்பா சாமியே கும்பிடுவதில்லை, சாஸ்திரமே பார்ப்பதில்லை என்றலும் கூட குழந்தைகளின் குதூகலத்துக்கு தடை சொன்னதும் இல்லை, விமர்சித்ததும் இல்லை.
மார்கழி மாசம் பூ கிடைப்பது ரொம்ப கஷ்டம். எல்லாப் பூவும் வைக்க முடியாது. பூசணி, பீற்கு, தங்கஅரளி, செம்பருத்தி போன்ற சில வகைகள்தான் வைக்கலாம். இதுலே எந்தப் பூவும் எங்க வீட்லே கிடையாது. எப்பவாவது பீற்கம்பூ மட்டும் கூரைமேல் இருக்கும். மத்த நாட்களிலெல்லாம் பூவுக்கு அலைவதே ரொம்ப சுவாரஸ்யமான அநுபவங்கள்.
தெரிந்தவர்களின் தோட்டத்தில் அநுமதி பெற்று காலையிலேயே எழுந்துபோய் பூ பறிப்பது வாடிக்கை. அதிலும் காய் பூக்களைப் பறித்துவிடக்கூடாது, அதிகாலை இருட்டில் செடிகளை மிதித்து நாசப் படுத்திவிடக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆனாலும் எல்லா நாளும் அங்கும் பூக்கள் கிடைக்காது. தொலைவில் உள்ள தெரிந்தவர்களின் தோட்டத்திலிருந்து முந்தின நாளே மொட்டுக்களைப் பறித்து வந்து தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து சில நாள் சமாளிக்கலாம். அப்படியும் சில நாள் பூவே இல்லாத போது பக்கத்துத் தோட்டங்கள், சிவன்கோவில் நந்தவனம் எல்லாவற்றிலும் ஏறிக்குதித்து திருட்டுத்தனமாகப் பூ பறித்த நாட்கள் திரில்லானது. பராமரிப்பற்றுக் கிடக்கும் புதர்களில் முளைத்துக் கிடக்கும் பூக்களைப் பறித்து முள்குத்தி அவஸ்தைப்பட்டதும் வித்தியாசமான அநுபவங்கள்தான்.
பிள்ளையாரை பிடிப்பது மட்டும் ஈஸியா? எங்க வீட்லே மாடும் கிடையாது சாணியும் கிடையாது. பால் ஊத்துறவங்க வீட்லே போய் சாணி எடுத்து வைச்சுக்கணும். நிறைய ஸ்டாக் வைக்கவும் முடியாது, காஞ்சு போயிடும். அப்பப்போ போய் எடுத்துட்டு வரணும். சில சமயம் சந்தை நாட்களில் வண்டி கட்டி வரும் மாடுகள் சப்ளையர்கள் ஆயிடுவாங்க.
மாட்டுச் சாணத்துக்கு இந்த மருத்துவர் அந்தக் காலங்களில் அல்லல் பட்டது விசித்திரமாக இருக்குதில்லே. ஆனால் , இந்த அநுபவங்களெல்லாம் பின்னர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் போது அசூயை படாமல் அனைத்து பொருட்களையும் பிணியாளர்களையும் கையாள முகாந்திரமாக இருந்திருக்கிறது.
இவ்ளோ கஷ்டப்பட்டு பூ பறிக்க தேவை இருந்திருக்காதுதான்.ஒரு பூ வைச்சாலே போதும். ஆனால் எத்தனை பூக்கள் கிடைக்கிறதோ அதைப் பொறுத்து மூணு, ஐந்து, ஏழுன்னு ஏகப்பட்ட பிள்ளையார்கள் பிடித்து வைக்கலாம். ஒற்றைப்படையில்தான் வைக்கணும் எண்னிக்கையைப் பொறுத்து பெரிய பெரிய கோலமாகப் போடலாம். பூசணிப்பூ கிடைத்தால் ரொம்ப அதிர்ஷ்டம். பெரிய பூவாக இருக்கும், வாசலே நிறஞ்ச மாதிரி இருக்கும். ( வாசலிலே பூசணிப்பூ வைச்சுப்புட்டா வைச்சுப்புட்டா’ன்னு இப்போ ஒரு சினிமா பாட்டுகூட இருக்கு)
வாசலோடேயே நின்னா எப்பிடி? வீட்டுக்குள் போடும் கோலங்கள் பத்தி தெரிய வேண்டாமா? எங்க வீடு சாணி பூசின மண் தரை ஒரு புறம், காரை போட்ட உடைந்த தரை மறுபுறம். ரெண்டுமே கோலம் போட்டால் புதுப் பொலிவு பெற்று விடும். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான கோலம் போடுவோம். மாவுக்கோலம், சுண்ணாம்புக் கோலம், வண்ணம் கரைத்த மாவுக் கோலம்- அடடா எத்தனை விதங்கள், எவ்வளவு அற்புதங்கள்.
தைப்பொங்கல், திருக்கார்த்திகை , பிள்ளையார் சதுர்தியெல்லாம் மாவுக் கோலம்தான். தீபாவளிக்கு சுண்ணாம்புக் கோலம்னு நினைக்கிறேன்.சிறிய அகலப் பாத்திரத்தில் மாவு கரைச்சு எடுத்துகிட்டு கோலம் போட ஆரம்பிச்சா நேரம் போறது தெரியாமல் போட்டுக் கொண்டு இருந்திருக்கேன். அநேகமா எல்லா வேலையும் முடிஞ்சு படுக்கப் போற நேரத்தில்தான் கோலம் போட ஆரம்பிக்கணும், அப்போதான் நல்லா காஞ்சு பளிச்சுன்னு தெரியும். இல்லாட்டி எல்லா வாண்டுகளும் கோலத்தைக் கலைச்சிடுவாங்க.
கரைச்ச மாவை சின்ன துணியில் நனைத்து உள்ளங்கையில் வைச்சுகிட்டு , சொட்டு சொட்டா மோதிர விரல்வழியா இறங்குற மாதிரி பக்குவமா பண்ணணும். விரல் அசைவுக்கு ஏற்ப தரையில் கோலங்கள் உயிர் பெறும். ஏதாச்சும் சின்ன தப்பு வந்தால் துடைக்க இடது கையில் ஈரத் துணி இருக்கும். விரல் நுனி தரையில் உரசி காயமாகாமலிருக்க சின்ன ரப்பர் உறை போட்டுக்குவோம். அந்த கால பீடிங் பாட்டில் ரப்பர்தான் தற்காலிக விரல் உறை!! மாவுக்கோலம் போடும் போது பிரச்னை இல்லை. சுண்ணாம்புக் கோலம் போடும் போது சில சமயம் கையெல்லாம் வெந்துவிடும். ரப்பர் போடாத இடங்கள் சுருக்கம் வந்து எரியும். ஆனாலும் கோலம் போட்டு முடிச்சுட்டு ஒருதரம் தரையப் பர்க்கும் போது அந்த அழகில் கஷ்டமெல்லாம் கடந்து போய்விடும்.
சின்ன இடைவெளிகூட இல்லாமல் பெரிதும் சிறிதுமாக தரையை அடைத்து கோலம் கோலோச்சும். வெளித் திண்ணைகூட கோலத்தில் ஜொலிக்கும்.
திருக்கார்த்திகையின் போது கரைத்த மாவில் கையை முழுவதுமாக நனைத்து வாசல் கதவு முழுவதும் ஒற்றி கை அச்சுவைப்போம். ( நல்ல வேளையாக அப்போது கை சின்னம் வந்திருக்கவில்லை. இல்லாவிட்டால் எங்க அப்பாவின் அரசியல் சின்னமே கேலி பண்ணப்பட்டிருக்கும்).
பள்ளிப் படிப்பு முடியும் வரை கோலம் என் துறை ( department) சார்ந்து இருந்தது. கல்லூரி சென்ற பிறகும் கூட அதை மாற்றாமல் எனக்காக தரையெல்லாம் காத்திருக்கும். விடிய விடிய கோலம் போடுவேன். முன்வாசலில் இரவில் கோலம் போடுவதென்றால் ஒத்தை பெஞ்சில் அப்பா காவலுக்கு படுத்திருப்பார்கள். இரண்டாம் ஆட்டம் சினிமா சென்றவர்கள் வரும்வரை கோலமும் தொடரும்.
கோலங்கள்
கோடுகளைத் தாங்கினாலும்
நினைவுகள்
கோலத்தில் சிக்கிக்ககொண்டது.