Friday, September 30, 2005

நெகடிவ் க்ரூப் ரத்தம்

இரத்ததானம் பற்றி சிமுலேஷன் அவர்கள் கதையைப் படித்தவுடன் Rh negative group பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியது.
பாஸிடிவ் வகையைவிட நெகடிவ் வகை கொஞ்சம் அரிதானதுதான். அதிலும் பெண்களுக்கு நெகடிவ் ஆக இருந்துவிட்டால் சில பல பிரச்னைகள் குழந்தைப்பேறைப் பாதிக்கும். முதல் கர்ப்பத்தை நெகடிவ் தன்மை பாதிப்பதில்லை. ஆனாலும் கர்ப்பகாலங்களில் வெகு அபூர்வமாக ஏதேனும் ரத்தக் கசிவு கர்ப்பப்பையில் ஏற்பட்டு குழந்தைக்கு தொந்தரவு தரலாகாது என்பதால் அதற்குத் தேவையான பீரியாடிக் செக்கப் செய்யப்படும். குழந்தை பிறந்ததும், சிசுவின் ரத்த வகையும் தாயின் க்ரூப்போல் நெகடிவ் ஆக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. பாஸிடிவாக இருக்கும் பட்சத்தில் தாய்க்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும். இது அடுத்த கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்காகவே. அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் அடுத்த குழந்தைக்கு கர்ப்பத்திலேயே ஒருவித மஞ்சள் காமாலையும் அதுசார்ந்த உடல் ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அக்குழந்தைக்கு பிரசவத்துக்கு முன் கருவறையிலேயே(intra uterine)ரத்ததானம் செய்யவேண்டிய சூழல்கூட ஏற்படலாம்.
பிரசவ சமயங்களில் பரிசோதனை செய்துகொள்வது ஓரளவு எல்லோராலும் நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டதால் இது சம்பந்தமான பிரச்னைகள் குறைந்துள்ளது. ஆனால் மாறிவரும் பொருளாதார தேவைகளால் முதல் குழந்தையையே அபார்ஷன் செய்துகொள்ளும் நிலைமையும் அதிகரித்து வருகிறது. அதுவும் பதிவு பெற்ற மருத்துவர்களன்றி தாதியரிடமும் போலி மருத்துவர்களிடமும் செய்துகொள்ளும் அவலமும் இருக்கிறது. அப்போது ரத்தவகை கண்டு பிடிக்கப்படாமல், உரிய தடுப்பூசி போடப்படாமல், அடுத்த குழந்தையை ஆபத்துக்குள் தள்ளி விடுகிறார்கள். இதில் மணமாகாமல் கருவுறும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் கருக் கலைப்பிற்கான மாத்திரைகள் மெடிகல் ஸ்டோர்களில் டாக்டரின் பரிந்துரையின்றி மிக எளிதாகக் கிடைக்கிறது. நன்கு படித்தவர்கள்கூட எளிதாகக் கிடைக்கும் யூரின் கிட்கள் மூலம் பிரசவத்தை உறுதி செய்துவிட்டு பார்மஸியில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுக் கருவைக் கலைத்துக் கொள்கிறார்கள்.??!! அடுத்த கர்ப்பத்தின்போது பரிசோதனையில் நெகடிவ் என்று சொல்லும்வரை அது பற்றிய விழிப்புணர்வே அவர்களுக்கு இருப்பதில்லை.

இதற்கு போடப்படும் தடுப்பூசியின் விலை கொஞ்சம் அதிகமே. சுமாராக 2500-3000 ரூபாய் ஆகிவிடும். ஆனால் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகவே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் ஆனால் கூட, டாக்டரின் பரிந்துரையின் பேரில் தடுப்பூசி போடமட்டுமே கூட அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம். இந்த வசதி பிரசவத்துக்குமட்டுமே, கருக்கலைப்புக்கு அல்ல.
பிரசவத்தின் பிறகு போடும் தடுப்பூசியின் அளவில் பாதி அளவு கருக்கலைப்பிற்கு பின் போட்டால் போதுமானது.
இரண்டாவது பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பத்தடை செய்துகொள்பவர்கள்கூட தடுப்பூசி போடவேண்டும். பின்னாளில் ஏதேனும் ரத்தம் செலுத்தவேண்டியிருந்தால் தொந்தரவு வராமலிருப்பதற்காக..

இரத்ததான தினம்

இரத்ததான தினம்- அக்டோபர் 01.

``மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல
ரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”


சுழலுவதற்கே என்று உருவாக்கப்பட்டது இரத்தம்
மீண்டும் ஊறப்போவது நிச்சயம். பரிசோதனைக்குழாய்க் குழந்தையை சாத்தியமாக்கிய மருத்துவ முன்னேற்றத்தால்கூட செயற்கை இரத்தத்தைத் தயாரிக்க இன்றளவும் இயலவில்லை. இரத்த இழப்பை இரத்தத்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும்.

18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்
ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் ( 85%) இருக்கவேண்டும்
இரத்த அழுத்தம் இயல்பாக (மேல் அளவு 100-140 & கீழ் அளவு 60- 90) இருக்க வேண்டும்.
மூன்று மாததிற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.
இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகள் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொருடைய உடலிலும் தோராயமாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானத்தின்போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லி லிட்டர் மட்டுமே. அதுவும் 24 மணி நேரத்துக்குள்ளாக உடலால் மீண்டும் ஈடுசெய்யப்படும்.

Ø கருவுற்றிருக்கும்போதும்,தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்ததானம் செய்ய வேண்டாம்.
Ø பெரிய அறுவை சிகிச்சை செய்த 6 மாதங்களுக்கும், சிறிய அறுவைசிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கலாம்.
Ø மலேரியா சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் தானம் செய்வதைத் தவிர்க்கவும்.
Ø பால்வினை/ எச்.ஐ.வி. நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்யலாகாது.

அக்டோபர் 01- தேசிய தன்னார்வ இரத்ததான நாள். மேற்கு வங்காளத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தன்னார்வலர் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகமெங்கும் இரத்ததான தன்னார்வலர் (voluntary donors) பட்டியல் தயாரிப்பு மும்முரமாக நடைபெற உள்ளது.
உயிர் காக்கும் உன்னதப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இரத்த தானம் செய்யுங்கள். அருகிலுள்ள இரத்த வங்கியை அணுகுங்கள், இரத்தக் கொடையாளராய்ப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
மேல் விபரங்களுக்கு:
தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம்,
417, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8.
தொலைபேசி: 044- 28190467/28190891

நன்றி: ``இமைகள்”(இந்திய மருத்துவக் கழகம் வழங்கும்
மருத்துவ மாத இதழ்)

Tuesday, September 27, 2005

சூழ்நிலைக் கைதிகள்!

தேன்துளியின் பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:
(கற்பு எனப்படுவது யாதென்று தெளிவாக விளக்கியிருந்த தோழிக்கு நன்றி. அவரளவு வெளிப்படையாக என்னால் எழுத முடியாதென்பது யோசிக்கத் தூண்டும் உண்மை-)
ஒரு யதார்த்தமான விஷயத்தை வெளிப்படையாக பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கூட சில தடைக்கற்கள் நாம் வாழும் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கிறது.
உதாரணமாக குஷ்புவின் பேட்டி, சரியான பிரசுரமோ அல்லது திரித்து சொல்லப்பட்டதோ,கடந்த இரண்டுமூணு நாட்களாக படும் அவலம். ஒரு மும்பை பட உலக நடிகையோ, வெளிநாட்டில் settle ஆகிவிட்ட நடிகையோ இப்படி சொல்லியிருந்தால், கருத்து முன்னேற்றம் பெண்களிடம் வந்துவிட்டதாக மேற்கோள் காட்ட பயன்பட்டிருக்கும். தமிழ்நாட்டு மருமகளானதால் அழ வேண்டிய நிலைமை. தனிப்பட்டவர்களின் கருத்தைப் பொறுத்துதான் ஒரு கலாச்சாரமே மாறப் போகிறதென்றால், அப்படி நிலையற்ற கலாச்சாரம் என்ன பயனளிக்கப் போகிறது?
ஒரு பெண்ணை மனரீதியாகக் காயப்படுத்த கற்பு என்ற வார்த்தைதான் தோதாக இருக்கும் என்பதால், கற்பு சம்பந்தப்பட்ட உடை அணிதல் தொடங்கி, ஆண்களுடன் சகஜமாகப் பேசுவது வரை ஏகப்பட்ட வறையறைகளை கருவிலிருந்தே திணித்துத் திணித்து வளர்க்கப்படுகிறார்கள் பெண்கள். அதில் சற்று விலகி நின்று யோசிக்கும் பெண்களுக்கேகூட அடிமனதில் சரியா தவறா என்ற தடுமாற்றம் அவ்வப்போது வந்துவிடுகிறது. வளர்ப்புக்கும் நினைவுகளின் தாக்கங்களுக்கும் இடையே பெண்கள் தடுமாறும் இடைவேளைப் பகுதி இது. இதிலிருந்து எழும்பி வரும் பெண் சமுதாயம் அடுத்த தலைமுறைக்குக் கருத்து சுதந்திரம் ஊட்டி வளர்க்கவேண்டும். அப்போதுதான் இத்தைகைய புகைச்சல்கள் ஓயும்.அதுவரையில் `சமூகம் என்பது நாலு பேர்’தன்மைதான், தனிமனித உணர்வுகள் அல்ல.

Saturday, September 24, 2005

பதிவுகள் வீணாகலாமா?

படித்துவிட்டுக் கிழிக்க
பத்திரிகையும் அல்ல
பார்த்தவுடன் மறக்க
திரைப்படமும் அல்ல.

படித்த பிறகும்
பலமுறை திரும்பத் திரும்ப படித்து
பின்னூட்டங்களில்
பதில்களை அலசும் சுவையான பதிவுகள்.

முகம் காட்டாவிடினும்- ஓரளவு
முகவரிசொல்லும் உறவுகள் இங்குண்டு
முகவரி அற்றவர்களைத் தாக்கும்
முயற்சியாகவும் பதிவுகள் இங்கு கண்டேன்.

எழுதுவது
அவரவர் சொந்த விருப்பம்
வரம்புடன் எழுதுவது
மற்றவர்கள் மனதில் உயர்ந்து நிற்கும்.

சர்ச்சைகளும் சண்டைகளும்
இங்கும் வேண்டும்-அது
உறவுகளைப் பலப் படுத்தவே அன்றி
நட்புகளை நலியச் செய்ய அல்ல.

Thursday, September 22, 2005

கவிதைகள் சொல்லவா......

பழைய கவிதையைக் கிறுக்கினேன் காகிதத்தில்
பதிக்கத் துணிவில்லை இணையத்தில்
பார்த்துவிடுவாளோ என் பெண்ணுமோ என்று
பயத்தில் ஒளித்துவைத்தேன் நானும் இன்று!

காதல் கவிதையென்பதால் வந்த குழப்பமா
காதலித்த நாட்கள் பற்றிய
கதைகள் சொல்லவேண்டுமோ என்ற
கற்பனை தோன்றியதால் வந்த மயக்கமா?

நேர்மை இல்லையோ நெஞ்சில் என்று
நெருடலாய் ஒரு விவாதம்...
வலைத் தளங்களில் மட்டும்
வேறு முகம் காட்டுகிறோமோ?

விதண்டாவாதமாய் விமரிசிக்க முடிகிறது
வெட்டித்தனமாக தர்க்கம் செய்யமுடிகிறது
வீட்டுக் காரியமென்று வரும்போது
வலைவேறு வாழ்க்கைவேறு என்றாகிறது!

வலைஞர்களின் குடும்பம்
வலைப்பூக்களை வழிபடுமா
காகிதப் பூக்களென்று
கசக்கி எறிந்துவிடுமா?

Monday, September 19, 2005

பத்திரிக்கைகள்

எங்க ஊரில் வெளிவரும் குறிப்பிட்ட பத்திரிக்கையின் விளம்பரப் பகுதி ஒரு வித்தியாசமான ஒண்ணு. தினசரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுதோ இல்லையோ, இரங்கல் செய்திகள் Highlighted-ஆக இருக்கும். பக்கத்து தெரு இரங்கல் கூட பத்திரிக்கை பார்த்துதான் அனேக நேரங்களில் தெரிய வரும். மிக நெருங்கியவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறிவிக்கும் விதமாக அறிவிப்பாக வருவது நல்லதுதான். ஆனால் மிக முக்கிய புள்ளிகள் இறப்புக்கு `வருந்துகிறோம்’ சொல்பவர்கள், சில நேரங்களில் பெருவாரியான பக்கங்களை ஆக்ரமித்துக் கொள்வதால், அத்தியாவசியமான செய்திகள் கூட ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடப்படும்!

காலையில் எழுந்ததும் எந்த வீட்டு இரங்கலுக்கு செல்ல வேண்டுமென்று plan பண்ணுவது வேதனை கலந்த routineதான். இதில் இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், வாழ்த்துகிறோமும் வருந்துகிறோமும் அடுத்தடுத்து பிரசுரிக்கப் படுவதுதான். வயசு ரொம்ப கொஞ்சமாக இருக்கே, என்ன காரணத்தால் இறந்திருப்பாரோ என்று கவலையுடன் பார்த்தால், வெளிநாடு போக வாழ்த்துகிறோம் என்றிருக்கும். தப்பர்த்தம் பண்ணிக்கொண்டதுக்காக குற்ற உணர்ச்சியுடன் அடுத்த பக்கத்துக்குத் தாவுவோம். மணநாள் வாழ்த்தும், மரண வருத்தமும் கூட இதேபோல்தான் பிரசுரிக்கப்படும்.

மற்ற அறிவுப்புகளெல்லாம் ஒரே பக்கத்தில் வந்தாலும் இரங்கலுக்கு மட்டும் தனிபக்கமோ, குறிப்பிட்ட இடமோ கொடுக்கலாமே! இது எங்க ஊரில் மட்டும் நடப்பதா இல்லை மற்ற ஊர்களிலும் உண்டா என்று தெரியவில்லை. தெருத்தொண்டன் போன்ற பத்திரிக்கைக்காரர்கள் இதைத் திருத்த சொல்லலாமே!

Sunday, September 18, 2005

பாவப்பட்டஜென்மங்கள்-2

சமீபத்தில் ஒரு தொடர்கல்வி நிகழ்ச்சிக்காக என்னை அழைக்க வந்தவர் கொடுத்த புள்ளிவிபரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

எய்ட்ஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் விகிதாச்சாரம்:
குடும்பப் பெண்கள்- 22%
ப்ரொபஷனல் - 10%
பாராமெடிகல் - 17%
........ - x
......... - x
commercial sexual workers - 2%

மற்ற புள்ளிவிபரங்கள் நான் சொல்ல வந்த கருத்துக்கு முக்கியமல்ல, எனவே அவ்வளவையும் எழுதவில்லை.

மேற்கூறிய புள்ளி விபரங்களைப் பார்த்தால் பளிச்சென கண்ணில் படுவது என்ன? எய்ட்ஸ் தாக்குதல் குடும்பப் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் இவையெல்லாம் பெரும்பாலும் தற்செயலாகவே, முதல் பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அது மேல்மட்டத்தை சேர்ந்த படித்த குடும்ப பெண்களையும் விட்டு வைப்பதில்லை.
பையன் என்ன படித்திருக்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்றெல்லாம் விசாரித்து ஏகப்பட்ட பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணும் பெற்றோர்க்கு இந்த விஷயத்தை அறிந்து சொல்ல மட்டும் எந்த வழியுமே இல்லையே! ஜாதகப் பரிவர்த்தனைகள் பார்க்கும் போது இருபாலாருக்குமே இந்த பரிசோதனையும் பார்க்க முடிந்தால் எத்தனை இழப்புகளைத் தடுக்க முடியும். ஆனால் சாத்தியப்படாத ஒன்று.

கமர்சியல் செக்ஸுவல் வொர்க்கர்ஸுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மறுபடி மறுபடி புகட்டப்படுவதால், அதற்குத் தேவையான பாதுகாப்பு முறைகளைக் கடைப் பிடித்து விடுகிறார்கள். ஆனால் நம் குழந்தைகள் எத்தனை பேருக்கு செக்ஸ் குறித்த சரியான அறிவும், எய்ட்ஸ் பற்றிய கல்வியும் போதிக்கப் படுகிறது? பாலியல் கல்வியை கட்டாயப் பாடமாக்குவது எத்தனை அறியாமைகளைப் போக்கும்! ஒரு தாயோ தந்தையோ சொல்லித் தருவதை விட ஆசிரியர்கள் மூலம் கிடைக்கும் அறிவுத்திறன் நிச்சயமாக சிறந்ததே!

அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன?
பாசிடிவ் என்று கண்டுகொள்ளப் பட்டதும், ஒன்று டாக்டரை மாற்றிக் கொள்வார்கள், அல்லது ஊரை மாற்றிக் கொள்வார்கள், அதுவும் இல்லையெனில் கணவர் காணாமல் போய்விடுவார். கடைசியாக இந்த பரிசோதனை வசதிகளே கிராம தாதியரிடம் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். வருங்கால சந்ததியின் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு தங்கள் வாழ்க்கையும் கேள்விகுறியாகி நிற்கிறார்கள்!!!!?

பாரதியின் புதுமைப் பெண்களும் பாவப்பட்ட ஜென்மங்களும்

நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட பாரதத்தின் புதுமைப் பெண்களைப் படைத்தது பாரதியின் புதுமைத் தமிழ். அதைப் படிப்பதோடு முடிந்துவிடுகிறது பாரதீயர்களின் புதுமையோங்குதல்.

கலாச்சாரப் பரிவர்த்தனைகள் என்ற பேரில் மேல்நாட்டு பண்புகளை ஏற்றுக்கொள்ளும்போதும், தங்களுக்கு இயைந்தது எதுவோ அதுமட்டுமே உண்மையான கலாச்சாரம் என்று வெட்டித்தனமான வியாக்கியானங்களுடன் பின்பற்றுதலும் ஒரு விதமான மாய்மாலமே. அங்கு பெண்களுக்குத் தரப்படும் சம உரிமையைத் தம் வீட்டுப் பெண்களுக்கு என்றாவது தந்ததுண்டா?

பெண்களுக்கு புதிய சுதந்திரங்களைக் கொடுக்காட்டியும் பரவாயில்லை, இருப்பதை எடுத்துக்காம இருந்தாலே போதும். என்னோட நெருங்கிய தோழி திருமணத்துக்குப் பிறகு எப்போதும் பட்டு சேலையிலேயே நடமாட ஆரம்பித்தாள். கணவர் பசையுள்ளவர், அதனால் அப்படியாக்கும்னு நெனைச்சுக்கிட்டோம். ஆனால் ரொம்ப நாள் கழிச்சு தற்செயலா அதைப் பத்தி பேசும்போதுதான் உண்மையான காரணம் தெரிந்தது. மற்ற சிந்தெடிக் சேலைகள் உடலோடு ஒட்டித் தெரிவது அவருக்குப் பிடிக்கலையாம், அதனால்தான் பட்டு போர்த்தப்பட்டது! அது ஆபாசமா அடக்கமாங்கிறது முக்கியமில்லை, ஒரு சாதாரண ஆடை விஷயத்தில்கூட தன் கருத்துகளுக்கே முக்கியத்துவம் வேண்டுமென்று நினைப்பவர்கள், பெண் சுதந்திரம் பற்றி நினைப்பது எங்ஙனம்? இது ஒரு துளி எடுத்துக்காட்டுதான்.

ஆண்குழந்தை வேண்டுமென்பதற்காக மறுபடி மறுபடி மடிதாங்க வைக்கும் மஹானுபாவர்கள் இங்கே அதிகம். மருத்துவரீதியாக உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர் கூறினால் கூட சட்டை செய்யாமல் மறுபடியும் கருத்தரிக்கச் செய்யும் அவலங்களும் அதிகம். மூன்றாவது முறையாக சிசேரியனுக்கு வந்தபோதும் பெண்குழந்தை என்பதால் கருத்தடை ஆப்பரேஷனுக்கு சம்மதம் கொடுக்காமல் ஓடிப்போய்விட்ட கணவனை எந்த கணக்கில் சேர்ப்பது? அவர் கையெழுத்துப் போடாட்டியும் நீ ஒத்துக்கொண்டால் இப்போதே கருத்தடை செய்துவிடுகிறேன் என்று கேட்டபோது சம்மதம் சொல்ல முடியாமல் மெளனமாக அழுத பெண் இன்னும் என் கண்ணில் இருக்கிறாள். பெண்சிசுக்கொலை என்பது, அழிக்கப்படும் கருவை மட்டும் பாதிப்பதில்லை, ஏற்கனவே வளர்ந்துவிட்ட தாய்மையையும் அதிகம் பாதிக்கிறது. சிசுவுக்கோ ஒருமுறை மரணம். தாய்க்கோ மறுபடி மறுபடி மரணம்.

பெண்குழந்தை உருவாவதற்குக் காரணமே பெண்கள்தான் என்று நம்ப வைத்துவிடும் சாமர்த்தியமும் இந்த ஆண்களுக்கு உண்டு. குழந்தை பெற்றுக் கொள்வது தேவையா இல்லையா என்று முடிவெடுக்கக் கூட பெண்களுக்கு உரிமையிருக்கிறதா? வாடகைக்கு விடப்படும் இடத்திற்கு என்ன மதிப்போ அதுதான் பெண்மைக்கும். திருமணமானவுடனேயே மசக்கை வரவில்லையே என்று கவலைப்படுவார்களேயன்றி அதைத் தாங்கும் பக்குவம் அந்தப் பெண்ணுக்கு உண்டா என்று ஆராய்வதில்லை.. இப்படி எல்லாவகையிலும் `ஆண்டு’கொண்டிருப்பவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதாகச் சொல்வது வேடிக்கையே!

Saturday, September 17, 2005

குடிமகனே!.....பெரும்குடிமகனே!!

தண்ணீரில் தத்தளித்து
தரைமேலே தள்ளாடி
தனக்குள்ளே தடுமாறி
தவிக்கிற மனசு!

ஒரு குடிமகனின்
ஒரு இரவுக் கதை!

தடியால் அடிவாங்கினாலும்
தாங்கிப்பிடித்து தூங்கவைத்து
வாந்தி எடுத்தாலும் கையில்வாங்கி
பக்குவப்பட்ட மனசு!

குடிமகன்களின் மனைவியரின்
அன்றாட இரவுக் கதை!

Thursday, September 15, 2005

எதனைக் கண்டான்.................மதங்களைப் படைத்தான்

மதத்தை மதிப்பவர்கள் ஏன்
மனிதர்களை மதிக்க மறுக்கிறார்கள்?
கடவுளுக்கு வக்காலாத்து வாங்குபவர்கள் ஏன்
கலவரங்களுக்கு சமாதிகட்ட முயலுவதில்லை?

மதம் என்ற மதம்பிடித்து ஒரு கூட்டம்
கடவுளைக் கட்சிக்கொடிசுற்றி காட்டும்!
மனம் வருத்தும் பின்னூட்டம்பல இட்டும்
வருந்தி வம்புக்கிழுக்கும் `நட்பு’ வட்டம்!

இடையில் கருத்துசொல்லப் புகுந்தாலோ
இடையிடையே எட்டிப் பார்த்தாலோ
இதுவரை என்ணியிருந்த கருத்தும் குழம்பி
இனிமேல் எதுசரியென்ற தெளிவும் இன்றி

மோட்டுவளையையும் மொட்டைமாடியையும்
வெறித்துப் பார்க்கும் `சேது’விக்ரம் ஆக்கிவிடும்!

வலைப்பூக்களிலும் கள்ளிகள் பூப்பதேனோ
விடைதேடி விழிகள் காத்திருக்கின்றனவே!

Wednesday, September 14, 2005

ஏட்டுச் சுரைக்காய் மருத்துவத்துக்கு ஆகுமா?

துளசியின் பதிவு பார்த்ததும் எனக்குள் தோன்றியவை.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பள்ளிக் குழந்தைகளின் முதல் கனவு, அனேகமாக டாக்டர் ஆவதாகத்தான் இருக்கும். மற்றைய தொழில் நுட்பங்கள் உலகளாவி விரிந்திருந்தாலும் இந்தக் கனவுகளை சிதைக்க முடிவதில்லை. அவ்வளவு உயரிய எதிர்பார்ப்புகளையும் உயர்ந்த நோக்கங்களையும் உடைய மருத்துவத் துறை இப்போது எப்படி இருக்கிறது?

மெடிகல் காலேஜ் சீட் வாங்குவதை விட செவ்வாய்க் கிரஹத்தை அடைவது மிகச் சுலபம் (வேறு உவமானம் கொடுத்து பிறகு அழித்துவிட்டேன்). இது கஷ்டப்பட்டு படித்து மெரிட்டில் வருபவர்களுக்கு மட்டுமானது. இப்போது குழந்தைகள் எல்லோரும் ரொம்ப நல்லா படிக்கிறாங்க. தேர்ந்தெடுப்பது மிகக் கடினமாகவே உள்ளது.ஒரு வழியாக எம்.பி.பி.எஸ்.முடித்தாலும் தகுதி அடிப்படையில் படித்த மாணவனுக்கு முது நிலை படிப்பு சேருவதற்கு பொருளாதார சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் எதேனும் பெரிய மருத்துவ மனையில் பகுதி நேர ஊழியமோ இல்லை, துளசி சொன்னது போன்ற க்ளினிக்கோ நடத்திக் கொண்டு மேற் படிப்புக்கு முயல வேண்டும்.அரசு வேலையில் சேர்ந்தால் மேற்படிப்பு சீட் கிடைப்பது சற்று சுலபமென்றாலும்,அரசு வேலையென்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.(செவ்வாய்க் கிரஹமே பரவாயில்லை)

ஆனால் சுமார் ரகமாகப் படிக்கும் மாணவனும் மருத்துவராகலாம், பெற்றோரின் பின்பலம் மற்றும் பண பலம் மூலம். முதுகலைப் படிப்பையும் தடையின்றி மேற்கொண்டுவிடுவார்கள். முடித்து வந்ததும் சகல வசதிகளுடனும் மருத்துவமனை ரெடியாக இருக்கும்; மருத்துவப்பணி இயல்பாகத் தொடரும்.அதற்காக இப்படி படித்து வருபவர்களெல்லாம் தகுதியற்றவர்கள் என்ற அர்த்ததில் சொல்லவில்லை. இவர்களது சமூக அங்கீகாரம், சம காலத்திய (contemporary) மெரிட் மாணவனின் சின்ன க்ளினிக்கைவிட அதிக தரம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது.

(எண்பதுகளில் மருத்துவம் படித்தவர்களில் ஒருசிலரே குறுகிய வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தாலும், பெருவாரியானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எல்லா சிறப்புத் துறைகளிலும் முக்கியத்துவத்துடன் விளங்குகிறார்கள். ஆனால் இப்போது `வாரிசு அரசியல்’, `சினிமாவில் வாரிசுகள்’ போன்று மருத்துவமும் வாரிசுகளைக் கொண்டு மருத்துவக் குடும்பம் என்ற மரபில் சென்றுகொண்டிருக்கிறது. தனிப்பட்டவர்களின் திறமை வெளிவருவது கடினமே. ஆலமரத்தடியில் வளரும் சிறு செடிபோலத்தான் சோபிக்கிறார்கள்)

இன்னுமொரு கூட்டம், குடும்பத்துக்கு ஒரு டாக்டராவது வேண்டும் என்ற பெருமைக்காக சாக்கு மூட்டையில் பணத்துடன்
அலைந்து கொண்டிருக்கிறது. இதில் யாருமே அந்த குழந்தைக்கு மருத்துவராவதற்கு விருப்பமிருக்கிறதா என்று கூட கவலைப் படுவதில்லை. சேர்த்து விட்டுட்டா எத்தனை வருஷம் கழிச்சுன்னாலும் டாக்டர்தானே. இப்போதைக்கு ப்ராக்கெட்டுக்குள்ளே போட்டுகிட்டப் போச்சு என்கிற விளக்கம் வேறு.

இந்த மூன்றுவிதமான மருத்துவர்களைத் தாங்கி வரப்போகின்ற வருங்கால மருத்துவ சந்ததியை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது. House-surgeoncy period-ல் கற்றுக்கொள்ளும் ப்ராக்டிகல் அறிவே ஒரு திடமான மருத்துவ அறிவை வழங்கும். ஆனால் இப்போதைய தலைமுறை அந்தக் காலகட்டத்தில் மேற்படிப்புக்கு சீட் வாங்கும் பொருட்டு நூலகத்திலேயே பொழுதைப் போகிவிடுகிறார்கள்.

ஏட்டுச் சுரைக்காய்த்தனமும், தெளிந்த எதிர்நோக்குகள் அற்ற படிப்பும் விழலுக்கிரைத்த நீராய் மருத்துவ உலகை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.( பெரிய டாபிக் இது-பின்னூட்டங்களைப் பொறுத்து இதன் திசை தொடரும்)

Sunday, September 11, 2005

`வாஸ்து'வுக்கு வைத்தியம் செய்யலாமா?

`வாஸ்து’; `நட்சத்திரம்’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.

ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யவெண்டுமென்று மருத்துவர் கூறிய மறு நிமிடமே நல்ல நேரம் குறித்த துண்டு சீட்டுடன் தாத்தாவோ அப்பாவோ வந்து விடுவார்கள். குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் கீழ்வரும் காரணங்களுக்காக குறைமாதக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூட தயக்கம் காட்டுவதில்லை-
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை ஆட்டி வைத்துவிடுமாம்; சித்திரை அப்பன் தெருவிலாம்; இன்னும் என்னென்னவோ பழமொழிகளும் புது மொழிகளும், இயற்கையான பிரசவ நேரத்தையே மாற்றிக்கொண்டு வருகின்றன- ஆனி, பங்குனி மாத இறுதி நாட்களின் சிசேரியன்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!

இதற்கெல்லாம் மருத்துவர்கள் ஏன் துணை போகவேண்டுமென்ற விவாதம் எழலாம். ஆரம்பகாலங்களில் elective caesarean செய்ய நாள் குறிக்கும்போது பெற்றோர்களின் விருப்பத்தை மதிக்கும்விதமாக அதற்கு துணை போன மருத்துவ உலகம் இன்று அதிலிருந்து மீளமுடியாமல் தர்மசங்கடத்தில் தவிப்பதுதான் உண்மை. குறிப்பிட்ட நல்ல நாளின் நல்ல நேரத்தில் எல்லாக் குழந்தைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம்;அதனால் எற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என விழி பிதுங்கி நிற்கிறது.

அதையும் தாண்டிய கொடுமை சமீப காலங்களில்! சுகப் பிரசவத்திற்குரிய வாய்ப்புகளையே தராமல் நல்ல நேரத்தில் பிரசவமாக வேண்டுமென்று, விரும்பி அறுவை சிகிச்சை செய்துகொள்ளுபவர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி செய்துகொள்பவர்களில் மருத்துவர்களும் அடக்கம் என்பதுதான் கவலை தரக் கூடியது.`படிப்பது ராமாயணம்னாலும் இடிப்பது ராமர் கோயில்தான்’ கதையாகிவிட்டது. அறிவியல் படித்தவர்களே அஷ்டமி நவமியைப் பிடித்துத் தொங்கும்போது
சாமான்யர்களைக் குறை சொல்லமுடியுமா? 37 வாரங்கள் முடிந்த குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தும்கூட, 35 வாரங்களில் சிசேரியன் செய்துகொண்ட சக மருத்துவரை எனக்குத் தெரியும்.

இத்தனை manipulations உடன் கணிக்கப்படுகிற நேரங்கள் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக இருக்கமுடியும்?? பிறக்கப் போகும் ஜீவனின் ஆரோக்கியத்தைவிட அதிக சக்தி வாய்ந்ததாகிவிட்டது அர்த்தமற்ற சாஸ்திரம்.

வாஸ்து பற்றியோ கேட்கவே வேண்டாம் . அது குறித்து எழுதினால் ஒரு புத்தகமே போடலாம். என் நண்பரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டபோது முதலில் அணுகியது ஜோதிடரைத்தான். புதுவீடு கட்டியதில் வாஸ்து சரிவர கடைப் பிடிக்கப்படாததால்தான் அத்தனை கஷ்டங்களும் என்று அவர் சொல்லிவிடவே, அதற்குப் பரிகாரமாக வீட்டை இடித்து உடைத்து மாறுதல் செய்தார்கள். அப்படி செய்த மூன்றே மாதத்தில் , நன்கு தேக ஆரோக்கியத்துடனிருந்த அவர் மனைவி அகால மரணமடைந்தார். அதற்கு அந்த ஜோதிடர் என்ன விளக்கம் கொடுத்தார் என் நான் கேட்கவில்லை.

வாஸ்து இன்னும் கப்பலேறி/விமானமேறி அமெரிக்கா போன்ற தூர தேசங்களுக்குச் சென்றிருக்காது என்று நம்புகிறேன்.

நண்பர்கள்

நட்பென்ற தேரில்
நாளெல்லாம் பவனி வந்தேன்
நண்பர்கள் மூலமே
நல்லவைபல நான் கற்றேன்.

இடையில் கொஞ்சம் கண்ணயர்ந்தேன்
இல்லற வாழ்வில் குடிபுகுந்தேன்
பாசமழையில் நனைந்தாலும்
பகிர்ந்து கொண்ட நட்புகள் இழந்தேன்
(தற்காலிகமாக)

கடமைகள் அரங்கேற்றிவிட்டு
அக்கடா என்று அமரும்போதுதான்
அடடா இழந்துவிட்டேனோ-என்
அருமை நண்பர்களை என பதைத்தேன்

ஆயிரம் மைலோ அன்றாட வாழ்க்கைச் சூழலோ
அழித்துவிடவில்லை எங்கள் நட்பின் பசுமையை
புரிந்துகொண்டேன் புரிதலின் சுகம்
அறிந்துகொண்டேன் நட்பின் ஆழம்!

Friday, September 09, 2005

பிஞ்சின் முத்தமா?பிஞ்சில் பழுத்த முத்தமா?

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து என் எட்டு வயது மகன் குறுகுறுவென்று அலைந்துகொண்டிருந்தான்.ஏதோ சொல்லத்துடிப்பது புரிபட வாயைக் கிண்டினேன். மடை திறந்து வெள்ளம் பாய்ந்தது (ஓட்டைப் பல் gap வழியாக).அவன் வகுப்பு குறும்புக்கார `மொஹ’ (முகமது) பண்ணிய `சேட்டை’ பற்றி!

டெஸ்க்கில் கைநீட்டிப் படுத்திருந்த வகுப்புத் தோழியின் கையில் சட்டென்று முத்தம் கொடுத்திட்டானாம். சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தான், நான் என்ன சொல்லுவேனென்று?
`அப்படியா? அப்புறம்’ன்னு நான் சாதாரணமாகக் கேட்டதில் அவனுக்கு ரொம்ப வருத்தம். எனக்கு சரியாகப் புரியவில்லை என்று யோசித்துக் கொண்டான் போலும். `அடுத்தாலே என்ன பண்ணினான் தெரியுமா?’ன்னு கேட்டுட்டு எனக்கு ரொம்ப நெருக்கமா வந்து `ஐ லவ் யூ சொல்லீட்டான்’ன்னு கிசுகிசுப்பா சொன்னான். இதுக்கு மேல அவனை கன்வின்ஸ் பண்ணாட்டி தப்புண்ணு அவனை விவாதத்துக்கு இழுத்தேன். லவ்னா என்ன, ஒருத்தரை ஒருத்தர் நேசிப்பதுதானேன்னு சில பல உதாரணங்களுடன் விளக்கினேன். அதனால் அந்த பையன் செய்ததைத் தப்பா நினைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தேன். `நீங்க சொல்றது வேற லவ் மம்மி, இது கல்யாணம் பண்ணிக்கிற லவ்’ ன்னு ஒரு விளக்கம் கொடுத்தான் பாருங்க அசந்து போயிட்டேன்! அதுக்கு பிறகு அவனுடன் பேசி கவனத்தை கொஞ்சம் மாற்றினாலும், அவன் புரிந்து கொண்ட விதத்தை மாற்ற முடிந்ததா என்று இன்னும் சொல்லமுடியவில்லை!

Wednesday, September 07, 2005

அரசியல்வாதியா?ஆண்டவனா?

அரசியல்வாதிகளுக்கோ பலமுகம்
ஆனைமுகனுக்கோ ஒருமுகம்

அரசியல்வாதியைத் தொடவிடாது
அணைத்து நிற்கும் போலீஸ் படை

தொந்திக்கணபதிக்குத் துணை நிற்குது
தொப்பை பெருத்த போலீஸ் உடை!

அவன் சிலை கரையும் கடலில்
கொழுக்கட்டை கரையும் நம் வாயில்!

அரசியல்வாதியை அசைப்பது ஓட்டுப்பெட்டி
அண்ணாச்சியை அலங்கரிப்பது உண்டியல் குலுக்கி


தம்பியை உலகம் சுற்ற வைத்தான்
அன்று
ஒரு பழத்துக்காக!

அனைவரையும் ஊர் சுற்ற வைக்கிறான்
இன்று
விநாயகர் சதூர்த்திக்காக!

Tuesday, September 06, 2005

பொண்ணுக்குப் பொண்ணு என்னடி?

கொஞ்ச நாளா நாளிதழிலும், வார இதழ்களிலும் `தோலுரிக்கப்படும்’ காட்சிகள் லெஸ்பியன் சம்பந்தப்பட்டது.
ஈரோட்டிலிருந்து இரு பெண்கள் பெங்களூரிலுள்ள ஒரு அமைப்பை நாடிச் சேர்ந்தது பற்றி! கணவர்களின் வக்கிரங்கள் தாங்காமல் அதிலிருந்து தப்பிக்கும் முகமாக அங்கு சென்றதாக அந்தப் பெண்களின் கூற்று. ஆனால் தலைப்புச் செய்தியோ முழுவதுமாக ஓரினச் சேர்க்கை பற்றியதே.

நான் ஓரினச் சேர்க்கை பற்றியோ, அது சரியா தவறா என்ற விவாதத்தை முன்வைத்தோ இதை எழுதவில்லை. திருமணமாகி
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் அந்த பந்தத்தில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழலில், ஏதாவது ஒரு முடிவைத் தேடிக் கொள்ளும் நிலையில்தான், இன்று அனேக இந்திய குடும்ப சூழ்நிலை உள்ளது.அது பற்றி கொஞ்சம் அலசலாமே என்பதுதான்.

அவற்றில் முதலிடத்தைப் பிடிப்பது தற்கொலை முயற்சி. அப்படி முடிவெடுக்கும் பெண்களையும் இந்த சமுதாயம் விட்டு வைப்பதில்லை.எந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டாலும், அது பாலியல் சார்ந்ததாகவே முத்திரையிடப்படுவது வாடிக்கை.

இரண்டாவதாக வரம்பு தாண்டிய உறவுகள்(extra marital affairs). இதன் தாக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. குடும்ப சூழல், குழந்தைகள் அனாதையாக்கப் பட்டுவிடகூடாது
போன்ற கட்டாய சூழல்களில், தற்கொலையைத் தவிர்த்து தனக்காகவும் வாழ்வது தன் உரிமை என்பதை நிலைநிறுத்தும்
விதமாக இத்தகைய உறவுகள் அதிகரித்து வருகின்றன.

மூன்றாவதாக வருவது, விவாகரத்து. அப்படி செய்துகொண்டவர்களும், மறுபடி ஏதாவது ஒரு துணை நாட வேண்டிய அவசியம் வருகிறது. அது மறுபடியும் உண்டாக்கும்
புயல்கள் எத்தனையோ, யாரறிவர்?

நான்காவதாக,மிக அபூர்வமாக காணப்படுவது- தனக்கு நெருக்கமான தோழியுடன் நட்பாவது. அது உடல் சார்ந்த உறவா, மனம் பகிர்தல்மட்டும் உள்ள உறவா என்பது தனிப்பட்டவர்களின் சந்தர்ப்பம் மற்றும் தேவையைப் பொறுத்தது.

ஆனால் இதில் எந்த வகையான முடிவை எடுத்தாலும் கடுமையாக விமர்சிக்கப்படுவது பெண்களே! ஒரு ஆணின் தற்கொலைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஒரு பெண்ணுக்கு பாலியல் பிரச்னைகள் ஒன்றுதான் காரணமாம்!
ஆண்கள் விவாகரத்து பெற்றாலும் அதன் மூல காரணம்
மனைவியென்றே சித்தரிக்கப்படுவதுதான் இங்கு வாடிக்கை.
ஆண்களின் முறையற்ற தொடர்புகளுக்கும் மனைவி சரியில்லாமல் இருப்பதுதான் காரணமாம். `கல்’லான கணவர்கள் மேல் மோதிமோதிப் `புல்’லான மனைவிகள்தான் அதிகம்.

பத்மா அரவிந்த்தின் பதிவில் சொன்னதுபோல், விவாகரத்து
ஒரு இயல்பான நிகழ்வாக மாறும்போது, அமெரிக்க கலாச்சாரம்
இந்திய கலாச்சாரம் என்ற பாகுபாடே இருக்காது. மனிதர்களின்
இயல்பு வாழ்க்கைக்கு வறையறுக்கப்பட்ட கலாச்சாரங்களும்
பண்பாடுகளும் மூச்சு முட்ட வைக்கும் போது, அதை மீறுவதில்
என்ன தவறிருக்கிறது.

லெஸ்பியன் என்ற உறவுக்கு உளவியல் சார்ந்த காரணங்களை விடுத்து, மன ரீதியான காரணங்கள் அதிகரித்துவருகின்றன. இன்னும் பெண்களை போகப் பொருளாகவும், சம்பளமில்லா வேலைக்காரிகளாகவும்,சமுதாய அடையாளமுமாகவே பார்க்கும் ஆண்களின் மனோநிலை மாறும் வரை இத்தகைய நிகழ்வுகள் அதிகரிக்குமேயன்றி குறையாது.

`இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ பாணியில்
`தமிழக வரலாற்றிலேயே முதல் தடவையாக’ லெஸ்பியன்
உறவு பற்றி சொல்ல வந்தவர்கள்,அந்தப் பெண்கள் கணவரின்
டார்ச்சர் தாங்காமல் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாகச் சொன்னது பற்றி கண்டுகொள்ளவே இல்லை. எப்படிச் சொல்லுவார்கள்? `யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்’னாச்சே! இவர்களின் பொன் பெண்ணில் அல்லவா இருக்கிறது. எடுக்கப்படும் முடிவுகள் பற்றி மட்டுமே விமர்சிக்கத் தெரிந்தவர்களுக்கு, அதன் மூல காரணத்தை ஆராய வேண்டுமென்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதது எதனால்?
பெண்ணென்றால் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆணாதிக்கம் தானே மறுபடியும்!

Sunday, September 04, 2005

சுமைதாங்கிகள்

கழுதை பொதி சுமப்பது பற்றி
கிண்டலடித்து ஜோக்கடித்திருப்போம்.
கண்முன்னால் மனிதகுலம்
சுமக்கும் பொதி தெரியாமல்.

பள்ளிப் பருவத்தில்
பாடப் புத்தகங்களே பெரும் சுமை
படித்து முடித்துவிட்டால்
பணி தேடுவதன் சோகம் சுமை!

கன்னிப் பருவத்திலே
காதல் கூட வலிதரும் சுமை
கல்யாணப் பந்தலிலே
கன்னியரே கழிக்கவேண்டிய சுமை!

தாம்பத்ய வாழ்க்கையிலே
பகிர்தலின்மைகூட மனச் சுமை
பகிர்ந்ததால் வரும் பந்தங்களோ
வாழ்க்கை முழுதும் பாசச் சுமை!

இறக்கியவுடன் கனம் குறைக்கும்
இத்தனை சுமைகளுக்கிடையே
ஐயிரண்டு மாதம் சுமந்த
என்னுயிரே இதமான சுமை!

Saturday, September 03, 2005

ஜோக்கடிக்கலாமா ஜோக்`கடிக்கலாமா'?

ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை வார்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது!
சிரிக்க மறந்த சிந்தனைவாதிகளும்
உண்மைச் சம்பவம் பிடிக்காத யதார்த்தவாதிகளும் இதனை வாசித்து வயிற்றுவலி வாங்கிக்கொள்ள வேண்டாம்.......

விபத்து ஒன்றில் மார்பெலும்புக்கூடு சேதமடைந்து அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு அன்பர். மருத்துவரின் கைவண்ணத்தால் திறம்பட செப்பனிடப்பட்டு பின்கவனிப்பு பகுதி(post operative ward)யில் தீவிர கவனிப்பில் இருந்தார். நுரையீரலின் சுவாச சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பலூன்
ஊதி ஊதி உடைக்கும்படி தலைமை மருத்துவர் அறிவுரை கூறியிருந்தார். ஊதும்போது நுரையீரல் சுருங்கி விரியும்.

மறுநாள் காலை உதவிமருத்துவர்கள், ஹவுஸ்சர்ஜன்ஸ், செவிலியர்கள் புடைசூழ தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ்
வந்துகொண்டிருந்தார். வார்டில் நுழைந்ததும் படார் படார் என்றொரு சத்தம். எல்லோர் முகத்திலும் பேயறைந்தது போன்ற
அதிர்ச்சி. திட்டுவதற்கு வாயைத்திறந்த மருத்துவர் அடக்க
முடியாமல் சிரித்துவிட்டார். நம் மார்புக்கூடு நண்பர், மனைவி
பலூன் ஊதி ஊதி தர இருகையாலும் குழந்தைபோல் உடைத்துக் கொண்டிருந்தார், மருத்துவர் பார்த்துப் பாராட்டவேண்டுமென்று!!!!!Friday, September 02, 2005

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்..........

பாலியல் வரம்புமீறல்கள் பெண்களை அதிகம் படுத்தி
வைத்தாலும், அது பற்றிய எதிர்நோக்குகள் எனக்கு
அறிமுகமாகும்போது, ஓரளவு நான் பக்குவப்பட்டுவிட்டேன்.

வாலிப வயதில், மனமுதிர்ச்சியற்ற நாட்களில் அத்தகைய
கஷ்டங்கள் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு எத்தனையோ
காரணங்கள் இருந்தாலும்,இயற்கையாகவே அமைந்த என் தோற்றம்தான் முக்கிய காரணம்..
.
அந்தக்கால சுகாசினிபோல் இருப்பேன் -`கோபுரங்கள் சாய்வதில்லை’சுகாசினி!!! உரசிப் பார்க்கவேண்டும்
என்ற எண்ணம் கூட எங்க ஊர்ப் பசங்களுக்குத்
தோணியிருக்காது. சுற்றி இருந்தவர்கள்
எல்லோருமே நண்பர்கள். அதனால் அங்கே காதலும்
இல்லை, காமமும் இல்லை, எனக்குத் தொல்லையும்
இல்லை.

அழகாக இல்லையே என்று மனதுக்குள் புழுங்கக்கூடத் தெரியாத கிராமத்துவாசம்.. ஆண்கள் யாரும் என்னைவிட அதிக மார்க் எடுத்துவிடக் கூடாது என்பது மட்டுமே அந்நாட்களின் குறிக்கோளாக இருந்தது. சக மாணவி
மருத்துவ தம்பதியரின் மகள் என்பதற்காக மட்டுமே
டாக்டரம்மா என்று கொண்டாடப் பட்டதைப் பார்த்தே
மருத்துவராவதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டேன்.

கல்லூரிப் பருவத்திலும் `கடலை’ போடுவதைவிட
கலாட்டா செய்வதிலேயே பொழுது ஓடிவிட்டது.
ஆனாலும் பாலியல் வற்புறுத்துதல்களும், பலாத்காரங்களும் அங்கங்கே பரீட்சை ரிசல்ட்
காரணமாக என்னைச் சுற்றி நடந்த வண்ணமே இருந்தது. இலைமறை காயாக நடந்தாலும் அவ்வப்போது
வெளிவந்துவிடும். சுயமாகப் படித்து முதல் தடவையில்
பாஸ் ஆகும் பெண்கள் எல்லோருமே அப்படி adjust செய்து
கொண்டவர்கள்தான் என்ற கணிப்பு சக மாணவர்களிடம்
இருக்கும். அதிலும் எங்கள் வகுப்பில் பெண்களின் தேர்ச்சியே
அதிகம் இருக்கும். இதில் நான் வேறு ஒரு மாதிரி!!அடிக்கடி சாயங்கால வேளைகளில் காணாமல் போய்விடுவேன்!!! அண்ணன்வீடு நெல்லையிலேயே இருந்ததால் வீட்டு சாப்பாடு தேடி அடிக்கடி சென்றுவிடுவேன். என்தோழிகளும் என்னுடன் வருவார்கள். அதனால் நாங்கள் இரவில் `லாட்ஜ்ஜுக்கு’ப் போய் வருவதாக ஒரு பேச்சு உண்டு. அவதூறுபேசும் Idiots க்கு உண்மை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்ற வீறாப்புக்காகவே ரொம்ப நாள் என் சாயங்கால நகர் உலா
பற்றி மெளனமாக இருந்திருக்கிறேன். என்னவரிடமே போய் `இவள் ஒரு ப்ராஸ்டிட்யூட்’ என்று சான்றிதழ் அளித்த நல்ல இதயங்கள்கூட உண்டு. அந்த வயதில் இத்தகைய வரம்பு மீறிய வார்த்தைகள் செத்துவிட வேண்டும் போன்ற உணர்வைத் தருவதுதான் நடக்கும். ஆனால் என் வளர்ப்பும் தன்னம்பிக்கையும் அவதூறுகளுக்கு அடிபணியாமல் தலை நிமிர்ந்து நடக்க
வைத்தது. இன்றளவும் அது தொடர்கிறது.
மண்பார்த்து நடந்த ஞாபகமே இல்லை, எதிரிலுள்ளவர்கள் கண்
பார்த்து நடந்தே பழகிவிட்டேன்.

Thursday, September 01, 2005

ஆண்களில்லாத உலகத்திலே

பெண்களுக்கே வக்காலாத்து வாங்கி
ஆண்களைச் சாடிக்கொண்டிருப்பதால்
ஆண்களுக்கு எதிரியல்ல நான்
ஆணாதிக்கத்துக்கு மட்டுமே எதிரி

அன்பான அப்பா சொல்லித் தந்தது
அறிவோடு தன்னம்பிக்கை வேண்டுமென்று
அனுசரணையான அண்ணன் கற்பித்தது
அடுக்களையோடு அடங்கி விடாதேயென்று!

பால்ய நண்பன் பகிர்ந்து கொண்டது
பாலியல் பேதம் நட்பிற்கில்லையென்று
பருவத்தே வந்த நண்பர் கலந்தது
பசுமையான இல்லறத்தில்.

இடையிடையே எத்தனை நண்பர்கள்
இன்னலுற்ற போழ்திலெல்லாம்
இருகரம் நீட்டி துயர் அகற்றி
இன்றும் நல்லதுணையாயிருப்பவர்கள்

இத்தனை இதயங்களையும் மறந்து
இகழ்மொழி பேசுவேனோ இதயமின்றி!
ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!